1.
வானம் ஒளி மங்க ஆரம்பித்திருந்தது. பின்வாசலுக்கு வெளியே இருந்த திட்டில் இருந்த படி சரிந்து வெளியெங்கும் இறைந்து கிடந்திருந்த அடர்பச்சை நிற தேயிலை செடி பரப்பை , அதை தாண்டி இருந்த வெளிர்நீல வானை பார்த்த படி சங்கரன் தன்னை மறந்து பகல் கனவுகளுக்குள் மூழ்கியிருந்தான் . அருகில் இருந்த மரத்தில் இருந்து கூரைக்கு தாவி, கூரையிலிருந்து தரைக்கு குதித்து ஒரு வயதான குரங்கு அவனை நோக்கி வந்தது, அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டது. சங்கரன் தூக்கம் களைந்து எழுந்தவன் போல போதம் பெற்று அனிச்சையாக திரும்பி குரங்கை பார்த்த போது நேரம் ஆகி விட்டதை உணர்ந்தான். அந்த குரங்கு எப்போதும் சரியாக அவன் வேலை முடித்து கிளம்ப போதும் நேரம் வந்து நிற்கும், அவன் மீதமான உணவையோ, பழங்களையோ தருவான், நிதானமாக அமர்ந்து உண்டு முடித்து செல்லும். வருடங்கள் கடந்து விட்ட நீண்ட நாள் வழக்கம் இது.
சங்கரன் உள்ளே சென்று அடுப்படியை சுத்தம் செய்து கழுவ வேண்டிய பாத்திரங்களை எடுத்து போட்டு, குரங்கிற்கு இரண்டு நேந்திர பழங்களை கொண்டு வந்து கொடுத்தான், அது வாங்கி கொண்டு அவன் அமர்ந்த திட்டில் போய் அமர்ந்து கொண்டு நிதானமாக உண்ண ஆரம்பித்தது. அதையே சற்றுநேரம் பார்த்து காலத்தை மறந்து நின்று கொண்டிருந்தான், பின் மீண்டும் போதம் தெளியவும் வேகமாக நீர்தொட்டி அருகே சென்று உடை களைந்து ஒரு குளியல் போட்டான். அருகிலேயே காய போட்டிருந்த உடைகளை எடுத்து மாற்றி புறப்பட்டு முன்அறை பக்கம் வந்தான். டீ ஆற்றும் இடத்தில் பாலையா ஏதோ பாடலை மெல்ல முணுமுணுத்து கொண்டிருந்தான். கல்லா பெட்டி இடத்தில் ஆறுமுகம் அமர்ந்து அருகில் இருந்த பழைய ரேடியோவை திருகி பாடலை மாற்ற ரேடியோ ஸ்டேஷன் மாற்றி கொண்டிருந்தான் , வழக்கமாக இந்நேரத்தில் அமர்ந்திருக்கும் பொன்னய்யனும், வேலனும் இருக்கை பலகையில் இருந்தார்கள். இதில் பொன்னய்யன் மனைவி ஓடிபோய் குடும்பம் இல்லாமல் ஆகிவிட்டவன், எந்நேரமும் இங்குதான் கிடப்பான். சங்கரன் யாரிடமும் ஏதும் பேசாமல் முன்வாசல் பக்கம் வந்தான். பாலய்யா சங்கரன் வருவதை பார்த்து கிண்டலாக ” ஜோடியை தேடி கிளம்பியாச்சுல்ல ” என்றான். எல்லோரும் சிரித்தனர். கல்லா பெட்டியில் இருந்த ஆறுமுகம் மட்டும் சிரிப்பை மறைத்து முகத்தை கடுப்பானதாக ஆக்கி கொண்டு ” ஒவ்வொருத்தனுக்கும் பேங்க் ல இருக்கறதா நினைப்பு, வெட்டிமுறிச்சது போல நேரம் ஆச்சுன்னா கிளம்பிடறானுக ” என்றான். சங்கரன் ஏதும் காதில் விழாதவன் போல வெளியே சாலையில் இறங்கி நடக்க துவங்கினான்.
கோத்தகிரியில் ஆவாக்கல் எஸ்டேட் செல்லும் வழியில் இருக்கும் டீ கடை இது. எப்போதாவது வரும் பஸ் நிற்கும் இடம், எஸ்டேட் ஆட்கள் எஸ்டேட் வண்டிக்காக காத்திருக்கும் இடம் எல்லாம் இதுதான். கடையில் அந்தி மங்கும் வரை எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். சங்கரனின் தந்தை விஜயன் 20 ஆண்டுகள் முன்பு வந்து ஆரம்பித்த கடை, கடை ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே குடும்பத்தை இங்கு கூட்டி வந்து விட்டார். சங்கரன் சிறுவயதிலேயே படிப்பை விட்டு கடையில் அப்பாவிற்கு உதவியாய் இருந்து கொண்டான். அம்மாவும் கடையில்தான் இருந்தாள். சங்கரனின் தங்கை தாட்சாயிணியை மட்டும் படிக்க அனுப்பினார்கள். சங்கரனின் அம்மாதான் பலகாரம் சுடுவாள், அவளிடம் இருந்து சங்கரன் பலகாரம் செய்வதை கற்று கொண்டான். அம்மா எதிர்பாராதவிதமாக காய்ச்சலால் இறந்து போகவும் அம்மா செய்த பணிகளை அவன் சேர்த்து செய்தான். யாராவது பலகாரம் நன்றாக இருந்தது என்று சொன்னால் அம்மாவை நினைத்து கொள்வான். சங்கரனுக்கு என்றுமே காசின் மீது விருப்பம் இருந்தது இல்லை, கல்லா பெட்டி பக்கமே போகமாட்டான். தினமும் பத்து பிள்ளைகளுக்காவது பலகாரங்களை இலவசமாக கொடுத்து விடுவான். அதற்காக எந்நேரமும் அவனை அப்பா திட்டி கொண்டிருப்பார், சங்கரன் அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டான். அவன் தரும் மீத உணவுகளுக்காக குரங்குகள், பறவைகள், அணில்கள் எல்லாம் காத்திருக்கும். அவனது மலர்ந்த முகத்தை எல்லோரும் விரும்புவர். அப்பாவிற்கு அவன் பிழைக்க தெரியாத மூடன், விவரமில்லாதவன், அவன் அம்மாவை போல கிறுக்கன். ஆனால் எந்நேரமும் அவனை திட்டி கொண்டிருந்தாலும் உள்ளூர அவன் மீது அவருக்கு அன்பு இருந்தது, எப்போதும் அவர் கண்களிலேயே அவன் இருக்க வேண்டும், சற்று எங்காவது அவன் வெளியே சென்றாலும் காணாமல் போன பதற்றம் வந்து அவனை திட்டுவார். கிட்டத்தட்ட அப்பா அவனை தன் உடல் உறுப்புகளில் ஒன்று போல அவனை பாவித்து கொண்டிருந்தார்.
ஆறுமுகம் கடையில் வந்து சேர்ந்தது 7 வருடங்களுக்குள்தான், தூரத்து உறவு, வேலைக்கு ஆள் தேவை பட்டதால் அப்பா ஊருக்கு சொல்லிஅனுப்பி வந்து சேர்ந்தவன் அவன். ஆரம்பத்தில் சங்கரன் பின்னாலேயே அண்ணா, அண்ணா என்று வாஞ்சையாக சுற்றி கொண்டிருந்தான். ஈடுபாட்டுடன் வேலை செய்வான். மெல்ல நாளாக நாளாக குடும்பத்திற்குள் ஒருவன் போலானான். சிக்கல் தாட்சாயிணி வழியாக வந்தது. ஆறுமுகம் அவளை எப்படியோ வசியம் செய்து விட்டிருந்தான். சங்கரன் அதிர்ச்சியில் உறைந்தான், ஏனெனில் இவனில் அந்த எண்ணத்தை சங்கரன் சற்றும் கண்டதில்லை. ஆரம்பத்தில் தாட்சாயிணியை தங்கை என்றெல்லாம்தான் அழைத்து கொண்டிருந்தான், எப்போது இது மாறியது, எப்போது இவன் மாறினான் என்றெல்லாம் யோசிக்க சங்கரன் ஸ்தம்பித்து போனான் . அப்பா அவனை அடித்து துரத்தத்தான் இருந்தார், தாட்சாயிணியின் அழுகையை சகிக்காமல் சங்கரன்தான் அப்பாவை சமாதானம் செய்து அவனுக்கே அவளை திருமணம் செய்து கொடுக்க வைத்தான். அப்போதெல்லாம் அப்படி நல்லவன் போல ஆறுமுகம் இருந்தான். கிட்டத்தட்ட சங்கரனுக்கு குற்றேவல் புரிபவன் போல இருந்தான். எல்லாம் அப்பா இறக்கும் வரைதான். பிறகு ஆறுமுகத்தின் தோரணை மாறியது. கடை உரிமையாளன் இடத்திற்கு நகர்ந்தான், சங்கரனை வேலையாள் மனநிலைக்கு நகர்த்தினான்.
ஆனால் கடைக்கு வரும் பெரும்பாலானோர் சங்கரனிடம் வந்துதான் பேசுவார்கள், அவனுக்குத்தான் மதிப்பை அளிப்பார்கள், அது ஆறுமுகத்திற்கு கடும் எரிச்சலை அளிக்கும், அதனாலேயே சங்கரன் அடுப்படி விட்டு முன்பு கூடத்திற்கு வந்தாலே திட்டுவான்.
சங்கரனுக்கு ஆறுமுகம் இந்த கடையை எடுத்து கொண்டதில், உரிமைகொண்டதில் எந்த பெரிய வருத்தமும் இல்லை, என்ன இருந்தாலும் தங்கையை கைபிடித்தவன்தானே என்ற எண்ணம்தான் இருந்தது. அவன் எதிர்பார்த்ததெல்லாம் தன்னை அவன் கொஞ்சம் மரியாதையாக நடத்த வேண்டும் என்பதுதான். போதாதற்கு டீ மாஸ்டராக வந்து சேர்ந்த பாலையா எந்நேரமும் சதா கிண்டலடித்தும் குற்றம் சொல்லி கொண்டிருந்தும் இருந்தான், ஆறுமுகம் அவனை கொஞ்சம் கூட கட்டுப்படுத்தாது சங்கரனுக்கு ஆறாத துயர் அளித்து கொண்டிருந்தது.
சங்கரனின் மகிழ்ச்சி நேரம் என்பது 5 மணி பிறகுதான், சட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் என இரு சொட்டர்கள் போட்டுக்கொண்டு, குடையும் டார்ச் விளக்கையும், பலகார பொட்டலத்தையும் எடுத்து கொண்டு இரு கிமீ தாண்டி இருக்கும் சித்பவானந்த குருகுலம் நோக்கி நடக்க துவங்கி விடுவான் . அங்கு சமையல் வேலை பார்க்கும் பாஸ்கரன்தான் சங்கரனின் மனத்திற்கினிய தோழன், அவரிடம் சற்று நேரம் பேசினாலே சங்கரனுக்கு தன் பாரம், துக்கம் இறங்கி மனம் இலகுவாகி விடும். அதற்காகவே ஒவ்வொருநாளும் தவிர்க்காமல் அங்கு செல்வான். இந்த நட்பைத்தான் பாலையா தவறான உறவு போல கிண்டலடித்து ஓட்டி கொண்டிருந்தான். அப்படி பாலையா ஒவ்வொருமுறை கிண்டடிக்கும் போதும் சங்கரனுக்கு உள்ளுக்குள் கூசும். இன்றும் சங்கரன் கிளம்பும் போது பாலையா அதை சொல்லி நகைத்தான்.
2.
நடக்க துவங்கும் போதே சிறு மழைதூறல்கள் விழ ஆரம்பித்திருந்தது. குளிரும் கூடிக்கொண்டு வந்தது, ஆனால் மாலை வெளிச்சமும் மெல்ல கரைந்து கொண்டிருந்தது. சங்கரன் கடையை விட்டு நகர நகர அது தந்த மனநிலைகளை கழற்றி காணும் காட்சிகளில் மூழ்கி கொண்டிருந்தான், மேய்ச்சல் முடித்து செல்லும் மாடுகள் போல அவன் கால்கள் தன்னிச்சையாக குருகுலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தேயிலை சேகரிப்பு குடோனுக்கு நேர்பின்பு குருகுலம் 5 ஏக்கரில் விரிந்திருந்தது. அந்த தேயிலை குடோன் பயன்பாடு இல்லாமல் வெகுகாலம் மூடி இருந்தது, குரங்குகள்தான் அதில் கூட்டமாக அங்குமிங்கும் ஓடி கொண்டிருக்கும், கூரைகளில், சன்சேடுகளில், குழாய்களில், வெளி சுற்று சுவரில் என எங்கு பார்த்தாலும் அந்த கட்டிடத்தில் குரங்குகளை காண முடியும். சங்கரனுக்கு ஒவ்வொரு குரங்கையும் தனித்தனியாக அடையாளம் தெரியும். ஒவ்வொன்றும் எப்படியெல்லாம் சேட்டை செய்யும் என்பதெல்லாம் கூட. அதில் இருந்த வயதான குரங்கிற்கு இவனே மூப்பன் என்று பெயர் வைத்திருந்தான். அது ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும், எப்போதும் அதை சுற்றி சிறு குரங்குகள் விளையாடி கொண்டிருக்கும். நாளாக நாளாக அது நகர்வதையே மறந்திருந்தது. பெரும்பாலும் கூரையின் வலதுஓரம் அமர்ந்து மலைசரிவுக்கு அப்பால் இருக்கும் வானை நோக்கிய படி அமர்ந்திருக்கும், இன்றும் அப்படியே அதே இடத்தில் அமைத்திருந்தது. சங்கரன் சிலையாகி விட்டதோ என்று எண்ணிக்கொண்டான். ஒரு சிறு குரங்கு அதன் மீது மேலேறி விளையாடி கொண்டிருந்தது. சற்றென்று அந்த மூப்பனின் தோல் மீது ஏறி அமர்ந்து கொண்டு திரும்பி சங்கரனை பார்த்தது. சங்கரன் சிலிர்த்து மகிழ்ச்சியில் புன்னகைத்து கொண்டான்.
குருகுலத்தில் வெளிகேட் உள்பக்கமாக தாழ் போட பட்டிருந்தது, சங்கரன் தாழ்நீக்கி உள்ளே நடந்தான், முன்பெல்லாம் திறந்தே இருக்கும், சமீபமாக காட்டெருதுகள் அதிகரிக்க இப்படி சாத்தி வைக்கும்படி ஆகிவிட்டது. குருகுலத்தில் மொத்தம் ஆறு கூடங்கள், எல்லாம் சதுர வடிவில், பிரமீடு வடிவ கூரை கொண்ட கட்டிடங்கள். உள்ளே செல்லும் போது வலது புறத்தில் இருக்கும் சிறிய கட்டிடம் சமையல் கூடம், சங்கரன் நேராக அங்கு புகுந்தான். அங்கு பாஸ்கரனும் இன்னொரு பணியாளான சம்புவும் இரவுணவிற்க்கான தயாரிப்பில் இருந்தனர். சங்கரன் ஒரு தட்டை எடுத்து பாஸ்கரன் தனக்காக எடுத்து வைத்திருந்த உணவை தேடி எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான். ” பரவால்ல, மெல்ல தேறிட்டு வரீங்க ” என்று சொல்லி பாஸ்கரன் நோக்கி புன்னகைத்தான். பாஸ்கரன் ” புதுசா வந்த சாமி அமிர்தம் போல இருக்கு னு சொல்லி என்னை வாழ்த்தினாக தெரியுமா ” என்று சொல்லி அருகிலிருந்த சம்புவை திரும்பி பார்த்தான், அவன் ” ஆமா, ஆமா, சாமி சொல்லிச்சு ” என்றான். சங்கரன் சிரித்து ” அந்த சாமி காஞ்சு கிடந்தது இங்க வந்து சேர்ந்திருப்பாப்புல, அதான் ” என்றான். சம்பு ” ஆமா, ஆமா ” என்றான், பாஸ்கரன் அவனை பார்த்து முறைத்தான். சங்கரனும் சம்புவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் சிரித்து கொண்டார்கள். பாஸ்கரன் சம்புவை நோக்கி ” நைட்டு உனக்கு சோறு கிடையாது பாத்துக்க ” என்றான். பிறகு அவனும் சிரிப்பில் கலந்து கொண்டான்.
பாஸ்கரன் சங்கரன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான், ” என்னடே விசேஷம் ” என்றான். சங்கரன் முகம் கவிந்து கொண்டது. பாஸ்கரன் தானாக ” என்ன, பாலையா ரொம்ப தொல்ல பன்றானோ ” என்றான். சங்கரன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாகவே இருந்தான். பாஸ்கரன் ” டே, வெறும் நல்லவனா இருந்தா ஏறிமிதிச்சி போயிடுவானுகடே, கொஞ்சம் ஆண்மகனாவும் இருக்கனும், அது உன்னட கடை, உறப்புள்ளவனா திட்டிட்டான்னா திருப்பி திட்டு, அடிச்சா திருப்பி அடி, முதலு மேல சூடுள்ளவன் மேல எவனும் கேறி வர மாட்டானுவ, அல்லாம இளிச்சவாயனா, ஏதும் சொல்லாம இருந்தோம்னா டிரௌசரை கூட உருவிடுவானுக ” என்றான். சங்கரன் அப்போதும் பேசாமல் இருந்தான், பாஸ்கரன் கோபம் கொண்டு ” நான் வந்து பேசவா ” என்றான், சங்கரன் வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். பாஸ்கரன் “எப்படியோ நாசமா போ” என்றான்.
பிறகு சற்று தணிந்து ” டே, முன்ன பெரிய சாமி ஒரு சத்சங்கத்துல சொன்னது இது, நான் ஓரமா நின்னு கேட்டேன், மனுசுல அப்படியே பதிஞ்சுட்டுது, அது பற்றுல ரண்டு வக உண்டு, ஒன்னு பக்திபற்று, இன்னொன்னு லோக பற்று. பக்தி பற்று உள்ளவனுக்கு காசு, பொருளு கணக்கு எதும் இருக்காது, எல்லா ஆளும் ஒன்னுதான், எல்லாம் சாமிதான், இரண்டாமத்த பற்று உள்ளவனுக்கு காசும் பொருளும்தான் சாமி, சாமி அவனுக்கு காசும் பொருளும் வாங்கி தர ஏஜெண்டு, நிஜ வழிபாடு எல்லாம் காசும், பொருளும் மேலதான். நல்ல பாதைனாக்க அது பக்தி பற்றுதான். சாமி நம்ம கூட நிக்க இதுதான் வழி, நீ இந்த வழி உள்ளவன், உன் மச்சினன் மத்த வழில உள்ளவன். ” என்றார், மேலும் ” ஆனா நாம உலகத்துல வாழனுமே, அதுக்கு அவனுங்க விட மாட்டானுக. அப்படி நாம வாழணும்னா நாம ஆணாவும் இருக்கனும் ” என்றார்.
சங்கரன் ஏதும் சொல்லாமல் இருக்கவே பாஸ்கரன் சங்கரனின் அருகில் நெருங்கி வந்து தோளில் கைபோட்டு நிதான குரலில் ” டே, அதை விடு இப்படி யோசிச்சு பாரு, மனுசங்கலும் தெரு நாய்களும் ஒன்னுதான், பயந்தா கடிக்க வரும், கல்ல வீசினா பயந்து ஓடும், நமக்கு கல்லு வீசற தைரியம் வேணும், அல்லாட்டி இப்படி கண்ட நாயிகள்கிட்டயும் அல்லல் பட வேண்டி இருக்கும் ” என்றான். சங்கரன் பேச்சை தவிர்க்க, எழுந்து “நான் பெரிய சாமியை பார்த்துட்டு வரேன்” என்றான். பாஸ்கரன் ” இப்படியே போச்சுன்னா நான் வந்து அவனுகளை வெட்டுவேன் ” என்றான்.
சங்கரன் பதில் ஏதும் சொல்லாமல் அறை விட்டு வெளியே வந்தான், அவனுக்கு மனம் தவித்தபடியே இருந்தது, தாற்காலிகமாவது இவற்றையெல்லாம் மறக்க எண்ணினான், கடைசியில் இருந்த பெரிய சாமி இருக்கும் கட்டிடம் நோக்கி சென்றான். விரிந்த புல்வெளியில் சம்பந்தமற்று 6 சதுர வீடுகளை யாரோ மறந்து வைத்து விட்டு போனது போல அவனுக்கு தோன்றியது. திரும்பி சமையல் கட்டிடத்தை நோக்கினான் . மேலே புகைபோக்கியில் புகை வந்து கொண்டிருந்தது. இந்த குருகுலத்தின் ரயில் இன்ஜின் இந்த சமையற்கூடம் என்று மனம் எண்ணிக்கொள்ளவே சட்டென்று புன்னகைத்து கொண்டான்.
அறை கதவு மெல்ல திறந்திருந்தது. உள்ளே கூடாரத்தில் ஒரு புதிய சாமி இருந்தார், ஒல்லியாக இருந்தார். பாஸ்கரனிடம் அமிர்தம் என்று சொன்ன சாமி இவர்தான் போல என்று எண்ணி தனக்குள் புன்னகைத்தது கொண்டான். புதியசாமி முக அசைவிலேயே விசாரிக்க சங்கரன் ” பெரிய சாமியை ” என்றான். புதிய சாமி “அறையில் இருக்கார், போங்க ” என்றார். சங்கரன் உள்ளே இருந்தே பெரிய சாமியின் அறை நோக்கி நகர்ந்தான். முன்பு பெரிய சாமி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் கடைக்கு வருவார். அப்பா அவர் இருக்கும் போது அமர மாட்டார், பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார், என்றாலும் அவர் வலுக்கட்டாயமாக எப்போதாவது தந்து சென்றால் அதை சாமி படம் அருகில் வைத்து விடுவார். மாதம் ஒருமுறை அரிசி மூட்டை வாங்கி குருகுலம் கொண்டு போய் கொடுத்து சாமி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வருவார், அப்பாவிற்கு சங்கரன் குருகுலம் செல்வது எல்லாம் பிடித்திருந்தது. அதற்கு மட்டுமே மறுப்பு தெரிவிக்க மாட்டார். பெரிய சாமி பிறகு வயது முதிர்வு காரணமாக நடைப்பயிற்சியை விட்டுவிட்டார். சங்கரன் எப்போது வந்தாலும் பெரிய சாமியை கண்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவான். அப்பதெல்லாம் பழமோ, இனிப்போ ஏதாவது ஒன்று தருவார். சில சமயம் சட்டைப்பையில் இருந்து சாக்லேட் எடுத்து கொடுத்திருந்திருக்கிறார்.
பெரிய சாமி உள்ளறையில் சாய்விருக்கையில் அமர்ந்து ஜன்னலை நோக்கி கொண்டிருந்தார். ஜன்னலில் புற்கள் விரிந்த நிலம், அதைத்தாண்டி தேயிலை விரிப்பு, அதை தாண்டி வானவெளி தெரிந்தது. சற்றென்று அவையெல்லாம் ஜன்னல் வழியாக இவரை பார்த்து கொண்டிருந்தன என்று சங்கரனுக்கு தோன்றியது. அவர் இருக்கை அருகில் இருந்த மேசையில் சித்பவானந்தர் உரை எழுதிய திருவாசம், கீதை நூல்கள் இருந்தன. இவன் வந்ததை உணர்ந்து மெல்ல திரும்பி இவனை பார்த்தார். சங்கரன் நேராக சென்று பாதம் தொட்டான், அவர் வலது கரம் அவன் தலையை மெல்ல வந்து தொட்டது. சற்றுநேரம் அருகில் அமர்ந்து கொண்டான், பிறகு ஜன்னல்வழியாக இருள் அடர்ந்து பெருகுவதை உணர்ந்ததும் எழுந்து மீண்டும் சாமி கால் பணிந்து வெளியே வர நகர்ந்தான். அப்போது பெரிய சாமி ” சங்கரா, நில்லு ” என்றார், பிறகு ” நீ நல்லவன், உன்னிட்ட பக்குவம் இருக்கு, உன் குணத்துக்கு உன் சூழலும் நல்லதா ஆவும், நிதானத்தை விட்டுடாதா, எல்லாம் சரியாகும் ” என்றார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று ” சரிங்க சாமி ” என்று சொல்லி வெளியே வந்தான். பெரிய சாமியிடம் இதுவரை அவன் எந்த மனக்குறையும் தெரிவித்ததில்லை, ஒருவேளை தாட்சாயினி வந்து ஏதாவது சொல்லி இருப்பாளோ என்று எண்ணிக்கொண்டான், பாஸ்கரன் சொல்ல வாய்ப்பில்லை, அவன் பெரிய சாமியிடம் எதுவுமே பேச மாட்டான். அவனுக்கு தூரத்தில் இருந்து காட்சி அளிக்கும் கடவுள் அவர். இவர் அருகில் வந்தாலே படபடப்பாகி விடுவான், ஒருமுறை குருகுல கொண்டாட்ட நாளில் எதேச்சையாக பெரிய சாமியின் கை பாஸ்கரன் மீது பட்ட போது பாஸ்கரன் கண் கலங்கி அழும் நிலையில் நின்றிருந்ததை சங்கரன் ஆச்சிர்யமுடன் பார்த்து கொண்டிருந்தான்.
3
தூரத்திலேயே கடையின் மின்விளக்கொளி இருட்டில் தனித்துண்டாக கடையை5காட்டியது. மெல்ல காரணம் அறியாத தவிப்பு கூடி வருவதை சங்கரன் உணர்ந்தான். வாசல் தாண்டி உள்ளே வந்தான், ஆறுமுகம் கல்லாப்பெட்டியில் இருந்து பணம் எண்ணிக்கொண்டிருந்தவன் வருகையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து மீண்டும் பணத்தில் மூழ்கி கொண்டான். பாலையா ” என்ன நல்ல வேலையோ, களைச்சுட்டிங்க போல இருக்கே ” என்று சொல்லி கண் சிமிட்டினான். சங்கரன் மனம்வெடித்து அருகில் இருந்த பாத்திரம் எடுத்து அவன் மீது வீசி, ஓடி அவன் மீது விழுந்து கைகளால் அவனை தாக்கினான். பாலையா இதை எதிர்பார்க்காமல் வெலவெலத்து போனான், அடிவாங்கினானே தவிர திருப்பி அடிக்க முயல வில்லை. ஆறுமுகம் எழுந்து ஓடி வந்து தடுத்தான். சங்கரனை நகர்த்தி, அமைதியாக்கி “மச்சான், விடுங்க, இனி ஏதும் சொல்லமாட்டான் ” என்றான். சங்கரன் ஆறுமுகத்தினுள் தன் மீது பயமும் அது உருவாக்கிய மதிப்பும் உருவானதை உணர்ந்தான்.