படித்துறையில் இறங்கி இடது பக்கம் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்ட இரண்டு சமாதிகளைக் கடந்து அசர மரத்தை எட்டினார்கள். சூரியன் மேலும் சற்று கீழிறங்கி விட்டிருந்தது. சக்தி மரத்தின் மீது வேகமாக ஏறினான். மேலே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு ”ஏறுடா” என்றான். அகன்ற ஆற்றின் படுகையில் நீண்ட தூரத்துக்கு அப்பால் நீர் ஓடிக் கொண்டிருந்து. மாலை ஒளியில் சன்னமாக கம்பி போன்று தெரிந்த நீரோட்டதிலிருந்து பாம்பு ஒன்றை தூக்கிக் கொண்டு மேல எழுந்து பறந்தது ஒரு கழுகு.
முருகன் வேகமாக மரத்தின் மீது ஏறி சக்தி உட்கார்ந்திருந்த கிளைக்கு அருகே பிரிந்து சென்ற கிளையில் இன்னும் சற்று உயரத்தில் ஏறி நின்றான்.
”நீயும் ஏறு” என்றான் சக்தி.
விக்னேஷ் தயங்கினான். அவனுக்கு திடீரென்று ஏனென்று தெரியாமல் பயம் ஏற்பட்டது.
”சீக்கிரம் ஏறு. யோசிக்காத” என்றான் முருகன்.
அவர்களைப் போல சுலபமாக தகுந்த இடங்களில் காலை வைத்து ஏறத் தெரியாமல் எங்கெல்லாமோ காலை வைத்து மரத்தை கைகளால் பற்றிக் கொண்டு ஏறி சக்தியின் அருகே சென்றான் விக்னேஷ். அவனுடைய முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. வலது கையிலும் ஒரு சிறு காயம்.
”இதுல ஏற்றதுக்கு எதுக்குடா இவ்வளவு திணற்ற? ஈசியா ஏறாலாமே” என்றான் முருகன்.
”நாம அவனுக்கு எங்க கால் வைக்கணும் எங்க புடிக்கணும்னு சொல்லிருக்கணும்” என்றான் சக்தி. பிறகு ”சாரிடா” என்றான்.
”பரவாயில்ல” என்றான் விக்னேஷ்.
மாலையின் ஒளியில் இலைகள் அடர்ந்த அந்த அரச மரம் விக்னேஷிற்கு சொல்லமுடியாத இனிய உணர்வினைத் தோற்றுவித்தது. அவன் சக்திவேலின் அருகே அமர்ந்திருக்க சக்தி முருகனின் கிளைக்குத் தாவினான்.
”இருட்டீரும் சீக்கிரம் போயிரலாம்” என்று சொல்லிக் கொண்டே முருகனைக் கடந்து அந்த கிளையின் உச்சி நோக்கி சென்றான்.
”நீ வரல?” முருகன் கேட்க ”இல்ல” என்று தலை அசைத்தான் விக்னேஷ். முருகன் சக்தியைப் பின் தொடர்ந்து மேலே சென்றான். விக்னேஷ் அவர்கள் இன்னும் இன்னும் உயரத்தில் மேலே சென்று இலை அடர்வுக்குள் முழுவதுமாக மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை மீண்டும் அச்சம் கவ்வியது.
உச்சிக் கிளையின் பறவைக் கூட்டை அருகே சென்று பார்த்துவிட்டு இறங்கி விடுவார்கள். முட்டைகளையோ குஞ்சுகளையோ எடுத்து வருவது அவர்களது நோக்கம் அல்ல. அப்படி எடுப்பது பாவம் என்று முருகனின் அம்மா சொல்லி இருக்கிறார்.
திடீரென்று சக்தியும் முருகனும் வேகமாக இறங்கினார்கள்.
”இறங்கு இறங்கு” என்று விக்னேஷை நோக்கி சத்தம் போட்டுக் கொண்டே தாவி வந்தான் முருகன். விக்னேஷ் பதறி அவசர அவரசமாக கண்டபடி கால் வைத்து மீண்டும் சில சிராய்ப்புகளுடன் கீழே இறங்கினான்.
”என்ன ஆச்சு?”
விக்னேஷிற்கு பதில் சொல்லாமல் இருவரும் ஓடி இரண்டு வெண்ணிற சமாதிகளின் நடுவே இருந்த இடத்தில் சென்று படுத்து ஒளிந்து கொண்டார்கள்.
விக்னேஷ் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க ஆற்றின் பக்கமிருந்து வேகமாக வந்தார் சக்தியின் அப்பா.
சுற்றுமுற்றும் தேடி விட்டு விக்னேஷை ஏற இறங்க பார்த்துவிட்டு ”மரத்துல இருந்து குதிச்ச நாயி எங்க போச்சி” என்று தனக்குத் தானேவாக கேட்டுக் கொண்டார். பிறகு விக்னேஷின் அருகே வந்து.
”நீயி கோவிந்தசாமி பையன் தான?” என்று கேட்டார்
”ஆமா”
”உங்கப்பா ஆர்பி மில்லுலதான வேல செய்யுறாரு?”
”ஆமா”
”நீயும் சக்திவேலு கூட சேர்ந்து இந்த மரத்துல ஏறுனியாக்கும்?”
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்னேஷ் மௌனமாக இருந்தான்.
”தம்பி இது சுடுகாடு. பார்த்தியல்ல சமாதி. அந்த பக்கம் பொணம் எரிப்பாங்க” கை காட்டினார்.
”இந்த மரத்தில பாரு ஆணி. இது எதுக்கு அடிச்சிருக்காங்க தெரியுமா?
விக்னேஷ் ”தெரியாது” என்றான்.
”பேயி பிடிச்சவங்களுக்கு பேயோட்டுவாங்க தெரியுமா? பார்த்திருக்கியா?”
விக்னேஷிற்கு கால் மடித்து அமர்ந்து தலைவிரி கோலத்துடன் தலையைத் திருப்பி தன் பெரிய கண்கள் வெளியே வந்துவிடும் போல விழித்து பற்களை கடித்து கெட்ட வார்த்தைகள் பேசிய பக்கத்து வீட்டு நிம்மியக்காவின் நினைவு வந்தது.
”என்ன? என்றார் சக்தியின் அப்பா.
”பார்த்துருக்கேன்”
”ஆங்…அப்படி பேயோட்டும் போது பேய் பிடிச்சவங்களோட முடிய கொஞ்சம் வெட்டுவாங்க. அவங்க உடம்புல இருந்து வெளியே வர்ற பேய அந்த முடியில இறக்கி இங்க கொண்டு வந்து இந்த மரத்துல வெச்சு ஆணி அடிப்பாங்க. அந்த பேய இந்த மரத்துல கட்டிப் போட்டாச்சின்னு அர்த்தம். இந்த மரத்த விட்டு அதனால எங்கயும் போக முடியாது. அது மத்தவங்கள போயி பிடிக்க முடியாது” என்றார்.
பின் ”இந்த மரத்தில எல்லாம் ஏறக் கூடாது. ஆணி கழன்றுச்சின்னா பேயி உன் பின்னாலேயே உங்க வீட்டுக்கு வந்துரும்”
விக்னேஷ் மரத்தை திரும்பிப் பார்த்தான். வேறு வேறு இடங்களிலாக நான்கு ஆணிகள் அடிக்கப் பட்டிருந்தன. ஒரு ஆணியில் மட்டும் மயிர் கொத்தாக சுருண்டு இருந்தது. அது கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. மற்ற ஆணிகள் வெறுமனே இருந்தன.
விக்னேஷ் தான் மரத்தில் கால் வைத்து ஏறிய இடத்தைப் பார்த்த போது கீழே தரையில் ஒரு ஆணி விழுந்து கிடந்தது. அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவன் திருப்பிப் பார்த்தபோது திடுக்கிட்டான். சக்தியின் அப்பா அங்கே இல்லை. அவனுக்கு சட்டென்று அழுகை வந்தது. அவன் அழத் துவங்கும் முன் சக்தியின் அப்பாவின் குரல் கேட்டது “தம்பி சீக்கிரம் வீட்டுக்குப்போ இந்த நேரத்துல இங்கியல்லாம் ரொம்ப நேரம் நிக்கக் கூடாது”
அவர் சமாதிகளின் நடுவே சென்று சக்தியைத் தேடினார். அதற்குள்ளாக சக்தியும் முருகனும் அவர் கண்ணில் படாமல் தப்பி ஓடி விட்டிருந்தனர்.
விக்னேஷ் வேகமாக கூழாங்கற்கள் நிறைந்த பரப்பில் ஓடி கடந்து படிகளில் வேகமாக ஏறி ஓடினான்.
படிகளைக் கடந்து மூச்சு வாங்க சற்று நேரம் நின்றுவிட்டு தெருவில் நடந்துபோது இனிமேல் இங்கு வரவே கூடாது என்று நினைத்தான்.
இதெல்லாம் ஏன் சக்தியும் முருகனும் தன்னிடம் சொல்லவில்லை என்று அவர்கள் மீது கோபமாக வந்தது. ஒருவேளை அவர்களுக்கே தெரியாமல் இருக்கலாம். தெரிந்திருந்தால் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். இங்கு வரவும் மாட்டார்கள் என்று நினைத்தான்.
தன் கை கால் சிராய்ப்புகள் அந்த ஆணியால் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த ஆணியின் அருகேதான் தான் கால் வைத்து ஏறியது அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஆணி இப்போது கீழே விழுந்து விட்டது. அப்படியென்றால் அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த பேய் விடுதலை அடைந்து விட்டது.
அப்படியென்றால் அது என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா? ஒரு நொடி நின்று பின்னால் திரும்பிப் பார்த்தான். தெருவில் யாரும் இல்லை. தெருவின் மின்விளக்குகள் திடீரென்று எரியத் தொடங்க உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது. அது வழக்கமாக மின் விளக்கு போடும் நேரம் தான். இருந்தாலும் ஏதோ தவறுதான். தன்னை பேய் பின் தொடரத்தான் செய்கிறது என்று விக்னேசுக்குத் தோன்றியது. வீட்டை நோக்கி ஓடினான்.
லைன் வீடுகளில் மூன்றாம் எண்ணுள்ள வீடு அவனுடையது. அப்பா இன்னும் மில்லில் இருந்து வந்திருக்க மாட்டார். வீட்டின் அருகே வந்த பிறகு வீட்டிற்குள் செல்லாமல் வெளியேயே நின்றான். அம்மா உள்ளே சமையல் அறையில் எதையோ வதக்கிக் கொண்டிருக்கிறாள்.
வாசற்படியைக் கடந்து உள்ளே செல்வதா வேண்டாமா? வாசல் படியைக் கடந்து தான் உள்ளே சென்றால் தன் கூடவே வந்த பேயும் வீட்டிற்குள் வந்து விடுமே? என்ன செய்வது? அவன் வாசற்படி தாண்டாமல் வெளியே நீண்ட நேரம் நின்றான்.
சன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பாட்டி ”என்ன கண்ணு? அங்கயே நிக்கற? எதையாச்சும் கீழ போட்டுட்டயா? தேடிகிட்டிருக்கயா?” என்று கேட்டாள்.
”ஆ..ஆமாம் பாட்டி” என்று சொல்லி கீழே எதையோ தேடுவது போல நடிக்கத் துவங்கினான். வேறு வழியில்லை உள்ளே போய்த்தான் ஆக வேண்டும். எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க முடியும்? கொஞ்ச நேரம் கழித்து பாட்டி மீண்டும் ஏதாவது சொல்வாள். அப்புறம் அப்பா வந்து விடுவார்.
அவன் வாசற் படியைத் தாண்ட காலைத் தூக்கிய போது உள்ளே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்து ரம்யா குட்டி தூக்கம் கலைந்து சிணுங்கி அழத் தொடங்கினாள்.
தன் தூக்கிய காலை அப்படியே வாசல் படியைத் தாண்டாமல் பின்னால் எடுத்து வைத்து வெளியேயே நின்று கொண்டான் விக்னேஷ். தான் தேவையே இல்லாமல் அழைத்து வந்திருக்கும் பேயால் ரம்யா குட்டிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது.
தெருவில் யாரோ கைப்பேசியில் பாடலை சத்தமாக ஒலிக்கச் செய்து நடந்து கொண்டிருந்தார்கள்.
”மலர்ந்து மலராது பாதி மலர் போல..” பாடல். ஏதோ பழைய படம் அப்பாவிற்கு பிடிக்கும். அண்ணனும் தங்கையும் அதிக பாசம் ..அதிகமாக அழுவார்கள். என்ன படம் என்று விக்னேஷிற்கு நினைவிற்கு வரவில்லை.
ரம்யா குட்டியை கையில் எடுத்துக் கொண்ட அம்மா விக்னேஷ் வெளியே நிற்பதை அப்போது தான் கவனித்தாள்.
”எங்கடா போன?” என்றாள்.
அவன் எதுவும் சொல்லாமல் நிற்க அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். அவன் நீண்ட நேரம் அங்கேயே நிற்பதை அறிந்து கொண்டு விட்டவளாக கையில் ரம்யா குட்டியுடன் அவள் வெளியே வர விக்னேஷ் தெருவில் ஓடினான்.
”ஏய்…எங்கடா ஒடற? நில்லுடா” என்று சத்தம் போட்டாள்.
இரவு எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை விக்னேஷ் பக்கத்து லைன் தெருவிலும் அதற்கு அடுத்த தெருவிலும் பதுங்கி சுற்றிக் கொண்டிருந்தான். நடந்தும் ஓடியும் அவன் கால்கள் வலித்தன. முருகன் வீட்டருகே இருந்த சந்தில் திரும்பிய போது ஒரு கை அவன் சட்டையைப் பிடித்து இழுத்தது. அவன் என்ன என்று அறிவதற்குள் பாளர் பாளாரென கன்னத்தில் அறைகள் விழுந்தன.
”நாயே …. வேலைக்கு போயிட்டு வந்து ஒரு நாள் நிம்மதியா இருக்க முடியுதா?…சனியனே சனியனே”
விக்னேஷின் அப்பா அவனை அடித்து இழுத்துச் சென்றார். அவன் கதறி அழுதான்.
தான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று இவருக்கு எப்படி சொல்வது? நடந்ததை சொன்னால் நீ ஏன்டா அங்க போன உன்ன பெத்ததுக்கு நான் தான்டா சீக்கிரம் சுடுகாட்டுக்குப் போகணும் என்று திட்டுவார். மேலும் அடி விழும்.
வீட்டில் அப்பா நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அம்மா கண்கள் கலங்கி கண்களைத் துடைத்துக் கொண்டாள். ரம்யா குட்டி தொட்டிலில் உறங்கி விட்டிருந்தாள்.
அழுகையினூடகவே விக்னேஷிற்கு அம்மா சோற்றைத் திணித்தாள்.
பாயில் படுத்துக் கொண்ட பிறகும் அவன் மெதுவாக அழுது கொண்டிருந்தான். அவன் கன்னங்கள் வீங்கியிருந்தன. அம்மா அவன் தலையைக் கோதி சமாதானம் செய்தாள்.
அப்பா அம்மா ரம்யா குட்டி எல்லோரும் உறங்கி விட்டார்கள். விக்னேஷ் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உறக்கம் வரவில்லை.
தெருவில் நாய் ஒன்று நீண்ட ஊளையிட்டது.
அவன் தலைக்கு நேராக மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் நடுவே இருந்த வெள்ளி நிறத் தகடு மெல்லிய ஒளியுடன் மின்னியது. பக்கத்து சாமி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
மின் விசிறியின் சத்தம் வழக்கத்திற்கு மாறாக இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. அதன் மையத்தில் இருந்த ஒளி ஒரு கயிற்றைப் போல நீண்டு அவனை நோக்கி வருவது போலத் தோன்றியது. அவன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அம்மாவின் அணைப்பில் அச்சம் விலகி விடுகிறது. அது எப்போதும் அப்படித்தான். அது ஏன் அப்படி? யோசித்துக் கொண்டே அவன் உறங்கி விட்டான்.
பின்னிரவில் பெரும் இடி முழக்கம் கேட்டது. பெரிய மழை பெய்வதன் சத்தம் கேட்டது.
காலை அவன் எழுந்து போது எதிர் வீட்டு பாட்டி வாசலில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
”அப்பா…என்னா மழ…? படித்துறைக்குப் பக்கத்துல ஆத்துக்குள்ள சுடுகாட்டுக்குள்ள இருக்குமே அந்த அரச மரம் அது சாய்சிருச்சாமா அது விழுந்து பூண்டிக்காரங்க வீட்டு சமாதி ரெண்டும் ஒடஞ்சி போச்சாம்”
”ஆமா. ஆத்த சுடுகாடா மாத்தினா வேற என்னா நடக்கும்” என்றாள் அம்மா.
பாட்டி அதற்கு எதுவும் சொல்லவில்லை. பிறகு ”ஆத்துல தண்ணி கொஞ்சமாச்சி ஏறுனா செரி. ஆத்து நெறய தண்ணி ஓடி பாத்து எவ்வளவு நாளச்சி” என்றபடி சென்றாள்.
வெய்யில் சன்னலின் வழியாக விக்னேஷின் முகத்தில் அடித்தது.
”டேய் எந்திர்ரா…பள்ளிக் கூடம் போவணுமில்ல” என்று கத்தினாள் அம்மா.
இப்போது பேய் வீட்டில் இருக்கிறதா? விக்னேஷிற்கு அய்யம் ஏற்பட்டது.
அப்போது தொட்டிலில் இருந்து ரம்யா குட்டி சிணுங்கினாள். பிறகு நகர்ந்து தொட்டிலில் இருந்து தலையை மட்டும் வெளியே பின்னால் தொங்க விட்டு தலைகீழாக விக்னேஷைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். அவளை கையில் எடுக்க அம்மா வேகமாக எழுந்து வர மீண்டும் அவனைப் பார்த்து ஒலி எழுப்பி சிரித்தாள் ரம்யா குட்டி.
இங்கே பேய் இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வளவு அழகான ரம்யா குட்டி இருக்கும் இடத்தில் பேய் எப்படி இருக்க முடியும்? வாய்ப்பே இல்லை. அவனுக்குத் தீர்மானமாகத் தோன்றியது.