பஞ்சாயத்து முடிந்த மறுநாள் முதல் குண சுந்தரத்தை பார்க்கின்ற ஒவ்வொருவரும் அவரை வினோதமாக பார்த்தார்கள். சிலர் அமைதியாகச் சென்றார்கள். சிலர் ஆவேசமாக வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு சென்றார்கள்.
இப்படி பலரும் பலவிதமாக அவரிடம் நேருக்கு நேராகவும், பக்கத்தில் இருந்தபடியும், சற்று தூரத்தில் இருந்தபடியும் அவரை வசைபாடியதை எல்லாம் குணசுந்தரம் பொறுமையாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார். . அவர் செய்தது மோசமான செயல் என்பது அவருக்கே தெரியும். அதனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்.
“இதுவரைக்கும் ஒரு தூசு துரும்புக்கு கூட கெடுதல் செய்ய நினைக்காத ஆளு, ஏதோ சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு. இதுக்கு போய் இந்த ஊர் ஜனங்கள் எல்லாம் இப்படி கண்ணா பின்னான்னு பேசுறது எல்லாம் என்ன நியாயம்?”
இப்படி சிலர்.
“அவர் செஞ்சது தப்புதான். அதுக்கு தான் தண்டம் கொடுத்துட்டாரு. அப்புறம் ஏன் இந்த பயலுக அதையே சொல்லி சொல்லி குத்தி காமிச்சுக்கிட்டு இருக்கானுங்க.!” என்றும் சிலர்.
“இப்ப எல்லாரும் ஆடு மாடுகளை ஒழுங்கா வளர்க்கிறது இல்லை. ஆடு மாடு வச்சிருக்கிறவங்க, பொறுப்பா ஆள் இருந்து மேய்க்கணும். இல்லன்னா ஆடு மாடுகள விற்றுட்டு அக்கடான்னு கிடக்கணும்” இப்படி சிலர் குண சுந்தரத்திற்கு சார்பாகவும் சாதகமாகவும் பேசத்தான் செய்தார்கள்.
குணசுந்தரத்திற்கு இரவு நேரங்களில் தூக்கம் வருவது மிகக் கடினமானதாக இருந்தது.
***
சம்பவத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு, ஊரின் மையத்தில் தேர்முட்டியின் அருகேயுள்ள மேடையில் ஊர்ப் பஞ்சாயத்து கூடியிருந்தது. குண சுந்தரம் மற்றும் பூபதி ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பிறகு, பஞ்சாயத்தார்கள் இறுதியில் குண சுந்தரம் ₹10 ஆயிரத்தை அபராதமாக ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கினர். அதனை குணசுந்தரத்தின் நண்பர்கள் 10 பேர் அந்த அபராத தொகையை உடனே தங்கள் நண்பர்களிடம் வசூலித்து பஞ்சாயத்தாரிடம் அதனை ஒப்படைத்தனர்.
ஆனாலும் அந்தக் கொடூரமான செயல் அவரைப் பல நாட்களாக வாட்டி வதைத்தது. தான் இழைத்த பெரும் தவறு, ஒரு குற்றவுணர்வின் கனமாக அவர்மீது அமர்ந்து, அவரை நிம்மதி இழக்க செய்தது. அவரால் சரியாகச் சாப்பிட முடியவில்லை; இரவுகளில் தூக்கமற்ற ஏக்கம் கண்ணீராக வடிந்தது.
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து உள்புறமாக பிரிந்து செல்லும் சிறிய சாலையின் முடிவில் புது ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் அம்மனூர் கிராமம். அங்கே இன்னமும் பழமை மாறாத சில பழக்கவழக்கங்கள் நடைமுறையில் இருந்து கொண்டு வருகிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். .
அப்படிப்பட்ட அந்த கிராமத்திலும் சமீபத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குணசுந்தரம் 38 வயதை கடந்த ஓர் இளம் விவசாயி. தந்தையிடமிருந்து பெற்ற ஒரே ஒரு ஏக்கர் நிலம்தான் அவர் வாழ்வின் ஆதாரம். அந்த மண்ணைத் தனது தாயென மதித்து, அதில் வியர்வையையும் உழைப்பையும் முதலீடு செய்து, கரும்புக் கன்றுகளை நடவு செய்திருந்தார்.
கன்று நட்ட நாள் முதல், அதனைப் பார்த்துப் பார்த்து நீர் பாய்ச்சி, களை எடுத்து, பாசத்தோடு வளர்த்தார். கரும்புப் பயிர்கள் ஏற்கெனவே ஒரு அடி உயரத்தைக் கடந்து, பச்சைப் பட்டுப் போர்த்தியதுபோலப் பசுமையாகக் காட்சியளித்தன.
அவர் எவரிடமும் வம்பு தும்புக்குச் செல்லாத நல்லவர் என்ற நற்பெயருக்குச் சொந்தக்காரர்.
***
இருபது நாட்களுக்கு முன், மாலை நேரம், வயலைப் பார்வையிடச் சென்றபோதுதான் அந்த முதல் அதிர்ச்சி. வயலின் ஓரத்தில், சிவலை நிறப் பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. ஐந்தாறு சென்ட் நிலப்பரப்பில் உள்ள கரும்புக் கன்றுகளை அது தின்றழித்திருப்பதை கண்டு குண சுந்தரத்திற்கு ரத்தம் சூடேறியது.
கோபத்துடன் ஒரு கல்லை எடுத்து வேகமாக வீசியெறிய, பசுவானது வேலியின் சிறிய இடைவெளிக்குள் புகுந்து வெளியேறி ஓடியது.
வயலின் சேதத்தைக் கண்ணால் அளந்தபோது, குண சுந்தரத்திற்கு மனதில் கோபத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
மறுநாள் அதே நேரம், அதே வயல், அதே பசு. அதுவும் அதே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அவரின் கோபம் அன்று இன்னும் அதிகமானது. கண்களில் செந்நிறமேறியது. ஒரு தடித்த குச்சியால் மாட்டை ஓங்கி அடித்தார். பயந்துபோன பசு மீண்டும் தப்பி ஓடிவிட்டது.
அடுத்த நாள் அவர் ஒரு வெறியுடன் வயலுக்குச் சென்றார். இன்று அதனை எப்படியாவது விரட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில், பசு வயலுக்குள் நுழையும் வழியின் அருகில், ஒரு மர நிழலில், கூர்மையான குத்துக் கோலுடன் காத்திருந்தார்.
வழக்கம்போல் அந்தச் சிவலைப்பசு மேய்ச்சலுக்கு வந்தது. குண சுந்தரம் தன் கோபத்தை முழுமையாகத் திரட்டி, அந்தக் குத்துக் கோலை மிக வேகமாகப் பசுவின் மீது வீசியெறிந்தார். அந்தக் கோலானது சிவலை பசுவின் அடிவயிற்றில் ஆழமாகப் பதிந்தது.
பசு அலறியடித்து, “ம்மா… மா… மா…” என்று தீனமாகக் கத்தியவாறே கீழே சரிந்தது. அந்தக் குரல் குண சுந்தரத்தை பதறவைத்தது. தான் ஏதோ பெரும் தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்த அவர், நிலைதடுமாறி அப்படியே சரிந்து மயக்கமடைந்தார்.
சிறிது நேரத்தில் தெளிவடைந்த அவர், சிலரின் உதவியோடு காயமடைந்த மாட்டைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார்.
பக்கத்து ஊரில் இருந்து நாட்டு வைத்தியரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்தபோதுதான், அந்தச் சிவலைப்பசு சினை பசுவாக (கர்ப்பமாக) இருக்கின்றது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. குற்றவுணர்வு கூர்மையான முள்ளாக இதயத்தில் பாய்ந்தது.
மறுநாள், மாட்டின் உரிமையாளர் பூபதி விவரமறிந்து குண சுந்தரத்தை பார்க்கவந்தார். அவர் கோபப்படாமல், “வயலில் மேய்ந்தது மாட்டின் தவறுதான். எப்படியாவது மாட்டைச் சரிப்படுத்திக் கொடுங்கள், அது போதும்” என்று நிதானத்துடன் கூறிச் சென்றார்.
பதி மூன்று நாட்களாக, பல மருத்துவர்கள், மருந்துகள், மூலிகைச் சாறுகள் என எல்லா முயற்சிகளும் நடந்தன. பதினாறாம் நாள் பசு மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தபோது, குண சுந்தரத்திற்கு பெருமகிழ்ச்சி.
அவர் பூபதிக்குத் தகவல் கொடுக்க, உரிமையாளர் வந்து சிவலை பசுவை ஓட்டிச் சென்றார்.
ஆனால், அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை. சிவலை பசு இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. “ஒரு வாயில்லா ஜீவனை, அதுவும் ஒரு சினைப் பசுவின் உயிரைக் குத்துக் கோலால் கொன்றுவிட்டோமே” என்ற குற்றவுணர்வு குண சுந்தரத்தை மீண்டும் மீண்டும் வாட்டி வதைத்தது.
***
சில நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது, கரும்புப் பயிர்கள் மெல்லத் துளிர்விட்டு, நல்ல விதமாக வளர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அதைக் கண்ட அவருக்கு மகிழ்ச்சி துளியும் ஏற்படவில்லை.
மாறாக, இந்தப் பயிர்களுக்காக ஓர் உயிரை, ஒரு தாய் பசுவின் உயிரை போக்கிவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவரது கைகளைக் கடுமையாக நடுங்கச் செய்தது. அந்தச் சிவலை பசுவின் ஆழமான வேதனையான, “ம்மா… மா…” என்ற அந்தக் குரல், கரும்பு வயலின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் புறப்பட்டு அவரது காதுகளுக்குள் நுழைந்து அவரை கதி கலங்கச் செய்து கொண்டிருந்தது. அவர் தள்ளாடித் தடுமாறியபடியே வயலின் ஓரத்தில் தரையில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தார். ஆங்காரமான அவரது அழுகையின் சிதறல்கள் கரும்பு வயல் முழுவதும் ரீங்காரமாய் எதிரொலித்துக் கொண்டு இருந்தது வெகு நேரம்.
