பிரேமாவும் கவியரசும்

அன்னகாமாட்சி மெஸ்ஸில் மதிய உணவிற்காக அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஆர்ஆர் நகர் பகுதியில் மிகச் செல்வாக்கு  பெற்றிருந்தது அந்த மெஸ். புதிய விட்டு வசதி வாரியக் குடியிருப்பில் புதிய பேருந்து நிலயம்  போகும் வழியில் , பாரத ஸ்டேட் வங்கியின் பின்புறம் உள்ள குறுகிய இடத்தில் இருந்தது. ஸ்டேட் பேங்க ஊழியர்களும், அரசு ஊழியர்களும், சரபோஜி கல்லூரி பேராசிரியர்கள் சிலரும், மாணவர்கள் பலரும்  சாப்பிட்டுவிட்டு சிலாகித்து பேசும் அளவுக்கு உணவு வகைகள் சுவையாகவும் , தரமாகவும்,  வயிற்றுக்கு எந்தவித தொந்தரவும், கெடுதலும் இல்லாத, சுவையூட்டிகள் சேர்காமல் சமைத்தது.

மெஸ்ஸில் கடல்  மீன் வகைகளும் நல்ல சுவையுடனும், பாறைமீன் குழம்பு  அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தது. முதன் முறை வருபவர்களின் நாக்கு சப்பு கொட்டிவிட்ட பிறகு வேறு எங்கும் சாப்பிடப் போக மாட்டார்கள் . ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது  இன்றுவரை  சுவை குன்றாமல் இருக்கிறது.  ரமேஷ் தான் ,கவியரசுவுக்கு அன்னகாமாட்சி மெஸ்ஸை அறிமுகம் செய்து வைத்தார் . கவியரசு பாம்பே சுவீட்ஸ் அருகே ஆஞ்சநேயா  ஹார்டுவேர்சில் வேலை , அம்மாவுடன் தஞ்சாவூர் டவுனில் வேப்பமர சந்தில் , அப்பாவின் பூர்வீக வீட்டில் குடியிருந்தான். அப்பா இறந்து ஒன்பது வருடங்கள் ஆகி விட்டது. பன்னிரெண்டாவதுக்கு மேல் படிப்பில்லாததால் , பலவேலைகள் பார்த்து பிடிக்காமல் , அப்பாவின் நண்பரின் மூலம் இங்கு வேலை கிடைத்தது ,ஓரளவு நிறைவானச் சம்பளம். அம்மாவிற்கு உடல் நலமில்லாத நாட்களில் மெஸ்ஸில் தான் சாப்பாடு . மெஸ்ஸின் வாசற்படிக்கு இடது புறம் டீக் கடையும் உண்டு , சற்று தள்ளி இருந்தாலும் ஹார்டுவேர்சின் முதலாளி அங்கு தான் டீ வாங்க சொல்வார். மெஸ்ஸில் ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக காமாட்சியம்மாளுக்கு துணையாக ,  இணையாக சமைப்பதிலும் உணவு பரிமாறுவதிலும் உதவி செய்பவர் பிரேமா . மலர்ச்சியான புன்னகையுடனான முகம். கொஞ்சம் கறுப்பு. குட்டையாக சற்று தடித்த உடல்வாகு , சுறுசுறுப்பில் எறும்பை மிஞ்சியவர்.  நாற்பது வயதுக்குள் சொல்லலாம்.அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. திருமணமானவரா , குழந்தைகள் உண்டா என்ற கேள்விகளுக்கு பதிலில்லை. வேலைக்கு சேரும் போதே . உறுதியான குரலில் என்னை பற்றி கேட்க கூடாது, வேலையில் என்னால் எல்லா வகையிலும் உதவ முடியும் என்ற சத்தியத்தோடு சேர்ந்தார் , இன்று வரையில் அவரால் எந்தவித தொந்தரவோ , தொல்லையோ ஏற்பட்டதில்லை. காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்தால் மதியம் நான்கு மணிவரை முகம், சுளிக்காமல் , எந்தவிதமான முகபாவங்களை காட்டாமல் மலர்ச்சியுடனே இருக்கும் முகம். அவருக்கென்று தனித்த தேவைகள், விருப்பங்கள் பற்றி அவ்வப்போது நினைத்து பார்பான் கவியரசு . பிரேமாவுக்கும் கவியரசுக்கும் கவித்துவமான நட்புண்டு . ஏனோ அவனிடம் மட்டும் நன்றாக பேசுவார் , பழகுவார், சமயங்களில் ஏதாவது சொல்லி சிரித்துக் கொள்வார்கள் , அதில் ஏதும் உள்குத்து இருந்ததில்லை. பலதடவை அவரிடம் கேட்டிருக்கிறான் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று

பொதுவான புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும்.

காலையிலிருந்தே மழை வருவது போலிருந்ததால் கவியரசுவின் அம்மா சமைக்கவில்லை . தம்பி இன்னிக்கு மெஸ்ஸில் சாப்பிட்டுக்கோ என சொல்லிவிட்டார்.

மதியம் மெஸ்ஸில் சாப்பிட போவதற்காக கிளம்பினான்  

ஹார்டுவேரின் ஒனர் 

கவி எனக்கும் ஒரு சாப்பாடு வாங்கிட்டு வந்துடு வீட்டுல எல்லாம் ஊருக்கு போயிருக்காங்க என்றார்.

சரிண்ணே , சைவமா, ? அசைவமா ? என்றான்.

சைவம் போதும்., கொஞ்சம் கூடுதலா ரசம் வாங்கிக்க என்றார்.

மெஸ்ஸிற்கு வந்து  பிரோமாவின்  பரிமாறலில் சாப்பிட்டு விட்டு ஒனருக்கு பார்சல் சொன்னான்.

பார்சல் கட்டும் போது , காமாச்சியம்மாள் அவருக்கு இலையில கட்டாத நம்ம வீட்டு பாத்திரத்துல போட்டு குடு  என்றார்.

வாங்கி வந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு கழுவ தண்ணீர் இல்லாததாலும் , திடீரென கஸ்டமர்கள்  பொருட்கள் வாங்க வந்ததால் ,நான்கு மணிக்குத்தான் பாத்திரங்களின் ஞாபகம் வந்தது பாத்திரங்களை அப்படியே எடுத்துப் பையில் வைத்து ,ஒனரிடம்  பையை காட்டி  மெஸ்ஸில் குடுத்துவிட்டு டீ வாங்கி வருவதாக கிளம்பினான் . மெஸ்ஸிற்கு வெளிய டீ கடை எடுத்து வைக்கப்பட்டிருந்தது , டீ மாஸ்ட்டரும் இல்லை. மெஸ்ஸின் ஷட்டர் இறக்கி விடப்பட்டு பக்கத்தில்  வேலை செய்பவர்கள் மட்டும் பயன்படுத்தும் பாதையில் ஒரு கதவு மூடி ஒரு கதவு திறந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது என்னாச்சி இத்தனை மணிக்கும் திறந்திருக்குமே , ஐந்து மணிக்கு பிறகுதான் பூட்டியிருக்கும். டீ கடை மட்டும் இரவு எழு மணிவரை இருக்குமே என்ற கேள்வி எழுந்தது.

மெல்ல கதவை திறக்காமல் எட்டிப்பார்த்தான் மெல்லியப் பாட்டொலி கேட்டது, பாத்திரங்களை அடுக்கி வைக்கும் ஓசையும் ஒலித்தது. பூனை நடையாக்கி பாடலை காதில் வாங்கிய வண்ணம் உள்ளே நுழைந்து சமையலறையை நெருங்கினான் . உள்ளே இடது புறம் பாத்திரங்களை அடுக்கியபடி பாடலை வாய்க்குள்ளாக பாடினார் பிரேமா . சட்டென்று யாரும் பார்கவில்லை என்ற தெம்பில் , சேலையை நன்றாக இருக்கி, கைகளை உயர்த்தி ” நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட என்னைத் தேடி வரனும் ” என்ற இளையராஜா இசையமைத்த பாடலை , அமலாவின் ஆடலோடு பாடினார். பாலே நடனமங்கைகள் ஆடுவது போல காலின் பெருவிரல் தரையில் இருப்பது போல சுழன்றாடினார் . கவியரசு திகைத்து , விழித்தான் .விழிகளில் புன்னகையும் ஆச்சர்யமும் கலந்த பார்வையிருந்தது. கைதட்டலாமென பையை கீழே வைத்ததும் சரிந்துப் பாத்திரங்கள் விழுந்து உருளும் ஒசைக் கேட்டதும் சுதாரித்த பிரேமா திடுக்கிட்டு திரும்பினார்.

ஸாரி கதவு  சாத்தியிருந்திச்சா , பாட்டும் வேற கேட்டுச்சி , நல்லாருக்கே பாடுறது யாருன்னு பாக்க  சத்தம் போடாம வந்தேன் என்றான்

வெட்கம் கலந்த புன்னகையுடன்  விழிகளும்  மயக்கத்தையடைந்தது . உடனே சீற்றத்தை சிதறடித்தது.கதவ தட்டியிருக்காம்ல என்றார் சற்றே கோபம் கலந்த எரிச்சலோடு.

ஸாரிங்க ஏதோ குறுகுறுப்புல , செஞ்சிட்டேன் மன்னிச்சுருங்க என்றான். சற்றே முகம் மலர்ந்தவர் 

நானும் ஸாரிங்க திடீர்னு வந்தது , ஆடுனத பாத்ததுல கொஞ்சம் கடுப்பாயிட்டேன். 

கதவை திறந்து வெளியே வந்தவனை பின்தொடர்ந்து வந்து  , அவங்க எல்லாம் சொந்தத்துல துக்கம்ன்னு போய்ட்டாங்க. காமாட்சியம்மாகிட்ட இப்ப பார்த்த சொல்லிடாதீங்க , நாம ப்ரண்ட்ஸ்சா எப்போதும் இருப்போம் என்றார். முகத்தில் இனம்புரியாதப் புன்னகையுடன் கடையை நோக்கி நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *