அவர்கள் அவள் உடலை நிர்வாணமாக்கி பாதி அழுகிய நிலையில் சவுக்கு மரத்தோப்பில் விட்டுச்சென்றிருந்தனர். முகமும் உடலின் மேல் பகுதியும் எல்லாம் அடையாளம் தெரியாதபடி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது. வாயில் திணிக்கப்பட்ட உள்ளாடை வெளிறிய பற்களின் இடையே பாதி கருகிய நிலையில் கிட்டிக்கப்பட்டிருந்தது. அகல விரித்த கால்களுக்கிடையே பிறப்புறுப்பில் உடைந்த மதுபாட்டில் ஒன்று சொருகப்பட்டிருந்தது. உடலெங்கும் வன்புணர்வுக்கான தடங்கள். மார்பகங்கள் கீறி கிழிக்கப்பட்டிருந்தன. வயிற்றிலும் தொடைகளிலும் ஆழமான வடுக்கள். அவற்றில் இருந்து வழிந்த ரத்தம் கரிய நிறத்தில் பொருக்காக கரைபடிந்திருந்தது. பழுத்து வழவழப்பாக மெழுகு போல வீங்கி வெடிக்கவிருந்த தோலில் அவை மெல்ல உதிரத்தொடங்கியிருந்தன. கண்களிலும் வடுக்களிலும் எல்லாம் சிற்றெறும்புகள் மொய்த்தன, இரத்தப்பொருக்குகளை அவை மெல்ல பெயர்த்து ஒவ்வொன்றாக எடுத்து சென்றுகொண்டிருந்தன. புழுக்கள் அவ்வளவாக தோன்றியிருக்கவில்லை. மூன்று நாட்களின் தொடர்மழை காரணமாக இருக்கலாம். பிணத்தில் இருந்து வாடை பெரிதாக எழவில்லை. அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகவேண்டும். கூரிய ஓர் அமில வாடை மட்டும் காற்றில் கரந்தெழுந்தது. அதன் ரகசியம் மேலும் பதற்றம் கொள்ளச்செய்வதாக இருந்தது. ஆழ்கடலிலிருந்து எழுந்த குளிர்ந்த காற்று சவுக்கு மர இலைகளை உலுக்கி மழைத் துளிகளை உதிர்த்து அவ்வப்போது உடலை சிலிர்க்கச்செய்தது. மழைநீர் ஊறிய மெத்தை போன்ற நூல் இலை பரப்பின் மீது கால்கள் ஒவ்வொரு அடிக்கும் தசைப்பரப்பென மெல்ல அழுந்தின. இலைகளின் மட்கிய வாடை மூச்சு காற்றில் ஓர் இறுக்கத்தை அளித்தது.
அது ஒரு ஆளரவமற்ற கடற்கரை. அங்கிருந்து இரண்டு திசையிலும் சில நூறு மீட்டர்களுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. அப்பால் தெற்கே இரண்டு வருடங்களுக்கு முன்பே மூடப்பட்டுவிட்ட ஓர் ஆடம்பர விடுதி. வடக்கில் அழிமுகம் ஒன்றும், அதன் பின் சில மீனவ குப்பங்களும். அவ்விடம் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையிலிருந்து நூறு நூற்றைம்பது மீட்டர் தொலைவு இருக்கலாம். சாலையில் இருந்து பார்வைதூரம்தான் என்றாலும் அடர்த்தியான சவுக்கு மரங்கள் நல்ல மறைவை அளித்தன. எங்கள் ஸ்டேஷனுக்கு அழைப்பு வந்தது காலை ஏழரை மணிக்கு. நாங்கள் இங்கு வந்து சேர்ந்து இப்போது இரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். ஆனால் இந்த பிற்பகலிலும் காலநிலை புரிபடாமல் அதிகாலையின் அரைவெளிச்சமே நீடிக்கிறது, இப்போது தான் அந்த அழைப்பு வந்தது போல் தோன்றியது. காலம் நகராமல் அக்கணத்தில் அப்படியே உரைந்து நின்றுவிட்டதை போல. மகாபலிபுரத்தில் இருந்து மேலும் முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர்கள் உள்ளே வரவேண்டும். மரக்காணம் போலீஸ் வட்டத்தில் வரும் பகுதி இது. நேற்று மாலையே உள்ளூர்மக்கள் பிணத்தை அடையாளம் கண்டு போலீசில் தெரிவித்திருந்தனர். நேற்று பின்மதியம் இங்கு ஒரு ஜீப் ரக வாகனம் நின்றிருக்கிறது. அதிலிருந்து சிலர் சவுக்கு காட்டுக்குள் செல்ல முயல, ஊர்மக்கள் சிலர் அவர்களிடம் எதேச்சையாக விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் சரியாக பதிலளிக்க முடியாமல் சட்டென்று வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட, குப்பத்து மக்கள் வாடை அறிந்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். உடலுக்கு நிச்சயம் நான்கைந்து நாட்கள் பழக்கம் இருக்க வேண்டும். அனேகமாக கொலை செய்தவர்கள் உடலை புதைக்கவோ எரிக்கவோ வந்திருக்கலாம். போதையில் நிகழ்ந்த வன்புணர்வு கொலைதான் என தெரிந்தது. கொலை செய்தபின் அடையாளத்தை சிதைக்க அரைகுறையாக முயன்றிருந்தார்கள். பெரிய கல் ஒன்றால் முகத்தை அடித்து சிதைக்க முயன்று, பின் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் வழக்கம் போல மண்ணை திணித்திருக்கிறார்கள். உடலுக்கு சற்று தொலைவில் அவள் ஆடைகளை கூட்டி எரிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் மழையீரத்தில் அது முழுமையாக எரிந்திருக்கவில்லை. அருகில் அவள் செறுப்பும் ஹேர்கிளிப்புகளும் எல்லாம் சிதறிக்கிடந்தன. இன்னும் சில அடி தூரத்தில் கடல்.
நாங்கள் வரும்போது பேரிகேடுகள் அமைத்து சாலையை பிரித்திருந்தனர். கைபேசிகளில் உடலை படம்பிடிக்க பொது மக்கள் கூட்டம் முண்டியடித்தது. காமெராவுடன் சில பத்திரிக்கைகளும். குற்றவியல் துறையிலிருந்து தடயங்களை படம்படித்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்க நாங்கள் சற்று ஒதுங்கி நின்றிருந்தோம். சிறிது நேரத்தில் தேனீர் வந்தது. என்னால் அங்கே நிற்க முடியவில்லை, கூட்டத்தில் இருந்து சற்று விலகி வந்தேன். என் உடலில் இன்னும் கடுமையான சோர்வு. மூன்று நாட்களாக சரியான உறக்கமில்லை.
இன்னும் சற்று நேரத்தில் உடலை அடையாளம் காண பெண்ணின் தாயும், தோழியும் வந்துவிடுவார்கள் என்றார்கள். முற்றாக இருள்வதற்குள் நடைமுறைகளை முடித்து உடலை அப்புறப்படுத்த வேண்டும். காலையில் நான்தான் அவ்வழைப்பை எடுத்தேன். செய்தி கேட்டதும் தெரிந்துவிட்டது. ஐந்து நாட்களுக்கு முன் வந்த புகார்தான். காணவில்லை என்று பதிவு செய்திருந்தார்கள். எத்தனையோ புகார்களுக்கு மத்தியில் தொலைந்திருக்க வாய்ப்புள்ள புகார். பதிவு செய்தபோது நானில்லை. ஆனால் மறுநாள் அப்பெண்ணின் தோழி மீண்டும் ஸ்டேஷனுக்கு தனியாக வந்திருந்தாள். அவள் சொன்ன தகவல் இது பெரிய குற்றமாக இருக்கலாம் என்ற நினைப்பைத் தந்தது. உடனடியாக மகாபலிபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை பேட்ரோல் போலீஸுக்கு தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால் அதன்பின் மூன்று நாட்களின் புயல் மழையில் வேறு எத்தனையோ பிரச்சனைகள். திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்குள்ளேயே வெள்ளம் புகுந்து கொண்டது. கடலில் இருந்து வீசிய புயல் காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன. ரோட்டில் பெறுகிச்சென்ற வெள்ளத்தில் வாகனங்கள் அணைந்து போய் அங்கங்கே நின்றன. எங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எங்கள் அனைவருக்குமே ஓய்வில்லாமல் மீட்பு பணி இருந்தது. மூன்று நாட்களின் தொடர்மழைக்குப் பின் நேற்று பின்னிரவில்தான் மழை ஒருவாறு ஓய்ந்தது. காலை மீண்டும் தெருக்களில் மனிதர்கள், வீதிகளில் வியாபாரம்.
டீ கசந்தது. டிகாஷனின் கடைசிச் சொட்டு வரை பிழிந்து எடுத்திருந்தார்கள். பாதி டீயைக் கீழே ஊற்றிவிட்டு பேப்பர் கோப்பையை எரிந்தேன். கடல் சாம்பல் நிறத்தில் அலைகள் ஏதும் அற்று அமைதியாக இருந்தது. அவர்கள் நெருங்கிவிட்டதாக அழைப்பு வந்தது. நான் மீண்டும் சாலையில் பேரிகேடுகள் இடப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தேன். அங்கே கிட்டத்தட்ட அறுபது பேர்வரை கூடியிருந்தார்கள். பெண்கள் உட்பட பலர் உற்சாகமாக பேசிச் சிரித்தபடி மென் தூரலுக்கு குடைகளை பிடித்தபடி நின்றிருந்தார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் தினசரி புழங்கும் இடத்தில் இப்படி ஒரு அசாத்திய நிகழ்வு நடந்தது அனைவருக்கும் ஒரு குறுகுறுப்பையும் சற்று பெருமிதத்தையும் கூட அளித்திருந்தது தெரிந்தது. நான் பேரிகேடை நெருங்கிய போது கான்ஸ்டபிள்கள் எனக்கு சல்யூட் கொடுத்து விலகினார்கள். உடனே அங்கு அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்பியது. ஊர் பெரியவர்கள் நான் ஏதேனும் கேட்பேன் என நினைத்திருக்கலாம். அவர்கள் மானசீகமாக என் கேள்விகளுக்கு தயாராவது தெரிந்தது. வழக்கமாக அப்படி விசாரிப்பது போல பேசுவது ஒரு வாடிக்கை தான். பெரும்பாலும் பொய்களும் தேவையற்ற தகவல்களும் தான் வரும். ”இங்கு நிறைய இது போல நடக்கிறது”, “பல பேர் இதில் இருக்கிறார்கள்”, “நான் அப்போதே சந்தேகப்பட்டேன்” என்பது போன்ற குத்துமதிப்பான அபிப்ராயங்கள் நிறைய. எனக்கு அன்று அதற்கான மனநிலை இருக்கவில்லை. நான் அப்பார்வைகளை தவிர்த்தேன். சற்று நேரத்தில் ஜீப் வந்து சேர்ந்தது.
அவளது அம்மாவை அன்றுதான் பார்த்தேன் தலைமுடி குறுகலாக இருந்தது. சமீபமாக மொட்டையடித்திருக்கலாம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் சிவப்பு ஆடை அணிந்திருந்தார். நெற்றியில் சிறிய காயம் ஒன்று பொருக்கு தட்டியிருந்தது. கூட்டத்தைக் கண்டு அவர் சற்று மிரட்சி அடைந்திருக்கலாம். அழுது வீங்கிய கண்கள். நான் அருகில் சென்று அவரை கீழே இறங்கச் செய்தேன். அருகில் அவள் அமர்ந்திருந்தாள். அம்மாவை பிடித்துக்கொள் என்றேன். பெரிய விழிகளை விழித்தபடி தலையாட்டினாள். பின்னாலேயே வரச்சொல்லிவிட்டு நடந்தேன். எங்களுக்கு பின்னால் கூட்டத்தில் காரணம் இன்றி ஒரு கூச்சல் எழுந்தது. சாலையில் இருந்து சில அடிகள் மணல்பரப்பில் இறங்கி நடந்தவுடன் சவுக்கு காடு துவங்கியது. சட்டென்று சூழ்ந்த அரையிருளில் சுள்ளிகளில் கால்கள் இடறாமல் பார்த்து நடக்க வேண்டியிருந்தது.
சவுக்கு காட்டுக்குள் நுழைந்த உடனே அவளது அம்மா கால்கள் துவள மெல்ல விசும்பத் துவங்கினாள். உடல் கிடந்திருந்த இடத்தில் இருந்து ஹெட்கான்ஸ்டபிள் ஓடி வந்தார். நான் உடனடியாக இரண்டு காவலர்களை அழைத்து அவளது அம்மாவை பிடித்துக்கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் இருவரும் சேர்ந்து பற்றுவதற்குள் அவர் தரையில் புரள விரும்புபவர் போல உடலின் மொத்த எடையையும் செலுத்தி கீழே அமிழ்ந்தார். அவர்கள் அவள் கைகளை இருபுறமும் பிடித்து கிட்டத்தட்ட தூக்கிச் சென்றனர். அவளுடன் வந்திருந்த அப்பெண்ணின் தோழி தயங்கி நின்றுவிட நான் உடன் செல்லக் கோரினேன். அவள் தயங்கி முன் சென்றாள். உடலின் மீது இப்போது வெள்ளைத் துணி போர்த்தியிருந்தார்கள். அருகில் செல்லும்தோறும் அங்கிருந்த எல்லாருக்கும் சற்று பதற்றம் கூடுவதைக் கண்டேன். அங்கே இறந்து கிடப்பது ஒரு மனிதப்பெண் என்பதையே அப்போது தான் உணர்ந்து கொள்வதைப் போல. என்னுடன் வந்த ஹெட்கான்ஸ்டபிள் முகத்தை திருப்பிக்கொண்டார்.
காவலர்கள் இருவரும் அந்த பெண்ணின் தாயை சடலத்தின் அருகே கொண்டு செல்ல, அருகில் நின்றிருந்த குற்றவியல் ஆய்வாளர் வெள்ளைத்துணியை அதன் நுனிகளை பற்றி மெல்ல விலக்கினார். அவள் அம்மா அதற்குள் கூச்சலிட தொடங்கியிருந்தார். அந்த உடலில் அவர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஆனால் எல்லாமும் இருந்தது என தோன்றியது. அது பிளாஸ்டிக்கிலோ ரப்பரிலோ செய்யப்பட்ட கோரமான பொம்மை போல கிடந்தது. ஆனால் வீங்கி கரிந்த அந்த முகத்தின் உள்ளே அந்த இளம் பெண்ணின் களையான முகத்தை என்னால் காண முடிந்தது. அவளது தோழி அன்று எனக்கு தன் கைபேசியில் காட்டிய போது தென்பட்ட அந்த முகத்தின் மெல்லிய குறும்பும், சாகசமும் அதில் எங்கோ இருந்ததாக ஒரு பிரம்மை. உடல் மேலும் அழுகாமல் இருக்க அதன் மீது அசிட்டோன் தெளித்திருந்தார்கள், சுற்றிலும் பொடி தூவியிருந்தார்கள்.
அதுவரை கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாக இருந்த தாய் அவள் முகத்தை கண்டதும் சட்டென்று மாறினார். அவரை அழைத்துச்சென்ற காவலர்களின் கையை உதறிவிட்டு அங்கே அதன் அருகிலேயே அமர்ந்துவிட்டார், சத்தம் ஏதுமில்லை. நான் காவலர்களை விட்டுவிடும்படி கண்காட்டினேன். அத்தகைய ஒரு கொடும் செய்தியை எந்த மனமும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வார்கள். அப்படி அல்ல, மனிதன் உடனிடியாக புரிந்துகொள்வது மரணத்தை மட்டுமே, புரிந்துகொள்ளும்போதே ஏற்றுக்கொள்கிறோம். அதை கண்டுகொள்ளும் அத்தருணத்துக்கு பின் செய்வதற்கு ஏதுவுமில்லை. அங்கு சுற்றிலும் அமைதி சூழ்ந்தது, அருகே அமைதியான கடலின் மெல்லிய சலசலப்பு மட்டும் எழுந்தது. என் அருகில் நின்றுகொண்டிருந்த அவளது தோழி மெல்ல விசும்பினாள்.
****
எங்கள் தெருவில் முதன்முதலில் ஜீன்ஸ் அணிந்தது அவள்தான். எங்கள் பெண்கள் குழுவுக்கே அவள்தான் தலைவி. வேடிக்கையாக அவளை நாங்கள் ’கேங்க் லீடர்’ என்று அழைத்தோம். அவளைச் சுற்றி நாங்கள் எப்போதும் சிரித்தபடியே இருப்போம். ஆனால் சமயங்களில் யாரையாவது அதிகமாக கிண்டல் கேலி செய்தால் சட்டென்று எங்களை அதட்டி கண்டிக்கவும் சமாதானம் சொல்லவும் அவளுக்குத் தெரியும். எதிர்பாராமல் அவள் கையால் பட்டென்று கன்னத்தில் சிறு அறைவாங்குவது எங்களுக்கு ஏதோ ஒரு கிளுகிளுப்பை கொடுக்கும். ஒரு பாதுகாப்புணர்வு என்றும் சொல்லலாம். அவள் ஒருபோதும் எங்களை கைவிடமாட்டாள் என்ற எண்ணம். நகரத்தில் அவளுக்கு எல்லா மூலைமுடுக்கும் அத்துப்படி, எங்கும் தைரியமாக ஏறிச்சென்று விசாரிப்பாள். சிறுவயதில் எங்கள் பகுதிக்கு அருகில் சென்னையிலேயே பெரிய மால்களில் ஒன்று புதிதாக வந்தபோது அவள்தான் எங்கள் எல்லாரையும் முதன்முதலில் அழைத்துச்சென்றாள். அவளும் எங்களைப் போல கறுப்புதான், ஆனால் அவளைக் கண்டால் யாரும் சற்று திரும்பிப்பார்பார்கள். இயல்பான ஈர்ப்பு ஒன்று அவளிடம் இருந்தது.
நாங்கள் குடியிருந்தது சிந்தாதரிப்பேட்டையில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதியில். எங்கள் வீடும் அவள் வீடும் அருகருகில் தான் இருந்தன. அவள் தந்தை அவளது சிறுவயதிலேயே இறந்துவிட்டார், அல்லது அவர்களை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார் என்றார்கள் சிலர். அவள் அம்மா அவரைப் பற்றி பேசி நான் கேட்டதேயில்லை. அவளும் கூட.
அவள் அம்மா தெற்கே ஆழ்வார்பேட்டையில் ஒரு பெரிய துணிக்கடைக்காரர் வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக வீட்டு வேலை செய்து வருகிறார். எப்போதும் அதிசுத்தமாக இருப்பார். அவரது வீட்டில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கும். காலையும் மாலையும் இருமுறை வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வார். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து கோலம் இட்டுவிடுவார். எங்கள் வீடுகளில் இருந்து கொல்லையில் சற்று தொலைவிலேயே கன்னங்கரிய நிறத்தில் கூவம் ஆறு சென்றது, அதன் நாற்றம் எங்கள் எல்லாருக்கும் பழகிவிட்ட ஒன்று. அவள் வீட்டின் கொல்லைப்புரத்திலிருந்து ஆற்றுக்கு செல்ல ஒற்றையடிப் பாதையும் அதன் முடிவில் ஒரு பழைய படிக்கட்டும் இருந்தது. செல்லும் வழியில் இடது புறமாக ரேணுகாதேவி எல்லம்மாவுக்காக ஒரு சின்னஞ்சிறிய ஒற்றையறை கோவில் உண்டு. அவள் அம்மாதான் தினமும் மாலை அங்கு விளக்கு பொருத்தி வைத்தார்.
நானும் அவளும் ஒன்றாகத்தான் கல்லூரியில் சேர்ந்தோம். எங்கள் குடியிருப்பில் இருந்து இரண்டு பேருந்து பிடித்து அங்கு செல்ல வேண்டியிருந்தது. அவள் துணையாக இல்லையென்றால் நான் அதில் சேர்ந்திருக்க மாட்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக சென்றுதான் இளங்கலை பட்டத்துக்கு ஃபார்ம் எழுதிக்கொடுத்தோம். அவள் சோஷியாலஜியும் நான் எக்கனாமிக்ஸும் சேர விண்ணப்பித்திருந்தோம். அவளுக்கு கணக்கு சரியாக வராதது தான் காரணம். இருவருக்கும் நாங்கள் கேட்ட பிரிவு கிடைத்தது. அவள் வாழ்நாளெல்லாம் கல்லூரியில் சேர்வதற்காகவே வாழ்ந்தவள் போல உற்சாகமானாள். பள்ளிக்காலத்திலேயே அவள் பெரும் பூரிப்புடன் அதைப்பற்றி சொல்வதுண்டு. கல்லூரியில் சில நாட்களிலேயே அவளுக்கு ஏராளமான நண்பர்கள் வந்துவிட்டனர். ஆனாலும் அவள் என்னிடம் பேசுவதை தவிர்க்கவில்லை. மாலை தினமும் எனக்காக காத்திருந்து என்னுடனே வீடு திரும்பினாள்.
கல்லூரி காலத்தில்தான் அவள் புதிதாக மாறினாள், முடியை சடை பின்னாமல் விட்டுக்கொண்டாள், மூக்குத்தி ஒன்றை அணிந்துக்கொண்டாள். லிப்-ஸ்டிக்கும் கண் மையும் எல்லாம் போட்டுக்கொண்டாள். அவளைக்கண்டு நாங்களும் மாற முயன்றோம். ஆனால் அவளைப்போல இயல்பாக எங்களால் இருக்கமுடியவில்லை. ஒவ்வொருமுறை கண் மையோ லிப்-ஸ்டிக்கோ அணிந்தபோதும் என் உடல் அசௌகரியம் அடைந்தது. ஜீன்ஸ் அணியும்போது கொலுசு அணியக்கூடாது என்று அவள்தான் எங்களுக்கு சொல்லித்தந்தாள். மதியம் கல்லூரி முடிந்ததும் பலநாட்கள் நாங்கள் மாலை இரவு வரை கூட ஊர்சுற்றினோம். எங்கள் வீடுகளில் அவள் பேசி சமாளித்தாள். கடற்கரைக்குச் சென்றோம், மாலுக்கும் தியேட்டர்களுக்கும் சென்றோம், தி-நகர் கடைவீதிகளில் சுற்றினோம். அற்றுவிட்ட வாழ்க்கை அது. வேகமாக ஒருவருடம் கடந்து சென்றது. முதலாம் ஆண்டு செமஸ்டர் லீவுக்கு நான் என் பாட்டி வீட்டுக்கு காஞ்சிபுரம் சென்றுவிட்டேன். சில நாட்களாக அவளிடம் தொடர்பிலில்லை. ஒரு நாள் பின்னிரவு அவள் என்னை அழைத்தாள் அவள் குரலில் பெரும் பரவசம் ஒன்று கொப்பளித்தது. ”எப்ப நீ இங்க வருவ? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள் சிரிப்புடன். ஏனோ எனக்கு சட்டென்று வியர்த்தது. நான் மெல்ல எச்சிலை முழுங்கி ‘என்ன சொல்லு?’ என்றேன் மொட்டைமாடிக்கு ஓடியபடி. அவள் சிரித்தபடி சொன்னாள், “எனக்கு ஒரு ஆள் இருக்காண்டி”. நான் பதிலேதும் சொல்லவில்லை. ’ஓஹ்’ என்றேன் ஆர்வமில்லாமல். நான் அதை உள்ளூர பயந்திருந்தேன் எனத் தோன்றியது. அவள் குரல் என்னை ஒரு கணம் எரிச்சலூட்டியது. இதை ஏன் இந்நேரத்தில் என்னிடம் சொல்கிறாள் என கோபம் எழுந்தது.
“அடிப்பாவி, இவ்வளவுதான் ரியாக்ஷனா?” மறுமுனையில் அவள் சிரித்தாள்.
நான் ”இல்ல சொல்லுடி, டக்குனு புரியல. சூப்பர்” என்றேன் புன்னகைத்தபடி. அவளுக்கு நான் ஒரு பொருட்டாகவே இல்லை. போனிலேயே எல்லாவற்றையும் சொல்லத் துவங்கினாள். இரண்டு மணிநேரம் அன்று இரவு நாங்கள் உரையாடினோம். பெரும்பாலும் அவள்தான் பேசினாள். நான் மறுமுனையில் ’உம்’ கொட்டினேன். சற்று நேரத்தில் மொட்டைமாடியில் நடந்து என் கால்கள் தளர்ந்து அப்படியே கீழே அமர்ந்துவிட்டேன். எல்லாம் பேசி முடித்து போனை வைக்கும்போது ஏனோ அவளிடம் “பாத்துக்கோடி” என்றேன். “சரிமா” என்றபடி போனை அணைத்தாள்.
நான் அன்று அதன்பின்னும் நெடுநேரம் மாடியில் அமர்ந்திருந்தேன். சற்று நேரம் எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்தது. அவள் வார்த்தைகள் மட்டும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன. பின் அவள் சொன்ன காட்சிகள் ஒவ்வொன்றாக கற்பனை செய்து பார்த்தேன். மெல்ல என் உள்ளம் லகுவடைவதை உணர்ந்தேன். அவள் சிரிப்பையும் தலையசைவுகளையும் நினைத்துப்பார்த்து புன்னகைத்தேன். சட்டென்று என் நெஞ்சம் கனத்து கண்களில் கண்ணீர் துளித்தது. வாழ்க்கையில் அவளுக்கு எல்லா சந்தோஷங்களும் நிறைவும் கிடைக்க வேண்டும் என்று அன்றிரவு நான் வேண்டிக்கொண்டேன்.
ஊருக்கு நான் வந்து சேர்ந்தபோது அவள் முழுவதுமாக மாறியிருந்தாள். அல்லது அவளது எல்லா அசைவுகளையும் நான் வேறு பார்வையில் பார்க்க தொடங்கியிருந்தேன். அவள் அதன்பின்னும் எங்கள் தோழி என்ற அடையாளம் கொண்டவள் அல்ல என்று தெரிந்தது. அவள் அவர்களது முதல் முத்தம் குறித்து உற்சாகமாக பேசினாள். அதற்குள் அவர்கள் மூன்று நான்கு முறை தியேட்டரில் படம் பார்க்கச் சென்றிருந்தார்கள். பைக்கில் ஹெல்மட் அணிந்துகொண்டு ஊர் முழுவதும் சுற்றித்திரிந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் எங்களிடமிருந்து விலகத்தொடங்கினாள். மிக இயல்பாக அது நடந்தது. ஆரம்பத்தில் எங்கள் நட்புவட்டம் கூடும்போதெல்லாம் அவளை குறித்துதான் குறுகுறுப்புடன் பேசினோம். ஆனால் பின்னால் மெல்ல மெல்ல எங்களுக்கு உரையாட வேறு விஷயங்கள் வந்தன. கல்லூரி குறித்து, வீட்டு விவகாரங்கள். எப்போதாவது ஒரு துணுக்குரலுடன் அவளை பற்றி என்னிடம் விசாரிப்பார்கள். நான் அவள் பக்கத்து வீடுதான் என்றாலும் அவளுடன் உரையாடுவது வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. எப்போதாவது வீட்டிற்குள் நுழையும்போது அவளை சந்திக்க நேர்ந்தால் பத்து நிமிடம் உரையாடிக் கொண்டிருப்போம்.
அப்போதெல்லாம் அவள் எனக்கு புரியாத ஏதேதோ விஷயங்களைப் பற்றி படபடவென்று பேசினாள், கடைசியாக என்னை சிறுபெண்ணைப் போல கன்னத்தை தட்டிக்கொடுத்து “சரி பாத்துக்கோடா” என்றுவிட்டு நீங்கினாள். அவள் இப்போது யாருக்கும் அஞ்சுவதில்லை, தெருமுனையில் அவன் அவளை பைக்கில் இறக்கிவிட்டுச் செல்வான். அதைக்குறித்து தெருவில் அனைவரும் பேசிக்கொண்டனர். ஆனால் யாரும் அவளிடம் கேட்கத் துணியவில்லை. வீட்டில் அவ்வப்போது அவளது சத்தம் எழும். அவள் அம்மாவை ஏசுவது வெளியே நன்றாகவே கேட்கும். அப்போதெல்லாம் அவள் அம்மாவிடம் இருந்து பதில் ஏதும் வராது.
நாட்கள் அவ்வாறே கடந்து சென்றன. ஒருநாள் நள்ளிரவு மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது. போனை எடுத்ததும் மறுமுனையில் அவளது அழுகை சத்தம் மட்டும் கேட்டது. தொண்டை உடைந்து அழுவது போல. நான் சத்தமெழாமல், என்ன? என்ன? என்றேன் மீண்டும் மீண்டும். அவள் கொல்லைப்புர ஆத்து படிக்கட்டில் இருப்பதாக சொன்னாள். நான் வீட்டில் யாரும் அறியாமல் கொல்லைப்புரத்துக்குச் சென்று நடக்கத்துவங்கினேன். என் நெஞ்சு படபடத்தது. நிலவு வெளிச்சத்தில் பாதை நன்றாகவே தெரிந்தது. தூரத்தில் நகரத்தின் வெளிச்சம் தொடுவானத்தில் கசிந்து நின்றது. இரு பக்கமும் குப்பை மேட்டின் நடுவே ஒற்றையடிப் பாதை வழியாக நான் நடந்துசென்றேன். வழியில் எல்லையம்மனின் சிலைமுன் வைத்திருந்த சிற்றகல் விளக்கு எரிவது தெரிந்தது.
படிக்கட்டை நெருங்கியபோது அதில் நிழலுருவாக அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. தொலைவிலிருந்தே அவளது அழுகைச் சத்தம் கேட்டது. அவளுக்கு பின்னால் கரிய இருளில் மின்னியபடி கூவம் சிலிர்த்து ஒழுகிக் கொண்டிருந்தது. நான் ஒடிச்சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை அணைத்துக்கொண்டேன். அவள் என் தோள்களில் சாய்ந்து உடல் அதிர அழுதாள். நான் ஒன்றும் கூறாமல் அவள் முதுகை மெல்ல தடவிக்கொடுத்தேன். எனக்கு அவளிடம் என்ன கூறுவது என்று தெரியவில்லை. நான் அமைதியாக அவளிடம் “ஒன்னுமில்லடா, ஒன்னுமில்ல” என்று எனக்கே கேட்காத குரலில் அவள் காதுகளில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் மெல்ல தணிவது தெரிந்தது. மெல்ல தேம்பி தேம்பி மூச்சை எடுத்து “அப்படியே இதுல குதிச்சு செத்துரலாம் போல இருக்குடீ” என்றாள், அதைச் சொன்னவுடன் மீண்டும் தன்னிரக்கத்தில் கேவியபடி அழத்தொடங்கினாள். நான் ஒழுகிச் செல்லும் ஆற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் உள்ளிழுத்துக்கொள்ளும் கருமை. என் உடல் சட்டென்று சிலிர்த்தது. நான் அவள் முகத்தை கைகளில் தாங்கினேன். “என்ன நடந்துச்சுடீ, என்கிட்ட சொல்லு” என்றேன். அவள் என் கண்களையே பார்த்தாள். நிலாவில் அவள் முகம் பேரழகாக இருந்தது.
அவள் சொன்னாள். அந்த பையன் அவளிடம் ஒரு மாதமாக முற்றிலுமாக தொடர்பை துண்டித்துவிட்டான். எத்தனை முறை அழைத்தும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. நண்பர்கள் வழியாக பேச முயன்றாள். முடிவாக அன்று அவன் வீட்டுக்குச் சென்று அவனை அழைக்க முயன்றிருந்தாள். அவ்வீட்டின் பெண்கள் அவளை மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் அழைக்க இவள் பதிலுக்கு அவர்களைப் பேசியியிருக்கிறாள், பின் அவ்வீட்டில் உள்ள ஆண்கள் அவளை கீழே தள்ளி கன்னத்தில் அறைந்து, முடியை பிடித்து இழுத்து ரோட்டில் தள்ளியிருக்கிறார்கள். அவள் அழுதுகொண்டே ரோட்டிலிருந்து நெடுநேரம் இரைஞ்சியிருக்கிறாள்.
“கெஞ்சுனேண்டி, அந்த நாய் முன்னாடி காலை மடக்கி கெஞ்சுனேண்டி” என்று சொல்லிக்கொண்டே தலையில் வேகமாக மீண்டும் மீண்டும் அறைந்தாள். நான் அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். “இனிமே நான் வாழறதுக்கு எதுவும் இல்ல, இதுக்கு மேல கேவலப்பட ஒன்னும் இல்ல” என்றாள். ’தூ தூ’ என்று தன்னையே துப்பிக்கொண்டாள். ”குமட்டிக்கிட்டு வருதுடீ, உடம்பெல்லாம் குமட்டுது” என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் அவள் தலையில் அடித்துக்கொள்ள முயல நான் அவள் கைகளைப் பிடித்து தடுத்துக்கொண்டே இருந்தேன். அன்றிரவு நெடுநேரம் வரை அங்கே அமர்ந்திருந்தோம். இரவெல்லாம் பேசி அவளை மெல்ல மெல்ல தேற்றினேன். அந்த இரவு ஒரு யுகம் போல முடிவில்லாமல் நீண்டது. இறுதியாக எதுவும் செய்துகொள்ளமாட்டேன் என்று என் தலையின் மீது சத்தியம் வாங்கிக்கொண்டு அவளை வீட்டில் விட்டுவிட்டு நான் திரும்பும்போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது.
அந்த சம்பவத்துக்கு பின் அவளுக்கு பல எண்களில் இருந்து அழைப்புகள் வர துவங்கின. எல்லாம் பரிச்சயமற்ற எண்கள். அவளும் அவனுமாக அணுக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை அனுப்பி ’வருகிறாயா?’ ’எவ்வளவு ரூபா?’ என்று கேட்டார்கள். ஆபாசமாக குரல் செய்தி அனுப்பினார்கள். ஒவ்வொன்றாக அவள் பிளாக் செய்தாள். அவர்கள் மேலும் தூண்டப்பட்டனர். தினமும் இருபது முப்பது அழைப்புகள், யார் யாரோ என கைமாறி அந்த எண் சென்றது. அவள் சுத்தமாக தூக்கமிழந்தாள், கண்கள் இருண்டு பள்ளமாயின. ஒருகட்டத்தில் அவள் அவர்களை திரும்ப அழைத்து திட்ட ஆரம்பித்தாள். அழைப்புகள் பெருகின, அவர்கள் மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டினர். ஒரு குரூரமான விளையாட்டைப் போல. அதை அவளும் ஆடத் துவங்கினாள். அவளை அறியாமல் அவள் அதற்குள் மூழ்கிச்சென்று கொண்டிருந்தாள். எல்லாம் அந்த ஒரு உரையாடலில் துவங்கியது. அவன் யாரென்று அவளுக்கு தெரியாது. அவன் மற்றவர்களை போல ஓரிரு முறையுடன் நிற்கவில்லை. வேறு வேறு எண்களில் அழைத்துக்கொண்டே இருந்தான். ஏசினான், கெஞ்சினான், புகழ்ந்தான், மிரட்டினான். ஒருநாள் இவள் பதிலளித்தாள். சுத்தமாக எதிர்பாராத ஒரு இடத்தில். அவள் அதை என்னிடம் காண்பித்தாள். அதற்குள் அவள் அந்த வாசலை திறந்துவிட்டிருந்தாள்.
”தேவடியா முண்ட, வரியாடி?”
”வரேண்டா தூமையக்குடிக்கி”
”தூமைய குடிக்கவா?”
”வா தர்ரேன்”
”எங்க வரணும்”
“புண்டைக்குள்ள வா”
….
எனக்கு சட்டென்று தலைசுற்றுவது போலானது. அவள் சிரித்துக்கொண்டே “என்ன பயந்துட்டியா?” என்றாள். நான் எதுவும் சொல்லவராமல் அவளைப் பார்த்தேன்.
“ஃபுல்லா காஜில சுத்துதுங்க தேவடியா புள்ளங்க”
“உனக்கு அவனுங்கள தெரியுமா? யார்கிட்டயாவது சொல்லவா?”
”யார்கிட்ட போய் சொல்ல. எல்லா பயலும் இப்படிதான். அவனுங்களுக்கு நான் இருக்குற இடம் தெரியாது, எங்க எங்கனு கேட்டுட்டே வெறில சுத்துறானுங்க, தெரிஞ்சது, நேரா வந்து புண்டைய கிழிச்சுப்புடுவானுவ” என்று இயல்பாக சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள். அவள் முகத்தில் ஆழ்ந்த அருவருப்பு ஒன்று தெரிந்தது, ஒரு குரூரமான எள்ளல். எதை நோக்கியது அது என்று எனக்கு தெரியவில்லை. என்னால் அன்றிரவு முழுக்க உறங்க முடியவில்லை. அதன்பின் நான் அவள் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தேன். பார்த்த போதெல்லாம் அவள் இதைத்தான் பேசினாள். அவளது பேச்சும் உடலசைவுகளும் எல்லாம் நன்றாக மாறிவிட்டன. எங்கும் தனியாக சுற்றினாள். தோழிகள் சிலர் அவள் போனில் ஆண்களிடம் பேசுவதற்கு காசு வாங்குவதாகவும் அதனால் கையில் நன்றாக காசு புழங்குகிறது என்றெல்லாம் சொன்னார்கள். நான் அதை எதையும் நம்ப விரும்பவில்லை. அவள் உடல் என் கண் முன்னால் சிதைவதைக் கண்டேன். ஒரே சிரிப்பு ஒரு முகத்தில் பேரழகில் இருந்து கோரமான ஒன்றாக உருமாறுவதை கண்டேன்.
அன்று புயல்மழை ஆரம்பித்திருந்த இரவில் அவள் வீட்டில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது. பாத்திரங்கள் உடைபடும் சத்தம், அவளது அலறல். நானும் என் அம்மாவும் அவசர அவசரமாக அவள் வீட்டை நோக்கி ஓடினோம். அதற்குள் அவள் வீட்டை விட்டு சென்றிருந்தாள். அக்கம்பக்கத்துக்காரர்கள் எல்லாரும் மழையில் குழுமியிருந்தார்கள். வீட்டில் அவளது அம்மா நெற்றியை பற்றியபடி தரையில் அமர்ந்திருந்தார். நெற்றியிலிருந்து ரத்தம் பீறிட்டு தரையெல்லாம் வழிந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் அன்று அவளைத் தூற்றினர். “அந்த பிசாசு சீரழிஞ்சு நாசமா போக” என்று அடிவயிற்றில் இருந்து வெறியுடன் சாபமிட்டனர். அவர்கள் எல்லார் கண்களிலும் நான் அந்த விலங்கைக் கண்டேன். சிலர் அவளது அம்மாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றனர். அன்றிரவு தான் எனது போனுக்கு அவள் எண்ணிலிருந்து கடைசியாக மூன்று செய்திகள் வந்திருந்தன.
நான் சற்று தாமதமாகத்தான் அவற்றைப் பார்த்தேன். அவர்கள் அவளை மகாபலிபுரத்துக்கு அழைத்து செல்வதாகவும். அவர்கள் நான்கு பேர் இருப்பதாகவும் அந்த செய்தி சொன்னது. “என்ன கொன்னுருவாங்கணு பயமா இருக்கு” என்றது கடைசிச் செய்தி. நான் திரும்பி அழைத்த போது அந்த எண் அணைந்துவிட்டுருந்தது. எத்தனை முறை அழைக்க முயன்றும் போன் கிடைக்கவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளியே பேரோலம் போல புயல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.
****
அவள் என்னை விட்டு மேலும் மேலும் தொலைவாக சென்றுகொண்டிருந்தாள். அவள் என்றுமே என்னிடம் நெருக்கமாக இருந்தவளல்ல. அவளை நான் வளர்த்தேன் என்றே சொல்ல முடியாது. அவளாகவேத்தான் வளர்ந்தாள். ஊர்தான் அவளை வளர்த்தது. தெருவின் எல்லா சந்து பொந்தும் அவள் வீடுதான். எங்கும் அவள் சென்று வருவாள். எந்த வீட்டிலும் சாப்பிடுவாள். நான் அவள் வளர்வதை பார்க்கவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் வேலை மட்டும்தான். நான் வேலை பார்க்கும் வீட்டில் என்னை பற்றி சொல்வது இதுதான் “ஆயம்மா வருவதும் தெரியாது போவதும் தெரியாது”. சத்தம் எழாமல் பாத்திரங்களை கழுவுவேன், துணிகளை துவைப்பேன், வீட்டை பெருக்கி துடைப்பேன், தோட்ட வேலைகளைப் பார்ப்பேன். யாரும் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் வீட்டில் குழந்தைகள் பிறந்தபோது மட்டும்தான் அவர்கள் என்னைத் தேடியிருக்கிறார்கள். முதலில் மகள்களுக்கு பின் பேத்திக்கு. ஆரம்பத்தில் நான் மட்டும்தான் அங்கு வேலை பார்த்தேன். இப்போது என் வேலையை பங்கிட்டுக்கொள்ள ஆரேழு பேர் வந்துவிட்டனர். எனக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிறது, தலைசுற்றி மயக்கம் வருகிறது. சத்துக்குறைபாடு என டாக்டர்கள் சொன்னார்கள். அவ்வீட்டில் என் இடம் மெல்ல குறைந்துகொண்டே வருவது எனக்குத் தெரியும். என்றாவது ஒரு நாள் நான் இனிமேல் வரத்தேவையில்லை என்ற செய்தி வரும். அதுவரை நான் அங்கு சென்றுகொண்டிருப்பேன். அது என் வீடும் கூட.
அவளது தந்தை யார் என்று எனக்கு மட்டுமே தெரியும், ஓடிப்போனவன் அல்ல அது. ஆனால் அதை யாரென்று ஒருபோதும் அவளிடம் சொல்லப் போவதில்லை. சொல்வதால் எந்த பயனும் இல்லை. அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளுக்கான தேவைகள் எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள். சடங்கான போது கூட அவள் என்னிடம் சொல்லவில்லை. ஐந்தாறு நாட்கள் கழித்து நானாகத்தான் தெரிந்துகொண்டேன். அவளே மெடிக்கல் ஷாப் சென்று தேவையானதை வாங்கிக்கொண்டாள். என்னால் அவளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. “தீட்டுத் துணிகளை ஒதுக்கிப்போடு” என்று மட்டும் சொன்னேன். அவள் புரிந்துகொண்டாள், பதில் பேசவில்லை. எதிலும் அவளிடம் மேலதிகமாக ஒரு வார்த்தை கூட அதிகம் பேச நானும் பயந்தேன். அவள் என்னை வெறுத்துவிடக்கூடாது என்றோ அல்லது விரும்பிவிடக்கூடாது என்றோ நான் நினைத்துக்கொண்டேன். நானே என்னை எனக்குள் அடைத்துக்கொண்டேன். அதிலிருந்து என்னால் கடைசி வரை வெளிவரமுடியவில்லை. மாதம்தோறும் அவளுக்காகவே நான் மேல்மருவத்தூர் சென்று வந்தேன். திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்டேன். ஆனால் இதையெல்லாம் அவள் அறியமாட்டாள். அதிகாலை நான் வேலைக்குக் கிளம்பி செல்கையில் அவள் உறங்கிக்கொண்டிருப்பாள். வேலை முடித்து வீடு திரும்பும்போது மீண்டும் வீட்டில் வந்திருப்பாள். சமயங்களில் என்னை ஓடி வந்து கட்டிக்கொள்வாள். அப்போது என் உள்ளுக்குள் எல்லாம் தேன் போல இனிமை பரவும். நான் புன்னகைத்து அவள் நெற்றியில் முத்தமிடுவேன். அவளுக்கென்று நான் எதுவும் செய்தவளில்லை, அவளுக்காக நான் எதுவும் செய்தவளில்லை.
அவளாகவே சைக்கிள் கற்றுகொண்டாள், அவளாகவே கல்லூரியில் சேர்ந்தாள். எல்லாம் அவள் விருப்பப்படி. கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்து அவளது பழக்கங்கள் மாறின. கல்லூரியில் இருந்து தனியாக தாமதமாக வரத்தொடங்கினாள். அவளை வேறொருவனுடன் அங்கும் இங்கும் பார்த்ததாக பலர் சொன்னார்கள். அவளைக் கண்டிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் யாரும் என்னிடம் நேரடியாகக் கூறவில்லை. என்னால் எதுவும் காரியமில்லை என்று அவர்களாக முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால் யாரும் அவளிடம் பேசத் துணியவில்லை. மெல்ல அவர்கள் தங்கள் மகளை கைவிட்டார்கள். அவள் என்னிடம் சிறிய காரணங்களுக்காக கோபப்பட த்துவங்கினாள். ஒவ்வொரு முறையும் நான் அழுது மூலைக்குள் ஒடுங்கிக்கொண்டேன். சில மாதங்களில் அவள் என்னிடம் முற்றிலும் பேசாமல் ஆனாள். அவள் உடல் நன்றாக மெலியத்துவங்கியது, கண்கள் இரண்டும் குழிவிழுந்து இருண்டன. வாயின் ஓரங்களிலும் காது மடல்களின் கீழும் கருத்தது. முகத்தில் ஓடிய வரிகள் கரிய தளும்புகள் ஆகின. பெரும்பாலான நாட்கள் அவள் இரவு உண்ணவில்லை, உறங்குவதுமில்லை. அதைப்பற்றி நான் எதையும் கேட்பதை அவள் விரும்பவில்லை. அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறமாக வெளியே சென்றாள். எங்கள் வீட்டில் இரண்டே அறைகள் தான். அடுப்பாங்கரையில் நான் படுத்துக்கொள்ள அவள் கூடத்தில் படுத்துக்கொள்வாள். ஆனால் நள்ளிரவில் பல சமயங்களில் எழுந்துப்பார்த்தபோது அவளைக் காணவில்லை. அதை என்னவென்று அறிந்துகொள்ள பலநாட்களாக எனக்குத் தைரியம் வரவில்லை.
அன்றிரவு நான் ஏன் அங்கு சென்றேன் என்று தெரியாது. நள்ளிரவிருக்கும். அரைமணிநேரம் முன்பே கதவைத் திறந்து அவள் எழுந்து செல்லும் சத்தம் கேட்டது. இரவு வானம் நன்கு இருண்டிருந்தது. கொல்லைப்புறத்தில் துளி வெளிச்சமில்லை. ஆனால் நடக்க நடக்க பாதை சற்று தெளிந்தது. வழியில் எல்லையம்மனுக்கு நான் வைத்த திரி அணையும் தருவாயில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தூரத்திலேயே அவள் சிரிப்பைக் கேட்டேன். பேயின் சிரிப்பை போல அதன் சத்தம் நெடுந்தூரம் ஒலித்தது. திரும்பிவிடலாம் என்று என் மனதுக்குள் ஒரு குரல் எழுந்தது. ஆனால் கால்கள் அதை நோக்கியே நடந்துகொண்டிருந்தன.
தூரத்தில் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டேன். தனியாக, அடர் கருப்பாக பின்னால் ஒழுகிக்கொண்டிருந்த ஆற்றை பார்த்தபடி. இரவில் அதன் வாடை இன்னும் பலமாக வீசியது. வயிற்றில் இருந்து குமட்டல் எடுப்பதைப்போல தோன்ற நான் ஒருகணம் திரும்பி மூச்சை இழுத்துக்கொண்டேன். மெல்ல அவள் இருக்கும் இடத்தை நெருங்கினேன். அவள் என்னை கவனிக்கவில்லை. சத்தமாக பேசிக்கொண்டிருந்தாள். எந்த தடையுமில்லாமல், மகிழ்ந்து சிரித்து, கூக்குரலிட்டு. அந்த கரிய திரவத்தை அப்படியே அள்ளிப்பருகியது போல அவள் வாயிலிருந்து வார்த்தைகள் பெருகின. காதுகளை கூசச்செய்யும் வார்த்தைகள். அடிவயிற்றிலிருந்து குமட்டச்செய்யும் வார்த்தைகள். என் உடல் நடுங்கத் துவங்கியது.
என்னையறியாமல் நான் லேசாக விம்மினேன். அவள் சட்டென்று திரும்பிப்பார்த்தாள். அந்த பார்வையில் என் உடல் உறைந்துவிட்டது. அவளது முகம் எனக்குத் தெரியவில்லை, ஒரு கரிய உருவம். அந்த இருட்டிலிருந்தே எழுந்து வந்துவிட்டவள் போல. “அம்மா!” என்று அவள் அழைத்தாள். ஏதோ ஒன்று உடைபட்டது போல என் உடல் அதிர்ந்தது. அது அவள்தான். நான் சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினேன். பின்னாலிருந்து மீண்டும் மீண்டும் அவள் அழைப்பது கேட்டது. மேலும் மேலும் உறக்க, தொண்டை புடைக்க அவள் ஆவேசமாக கத்தினாள். என் உடல் சிலிர்த்தது. நான் திரும்பிப்பார்க்காமல் நடந்துவந்து வீட்டுக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டேன். ஒரு கொடுங்கனவை போல அதைக் கடக்க எண்ணினேன். வெளியில் அவள் வந்து நிற்பது கேட்டது, அவள் கதவைத் தட்டவில்லை. மெல்ல விசும்பினாள். பின் அது அழுகையாக மாறியது. கேவி கேவி அவள் அழுதாள். எதுவும் சொல்லவில்லை. நெடுநேரம் அவளது அழுகைச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரவுக்குப் பின் நான் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவள் பேச முன்வரும் போதெல்லாம் பார்வையை தவிர்த்தேன். அவள் என் அருகில் வந்த போது உடல் குறுக்கி விலகி நின்றேன். அவளுக்கு சமைத்துப்போட்டு, மற்ற வேலைகளை செய்துகொடுத்தால் போதும் என நினைத்தேன். அப்படியே இந்த வாழ்க்கை ஒழிந்துசெல்லட்டும் என்று எண்ணினேன்.
மழைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று நாட்களுக்கு புயல் என அறிவித்திருந்தார்கள். எந்தக் கணம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து கொள்ளும் எனத் தெரியாது. கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் பெருமழை பெய்வது போல இருந்தது. அன்று அவளுக்கு மாதவிடாய் தொடங்கியிருந்தது. எங்கோ வெளியில் சென்று வந்தவள் ஈர ஆடைகளை அப்படியே வீட்டுமூலையில் கழற்றிப்போட்டாள். நான் எப்போதும் போல அவள் தீட்டுத் துணிகளை மட்டும் தனியாக ஒதுக்கினேன். அடுப்பாங்கரையில் உடைமாற்றிக்கொண்டு வந்தவள் நான் அவள் துணிகளை கழியால் எடுத்துச்செல்வதை பார்த்தாள். சட்டென்று பேய் போல அலறிக்கொண்டு என் மீது பாய்ந்தாள்.
“தேவடியா முண்ட, என்ன ஏன்டி பெத்த?” என்றபடி சுவற்றோரம் சாய்த்திருந்த தேங்காய்த்திருவியை எடுத்து என் நெற்றியில் எறிந்தாள். நான் கைகளைக் கொண்டு தடுக்க, அலறியபடி மீண்டும் மீண்டும் என்னை அடித்தாள். “சாவுடீ வேச” என்றபடி என்னைக் கீழே தள்ளினாள். என் நெற்றியில் அடிபட்டு ரத்தம் கசியத் துவங்கியது. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. நெற்றியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டேன். ஒரு கணம் திகைத்து, பின் “செத்து போ” என்று சொல்லிவிட்டு கொட்டும் மழையில் இறங்கி மறைந்தாள். வாசலில் வெள்ளித்திரை போல மழை பெய்துகொண்டிருந்தது. அவள் அதில் சென்று மறைந்தாள். என் ஒரே வெளிச்சம். ஆயிரம் முறை அவளுக்காக இறந்திருப்பேன். என் மகள்.
****
எத்தனையோ முறை நான் அழைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் ஆழத்திற்குள் அமிழ்ந்துவிட சொல்லி அவள் காதுகளில் முணுமுணுத்திருக்கிறேன். என் அடியாழங்களில் இருக்கும் தூய்மையை அவள் மட்டுமே அறிவாள். பகலில் என் கரைகளில் பன்றிகள் மேய்ந்து திரிவதை பார்த்திருப்பீர்கள், என் உடலெங்கும் நொதித்து குமிழியிடுவதை கண்டிருப்பீர்கள். ஆனால் வெள்ளி மேகங்கள் சூழ்ந்த நன் மதியங்களில் என்னைப் பார்த்தவர்கள் உண்டா? அப்போது நான் துல்லியமான கண்ணாடி போல வானத்தை பிரதிபலித்து நிற்பதை கண்டவர் உண்டா? அவர்கள் அறிவார்கள். நள்ளிரவில் என் கரிய மினுமினுப்பில் ஒரு கணம் லயித்து நிற்காதவர் யார்? நானே அன்னை, இந்நகரத்தின் தூமை நீர் நான். இதன் அத்தனை வேதனைகளையும் சுமந்து செல்பவள். அத்தனை அழுக்கையும் துடைப்பவள். நகரத்தின் அத்தனை நிழல்களும் என்னிலிருந்து பிறக்கின்றன, என்னில் வந்து கலக்கின்றன. என்னுள்ளில் புகுந்து உடல் கரைந்து மாய்த்துக் கொண்டவர்கள் பலருண்டு. என் ஆழத்தின் குளிர்ச்சியில் உடல் சிலைத்து மிதப்பவர்கள். சொர்க்கமோ நரகமோ அறியாது என்னில் கலந்துவிட்டவர்கள்.
இரவின் யாரும் அற்ற தனிமையில் நான் அவளை அழைத்திருக்கிறேன். உயிரின் எல்லைவரை அவள் வந்து நின்ற தருணங்கள் எனக்குத் தெரியும். அப்போது நான் சொல்வேன், ”கடலின் ஆழத்துக்கு உன்னை அழைத்துச்செல்கிறேன், அங்கொரு பாறைமேல், மனிதர்கள் யாரும் அற்ற தனிமையில் உன்னை அமரவைப்பேன்” என்பேன் அவளிடம் ரகசியமாக.
****
ஒருவாரத்திற்கு பின் அவள் எண்ணிலிருந்து செய்தி வந்தது. ”என்ன எங்கையாவது கூட்டிட்டு போ” என்றாள். என்னால் முதலில் நம்பமுடியவில்லை. அவள்தான். தெளிவாக அவள் இருக்கும் இடத்தைச் சொன்னாள். இப்போதே வந்து அழைத்துச்செல் என்றாள். எல்லாம் முடிந்தது என்று நினைத்திருந்தேன். ஒருவாரமாக என் அழைப்புகள் எதையும் அவள் எடுக்கவில்லை. அந்த ஒரு வாரமும் நரகம் போலிருந்தது. எத்தனை முயன்றாலும் சிந்தனை மீண்டும் மீண்டும் அவளிடமே சென்று சேர்ந்தது. அவளது உடல், அவளது குரல். பலவிதமாக அவளைப் புணர்வதை பற்றிய கற்பனைகள். பலரும் வேடிக்கை பார்க்க அவளைப் புணர்வதைப் போல, பல உடல்களுக்கு மத்தியில் அவளைப் புணர்வதைப் போல, அவள் கைகளை முறுக்கி முடியைப் பற்றி மீண்டும் மீண்டுமென. பலர் புணர அவள் உடல் வலியில் துடிப்பதை காண்பதுபோல. இரவெல்லாம் அச்சிந்தனைகளில் தலை சூடானது. இதயம் எந்த நேரமும் படபடவென்று அடித்தது. ஒரு சிறு தொடுகை கூட என்னை இடித்து நொறுக்கிவிடும் என்பது போல என் உடல் நடுங்கியது. கற்பனையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தேன். அவளுடனான உரையாடல்களை படித்து மீண்டும் மீண்டும் சுயமைதுனம் செய்தேன். ஒரு நாளில் இருபது முறை, முப்பது முறை. வேறேதும் செய்ய முடியாத நிலை. அவள் முன்னால் அடிமையாகி கிடக்கலாம் என்று நினைத்தேன், வாழ்நாளெல்லாம் அவளைப் புணரவேண்டும். வேறெதுவும் வேண்டாம், வேறெந்த பெண்ணையும் சீண்டவேண்டாம். ஒரே ஒருமுறை. அவள் அழைப்பை எடுத்தாள் என்றால் அவளிடம் மன்றாடிவிடலாம் என்று நினைத்தேன். அவள் காலை எடுத்து தலைமீது வைத்து கொள்வேன் எனச் சொல்லலாம் என்று எண்ணினேன். மறுகணம் அளவில்லாத சினமெழுந்தது. அவளை உறவுக்காக என்னிடம் மன்றாடவைக்க வேண்டும், பிறர் புணர என் காலைப் பிடித்து அவள் கெஞ்சவேண்டும், பின் நான் அவள் உடலை நிர்வாணமாக்கி தெருவில் நாய்கள் புணர்வதற்கு வீச வேண்டும். ரத்தம் வழிய அவை அவள் முலைகளையும் புட்டத்தையும் கடித்து குதறுவதைக் காணவேண்டும். அவள் கண்களில் அப்போது தெரியும் மிரட்சியைக் காணவேண்டும். எண்ணங்கள் மீறி எழ எழ நான் என்னை போதையில் அமிழ்த்திக் கொண்டேன். காலையும் மதியமும் இரவும் போதையில் கழித்தேன். உடல் நைந்தது. எல்லாவற்றையும் வெறுத்தேன். தலை கிறுகிறுத்து யாரையேனும் கொலை செய்ய வேண்டும் என்ற நினைப்பெழுந்தது. அன்றுதான் அவள் செய்தி வந்தது.
அக்கணம் என் உடலில் ஆயிரம் எண்ணங்கள் தடதடத்துச் சென்றன. வெளியே அப்போது பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இந்த மழையில் உடல் நனைந்து அவள் அங்கே காத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தில் என் குறி விரைத்தெழுந்தது. அறைக்குள் எழுந்து நடந்தேன். இன்றுதான். இதுதான் அந்த நாள். நான் அந்த செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் எல்லாரும் என் எண்ணிலிருந்து அவளுடன் உரையாடியிருக்கிறார்கள். ஆனால் நான்தான் அவளுடன் மிக அதிகம் தொடர்பிலிருந்தேன். அவள் என்னைத்தான் அவளது தேவைகளுக்கெல்லாம் அழைத்தாள்.
நண்பன் உடனே அழைத்தான். அவளா? என்றான். ஆம், என்றேன். பத்து நிமிடத்தில் எல்லாம் முடிவானது, வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்றான் அவன். அவன் அதற்கு முன் பல பெண்களிடம் உறவுகொண்டவன், விருப்பத்துடனும் விருப்பமில்லாமலும். நாங்கள் நால்வர் அவளை அழைத்துக்கொள்ள திட்டமிட்டோம். செல்லும் வழியில் அவன் கேட்டான் “அவள் எங்களுடன் படுப்பாளா?”. ”நான் சொன்னால் எதையும் செய்வாள்” என்றேன். மகாபலிபுரம் செல்லும் வழியில் அவனுக்கு தெரிந்த ஓர் இடம் இருப்பதாக சொன்னான். ”அரை மணிநேரத்தில் அங்கு இருப்பேன்” என்று நான் அவளுக்கு செய்தி அனுப்பினேன். அவள் பதில் அனுப்பவில்லை. எனக்கு பதற்றமானது, அவள் அங்கில்லாமல் ஏமாற்றி சென்று விடுவாளோ என பயந்தேன். அப்படி நடந்தால் எப்படியாவது அவளை கண்டுபிடிப்பேன் என சொல்லிக்கொண்டேன். இருபது நிமிடத்தில் அவள் சொன்ன இடத்துக்கு சென்றோம். ரோட்டில் மழை அருவிபோல கொட்டிக்கொண்டிருந்தது. அவள் கடற்கரையை ஒட்டிய பேருந்து நிறுத்ததில் நின்றிருந்தாள். நான் மழையில் இறங்கிச்சென்று அவளை அழைத்து வந்தேன். “நீ மட்டும் தானே, நீ மட்டும் தானே” என்று அவள் மீண்டும் மீண்டும் கேட்டாள். நான் பதில் ஏதும் சொல்லாமல் அவள் கையைப் பிடித்து சாலையைக் கடந்து அவளை இழுத்து வந்தேன். கார் கதவை திறந்து ஏறும்முன் அவள் ஒருகணம் தயங்கினாள். நான் வேகமாக அவளை உள்ளே உந்தித்தள்ளி கதவை அடைத்துக்கொண்டேன். மழைக்காக அங்கே கடை வாசலில் ஒதுங்கியிருந்த சிலர் அதை பார்த்து நின்றார்கள். யாரும் அசையவில்லை.
வண்டியை எடுத்துக்கொண்டு நாங்கள் புறப்படும் முன் அவள் திமிறத் துவங்கினாள். ’எங்கே செல்கிறோம்.’ என மீண்டும் மீண்டும் கேட்டாள். நான் அவளை சமாதானம் செய்தேன். நான் மட்டும் தான் அவளைத் தொடுவேன், மற்றவர்கள் துணைக்கு வருகிறார்கள், அவர்களுக்கு வேறு பெண்கள் இருக்கிறார்கள் என்றேன். மகாபலிபுரம் செல்லும் வரை அவளை அமைதியாக இருக்கச் சொன்னேன். அவள் நம்பவில்லை. மேலும் மேலுமென திமிறினாள். ஒவ்வொரு வளைவிலும் “என்னை இங்கேயே எறக்கி விட்டுவிடு, நான் இப்படியே போய்விடுவேன், உன்னை கெஞ்சுகிறேன்” என்று கூச்சலிட்டாள். ஒவ்வொரு திருப்பத்திலும் அவள் சத்தம் அதிகமானது. நான் மீண்டும் மீண்டும் அவளைச் சமாதானம் செய்தேன். ‘இல்ல, இல்ல என்ன விட்டுரு. ப்ளீஸ்’ என்று தேம்பினாள். ஒருகணம் அவளை அங்கேயே இறக்கிவிட்டுவிடலாம் என எண்ணினேன். அப்போது அவள் முகத்தில் தெரியப்போகும் நன்றி என்னை கிளர்ச்சியூட்டியது.
சட்டென்று எதிரபாராத நேரம் அவன் அவளை ஓங்கி அறைந்தான் “சீன் போடுறியா தேவடியா நாயே, கொன்னுருவேன்” என்றான். அவள் மேலும் சத்தமிட, அவன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்துக் காட்டினான். அவள் அமைதியானாள். அவள் உடல் மட்டும் நெடுநேரம் நடுங்கிக்கொண்டிருந்தது. வண்டி கிழக்குக்கடற்கரை சாலையை அடைந்தது. புயல்மழை பெய்ததனால் ரோட்டில் வாகனங்கள் அதிகமாக இல்லை.
இரவு பதினோறு மணிக்கு நாங்கள் மகாபலிபுரம் அருகே அவன் சொன்ன இடத்தை சென்றடைந்தோம். அவள் அதற்குள் அழுதுமுடித்து அரைமயக்கத்தில் கிடந்தாள். அசையாமல் இருக்க அவள் கைகளை பின்னால் கட்டிவிட்டிருந்தோம். விசாரித்துவிட்டு வந்தவன் அங்கே இப்போது செல்ல முடியாது என்றான். அங்கு இரு போலீஸ்காரர்கள் தங்கியிருப்பதாக சொன்னான். அப்படியென்றால் திரும்பிவிடலாம் என்றேன் நான். இல்லை வேறு இடம் பார்க்கலாம், ரோட்டோரத்திலேயே எதாவது கிடைக்கும் என்றான். மேலும் சென்றோம் மகாபலிபுரம் கடந்ததும் மழைநின்றது. சுற்றி இருள் மட்டும். ரோட்டின் ஓரமாக ஒவ்வொரு கட்டிடமாக பார்த்துக்கொண்டே சென்றோம். எல்லாமே விளக்கிடப்பட்டிருந்தது. அரைமணி நேரத்தில் நெடுந்தூரம் வந்துவிட்டோம் என தெரிந்தது. “இங்க எதாவது தோப்பு இருக்கும் ஆளில்லாம, பாத்துட்டே வா” என்றான். சாலையில் விளக்குகள் இல்லை. வண்டியின் முன் வெளிச்சத்தில் இருளுக்குள் கண் விழித்து பார்த்துக்கொண்டே வந்தேன். சாலையோரமாக நெடுந்தூரம் நீண்ட ஒரு சவுக்குத்தோப்பை பார்த்ததும் நான் நிறுத்தச் சொன்னேன். எல்லாம் முன்பே நிகழ்ந்திருப்பது போல ஒரு பிரம்மை. இங்குதான் என்றேன். அங்கே மழை லேசாக தூரல் போட்டுக்கொண்டிருந்தது. ரோட்டில் வாகனங்கள் ஏதுமில்லை. காரின் முன் வெளிச்சத்தை அணைத்ததும் சில கணங்களுக்கு எதுவும் தெரியவில்லை. “நீ அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல், நாங்கள் பின்னால் வருகிறோம் ” என்றான் அவன்.
காரின் பின்னால் மயங்கிக்கிடந்த அவளை நான் எழுப்பினேன். எழுந்ததும் அவள் மீண்டும் திமிறத் துவங்கினாள், ஆனால் அவளால் குரலெழுப்ப முடியவில்லை. நான் அவள் முடியைப் பற்றி சாலையிலிருந்து இழுத்துச்சென்றேன். அவள் என் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள பலவாறாக முயன்றாள். அவள் நெஞ்சில் ஒங்கி அறைந்தேன். இருமியபடி கீழே விழுந்தாள், மீண்டும் அவளை இழுத்துச்சென்றேன். சவுக்கு தோப்பின் மறைவுக்குள் சென்றதும் அவளைக் கீழே தள்ளி ஆடைகளை அவிழ்க்க முயன்றேன். அவள் கைகளால் என்னை கீறிப்பற்றினாள். விடுவித்து கைகளை முட்டிகளால் அழுத்திப்பிடித்தேன். ஏன் அவள் எதிர்க்கிறாள் என்ற சினம் எழுந்தது. மேலாடைகளை கழற்றி எறிந்தேன். அவள் தன் இரு கைகளாலும் தன் கால்களுக்கு இடையே பற்றிக்கொண்டாள். வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினாள். நான் என் மொத்த ஆற்றலையும் கொண்டு அவள் கைகளை விலக்கி கீழாடையை கழற்றினேன். அது அவள் உள்ளாடையுடன் சேர்த்து வந்தது. அதற்குள் நாப்கின் ஒன்று நனைந்து உள்ளே ரத்தம் கசிந்திருந்தது. அதைக் கண்டதும் சட்டென்று என் உடல் ஒவ்வாமை கொண்டு விலகியது. அருவருப்பில் உதறி எழுந்தேன். கோபம் தலைக்கேற நான் காரித் துப்பினேன். பின் மீண்டும் வெறிகொள்ள அதை எடுத்துச் சுருட்டி அவள் வாயில் திணித்தேன். என் ஆடைகளை அவிழ்த்து அவள் மீது படுத்துக்கொண்டேன். என்னால் செயலாற்ற முடியவில்லை. உடல் கசந்தது.
அதற்குள் காரை ஒதுக்கிவிட்டுக்கொண்டு அவர்கள் வந்துவிட்டார்கள். கூச்சலும் ஊளையுமாக இருளில் அவர்கள் வருவது கேட்டது. என் நெஞ்சு படபடத்தது. செல்போன் ஒளியில் அவர்கள் எங்களை கண்டுபிடித்தார்கள். நான் முகத்தை திருப்பிக்கொள்ள அவர்கள் நேராக வந்து அவள் கைகளையும் கால்களையும் பற்றிக்கொண்டனர். ஒருவன் என்னை கேலி செய்துகொண்டே செருப்பணிந்த காலால் அவள் கழுத்தை மிதித்தான். “டேய் செத்துருவாடா” என்று நான் கத்தினேன். ”போடுறா, கூதி மவனே” என்றான் இன்னொருவன். இருளில் எவர் முகமும் எனக்கு தெரியவில்லை. அவள் உடல் திமிறி எழ நான் புணர்ந்தேன். ஒவ்வாமையில் என் உடல் கசந்து கூசியது. சற்று நேரத்தில் நான் தளர்ந்துவிட்டிருந்தேன். என் விறைப்பு மறைந்தது. அவர்கள் முன் உச்சம் கொள்வதைப்போல நடித்து ஒசையிட்டேன். சட்டென்று எழுந்த அருவருப்பில் எழுந்து அருகில் கிடந்த கல்லால் திமிறிக்கொண்டிருந்த அவள் வயிற்றில் எரிந்தேன். ஆவேசம் பொங்க அவள் யோனியில் மீண்டும் மீண்டும் ஓங்கி மிதித்தேன். அவர்களில் ஒருவன் என்னை தள்ளிவிட்டான். “எங்களுக்கு போட வேண்டாமாடா தாயோளி” என்றபடி என்னைத் தாக்கினான். நான் மரத்தில் சென்று அறைபட்டு சரிந்தேன். அவர்கள் அவளை புணர்ந்தார்கள். அவள் உடல் வலிப்பு வந்தது போல திமிற, கல்லால் அவளை மீண்டும் மீண்டும் தாக்கினார்கள். அவள் உடலெங்கும் ரத்தவாடை எழுந்தது. வலியின் முனகல்கள். இருளில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. அருகே கடலின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது.
அவள் உடல் இப்போது துடிக்கவில்லை. அவள் இறந்துவிட்டிருந்தாள். எனக்கு சட்டென்று குடலை பிரட்டிக்கொண்டு குமட்டியது. என் உடலெங்கும் அவளது ரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்டேன், நகங்களால் என் உடலையே அப்படியே பற்றி பீய்த்து எறியவேண்டும் என்றிருந்தது. வயிற்றின் உள்ளிருந்து குமட்டல் எழ நான் குப்புற சரிந்தேன். கோழை மூச்சில் ஏறி அடைத்து மயக்கமானேன். அவர்கள் என்னைப் பற்றி எழுப்பியபோது எங்கிருந்தேன் என எனக்குத் தெரியவில்லை. என் கைகளில் இருந்து இடைவிடாது ரத்தம் ஒழுகிக்கொண்டிருக்க அவர்கள் என்னை இழுத்துச் சென்றார்கள். என் முன்னால் அவள் உடல் பற்றியெரிந்து கொண்டிருந்தது.
****
இரவும் பகலும் நான் புயல் கொண்டு எழுந்தேன். ஆயிரம் சிறு கைகளால் வீசி வீசி அவளை எழுப்பினேன். என்னுள்ளில் வந்துவிடு, வந்து என் மீன்களுக்கு உணவாகிவிடு என்றேன். பெயரில்லாமல் என்னில் கரைந்துவிடு என்றேன். இல்லை, நான் இவ்வுலகுக்கு சாட்சியாக இங்கு கிடப்பேன் என்றாய்.
மகளே, யுகங்களாக உலகம் தழுவி நான் உணர்ந்த ஒன்று உண்டு.
எல்லாம் கடந்து செல்லும், எதுவும் இங்கு மாறாது. மீண்டும் மீண்டும் அவளுக்கு சொன்னேன். வியர்த்தம்! எல்லாம் வியர்த்தம்! ஒவ்வொரு அலையாலும் அவள் காதுகளுக்குள் சொன்னேன். வியர்த்தம்!
****
அன்று மாலை இருள்வதற்குள் அவள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பிவிட்டோம். கடைசியாக முனிசிப்பாலிட்டியில் இருந்து துப்புரவாளர்கள் வந்து உப்பும் பீளீச்சிங் பவ்டரையும் கலந்து உடல் கிடந்த இடத்தில் தூவினார்கள். எறும்புகள் துடிதுடிக்க அதன் மீதே மணலை இட்டு நிரப்பினார்கள். மாலை உடல் எடுத்துச்சென்றதுமே பொதுமக்கள் கலையத்துவங்கிவிட்டார்கள். நாங்களும் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடலாம். சென்னையில் இருந்து செய்தி வந்திருந்தது. சஸ்பெக்டுகள் நால்வரில் மூன்று பேரை கைது செய்துவிட்டதாக அதில் தெரிவித்தார்கள். அவர்களில் ஒருவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல, அவனை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அவனுக்கு வயது வெறும் பதினெட்டு. ஏனோ எல்லாம் ஏற்கனவே தெரிந்தது போலிருந்தது. ஒன்றும் புதிதாக நடக்கப் போவதில்லை.
புறப்படும் முன்பு சற்றுநேரம் ஷூவை கழற்றிவிட்டு கால்களை நனைக்க கடற்கரை மணலில் இறங்கி நின்றேன். காற்று பெரிதாக இல்லை. சிற்றலைகள் நுரை ததும்ப கால்களை வந்து மெல்ல அலசிச்சென்றன. வானம் கிழக்கிலிருந்து வேகமாக இருட்டிக்கொண்டு வந்தது. இன்னும் பத்து நாட்களுக்கு கடுமையான புயல்மழை இருப்பதாக வானிலையில் அறிவித்திருந்தார்கள்.
A very difficult read because of the subject but a deeply affecting story. Very well written with great attention to detail like spraying of acetone to prevent further decay. It also reveals how relationship & sex have become twisted beyond recognition in today’s society. And this seems to be true for every strata of the society.
I think the philosophical/ spiritual aspects are what makes this piece of fiction rise above a well told story. This is when Cooum & the sea both seems to call the girl to come to them. I think the keyword to understand the story is வியர்த்தம். Is this story ultimately nihilistic? I am not able to say anything definitive except that this story seems like a counterpoint to ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்.
PS: Sorry for commenting in English