“இன்னைக்கும் அவங்கதான் கொண்டுவந்துவிட்டாங்களா?”
“நீயும் டெய்லியும் கேக்குற. நானும் ஆமா ஆமான்னுதான் சொல்றேன். அவங்க வரலைனா நானே சொல்றேன்”
“வேணாம்னு சொன்னியா, இல்லையா?”
“சொன்னேன்டா… டெய்லியும்தான் சொல்றேன்.”
ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகின்றன. வனிதாதான் மாயாவை அலுவலகத்திலிருந்து அழைத்துவந்து வீட்டில் விடுகிறார். எனக்கு இதை எப்படி புரிந்துகொள்வது என்றே புரியவில்லை. ஒரு நாள், இரண்டு நாட்கள் என்றால் சரி. தினமும் யார் இப்படி உதவுவார்?! எதற்காக செய்கிறார்?!அதிலும் அவர் வீடு எங்கோ இருக்கிறது… அவர் வீட்டில் எப்படி இதற்கு ஒத்துக்கொள்கிறார்கள்? அவர் கணவர் எதுவும் சொல்வதில்லையா? அவரை மீறிச் செய்கிறாரா? அப்படி என்றால் எதற்காக செய்கிறார்? அவர் குடும்பத்தில் யாரும் எதுவும் சொல்வதில்லை என்றால் அது இன்னமும் புதிராக இருக்கிறதே…!
எனக்கு நாளாக நாளாக கேள்விகள் அதிகரித்துக்கொண்டே சென்றன. ஒருவர் தன்னலம் பார்க்காமல் உதவி செய்வதைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமாய் இருக்காது என இதற்கு முன்பு எனக்குத் தெரியாது. நான் அடிக்கடி இதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அப்படி ஒரு நாளில்தான் எனக்கு இந்த யோசனைத் தோன்றியது. அவருக்கு ஒரு கதையைக் கொடுத்துப் பார்க்கலாம். கதையின் முடிவு உருவாகி வரும்போது ஒருவேளை புரியவரலாம். வாழ்க்கையை அலசிப் பார்க்க புனைவைவிட சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்…
*
“எப்படி சுகம்?” என்று தாமஸ் கேட்டது எனக்குச் சட்டென்று புரியவில்லை. அவர் வருவதற்கு சற்று நேரம் ஆனதால் பொழுதைக் கழிக்க, வரும் வழியில் வாசித்த கெய்ட் ஷோப்பின் “ஒரு மணி நேரத்தின் கதையில் வரும் மனைவி கதாப்பாத்திரத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஆசிரியர் மிக சாதூர்யமாக கதையை எழுதியிருக்கிறார். கணவன், மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையைப் பற்றி அதிகம் அலசவில்லை. கணவனின் இறப்பிற்குப் பின் மனைவியின் மன நிலையை வைத்து ஒரு விளையாட்டு. ரசிக்கும் படிதான் இருந்தது எனினும் விளையாட்டு முடிந்தவுடன் அதிலிருந்து எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது இல்லையா? அதிலும் ஒரு பெண்ணின் மன ஓட்டம் என்று சொல்லிவிட்டாலே அதற்கு ஆதாரம் எல்லாம் வேண்டாம். அது துயரப்பட்ட உள்ளம் என்று சொன்னாலும் சரி, மகிழ்ச்சியான உள்ளம் என்று சொன்னாலும் சரி, பெரும்பாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பதால் உலகம் நம்பிவிடும். புத்திசாலித்தனத்தைப் பாராட்டலாம், ரசிக்கலாம் ஆனால் கொண்டாட முடியாது. ஆமாம். அது கொண்டாடப்பட வேண்டிய கதை இல்லை.
எனக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்து. எந்த ஒன்றைப் பற்றியும் உறுதியான நிலைப்பாட்டிற்கு வரும்வரை என்னால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை.
தாமஸ் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது உரைத்தது.
“நல்ல சுகம்” ஆப்ரிக்க இனத்தவரான அலெக்ஸ் தாமஸிடம் தமிழை நான் எதிர்பார்க்கவில்லை.
ஆச்சர்யம் மறையாத முகத்தோடு அவரைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம் “என் நெருங்கிய நண்பர் தமிழர்” என்றார் ஆங்கிலத்தில். “கொஞ்சம் பேசுவேன், அவ்வளவுதான்” என்று தமிழில் சொன்னார்.
“நன்றாகவே தமிழ்ப் பேசுகிறீர்கள்”
“நன்றி” இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.
“இங்கு நான் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து நிறைய தமிழர்களைப் பார்க்கிறேன். அது கூட எனக்கு கொஞ்சம் உதவுகிறது” அவர் பேசிக்கொண்டே என் தகவல்களை கணிணியில் ஏற்றிக்கொண்டிருந்தார். முடிந்த அளவு தமிழில் பேசுவதற்கு அவர் முயன்றுகொண்டிருந்தார்.
நான் சுற்றி ஒரு முறைப் பார்த்தேன். அந்த மொத்த அலுவலகமுமே 50 க்கு 50 இருக்கும். ஒவ்வொரு அலுவலருக்கும் கண்ணாடி மற்றும் மரப் பலகைகளைக் கொண்டு தனி அறைப் பிரித்துக்கொடுத்திருந்தார்கள். அனைவருக்கும் தனி தனிக் கணிணி. கணிணிப் பயன்பாடு பரவலாகிவிட்ட காலமென்றாலும் அங்கு இருந்தவை எல்லாம் உயர் ரகங்களாகத் தெரிந்தன. எனக்கு அந்த இடம் சாய்பாபா கோவில்களை நினைவுப்படுத்தியது. சமீப காலமாக எங்கு பார்த்தாலும் பாபா கோவில்கள் தோன்றத் தொடங்கியிருக்கிறன. விபூதி, எண்ணெய் வாசம் வீசாத பளபளக்கும் அக்கோவில்களில் மனம் உருகி எதையும் வேண்ட முடிந்ததில்லை. எத்தனை தடவைப் போனாலும் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் மேலாளரிடம் சம்பிரதாயமாக அறிமுகப்படுத்திக்கொள்ள செல்வதைப்போலவே இருக்கும். அப்படி ஒரு எண்ணத்தைத்தான் அந்த பீல் அலுவலகமும் தந்தது.
தாமஸ், ஒவ்வொரு தகவலாய் என்னிடம் உறுதிபடுத்திக்கொண்டே வந்தவர் நாடு இந்தியா என்றிருந்ததைப் பார்த்துவிட்டு “நீங்கள் இந்தியரா?” என்று கேட்டார்.
“ஆமாம்”
“ஓ… நான் இலங்கையராக இருப்பீர்கள் என்று நினைத்துவிட்டேன். என் நண்பரைப் பற்றி சொன்னேன் அல்லவா, அவர் இலங்கை.”
“எனக்குப் புரிந்தது”
“எப்படி?
“இந்தியத் தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது. எப்படி சுகம் என்று நீங்கள் கேட்டபோது அதனால்தான் எனக்கு உடனே புரியவில்லை. இலங்கையில் அப்படி கேட்பார்களோ, இல்லையோ இந்தியாவில் அப்படி கேட்பதில்லை. பொதுவாக, எப்படி இருக்கீங்க?, நல்லா இருக்கீங்களா? என்று கேட்போம்”
“ஓ… குட் குட்”
அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசிவிட்டு மீண்டும் கணிணியில் பார்வையை ஓட்டினார். தாமஸிற்கு கணீரென்ற குரல். அந்த இடத்திற்கு சற்றே பொருந்தாதக் குரல் என எண்ணிக்கொண்டேன்.
“உங்கள் சுயவிவரப் பக்கம் தயார்”
“நன்றி”
“ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாங்கள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம். அதில் அந்த மாத நிகழ்ச்சிகளுக்கான அட்டவணை இருக்கும். நாங்கள் இங்கு பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். புதிதாக வருபவர்களுக்கு உதவுவது நோக்கம். கனடாவில் நீங்கள் எப்படி நேர்காணல்களை அணுகவேண்டும், ஆங்கில மொழிப் பயிற்சி, உங்கள் ரெஸ்யூம் மேம்படுத்துதல் என நிறைய உள்ளன. உங்களுக்குத் தேவையானவற்றில் கலந்துகொள்ளுங்கள். நிச்சயம் உதவிகரமாக இருக்கும். சில நிகழ்ச்சிகளில் இங்கு, எங்களின் உதவி பெற்று நல்ல நிலைக்கு வந்தவர்கள் வந்து பேசுவார்கள். நீங்கள் அது போன்ற நிகழ்ச்சிகளைக் கட்டாயம் தவறவிடக்கூடாது. நிறைய புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எவ்வளவு மனிதர்களைத் தெரிந்து வைத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது“
தாமஸின் குரலில் அவர் சொல்லுவதையெல்லாம் கேட்கும்போது ஒரு புதியத் தொழில் நுட்பத்தைப் பற்றிப் பாடம் கேட்பதுபோல் இருந்தது. குரல் மட்டுமில்லை. ஆளும் ஆஜானுபாகுவாகத்தான் இருந்தார். மிக நன்றாக உடை அணிந்திருந்தார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து இங்கு வந்திருப்பாரா அல்லது இங்கு பிறந்து வளர்ந்தவரா எனக் கேட்க விரும்பினேன். புதிய இடங்களும், புதிய மனிதர்களும் கேள்விகளைக் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். ஏன்? எல்லாவற்றையும் மறந்துவிட்டு அல்லது எதையுமே கேட்காமல் புதிதாக ஒன்றைத் தொடங்க, தெரிந்துகொள்ள முடியாதா? கதைகளைப்போல் வாழ்க்கைக்கு ஒரு தொடக்கம், ஒரு இடைவேளை, ஒரு முடிவுதான் இருக்க வேண்டுமா?
“முகிலன்? என்ன பலமாக யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது”
அவர் எத்தனை முறை கூப்பிட்டாரோ தெரியவில்லை.
“மன்னிக்கவும்… எதோ யோசனையில் இருந்துவிட்டேன்”
“சொல்லுங்களேன். நானும் தெரிந்துகொள்கிறேன். நமக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. “
ஒரு பெரிய கதைக் கேட்கத் தயாராகும் தோரணையோடு இருக்கையில் நன்றாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்தார். மனிதர்களுக்குக் கதைக் கேட்க எப்போதுமே அலுப்பதில்லை என்பது உண்மைதான். வயது வித்யாசமின்றி எல்லோருமே கதை கேட்க விரும்புகிறார்கள். மொழி, இடம், நேரம் ஆகியவை ஒத்துழைத்தால் உடனேயே கதையொன்றைச் சொல்லவோ, கேட்கவோ தொடங்குகிறார்கள். கண்கள் விரிய என் முன் உட்கார்ந்திருக்கும் தாமஸிற்கு நான் என்ன கதையைச் சொல்ல முடியும். ஒருவேளை நான் சொல்லும் கதை அவருக்கு சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? தினமும் பலரைச் சந்திக்கும் மனிதருக்குப் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் என்னால் எப்படி ஒரு கதையைச் சொல்ல முடியும்? அதிகம் கேள்விகளுக்கு இடம் அளிக்காத ஒன்றைச் சொல்லவிடவேண்டியதுதான் என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
“பெரிதாக ஒன்றும் இல்லை. புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாமே புதிது, அதோடு வேலை வேறு தேட வேண்டும்… எல்லாவற்றையும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு படபடவென அடித்துக்கொள்கிறது.”
நான் முடிப்பதற்கு முன்பே தாமஸ் இடைமறித்தார். “இல்லை இல்லை எனக்கு நீங்கள் சொல்வது நன்றாகப் புரிகிறது.” ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு அவர் கணிணியில் மீண்டும் ஏதோ செய்தார்.
எனக்கு தாமஸ் தொடர்ந்து சிறு சிறு ஆச்சர்யங்களைத் தந்துகொண்டே இருந்தார். இந்த இடத்தில் என்ன சொன்னால் அலுப்பூட்டுமோ அதைச் சொன்ன பிறகும் மனிதர் தொடர்ந்து பேச விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை.
“நீங்கள் இப்போது அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டுமா? இப்படிக் கேட்பதற்கு மன்னிக்கவும். நான் உங்களைச் சந்தித்த பின் எனது மதிய உணவிற்கு நடைக்கு செல்லலாம் என்றிருந்தேன். சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது என் பழக்கம். நீங்கள் விரும்பினால் நாம் இப்போது நடைக்கு செல்லலாம். நான் அதன் பிறகு என் உணவுக்குச் செல்கிறேன்”
வீட்டிற்குப் போய் என்ன செய்யப்போகிறோம் என நானும் ஒத்துக்கொண்டேன்.
அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது நல்ல வெளிச்சமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும். வெளிச்சம் இருந்ததே தவிர வெயில் கொஞ்சம் கூட உரைக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும். இதற்கே குளிருகிறது….
தாமஸ் மிகப் பொறுமையாக நடந்தார். எனக்காக அப்படி நடக்கிறார் என்று தோன்றியது. இங்கு வருவதற்கு முன் எனக்கு நானே சொல்லிக்கொண்ட தைரியம் இதுதான்: வந்தால் மலை, போனால் கதை. ஒருவேளை என் வாழ்க்கையின் கனடியப் பகுதி ஒரு கதையானால் நான் தாமஸிடமிருந்துதான் தொடங்குவேன். “ஆறடிக்கும் அதிகமான உயரத்துடனும், கட்டுமஸ்தான உடலுடனும் இருந்த ஆப்ரிக்க கனடியருடன் நான் அன்று மதியம் நடந்து செல்லத் தொடங்கினேன்….”
சிறிது தூரம் கூட நடந்திருக்க மாட்டோம். அங்கே பாருங்கள் என ஒரு வீட்டின் முன் இருந்த கொடியைக் காட்டினார். சிறிய கொடிதான். பச்சைப் பசேலென்று இருந்த புற்களுக்கு நடுவே தலையை எட்டிப் பார்ப்பது போல் நின்றுகொண்டிருந்தது. அழகாக இருக்கிறது என்று சொல்ல வாயெடுக்கும்போதுதான் கொடியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைக் கவனித்தேன். “ஃபக் ட்ரூடோ” என்று எழுதயிருந்தது. தாமஸ் சிரித்துக்கொண்டே “கனடாவிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்றார்.
“நான் எப்படி தொடங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக இந்தக் கொடியைப் பார்த்தோம். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், முகிலன்?”
“என்ன சொல்வது? சரியா, தவறா என்று கேட்கிறீர்களா?”
“பொதுவாக சொல்லுங்கள். உங்களுக்கு அந்தக் கொடியைப் பார்த்தவுடன் என்ன தோன்றியது? என்ன நினைத்தீர்கள்?”
“இங்கு பயமில்லாமல் இப்படி எல்லாம் பொதுவெளியில் பேச முடியும் போலிருக்கிறது என்று நினைத்தேன்“
“சரிதான். நம் நாடுகளை ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் அதிகம். சொல்லப்போனால் எல்லாமே அதிகம்தான். அதிகமான சுதந்திரம், அதிகமான வாய்ப்புகள், அதிகமான அழகு, அதிகமான குளிர் என நம்மை எப்போதும் சோதித்துக்கொண்டே இருக்கும் நாடு இது.”
தாமஸ் தொடர்ந்து பேசினார்.
அமெரிக்காவை ஒப்பிட கனடா எவ்வளவு பாதுகாப்பான நாடு, அமைதியான நாடு, மக்கள் எவ்வளவு அன்பாய்ப் பழகுவார்கள் என நிறைய பேசினார். எனக்குப் பாதி காதில் விழுந்தன. காதில் விழுந்தனவற்றிலும் பாதிதான் தலைக்குச் சென்றன. “ஃபக் ட்ரூடோ” கதையின் தொடக்கம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். முதல் வரியிலேயே வாசகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடலாம்
“முகிலன்”
“ம்ம்?”
“நீங்கள் இன்னமும் யோசித்துக்கொண்டே வருகிறீர்கள் என்று புரிகிறது. என் இலங்கை நண்பரைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாக சொல்லட்டுமா? ஒருவேளை அவரின் கதை உங்களுக்கு நெருக்கமாக இருக்கலாம்.”
“சரி”
“அவர் பெயர் வனிதா”
“வனிதாவா?”
“ஆமாம். என்னாயிற்று?
“இல்லை. நீங்கள் நண்பர் என்று சொன்னபோது… ஒன்றுமில்லை… நீங்கள் சொல்லுங்கள்”
அவர் என்னை ஒரு நொடி புரியாமல் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.
“வனிதா வவுனியா என்னும் இடத்திலிருந்து கனடாவிற்கு தொன்னூறுகளின் ஆரம்பத்தில், பத்தொன்பது வயதில் வந்திருக்கிறார். அவர் இங்கு வந்த சேர்ந்த கதையை மட்டுமே ஒரு திரைப்படமாக எடுக்கலாம். அத்தனை சாகசம், அபாயம், அதிர்ஷ்டம் நிறைந்த கதை அது.
வனிதாவின் உயரம் அதிகபட்சமாக ஐந்தடி இருக்கும். இந்த விபரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தன் மகனோடும், கணவரோடும், அவரின் பெற்றோர் வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருக்கிறார். அன்று வனிதாவின் தந்தை வீட்டிற்கு வெளியே கிணற்றடியில் குளித்துக்கொண்டிருக்கையில் குண்டுகள் விழும் சத்தம் கேட்கத்தொடங்குகிறது. என்ன செய்வதென்று சுதாரிப்பதற்குள் இறந்துவிடுகிறார். சத்தம் கேட்டு முதலில் வெளியே வந்து பார்த்த வனிதா வீட்டிற்குள் ஓடி செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல, அவரின் அண்ணனும், அம்மாவும் வெளியே ஓடி வருகிறார்கள். அவர்கள் மேலும் குண்டு விழுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமும் நடந்து முடிந்துவிடுகிறது. வீட்டைச் சுற்றி குண்டுகள் விழத்தொடங்குகின்றன. உள்ளேயே இருப்பதா, வெளியே செல்வதா எனத் தெரியாத சூழல். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வனிதாவின் குடும்பம் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ தெரியவில்லை. பின் கொஞ்சம் இடைவெளி கிடைத்தவுடன் வீட்டிற்குப் பின் பக்கம் இருந்த ஆறடி சுவரை ஏறிக் குதித்து வனிதா முதலில் வெளியேறியிருக்கிறார். பின் அவர் கணவரும் தப்பித்துவிடுகிறார். வீட்டை விட்டு வெளியே வந்தாயிற்று ஆனால் எங்கு செல்வது, எங்கு பார்த்தாலும் தீப்பற்றி எரியும் வீடுகள்; மீண்டும் எப்போது வேண்டுமானலும் தலையில் குண்டு விழலாம் என்ற சூழல்; அப்போது சந்திரனை சந்திக்கிறார்கள். சந்திரன் அவரின் பக்கத்து வீட்டுக்காரர். இவரை விட இரண்டு வயது மூத்தவர். அவர் வனிதாவையும், அவர் கணவரையும் அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சந்திரனின் தந்தை வனிதாவையும், அவர் கணவரையும், சந்திரனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கொழும்பிற்குப் போய், பின் அமெரிக்கா வந்து, அமெரிக்காவிலிருந்து தரை வழியாக கனடாவிற்குள் வருகிறார்கள். “
“முகிலன், வனிதாவைப் போல் பல ஆயிரம் பேர்கள், பல லட்சம் பேர்கள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பீல் அலுவலகத்தில் மாதாந்திர கூடுகைகளில் உக்ரைனில் இருந்து, சிரியாவில் இருந்து, பாலஸ்தீனத்திலிருந்து வந்த பலரை நீங்கள் சந்திக்க முடியும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்ல அவ்வளவு கதைகள் இருக்கும். கொடுந்துயரங்களும், நம்ப முடியாத அளவு சாகசங்களும் நிறைந்த கதைகள் இங்கு ஏராளம். உயிர்ப் பிழைத்திருக்க தள்ளப்படும் மனிதர்கள் செல்லும் எல்லையை மற்றவர்களால் ஒருபோதும் கற்பனை கூட செய்ய முடியாது.”
தாமஸ் சன்னதம் வந்ததுபோல், முகம் விரிய, வேறெங்கோ வெகுதொலைவுக்கு அப்பாலிருந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு தி. ஜாவின் சிலிர்ப்பு கதையில் வரும் ஒரு வரி நினைவுக்கு வந்தது. “நாதனில்லாட்டாச் சமர்த்துத் தானா வந்துடறது.”
“நான் இங்கு ஆறு வருடங்களுக்கு முன்தான் வந்தேன். அந்த வருடம் மிகக் கடுமையான குளிர். நான் செப்டம்பரில் வந்தேன். அக்டோபரின் தொடக்கத்தில் குளிர் காலம் தொடங்கிவிட்டதைப் போல் இருந்தது. டிசம்பரில் எல்லாம் வாரம் இரண்டு முறை பனிப்புயல்கள் வீசின. அப்படி ஒரு புயல் நாளில்தான் வனிதாவை முதன் முறையாக சந்தித்தேன். நான் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தேன். நான் படித்த கல்லூரியில் இருந்து என் வீடு மூன்று கிலோமீட்டர்கள் தொலைவுதான். சாதாரண நாட்களில் நான் நடந்துதான் கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து வீட்டிற்கும் செல்வது வழக்கம். பனிப்புயலில் எங்கிருந்து நடப்பது! அன்று வெப்பம் எப்படியும் -20 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக இருந்திருக்கும்.
பேருந்து வரவில்லை. பத்து நிமிடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து நின்று பார்த்தேன். அதற்குமேல் நின்றால் உயிர் போய்விடும் என்று தோன்றியது. அந்த அளவிற்கு குளிர். நான் நடக்கத் தொடங்கினேன். வீடு போகும் வரை எனக்குத் துணையிருங்கள் ஆண்டவரே என பிரார்த்தித்துக்கொண்டே நடந்தேன். ஒரு கார் என்னருகே வந்து நின்றது. நீங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டுமா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள். நான் கொண்டு சென்று விடுகிறேன் என காருக்குள் இருந்து ஒரு இந்தியப் பெண் கேட்டார். நான் வனிதாவை முதலில் பார்த்தபோது அப்படித்தான் நினைத்தேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், முகிலன். அதன் பிறகு அந்த வருடக் குளிர் காலம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் அவர் காரில் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர் கணவர் வேலை செய்யும் அலுவலகமும், அவரின் இரண்டு பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியும் என் கல்லூரியின் அருகேதான் இருந்தது. அவர்களைக் கொண்டு விடுவதற்கும், அழைத்துச் செல்வதற்கும் வரும்போதெல்லாம் என்னையும் அழைத்துக்கொண்டார். நான் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிவிட்டேன். அவர்களுக்கு விடுமுறை என்றால் எனக்காக மட்டுமே வருவார். எவ்வளவோ நாட்கள் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்.
தாமஸ் பேச்சை நிறுத்தி என்னைப் பார்த்தார்.
“சரி, இப்போது நீங்கள் சொல்லுங்கள், வனிதாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்”
“நல்ல மனிதர். உங்களுக்குத் தேவையான நேரத்தில் ஆண்டவர் அனுப்பி வைத்திருக்கிறார்…”
“அங்குதான் வனிதா இன்னமும் விஷேசமானவர், முகிலன். அவர் எனக்கு மட்டும் உதவி செய்யவில்லை. என்னைப் போல் பலருக்கு உதவியிருக்கிறார், உதவிக்கொண்டிருக்கிறார். நான் கல்லூரி முடித்த உடனேயே இங்கு வேலைக்கு சேர்ந்துவிட்டேன். புதிதாக வருபவர்களுக்கான மாத நிகழ்வுகள் நடத்துவோம் என்று உங்களிடம் சொன்னேன் அல்லவா, அப்படி ஒரு நிகழ்வாய் அவரைப் பேச அழைத்தேன். அவரின் கதை புதியவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை ஊட்டும்தானே… ஆனால் அவர் மறுத்துவிட்டார். தான் பேசுவதற்கு ஒன்றுமில்லை, செய்வதற்கு எதாவது இருந்தால் சொல்லுங்கள், செய்கிறேன் என்றார். பின் அவரே ஒரு திட்டத்தைச் சொன்னார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தையும், வழியையும் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எங்களிடம் கொடுத்துவிடுவதாகவும், யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அவர்கள் அவருடன் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கச் சொன்னார். கடந்த இரண்டு வருடத்தில் அவர் கரை சேர்த்த மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிகம்”
ஒரு பெருமூச்சிற்குப் பின் “முகிலன், மீண்டும் கேட்கிறேன். வனிதாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
தாமஸ் ஏன் மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.
“அவர் நல்ல மனிதர் என்பதைத் தாண்டி வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை, தாமஸ்”
“ம்ம்… ஒன்றிரண்டு தடவை உதவலாம். வாய்ப்பும், நேரமும் இருந்தாலும் தொடர்ந்து செய்வதற்கு மனம் இருக்காது. அப்படி இருக்கையில், அவர் கடமைபோல் இதை வனிதா செய்கிறாரே, அது எப்படி? நான் வனிதாவிடமே ஒருமுறை கேட்டேன்”
“நீங்கள் ஏன் தொடர்ந்து முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுகிறீர்கள்? இதைக் கேட்டபோதும் அவரின் காரில்தான் சென்றுகொண்டிருந்தேன். தெரியவில்லை, தாமஸ்… என்றார். வேறொன்றும் சொல்லவில்லை. அதற்கு மேல் அவரிடம் எப்படிக் கேட்பதென எனக்கும் தெரியவில்லை “
“உங்களுக்கு அதற்கான விடை கிடைத்ததா?”
“இல்லை, முகிலன். அதனால்தான் நான் எப்போது வனிதாவைப் பற்றி, யாரிடம் பேசினாலும் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன். எனக்குப் புரியாதது, அவர் கதையில் நான் தவறவிட்டது நிச்சயம் யாருக்கேனும் புரியலாம். இல்லையா?“
ஆமாம் என தலையசைத்தேன்.
“சில சமயம் தோன்றும். அவர் வேண்டுதல் நிறைவேறிவிட்டது, ஆனாலும் பிரார்த்தனையைத் தொடர்கிறார் என்று. அப்படித்தான் சொல்ல வேண்டும்.“ சிறிது நேரம் தாமஸ் எதுவும் பேசவில்லை.
எனக்கு அந்த வனிதாவை சந்திக்க வேண்டும். பிரதிபலன் எதிர்பாராமால் இக்காலத்தில் யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். இந்த தாமஸ் கலாச்சார இடைவெளியினால் புரியாமல் பேசுகிறார். அப்படித்தான் இருக்கும்.
நாங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்திருப்போம். “நேரமாகிவிட்டது. அலுவலகத்திற்குத் திரும்பலாம்” என்றார் தாமஸ். அலுவலகம் வரும்வரையும் அவர் அமைதியாகவே வந்தார்.
“முகிலன், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் பேசியது உங்களுக்கு என்ன மாதிரி உதவியது என்று தெரியாது. கடைசியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சொல்லலாமா? நான் நிறைய பேசுவது போல் நீங்கள் நினைக்கக் கூடாது.“
“இல்லை, நிச்சயம் இல்லை, தாமஸ். சொல்லுங்கள்”
“வனிதாவின் வார்த்தைகள்தான் இதுவும். வாழ்க்கை எல்லோருக்கும் எங்கோ ஆரம்பித்து, எங்கோ, எப்படியும் முடிந்துவிடும். இடையில் நாம் செய்யவேண்டியதெல்லாம் நம் பிரார்த்தனை எதுவெனக் கண்டுபிடித்து விடாமல் செய்வதுதான். உங்களுக்கு என் வாழ்த்துக்கள், முகிலன். மீண்டும் சந்திப்போம்.” தாமஸ் இதைத் தமிழிலேயே சொன்னார்.
பின் விடைப்பெற்றுக்கொண்டார். நான் வீடு திரும்பும் வரை தாமஸ் சொன்ன வனிதாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் எலோராவிற்கு வரச் சொல்லி ஒரு நண்பர் கூப்பிட்டார். அங்கிருந்த ஒரு இந்திய உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள், உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன், வாருங்கள் என அழைத்தார்.
எலோரா, மிஸ்ஸிசாகாவில் இருந்து ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது. ஐரோப்பிய பாணியிலான கட்டிடங்கள் நிறைந்த மிக அழகிய சிறு நகரம் என்பதுதான் எலோராவின் சிறப்பு என இணையம் சொல்லியது. பொதுவாக இத்தகைய இடங்களுக்குச் செல்வதற்கு அவ்வளவு விருப்பப்படுவேன். அன்றும் என் மனம் முழுவதும் வனிதாவைப் பற்றிய எண்ணங்கள்தான் நிரம்பியிருந்தன. நான் அவரின் கதையைத் திரும்ப திரும்ப மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். போரில் இருந்து தப்பிப் பிழைத்து வேறு ஒரு புதிய உலகிற்குள் நுழைந்துவிட்ட பெண், முன் பின் தெரியாதவர்களுக்கு உதவிக்கொண்டே இருக்கிறார் என்பது எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிவதுதான். ஆனால் ஏதோ ஒரு விசயம் மட்டும் தவறுகிறது என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அந்த விசயம்தான் வனிதாவின் தொடர் உதவிகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்பது உறுதி. அது என்னவென்றுதான் தெரியவில்லை. அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் வனிதாவின் கதையின் மைய முடிச்சை அவிழ்த்துவிடலாம்.
எலோராவிற்கு சென்றதும் நண்பர் சொன்ன இந்திய உணவகத்திற்குச் சென்றேன். ரெஸ்யூம் வாங்கி வைத்துக்கொண்டார்கள். தேர்வானால் அழைக்கிறோம் என்றார்கள்.
“வாருங்கள், உங்களுக்கு நகரத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்” என நண்பர் அழைத்தார். நாங்கள் கிராண்ட் ரிவர் என அழைக்கப்படும் சிறு நதி ஒன்றைக் கடந்து நடந்து சென்றோம். கனடாவில் எல்லா நகரங்களுக்கும் நடுவேயும் ஒரு நதி ஓடும் போலிருக்கிறது. திரும்பி வரும்போது நிச்சயம் கால் நனைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
“எங்கே போகிறோம்?”
“இங்கு ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. முதலில் அதைப் பார்த்துவிடுவோம். அது சில சமயம் சீக்கிரம் மூடப்பட்டுவிடும்.”
நல்லவேளையாக நாங்கள் சென்றபோது திறந்துதான் இருந்தது. மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும் என்றார் அங்கிருந்த அதிகாரி. “கட்டணம் வரும்போடு குடுத்தால் போதும்” என்றார்.
“இது என்ன மாதிரியான அருங்காட்சியகம்?” என்று நண்பரிடம் கேட்டேன்.
“வெல்லிங்டன் கவுண்டி ஹவுஸ் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் ரெஃப்யூஜ் அல்லது புவர் ஹவுஸ் என்று அழைப்பார்கள். தமிழில் ஏழைகளின் வீடு என்று அழைக்கலாமா?
அவரே தொடர்ந்து பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன்.
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இந்த ஒண்டோரியா மாகாணம் விவசாயத்திலிருந்து தொழில்மயமான பொருளாதாரத்திற்கு மாறத்தொடங்கியது. அந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள முடியாமல் பலர் சிரமப்பட்டனர். குறிப்பாக வயதானவர்களும், உடல் அளவிலும் மனதளவிலும் நோய்வாய்ப்பட்டவர்களும் பொருளாதார ரீதியில் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்காக கட்டப்பட்டதுதான் இந்த ஏழைகளின் வீடு. மொத்தம் எட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்திருக்கின்றன. இந்த ஒரு வீடுதான் இன்றளவும் நிற்கிறது”
இரண்டு தளங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் முதல் தளத்திற்கு நாங்கள் சென்றபோது நண்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு அவசர வேலையாக வீடு வரை சென்று வருகிறேன். நீங்கள் பார்த்து முடித்ததும் எனக்கு கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது வருட வரலாறு கொண்ட கட்டிடம். எத்தனை, எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கும்! எவ்வளவு கதைகளைக் கேட்டிருக்கும்! இந்தச் சுவர்களுக்கு மட்டும் பேச முடிந்தால் எவ்வளவு கதைகளைக் கேட்கலாம்! யோசித்துக்கொண்டே நான் நுழைந்த முதல் அறையில் ஒரு பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதற்கு மேலே ஒரு வாசம் எழுதப்பட்டிருந்தது.
“இந்தச் சுவர்களால் பேச முடிந்தால்….”
அறையில் அந்த காலத்தில் வீடுகளில் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். சலவை இயந்திரங்கள், அரவை இயந்திரங்கள், விதவிதமான வானொலிகள், தொலைபேசிகள், ஒலி நாடாக்கள், தீப்பெட்டிகள், சமையற் பாத்திரங்கள், அலங்காரமான கண்ணாடிகள், வண்ணம் மீதமிருந்தப் பெட்டிகள், துடைத்து துடைத்து பளபளப்பு கூடியிருந்த உணவு மேஜைகள், காலம் ஏறிப்படுத்திருக்கும் மெத்தைகள், இன்னும் என்னவெல்லாமோ இருந்தன. ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழத் தேவையான எல்லாமும் இருந்திருக்கும். இருந்தும் அங்கு ஏதோ ஒன்று குறைவதாய் எனக்குத் தோன்றியது. அறை முழுவதும் வெளிச்சம் நிறைந்தும் வழிந்தும் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அங்கிருந்த சிலரைப் பார்த்தேன். அவர்கள் யாரும் எதையும் தேடியதைப் போல் தெரியவில்லை. நான் மட்டும் அந்த எண்ணத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன். முதலில் வனிதா, இப்போது இந்த வீடு…. இன்னும் என்னென்ன புதிர்கள் இந்த நாட்டில் எனக்காக காத்திருக்கின்றனவோ தெரியவில்லை…
நேரம் போகப் போக எனக்கு உறுத்தல் அதிகரித்தது. என்ன அது? நான் எதைத் தேடுகிறேன்? எப்படி கண்டுபிடிப்பது? எதைக் காணவில்லை என்று தெரிந்தால்தானே எப்படி கண்டுபிடிப்பது, எங்கு கண்டுபிடிப்பது என்று தெரியவரும். மனதுக்குள் வார்த்தைகள் போடும் இறைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. நான் பதட்டமானேன். யாரிடமாவது கேட்கலாம் என்றால் எப்படிக் கேட்பேன்? ஒருவேளை அவர்களே என் பதட்டத்தைக் கவனித்து ஏதாவது கேட்டால் கூட என்ன பதில் சொல்வேன்?
இரண்டாம் முறையாய் என்னையும் மீறி வந்து விழுந்த பெரு மூச்சு யார் மீதாவது விழுந்துவிடப் போகிறதென சுற்றிப் பார்த்தேன். இம்முறை என் அருகில் யாரும் இல்லை. அந்த அறையிலேயே யாரும் இல்லை. ஒரு நூற்றாண்டை எளிதாக கடந்து சென்றுவிட்டிருந்தனர். நான் தனித்து நின்றுகொண்டிருந்தேன்.
நான் நிதானமாக ஒவ்வொரு பொருளையும் உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தேன். சலவை இயந்திரங்கள், அரவை இயந்திரங்கள், என அதே வரிசை. மிக மிக நிதானமாக பார்த்துக்கொண்டே வந்தேன். பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு மூலையில் சிறிய ஆண் பொம்மை ஒன்று இருந்தது. ஆறிலிருந்து பத்து வயதிருக்கலாம் அவனுக்கு. அவன் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அருகே சென்று பார்த்தேன். கருப்பு வெள்ளைப் புகைப்படம். ஒரு இளம் பெண்ணின் படம். முதலாம் உலகப்போரின் போது எடுக்கப்பட்ட படம் என்று அந்தப் படத்தின் கீழே எழுதியிருந்தது. வீட்டை விட்டு கத்திக்கொண்டே அந்தப் பெண் ஓடி வருகிறாள். நான் அந்தப் படத்தையும், அந்த பொம்மைச் சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தேன்.
எனக்குச் சட்டென்று எல்லாம் புரிந்தது. வனிதா!!!!
நான் அங்கிருந்து உடனடியாக கிளம்பினேன். கீழ்த்தளத்தில் அருங்காட்சிய அதிகாரி எனக்காகவே காத்திருந்ததுபோல் தெரிந்தார்.
“எவ்வளவு தரவேண்டும்?”
“அது உங்களைப் பொருத்தது. இந்த இடமும், இங்கு இருக்கும் பொருட்களும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு தாருங்கள். உங்கள் விருப்பம்”
“எனக்குப் புரியவில்லை. நீங்களே சொல்லுங்களேன்.” எனக்கு அவரிடம் பேசப் பொறுமை இல்லை. உடனடியாக வீட்டிற்குச் செல்ல விரும்பினேன். வனிதாவின் கதையை உடனடியாக எழுதவேண்டும். அதுவும் முக்கியமான அந்தப் புள்ளி மறப்பதற்குள்.
“ஐந்து டாலர்கள் குடுங்கள். போதும்” சிரித்துக்கொண்டே சொன்னார்.
*எனக்கு இந்த இடத்தில் கதை முடிந்துவிட்டது புரிந்தது. தலைப்பு வைக்க வேண்டும். தலைப்பில்தான் இக்கதை முழுமைப் பெறும். வனிதா ஏன் எங்களுக்கு உதவுகிறார் என்று ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொள்ள முடியும். பிரார்த்தனை அல்லது பிராயச்சித்தம் என்று வைக்கலாம். இரண்டில் ஒன்று பொருத்தமாக இருக்கும். ஆனால் எனக்கு உறுதியாய்த் தெரியவில்லை. சரி, இவ்வளவு நேரம் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் சொல்லுங்கள், பிரார்த்தனையா? பிராயச்சித்தமா?