கேட் முன்பு யாரையும் காணவில்லை, கேட் இடைவெளி வழியாக வாட்ச்மன் அறையில் யாராவது இருக்கிறார்களா என பார்த்தேன், யாரும் இருப்பதாக தெரிய வில்லை, இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. இன்னும் வானம் தெளிவாக வில்லை, இரவு பெய்த மழையில் மண் சாலை சகதி குளமாக இருந்தது. பனியும் இன்னும் சூழ்ந்து விலகாதிருந்தது. எப்படியாவது பெயர்ப்பலகையை 9 மணிக்குள் மாட்டி விட்டால் தப்பித்து விடுவேன் என்று எண்ணிக்கொண்டேன். நின்று சடைந்து பிறகு பைக் ஸ்டாண்ட் போட்டு அதன் மீது சாய்ந்து அமர்ந்தேன், கேட் உள்ளே தூரத்தில் வாட்ச்மன் உடையில் ஒரு வயதானவர் மெதுவாக நடந்து வருவது தெரிந்தது, எழுந்து கேட் அருகில் போய் நின்று அவரை அழைத்தேன். என்னை பார்த்தவர் கொஞ்சம் வேகமாக நடக்க தொடங்கினார். அருகில் வந்து என்ன என்பது போல பார்த்தார், ” போர்டு மாட்ட வந்திருக்கேங்க, 9 மணிக்குள்ள வச்சு விட ஓனர் சொல்லியிருக்கார் “என்றேன். அவர் எதுவும் பதில் பேசாமல் கேட்டை திறந்தார். அவர் தன் மனதையும் திறப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை!

உள்ளே சென்று போர்ட் என்று இருக்கிறது என்று தேடி பார்த்தேன், அவர்தான் இருக்கும் இடத்தை கைக்காட்டினார், போய் எடுத்து வந்து, அதனுடன் இரண்டு இரும்பு பைப் கால்களை போல்ட் கொண்டு பொருத்தினேன். சரியாக பொருந்தியதால் பணி கொஞ்சம் வேகமாக முடிந்தது, இரண்டு கால்களுடன் தட்டி தரையில் படுத்திருந்தது. இரண்டு கால்களுக்கு இடையே இருக்கும் அளவை எடுத்து, பிறகு அந்த இடைவெளி அளவை எடுத்து கொண்டு போர்ட் நிறுத்த வேண்டிய கேட்டின் அருகிலிருக்கும் பகுதிக்கு சென்றேன், தரையில் கால்கள் ஊன்றுவதற்கான அளவுகளை குறித்தேன், இனி தரையை இரண்டு அடிக்கு குழி தோண்ட வேண்டும். கடப்பாறை வேண்டும், அந்த வாட்ச்மன் பெரியவரிடமே சென்றேன்.

” அய்யா, கடப்பாரை இருக்கா ” என்றேன், ” இல்லையே தம்பி, நீ கொண்டு வரலெயா, நான் இங்க புதுசு 15 நாள்தான் ஆகுது ” என்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை, சுற்றும்முற்றும் தேடினேன், ஒரு இரண்டுஅடி நீளம் உடைய ராடு ஓரத்தில் கிடந்தது, அது போதும் என்று எடுத்து கொண்டேன், தரையில் அளவு குறித்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தோண்ட தொடங்கினேன் ழ் வாட்ச்மன் அய்யா அருகில் வந்து நின்று கொண்டார்.

“” ஏன் தம்பி, தொணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, தனியா எப்படி போர்ட எடுத்து மாட்டுவ ” என்றார்.

” அய்யா, காலைல யாரும் கிடைக்கல, 9மணிக்குள்ள மாட்டியாகனும், அதான் பாத்துக்கலாம் னு கிளம்பி வந்துட்டேன் ” என்றேன்.

” எந்த ஊரு தம்பி நீ ” என்றார்.

“கோயமுத்தூர்ங்க, நீங்க ” என்றேன்.

” நான் தென்காசி தம்பி, ஆனா இங்க வந்து 40 வருசம் ஆகிடுச்சு ” என்றார்.

அப்போதுதான் அவரை திரும்பி நன்றாக பார்த்தேன், மிக தளர்ந்த உடல், கண்கள் கூட கடுமையாக நாள்கணக்கில் தூங்காதது போன்ற சோர்வு அப்பியிருந்தது, நான் அவரை பார்த்த சமயத்தில் மெலிதாக புன்னகைத்தார்.

” பசங்கல்லாம் ” என்றேன்.

” ஒரு பையன், மூணு பொண்ணுக, எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு ” என்றார், பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு ” ஆனா இப்ப நாங்க தனியாதான் இருக்கோம் ” என்றார்.

நான் புரிந்து கொண்டு ” பையன் ஏதும் கொடுக்கறது இல்லையா ” என்றேன், அப்போது குழியை ஒரு அடி அளவு எடுத்து முடித்திருந்தேன், மழை ஈரம் இருந்ததால் சுலபமாக குழி எடுக்க முடிந்தது.

” இல்ல தம்பி, அவன் எங்களை பாத்துக்கறது இல்ல, பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு எங்களை விட்டு போயிட்டான், ஏதாவது கேட்டா சண்டைக்குதான் வரான் ” என்றார்.

” நீங்க முன்னாடி என்ன வேலை பண்ணிட்டு இருந்தீங்க ” என்றேன்.

” தம்பி, மில் வேலை, அதுதான் 35 வருஷம் செய்தேன், பிறகுதான் வெளிய வந்து சும்மா இருந்து இப்ப இரண்டு வருசமா வாட்ச்மன் வேலை பாக்குறேன் ” என்றார்.

” சொந்த வீடு இருக்கா ” என்றேன்.

” இல்ல தம்பி, வாடகை வீடுதான், அதும் முன்ன போகியதுக்கு 3 லட்சம் கொடுத்து இருந்தது, சம்சாரதுக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரி செலவுக்கு அதையும் வாங்கிட்டோம், இப்ப அதே வீட்டுக்கு மாசம் 6 ஆயிரம் கொடுத்துட்டு அங்கேயே இருக்கோம் ” என்றார்.

” இங்க என்ன சம்பளம் உங்களுக்கு ” என்றேன்.

” நாங்க எஜென்சி வழியா வரவங்க, லீவு பிடித்தம் எல்லாம் போக 6 -7 ஆயிரம் ரூபா வரை கிடைக்கும் ” என்றார். நான் சற்று அதிர்ச்சி ஆகிவிட்டேன்.

” 6 ஆயிரத்தை வாடகைக்கு கொடுட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ” என்றேன்.

” எப்படியோ சமாளிக்கிறோம் தம்பி “என்றார், பிறகு ” மாசம் 5 கிலோ அரிசி இருந்தா எங்க இரண்டு பேத்துக்கும் போதும் ” என்றார்.

” அய்யா, ஏதாவது 2-3 ஆயிரம் வாடைக்கு கொடுக்கற அளவுக்கு வீட்டை மாத்துக்குங்க, இரண்டு பேருக்கு எதுக்கு 6 ஆயிரம் ரூபா வீடு ” என்றேன்.

” தம்பி, சம்சாரம் கால்ல கொஞ்சம் பிரச்சனை, டாய்லெட் வசதி கொஞ்சம் வேணும், இந்த வீட்டுலதான் அது இருக்கு, அதான் ” என்றார், மேலும் ” ஆனா வீடும் தேடிட்டு இருக்கோம் ” என்றார்.

” வேற சொத்து ஏதும் இல்லையா ” என்றேன்.

“இல்ல தம்பி, மில்லுல இருந்து வெளிய வரும்போது கைல 4-5 லட்சம் சேமிப்பு இருந்தது, எதிர்காலத்துக்கு அது போதும் னு நினைச்சேன், பையன் தொழில் பண்றேன் னு எல்லாத்தையும் வாங்கி அழிச்சுட்டுட்டான் ” என்றார் வருத்தத்துடன், நான் முதல் குழி முடித்து இன்னொரு குழியை எடுக்க ஆரம்பித்து இருந்தேன்.

” ஏன் கொடுத்தீங்க ” என்றேன்.

” தொழில் ஆரம்பிக்கிறேன்னு அடேம்பிடிச்சான், சரி எப்படியும் அவன்தான நம்மளை பார்த்துக்க போறான் னு நினைச்சேன், அப்பறம் அவன் நல்லா வரணும் னு ஆசைப்பட்டு கொடுத்தேன், மொத்தமா அழிச்சுட்டான் ” என்றார்.

” உங்க பையன் இப்ப என்ன பன்றார் “என்றேன்.

” இப்ப மறுபடியும் மருமக வழியா வந்த பணத்தில் மாவு அரைக்கற ரைஸ்மில் போட்டிருக்கான், நல்லா ஓடுது, மருமக பணம்கிறதுனால அவ ராஜ்ஜியம்தான், எங்களை இரண்டு பேரும் சேர்ந்து தொரத்தி விட்டுட்டாங்க ” என்றார்.

எனக்கு அவர் மகன் மேல் கோபம் வந்தது, ” போலீஸ் ஸ்டேஷன் போயிடுங்க, பணம் வாங்கி, இப்ப பாக்க மாட்டேன்கிறான் னு புகார் கொடுங்க ” என்றேன்

” போயிட்டோம் தம்பி, ஸ்டேசன் ல மாசம் 4 ஆயிரம் அவன் எங்களுக்கு கொடுக்கணும் னு பேசி முடிச்சாங்க, இரண்டு மாசம் கொடுத்தான், அப்பறம் ஏதும் தரல, அப்பறம் நானும் விட்டுட்டேன் ” என்றார்.

நான் தளர்ந்து ” உங்க பொண்ணுங்க ஏதும் கொடுக்கறது இல்லையா ” என்றேன்.

” அவளுக நாங்க ஏதும் கொடுக்க மாட்டேன்கிறோம் னு சண்டை போடறாளுக ” என்றார். நான் குழி எடுக்கும் வேலையை முடித்திருந்தேன், போர்ட்டை அப்படியே எடுத்து வந்து நிறுத்தினால் போதும், இன்னொரு ஆல் அந்த இன்னொரு கால் பக்கம் பிடிக்க வேண்டும், அப்படி பிடித்தால் இருவருமாக சேர்ந்து அழகாக கொண்டு வந்து நிறுத்தி விடலாம், அய்யாவால் தூக்க முடியாது, அவரால் முடியாமல் ஆகி சரிந்து விட்டால் போர்டில் இருக்கும் பிளக்ஸ் கிழிந்து விடும், என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது வாசலில் போய் கொண்டிருந்த ஒருவரை வாட்ச்மன் அய்யா அழைத்தார், கொஞ்சம் எனக்கு உதவுமாறு அவரிடம் வேண்டினார், அவருக்கு அந்த நபரை ஏற்கனவே தெரியும் போல, அவர் சரி என்று வந்து எனக்கு உதவினார், இருவருமாக சேர்ந்து போர்ட்டை கொண்டு போய் நிறுத்தினோம், இரு கால்களும் சரியாக குழிக்குள் போய் அமர்ந்து கொண்டது. ஏற்கனவே நான் பொருக்கி எடுத்து வைத்திருந்த ஜல்லி கல்களை குழிக்குள் போட்டு போர்ட் கால்களை இறுக்கினேன், போர்ட் அழகாக நின்று விட்டது. ஒரு பக்கம் கொஞ்சம் இறங்கி இருந்தது, அதையும் சரிசெய்து முடித்தேன், வாட்ச்மன் அய்யா அருகில் வந்து ” போர்ட் நல்லா இருக்கு தம்பி ” என்றார்,   போர்ட் நிறுத்த ஒத்துழைத்த நபர் கிளம்பினார், அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன்.

பிறகு அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன், அய்யாவும் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

” தம்பி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா ” என்றார்.

” இல்லைங்க ” என்றேன்

” ஏன் இன்னும் பண்ணல ” என்றார்.

” உங்களை போல கஷ்டப்படாம இருக்கலாம்ல, அதான் ” என்றார்.

சிரித்து விட்டார், நான் உடன் புன்னகைத்து கொண்டேன்.

பிறகு அவரிடம் “நீங்க வருமானம் இல்லாம எப்படி சமாளிக்கறீங்க, அதுதான் என் மண்டைல ஓடிட்டே இருக்கு ” என்றேன், உண்மையில் அந்த திகைப்பு இன்னும் மனதில் மறையாமல் ஆக்கிரமித்து இருந்தது, வருமானம் முழுதும் வாடகைக்கு போய் விட்டது என்றால் பிறகு உண்ண, பிற செல்வவுகள் எல்லாம் எப்படி இவர் சமாளிப்பார் என்பதுதான் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.

” தம்பி, சம்சாரம் அடிக்கடி சொல்லிட்டு இருக்கா, மருந்து ஏதாவது சாப்பிட்டு இறந்து போயிடலாம் னு, வாடகை வீட்டுல இருந்துட்டு அப்படி பண்ணலாமா, அப்பறம் இப்படி இறந்தா நம்ம புள்ளைகளை பெத்தவங்களை பாத்துக்காம இப்படி ஆகிட்டாங்க னுதான சொல்வாங்க, என்ன இருந்தாலும் நம்ம புள்ளைக மேல அந்த பேரு விழுந்திட கூடாதுல்ல ” என்றார். அவர் கண்களை பார்த்து கொண்டிருந்தேன், அவை உணர்ச்சிகள் அற்றவையாக வெறுமையை சொல்பவையாக இருந்தன.

” பசங்களும், நாங்க எப்ப போய் சேருவோம், தொல்லை நீங்கும் னு காத்துட்டுதான் இருக்காங்க ” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை, வந்த பணியை முடித்து விட்டிருந்தேன், கம்பெனி ஒனருக்கு போனில் கூப்பிட்டு முடித்து விட்டதை சொன்னேன், அவர் அதை போட்டோ எடுத்து வாட்சப் ல் அனுப்ப சொன்னார், அதை செய்து முடித்தேன். இனி கிளம்ப வேண்டியதுதான், பர்ஸ் எடுத்து திறந்து பார்த்தேன்,300 ரூபாய் இருந்தது, பெட்ரோல், உணவு என 200 ரூபாய் எனக்கு இன்று வேண்டும், மீதி 100 ரூபாய் எடுத்து வாட்ச்மன் அய்யா விடம் கொடுத்து ” டீ சாப்டுக்குங்க ” என்றேன். அவர் சட்டென குழந்தை போல மகிழ்ந்து வாங்கி கொண்டார். வருகிறேன் என்று சொல்லி பைக் எடுத்து கிளம்பினேன். அம்மா நேற்று பணம் அனுப்ப சொல்லி போன் செய்திருந்தது ஞாபகத்திற்கு வந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *