“இங்கிருந்து டைவ் அடித்தால் அங்கு சென்று சேர்வாய் என்று ஒரு நம்பிக்கைவாதி கூறும்போது, அதற்கு அறிவியல் ஒப்புதலை வழங்காதபோது இங்கிருந்து டைவ் அடித்தால் அங்கு சென்று சேர்வாய் என்று ஏன் கூறப்படுகிறது என்று தத்துவம் விளக்குகிறது. அது சொல்கிறது முதலில் இங்கு என்று ஒன்று இருக்கிறது அப்படி ஒன்று இருப்பதனாலேயே அங்கு என்பதும் ஒன்று இருக்கிறது இரண்டையும் இணைக்கும் அங்கு கொண்டு சேர்க்கும் டைவ் அடித்தல் என்ற ஒன்று இருக்கிறது.”
”நம்பிக்கையை ஏற்று டைவ் அடிக்க உனக்கு நான் பரிந்துரைக்கவில்லை, அப்படி செய்ய வேண்டாம் என்றும் சொல்லவில்லை. அது உன் விருப்பம். அங்கு ஒருவேளை சென்று சேரலாம் அல்லது சேராமலும் போகலாம். அப்படி ஒன்று உண்மையில் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் டைவ் அடித்தல் என்றுமுள்ளது அது என்றும் இருக்கும்” என்பார் தத்துவவாதி”
சொல்லி விட்டு சிரித்தார் ரவி. அது மகேஷிற்கு எரிச்சல் ஊட்டியது.
”பிரச்சினை இதுதான். இங்கு இதுதான் பிரச்சினை. உங்களைப் போன்ற மிகவும் அறைகுறை அறிவுடையவர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், உளறுவாயர்கள், மந்திரவாதிகள் என யார் வேண்டுமானாலும் இனிப்பின் மீது ஈக்களைப் போல தத்துவத்தின் மீது தொற்றி அமர்ந்து கொள்ளலாம். சாபக்கேடு” என்றார் மகேஷ்.
”இதில் மந்திரவாதி என்று நீங்கள் கூறி இருக்கத் தேவையில்லை” என்று சுப்பிரமணி சொன்னார்.
”ஓ நான் உங்களைச் சொல்லவில்லை சுப்பிரமணி” என்றார் மகேஷ். ”சரி உங்கள் மாந்ரீக பயிற்சிகள் எந்த அளவில் சென்று கொண்டு இருக்கின்றன?” என்று கேட்டார்.
”கேரள மாந்ரீகம், ஆப்ரிக்க வூடு, சீன மாந்ரீகம், அய்ரோப்பியர்களுடையது எல்லாவற்றிலும் ஓரளவு பயின்றாவிட்டது”
”தேர்ச்சி பெற்று வீட்டீர்கள்” என்று நக்கலாக சிரித்தார் ரவி.
சுப்பிரமணி அவரை முறைத்து விட்டு ”அப்படி சொல்ல முடியாது. மாந்ரீகத்தில் தேர்ச்சி பெற்று விட்டேன் என்று யாராலும் ஒருபோதும் சொல்ல முடியாது. அது ஒரு கடல்”
”ஓ” என்றார் ரவி.
சுப்பிரமணி மகேஷைப் பார்த்துப் பேசினார். ”எந்த காலத்தையும் விட இக்காலம் மாந்திரீக வித்தைக்கு சவாலான காலம். ஆவிகள், பேய் பிசாசுகள், யஷிகள் எல்லோருமே எங்கே இருப்பது என்று தெரியாமல் குழம்பித் திரியும் காலம். காடுகள் பெருமளவில் அழிந்துவிட்டன. புளிய மரங்கள் பற்றாக்குறை ஆகி விட்டன. மேலும் புங்க மரம், முருங்கை மரம்…எது என்றாலும் இப்போது பேய்கள் அங்கு தங்க விரும்புவதில்லை. அவையும் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி விட்டன. ஒரு சம்பவம் சொன்னால் வெக்கக் கேடு…..” ஒரு கணம் ரவியின் முகத்தைப் பார்த்து அதில் தெரிந்த ஏளனத்தைக் கண்டு கடும் கோபத்துடன் அவரை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
ரவி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
”ஒரு கேஸ். மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம். அம்மா, அப்பா, கல்லூரியில் படிக்கும் மகன். அவர்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவரது பரிந்துரையின் பேரில் அவர்களது பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். அந்த வீட்டு அம்மாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரது கணவருக்கு ஒரு பிரச்சினை. மகனுக்கு ஒரு பிரச்சினை. இருவரும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவர முடியாமல் நீண்ட நாட்களாக தவித்து வந்தார்கள். அந்தம்மா பாவம் இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்”
”ம்..?”
”நான் அந்த வீட்டிற்கு சென்ற உடனேயே கண்டுபிடித்து விட்டேன். அப்பாவுக்கும் மகனுக்கும் ஓரே போலதான் பிரச்சினை. இருவருக்குமே அவர்களது பிரச்சினை அவர்களது செல்போனில் தான் இருந்தது”
’ஹஹஹஹ” ரவி சிரித்தார்.
”சொல்வதை முழுதாகக் கேட்க வேண்டும்” சுப்பிரமணி பற்களைக் கடித்துக் கொண்டு கோபமுடன் கூறவும் ரவி அடங்கினார்.
”அந்த குடும்பம் அந்த வீட்டிற்கு வருவதற்கு முன் அந்த வீட்டில் முன்பு குடியிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி நிறைவேறாத இச்சைகளுடன் தற்கொலை செய்து கொண்டாள். அந்த பெண்ணின் ஆவி அந்த வீட்டில் தான் இருந்தது. இந்த குடும்பம் அங்கு வந்தவுடன் அந்த பையனின் செல்போனில் அது செட்டில் ஆகி விட்டது. அவன் எப்போது செல்போனைக் கையில் எடுத்தாலும் அதில் எந்த அழகிய இளம் பெண்ணின் படம் தென்பட்டாலும் ஆவி அதன் வாயிலாக ”என்னை அனுபவி” என்னை அனுபவி” என்று அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. அவன் நேரங்காலம் இல்லாமல் செல்போனுடன் எப்போதும் பாத்ரூமில் கிடக்கத் தொடங்கி விட்டான்”
இம்முறை மகேஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் அதை கட்டுப்படுத்திக் கொண்டார்.
”பாவம் அந்தம்மா. அது சிங்கிள் பாத்டூம் பிளாட் வேறா அவரால் குளிக்கவோ மலம் சிறுநீர் கழிக்கக் கூட செல்ல முடியாமல் ஆகி விட்டது. இவன்தான் எப்போது பார்த்தாலும் பாத்ரூமில் அடைந்து கிடக்கிறானே”
”அவனது செல்போனை பறித்திருக்கலாமே? என்று கேட்டார் மகேஷ்.
ரவி மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
”என்ன பயன்? அந்த இளம் பெண்ணின் ஆவி அவன் அம்மாவின் அல்லது அப்பாவின் செல்போனின் வழியாக அவனை மீண்டும் பீடிக்க முடியாதா?”
”என்ன செய்தீர்கள்?”
”அவர்கள் மூன்று பேருடைய செல்போன்களையும் வாங்கி அவற்றின் பிராண்டையும் மாடலையும் குறித்துக் கொண்டேன். அவை சீனத் தயாரிப்புகள். ஹாங்காங்கில் இருக்கும் என் சீன மாந்ரீக ஆசிரியரைத் தொடர்பு கொண்டேன். அவர் சில ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் நம்மூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு கொரிய செல்போனை கொடுத்தனுப்பினார். பிறகு சீன மாந்ரீக முறைப்படி அந்த வீட்டின் கூடத்தில் முக்கோணம் வரைந்து ஒரு முனையில் அந்த பையனையும் இன்னொரு முனையில் அவனது செல்போனையும் மற்றொரு முனையில் கொரிய செல்போனையும் வைத்து மாந்ரீக சடங்குகள் செய்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது”
”என்ன நடந்தது?”
”என் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கொரிய செல்போனில் நிறைவேறாத இச்சைகளுடன் தற்கொலை செய்து கொண்ட கொரிய இளைஞன் ஒருவனது ஆவியை ஏவி குடியேற்றி இருந்தார் என் ஆசிரியர்”
”ஹாங்காங்கில் இருந்தவாறேவா?” மகேஷ் கேட்டார்.
”எங்கிருந்தும் ஏவ முடியும்”
”என் பூஜை தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பையனின் போனில் இருந்த இளம் பெண்ணின் ஆவியும் கொரிய போனில் இருந்த கொரிய இளைஞனின் ஆவியும் போன்களை விட்டு வெளியே வந்து முக்கோணத்தின் இரு முனைகளில் நின்றன. அவை இரண்டும் மூன்றாவது முனையில் இருந்து அந்த பையனைப் பார்த்தன. பிறகு அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. அப்போது நான் தாய்லாந்து காதல் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினேன். அந்த இளம் பெண்ணின் ஆவியும் கொரிய இளைஞனின் ஆவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டனர்”
”பிறகு?”
”பிறகென்ன? இரண்டு ஆவிகளுக்கும் ஆவியுலக முறைப்படி திருமணம் செய்து வைத்து அனுப்பி வைத்து விட்டேன். அவை தேனிலவுக்கு ஜப்பானுக்கு சென்று விட்டன” என்றார் சுப்பிரமணி.
”எவ்வளவு பீஸ்?’ என்று கேட்டார் ரவி.
”தற்குறி எப்போதும் பணத்திலேயே குறி” என்று முணுமுணுத்த சுப்பிரமணி ரவியை அலட்சியப்படுத்தி ”பிறகு அந்த பையனின் அம்மா அப்பாவிடம் வேறு ஏதாவது பெண்ணின் ஆவி வருவதற்கு முன் உங்கள் பையனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் காலி டப்பா ஆகி விடுவான் என்றேன்” என்றார்.
”நல்ல முடிவு” என்றார் ரவி சிரிப்புடன்.
”அவன் அப்பாவுக்கு என்ன பிரச்சினை?” என்று மகேஷ் கேட்க ரவி அவரை முறைத்தார்.
”அப்பாவுக்கும் அதே போலத்தான். அவர் செல்போனில் எப்போதும் 24-மணிநேரமும் உணவு உறக்கம் இல்லாமல் அரசியல் காரசார விவாத நிகழ்ச்சிகளை பார்த்துக் கொணடிருந்தார். தன் பதவி ஆசைகள் நிறைவேறாமல் இறந்துவிட்ட உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் ஆவி அவரைத் தூண்டிக் கொண்டிருந்தது” என்றார் சுப்பிரமணி.
”இதற்கு உங்கள் கேரள மாந்ரீக ஆசிரியரைத் தொடர்பு கொண்டீர்கள். சரி தானே” என்றார் மகேஷ்.
”ஆம். எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?” வியப்பு காட்டி விட்டுத் தொடர்ந்தார். முன்னது போலவே முக்கோண பூசை செய்து நிறைவேறாத பதவி ஆசைகளுடன் இறந்து விட்ட உள்ளூர் அரசியல்வாதியின் ஆவியையும் கேரள ஆசிரியர் கொடுத்தனுப்பிய போனில் இருந்த நிறைவேறாத பதவி ஆசைகளுடன் இறந்து விட்ட எதிர்கட்சி அரசியல்வாதியின் ஆவியையும் இரு முனைகளில் எழுப்பினேன். அவை இரண்டும் மூன்றாவது முனையில் இருந்த அந்த மனிதரைப் பார்த்தன. பிறகு ஆவிகள் திரும்பி தம்முள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. உடனே நான் குரோத விதண்டாவாத மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினேன். அவை தம்முள் கடுமையாக தாக்கி சண்டையிட்டன. அப்போது நான் ”பதவி நாற்காலி நால்ரோடு மணிக் கூண்டு அருகே இருக்கிறது” என்றேன். அவை ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்ட ஓடிவிட்டன”
சுப்பிரமணி நிறுத்தினார். பிறகு ”இதற்கு மட்டும் ஒரு லட்சம் பீஸ் வாங்கிக் கொண்டேன். அரசியல் பிரச்சினை இல்லையா?” என்றார்.
”அந்த பையனுக்கு திருமணம் செய்யச் சொன்னது போல இதற்கு என்ன சொன்னீர்கள்? மீண்டும் ஏதேனும் அரசியல் ஆவி அவரை பீடிக்காமல் இருக்க வேண்டுமே?” என்று மகேஷ் கேட்டார்.
”சொன்னேன். அந்தம்மாவிடம் ”உங்கள் கணவரிடம் தினந்தோறும் வாக்குவாதம் விதண்டாவாதம் செய்து நாளுக்கு நான்கு முறையாவது அவரது கன்னத்தில் அறையுங்கள்” என்றேன்.
”அந்த ஆள் திருப்பி அடிக்க மாட்டாரா?” என்று மகேஷ் கேட்டார்.
”ச் சேச்சே பாவம் அந்த ஆள்… அந்தம்மாவோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை….அந்தளவு வலிமை இல்லாதவர்”
ரவி ”தேவைதான்” என்றார்.
