தீபாவளிக்கு மறுநாள் அந்த விபத்து நடந்தது. நாகராஜசோழன் தனது இருசக்கரவாகனத்தில் வரும் போது, யாரோ ஒருவன் திட்டமிட்டு, அடுத்தடுத்து தூக்கி போட்ட இரண்டு நாட்டு வெடி குண்டுகள், அவர் கண்களுக்கு அருகில் வெடித்ததில், அவரது கண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இனி அவருக்கு பார்வை கிடைப்பது சந்தேகம்தான் என்பது போல மருத்துவர்கள் அப்போது பேசிக் கொண்டார்கள்.
அந்த விபத்து நடந்து சரியாக 29 நாட்களும், நாகராஜசோழனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடந்து 25 நாட்களும் கடந்து விட்டது. அவருடன் வேலை பார்க்கும் அவரது நண்பர் பலராமன்தான் தினமும் அவரை மருத்துவமனையில் வந்து பார்த்துக் கொள்கிறார்.
அப்போது நாகராஜசோழன் அரை மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க அவர் மனதில் 13 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள், ஒன்றன்பின் ஒன்றாக ஒரு திரைப்படம் போல் சில திருப்புமுனைகளோடு ஓடிக்கொண்டிருந்தன.
000000
ஆகாய வெளியில் மஞ்சள் நிறத்தில், சூரியன், மேற்கித்திசையை நோக்கி, மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. .
மாலை 6 மணிக்கு முன்பாக, நாகராஜ சோழன் வழக்கமாக குளிக்கின்ற புங்கமரத்தடி படித்துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் குளித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். அவருக்கு அங்கே குளிக்க விருப்பமில்லை.
அவர் மேலும் நடந்து இரண்டாவது படித்துறையை நெருங்கினார். அது வெறிச்சோடி இருந்தது.
அப்போது சூரியன் மங்கி இருளை லேசாக கைப்பற்றிக் கொண்டிருந்தது.
நாகராஜசோழன் அவசரமாக தனது மேலாடையை கழற்றி படித்துறையில் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு, அடிப்படை உடையோடு நின்று, இடுப்பளவு தண்ணீரோடு ஓடிய ஆற்றை ஒருமுறை பார்வையிட்டார்.
அவர் ஆற்றில் பாயத் தயாரான அந்த கணப்பொழுதில், பத்தடி தூரத்தில் இருந்து, ஒரு பதட்டமான கூச்சல் – “.ஐயோ என்னை காப்பாத்துங்க.”
அவர் பார்வை சென்ற திசையில், ஓர் உருவம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உடனே வேகமாக தண்ணீரில் பாய்ந்து, சிறிது தூரம் நீந்தி, அந்த உருவத்தை அடைந்தா ர். தலைமுடியைப் பிடித்து தோளிலே கிடத்தி படித்துறைக்கு இழுத்து வந்தார். அது ஓர் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமி. . அவளை தன் முதுகில் ஏற்றி , படிக்கட்டுகளில் ஏறி கரையோரத்தில் சிறுமியை இறக்கி வைத்தார்.
சிறுமியின் வாயிலிருந்து உள்ளே சென்றிருந்த ஆற்று நீர் மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. சிறுமி இன்னும் உயிரோடு இருப்பதை அறிந்து , அவர் நிம்மதி அடைந்தார். சிறுமி கண்களைத் திறந்து பார்த்தாள். அவளது கண்களில் பயம் பக்குவமாய் கலந்திருந்தது.
“ பயப்படாதடா. உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி. இனி உனக்கு எதுவும் ஆகாது, “ என்று அவர் அச்சிறுமிக்கு ஆறுதல் சொன்னார்.
சிறுமி திடீரென மயங்கி விழுந்தாள். அவர் கலங்கிப் போனார். அப்போது தூரத்திலிருந்து சிலர் அவர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர் அவளை புல் படர்ந்த இடத்தில் படுக்க வைத்தார்.
ஒரு கனப்பொழுதில், கிழக்குப் பக்கத்திலிருந்து வந்த யாரோ, அவரை ஆவேசமாக தாக்க, அவர் முதுகில் பலத்த தடியடி விழுந்தது. அவர் அதிர்ந்து வலியால் திணறினார். திரும்பிப் பார்க்கும் முன்பே, இன்னொரு அடியும் விழுந்தது. வலி தாங்க முடியாமல் நாகராஜ சோழன் மயங்கிப் போனார்.
அவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் இருப்பது ஓர் அரசு மருத்துவமனை என்பதை உணர்ந்தார். அது குழந்தைகளும் பெரியவர்களும் சிகிச்சை பெறும் ஒரு சிறப்பு மருத்துவ பிரிவு.
அந்த மருத்துவ அறையின் நடுப்பகுதியில் இருந்த கட்டிலில் அவர் படுத்திருந்தார். அருகில் அவர் காப்பாற்றிய சிறுமியும் இருந்தாள். அவளது கண்கள் வீக்கம் அடைந்தும் சிவந்தும் இருந்தன.
அப்போது சிறுமி திடீரென ஓவென்று கத்தினாள். கை கால்கள் எல்லாம் இழுத்தபடி அவள் வாயில் இருந்து நுரை தள்ளியது. உடனே அருகில் இருந்த செவிலியர்கள் ஓடிவந்து அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
மறுநாள், விடியற்காலை 5 மணிக்கு நாகராஜசோழன் படுக்கையை விட்டு எழுந் தார். அவரால் நம்ப முடியவில்லை. பக்கத்தில் இருந்த அந்த சிறுமி கட்டில்களுக்கு இடையே இருந்த நடைபாதை இடைவெளியில், அழகாக, ஆடிப்பாடி நடனமிட்டு கொண்டிருந்தாள். அருகில் இருந்த பெரியவர்கள் அதனைப் பார்த்து ரசித்தபடி இருந்தனர்.
நாகராஜசோழன் ஆனந்தமாய், சிறுமியின் அருகில் சென்று, அவளை அப்படியே தூக்கி கொண்டார். அவள் கன்னங்களில் முத்த மழை பொழிந்து சந்தோசப்பட்டார். அந்தச் சிறுமியும் அவர் கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள்.
“ உன் பேர் என்னடா கண்ணு? ”
“ என் பெயரா – பரணி. “
“அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றாங்க?”
“அம்மா போன வருஷம் செத்துப் போச்சு. அப்பா மட்டும்தான் இருக்காங்க. அம்மா இறந்து போன பிறகு அவரு மனசு உடைஞ்சு குடிக்க ஆரம்பிச்சுட்டாரு. இப்ப கொஞ்ச நாளா அளவுக்கு அதிகமாக குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துகிட்டாரு ”
நாகராஜசோழனுக்கு பரணியின் மேல் பரிதாபமும் பாசமும் அதிகரித்தது.
“ சரி இவ்வளவு நல்லா பாடுற ஆடுற. இதெல்லாம் யாரு உனக்கு சொல்லி கொடுத்தா? ”
“ எல்லாம் அப்பா தான். அவர்தான் எனக்கு பாட்டெல்லாம் சொல்லி கொடுத்தாரு. அப்பா ரொம்ப நல்லவரு. அம்மா செத்துப் போன பிறகுதான் அப்பா மாறிட்டாரு. அப்பா பாவம். “
“ உங்க வீடு எங்க இருக்கு? “
“.இங்க பக்கத்துலதான். நடந்தே போயிடலாம். இப்ப வீட்ல ஒன்னும் இல்ல. குட்டி சுவருதான் இருக்கு. எனக்கு இனிமே என்ன பண்றதுன்னு புரியல“ அவள் கண்களில் இருந்து கண்ணீர் சில
சொட்டுக்கள் உதிர்ந்தது.
அப்போது அங்கிருந்த பெரியவர்கள், செவிலியர்கள், நாகராஜ சோழன் அனைவரின் கண்களும் கலங்கிப் போனது.
இக்கட்டான நிலையிலும் அவளது நயமான பேச்சு அவரை நளினப்படுத்தியது.
மறுநாள் காலை, பரணியின் ஊரைச் சேர்ந்த ஒரு வயதானவர் அவர்களைப் பார்க்க வந்திருந்தார். அவர் நாகராஜ தோழனை பார்த்து,
“ தம்பி, இந்த பாப்பாவும், என் பேத்தியும் ஆத்தங்கரையில விளையாடிட்டு இருந்தப்ப, இந்த மாதிரி ஆயடுச்சுப்பா. அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டு இருந்தப்ப, இந்த பாப்பா ஆத்துல தவறி விழுந்திருச்சு. நல்லவேளை நீங்க வந்து காப்பாத்திட்டீங்க. என் பேத்தி எனக்கு இப்பதான் நடந்தத விவரமா சொன்னா. . அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.” என்று அந்தப் பெரியவர் நாகராஜசோழனின் ஒரு கையையும், பரணியின் ஒரு கையையும் பிடித்துக் கொண்டு, கண் கலங்கிய படி சிறிது நேரம் நின்றார். நாகராஜசோழன் அப்படியே கரைந்து கோனார்.
அன்று மதியம் பரணியின் ஊரைச் சேர்ந்த இரண்டு பையன்கள் வந்தனர். அவர்கள் நாகராஜசோழனிடம், மண்டியிட்டு அழுதனர்.
“அண்ணே எங்கள மன்னிச்சுக்கோங்க. அன்னைக்கு பரணிய நீங்க கடத்திக்கிட்டு போறதா தப்பா புரிஞ்சுகிட்டு உங்கள அடிச்சிட்டோம். எங்கள மன்னிச்சிருங்கண்ணே “ என்று மன்றாடினர்.
“ டேய் தம்பிகளா , நீங்க பரணி மேல வச்சிருக்கிற பாசம் அக்கறை எல்லாம் சரிதான். ஆனா எதையும் , விசாரிக்காம, அவசரப்பட்டு எதுவும் பண்ணாதீங்க, சரியா.”
“சரிங்க அண்ணே “ என்று சொல்லிவிட்டு அந்த பையன்கள் இருவரும் பரணியிடம் சொன்னார்கள்.
“ பாப்பா, உனக்கு இனி நல்ல காலம் தான். ஒரு கெட்டது நடந்தா, அதுக்கப்புறம் ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. அது உனக்கு இப்ப நடந்திருக்கு. இனி உனக்கு நல்ல காலம் தான். சரி வரட்டுமா பாப்பா,” என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
குறி சொல்பவர்கள், எதையோ குறிப்பாக சொல்வது போல அந்த பையன்கள் சொல்லிவிட்டு சென்றது, நாகராஜசோழன் மனதின் ஆழத்தில் அலை மோதிக் கொண்டிருந்தது.
000
கண் அறுவை சிகிச்சை முடிந்தபின்
இன்று தான் அவர் உலகின் வெளிச்சத்தை, தனது வீட்டு தோட்டத்திற்கு அருகே நாற்காலியில் அமர்ந்தபடி, மீண்டும் பார்க்கிறார்.
அப்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்று, தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பி வந்த பரணி, வீட்டின் முன்பு தெரு ஓரத்தில் இருக்கும் பெரிய வாசல் கதவை திறந்து கொண்டு, நாற்காலியில் அமர்ந்திருந்த நாகராஜ் சோழனை பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறு, ஒரு செல்ல நாய்க்குட்டியாய் மெல்ல உள்ளே நுழைந்தாள். அவள் முன்பு போல் இப்போது சிறுமியாக இல்லை. தனது படிப்பை பரவசமாய் முடித்துவிட்டு திரும்பிய பக்குவப்பட்ட ஓர் இளம் பெண். அவள் முகத்தில் நம்பிக்கையின் ஒளி; கண்களில் கடந்த காலத்தின் நிழல்.
அவளைப் பார்த்த நாகராஜசோழனின் உள்ளம் அனந்தமடைந்த போதிலும் அதனை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
ஆனால் அவளுடன் கூடவே அவளுக்குப் பின்னால் வந்த, பரணியை விட ஐந்தாறு வயது மூத்த, ஒரு அழகான பெண்ணை பார்த்தபின் ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருங்கிணைந்தபடி அவர் உள்ளத்தை நிறைத்தது.
“அந்தப் பெண் பரணிக்கு துணையாகவா அல்லது நாகராஜ சோழனின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காகவா?” என்ற கேள்வியை அவர் மனம் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தது. பதிலாக வெளி உலகம் ஒரு புது ஒளியை அவரது கண்களில் பிரதிபலித்தது.
அவர் பார்வை மீண்டும் தோட்டத்தின் பக்கம் சுழன்றது. அங்கு மாலை நேரத்து மஞ்சள் ஒளி, தோட்டத்தின் இருளை விலக்கி, தோட்டத்தை ரம்யமானதாக மாற்றிக் கொண்டிருந்தது. அது அவர் மனதிலும் மெல்ல பரவத் தொடங்கியது.
