இன்று:
முகுந்தன் தேடி வந்த, அந்த நங்கையை, ஆலமரத்தடியில் காண முடியவில்லை. முகுந்தனின் கண்கள் அந்த ஆலமரத்தடியை அங்குலம் அங்குலமாகத் துழாவின. அவன் தேடிவந்த அந்த தேவதையை ஆலமரத்தடியில் காண முடியவில்லை. பக்கத்தில் அவன் தேடிப் பார்த்தும், அவன் பார்வையில் அவள் படவே இல்லை. நேற்று மதியம் மனதை மயக்கிய அந்த மோகன ரூபினியைக் காணாது அவன் தவித்தான். நேற்று அவன் மனதில் மலர்ந்த மெல்லிய காதலும், மையலும் இன்று வெறுப்பாய் மாறி, விடமாய் ஏறியிருந்தது. அந்த மோகன வாகினியை பார்த்தது முதல் அவன் மனம் ஒருவித மயக்கத்தில் தவித்தபடி இருந்தது. ஆனால் இன்று அவன் மனம் அவளை வெகுதூரம் அவனிடமிருந்து விரட்டி அடித்து விட்டு வெறுப்பை உமிழ்ந்தபடி ஆலமரத்தடியில் அனாதையாய் நின்று கொண்டிருந்தது. காரணம் நேற்றைய அவளின் நியாயமற்ற செயல்.
நேற்று:
ஆள் உயர அழகாய் வளர்ந்திருந்த ஆலைக்கரும்பு நட்ட வயலில், கரும்புத்தூர்களுக்கு மண் அணைப்பு செய்யும் வேலையை மின்னல் கதியில் முடித்துவிட்டு, தங்கள் ஊருக்கு செல்ல ஆலமர நிறுத்தத்தை நோக்கி அவர்கள் ஆவலுடன் நடந்தார்கள். பள்ளி சிறார்களைப் போல, பசி அந்த நால்வரிடமும் துள்ளி விளையாடியபடி இருந்தது.
வழியில் அரசூர் அருகே உள்ள அரச மரத்தடி நிழலில், சாலை ஓரத்தில் ஒரு பெரியவர் சுடச்சுட கோழி பிரியாணியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரது பிரியாணி கடையில், நான்கு பேர் ரசனையோடு பிரியாணியை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில். கோழி பிரியாணி 80 ரூபாய் என்ற தகவல் கிடைத்தது. .
அடுத்து ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் இருந்தவாறு இரண்டு பேர் கோழி பிரியாணியை கூவி கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கி பார்த்ததில் அங்கே கோழி பிரியாணி 90 ரூபாய் என்ற விவரம் கிடைத்தது. கோழி பிரியாணியின் வாசம் அவர்களின் நாசியை நச்சரித்தாலும் அங்கும் அவர்கள் சாப்பிட மனம் இல்லாமல் மேலே நடந்தார்கள்.
அடுத்து ஒரு வேப்பமர நிழலில் இரண்டு மர மேஜைகளை போட்டு, அதன் மேல் பிரியாணி உள்ள பெரிய பாத்திரத்தை வைத்து, ஒரு அம்மாவும் அவரது பையனும் கோழிபிரியாணியை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இடையிடையே
“ஐயா வாங்க அம்மா வாங்க சூடான கோழி பிரியாணிய சுடச்சுட சாப்பிட்டுட்டு போங்க ” என்ற குரலும் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களின் கூவலையும் ஆவலையும் நால்வர் கூட்டணி பொருட்படுத்தாமல் நயமாக அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அடுத்து மூன்று நடுத்தர வயது பெண்கள் சாலை ஓரத்தில் ஒரு நிழற்குடை அமைத்து அதன் கீழ் அமர்ந்து கோழி பிரியாணியை நேர்த்தியாக பொட்டலம் கட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாக வருகின்ற வழிப்போக்கர்கள் நிறைய பேர் அவர்களிடம் நூறு ரூபாய் கொடுத்து பிரியாணியை வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
“பசி உயிரை போக்கினாலும், வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பெண்டாட்டிகளிடம் ஏராளமாய் வசவுகளை வாங்க நேரிடும்” என்கிற பயம் நால்வரையும் அந்த பிரியாணி கடைகளை வேகமாய் கடக்க வைத்தது. அந்த நால்வரில் எவருக்கும் பிரியாணி சாப்பிடும் எண்ணம் அறவே ஏற்படவில்லை. எப்படியாவது பேருந்தை பிடித்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற தாகமும் வேகமும் அவர்களிடம் அப்போது அமோகமாய் இருந்தது. .
அவர்கள் பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்த போது, அங்கே ஆலமர நிழலில் ஓர் ஆனந்த தேவதையை பார்த்தார்கள்.. அவள் முன் வாயகன்ற அலுமினிய குண்டான். அதில் வாசனை மிக்க கோழி பிரியாணி. அவளைப் பார்த்தவுடன் அந்த நால்வருக்கும் இரண்டு வகை பசி உள்ளுக்குள் இரண்டறக் கலந்திருந்தது. ஒன்று வயிற்றுப் பசி. மற்றொன்று வாலிபப்பசி. அவர்கள் நால்வரும் பிரியாணியையும், அந்த இளம் பெண்ணையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தார்கள். உடனடியாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை சற்று ஒத்தி வைத்தார்கள்.
அதுவரை திடமாக இருந்த அவர்களின் மனம் இடம் மாறி போனது. பார்த்த நொடிப் பொழுதில் மயக்கம் நெஞ்சில் ஊறியது.
அந்த நால்வரில் ஒருவனான ஜெயபாலன், முதலில் அந்தப் பெண்ணை நெருங்கி, “பிரியாணி எவ்வளவும்மா?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்,
“கோழி பிரியாணி 120 ரூபாய். வெறும் பிரியாணி 60 ரூபாய்” என்றாள்.
அருகில் இருந்த நீளமானமேஜையில் அவர்கள் அமர அவள் பிரியாணியை பிரியத்துடன் அவர்களுக்கு பரிமாறினாள். மது போதையில் மதி மயங்கியவர்களைப் போல, அவர்களின் கண்கள் தங்கத் தாரகையின் அங்கங்களை மேய்ந்து கொண்டிருந்தது. செவ்வாய் பிரியாணியை சிறப்பாக சுவைத்துக் கொண்டிருந்தது. , அங்கே மேய்ச்சலும், சுவைத்தலும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தது.
முகுந்தன் மட்டும் வெறும் பிரியாணியை சாப்பிட்டான். நால்வரும் சிந்தை மயங்கியபடியும் சிரிப்பை வழங்கியபடியும் அந்த சிங்காரியிடம் தாங்கள் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்தபோது சிலரின் கைகள் அவளது கை விரல்களை உரசிப் பார்த்து சரசம் செய்தது. சிலரின் பார்வை போதை தரும் அவளின் அங்கங்களை பார்த்து பாதை மாறி பயணித்தது. வசீகரமான அவளின் முகம் அவர்களை வசியம் செய்தபடி இருந்தது.
அவர்களின் இருப்பு மாலைப்பொழுது வரை அந்த ஆலமரத்தடியிலேயே நீடித்தது. அவர்கள், இந்தப் பிரியாமணியை பிரிய மனம் இல்லாமல், பொறுமையாய் அங்கேயே காத்திருந்து, பின் பேருந்தில் ஏறி, நிதானமாய் பயணித்து, இரவு தங்கள் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.
இன்று விடியற்காலை:
அந்த நான்கு விவசாய கூலிகளில், மூன்றுபேரை சுமந்தபடி ஒரு குட்டி யானை ஒன்று தஞ்சை ராஜா மிராசுத்தார் மருத்துவமனைக்குள் ஆவேசமாக நுழைந்து மெல்லிய சினுங்களுடன் நின்றது. அந்த மூன்று விவசாய கூலிகளை விரைந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்களை நேராக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்த, அந்த குட்டி யானை அங்கிருந்து அந்த மூவரையும் ஏற்றிக்கொண்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் ஆர்ப்பாட்டத்துடன் நுழைந்து பின் அமைதியாக நின்றது. .
இன்று காலை:
முகுந்தனைத் தவிர மற்ற மூவரும் மருத்துவக் கல்லூரியின் தனிப்பிரிவில் அலங்கோலமாக கிடந்தார்கள். ஒருவன் குடலே வெளிவந்து விடும் அளவிற்கு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். இன்னொருவனுக்கு மயக்கமும் வாந்தியும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது. மற்றொருவன் வயிற்று வலியால் மிரண்டு போய் ஒரு மூலையில் சோர்வுடன் சுருண்டு கிடந்தான்.
சில மருத்துவர்கள் அடிக்கடி அவர்களை வந்து பார்த்து விட்டு சென்று கொண்டிருந்தார்கள்.
“ கெட்டுப் போன கோழிக்கறியை சாப்பிட்டதனாலதான் நிலைமை இப்படி ஆயிருக்கு. இன்னும் ஒரு நாள் போனா தான் நிலைமை என்னன்னு சொல்ல முடியும். அதுவரைக்கும் பொறுமையா நிதானமா இருங்க”என்று மருத்துவர்கள் சொல்ல விவசாய கூலிகளின் குடும்பத்தினரில் சிலர் ஓவென்று கதறிய அழ ஆரம்பித்தார்கள்.
அவர்களது சொந்த பந்தங்கள் மருத்துவ கல்லூரிக்கு அவர்களை பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு உள்ளே சென்று பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் வெளியே நின்று ஜன்னல் வழியே பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.
விவசாயக் கூலிகளின் குடும்பத்தினர் கவலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கிடந்தார்கள். அவர்களின் கண்கள் பரிதாபத்தை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தது.
அவர்கள் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள்,
”இனிமேல் கோழிக்கறியை சாப்பிடறத குறைச்சுக்கங்க. அப்படி சாப்பிடணும்னு விருப்பப்பட்டால் சமைச்ச உடனே ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்க. மறுவேளையோ மறுநாளோ வச்சிருந்து சாப்பிட்டீங்கன்னா இந்த மாதிரி சிக்கல் கண்டிப்பா வரும். உயிருக்கே ஆபத்தா கூட முடியலாம். ஆனா ஆட்டுக்கறியோ மீனோ நீங்க சூடு பண்ணி சூடு பண்ணி நாலு நாள் வச்சிருந்து சாப்பிட்டா கூட ஒன்னும் பிரச்சனை வராது. ஆனா கோழிக்கறிய சாப்பிடும்போது மட்டும் நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்” என்று சொல்லிவிட்டு மருத்துவர்கள் வெளியேறி போனார்கள்.
இப்போது:
மரணப் படுக்கையில் இருந்து மீண்டு வந்த முகுந்தனின் நண்பர்கள் கண்விழித்து பார்த்தார்கள். அவர்கள் முகுந்தனைப் பார்த்து முனகியபடி சொன்னார்கள்.
“டேய் முகுந்தா, நீதாண்டா புத்திசாலி. நீ கோழிக்கறி வேணாம்னு வெறும் பிரியாணியை சாப்பிட்டுட்டு தப்பிச்சு கிட்ட . ஆனா நாங்க அந்த சிறுக்கிய பார்த்து அவ அழகுல மயங்கி போயி அந்த நாசமா போன கோழிக்கறியை தின்னுட்டு இப்ப சீரழிகிறோம். நீ சும்மா இருக்காதடா. நாங்க இப்படி வீணா போய் கிடக்கிறதுக்கு காரணமான அந்த சிறுக்கி மவளே இப்பவே போயி நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வாடா” என்று அவர்கள் முகுந்தனிடம் ஆத்திரத்தை உமிழ்ந்தார்கள்.
நண்பர்களின் ஆவேசத்தை சுமந்து கொண்டு முகுந்தன், ஆலமரத்தடிக்கு அதிவேகமாக வந்து சேர்ந்தான்.
ஆனால் நேற்று அவனையும் அவனது நண்பர்களையும் தனது மாய வலையில் சிக்க வைத்த, அந்த மயக்கும் மன்மத குமாரியை , அங்கே காண முடியவில்லை.
நேற்று அவர்கள் சாப்பிட்ட அதே இடத்தில் வாய் அகன்ற அலுமினிய பாத்திரமும் , அவளது மேஜை நாற்காலிகளும், சிதைந்தும் உருக்குலைந்தும், சாலை ஓரத்தில் சவம்போல் கிடந்தன.
“நண்பர்களுக்கு ஏற்பட்டது போல் இங்கேயும் பக்கத்து ஊர்களிலும் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக, அவளுக்கு எதிராக சில எதிர் நடவடிக்கைகள்…. “
அவன் புரிந்து கொண்டான். இப்போது அவன் மனம் அவளுக்காக வருத்தப்படவில்லை.
அந்த அழகிய இளம் தேவதையை, நேற்று மதியம், அவர்கள் எப்படி ஆசையோடும் ஆவலோடும் இமை கொட்டாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்களோ, அதே போல, அப்போது இரண்டு தெரு நாய்கள், அந்த சிதைந்தும் சீர் அழிந்தும் போன அலுமினிய பாத்திரத்தையே ஆவலோடு வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தன.
