வாமனன் வேஷம் போடுபவன்

அவர்கள் அந்தளவுக்கு இறங்கி அப்படிச் சொல்வார்களென்று முத்துச்செல்வன் எதிர்பார்க்கவில்லை . 

திரும்பவும் முருகன் அழுத்தமாக சொன்னான். “ஏன்டா ஊர்ல இத்தனபேரு படிக்கிறிங்க.. போயும்போயும் அவனவாட மொத மார்க் எடுக்கவிடுறது. நீங்களெல்லாம் படிச்சு என்ன பண்ணப்போறிங்க.. போயி மாடு மேய்க்கப் போங்கடா”என்றான்.

மூஞ்சில அடிச்சாப்ல அப்படிச் சொன்னதுமே  பனியில் ஊறிய அதிகாலை நாற்றைப்போல தலையை தொங்கப்போட்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்த முத்துச்செல்வனுக்கு   கண் கசிந்துகொண்டிருந்தது .

  ” நீ கணக்குல அம்பத்து ரெண்டு மார்க் எடுத்திருக்க -அவன் தொண்ணித்திரெண்டு எடுத்திருக்கான். ஒன்னவிட நாப்பது மார்க் கூட எடுத்திருக்கான் “என்று தலைதலையில் அடித்துக்கொண்டான் முத்துச்செல்வனைப் பார்த்து பரமசிவம். 

 ” நம்ம ஊரு மானத்த ஏன்ட இப்படி காத்துல பறக்கவிடுறிங்க.போயும் போயும்.. ச்சே நெனச்சாலே அசிங்கமாயிருக்கு…. என்னமோ போ”என்று ரொம்ப சலிப்பாக  முருகன் சொன்னான் .

அவர்களின் பேச்சில்  வெறுப்பு கூடிக்கொண்டே வந்ததே தவிர, குறையவில்லை. மூசாம பள்ளிக்கூடம் விட்டதுமே வீட்டுக்கு போயிறக்கனும்.தேவையில்லாம கிரிக்கெட் விளையாடனும்னு வந்து ,எப்படியோ பரீட்சைப் பேப்பர் இவங்க கண்ணுல பட்டு -இவங்ககிட்ட எல்லாத்தியும் உளறி இப்படி மாட்டிக்கிட்டோமே என்று நினைப்பு ஒருபுறம் ஓடினாலும் ,மறுபுறம் அழகுராஜாவைவிட குறைஞ்ச மார்க் எடுத்தது உண்மையிலே மனசுக்குள் ஏதோ ரொம்ப  குறையாகத்தானிருந்தது முத்துச்செல்வனுக்கு.  

“தொண்ணித்திரெண்டு மார்க் எடுத்தவரு இவரோட நண்பனாம்”என்று நக்கலாக சொன்னான் பரமசிவம். 

“ஓ.. இவரோட ப்ரெண்ட்டா அவரு, அப்புறமென்னப்ப ..அதேன் விட்டுக்கொடுத்திருக்காரு” என்று சொல்லிவிட்டு சிறு இடைவெளிக்குப்பிறகு

திடீரென்று வேகமாக “ஏன்டா பள்ளிக்கூடத்தில அத்தன பையங்க நம்மாளு இருக்காங்கே.. ஒனக்கு ப்ரெண்டா -அந்த பகடைப்பையன்தான் கெடச்சானா “என்றான் முருகன்.

அதுவரை பேசாமல் பக்கத்திலிருந்த கருப்பன்  “யாரட ப்ரெண்டா பிடிச்சிருக்கான்” என்றான் வேகமாக.

 “பகடை முத்தப்பன் மகன.. அதேன் நம்ம ஊரு சித்திரை திருவிழாக்குகூட  வாமனன் வேஷம் போடுவானே.. அவனத்தான்” என்றான் முருகன்.

சித்திரை திருவிழாவின்போது பகடை ஜனங்களுக்கு கோவிலுக்குள் போகத்தான் தடையேத் தவிர கடவுள் வேஷம் போடத் தடையில்லை.

என்னதான் பகடை ஜனங்கள் கடவுள் வேஷம் போட்டாலும்,  கோவிலுக்குள் போக அனுமதியில்லை.சித்திரை திருவிழாவின்போது பெருமாள் கோவிலிலிருந்து குதிரையில் வைத்து சாமியை காளியம்மன் கோவிலுக்கு தூக்கி வருவதற்குள், பகடை தெருவில் பத்து பேர் கிருஷ்ணனின் பத்து அவதாரங்களை வேஷமாக போட ஆரம்பித்துவிடுவர்.

வருஷம் வருஷம் இந்த கிருஷ்ணனின் அவதார வேஷத்தை கட்டி ஆடுவது கோவிலுக்கு செய்யும் நேத்திக் கடனாக பகடை ஜனங்கள் வரையறுத்துக்கொண்டனர்.

சித்திரை திருவிழா நாளன்று ஊரின் முக்கியமான தெருக்களில் கிருஷ்ணனின் பத்து அவதாரத்திற்கான கதை நடக்கும். அப்போது சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் பக்தி மயக்கத்தில் மயங்கி படபடவெனு கைதட்டுவார்கள்.அதில் மேல் சாதிக்காரர்களும் உண்டு.

குதிரையில் வரும் சாமி காளியம்மன் கோவிலை அடைவதற்குள்,பகடை முத்தப்பன் மகன் அழகுராஜ் கிருஷ்ணனின் ஐந்தாவது அவதரமான வாமனன் அவதாரம் எடுத்து காளியம்மன் கோவில் தெருவில் கம்பீரமாக நிற்பான்.

மண்ணையெல்லாம் கட்டி ஆள நினைத்து அகங்காரம் கொண்ட மகாபலி மன்னனின் பேராசையை அழிப்பதற்கு,எப்படி கிருஷ்ணன் வாமன அவதாரம் எடுத்து தன் பாதங்களால் உலகத்தையே இரண்டு அடியால் அளந்து, மூன்றாவது அடியை மகாபலி மன்னன் தலையில் வைத்தானோ -அந்த புராணக்கதை, காட்சி வடிவாய் அழகுராஜ் வாமன வேஷம் மூலம் காளியம்மன் கோவில் முன் நிகழும்போது மக்கள் ஆர்ப்பரித்து புல்லரித்து நிற்பார்கள்.தன்னையறியாமலே கைதட்டுவார்கள்.

மேலத்தெருக்களில் நடக்கவே பயப்படுகிற அழகுராஜ்ஜின் கால்கள்தான்- வாமனன் வேஷம் போட்டதும் புராணப்படி இரண்டடியால் உலகத்தை அளந்து மூன்றாவது அடியை மகாபலி தலையின் வைக்கின்ற செயலைச் செய்யும்.

இந்த வாமன அவதார வேஷத்தை முதன்முதலில் அழகுராஜ்ஜின் தாத்தா அழகப்பன் பகடை போட்டார்-அவரின் மறைவுக்குப்பின் கொஞ்ச காலம் அழகுராஜின் அப்பா முத்தப்பன் பகடை போட்டார்.

ஒரு சித்திரை திருவிழாவுக்கு முத்தப்பனுக்கு அம்மை போட்டிருந்ததால்-அந்த வருஷம் அழகுராஜ் அந்த வேஷத்தை போட ஆரம்பித்து, அது அவனுக்கு நன்றாகப் பொருந்திப் போக.. பின்னாடி அவனே தொடர்ந்து அந்த வேஷத்தை போட்டு-அதுவே அவனது நிரந்தர அடையாளமாகிப்போனது.

அதனால் என்னவோ முத்தப்பன் மகன் அழகுராஜ்ஜை பெரும்பாலும் வாமனன் வேஷம் போடுபவன் என்று சொன்னதான் மேல் சாதிக்காரர்கள் உடனடியாக புரிந்து கொள்வார்கள்.அதுதான் அவனின் அடையாளம்.

இப்போது கருப்பனும் அழகுராஜ்ஜை லேசாக புரிந்துகொள்ள அந்த வாமனன் வேஷம்தான்  வழிவகுத்தது.

புரிந்துகொண்ட மறுநொடியே  “ஏன்டா அவந்தே ஒனக்கு ப்ரண்டா கிடைச்சானா.. ” என்றான் கருப்பனும்

என்ன சொல்வதென்று தெரியாமல் முத்துச்செல்வன் வாயுக்குள்ளே முனங்கினான். அப்போது நினைவு பின்னோக்கிப்போனது .

முத்துச்செல்வனும், அழுகுராஜ்ஜும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தாலும் ,மூன்றாம் வகுப்பில்தான் நட்பானார்கள். 

அன்று எப்போதும்போல நல்லதண்ணீர் எடுக்க முத்துச்செல்வனின் பெரியக்காவும், சின்னக்காவும் ஊரின் வடக்குபுறத்தின் ஒதுக்கத்தில் உள்ள புளியந்தோப்பு கிணறுக்கு பித்தளைப்பானை,இறைக்கிற வாளியுடன் போனார்கள். 

உண்மையிலே அந்தக்கிணற்றில் வாளிகொண்டு தண்ணீர் இறைப்பதைவிட ,பெரியவிஷயம் அங்கிருந்து பித்தளைப்பானையை சுமந்து வீட்டுக்கு கொண்டுவருவதுதான். புளியந்தோப்பு கிணத்துக்கும் ஊருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் … சுமந்து வரும் பித்தளைப்பானை கனத்தாலும் ,பாதை நெட்டுக்க  தோரணமாய் நிற்கும் புளியமரங்கள் மனதுக்கு ஏதோ ஒருவித பரவசநிலையை தரும். 

தண்ணிக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்த முத்துச்செல்வனின் சின்னக்கா வலது காலில் கொலுசு இல்லை. அதை அவளுடைய அப்பாதான் முதன்முதலாக பார்த்து  “என்னம்மா வலதுகால்ல கொலுசக் காணோம் “என்றார். .சட்டுனு கீழே குனிந்து வலது காலைப் பார்த்த சின்னக்கா அதிர்ச்சியில் “ஐய்யய்யோ தண்ணிக்கப்போன இடத்தில எங்கயோ விழுந்திருச்சுபோல”என்று சொல்லிக்கொண்டே பதறியடித்துபோய் வீட்டைவிட்டு வெளியேறி,  நடந்துவந்த பாதையெல்லாம் கொலுசை தேடிக்கொண்டே போனாள் 

கடைசியில் எவ்வளவு தேடியும் கொலுசு கிடைக்கவில்லை. அன்று பகடை முத்தப்பனைக் கூப்பிட்டு இந்த கொலுசு விஷயமாய் ஊருக்குள் தண்டாரோ அடித்து சாட்ட சொன்னார் முத்துச்செல்வனின் அப்பா. 

தெருதெருவெங்கும் தண்டாரோ அடித்துக்கொண்டே “புளியந்தோப்பு கிணறுக்கு தண்ணி எடுக்கப்போன இராதமோகன் அப்பச்சி மகள் எங்கேயோ கொலுச தவறவிட்டுருச்சு  . அதை கண்டெடுத்தவங்க கொடுத்திருங்க சாமியோவ் “என்று  தொண்டை கிழிய கத்தி சாட்டினான் பகடை முத்தப்பன். அவன் போட்ட சத்தம் அந்த வானம் வரை கேட்டிருக்கும் உண்மையிலே..!

பகடை முத்தப்பன் சாட்டிய ராசியோ என்னவோ அன்று இரவே கொலுசு கிடைச்சிருச்சு. புளியந்தோப்பு பாதையில் ரெட்டைபுளியமரம் பக்கத்தில் கொலுசை கண்டெடுத்தாக  இராஜவேல் தாத்தா முத்துச்செல்வன் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிட்டார்.தொலைந்துபோன தன் அக்கா கொலுசு மீண்டும் கிடைத்துவிட்டதால் முத்துச்செல்வனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அன்று கொலுசை எடுத்து கொடுத்தவருக்கு ஏகப்பட்ட உபசரிப்புகள்  செய்தார் முத்துச்செல்வனின் அப்பா . 

தண்டாரோ  அடித்து சாட்டிய பகடை முத்தப்பனுக்கும் அன்று ஏகப்பட்ட கவனிப்புகள். தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த சட்டியில் சோறுகொழம்பு வாங்கிக்கிட்டு  “போயிட்டு வாரேன் சாமி”என்று சொன்னான் பகடை முத்தப்பன்.போகும்போது முத்தப்பனுக்கு இரண்டு வெத்தலக்கட்டு, பாக்கு வாங்கிக்கொடுத்தார் முத்துச்செல்வனின்

அப்பா. தன் அக்காவின் தொலைந்த கொலுசை தண்டாரோ போட்டு சாட்டி மீட்டுக்கொடுத்த முத்தப்பன் பகடை அன்று முதல் ரொம்பவும் பிடித்துப்போனான் முத்துச்செல்வனுக்கு .அதன்மூலம் பகடை முத்தப்பன் மகனான அழகுராஜ் பழக்கமாகி கடைசியில் நட்பாகிப்போனான் முத்துச்செல்வனுக்கு . 

பள்ளிக்கூடத்தில்  அழகுராஜ்ஜை முத்துச்செல்வன் தன் நட்பாக்கிய பிறகு ஏகப்பட்ட கேலி கிண்டல்கள் “போயும் போயும் பகடைப் பையனப்போயி ப்ரண்டாக்கிக்கிட்டேனு”என்று சில பையன்கள் கிண்டல் பண்ணினார்கள்  .அப்போது எரிச்சலும் கோபமும் வந்தாலும் அதை வெளிப்படுத்த மாட்டான் முத்துச்செல்வன்.  அவர்களின் கிண்டல்களை தாங்கமுடியாமல் ஒருநாள்  “இப்படிஇப்படி சொல்றிங்கின்னு டீச்சர்கிட்ட சொல்லிப்போடுவேன் “என்றான் முத்துச்செல்வன் கோபத்தில். அதற்குப்பிறகுதான் கிண்டல் பண்ணுகிற சில பையன்கள் அப்போதைக்கு அடங்கினார்கள். 

எந்த ஜோடி விளையாட்டுனாலும் அழுகுராஜ்ஜும்-முத்துச்செல்வனுதான்  ஜோடி. அதே மாதிரி அணி பிரித்து விளையாண்டாலும் ஒரே அணியில்தான் இருப்பார்கள். அப்போது காதல் தேசம் படம் ரிலீஸ் ஆகியிருந்ததால், முத்துச்செல்வனையும் அழுகுராஜ்ஜையும் பெரிய அப்பாஸ் -வினித் நினைப்பு என்று நக்கல் பண்ணுவார்கள் மத்த பையன்கள்.

அதை காதில் வாங்காது மாதிரி போய்விடுவார்கள் இருவரும். 

“ஏய் ஒன்னத்தான்டா.. ஏய் ஒன்னத்தான்டா “என்று சத்தம்போட்டு முருகன் சொல்லும்போதுதான் பழைய நினைவிலிருந்து மீண்டான் முத்துச்செல்வன். 

 “என்ன நெனப்புலிருக்க நீயி ..சத்தம்போட சத்தம்போட நீ வாட்டுக்கு காது கேட்காது மாதிரியிருக்க..”என்றான் பரமசிவம். 

அதற்கு பதில் சொல்லாமல் உம்முனு  ஏதாவொரு தயக்கத்தில் முத்துச்செல்வன். 

 ” இன்னனாச்சும் நீ அவனவிட மார்க் எடுக்கப்பாரு..”என்றான் முருகன். அதற்கு சரி என்று தலையசைத்துக்கொண்டான் .

அவர்களின் பேச்சை கேட்ககேட்க முத்துச்செல்வனுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது மனதெங்கும். இத்தனைநாள் இப்படி மனம் இருந்ததில்லை . 

        ********************************

 மறுநாள் ஜந்தாம் வகுப்பு டீச்சர் வகுப்பறையில் அழகுராஜ்ஜை எழுந்து நிற்க சொல்லி -அவன் முதல் ரேங்க் எடுத்ததிற்காக ரொம்பவும் பாராட்டி பேசியது – அவனுக்காக எல்லோரையும் கைதட்டச்சொன்னது. 

பிறகு “சுமாராக படிக்கிற எல்லோரும் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப்போனதும் , ஏதாவது படிப்பில சந்தேகம்னு அழுகுராஜ் வீட்டுக்குப்போயி கேட்டுப்படிங்க ,சரியா..”என்றது  .அதற்கு சில குழந்தைகள் சரி என்று தலையசைத்துக்கொண்டார்கள். டீச்சர் அழகுராஜ்ஜைப் பார்த்து “ஏய் உங்க வீட்டுக்கு புள்ளைங்க படிக்க வந்தா சொல்லிக்கொடு “என்றது.அதற்கு சரியென்று தலையசைத்துக்கொண்டான் அழகுராஜ்.               

டீச்சர்  முத்துச்செல்வனைப்பார்த்து “ஏய் நீ கணக்கு பாடத்தில ஏதாவது சந்தேகம்னு அழுகுராஜ் வீட்டுக்குப்போயி கேட்டுப்படி.. மத்தபாடத்தில நல்ல மார்க் எடுக்குற.. கணக்குல மட்டும் எப்படியோ கோட்டைவிட்டற”என்றது.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ”  சரி டீச்சர் அழகுராஜ் வீட்டுக்குப்போயி கேட்டுப் படிக்கிறேன் “என்றான் முத்துச்செல்வன். அதைப்பார்த்து அழுகுராஜ்  சிரித்துக்கொண்டான். 

பள்ளிக்குடம் விட்டு வெளியேவந்ததுமே சிலபிள்ளைகள் “அழகுராஜ் வீட்டுக்குப் போயி எப்படிப்படிக்க.. அவங்கெ தெருவுத்திக்கமே போகமாட்டோம் ..அவங்க வீட்டுக்குப்போயி எப்படி படிக்க.. அழுராஜ்ஜன்னா நம்ம தெருவுக்கு வரச்சொல்லுவோம்”என்று பேசிக்கொண்டே போனார்கள். 

வீட்டுக்குப்போனதும் முத்துச்செல்வன்  அழுகுராஜ் வீட்டுக்குப்போகவா,வேண்டாம என யோசித்தான். பிறகு அழுகுராஜ்ஜை நம்ம ப்ரெண்டாக்கிட்டதிக்கே”போயும் போயும் கீழ்சாதிப்பையனப் போயி ப்ரண்டாக்கிட்ட.. ஏய் நம்ம சாதிப் பையங்க கிடைக்கலயே ப்ரெண்ட்டா “என்று ரொம்பப்பேர் கேலி பண்ணுனது ஞாபகம் வந்தது . அந்த ஞாபகத்தில் இனி அவன் வீட்டுக்குப்போனம்னா அம்புட்டுதான் ரொம்ப கேலி பண்ணுவாங்கே என்ற நினைப்பு ஓடியது. பிறகு டீச்சர் நினைப்பு வந்தது . நாளைக்கு டீச்சர்  கேட்டாள் ஏதாவது  சாக்கு சொல்லி சமாளிச்சிக்கிருவோம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் டீச்சர் சிலபேரைப் பார்த்து “நேத்து அழகுராஜ் வீட்டுக்குப் படிக்கப் போனங்களா..?”என்றது.

எல்லாப் பிள்ளைகளும் உம்முனு இருந்தார்கள்.

“என்னா உம்முனு இருக்கிங்க .அப்ப நேத்து அழுராஜ் வீட்டுக்குப் போகல.அப்படித்தான.”

 சிலபேர் ஆமாயென்று தலையசைத்தார்கள்.

“நான் சொல்லியும் போகல. ம்ம்.. இன்னைக்கு என்னசெய்வங்களோ.. ஏது செய்வங்களோ ..கண்டிப்பா அழகுராஜ் வீட்டுக்குப் போயி படிக்கிறிங்க..”

அதற்கு சரியென்று தலையசைத்துக்கொண்டார்கள் பிள்ளைகள். 

பள்ளிக்கூடம் விட்டதும் அழகுராஜ்விடம் சென்று முத்துச்செல்வனும் சிலபிள்ளைகளும் “அழகுராஜ் நீயின்னா எங்க தெருவுக்கு வந்து படிக்கச் சொல்லிக்கொடுக்கிறியா..? “என்றார்கள். அதற்கு அவன் சரியென்று தலையசைத்துகொண்டான் .

அழுகுராஜ் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப்போனதும் பெரும்பாலும் பள்ளிக்கூடம் இருக்கும் மேலத்தெருவுத்திக்கமே வரமாட்டான். அப்படியே வந்தாலும் அவனுடைய அப்பா ஏதாவது தண்டாரோ மூலம்  சாட்டும்போது கூட வருவான். அல்லது ஏதாவது விஷேச காலத்தில் அவனுடைய அம்மா மேலத்தெருவில் வீடுவீடாக சோறு,கறி வாங்கும்போது பின்னாலே வருவான். பிறகு ஆடிப்பொங்கலப்ப முளைப்பாரிக்கு நல்லதண்ணி கிணற்றுக்கு தண்ணி எடுக்கப்போக தப்படிக்க (பறை அடிக்க) வருவான். 

இப்போதுதான் முதன்முதலாக  பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருகிறான் இந்தத்தெருவுக்கு .

 கொஞ்சம் இரவானதும் அழகுராஜ் வந்து நின்றிருந்தான் பள்ளிக்கூடம் பக்கத்தில். அதற்குப்பிறகு சில பிள்ளைகள் புத்தகப்பையுடன் வந்து நின்றார்கள்.முத்துச்செல்வனும் சிலநொடிகளில் வந்து சேர்ந்தான் . பிறகு பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு எது தோதான இடம் என்று அவர்களுக்கு உள்ளாகவே பேச ஆரம்பித்தார்கள். 

கூட்டத்தில் ஒரு பிள்ளை “பெருமாள் கோவில் வரண்டாவில் உட்காருவோமா “என்றது. 

 கூட்டத்தில் இன்னொரு பிள்ளை “அழகுராஜா கோவிலுக்குள்ள வரக்கூடாதில்ல.. அப்ப அங்க எப்படி வந்து சொல்லித்தருவயான் “என்றது. 

“அட ஆமால்ல”என்று இழுத்தது பெருமாள் கோவில்ல உட்காரச்சொன்ன பிள்ளை. 

பிறகு இறுதியாக பஞ்சாயத்து மேடைதான் சொல்லிக்கொடுப்பதற்கு சரியான இடமென்று தேர்வானது. 

பாடம் கற்றுக்கொள்ள வந்த பிள்ளைகள் ஓடிப்போயி மேடையில் உட்கார்ந்து கொண்டார்கள் .

அழுகுராஜ் மேடைக்குகீழே உட்கார்ந்துகொண்டான். பிறகு படிப்பில் சந்தேகம் கேட்கிற பிள்ளைகளுக்கு  கழுத்து வலிக்க அண்ணாந்து -பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று சொல்லித்தந்தான். 

அடுத்தநாள் வகுப்பறையில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து “அழுராஜ் வீட்டுக்குப் போனிங்களா படிக்க “என்றது. 

சில பிள்ளைகள் பயத்தில் அழகுராஜைப் பார்த்தார்கள். வேகமாக அழகுராஜா “ஆமா டீச்சர் எங்க வீட்டுக்கு படிக்க வந்தாங்க”என்றான் வேகமாக.

அவன் அப்படிச் சொன்னதும் முத்துச்செல்வன் உட்பட பலருக்கு நிம்மதி வந்தது. 

 இப்படியாக பலநாட்கள் அழுகுராஜ் மேலத்தெருவுக்கு வந்து பிள்ளைகளுக்கு படிக்க சொல்லிக்கொடுத்தான். 

அழகுராஜ்ஜைப் பார்த்து “வகுப்பறையில் டீச்சர் சொல்லிக்கடுக்கும்போது, புரியாத கணக்கு ,இப்போது நீ சொல்லிக்கடுக்கும்போது ஈசியா புரிகிறது”என்று சொன்னான் முத்துச்செல்வன்.அதற்கு அழுகராஜ் சிரித்துக்கொண்டான். 

அழுகுராஜ்ஜைப் பார்த்து முத்துச்செல்வன் சொன்னதைபோலவே சில பிள்ளைகளும் சொன்னார்கள். .உண்மைதான் எதையும் ஆசிரியர்கள் சொல்லித்தரும்போதுவிட, கூடேயிருக்கும் யாராவது சொல்லித்தரும்போதுதான்  எளிமையாக புரிந்துவிடுகின்றன. 

அழுகுராஜ் சொல்லித்தந்ததால் என்னவோ சிலபிள்ளைகள் முன்னைவிட கொஞ்சம் நன்றாகவே படித்தன. முக்கியமா முத்துச்செல்வன் முன்னைவிட கணக்குப்பாடத்தில் மார்க் கொஞ்சம் கூடத்தான் எடுத்திருந்தான். 

இந்த சந்தோஷத்தில் அந்தவருஷ தைப்பொங்கலுக்கு அழகுராஜ்க்கு பொங்கல் வாழ்த்து சொல்லும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த் படம் போட்ட  கிரிட்டிங் கார்டுனை விருதுநகரிலிருந்து வாங்கி வந்து அதில் 

‘என் நண்பன் அழகுராஜ்க்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் என்றெழுதி அதற்கு கீழே என்றும் அன்புடன் உன் நண்பன் ‘ என்றெழுதி முத்துச்செல்வன் கொடுக்கவும் அழுகுராஜ்க்கு சந்தோஷம் தாங்கவில்லை. முக்கியமா தனக்குப் பிடித்த ரஜினி படத்தைப் பார்த்ததும் ஏகப்பட்ட சந்தோஷம் அழகுராஜ்க்கு. 

மறுநாள் அதிகாலையில் முத்துச்செல்வன் கொடுத்த ‘கிரிட்டிங் கார்டுனை புத்தகத்துக்கு நடுவே வைத்து திறந்து திறந்து பார்த்துக்கொண்டிருந்த அழுகுராஜ்ஜை தண்ணியெடுத்திட்டு வரச்சொன்னாள் அம்மா. அம்மா சொல்வதை காதில் வாங்காமல் படுத்திருந்தான் அழகுராஜ். “ஏய் ஒன்னத்தான்டா..போயி தண்ணியெடுத்திட்டு வா “என்று கத்திச்சொன்னாள் மீண்டும் அம்மா. 

அவன் “நானெல்லாம் தண்ணிக்குப்போகல” என்றான்.

“தண்ணிக்குப்போகலேனா மோண்டு மோத்தரத்தையா குடிப்ப”என்றாள் அம்மா. அவள் அப்படி சொன்னதும்  புத்தகத்தை மூடிவைத்துவிட்டு சின்ன சில்வர்பானையை எடுத்துக்கொண்டு  மூக்காலே அழுதுகொண்டே  கிளம்பினான் அழகுராஜ். 

ஊரின் மையத்தில் உள்ள தண்ணீர்க்குழாய்க்கு போகவா வேண்டாமா என்ற தயக்கத்திலே   ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள பாதையில் நடக்கத் தொடங்கினான். அந்த ஒற்றை தண்ணீர்க் குழாயை நெருங்கியதுமே அவனுக்கு எரிச்சல் வரத்தொடங்கியது. தூரத்தில் வரும்போதே நமக்கு முன்னாடி எத்தனைபேர் தண்ணி பிடிக்க இருக்காங்க என்று கூட்டத்தைப் பார்த்து மனதுக்குள்ளே ஒன்று, ரெண்டுனு எண்ண ஆரம்பித்தான்.தான் இருபத்தி மூனாவது ஆளு என்று தெரிந்துகொண்டதுமே கோபம் சுள்ளுனு வந்தது அழகுராஜ்க்கு. 

இந்த ஒத்த குழாயோட சேர்த்து கூட ரெண்டு தண்ணீர்க்குழாய்  போட்ருந்தா ,டக்னு தண்ணி பிடிச்சிட்டு போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே ..மேற்குப்புறம் திரும்பி பத்தடி தூரத்தில் உள்ள மேல்சாதிக்காரர்கள் பிடிக்கும் தண்ணீர்க்குழாய்களை பார்த்தான் அழுகுராஜ். தெற்குப்புறம் நீட்டிய பத்துக்குழாய்களிலும் வடக்குப்புறம் நீட்டிய பத்துக்குழாய்களிலும்  அவ்வளவுக்காக கூட்டமில்லை. சில குழாய்கள் தண்ணீர் யாரும் பிடிக்காமல் காலியாத்தான் கிடந்தது.அதைப்பார்த்து அங்க குழாய்கள் சும்மாதான் கிடக்கு ஆனாலும் அங்கேபோய் பிடிக்கமுடியாதே என்ற தவிப்பு அழகுராஜ் மனதுக்குள் ஓடியது. 

மேல்சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்கள் தண்ணீர்குழாய்களில் தண்ணீர் பிடிக்கலாம் -ஆனால் கீழ்ச்சாதிக்காரர்கள் மேல்ச்சாதிக்காரர்கள் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக்கூடாது. இதுதான் நடைமுறை .

நேரமாக நேரமாக பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிறதே என்ற தவிப்பு மனதினுள்ளே ஒருபுறம் ஓடினாலும், மறுபுறம் தண்ணிபிடிக்காம போனமுன்னா அம்மா வையுமே என்ற தவிப்பும் ஓடியது. 

ஒவ்வொருவருவராக தண்ணிபிடித்திட்டுப்போக போக அழகுராஜ்க்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தனக்கு முன்னாடி தண்ணி பிடிக்கிறவர்கள் இன்னும் எத்தனைபேர் இருக்கிறார்களென்று அப்பைக்கப்ப மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டான். 

அழகுராஜ்க்கு முன்னாடி தண்ணி பிடிக்கிறவர்கள் ஏழுபேர் இருக்கும்போது குழாயில் வரும் தண்ணீர் திடீரென சிறுக ஆரம்பித்தபோது. அதைப் பார்த்ததுமே ஐய்யய்யோ இவ்வளவு நேரம்  தண்ணி பிடிக்க நின்னது வேஷ்டாப்போச்சே …இப்படி தண்ணி சிறுக்க ஆரம்பிச்சிருச்சே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே மேல்சாதிக்காரர்கள் பிடிக்கும் குழாயைப் பார்த்தான். அங்கேயும் தண்ணி சிறுகத்தான் வந்தது. ஆனாலும் சில குழாய்களில் ஒன்னுரெண்டுபேர்தான் நின்றிருந்தார்கள்.

இன்னும் கொஞ்சநேரத்தில் தண்ணி நின்றுவிடும்போல்தானிருந்தது. அதுக்குமுன்னாடியே தண்ணி ஓட்டிவிடும் ஆளிடம் எதுக்கு தண்ணி குழாயில் சிறுத்திருச்சு என்று ஒருவர் கேட்கப்போனவர் .

சிலநொடிகளில் தண்ணி நின்றுபோனது. குழாயில் இருக்கும் எல்லோரும் விசாரிக்கப்போனவரையே எதிர்பார்த்து நின்றார்கள். “தண்ணி வராதாம். எந்த இடத்திலயோ குழாய் ஒடைஞ்சுபோச்சோம் “என்று அவர் சொல்லிக்கொண்டே வரும்போது எல்லோருக்கும் மூஞ்சி இம்புட்டாய் போனது. 

மேல்சாதிக்காரர் ஒருவர் “இப்படித்தான் மாசத்துக்கு நாலுதடவ குழாய்  ஒடைஞ்சுபோச்சு.தண்ணி மோட்டார் ரிப்பேர்னு தண்ணி வராமப்போயிடுது. நம்ம பொழப்பு குடிதண்ணிய கிணத்துலிருந்து இரைச்சு எடுக்கிறதுதான்னு ஆகிப்போச்சு.. என்ன செய்ய எல்லாம் ஊர் ராசி அப்படி.. “என்று ஒருவர் புலம்பிக்கொண்டே வெத்து பித்தளைபானையை தூக்கிக்கொண்டு கிணற்றில் தண்ணி இரைக்கிற இரும்பு வாளியை எடுக்க வீட்டுக்குப் போனார். அதுமாதிரி ஒவ்வொருவராக கிளம்பிப்போனார்கள். 

தண்ணி நின்றதும் ஒத்தக்குழாயை சுற்றி நின்றிருந்த  அத்தனை பேர் முகத்திலும் அவ்வளவு வேதனை. இனி  குடிதண்ணிக்கு என்னசெய்ய.. பானையை தூக்கிக்கிட்டு மேல்சாதிக்காரர்கள் இரைக்கிற கிணத்துக்குப்போயி நின்று காத்துக்கிடக்கவேண்டும், யாராவது  தண்ணி இறைத்து ஊத்துவார்களா என்று. நமக்குன ஒரு கிணறு இருந்தா நாமபாட்டுக்கு போயி தண்ணி இறைச்சுக்கிறலாம். நம்ம கிணறுதான் தூர்வாராம பாழடஞ்சு கிடக்கே.. என்று “சிலபேர் புலம்பிக்கொண்டு யாராவது மேல்சாதிக்காரர்கள் இரைத்து ஊத்துவார்கள் என்ற நம்பிக்கையில் புளியந்தோப்பிலிருக்கிற நல்லதண்ணீர் கிணற்றை நோக்கி நடந்தார்கள். 

 அழுகுராஜா  புளியந்தோப்பு கிணற்றுக்கு போகவா, வேண்டாமா என யோசித்தான். சிலநொடிகளில் தண்ணி இல்லாமல் போனால் அம்மா வையும் என்று நினைத்துக்கொண்டே பானையைத் தூக்கிக்கொண்டு கிணற்றை நோக்கி நடந்தான். 

போகிற வழியில் இருபுறமும்  மிகத்தடித்த புளியமரங்கள் வெளிச்சத்தை தரையிரங்கவிடாதபடி நிழலை தரையெங்கும் படர வைத்திருந்தது. 

அழுகுராஜ் போகும்போதே பாதையை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே போனான். தன்னோடு படிக்கிற பிள்ளைகள்,பையன்கள் யாராவது தண்ணி கிணற்றுக்கு இறைக்க வருகிறார்களா என்று. 

கொஞ்சம் தூரம் போனதும் ஒரு பெரிய புளியமரத்தில் பலஆணிகள் அடித்து, அதற்குக்கிழே மல்லிகைப்பூ, ரிப்பன்,குங்கும்,கண்மை,வளையல் லொட்டு லொஸ்க்னு இப்படி ஏகப்பட்ட பரப்பிக்கிடந்தன. அதைப்பார்த்ததும் அழகுராஜ்க்கு பயம் வந்தது. உடனே அவன் வாய்வழியே எத்தனையோ சாமிகளை வேண்டிக்கொண்டான். 

ஊருக்குள்ளே யாருக்காவது பேய் பிடித்துக்கொண்டால் வீட்டிலிருந்து அழைத்து வந்து, இந்த மரத்தில்தான் ஆணி அடித்து இறக்கிவிடுவார்கள். அந்த மரத்தை பக்கத்தில் வந்ததும் அழகுராஜ்க்கு உடல் நடுங்கிவிட்டது. இத்தனைக்கும் கொஞ்ச தூரத்தில் ஆள் நடமாட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் பயம் குறையவில்லை  .

அந்த மரத்தை கடந்ததும்தான் இயல்பு நிலைக்கு வந்தான். பயம்போனதும் மீண்டும் தண்ணி இல்லாத வெற்றுப்பானையைப் பார்த்தான். மீண்டும் பாதையை திரும்பிப் பார்த்தான். தன்கூட படிக்கும் பிள்ளைகள் யாராவது தெரிகிறார்களா என்று. யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. 

 கிணற்றை நெருங்கியதுமே இவனுக்கு மலைப்பாக இருந்தது. அவ்வளவு கூட்டம் . ஒரே நேரத்தில் பல இரும்பு வாளிகள் கிணற்றுக்குள் விழுவதும், எழுவதுமாக இருந்தன. 

யாரிடம் போய் தண்ணிக்காக பானையை வைக்கலாம் என்று கிணற்றைச்சுற்றி பார்த்தான் ஏக்கமாக. இவனுக்கு முன்னாடியே தண்ணிக்காக பானையை வைத்துவிட்டு கிணற்றின் மேட்டிலிருந்து  ஒரு ஓரமாக அப்பாவிகளாக நின்றிருந்தார்கள் பல கீழத்தெருக்காரர்கள். 

மேலத்தெருக்காரர்கள் இரும்பு வாளியைக்கொண்டு இரைத்து இரைத்து பானையை நிரப்பியதால் ‘தஷ்புஷ்னு’இளைத்துப்போனார்கள். அவர்கள் முகத்திலும் உடம்பிலும்  ஆலமர விழுதுபோல வியர்வைகள் சாரைசாரையாக இறங்கிக்கொண்டிருந்தன. வாளி கொச்சைக்கயிற்றில்(தேங்காநார் கயிறு) கட்டியிருப்பதால் இறைக்க, இறைக்க கைகளெல்லாம் சிவந்து காந்தாய் காந்தியது. பலபேர் முடிந்தளவு கீழத்தெருக்காரர்கள் பானைகளுக்கு இறைத்து ஊற்றினார்கள். 

சிலபேர்தான் வேலைக்கு நேரமாகிருச்சு என்று  கீழத்தொருக்காரர்களுக்கு தண்ணி இரைத்து ஊற்றாமல் வாளிக்குள்  கயிற்றை சுருட்டி அமுக்கினார்கள். 

அந்த நிமிடத்தில் பானையை வோறொருவரிடம்  தண்ணிக்காக மாற்றி வைத்தார்கள் கீழத்தெருக்காரர்கள்  .

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நின்றிருந்த அழகுராஜ் திரும்பி திரும்பி பாதையைப் பார்த்தான் .அவன் மனமெங்கும் முத்துச்செல்வன் வருகையை எதிர்பார்த்தது.பாதையில் யாராரோ தென்பட்டார்கள் -ஆனாலும் முத்துச்செல்வன் தென்படவில்லை. 

பிறகு யாரிடமாவது பானையை வைக்கலாம் என்று கிணற்றருகே போனான். கிணற்று மேடையெங்கும் செம்பழுப்பு நிறத்தில் உதிர்ந்து கிடந்த புளியமர இலைகளுக்கிடையே பித்தளைப்பானைகள், சில்வர்பானைகள் தண்ணீர்  நிரம்பியும், நிரம்பாமலும் காட்சியளித்தன . 

தண்ணீர் இரைத்துமுடித்த சிலபேர் பானையை தலையில் வைப்பதற்கு துண்டினை சுருமாடு பூட்ட ஆரம்பித்தனர். தொட்டவுடன் தன்னுடலை வட்டமாக சுருட்டிக்கொள்ளும்  சீமண்ணெப் புழுபோல (இரயில் பூச்சி) காட்சியளித்தது -அவர்கள் பூட்டி தலையில் வைத்த சுருமாடு. 

இதையொல்லாம் கவனித்துக்கொண்டே தயக்கத்துடன் ஒரு நடுத்தர வயதுக்காரக்காரரிடம் போய்  “சாமி சாமி”என்று சொல்லிக்கொண்டே கிணற்று மேடையில் கால் வைத்து ஏறாமல் கீழிறிந்தே பானையை சத்தமில்லாமல் மெல்ல வைத்தான். -அவர் இவன் பானையை வைப்பதை பார்த்துக்கொண்டே, தன் பானைகளில் இரைத்த தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தார். 

ஏதோ சலிப்பில் மீண்டும் பாதையைப் பார்த்தான். தன்னோடு படிக்கும் இரண்டு புள்ளைகள் கையில் வாளியோடு அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்து தண்ணீர் எடுக்க வந்தார்கள். அதைப் பார்த்ததும் இவனுக்கு கொஞ்சம் சந்தோஷம் வந்தது. 

அதற்குப் பின்னால் ஒரு கூட்டம் வந்தது-அந்த கூட்டத்திற்கு நடுவே புதிதாக திருமணம் ஆன பெண்ணொருத்தி சிலுசிலுவென அலங்காரம் பண்ணி கையில் புது பானையோடு வந்து கொண்டிருந்தாள்.அந்த  புதுப்பெண்ணோடு சேர்ந்து தண்ணீர் எடுக்க  முத்துச்செல்வனின் இரண்டு அக்காமார்கள் கையில் வாளி, பானையோடு வரவும் இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 

இனி எப்படியும் நம்ம பானைக்கு தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது அழகுராஜ்க்கு. கிணற்றை நோக்கி அந்த புதுப்பெண்  நெருங்கி வரவர  தண்ணீர்  இரைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.

‘இவ யாரு மருமக, இது யார்வீட்டுக்கு வந்த புதுப்பொண்ணு,பொண்ணு அழகா இருக்கு ’என கிணற்றிலிருந்தவர்கள் மாறிமாறி  பேசிக்கொண்டார்கள்.

கல்யாணம் முடிந்து மூன்றாவது நாளிலோ அல்லது அந்த ஐந்தாவது நாளிலோ இந்த கிணற்றுக்கு புதுப்பெண் தண்ணீர் எடுக்க வருவது ஒருவித சடங்கு சம்பிரதாயம்-அந்தப் புதுப்பெண்ணுக்கு துணையாக 

பக்கத்து வீட்டுப்பெண்களும் தண்ணீர் எடுக்க வருவார்கள்.

புதுப்பெண்ணோடு தண்ணீர் எடுக்க வருபவர்களை சேர்த்து அஞ்சு பேரோ அல்லது ஏழுபேரோ என ஒற்றப்படையில் இருக்கவேண்டும். எண்ணிக்கையில் ரெட்டைப்படையில் இருக்கக்கூடாது.இதுதான் வழக்கம்.

புதுப்பெண்ணோடு வந்த கூட்டம் கிணற்று மேடையில் ஏறியதும்-அதுவரை தண்ணி இறைத்தவர்கள் கொஞ்சம் வழிவிட்டு நின்றார்கள்.

கிணற்று மேடையில் பானைகளை கும்மலாக வைத்துவிட்டு, புதுப்பெண்ணை கிழக்கு நோக்கி சாமி கும்பிட சொல்லிவிட்டு சூடம் பத்தி பொருத்தி வைக்கச் சொன்னார்கள்.பிறகு கிணற்றின் மூலை மூலைக்கு சந்தனம், குங்குமம் தடவச் சொன்னார்கள்.

இதையெல்லாம் ஆர்வமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கிய அழகுராஜ் அப்போதைக்கு பானையில் தண்ணீர் கேட்கும் விஷயத்தை மறந்திருந்தான்.

சுற்றி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவர்களும்  கொஞ்ச நேரம் ஆசுவாசமாக புதுப்பெண் செய்வதை கவனிக்கத் தொடங்கினார்கள்.

புதுப்பெண் கிணற்றின் மூலைகளுக்கு சந்தனம், குங்குமம் பூசி முடித்ததும், தண்ணீர் இறைத்து ஒவ்வொரு பானையாக நிறைக்க ஆரம்பித்தார்கள் புதுப்பெண்ணோடு வந்திருந்த பெண்கள். எல்லா பானையும் நிறைந்த பிறகு, புதுப்பெண்ணின் கைகளில் ஏழு வெற்றிலையை கொடுத்து, சாமி கும்பிட்டுவிட்டு கிணற்றுக்குள் வெற்றிலையை பராக்க சீட்டுக்கட்டுபோல போடச் சொன்னார்கள்.

அதுவரை சுற்றிநின்று ஏனோதானோ என்று வேடிக்கை பார்த்தவர்கள், புதுப்பெண் வெற்றிலையை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் நிமிடம் வந்ததும், கிணற்றுக்கு தண்ணீருக்குள் வெற்றிலை என்ன கோணத்தில் விழப்போகிறது என்ற ஆர்வத்தில்   எட்டிப் பார்க்க ஆர்வமாகினார்கள்.

அதாவது புதுப்பெண் தூக்கிப்போடும் வெற்றிலை குப்புறாக்க விழுந்தால் புதுப்பெண்ணுக்கு பெண் பிள்ளை பிறக்கும், மல்லாக்க விழுந்தால் ஆண்பிள்ளை, இரண்டு வெற்றிலை ஒட்டிக்கொண்டு விழுந்தால் ரெட்டைப்பிள்ளைப் பிறக்கும் என்பது நம்பிக்கை.

மேல்சாதிக்காரர்கள் எல்லோரும் கிணற்றுக்குள் ஆர்வமாக விழிகளை வைத்திருக்க, கீழ்சாதிக்காரர்கள் மட்டும் அதனைப் பார்க்க ஆர்வமிருந்தும், கிணற்று மேடையில் ஏற முடியாமல் தவியாய் தவித்தனர்.

அப்போதைக்கு முக்கியமாக எல்லோருக்கும் தண்ணீர் ஆசை போயி, வெற்றிலை விழப்போகிற கோணத்தை பார்க்க ஆர்வம் கூடியிருந்தது.

அழகுராஜ்க்கு  கிணற்றுக்குள் விழப்போகும் வெற்றிலையை பார்க்க ஆசையாய் இருந்தது.ஆனாலும்  பரபரக்கும் அவன் கால்களால் ஒரு எட்டு எடுத்து வைத்து கிணற்று மேடையில் ஏற முடியவில்லை.

புதுப்பெண் கிணற்றுக்குள் வெற்றிலைகளை தூக்கிப்போட்டதும், எல்லோரும் தண்ணிக்குள்  விழுந்த வெற்றிலைகளின்  கோணத்தைப் பார்த்து இத்தன ஆம்பளப்பிள்ளை, இத்தன பொம்பளப்பிள்ளை என்று போட்டி போட்டு சொல்ல ஆரம்பிததார்கள்.

கிணற்று மேடைக்கு கீழே நின்றிருந்த அழுகுராஜ்க்கு“ஆம்பளப்பிள்ள, பொம்பளப்பிள்ள” என்று அவர்கள் சொல்வதை கேட்க கேட்க எப்படியோ இருந்தது. தானும் அந்த வெற்றிலையைப் பார்த்து அம்புளப்புள்ள, பொம்பளப்புள்ள என்று சொல்ல வந்தது.

இறுதியில் புதுப்பெண்ணோடு வந்த கூட்டம் பானையைத் தூக்கி கிளம்பும்போதுதான் அழகுராஜ்க்கு தன் பானை காலியாய் இருப்பது ஞாபகம் வந்தது.

முத்துச்செல்வன் அக்காவை அழைக்கலாமா என்று வாயைத் திறந்த அழகுராஜ்க்கு வார்த்தை வரவில்லை.

இந்த வெற்றிலை நெனப்புல தண்ணிய மறந்திட்டமே என்று நினைப்போடியது அழகுராஜ்க்கு. என்னதான் தண்ணி நெனப்பு வந்தாலும், கிணற்று தண்ணிக்குள் கிடக்கும் வெற்றிலையை பார்க்க மீண்டும் மனசு பரபரத்தது.

நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்ணீர் இறைக்க அப்போதுதான் கிணற்றுக்குக்கு வந்தார்.அவரிடம் ஓடிப்போயி “சாமி! என்று பானையை தயங்கியபடியே வைத்தான்.

சிறிது நேரம் அவனைப் உற்றுப் பார்த்துவிட்டு “யாருடா நீ.. முத்தப்பன் மகனா…இந்த வாமன வேஷம் போடுவயே..”என்று பேச்சுகொடுத்துக்கொண்டே கிணற்றைப் பார்க்காமல் வாளியேப்போட்டு தண்ணியை மோக்க அரம்பித்ததும், சொல்லிவச்சதுமாதிரி அந்த வாளியின் தண்ணீரில்  கன்னியில் விழுந்த பறவைபோல ஒரு வெற்றிலை தன்னாலே வந்து மிதந்து ஏறிக்கொண்டது.

பேச்சு கொடுத்துக்கொண்டே தண்ணீர் இறைத்தவர் வாளியில் மிதந்து வந்த அந்த வெற்றிலையை பார்க்காமலே  வாளியை கிணற்று மேல் வரை இழுத்து, முத்துச்செல்வன் பானையில்  தண்ணீரை ஊத்த ஆரம்பித்தார். 

அப்போது மத்தாப்புபோல சிதறி பானையை விட்டு வெளியே விழுந்த பல தண்ணீர்த்துளிகளோடு சேர்ந்து   கிணற்று மேடையில் மல்லாக்க விழுந்த அந்த வெற்றிலை, கொஞ்ச கொஞ்சமாக தண்ணீரோடு சேர்ந்து நகர்ந்து  அழகுராஜ்ஜின் பால்ய பாதங்களை நோக்கிப் போனது.

தொடர்புக்கு :[email protected]

     

     

    

      

    

     

   

    

    

  

  

   

      

      

       

      

       

      

    

         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *