நான் தான் Sigmund Frued என்று நினைப்பதுண்டு. சில நேரங்களில் அல்ல பல நேரங்களில். ஆம் அவனுடைய நீட்சி தான் என்று. இல்லை சில நேரங்களில் இவ்வாறு நினைப்பதுண்டு இருவரும் ஒரு கருவில் பிரிந்த இரட்டை குழந்தைகள் ஆனால் நூற்றைம்பது கால இடைவெளியில் பிறந்த இரண்டாவது குழந்தை நான். உண்மை தான். எப்பொழுதுமே பரிசோதனை எண்ணம், சந்தேகம் அவன் கூடவே பிறந்தது. இல்லை என் கூடவே பிறந்தது. என்னிடத்தில் நீங்கள் பேசும் போது சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். நான் உங்களை எப்பொழுதும் பரிசோதனை செய்து கொண்டு தான் இருக்கிறேன். உங்களுடைய புருவங்களையும் கண்களையும் கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருப்பேன். அதுவே உங்களின் ஆழ்மனதின் வெளிப்பாடு. உங்களை நீங்கள் அறியும் முன் நான் அறிந்து கொள்வேன். ஆம் நான் கடவுள் குழந்தை தான். நான் பிறவிலேயே ஒரு Prodigy. எந்த நூலும் கற்காமல் ஒருவன் மேன்மை அடைய முடியுமா என்றால்? முடியும்! அவனுடைய உள்ளுணர்வு உலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களை விட உன்னதமானது, தனித்துவமானது. ஆம் என் இளம் வயதிலேயே பலவிதமான முகங்களை மாற்றுவேன். அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் அறிவார்த்த முகம், உதவியாளர்களிடத்தில் குசலம் பேச குசல முகம், அலுவலக உதவியாளரிடம் டீ வாங்கி வருவதற்கு முன், வீட்டில் பாப்பா எப்படி இருக்கிறது என்று கேட்பேன், ஆகா என் குடும்பத்தின் மீது ஐயாவிற்கு எவ்வளவு அக்கறை என்று எண்ணி சிட்டாக பறப்பான், டீ வந்துவிடும். நான் சாதாரணமானவன் அல்ல, அசாதாரணமானவன். உண்மை தான்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில், வரைவு எழுத அவ்வளவாக வரவில்லை. ஆனால் கடவுள் குழந்தை கவலைப் படுமா என்ன? யார் கெட்டிக்காரன் என்று தேடினேன். கண்டேன். அவன் தான் என்று. அவன் அவனுடைய ஆழ்மனதில் யாராக இருக்கிறான், எதுவாக இருக்கிறான் என்று அவனுடன் பேச்சுக் கொடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் கண்களில் பளிச்சிட்டது. ஆம் அவன் திருவண்ணாமலை தீபமாக அவன் ஆழ்மனதில் வசிக்கிறான். அது போதுமே எனக்கு, ஒன்றும் அறியாதவன் போல், அவன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பான், அப்பொழுது வேண்டும் என்றே, சார்! இந்த திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதற்கு ஆயிரம் லிட்டர் நெய் பயன்படுத்தப்படுமாமே உண்மையா? என்பேன். அவருடைய ஆழ்மனம் கிளர்ச்சி கொண்டதை அவருடைய கண்கள் காட்டியது. ஆம் தெரியாதா? ஆயிரம் இல்லை! பத்தாயிரம்! என்பார். போதும் என்றாலும் நிறுத்த மாட்டார் .கொட்டி விடுவார் அண்ணாமலையாரைப் பற்றி. ஆம் அவருடைய பரவச நிலை அடங்குவதற்கு முன்பாகவே இப்பொழுதும் ஒன்றும் தெரியாதவன் போல் “சார் ! இந்த வரைவு சரிதானா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்” என்பேன். அண்ணாமலையாரை வரைவாக மாற்றிய தருணம் அது. அவரே ஐந்து நிமிடத்தில் கரெக்சன் பார்த்து அதை தட்டச்சு செய்து பிரிண்டும் எடுத்துத் தருவார் . ஆம் நான் sigmund frued -இன் நீட்சி தான். எல்லாருமே எளிமையான பரிசோதனை எலிகள். எளிதில் வென்று விடுகிறேன்.
நானே கடவுளின் புதல்வன்! இல்லை நானே கடவுள்! நானே சர்வமும் சகலமும்!. கடவுளுக்கு இணை உண்டா என்ன? உண்டு ! அவன் தான் சாத்தான்! கடவுளுக்கு இணையானவன், ஏன் அவனை விட மேல என்று கூட சொல்லலாம். அன்று தான் அவள் வேறு மாவட்டத்திலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு மாற்றலில் வந்திருந்தாள். ஐந்து அடிக்கு ஒரு ஜான் குறைவு, ஐம்பது கிலோவிற்கு இரண்டு கிலோ குறைவு, வெளித்த முகம், கூர்மையான கண்கள், தொப்பி மூக்கு, அவள் நடப்பதே தெரியவில்லை. ஒரு துளி சத்தம் கூட இல்லாமல் நடந்துவருகிறாள். கண்காணிப்பாளரிடம் ஏதோ பேசிவிட்டு, என்னை நோக்கி வரும் பொழுது ஒரு வணக்கம் வைத்தாள். ஆம் நாம் விழிப்பு நிலையில் நாம் அனைவரும் போலியாக ஒரு வணக்கம் வைப்போமே அதே வணக்கம். அப்பொழுதே ஒரு எண்ணம் இவள் தான் அதற்கு சரியான ஆள் என்று. மேலும் கவனித்தேன் தோள்ப்பையை கழற்றி வைத்து விட்டு இருக்கையில் அமர்வதற்குள் போன் வந்தது, அவள் கணவன், மூன்று மணிக்கெல்லாம் ஸ்கூல் விட்டு விடுவார்கள் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டுவீட்டில் விட்டு விடுங்கள் என்று உத்திரவு போட்டாள். அதற்குள் அவள் பெயரைச் சொல்லி அதிகாரி அழைத்தார் உடனடியாக சென்று நெடுங்காலம் பழகியதை போன்று சிரித்து சிரித்து பேசினாள். அதற்குள் குழந்தை பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஒருவன் வந்தான், பெண் குழந்தையை லட்சுமி அதிர்ஷ்டம் என்றாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அமைதியாக கோப்புகளைப் பார்க்கத் தொடங்கினாள். என் அமைதி குலைந்தது. ஐந்து நிமிடத்திற்குள் ஐந்து வேடம் பூண்டுவிட்டாள். ஆம் வேலை வந்துவிட்டது. பரிசோதனைக்கான நேரம். ஆழ்மனதில் யார் இவள் என்பதே பரிசோதனையின் இலக்கு. இரண்டு நிமிடங்களில் கண்டுகொள்ளக்கூடியவன் பத்து நிமிடங்கள் கடந்தும் கண்டுபிடிக்க இயலவில்லை. இவளே சாத்தான். இந்த கடவுளுக்கு இணையான சாத்தான். எப்பொழுதுமே நான் செய்வது என்னவென்றால் முதலில் output என்ன என்பதை முதலில் முடிவு செய்து விடுவேன். உதாரணமாக ஒருவரை மகிழ்ச்சியாக அல்லது சிரிக்க வைக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அவர்களின் ஆழ்மனத்தினுள் சென்று சிரிப்பிற்கான உள்ளீடுகள் எவை என்பதை பார்த்து, பின்னர் அந்த உள்ளீடுகளையே நேரிடையாக உள்ளீடு செய்வேன். அவர்களும் சிரித்து விடுவார்கள்.இவ்வாறே எல்லா விதமான உணர்ச்சிகளுக்கும் செய்வேன். நான் நினைத்தது நடந்துவிட்டால் பாஸ். எப்பொழுதுமே பாஸ் தான். நான் கடவுள் குழந்தை ஆயிற்றே. இப்பொழுது பரிசோதனையின் output அவளை என்னிடம் காதல் வயப்படவைப்பது. இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டாகிவிட்டது. இனி வருவன உள்ளீடுகள் தான். சாத்தானாயிற்றே. அதன் கண்களைக் கொண்டு ஆழ்மனத்தினை அறிய முடியவில்லை. இதுதான் சரியான பரிசோதனை என்று தோன்றியது. உள்ளீடுகள் ஆரம்பம் ஆனது. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று முன்தினமே தெரிந்துவைத்துக்கொண்டு அடுத்த நாள் அதையே மதிய உணவிற்கும் கொண்டுவந்தேன். எலுமிச்சைசாதம். கூட்டத்துடன் அமர்த்திருந்ததால் எவ்வாறு கேட்பது என்று என் சாதத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் துர்நேரம் கூட்டத்தில் இருந்த யாருக்கும் எலுமிச்சை பிடிக்கவில்லை. அவள் மட்டும் சாதம் கொடு என்று அன்று கேட்டிருப்பாளேயானால், அடுத்த நாள் எலுமிச்சை சாதம் தான் அலுவலகம் முழுவதும் தலைப்பு செய்தி. விழிப்பாகவே அவள் அதைக் கேட்கவேயில்லை .முதல் உள்ளீடு தோல்வி. முதல் ரௌண்டிலேயே சாத்தான் தோற்றுப் போனால் சாத்தானுக்கு என்ன மதிப்பு. அதே போன்று முதல் ரௌண்டிலேயே வெற்றி கொண்டால் இறந்தவனுக்கு தான் என்ன மதிப்பு. இவ்வாறாக பல ரௌண்டுகள் சென்றது. கடவுளுக்கு தோல்வி தான் .இல்லை எனக்குத் தான். அவளுடைய விழிப்பு நிலையை என்னால் உடைக்க முடியவில்லை. அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தினேன் அனைத்தும் வீண். ஒரு நாள் நான் வரும் முன்பே, அவள் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தன்னுடைய கைகளை வைத்து கண்களை மறைத்துக் கொண்டாள். அவள் அழுவது தெரிந்தது. பெண்கள் அழும் போது நான் பரிசோதனைகளை செய்ய முற்படுவது இல்லை. ஆம் இதுவும் ஒரு அறம் தான். போர்க்களத்தில் நிராயுதபாணியை கொல்லக்கூடாது என்ற அறத்தை போலத்தான். என் இருக்கைக்குச் சென்று மிகவும் தாழ்ந்த குறுக்கில் பின்வருமாறு சொன்னேன் “அழாதே, எல்லாம் சரியாகிவிடும்” என்று. ஒரு இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு அவளது கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வெளியே சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவள் அவளது கண்களைக் காட்டாமல் நேராக அவளது இருக்கையை அடைந்தாள். அன்று முழுவதும் பரிசோதனைக்கு விடுமுறை அளித்துவிட்டேன். ஆனால், அவள் தான் சாத்தனாயிற்றே அடுத்த நாள் காலை பதினோரு மணி மும்முரமாக அலுவலகத்தில் வேலை நடை பெற்றுக்கொண்டிருந்தது. அவள் உள்ளே நுழைந்தாள். இப்பொழுது அவள் கண்களைப் பார்த்து விட்டேன். அதனுடாகவே அவள் ஆழ்மனத்தையும் பார்த்துவிட்டேன். நேராக அவளது இருக்கையை எடுத்து எனது இருக்கைக்கு ஒரு ஐந்து அங்குல இடைவெளியில் போட்டு உட்கார்ந்துகொண்டு அவள் கைகளை எடுத்து என் மேசை மேலே வைத்தாள்.இப்பொழுது அவள் கண்களைப் பார்த்தேன். அது எனைத்தொடு என்றது. ஆகா ஆகா வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி இதோ சாதனை வெற்றி கொண்டுவிட்டேன். உண்மை தான். நான் கடவுளின் புதல்வன் தான். பார் அவளே அவளது கர்வத்தை விட்டு விட்டு வந்துவிட்டாள் என்று என் விழிப்பு நிலையில் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், தவறான சிந்தனை என்பதை கடவுள் புதல்வனுக்கு உணர்த்தவேண்டுமல்லவா ? ஆம் அவன் நூல்களை கற்காதவன் வேறு, எனவே இக்கதையின் எழுத்தாளனே கதைக்குள் ஒரு கதாப்பாத்திரம் பூண்டு என் மனதின் ஆழ்மனத்திற்குள் சென்று விழிப்பு நிலையில் இருந்த என் தலையில் ஒரு போடு போட்டு பின்வருமாறு கூறினார் “நீ என்ன பெரிய மன்மத குஞ்சா, சப்ப மூக்கா, கரை பிடித்த பல்லா, சோடா புட்டி கண்ணாடி வேறு, நீ என்ன அரவிந்தசாமி யா கண்டதும் காதல் வர, அழுக்கானவனே, அவள் ஏற்கனவே மணம் முடித்தவள், அவனை பிடிக்காமலா திருமணம் செய்துருப்பாள், அவளுக்கு குழைந்தை வேறு இருக்கிறது. அதை விட உன்னை பிடிக்குமா? என்ன? முட்டாளே பலமுறை சொல்லி இருக்கிறேன். பெண்கள் விஷயத்தில் விழிப்பு நிலையில் தர்க்கத்தை கொண்டு வைத்துப் பார்க்காதே ! மடையா! மடையா ! என்ன நடந்தது தெறியுமா ? அவள் இல்லறத்தில் மகிழ்ச்சி இல்லை, வெறும் கசப்பு தான். அதை நினைத்து தான் அவள் அன்று அழுதது. நீ பல நாட்களாக உடைக்க முடியாத அவளது விழிப்பு நிலையை நீ கூறிய அந்த வார்த்தைகள் அதை உடைத்து அவள் ஆழ்மனதைத் தொட்டது. ஆம் நீ அன்று கூறினாய் அல்லவா! ” அழாதே எல்லாம் சரியாகிவிடும்” என்று அதுதான். உண்மையில் அந்த வார்த்தை அவளது சிறியவயதில் எப்பொழுதும் அவளது அம்மா சொல்வது. அந்த வார்த்தை சொன்னவுடனேயே அவள் மகிழ்ச்சி அடைவாள். ஆனால் இன்று அவ்வார்த்தைகளைச் சொல்ல அவள் அம்மா இல்லை. ஆனால் அச்சொற்கள் மட்டும் அவளது ஆழ்மனத்திலே புதைத்திருந்தது. அதை நீ உன்னை அறியாமலே அவளது மேல் மனதிற்கு கொண்டு சென்றுவிட்டாய். ஆம் நீ அவளது தாயானாய் ! அவளுக்கு அந்த அரவணைப்பு தேவைப்பட்டது. அந்த ஆழ்மனதில் ஏற்பட்ட கருணை, பாசம் என்ற எண்ணம் அவளது விழிப்பு நிலையை அடைந்த போது நீ ஆண் என்ற எண்ணம் உருவெடுத்தது. ஆம் அவ்வாறு ஆழ்மனதில் அவளது தாயின் மீது இருந்த பாசம் மேல்நிலையை அடையும் போது அது அன்பாகி நட்பாகி காதலாகி பின்னர் காதலுக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட நிலையில் மீண்டும் அவளது ஆழ்மனத்திற்குள்ளேயே பதிந்துகொண்டது, அதையே நீ அன்று அவள் கண்களில் கண்டது. அதுவே இன்று அவள் கைகள் உன் மேசை முன்னே என்னைத் தொடு” என்று கூறி என்னுடைய ஆழ்மனதிலிருந்து எழுத்தாளன் விடைபெற்றான். தொடர்வது இக்கதை நாயகனின் ஆழ்மன வெளிப்பாடு. பரிசோதனையின் இடைவெளி ஐந்து அடி, இன்றோ அது ஐந்து அங்குலம். பெண்ணின் முதல் ஸ்பரிஸம், பெண் எப்பொழுதும் பெண் தான் திருமணம் எல்லாம் பொய் தான், பரிசோதனை பொய், அவள் மட்டுமே மெய். கூடவே Mysore Sandal சோப்பும் மெய். அதனுடன் அவள் மனம். ஆகா ஆகா, வாசனை இல்லா Hamam போட்டவனுக்கு இது புது அனுபவம் தான். தயங்காதே தொட்டு விடு ! தொட்டால் என்ன visaka Committee தானே, வரட்டும் அது மட்டும் இல்லை, உச்ச நீதி மன்றம், இல்லை பன்னாட்டு நீதிமன்றத்திலிருந்து அனைத்து நீதிமான்களும் வரட்டும். ஒரே நிபந்தனை தான் நீ கோர்ட்டில் அமர்ந்து நீதி சொல்லக்கூடாது, ஆம் என் இடத்தில். ஆம் இந்த ஐந்து அங்குல இடைவெளியில் Mysore Sandal சோப்புடன் கலந்துவருகிற அவளது ஸ்பரிஸத்தை நுகர்ந்து ஒரு தீர்ப்பு சொல் என்பேன். அவர்களும் தீர்ப்பு சொல்வார்கள். என்ன தெரியுமா? “மடையனே ஏன் தாமதம் உடனடியாகத் தொட்டு விடு. வழக்கு வருமானால் நாங்களே வக்கீலாக மாறி உன்னை ஜாமீனில் வெளியே கொண்டுவருகிறோம்” என்று. அவளது கணவனைப் பார்த்துச் சொல்ல வேண்டும் “பாரடா உன்னவள் என்னவள் ஆனதை” என்று. அவன் இக்காட்சியைக் கண்டவுடனேயே மடிந்துவிடுவான். மனைவிமீது அன்பு செலுத்தாதவன் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? செத்து ஒழியட்டும்! நாரப்பயல்கள்! உன் குழந்தை இல்லை அது நம் குழந்தை. இக்கணத்தில் இப்பேரண்டத்தில் அவளது கை, என் கண்கள் மற்றும் Mysore Sandal – ஐ நுகர என் மூக்கு இவை மூன்றைத் தவிர்த்து இப்பேரண்டத்தில் வேறெந்த பருப்பொருளும் இல்லை. ஆம் தொடத்தான் போகிறேன். இல்லை கைகளைப் பிடித்துக்கொண்டு போகப் போகிறேன். இல்லை ஓடப்போகிறேன். தொலை தூரம் போகப்போகிறேன், இல்லை தொலை தேசத்திற்கு போகப்போகிறேன். எங்களைத் தடுக்க யாருண்டு, இதோ ஆட்சேபனை தெரிவிக்கக்கூடியவளே இன்று சரண். பெண்களுடைய கர்வத்தை விட வைத்தவன் என வரலாற்றில் எனக்கு இடமுண்டு. “தொட்டு விடு, டேய் மடப்பயலே தொட்டுவிட்டு !” “என்னடா செய்கிறாய் சீக்கிரம் தொடு!” இவ்வேளையில், அதிகாரி அவள் பெயரைச் சொல்லி “அந்த கோப்பு என்ன ஆனது?” என்றார்.
விறுக்கென்று துள்ளி எழுந்து கொண்டேன். உன்னை இல்லையப்பா! அவளை என்றார். இதோ வருகிறேன் என்று விரைந்தாள். உடல் முழுவதும் வியர்வை வழிந்தோடியது ஒரே தூர்நாற்றம். ஆழ்மன சரடு பாதியில் அறுபடுமானால் விழிப்பு நிலையானது சபீனா போட்டு துலக்கிவைத்த பாத்திரம் போல் பளிச்சென்று இருக்கும். ஆனால் நான் கடவுளின் புதல்வன் ஆயிற்றே மீண்டும் எழுத்தாளன் முன்பு நினைத்த நினைவுகளை காட்சி வடிவமாக விரித்துரைத்தான், வியர்வை கூடியது கூடவே துர்நாற்றமும். அவள் அதிகாரியுடன் பேசுவதை பார்த்துகொண்டே இவ்வாறு பிரக்கையாக நினைத்தேன் ” பரிசோதனை பயங்கரமானது என்று உணர்ந்துகொண்டேன். ஒரு நிமிடம்தான் இருந்தது இல்லையேல் நானே பரிசோதனை எலியாகியிருப்பேன். எழுத்தாளன் கதைக்குள் பிரவேசித்ததால் தப்பித்தேன். யார் அவள் குறை பிரசவத்தில் பிறந்தவள் ! குட்டச்சி, ஒட்டகக்குச்சி, தொப்பி மூக்கி ஜோடி பொருத்தமே சரியில்லை. விட்டிருந்தால் வளைத்திருப்பாள்! சாகசக்காரி, பசப்பி, மோசக்காரி, என்ன சொன்னாய் தொலை தேசத்திற்கு செல்வாயா? உனக்கு முதலில் அம்பத்தூருக்கு வழி தெரியுமா? மூடனே முட்டாளே. எங்கு சென்றாலும் அவள் கணவன் தேடிவந்து வெட்டுவான், அதில் தப்பித்தால் உன் தந்தை வெட்டுவார்.பரிசோதனை என்ற பெயரில் சாகப்போகிறாய். நீ இன்னும் பல இடங்களுக்கு செல்லப்போகிறாய். அவள் உன் கால் தூசிக்குக் கூட பெறமாட்டாள். அற்பனே! முப்பது ரூபாய் Mysore Sandal சோப்பிற்கு முப்பது வருட வாழ்க்கையை கொடுக்கப்பார்க்கிறாய். நஷ்டம்! மாபெரும் நஷ்டம் ! இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் என் அருகில் அமர்ந்து அதே கைகளை அதே மேசையின் மீது வைத்தாள். இம்முறை நான் என் இருக்கையிலிருந்து எழுந்து சென்றேன். மீண்டும் நான் என் இருக்கைக்கு திரும்பவேயில்லை .ஆனால் பல நுற்றாண்டுகளாக அவளது கைகள் அம்மேசை மீதே இருந்தது.