வேனில் மாளிகை

இது நான் பிறப்பதற்கு முன்பு நடந்தது.

”உனக்கு தாய் தந்தை யார் என்று தெரியாது”

”ஓகே ப்ரோ”

”உன் கல்வி முழுமை பெறாமல் தடைபடும்.  நீ வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருப்பாய்.  பணம் கிடைப்பது உனக்கு அரிதினும் அரிது”

”ஓகே ப்ரோ”

”உன் உடல் ஆரோக்கியமானதாக இருக்காது.  நீண்ட கால நோய்கள் இருக்கும்”

”ஓகே ப்ரோ”

”உன் உடல் இச்சைகள் அரிதாகவே நிறைவேறும்.  நீ எப்போதும் எல்லோராலும் அவமதிக்கப்படுவாய்.  மூடன் என்பார்கள்.  பைத்தியம் என்பார்கள்.    உடல் ரீதியாக அடி உதைகளும் வாழ்நாள் முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்”

”ஓகே ப்ரோ”

”நீ 49 வயது வரை வாழ்வாய்.  பிறகு விபத்தில் இறப்பாய்”

”ரைட் ப்ரோ”

”சரி….போ…..பிறப்பெடு”

”ஒன் மினிட் ப்ரோ..ஒரு கேள்வி”

”சொல்”

”ப்ரோ நீங்கள்….இறைவன் தானே ப்ரோ?”

”சொல்”

”இல்லை….இறைவன் கருணை மிக்கவன் என்பார்களே ப்ரோ…இப்பிறவி…. எனக்கு அப்படி எதுவும்…வாய்ப்பில்லையா ப்ரோ? .. உங்களிடம் சுத்தமாக தீர்ந்து போய் விட்டதா ப்ரோ…சும்மா கேட்டேன்”

ஒரு கணம் தயங்கிய இறைவன் ப்ரோ ”உனக்கு கற்பனையைத் தருகிறேன்” என்றார்.

”சூப்பர்!…அதுபோதும்.  நன்றி ப்ரோ”

ஒரு கணம் தயங்கி மீண்டும் என்னவோ சொல்ல வந்த இறைவன் ப்ரோ அதை மாற்றிக் கொண்டது போல, ”தீங்கற்ற உயிர்” என்றார்.

”நன்றி ப்ரோ”

இப்போது உவகையுடன் இந்த உண்மையை உங்களுக்கு நான் கூறும்போது என் அகண்ட சாம்ராஜ்யமான மடிகரை பேரூராட்சியில் என் வேனிற்கால மாளிகையில் (குப்பைத் தொட்டி எண் 7 என்று மூடர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்) படுத்திருக்கிறேன்.  உடல் குறுக்கிப் படுத்திருக்கவில்லை, உடல் சுழித்துப் படுத்திருக்கிறேன்.  இந்த வேனில் மாளிகையில் உச்சி வெயில் வேளையில் சுற்றிலும் உள்ள ப்ளாஸ்டிக் கவர்களின் மடிப்புகள், கசங்கல்கள் ஒவ்வொன்றும் வைரங்களாக ஒளிரும்.  கோடி சூரியன்கள் சூழப்படுத்திருக்கும் விண்ணோன் நான்.

வெய்யிலின் சூட்டைக் கடுமை எனக் கொள்ளும் உலகின் அறியாமைக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.  எனினும் கடுமைதான் என்று நீங்கள் வருந்துவீர்கள் ஆயின் கருணை மிக்க ஒரு பேர்னஸ் க்ரீம் டப்பா ஒன்று இங்கே இருக்கிறது.  அதிலிருப்பதை கொஞ்சம் எடுத்து உடலில் அங்காங்கே பூசிக் கொள்வேன்.  ,அது குளிர்ச்சியாக இருக்கும் இதஞ் செய்யும்.  அரிய பொருட்கள் எத்தனையோ இங்கு குவிகிறது ஆனால் யாருக்குத் தெரிகிறது? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறார்கள்.  இங்குள்ள காக்கைகளுக்கும் என் நண்பன் டிட்டிக்கும் எனக்கும் தெரிந்த ரகசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன.  அதெல்லாம் சொல்ல இப்போது நேரமில்லை.  எனினும் டிட்டி பற்றி மட்டும் சொல்கிறேன்.  டிட்டி நான் இந்த பகுதிக்கு வந்தபோது வெறிகொண்டு என்னை குதற முற்பட்டான்.  பின்னர் இனி இங்கு நான் தவிர்க்க முடியாத பிராணி என்று புரிந்து கொண்டுவிட்டான்.  பகையாளி, பங்காளி, நண்பன் என்று எங்கள் உறவு பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.

எனக்குத் தூக்கம் வருகிறது.  எதிரே இருக்கும் கட்டிடத்தின் மீதிருக்கும் பெரிய ஆயுள் காப்பீட்டு விளம்பர போர்டுக்கு பின்னால் போய் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறான் சூரியன்.  வேனில் மாளிகை குளிர் கொள்ளத் தொடங்குகிறது.

———

”எங்கள் தேசத்திலேயே சற்று குளிர்ச்சியான ஊர் என்றால் அது மடிகரை தான்.  ஆறு தலைமுறைகளைக் கடந்து விட்டது இந்த வேனில் மாளிகை.  நானும் அண்ணாவும் தங்கைகள் இருவரும் சிறுவர் சிறுமியராக இருந்தபோதிலிருந்து – என் நினைவில் நிற்கிறது, எங்கள் கோடை காலம் இங்கேயே கழிந்தது.  மாளிகையின் அருகில் இருக்கும் குறுங்காட்டில் சுற்றித் திரிவோம்.  அதற்கு அப்பால் ஓடும் வளசை ஆற்றில் நீந்திக் களிப்போம்.  வளசை ஆறு – வளம் செய் ஆறு என்பது அதன் முழுப்பெயர்”

இன்று நான் மட்டிலும் இங்கிருக்கிறேன்.  அண்ணாவின் இழப்பு எனக்கு எத்தனை பெரும் துயர் என்பதை அவன் கடைசி வரை புரிந்துகொள்ளவே இல்லை.  அதிகாரம் என்பது தணியா வேட்கை கொண்டவர்களாலேயே அடையப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி.  அதை நோக்கி எவரும் செல்லலாம்.  அது யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவரிடம் சேர்கிறது.  அவன் பணிந்திருக்கலாம் – எல்லாம் என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை அறிந்த பிறகாவது.

அதிகாரம் எப்போதும் எதிர்பார்ப்பது நிபந்தனையற்ற பணிவை.  அதைக் கண்டு அஞ்சுபவர்களோ எப்போதும் நடிப்பது நிபந்தனையற்ற அன்பை.

முட்டாள் அவன்.

சரி இவள்களுக்கு என்ன? என் பாசத்தை கடைசி வரை உணரவில்லையே? என் அன்புத் தங்கைகளே உங்களை நான் எவ்வளவு நேசித்தேன்? இப்போது என் கண்களில் மல்கும் நீரை நீங்கள் எங்காவது இருந்து காண்பீர்கள் என்று நம்புகிறேன்.  இனி என்ன?….உங்களையும் உங்கள் கணவர்களையும் குழந்தைகளையும் சிறையிலிட்டேன்…பட்டினி போட்டேன்…குடிக்கத் தண்ணீர் கூட தராமல் கொன்றேன் என்று என்னவெல்லாம் பேசுகிறார்கள்!

எதுவாயினும்…..அதற்கெல்லாம் யார் காரணம்?

அதிகாரம் எப்போதும் காப்பாற்றக் கூடியதாக, அருள் புரிவதாக தன்னை பாவிக்கிறது.  அதற்கு உட்பட்டவர்களோ நன்றி விசுவாசத்தை நடிக்கிறார்கள்.

சொல்வதற்கு வருந்துகிறேன் என் அன்புத் தங்கைகளே முட்டாள்கள் நீங்களும்.

ஆ! ஆலயத்தின் மணியோசை கேட்கிறது!  இறைவா நான் செய்த புண்ணியம் இந்த வேனில் மாளிகையின் அருகே குறுங்காட்டில் நினக்கு இச்சிற்றாலம் அமைத்தது.  இதோ வந்தேன்! உனக்கு என் குழலிசை மிகவும் பிடிக்குமே.  எனக்குத் தெரியும்.  ராவணன் போன்ற இசை கலைஞன் அல்ல நான் எனினும் என் இசையும் நீ மகிழ்கிறாய்…நான் அறிவேன்.

வேனில் மாளிகையின் மகாதேவாலயத்தின் இனிய குழலோசை எழுந்து மரங்களின் இலைகளைத் தொட்டு சிலிர்க்கச் செய்தது.  இலைகளைத் தாங்கிய சிறு கிளைகளும் சிறு கிளைகளைத் தாங்கிய பெரும் கிளைகளும் அவற்றைத் தாங்கிய அடி மரங்களும் …யாவும் சிலிர்த்தன.  மரங்களில் பறவைகள் இனிமையின் கிளர்ச்சியை பறந்தெழுந்து சுழன்று தமக்குள் பகிர்ந்து பரபரத்தன.  காற்று நான் அறிவேன் என்றது வளசை ஆற்றிடம்.  வளசை ஆறு ஓங்காரம் காட்டி சுழித்தது.

——-

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்

கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு

மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்

துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்

அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த

முன்பிப் பிறவி முடிவது தானே.

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன

துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று

நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு

உணர்ச்சியில் லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்

சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை

பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ

முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி

கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை

கண்டேன் கமல மலர்உறை வானடி 

கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று

உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை

இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்

அன்பனை யாரும் அறியகி லாரே.

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்

அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்

இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி

அன்பில் அவனை அறியகி லாரே.

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்

பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்

தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்

ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்

தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை

எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை

மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

சித்தர் அய்யா உரத்த குரலில் திருமந்திரம் ஓதினார்.

சித்தர் அய்யா யார் எந்த ஊரில் இருந்து வந்தார் என்பது இங்கு யாருக்கும் தெரியவில்லை.  இங்கு அவரை அனைவருக்கும் பார்த்த உடனே பிடித்துவிட்டது.  அன்று முதன் முதலில் அவரைக் கண்டபோது இந்த சிறு கோவிலின் ஸ்வாமியின் பெயர் என்ன என்று அவர் கேட்டதற்கு யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.  ஊரே ஒரு கணம் வெட்கப்பட்டது.  எப்படி சொல்ல முடியும்? இந்த காட்டிற்குள் எப்போதோ கைவிடப்பட்ட இந்த சிறிய கோவில் எப்போது யாரால் கட்டப்பட்டது எப்போது கைவிடப்பட்டது யாருக்குத் தெரியும்? 

எனினும் சிலர் ஓடிச் சென்று ஊரின் அதிபட்ச முதியவரை அவரது வீட்டில் சென்று கேட்டனர்.  அவர்”ஆணவக்காரன் கோவில்” என்றார்.  இந்த பேரை கேட்டு வந்து சொன்னபோது சித்தர் சத்தமாக சிரித்தார்.  ”இவ்விறைவன் ஆணவக்காரன் என்கிறீர்களா? என்று கேட்டார்.

என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை.  பிறகு மீண்டும் சிரித்து விட்டு அவர் சொன்னார்  ”ஆணவக்காரன் யாராவது இந்த கோவிலைக் கட்டி இருக்கலாம்” என்றார்.

”ஆணவக்காரன் கட்டிய கோவிலில் வீற்றிருந்து ஆணவம் அழிப்பது இங்கு இறைவர் விளையாடல் போலும்”

மீண்டும் சிரித்தார்.

அவர் சிரிப்பை நிறுத்திய கணம் மென்காற்றில் சருகுகள் மண்ணில் நகர்ந்து ஒலி எழுப்பின.  பின் சக சருகுகளை அழைத்துக் கொண்டு சுற்றுப் பயணம் சென்றன.

——–

மூடர்களால் குப்பைத் தொட்டி என்று சிறுமை செய்யப்படும் என் வேனில் மாளிகை நான்கு நாட்கள் முன்பு தீ இட்டுக் கொளுத்தப்பட்டு விட்டது.  நான் ஊரில் சுற்றித் திரிந்த போது சில கயவர் ப்ரோக்கள் இதைச் செய்து விட்டார்கள்.  மேலும் என்னை என் மாளிகையின் அருகே செல்லவே விடவில்லை.  ஒரு போலீஸ்காரர் ப்ரோ என்னை அடித்து விரட்டினார்.  அப்படி என்னை அவர் அடித்து விரட்டக் காரணம் ”இந்த பைத்தியத்தை விரட்டுங்கள்” என்று என்னைப் பற்றி புகார் செய்து தூண்டிய கயவர் ப்ரோக்கள் தான்.  அவர்கள் தான் என் வேனில் மாளிகையை முற்றுகை இட்டவர்கள்.  அது ஒரு கோட்டையாக இல்லாமல் வெறும் மாளிகை மட்டுமாகப் போய்விட்டதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.  போலீஸ் ப்ரோவின் அடியில் என் முட்டி வலித்தது இப்போது நினைத்தாலும் அச்சம் ஏற்படுத்துகிறது.

அன்று நான் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இங்கு வந்தேன்.  இந்த இடம் எப்படி இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் போனது என்று வியந்தேன்.  ஊருக்கு வெளியே காடு.  காட்டின் நடுவே இடிபாடுகளாக ஒரு மாளிகை.  அங்கிருந்து மேலும் சற்று காடு.  அதன் நடுவே பழைய கோவில்.  நான் இனி இதுதான் என் இடம் என்று முடிவு செய்து கொண்டேன்.  அப்போதிருந்து இங்கே இருக்கிறேன்.

ஆனால்….ஆனால் 

விஷயம் அத்துடன் முடிக்க வேண்டியதில்லை.  இரண்டு நாட்கள் முன்பு அந்த போலீஸ் ப்ரோ இங்கேயே வந்து விட்டார்.  எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அழுகையாக வந்தது.  நான் வேறு எங்கு தான் செல்வது? எனக்கு கோபமாகவும் வந்தது.  அதுவரையில் சிறிய மண்டபத்திலேயே இருந்த நான் வேகமாக கருவறைக்குள் நுழைந்தேன்.  தூசிக்குள்ளும் ஒட்டடைக்குள்ளும் ஒளிந்து கொண்டிருந்த பெரிய சிவலிங்கத்தை இறுக கட்டிக் கொண்டேன்.  

வெளியே இருந்து போலீஸ் ப்ரோ பார்த்துக் கொண்டிருந்தார்.  ”பயப்படாத டா உன்ன ஒண்ணும் செய்ய மாட்டேன்.  வெளிய வா” என்றார்.

”நான் வர மாட்டேன்.  நான் வர மாட்டேன்” என்று அலறினேன்.  லிங்கத்தை மேலும் இறுக்கினேன்.  ஏதோ ஒன்று நொறுங்கி விடும் போலத் தோன்றியது சிவலிங்கமா அல்லது என் நெஞ்சுக்கூடா என்று தெரியவில்லை.

”பயப்படாத வா.  குப்பத் தொட்டில படுத்துக் கிடந்தியே.  யாராவது நீ இருக்கிறது தெரியாம கொளுத்திப் போட்டிருந்தா என்ன ஆயிருக்கும்?”

ம்.…அவரும் வேனில் மாளிகையை குப்பைத் தொட்டி என்றுதான் சொன்னார்.  ஆனால் போலீஸ் ப்ரோவின் கண்களில் இரக்கம் தெரிந்தது.  இருந்தாலும் நான் உடனே செல்லவில்லை.

”நீ இங்கயே இருந்துக்கோ.  இங்க இருந்து உன்ன விரட்ட மாட்டேன்” என்றார்.  பிறகு எனக்கு கொஞ்சமாக நம்பிக்கை வந்தது.

பிறகு நடந்தவை இவை தான்.  நான் வெளியே வந்தேன்.  அவர் எனக்கு உணவு தந்தார்.  நானும் அவரும் கோவிலை முழுமையாக சுத்தம் செய்தோம்.  பின்னர் பக்கத்தில் ஒரு ஆறு இருக்கிறது போய் குளித்துவிட்டு வரலாம் என்றார்.  விருப்பமில்லாமலே அவருடன் சென்று குளித்து விட்டு வந்தேன்.  புதிய உடைகள் தந்தார்.

ஆ……இப்போது போலீஸ் ப்ரோ ….வரும் நேரம் ஆகிவிட்டது…..அவர் ப்ரோ என்று கூப்பிடாதே அண்ணா என்று கூப்பிடு என்கிறார்.  இருந்தாலும்..ப்ரோ எப்படி ப்ரோ இல்லாமல் ஆகிவிடமுடியும்?

போலீஸ் ப்ரோ தான் இங்கே பூசை செய்கிறார்.

குருவிகள் பாட ஆரம்பித்து விட்டன.  நான் இறைவன் ப்ரோ குளிப்பதற்காக ஆற்றில் தண்ணீர் எடுத்து வரப் போக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *