பூபாளம் ஒலிக்கும் அதிகாலை. கார்கால மேகங்கள் பரந்து விரிந்த,  தஞ்சை வானத்தை பரவலாய் மூடிக்கொண்டிருந்தன. மழை பெய்யும் எண்ணத்தோடு வானம் கலங்கிக் கொண்டிருந்தது. கடந்த இருபது நாட்களாகவே நகரம் இவ்வாறே சிதறிய இருளில் மூழ்கியிருந்தது.

அந்த நகரின் சாலைகளில், அவர்கள் சந்திப்பு முற்றிலும் எதிர்பாராததாகவே இருந்தது. இரண்டு மாதங்களுக்கு  முன்பு குணங்குடி மஸ்தான் கடையில் அவர்கள் முதன் முதலாக மோதிக் கொண்டனர். இரண்டாம் முறை மகாராஜாவில். மூன்றாம் முறை தங்கவேல் செட்டியார் நகை கடையில். நான்காம் முறை மேலவீதி காபி  பவனில் என நான்கு தடவைகள் ,  – அனைத்தும் எதார்த்த மானவை. ஆனால் தனியாக பேசும் வாய்ப்பு? அது மட்டும் அவர்களுக்கு முற்றிலும் கிடைக்கவில்லை.

அவன் பெயரை அவள் அறியவில்லை. அவளது பெயரை  அவனும் அறியவில்லை. இருந்தாலும் – அவளது மென்மையான அழகும், அவனது அப்பாவித்தனமும், இருவரையும் செல்லமாய் இணைத்து வைத்திருந்தது.

நான்காவது முறை, மேலவீதியில் உள்ள காபி பவனில் கை கழுவும் இடத்தில் தான் அவர்கள் தங்கள் பெயர்களை அவசர அவசரமாக பரிமாறிக் கொண்டனர். அவர்களின்  கவனச் சிதறல்களினால், அவனுக்கு அவள் “அனிதா“ ஆகவும்,  அவளுக்கு அவன் ” மாதவன்” ஆகவும் மாறிப்போனார்கள்.

அவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பின், ஆதவனின் மனதில் ஒரு தீவிரம் திவ்யமாய் குடியிருந்தது..

அவளை முன்பு பார்த்த இடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் தேடிச் சென்றான். நண்பன் வீர சோழனின் தூண்டுதலால்,  தினமும் காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் – அவளை காணும் ஆசையில் தேடி அலைந்தான்.

ஒரு நாள் மாலை  அலைச்சலில்,  சோர்வடைந்து, அருளானந்த நகர் பூங்காவில் உள்ள குடை வடிவ கூடாரத்தில் அமர்ந்தபடி இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். கண்கள் கலைப்படைந்தும்,  இமைகள் மூடிய படியும், அவன் தலை மேசையில் சாய்ந்திருந்தது.

“மாதவன்…”  ஓர் இனிய குரல். அவன் அசையவில்லை.

மீண்டும் – “மாதவன்…” – இன்னும் அருகில். அவன் புறக்கணித்தான்.

மூன்றாவது முறை, இன்னும் நெருக்கமாய், அதே இனிய அழைப்பு . அவன் அதிர்ந்து தலை தூக்கிப் பார்த்தான். அவனுக்கு எதிரே – அசைந்திடும் சிலையாய், அகிலா நின்று கொண்டிருந்தாள்,  ஒரு சிறுமியுடன் .

“ நீங்கள்தானே மாதவன்? ” – அவள் புன்னகையுடன் கேட்டாள்.

“ இல்லை… என் பேர் ஆதவன். நீங்க அனிதா தானே? ” அவன் ஐயத்துடன் கேட்டான்.

“இல்லை… என் பெயர் அகிலா.” அவள் ஆனந்தமாய் பதிலளித்தாள். அவள் சொற்களுக்கு இடையே மெல்லிய சிரிப்பு சிதறி விழுந்தது. ஆதவன் அதை ரசித்தான்.

இருவரும் திடீரென்று சிரித்து விட்டனர். பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு, இருவர் மனங்களிலும் மகிழ்ச்சி எனும் ஓர் உன்னத நீரோட்டத்தை  ஊடுருவச் செய்தது.

அடுத்த சந்திப்பின் போது, ஆதவன் துணிச்சலுடன் பேசினான்:

“நாளைக்கு காலை 10 மணிக்கு மாவட்ட மைய நூலகம்… உங்களைப் பார்க்கணும், பேசணும்.”

அகிலாவின் கண்களில் ஒரு புன்னகை. “நிச்சயம் வருவேன். நானும் பேசணும்.”

அன்று இரவு, ஆதவன் மனதில் மல்லிகை பூக்கள், வெள்ளை நிறத்தில், கொள்ளை அழகுடன் பூத்துக் குலுங்கியபடி இருந்தது.  அவன் பூரித்துப் போனான்.

ஆனால் மறுநாள், விதி அவர்களிடம் கால்பந்து, கைப்பந்து என மாறி மாறி விளையாடிக் கொண்டிருந்தது.

ஆதவன் முதலில் நூலகத்தில் படிப்பறையில் காத்திருந்தான். அவளைக் காணவில்லை. மேலே மாடிக்கு சென்றான். வாசக வட்ட அரங்கிற்குள் நுழைந்து தேடினான். நூலகர் அறைக்கு அருகில் இருந்த மகளிர் ஓய்வரைக்கும் சென்று பார்த்தான். சிறிது நேரம் வாசலில் நின்றான். பக்கத்திலிருந்த பூங்காவிற்குள் நுழைந்து பார்த்தான். வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுற்றிப் பார்த்தான். எங்கும் அவளை  காண முடியவில்லை. எங்காவது ஒளிந்து கொண்டு “தன்னை எப்படி கண்டுபிடிக்கிறான் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு மூலையில்  பதுங்கி ஒதுங்கி  நமக்கு கண்ணாமூச்சி காட்டுகிறாளோ? ” என்ற ஐயப்பாடு அவனுக்குள் எழுந்தது. 

மணி 10.10 ஆகும் வரை அவன் பதட்டம் அடையவில்லை. அதுவரை.அவனது கைகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் இருந்த, 30_க்கும் மேற்பட்ட மாத வார தினசரி இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழிலும் ஒரு சில வரிகளை கூட அவன் மனம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மனம் கொல்லன் பட்டறை இரும்பாய் கொதித்துக் கொண்டும் , வதைபட்டுக் கொண்டும் இருந்தது. பத்து மணிக்கு முன்னரே வந்தவன், 11மணி வரை அவளுக்காக காத்திருந்தான். அவனது பரிதவிப்பு அதிகமானது.” அவளுக்கு என்ன ஆனது? ஏன் அவள் வரவில்லை? அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதா? வீட்டில் ஏதேனும் பிரச்சனையா?” என்று பலவாறு எண்ணியபடி ஆதவன் நூலகத்தை விட்டு வெளியேறினான்.

அதே நேரத்தில் – அகிலாவும் நூலகத்திற்கு வந்திருந்தாள். ஆனால் தவறான இடத்தில். கூட்டுறவு காலனி நூலகத்தில்.

இருவரும் ஒரே நேரத்தில் காத்திருந்தும், ஒருவரையொருவர் கண்டுகொள்ள முடியவில்லை..

இருவருக்கும் ஏமாற்றம்.

அன்று இரவு ஆதவனுக்கு தூக்கம் இல்லை. “அவளுக்கு என்ன ஆனது?” என்ற எண்ணம் அவனை உலுக்கியது. அன்றைய இரவு அவன் தூக்கத்தை தொலைத்தவனாய் மாறி போனான். 

மறுநாள் மாலை. மீண்டும் அதே பூங்கா.

இம்முறை எதிர்பார்த்தபடி அகிலா வந்திருந்தாள்.

“நேத்து நீ ஏன் வரல?” – ஆதவன்.

“ நான் வந்தேனே! நீங்க தானே வரல? ”

“ நானும் இருந்தேன். ஆனா உன்ன பார்க்க முடியல…”

சில நிமிடங்கள் குழப்பமும், சிரிப்பும் கலந்த உரையாடல் அவர்களுக்கிடையே நீடித்தது. 

ஆதவன் வழக்கமாக வருவது மாவட்ட மைய நூலகம். அவனைப் பொறுத்தவரை நூலகம் என்றால் அது மாவட்ட மைய நூலகம் தான். அதேபோல் அகிலாவை பொருத்தவரை நூலகம் என்றால் அவள் அடிக்கடி வருகின்ற கூட்டுறவு காலனி நூலகம் தான். மேலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களின் கவனம் எல்லாம் வேறு  வேறு பாதையில் சென்று கொண்டிருந்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்பதை இருவரும் உணர்ந்தனர். 

ஒரு மெல்லிய சிரிப்பொலி இருவரிடத்திலும். பின்பு – ஒரு சிறிய மௌனத்தைத் தாண்டி, அகிலா பேசினாள்.

“ஆதவா… எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா… நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது.”

அவளது குரலில் உட்புறம் உற்சாகமும் வெளிப்புறம் கொஞ்சம் சோகமும் கலந்து இருந்தது.

“ஏன்? என்ன காரணம்?”

“நான் ஒரு வருடத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். என்னுடைய கனவு – இந்திய அரசுப்பணியில் சேர வேண்டும். கல்யாணம் செய்து குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அந்த கனவு மாறிப் போய்விடும். அதனால் தான்… இனி நான் கல்யாணமே செஞ்சிக்க  மாட்டேன். அதுல நான் உறுதியா இருக்கேன். ”

ஆதவன் திகைத்தான்.

“ இதைச் சொல்லத்தான் நீ இவ்வளவு நாட்களா என்னை சந்திக்க முயற்சி  பண்ணுனியா? ”

அகிலா சிறிது நேரம் அமைதியுடன் இருந்தாள். பின்னர் மெதுவாக –

“ இல்ல… இன்னும் ஒன்னு இருக்கு. கொஞ்ச நாளா நாங்க எங்க புனிதவதிக்கு ஒரு மாப்பிள்ளைய தேடிக்கிட்டு  இருந்தோம். உங்களைப் பார்த்தபின்… நீங்க அவளுக்கு பொருத்தமானவர் என எனக்குத் தோணிச்சு. அதனால்தான்…”

,”அது யாரு புனிதவதி?”

“ என்னோட கூட பிறந்தவ. நாங்க ரெண்டு பேரும் ரெட்டை பிறவி ”

ஆதவன் அகிலாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சில நிமிடங்கள். மனதில் மின்னல் போல் உணர்ச்சிகள் மோதி மறைந்தன.

அகிலா தொடர்ந்தாள். 

“ஆமாம். புனிதவதி என்னைப் போலவே இருப்பாள். ஆனால்… ஒரு விபத்தில் அவளது வலது காலின் அடிப்பகுதி முற்றிலும் சிதைந்து விட்டது. ஆனாலும் அவளால் அனைத்து வேலைகளையும் இப்போது நன்றாக செய்ய முடியும்.”

ஆதவன் அகிலாவை சற்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சென்று, மீன் கைநழுவி போக, பின் சேற்றை பூசிக்கொண்டு கரை ஏறியதைப் போல அவன் தவித்தான்

“நீங்க அவளைக் கல்யாணம் செய்தால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. எந்த பிரச்சனை வந்தாலும், அதை நான் தீர்த்து வைப்பேன்… சரியா, மாமோய்? ”

அந்த “மாமோய்” என்ற மயக்கம் நிறைந்த சொல்லில் ஒரு விதமான உரிமையும் பாசமும் ஒருங்கிணைந்து இருந்தது. ஆதவனின் மனம் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கியது.

அகிலா சிரித்தபடி எழுந்தாள்.

“ மாமோய்…நாளைக்கு இதே மாதிரி இங்க வந்துருங்க. நான் உங்களை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். எங்க வீடு  பக்கத்துல தான் இருக்கு. அங்க எல்லாத்தையும் பேசிக்கலாம். சரி வர்றோம் மாமோய்” என்று சொல்லிவிட்டு, அகிலா துணைக்கு வந்த சிறுமியுடன், மெல்லிய மழைத்தூறலின் வழியே பூங்கா நடைமேடையில் நடந்து சென்றாள். 

ஆதவனின் காதுகளில் “மாமோய்” என்ற அந்த மந்திர வார்த்தை, இன்னும் இந்திரஜாலத்தை செய்து கொண்டே இருக்க, அவன் சிலையாக நின்று கொண்டிருந்தான் வெகு நேரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *