இரவும் பகலும்

கருமேகங்கள் திரண்ட வானத்தில், ஏனோ நிலவும் நட்சத்திரமும் இல்லாதது ஏங்க வைத்தது. சட்டென்று பூமி குளிர்ந்து இலைகளும் தழைகளும் நிலத்தின் துகள்களும் ஆடத் தொடங்கின. எல்லோரும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தலையை திருப்பி கொண்டு வேகமாக கூரைகளை நோக்கி தஞ்சம் அடையத் தொடங்கினர். மண் வாசனை பழைய நினைவுகளைக் கொடுத்தது. மண்வாசனை நாசியில் புகுந்து கொண்டது. மழையில் இருந்து தப்பிக்க அனைவரும் விரைந்து கொண்டு இருந்தனர். வண்டியில் செல்வோர் விரைந்தனர். காரில் செல்வோரும் விரைந்தனர். எந்த மழையில் நனைந்து விடுவார்கள் தெரியவில்லை. 

மழை ஒன்று கடையில் கிடைப்பது இல்லை. தேவை என்ற போது வாங்கிக் கொள்ள. மழை ஏமாற்றி விட்டது. ஆசை காட்டி மோசம் செய்தது . மழை பெய்யவில்லை. சிறு சுழல் காற்று வீசியது தேவையில்லாமல் தானாக வந்து மாட்டிக் கொண்டது போன்று எங்கோ ஓடி ஒளிந்தது. பூமி கொஞ்சம் குளிர்ந்தது. நான் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினேன்.

நான் படித்து முடித்து இரண்டு  பட்டங்கள் பெற்று விட்டேன். ஆனாலும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. பல வருடங்களாக கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு இருந்தேன்.  ஏதாவது ஒரு துறையில் வேலை செய்து நிபுணத்துவம் பெற வேண்டும் என்று ரெங்கநாதன் சார் அடிக்கடிச் சொல்வார். அவர் சொன்ன கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி இடம் காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பிக்குமாறு கூறினார்.  முதலில் தயங்கினாலும் பின்னர் வேறு வழி இல்லாமல் விண்ணப்பித்தேன். அதிக போட்டி இருந்தாலும் ரெங்கநாதன் சார் சிபாரிசால் எனக்கு வேலை கிடைத்தது.

என்ன தான் படித்து இருந்தாலும் கேள்வி என்று வரும் போது அதை எதிர் கொள்வது கடினம்.  எதிர் கொண்டு தான், பழகி மேலே செல்ல வேண்டும். இந்த வேலை எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லை. எவ்வளவு நாள் தான் வீட்டிலிருந்து பணம் கேட்டுக் கொண்டே இருப்பது. இந்த வேலையில் சம்பளம் அதிகம் இல்லை ஆனால் எதிர்காலம் உண்டு. அப்படி பல பேர் என்னைப் போன்று எதிர்காலம் இருக்கிறது என்று கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு, காத்துக் கொண்டு இருந்தனர். அவர்களை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.  ஒரு சிலரிடம் விசாரித்தேன் சிலர் ஊக்கப்படுத்தினர். சிலர் உண்மையை சொன்னார்கள்.

ரெங்கநாதன் சார் அடிக்கடி சொல்வதை ஞாபகப் படுத்திக் கொண்டேன். கல்யாணம் செய்து கொண்டவன் எவனும் கல்யாணம் செய்யாதே என்று கூறுவது போன்று. ஒன்றும் இல்லாததுக்கு ஏதோ ஒரு வேலை மேல். மூளையும் கொஞ்சம் உற்சாகமாக இருந்து விட்டுப் போகட்டும். 

நேர்முகத் தேர்வில் நிறைய கேள்விகள் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் பதில் கூறினேன். நிரந்தர பணி கேட்டு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். முக்கியமாக கல்லுரி சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அது தான் நமக்கு எளிதானது. எந்த சிரமமும் இல்லை. பள்ளி தொடங்கி கல்லூரி வரை நம் முதுகு எலும்பை நிமிரச் செய்யாமல் நாணல் போன்று கொஞ்சம் இலகுவாக வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள். அது நமக்கு மிகவும் எளிது.

மாணவர்கள் பள்ளிச் சீருடையில் செல்வது போன்று ஆசிரியர்களுக்கும் சீருடை . ஆனால் இதில் ஒரு வித்தியாசம். சீருடையில்லை காலர் இல்லாத சட்டை. எந்த நிறமாக இருந்தாலும் சரி. பிச்சைக்காரர்கள் போன்று டை கட்டுவதற்கு பதில் இது தேவலாம் என்று ஒரு ஆசிரியர் சொன்னார். என்ன செய்வது வேலை வேண்டும் அதற்காக எல்லா கூத்தும் செய்வது தான் இயல்பு. அப்படிப் பார்த்தால் இயல்பாக இல்லாதது எல்லாமே இயல்பாக மாறிவிடுகிறது. 

கல்லூரி ஆரம்பித்து விட்டது. வசந்த காலம் தொடங்கியது போன்று இருந்தது. மொத்த கல்லூரியும் மரங்களுக்கு இடையே தான் இருந்தது. ஒளியின் மாற்றத்திற்கு ஏற்ப வித விதமான பறவைகள் அதிலும் பச்சைக் கிளிகள் போடும் கீச்சு ஒலிகள் தனித்து நிற்கும். நேரம் ஓடுவதே தெரியாது. வெளியே தூரத்திலிருந்து பார்த்தால்  தோப்பு தான் தெரியும். 

கல்லூரி அருகில் தான் என் வீடு. அதனால் சைக்கிளில் சென்றேன். என்னைப் போன்று ஒரு சிலர் புதிதாக சேர்ந்து இருந்தனர். அதில் மைதிலியும் ஒருத்தி. அவள் மட்டும் தான் என்னுடன் பேசுவாள். பெண் ஆசிரியர்கள் வெள்ளை நிறத்தில் மருத்துவர்கள் போன்று கோட்டு அணிந்து இருப்பார்கள். மைதிலி கூட கோட்டில் மருத்துவர் போல இருப்பாள். அவளை மட்டும் நான் டாக்டர் என்று தான் அழைப்பேன். அவள் முகம் வெக்கத்தில் சிவந்து போகும்.

முதல் நாள் எனக்கு ஆச்சரியம். நிரந்தர ஆசிரியர்கள் வெள்ளைக்காரர்கள் அணிவது போன்ற கோட்டு போட்டு இருந்தார்கள். தற்காலிக ஆசிரியர்கள் காலர் இல்லாத சட்டையில் இருந்தார்கள். ஒரு சில சட்டைகள் வெளுத்து இருந்தது. அப்போதே எனக்கு தெரிந்தது இந்த கல்லூரியில் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று. எல்லாவற்றிலும் வேறுபாடு. எந்த ஒற்றுமையும் இல்லை. 

வகுப்புகளில் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களை சாமளிக்க முடியாமல் போராடினார்கள். நான் கொஞ்சம் தப்பித்தேன். எனக்கு எல்லாமே முதுகலை வகுப்புகள். பொதுவாக புதியவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஆனால் யாரும் எடுக்காததால் என்னிடம் கொடுத்து விட்டார்கள். எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் புதிதாக தான் படிக்க வேண்டும். அதனால் சரி என்று ஒத்துக் கொண்டேன்.

ஒரு சில ஆசிரியர்களுக்கு மட்டும் கொஞ்சம் பொறாமை உண்டு. கதை கதையாக மைதிலி அவ்வப்போது சொல்வாள். எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. சனி மற்றும் ஞாயிறு முழு விடுமுறை அதனால் மேல் படிப்பு அதாவது முனைவர் படிப்பு படிக்க எளிதாக இருந்தது. 

நான் இந்த சூழலில் இருந்து விடுபட பகுதி நேர வேலையும், ஒரு சில சான்றிதழ் படிப்பும் படித்துக் கொண்டிருந்தேன். மைதிலியும் ஏற்கனவே முனைவர் படிப்பு படித்துக் கொண்டு இருந்தாள். இந்தாண்டு முடிக்கும் தருவாயில் தான் இருந்தாள்.

அவளுடைய கைய்டும் எங்கள் கல்லூரி தான். அவருடைய இயற்பெயரை விட அவருக்கு மாணவர்கள் கொடுத்த பெயர் மிகப் பொருத்தம். ஸ்நேக்.  ஏன் அந்த பெயர்?. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து கொண்டு தக்க சமயத்தில் பாம்பு போல் கொத்தி விடுவார். அதாவது எங்கள் ஊரில் ஒரு சொல் வழக்கு உண்டு கரவம் கட்டுவது. அவருடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அவருடைய ஆராய்ச்சி மாணவர்களிடம் ஆராய்ச்சி தொடர்பாக வேலையை வாங்குவாரோ இல்லையோ தன் சொந்த வேலையை வாங்குவார். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு வேலையைக் கொடுப்பார். அவர் வீட்டில் அழகான தோட்டம் உண்டு. அது அழகாக இருப்பதற்கு முத்துசாமி என்ற ஆராய்ச்சி மாணவன் தான் காரணம். ஒரு பழைய ஆல்டோ கார் இருக்கிறது. அவருக்குத் தள்ளக் கூட தெரியாது. அதில் குடும்பத்தோடு சென்று வர என்னுடன் வேலை பார்க்கும் பால்சாமி தான் ஆஸ்தான சாரதி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் விதிவிலக்கே கிடையாது. எல்லோரும் இப்படித் தான். 

மைதிலி முனைவர் படிப்பை முடிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தவள் கொஞ்ச நாட்களாக சரியாக பேசவில்லை. அவளுடைய சுபாவத்தில் பெரிய மாற்றம். அவளிடம் மறைமுகமாக கேட்டு பார்த்தேன். ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு போய்விடுவாள். ஒரு நாள் எப்படியோ தனியாக மாட்டினாள். அவளிடம் மீண்டும் கேட்டேன்.

“மைதிலி உன்ன இப்படி பார்க்க முடியவில்லை. என்ன பிரச்சனை என்று சொல்லு?”. “ஒன்றும் இல்லை”. “படிப்பு முடிக்க பணம் ஏதாவது தேவையா சொல்லு .எந்த பிரச்சனையானாலும் சொல்லு. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்”. “இது பணம் பற்றியது இல்ல ஸ்நேக் பத்தி உனக்கு தெரியாது. நீ நல்ல பையன்”.“ இவ்வளவு தானா, சரி . நான் பாத்துக்கறேன். நீ எதை பற்றியும் கவலை படாதே. நிற்காமல் ஓடுவது நதியும் காலமும் தான்”.

மைதிலி சந்தோஷமாகவும் கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தாள். 

“என்ன டாக்டர் என்ன ஆச்சு?”. “உனக்கு தெரியாதா . ஸ்நேக் கை பிராக்ஸர். பாவம் நல்ல மனுசன். இப்ப என்ன பண்ணுறது”

. “நீ ஏதாவது பண்ணுனியா?”.

“நானா. நான் தான் நல்ல பையனு நீயே சொன்னியே. இப்ப அதா  முக்கியம். எல்லா வேலைகளையும் விரைவாக முடித்து ஸ்நேக்கிடம் உடனே கையெழுத்து வாங்கு.”

“எப்படி வாங்குறது?”.

“வலது கை உடையலேயே.”

மைதிலி ஆச்சரியத்தில் சிரித்தாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *