நங்கை ஒருத்தி ஆகாயத்தை நோக்கி கொண்டு நிலத்தை தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் படுத்து கொண்டு இங்கும் அங்கும் உருளாமல் இருப்பது போன்று இருந்தது. கம்பிகள் நீண்டு இருபுறமும் இறுகப்பற்றி கொண்டு விரல்களின் தொடுதலில் அசைய காத்திருந்தது. இசையை பறக்க விடுவதற்கு.
வீணை அவள் மடியில் அமைதியாக படுத்துக் கொண்டு உறங்காமல் கண் விழித்து கொண்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு சரியாக சென்று விட்டேன். அத்திப் பூத்தாற் போல எப்போதாவது இசை நிகழ்ச்சி நடக்கும். நிகழ்ச்சி ஒரு சிறிய மண்டபத்தில் நடந்தது.
இந்த மாதிரி வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே ஒரு முறை வந்துள்ளேன். நாதஸ்வர நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் வித்வான் சுந்தரம் அவர்கள் ஒரு மணி நேரம் இடைவேளை இல்லாமல் வாசித்தார். இருக்கைகள் எல்லாம் ஒரு துணையுடன் இருந்தது. எதுவும் தனியாக இல்லை. நல்ல கூட்டம். அன்று வெளியில் சாலையில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.
மாலையில் மண்டபத்திற்கு வெளியே ஏதாவது போராட்ட கூட்டம் நடைபெறும். அமைதி இசையை நம் மனத்தின் ஆழத்திற்கு சென்று சேர்த்து மேலும் அமைதிப்படுத்தியது. சிறகுகள் இல்லாமல் பறந்தோம். எல்லா சப்தங்களும் தெளிவாக கேட்க முடிந்தது காதுகளுக்கு. எனக்கு தெரிந்த ஆதி தாளத்தில் ஒரு சில பாடல்கள் வாசித்தார். மற்ற பாடல்கள் பற்றி தெரியவில்லை. அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. வார்த்தைகளால் சிலவற்றை விளக்க முடியாதது அதில் இசையும் ஒன்று.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து. ஒரு சில கோயில்களுக்கு சென்ற போது நாதஸ்வர இசையை கேட்க முடிந்தது. நானும் நாதஸ்வரமும் நண்பர்களாக பழக தொடங்கி விட்டோம். இதனால் தான் சஞ்சாரம் படித்தேன். அதில் வரும் கல் நாதஸ்வரம் மறக்க முடியாது. அதன் ஒலி கேட்டு கொண்டே இருக்கிறது. அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக வீணை இசையை நேரில் கேட்க வந்தேன். எனக்கு நாதஸ்வரத்தின் மீது தான் ஆர்வம்.
அபிராமியை பார்த்ததில் அவளை பிடித்து போனது. அவளுடைய லெட்சணமான முகம். சிவந்த மலர்களுக்கு சவால் விடும் அளவுக்கு கருமை நிறம். அவளுடைய கருப்பு வெள்ளை குதிக்கும் கண்கள். முகத்தில் எப்போதும் ஒலித்து கொண்டு இருக்கும் இசை. புன்னகையுடன் வரி வரியாக பேசிக் கொண்டே இருக்கும் உதடுகள். அவள் நன்றாக பாடுவாள் ஆனால் கேட்டதில்லை. இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவளை மேலும் பிடித்து போனதற்கு பல காரணங்கள் உண்டு முக்கியமாக இசை. அவள் இரண்டு வருடங்களாக வீணை கற்று கொண்டு இருக்கிறாள். அவளுடைய குருவுடன் அவ்வப்போது சிறு நிகழ்ச்சியில் பாடுவது உண்டு. என்னை இதுவரை அழைத்தது இல்லை. நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறுவாள். நான் இசை நிகழ்ச்சிக்கு செல்வது உண்டு என்று கூறியதனால். இசையை பற்றி சிலவற்றை கூறுவாள். அவள் முதல் முறையாக வீணையை மேடையில் இசைக்க போகிறேன் என்றாள். நான் கண்டிப்பாக வருகிறேன் என்றேன்.
கடிகாரமும் ஒரு இசை கருவி தான். இரவில் அது இசைக்கும் இசைக்கு இருளும் கொஞ்சம் பயப்படுவது உண்டு. நிகழ்ச்சி சரியான நேரத்திற்கு தொடங்கியது. கூட்டம் உள்ளேயும் வெளியேயும் இல்லை. மண்டபம் நகரத்தின் மையத்தில் இருந்தாலும் எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது. தூங்கு மூஞ்சி மரங்கள் அதிக அளவில் கிளை பரப்பி எல்லா வெளிச்சத்தையும் சத்தத்தையும் விழுங்கி கொண்டு நிகழ்ச்சிக்கு துணை செய்தது. ஐம்பது பேர்கள் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் அபிராமியின் தோழிகள் சிலர் வந்து இருந்தனர். அவர்கள் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் கொண்டிருந்தனர். இசையை கேட்கும் ஆர்வம் இருப்பது போன்று தெரியவில்லை.
அபிராமி அவளுடைய குருவிடமும் மற்றும் சில விருந்தினர்களுடன் பேசி கொண்டு இருந்தவள், என்னை பார்த்தவுடன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு என்னிடம் வந்தாள். அவள் லாவண்டர் நிறத்தில் எளிமையான புடவையில் அந்த வெளிச்சத்திலும் கருமையில் ஜொலித்தாள்.
எனக்கு ஒரு சுபாவம் உண்டு கொஞ்சம் அழகான பெண்கள் அருகில் இருந்தால் பார்க்க நேர்ந்தால் ஒரு வித கூச்சமும் வந்து விடும். அவை மேலும் அதிகம் ஆவதற்குள் அந்த இடத்தை விட்டு நகர முயற்சிப்பேன். இப்போது அபிராமி என்னை பார்த்ததில் மேலும் ஒரு வித மலர்ச்சி கொண்டாள் மொத்த உதடுகளும் அம்பு எய்த வில் எய்த களிப்பில் இருப்பது போன்று நீண்ட புன்னகையை தந்தாள்.
எனக்கு கூச்சமாக இருந்தது. என்னை யாராவது பார்க்கிறார்களாக என்றும் பார்த்து கொண்டேன்.
என் கைகளை பிடித்து அழைத்து கொண்டு போய் குருவிடமும் மற்றும் சில பேரிடமும் அறிமுகப் படுத்தினாள். என்னால் அவளை போன்று இயல்பாக சிரிக்க முடியவில்லை. முதல் வரிசையில் அமர வைத்தாள்.
சட்டென்று ஒரு துளிகள் கூட மிச்சம் இல்லாமல் நின்ற மழை போல் இருந்தது. சில சமயங்களில் சிலரை பார்த்ததில் மனது லேசானது போன்று இருக்கும். கோயில் மணி ஓசை ஒலித்து விட்டு வாய் மூடிக் கொண்டவுடன் ஏற்படும் அமைதி போன்று.
அபிராமியின் அருகில் அமர்ந்திருந்தார் அவள் குரு. அவரை பார்க்கும் போது அவர் கண்களில் அபிராமி மீது இருக்கும் நம்பிக்கை பளிங்கி போன்று மின்னியது.
அபிராமி உலகத்தை மறந்து வீணையை மீட்ட தொடங்கினாள். சிரிப்பு அலைகள் வீசுவது போன்று வித விதமாக ஒலிகள். என் மொத்த காதுகளும் அவள் இசையை விழுங்கி கொண்டு இருந்தது. தாய் பிறந்த தன் குழந்தையை ஏந்தி கொள்வது போன்று வீணையை ஏந்தி இருந்தாள். அவள் கை விரல்களையே பார்த்தேன். அவள் நடனம் ஆட மாட்டாள். அதனை அவள் கை விரல்கள் பத்து கால்கள் கொண்டு ஆடுவது போன்று ஆடியது. முன்னும் பின்னும் ஓடிக்கொண்டே இருந்தது. மலை முகட்டில் எழுந்து பறக்கும் பனி போன்று தீராமல்.
நாம் கேட்ட தெரிந்த சில பாடல்களையும் இசைத்தாள். என் எண்ணங்களை எல்லாம் விரட்டியது இசை. எந்த எண்ணமும் இல்லாமல் மொத்த இசையையும் நான் ஒருவன் மட்டுமே கேட்டு கொண்டிருப்பதாக நினைத்தேன்.
மழை நின்ற பிறகு மழையை தவற விட்டவனுக்கு மரத்தின் இலைகளில் ஒன்று கொடுக்கும் தேன் துளி போன்று எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று அவளுக்கு தெரியாமல் ஏதேச்சையாக எனக்காக ஒரு பாடலையும் இசைத்தாள். அது ஆடுவோமே என்ற பாரதியின் பாடல்.
எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இந்த பாடலை பாடியபடி கேட்டு கொண்டே இருக்கிறேன். வாழ்வில் சலிக்காதவை சில உண்டு. அவற்றில் இதுவும் உண்டு. சட்டென்று கலைந்த கனவு போல் நிகழ்ச்சி இனிதாக முடிந்தது.
அபிராமி கண்களில் வென்று விட்ட பெருமிதம் தெரிந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். நேரம் ஓடியது எல்லோரும் ஒருவர் இருவராக கலைந்து சென்று கொண்டிருந்தனர். இறுதியாக விருந்தினர் ஒருவர் செல்வதற்கு முன்பு அவள் குருவிடம் ஏதோ சொன்னார். என்னவென்று தெரியவில்லை. குருவின் முகம் இயல்பான மகிழ்ச்சியிலிருந்து விடுபட்டு செயற்கையாக மாறிவிட்டது. விருந்தினர் சென்றவுடன். அவருடைய முகம் மொத்தமாக மாறி எதையோ மறைப்பதற்கு முடியாமல் தவித்தது. அவரும் அபிராமியிடம் ஏதோ அவசரம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். அவருடைய மாற்றம் என்னை தொற்றிக் கொண்டது. எண்ணங்கள் இல்லாமல் இருந்தவனுக்கு பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்து விட்டது. அபிராமியின் இசை பற்றி ஏதாவது சொல்லி இருப்பாரோ. எதுவாக இருக்கும் என்று நினைக்க தொடங்கி விட்டது.
இறுதியாக நானும் அபிராமி மட்டும் தான் மண்டபத்தை விட்டு வெளியே வந்தோம். அபிராமி ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள். என் கவனம் இன்மையை அவள் கண்டு கொண்டாள்.
என்ன வரும் போது மாப்பிள்ளை மாதிரி இருந்த. இப்ப என்ன.
உடம்பு சரி இல்லையா.
நான் சிரித்து கொண்டே அது எல்லாம் ஒன்னும் இல்ல.
பசிக்குது அதான்.
அப்ப சாப்பிடலாம் வா .
நடந்தவள் சட்டென்று நின்று
எப்போதும் இல்லாமல் உறக்க சிரித்தாள்.
யாராவது நிகழ்ச்சி பற்றி ஏதாவது சொன்னத கேட்டியா. நானே எதையும் பெருசா எடுக்கிறது இல்ல.
என் கவனம் எல்லாம் அடுத்து என்ன என்று தான்.
என் கைகளை பிடித்து கொண்டு நடந்தாள்.
அதுவும் இசை போன்று குளிர்ந்தது.
எங்கள் மீது சில துளிகள் விழ தொடங்கின. அன்னாந்து பார்த்த படி நடந்தோம். இருளில் எந்த விளக்கும் எரிய மறுத்தது. ஆனாலும் வெளிச்சமும் நிழலும் கூடவே வந்தது.