வெயிலில் ஒன்றைரை மணிநேரம் மேடேறி வியர்த்து களைத்து தாகத்திற்குத் தவித்த போதுதான் பார்த்தேன். தண்ணீர் பாட்டிலை நீட்டினார் புன்முறுவலுடன். மூங்கில் கழி, முதுகில் பை. தண்ணீரை அவரசமாக குடித்து முடித்து பின் நிதானமாக பார்த்தேன். அழகான வெள்ளைக்காரன், பொன்னார் மேனியன். பாட்டிலை அவரிடம் தந்தேன்.
”விச் கன்ட்ரி? ……. யுவர் நேம்?”
”ரிச்சர்ட். அமெரிக்கா. சிகாகோ” என்றார்.
” சிகாகோ? சுவாமி விவேகானந்தா கேம் தேர்? யு நோ ஹிம்?”
”தெரியும்” என்று தமிழில் சொன்னான்.
”தமிழ் தெரியுமா?”
” தெரியும்”
எனில் விவரமான ஆள். இந்தியா ஒரு ஆன்மீக நாடு இங்கு உண்பது உடுப்பது துணி துவைக்க டிடர்ஜெண்டாக பயன்படுத்துவது எல்லாம் ஆன்மிகம் தான் என்பது போன்ற சொற்பொழிவை இவனிடம் வைத்துக்கொள்ளக் கூடாது. இங்குள்ள திருத்தலங்களுக்கு அல்லது ஆன்மிக இடங்களுக்கு வரும் வெள்ளைக்காரர்களிடம் ஆன்மிக போதகர்களாகி விடுவது நம்மூர்கார்களிடம் பரவலாக இருக்கும் நோய். மூடர்களுக்கே உரிய தன்னம்பிக்கை. கடைசியில் அந்த வெளிநாட்டுக்காரன் ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஆன்மிக வியாதி என்ற உணர்ந்து செல்ல வேண்டும் அல்லது நல்லூழ் இருப்பின் ஏதேனும் அசல் ஆன்மிகம் அவனுக்கு இங்கு எங்காவது தட்டுப்படவும் கூடும்.
மீண்டும் ரிச்சர்ட்டைப் பார்த்தேன். எவ்வளவு அழகாக இருக்கிறான்? கதிரொளி மேலும் அவனை மின்னச் செய்தது.
”சிவபெருமானை பொன்நிறம் என்கிறார்கள். எனில் சிவன் ஒரு யவனப் பயணியாக இருக்கக் கூடும். அங்கிருந்து அக்காலத்தில் எப்போதோ வந்த ஒரு அய்ரோப்பிய அந்நியனுக்கு ஆதிவாசிகளின் புலித்தோலாடை அணிவித்து நமக்கு கடவுளாக்கி திணித்து நம்மையெல்லாம் ஏமாற்றி அடிமைப் படுத்திவிட்டார்கள். எனவே சிவன் நம்மவரும் அல்ல கடவுளும் அல்ல” என் மனம் ஒரு சதிக் கோட்பாட்டைப் புனைந்து முன்னாள் அய்யேஎஸ் டாக்டர் இளம் கோவிந்தனின் குரலில் முழங்கத் தொடங்கியது. சிவனைக் கெல்லி எடுத்து தமிழ் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட மாட்டாரா என்ன? எப்படிப்பட்ட பேச்சாளர்? மேலும் ”முன்னாள் அய்யேஎஸ் முயன்றால் முடியாத தொன்றுண்டோ சொல்லாய் இளங்கிளியே” இதென்ன கிளி எங்கே இங்கே வந்தது? என்று பார்த்தேன்
உண்மையிலேயே அருகே பெரிய மரத்தில் கிளிகள் நிறைந்திருந்தன. அவற்றின் சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பகுதியை, மரங்களின் அடர்வை அப்போது தான் கவனித்தேன். ரிச்சர்ட் கிளிகளை நோக்கி புன்முறுவலுடன் நின்றிருந்தார். ”மாறாப் புன்முறுவலர்” என்றது என் மனம்.
”ஹொ டு யூ நோ திஸ் பிளேஸ்?….சாரி….யு நோ தமிழ்…விசும்பர் காடு பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?.
ரிச்சர்ட் செந்தமிழில் பேசினார், ”என் குரு சிகாகோவில் இருக்கும் சுவாமிதாஸ். அவர் தான் விசும்பர் காட்டைப் பற்றி சொன்னார். அவர் அங்கே ஸ்கூல் ஆப் அத்வைத வேதாந்தா என்ற தத்துவப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்”
எனக்கு வியப்பாக இருந்தது. எங்கிருந்தோ ஒருவன் இந்த விசும்பர் காட்டைப் பற்றி அறிந்து கொண்டு இள வயதில் இங்கு வருகிறான். இங்கே இத்தனை நாள் இருந்த எனக்கு இங்கே வர இவ்வளவு நாள் ஆகி இருக்கிறது. நானும் ரிச்சர்ட்டும் மேலும் நடந்தோம். அது மலையை சுற்றி வளைந்து செல்லும் பாதை. வெய்யில் இப்போது வேறு பக்கம் மாறி விட்டிருந்தது.
எங்களுக்கு கீழே சற்று தூரத்தில் ஒரு தாடிக்கார இளைஞர் தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் கூறியது சத்தமாக கேட்டது, ”இங்கு சிவபெருமான் சில நாட்கள் தங்கி இருந்து தன் மாணவர்களுக்கு யோகம் பயிற்றுவித்தார்”
எனக்கு சற்று முன் சிவபெருமானைப் பற்றி என் மனதில் எழுந்து சதிக் கோட்பாட்டு உரை நினைவுக்கு வந்தது. உடனே அஞ்சி பெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ”மன்னித்துவிடு இறைவா! நான் வந்ததே உனக்காகத்தான், உன் அருளை நாடி. ஆனால் என்ன செய்ய? என் மனம் இப்படித்தான் இருக்கிறது. வேண்டியபோது ஒருவிதம் வேண்டாதபோது வேறொரு விதம்.…என்றேனும் ஒருநாள் உன்னுடைய நம்பகமான பக்தனாக ஆகி விடுவேன். அருள வேண்டும்…..ஒருவேளை எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களோ? எப்போது பார்த்தாலும் நம்பிக்கையாளானாகவோ அல்லது அவநம்பிக்கையாளனாகவோ இருப்பது சாத்தியமா என்ன?”
ரிச்சர்ட் சட்டென்று நிற்க என் எண்ணங்கள் சிதறி விலக அவரைப் பார்த்தேன். அவர் சுற்றிலும் பார்த்தார். ஒரு கழுகு வானில் வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. ரிச்சர்ட்டிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது.
”ரிச்சர்ட் நீங்கள் சிவ பக்தரா?”
”ஆமாம். ஆனால் அத்வைதி”
”அதாவது?”
”இரண்டற்றது…அதாவது இரண்டின்மை”
”அதாவது நாம் வேறு கடவுள் வேறு அல்ல….ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு அல்ல…அதுதானே” என்றேன். பின் ”அதென்ன இரண்டின்மை? ஒன்று என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே? ஏகத்துவம் என்று”
”ஆமாம். ஆனால் இரண்டின்மை மிகவும் துல்லியமான சொற்தேர்வு. ஒன்று என்று சொன்னால் இரண்டு அங்கே வந்து விடும். மேலும் அது வேறொன்றாகவும் ஆகி விடும். ஒன்று என்றும் சொல்ல முடியாது ஒன்றுமில்லை என்றும் சொல்லமுடியாது. இரண்டின்மை என்றுதான் சொல்முடியும்”
எங்களுக்குப் பின்னால் பேசிக் கொண்டிருந்த தாடிக்காரர் இப்போது வேகமாக தன் குழுவுடன் மேலேறி வந்து எங்களைக் கடந்து சென்றார்.
”விசும்பர் என்றால் விசும்பில் உள்ளவர்கள் அதாவது வானவர்கள். இது அவர்களின் காடு. இங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதாவது மேலே இருக்கும் சிறிய கோவிலைச் சுற்றி உள்ள மைதானம், அங்கு செல்லும் மனிதர்கள் யாராக இருந்தாலும் இறையுடன் அல்லது பிரபஞ்சத்துடன் ஒன்றிக் கலந்த அனுபவத்தைப் பெருகிறார்கள். உலகில் இப்படி ஒரு இடம் வேறு எங்கும் இல்லை. இமயமலையில் கூட இல்லை. எல்லாம் இறை அருள்” என்று கூறிக் கொண்டே சென்றார் தாடிக்காரர்.
ஒல்லியான உடல் மூச்சு வாங்காமல் மலையேற முடிகிறது அவரால் அதுவும் இடைவிடாமல் பேசிக் கொண்டே. அவருடைய குழுவினருக்கு ஓய்வளிக்க மட்டுமே நடுநடுவே நின்று செல்கிறார் என்று தெரிந்தது.
ரிச்சர்ட் புன்முறுவல் மாறா முகத்துடன் இருந்தார்.
”உங்களுக்கு இந்திய ஆன்மீகத்தில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?” என்று கேட்டேன்.
”இந்தியா என்னை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டது”
”வியப்பாக இருக்கிறது. உங்களில் சிலர் இப்படி சொல்கிறீர்கள். வேறு சிலர் இந்தியா ஒரு மாபெரும் குப்பைத் தொட்டி என்று பேசுகிறார்கள். சமீபத்தில் உங்கள் அமெரிக்காவின் பிரபல வலதுசாரி ஒருவர் இந்தியாவை அப்படித்தான் கடுமையாக பேசி இருக்கிறார். மலம், குப்பை, தூர்நாற்றம் என்று…..”
”அதை நீங்கள் சரி செய்துவிட முடியும்… புறத்தின் அசுத்தத்தை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் போன்றவர்களின் அக அசுத்தத்தை சுத்தம் செய்வதுதான் கடினம். அது பற்றி விழிப்பே அவர்களுக்கு இல்லை” என்றார் ரிச்சர்ட்.
எனக்கு ரிச்சர்ட்டின் மீது மதிப்பு கூடியது. கூடவே என்னைப் பற்றியும் நினைத்துக் கொண்டேன். ”என்னமோ சிவனே?”
பின்மதியம் நாங்கள் அந்த குன்றின் உச்சியை எட்டி விட்டோம். அது ஒரு சிற்றாலயம். உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. சுற்றிலும் புல்வெளியும் வெறும் தரையுமாக மைதானம். அங்காங்கே பலர் மண்ணிலும் புல்வெளியிலும் அமர்ந்திருந்தனர்.
ரிச்சர்டுடன் ஆலயத்தில் வணங்கி விட்டு தொடர்ந்தேன். அவர் அங்கு எங்கும் அமரவில்லை. சம நிலத்தின் எல்லையைக் கடந்து மறுபுறம் மேற்கே சற்று சரிந்து இறங்கிய இடத்திற்குச் சென்றார். அங்கு ஒரு கல்லில் அமர்ந்து கொண்டார். பத்மாசனத்தில் அமர்ந்து கைகளில் தியான முத்திரையுடன் கண்களை மூடிக் கொண்டார். மாலையின் கதிர் ஒளி அவரது முகத்தில்.
நானும் கண்களை மூடி அவர் அருகே சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் இனம் புரியாத ஒரு அச்சம். கண்களைத் திறந்து பார்த்தேன். ரிச்சர்ட் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன்.
”சிவ…சிவ…சிவ”
குளிர்ந்த காற்று கடந்து சென்றது. நேரம் எவ்வளவு கடந்தது என்று தெரியவில்லை. திடீரென்று ஏனோ ரிச்சர்ட் ஒரு மனிதனே இல்லையோ என்று தோன்றியது. கண்கள் திறந்து பார்த்தபோது அவர் அங்கு இல்லை. எங்கு சென்றிருப்பார்? திரும்பி மேட்டில் பார்த்தபோது முகில் ஒன்று மெதுவாக நகர்ந்தது. எழுந்து மெதுவாக நடந்தேன். மைதானத்தில் இப்போது ஒருவரும் இல்லை. வானில் விண்மீன்கள் நிறைந்திருந்தன.
அந்த சிற்றாலயத்தையும் காணவில்லை. எங்கே அது?
மனதை அச்சம் இறுகக் கவ்வியது. தேவையற்று மிகைத்து கொள்ளாதே! சரியாகப் பார் அதோ அங்கு இருக்கும்! இன்னும் சற்று மேடேற வேண்டி இருக்கலாம். அங்கு பலர் இருப்பார்கள். அந்த ஆலயமும் இருக்கும். ஆனால் மேடேற வேண்டி இருக்கவில்லை. நான் மைதானத்தில் தான் இருந்தேன். அங்கு உண்மையிலேயே ஒருவரும் இல்லை. நடந்து அந்த ஆலயம் இருந்த இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கு ஆலயம் இருந்ததற்கான சுவடு கூட தென்படவில்லை. அச்சம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகுந்தது. குளிர் என் அச்சத்துடன் இணைந்து கொண்டு உடலை உலுக்கியது.
”சிவ சிவ சிவா”
கீழே படுத்து சுருண்டு கொள்ள வேண்டும் போல் தோன்றியது. அச்சத்தை தவிர்க்க முயன்றேன். மேலே விண்மீன்கள் என் நடுக்கத்தை எதிரொளிப்பது போல் தோன்றியது. வானின் பிறை நிலவை அப்போது தான் கவனித்தேன். இது இவ்வளவு நேரம் எங்கிருந்தது? அது இப்போது பளிச் சென்று தோற்றமளித்தது.
”சிவ சிவ….சிவா….. பெருங்கருணையே…விசும்பர் கோவே! இறைவா.. ஓம் நமசிவாய”
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உச்சரிக்கத் தொடங்கினேன். நிற்காமல் மைதானத்தை சுற்றிவரத் துவங்கினேன். இப்போது மைதானத்தை குளிர் முகில்கள் நிறைந்து மறைத்து விட்டன. மைதானத்தின் எல்லை எது என்று தெரியவில்லை. இருள் கனத்து அடர்ந்தது. வானின் பிறை நிலவும் முகிலில் புகுந்து யானையின் தந்தம் போல் ஆகியது, பிறகு குறுவாளைப் போல ஆகியது, பிறகு மறைந்தது.
நான் நடப்பதை நிறுத்தி ஓரே இடத்தில் நின்றேன். இறை மந்திரம் உச்சரிப்பதை நிறுத்தவில்லை. கண்களில் நீர் பெருகியது.
நேரம் என்று கூறப்படும் ஒன்று உருகி கரைந்து எங்கோ சென்றுவிட்டிருந்தது. ரிச்சர்ட் குறித்து நினைவு கூற முயன்றேன். அவன் அங்கே தியானம் செய்து கொண்டு இருப்பான். இப்போது அவன் இருக்கும் இடத்திற்கு செல்வதா? இங்கேயே இப்படியே இருப்பதா?.கண்ணில் கண்ட மனிதர்களும் ஆலயமும் இப்போது இல்லையே உண்மையிலே ரிச்சர்ட் என்று ஒருவன் இல்லை என்றால்? யார் அவன்? யாரோ…. பல ஆண்டுகள் பழக்கமா என்ன?
சொற்களை விலக்கித் தள்ளும் வலிமையான ஒரு அலை எழுந்தது போல் உணர்ந்தேன்.
”இறைவா! சிவா! விசும்பர் கோவே! பெருங்கருணையே!”
சொற்கூடு உடைந்து நொறுங்கியது. கூட்டின் நடுவே நின்றிருந்த நான் சிதறிப் பரவினேன்.
இருளில் பெருங்கடலில் எழுந்த பேரலை மலை மீது அறைந்து அதை விலக்கியது. முகட்டின் பாறைகள் எழுந்து சுழலும் அலைகளுடன் சென்றன.
இருளும் நீரும் கரும்பாறைகளும் ஒன்றாகி இருள் மட்டுமே யாவும் என்றானது. இதன் முன்பு ஒருபோதும் கண்ட இருளில்லை இவ்விருள்…இருளன்றி பிறிதொன்றில்லா அடர் இருள்….அருள் என்பது இதன் மற்றொரு பெயர் யாரோ சொன்னார்கள்.
விண்மீன்கள் ஒருங்கு திரண்டன, அத்திரள் ஒருங்கே சுருங்கவும் விரியவும் செய்தன.
விண்ணின் ஒளியும் இருளும்
உள்ளும் புறமும்
அதுவும் இதுவும்
ஒன்று
எவ்வாறு?..இதைக் கேட்பது யார்? உள்ளே உடைத்துக் கொண்டு வெளிப்பாய்ந்த வெள்ளம் எங்கும் நிறைந்தது. தூர வீசப்பட்ட சொற்கள் தனித்து சிதறி பெருக்கில் எங்கோ மூழ்கியும் எழுந்தும் சென்றன. மறைந்தன.
”இனிமை” ”பெருநிறைவு” ”பெருங்கருணை” ”சிவா என்னும் பெருமரம்” ”சிவா என்னும் தனிச்சுடர்” ”சிவா என்னும் நிறைஇருள்” சொற்கள் ஒவ்வொன்றாக எழுந்து வந்து இணைந்து நடனமாடத் தொடங்கின.
ரிச்சர்ட் புன்முறுவலுடன் என் தோளைத் தொட்டார். நான் அவரைப் பார்த்தேன்.
”அப்படியே விட்டு விடுங்கள்”
நாங்கள் நடக்கத் தொடங்கினோம்.
