நாங்கள் ஒரு தெருவில் இரண்டு வருடங்களாக மாறாமல் ஒரே வீட்டில் குடி இருந்தோம்.
காலை எழுந்தவுடன் வாசற் கதவை திறந்து வெளியே வந்து நின்றால் எங்கள் பார்வையில் படுவது பறந்து விரிந்த மைதானமும் அதை சுற்றிலும் பெரு மரங்கள் விளையாட முடியாமல் நிழல் மட்டுமே மைதானத்தை சுற்றிலும் அலைந்து கொண்டு இருக்கும். அதிலும் பெரிய வேப்ப மரத்தடியில் தான் எப்போதும் உட்கார்ந்து இருப்போம். மைதானத்தை பார்த்த நொடியே மனமும் உடலும் விளையாடத் தொடங்கி விடும். அதைத் தடுக்கும் விதமாக சிறு சிறு வேலைகள் வந்து விடும். ஆனாலும் விளையாடத் தொடங்கி விடுவோம்.
அதனால் எப்போதும் அங்கு வித விதமான விளையாட்டு தான். கடிகாரத்தின் ஊசி துவாரத்தின் வழியே உதிரும் மணல் போன்று மொத்த மைதானமும் மணலால் மிருதுவாக இருக்கும். வெறும் கால்களுடன் தான் விளையாடுவோம். காலணிகளுடன் விளையாடிய நியாபகமே இல்லை. மைதானமே வண்ண பலூன்கள் உருண்டு ஓடுவது போன்று வித விதமான நிற சட்டைகளுடன் சிறுவர்களால் நிறைந்து இருக்கும்.
மற்ற தெருக்களில் சாலையின் இரு புறமும் நான்கு நான்கு வீடுகள் கை கோர்த்து கொண்டு ஒன்று போலவே இருக்கும். இடையிடையே ஒரு லாரி சென்று வருவதற்கான இடம் இருக்கும். அந்த சந்துகளில் ஒரு சில நேரங்களில் சிறுவர்கள் வித விதமான விளையாட்டுகள் விளையாடுவார்கள். சில சந்துகளில் மொத்த தெருக்களின் குப்பையும் குமிந்து கிடக்கும். பெரும்பாலும் சிறு தோட்டங்கள் இருக்கும். மரங்கள், மல்லிகை கொடிகள், பூச்செடிகள் வேலியை தாண்டி எட்டி பார்க்கும். காய்கறிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிந்து செல்லும். யாரும் காசுக்கு விற்க மாட்டார்கள்.
எங்கள் வீடு இரண்டாவது வீடு. முதல் வீட்டில் உள்ளவர்கள் சமீபத்தில் தான் சொந்த வீடு கட்டிக் கொண்டு சென்று விட்டனர். சொந்த வீடு என்பது கனவில் கூட காண முடியாதவை. இதனை எங்க அப்பா யாரிடமோ கூறினார். நான் ஒரு காதால் கேட்டேன். முதலில் அந்த அளவு வருமானம் கிடையாது.
இங்கு உள்ள வீடுகள் நல்ல வசதியான பெரிய வீடுகள். சூரியன் வரும்போதும் சந்திரன் வரும் போதும் கூடவே குடிநீரும் வந்து கொண்டே இருக்கும் பெரிய குழாய்களில். குடங்களை தூக்கிக் கொண்டு அலைய வேண்டியது இல்லை.
தூரமாக உள்ள வீடுகளிலிருந்து பெண்கள் மட்டுமே தண்ணீர் எடுத்து செல்வார்கள். சிலர் தண்ணீர் தர மாட்டார்கள். எங்கள் வீட்டில் எப்போதும் தண்ணீர் எடுத்து செல்வார்கள். எங்க அம்மா அவர்கள் குடங்களில் பிடித்து கூட வைப்பார்கள்.
மூன்றாவது வீட்டில் உள்ளவர்களுக்கு இரண்டு பையன்கள். அதில் ஒருவன் என் வயது உடையவன். அவன் பெயர் செந்தில் எங்களுடன் தான் அவன் விளையாடுவான்.
செந்தில் மெலிந்து உயரமாக இருப்பான். எப்போதும் சிரிக்க மறந்த முகம். அடுத்தவரை கிண்டல் கேலி என்றால் தொண்டை தெரியும் அளவிற்கு சிரிப்பான். அவன் முகத்தில் எப்போதும் ஒரு ஏளனம் இருக்கும். எப்போதும் அடர் வண்ண சட்டை தான் அணிந்து வருவான். பெரும்பாலும் பச்சை சட்டை தான். அவன் திரும்பி இருக்கும் போது ஏய் பச்ச சட்ட என்று கூப்பிடும் அளவிற்கு பிரபலம்.
அவன் வீட்டில் தான் அவனுடைய மாமாவும் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவனுடைய சொந்தகாரர்கள் எல்லாம் அருகில் தான் இருந்தனர். அதனால் அவர்கள் வீட்டில் எப்போதும் கூட்டமாக தான் இருக்கும்.
செந்தில் விளையாடும் போது எப்போதும் யாருடனாவது சண்டையிட்டு கொண்டே இருப்பான். ஊருடன் ஒத்து வாழ முடியாதவன். இருந்தாலும் அவனிடம் இருக்கும் விளையாட்டு பொருட்களுக்காக அவனை விளையாட்டில் சேர்த்து கொள்வோம்.
விளையாடும் போது எல்லோரும் தவறு செய்வோம். ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு விளையாடுவது தான் முக்கியம் என்று விளையாடுவோம். சண்டை சச்சரவுகள் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த நேரம் மட்டும் தான் எல்லாம் நினைவுகளில் இருக்கும். சூரியன் மறைந்தவுடன் எல்லாம் மறந்து போய்விடும்.
செந்தில் மட்டும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு நினைவு படுத்தியே சண்டை இடுவான். என் வீட்டு அருகில் இருப்பதால் மற்ற சிறுவர்கள் எதனையும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. அவனை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அவன் சுமாராக தான் விளையாடுவான். அதுவும் ஒரு காரணம். யார் நன்றாக திறனுடன் விளையாடுகிறார்களோ அவர்களுடன் தான் எல்லோரும் சேர்ந்து கொண்டு விளையாடுவார்கள்.
ஒரு முறை கிரிக்கெட் விளையாடும் போது செந்தில் தான் பேட்டிங் செய்தான். சுதாகர் என்பவன் தான் பந்து வீசினான். அவன் நன்றாக வேகமாக வீசுவான். நான் பேட்டிங் செய்யும் போது சரியாக அவன் தான் வீசுவான் மற்றவர்கள் வீசினால் அதிக ரன்கள் எடுப்பேன். அவன் என்னை கட்டுப்படுத்தி விடுவான். ஆனால் அவன் தவறான இரண்டு பந்துகளை எப்படியும் வீசி விடுவான். அதற்காக பொறுமையுடன் காத்து சரியாக பயன்படுத்தி கொள்வேன். அவனே என்னை பாராட்டுவான்.
இந்த லாவகம் எல்லாம் செந்திலுக்கு தெரியாது. முதல் பந்து அடிக்க முடியவில்லை என்றால் அடுத்து அடுத்து அவனின் கோபம் உச்சத்திற்கு சென்று கண்ணு மண்ணு தெரியாதவன் பேட்டை வீசுவது போன்று வீசுவான். அவனுடைய கொந்தளிப்பை பார்த்து எல்லோரும் சிரித்து கொள்வோம். அதற்கும் சண்டைக்கு வருவான். ஒன்று இரண்டு பந்துகள் மாட்டி கொள்ளும். அதனை வைத்து சுதாகரை ஏளனம் செய்வான். செந்தில் மட்டும் கிடைத்த இடங்களில் எல்லாம் எல்லோரையும் திட்டிக் கொண்டும் பழிக்கவும் செய்வான்.
நாட்கள் செல்ல செல்ல அவன் தொல்லைகள் அதிகமானது. அவனை எப்படி சாமாளிப்பது என்றே தெரியவில்லை. அவன் அப்பா வீட்டில் இருந்தால் விளையாட வர மட்டான். அந்த சமயத்தில் அவனுடைய பேட்டை கூட தரமாட்டான். அப்போது எல்லாம் நாங்கள் பழைய பேட்டுகளை தென்னை மட்டைகளை வைத்து சமாளித்து விளையாடுவோம்.
ஒரு முறை எல்லோரும் சில்லறை காசுகளை சேர்த்து ஒரு மர பட்டறைக்கு சென்றோம். ஒரே சத்தம் காதுகளை பொத்திக் கொண்டே சென்றோம். எங்களை பார்த்து விட்டு சத்தத்தை நிறுத்தினார்கள். பேட் வேண்டும் என்று சொன்னவுடன். அங்கு உள்ளவர்கள் சிரித்தார்கள். அது எல்லாம் கிடையாது என்று சொல்லி விரட்டினார்கள். ஏமாற்றத்துடன் வெளியே வந்தோம்.
அப்போது முழு வெள்ளை சட்டையில் ஒருவர் வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார். சுதாகர் தான் அவருக்கு பதில் சொன்னான்.
நான் எங்களிடம் உள்ள சில்லறை காசை எடுத்து அவரிடம் காட்டி விளையாட பேட் இல்ல. பேட் வேண்டும் என்றேன். அவர் சிரித்து கொண்டே என் பேரனும் விளையாடுவான் என்று சிரிக்கும் படியான மொழியில் பேசினார். நாங்கள் சிரிப்பை அடக்கி கொண்டு எப்படியாவது பேட் கிடைத்தால் போதும் என்று நினைத்தோம்.
அவர் எங்களை உள்ளே அழைத்து சென்றார். எல்லோரும் முழித்தார்கள். அவர் பயப்படும் படியான ஏதோ புரியாத மொழியில் வார்த்தைகளை கத்தி வீசுவது போன்று வீசினார். உடனே ஒருவன் ஒரு பலகையில் காய்கறி நறுக்குவது போன்று நறுக்கி கைபிடியுடன் ஒரு பேட் கொடுத்தான். அவர் மீண்டும் ஏதோ சொன்னார். அவன் சொர சொரப்பான கைபிடியை வழ வழப்பான பிடியாக கொடுத்தான். நாங்கள் காசு கொடுத்தோம் அவர் சிரித்து கொண்டே விளையாடுங்கள் என்றார்.
மொத்த காசும் சிகப்பு தேன் மிட்டாய்களாகவும் பால் வண்ணத்தில் ஒரு கண்ணுடன் உள்ள சூட மிட்டாய்களாகவும் மாறின.
செந்தில் வராத நாட்கள் விளையாட்டு நன்றாக சூடு பிடிக்கும் விளையாட்டும் விறு விறுப்பாக நடைபெறும். அதிக நேரம் கிடைக்கும். இரண்டு மூன்று விளையாட்டுகள் கூட நடக்கும்.
அவனுக்கு பேட்டிங் தரவில்லை பவுலிங் தர வில்லை என்றால் பாதி விளையாட்டிலேயே சென்று விடுவான். அப்போது எல்லாம் சண்டை வரும். நான் தான் எல்லோரையும் சமாதானம் செய்வேன். சில நாட்கள் விளையாட வர மாட்டான், நாங்களும் விட்டு விடுவோம். யாராவது ஒருவர் சென்று அழைத்தால் பழையபடி விளையாட வருவான்.
என்னுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வந்தது. அவங்க வீட்டிலும் என்னுடைய வயது ஒத்த பையன் இருந்தான். அவங்க வீடே வித்தியாசமானது. அவர்கள் வந்த சில நாட்களிலேயே எல்லோருடன் சகஜமாக பழக தொடங்கி விட்டனர். நாங்கள் எல்லோரும் அவர்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பேசுவோம். அவங்க வீட்டு பையன் பெயர் சையது. அவங்க அம்மா நாங்கள் எப்போது சென்றாலும் ஏதாவது திண்பதற்கு திண்பண்டம் கொடுத்து கொண்டே இருப்பார்கள். சையதும் ஒரு பேட்டுக்கு இரண்டு பேட்டு வைத்து இருந்தான். செந்தில் எப்போதும் விளையாட்டுக்கு மட்டும் தான் வருவான். மற்றபடி எங்களுடன் சேர்ந்து சகஜமாக பேச மாட்டான். அப்படியும் அவன் எங்களுடன் நின்று கொண்டு இருந்தால் அவங்க அம்மா உடனே குரல் கொடுப்பார்கள். ஓட்டமாக ஓடிவிடுவான்.
சையது செந்திலுக்கு நேர் எதிரானவன். அவன் பேட்டு பால் யாராவது ஒருவரிடம் இருக்கும். நன்றாக விளையாட கூடியவன். எந்த சச்சரவுகளும் கிடையாது. விளையாடாத நேரங்களில் சையது வீடுதான் கெதி என்று இருப்போம். அவன் வீட்டில் எப்போதும் Business game விளையாடுவோம். அதுவும் எல்லோரும் விளையாட மாட்டோம். ஒரு சிலர் மட்டும் தான். அவங்க அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டார்கள். எப்போது எது விளையாடினாலும் அவனுக்கு மட்டும் எந்த தடையும் இல்லை.
ஒவ்வொருவர் வீட்டிலிலும் ஒவ்வொரு தடை இருக்கும்.
சிலர் வீட்டில் மதியத்தில் வெயிலை காரணம் சொல்லி விளையாட விட மாட்டார்கள். தூங்க சொல்லி குழந்தைகள் போன்று அடம் பிடிப்பார்கள். அப்படியும் வீடு விடாக சென்று அழைத்தால் கூட அடிக்காத குறையாக விரட்டி விடுவார்கள்.
செந்திலுடன் சையதுக்கு ஒரு முறை சண்டை வந்தது. சையது மீது தான் தவறு. பந்து பேட்டில் பட வில்லை. ஆனால் சையதுடன் சிலர் சேர்ந்து கொண்டு செந்திலை வேண்டும் என்றே அவனிடம் சண்டையிட்டனர். செந்தில் ஒத்துக் கொள்ள வில்லை. நானும் சுதாகரும் எவ்வளவு சொல்லியும் சையது கேட்காமல் செந்திலை சையது அடித்து விட்டான். நாங்கள் இடையே சென்று தடுத்ததால் பெரிய பிரச்சனை ஆக வில்லை. அதன் பிறகு நான் சையதிடம் முன்பு போல பேச வில்லை.
சையதுடன் விளையாடுவதோடு சரி. அவன் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை. எனக்கு அந்த சம்பவத்திற்கு பிறகு செந்திலே பரவாயில்லை சையத்தை ஒப்பிடும் போது என்று தோன்றியது. அதன் பிறகு விளையாட்டில் சையதிடம் கவனமாக இருந்தேன்.
ஒரு முறை எங்கள் தெருவுக்கும் பக்கத்தில் உள்ள போலீஸ் காலனி டீம்முக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
எப்போதும் அவர்கள் எங்களிடம் தோற்று கொண்டு தான் இருப்பார்கள். சில சமயம் விளையாட்டு முடியும் போது ஏதாவது சண்டை போடுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு போட்டியில் சண்டை வந்து விட்டது. அதனால் அவர்களுடன் விளையாட மாட்டோம் என்று இருந்தோம். அதன் பிறகு சிலர் சமாதானம் செய்தார்கள். இப்போது கூட சமாதானம் சொல்லி பிரச்சனை வராது என்பதால் விளையாடினோம்.
முதலில் எங்கள் டீம் தான் பேட்டிங். முதலில் நான் விளையாடுகிறேன் என்று செந்திலும் சையதும் விளையாடினார்கள். செந்திலால் சமாளிக்க முடியாமல் அவுட் ஆனான். சையதும் நன்றாக விளையாடினான். அவர்களை குறைவாக நினைத்து சேவாக் போன்று அடிக்க தொடங்கினான். நிதானமாக விளையாட சொல்லியும் கேட்காமல் அவுட் ஆனான்.
அதன் பிறகு நானும் சுதாகரும் சேர்ந்து விளையாடி எந்த விக்கெட்டும் கொடுக்காமல் அதிக ரன்கள் எடுத்து விட்டோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றானது.
எதிர் அணி விளையாட தொடங்கியவுடன் சையது வீசிய பந்தில் தடுமாறினார்கள். அவன் புதுசு என்பதால். பிறகு அவர்களும் நன்றாக விளையாடினார்கள். ஆட்டம் முடிவுக்கு வர இருந்த போது சையதுக்கு ஓவர் கொடுக்க வில்லை அதனால் அவன் சுதாகர் மீது கோபப் பட்டான். இறுதி ஓவர் சுதாகர் வீசுவதாக இருந்தது. ஆனால் செந்தில் பிரச்சனை செய்து கடைசி ஓவர் போட்டான். அவன் விசியதில் No ball மற்றும் wide கொடுத்து ஆட்டத்தை தலைகீழாக ஆக்கி விட்டான்.
அவர்கள் வெற்றி பெறுவதாக இருக்கும் போது ஒரு விக்கெட் விழுந்தது. அது விக்கெட்டே இல்லை ஆனால் சையது பிரச்சனை செய்ததால் சண்டை வந்து விட்டது.
எப்போதும் அவர்கள் தான் சண்டை போடுவார்கள். இப்போது நாங்கள் சண்டை போட்டு விட்டு வந்து விட்டோம்.
அதன் பிறகு சில நாட்கள் நான் விளையாட செல்லவில்லை.
சுதாகர் விளையாட அழைத்ததால் சென்றேன். அன்றும் சையதும் செந்திலும் விளையாட வந்தார்கள். சையது அந்த மேட்ச்சை வைத்து செந்திலை சீண்டி கொண்டு இருந்தான். நான் சையத்தை விளையாட வந்தால் விளையாட்ட மட்டும் விளையாடு என்று எச்சரித்தேன். அவன் எதுவும் பேசாமல் விளையாடினான்.
செந்தில் பேட்டிங் செய்தான். சுதாகர் பந்து வீசினான். அவன் வீசிய பந்து கங்காரு போன்று குதித்து தாவி செந்தில் பேட்டில் பட்டு உரசிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றது. இடது பக்கம் வந்து இருந்தால் நான் தவற விட்டு இருப்பேன். வலுது புறம் வந்ததால் எளிதாக என் ஐந்து விரல்களிடம் மாட்டிக் கொண்டது. எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து உற்சாகமாக கூச்சல் போட்டார்கள். செந்திலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவுட் இல்லை என்றான். சுதாகர் அவனை அடித்து விட்டான். நான் அடிக்கலாம் என்று நினைத்தேன். அவன் முந்தி கொண்டான்.
பிரச்சனை ஆகி விட்டது.
செந்தில் எப்போதும் திருப்பி அடிப்பான். ஏதாவது திட்டுவான். அன்று அவன் வீட்டிற்கு சென்று அவன் மாமாவை அழைத்து வந்து விட்டான்.
அவன் மாமா என்னவென்று கேட்காமல் சுதாகரை அடித்து விட்டார். பெரிய பிரச்சனை ஆகி விட்டது. அதன் பிறகு சில நாட்கள் யாரும் யாரையும் விளையாட விடவில்லை.
நாங்கள் கிரிக்கெட்டை நிறுத்தி விட்டு கால்பந்து விளையாட தொடங்கி விட்டோம்.
ஒரு சிலர் சையதுடன் தனியாக சென்று விளையாட தொடங்கினர். நாங்கள் செந்திலை மறந்தே போய் விட்டோம். நான் செந்திலிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன். செந்திலின் பழக்கம் எனக்கு வந்து விட்டது. சுதாகர் பல முறை விளையாட அழைத்தும் அவன் வர வில்லை.
அதன் பிறகு அவனே எந்த விளையாட்டும் விளையாட வில்லை.
