நாலு அடி உயர கோழி முட்டைக்கு கைகால் முளைத்து, அது சேலை உடுத்தி பெண் போல இருந்தால் எப்படி இருக்கும், பார்வதியம்மா கிட்டத்தட்ட அப்படி இருப்பாள். வெண்குஷ்டத்திற்கு அருகில் நிற்கும் வெண்மை நிறம், நல்ல கருமையான சுருளற்ற முடி,அடர்த்தியான புருவம், சிரிக்கும் கண்கள், எப்போதும் நெற்றியில் இருக்கும் சந்தனக் கீற்று, அவள் அணிந்திருக்கும் தாலி கோர்த்த தங்க முறுக்கு சங்கலி பத்து பவுனுக்கு மேலிருக்கும். கழுத்து என்று எதுவும் அவளுக்கு இல்லை. தலையையும், உடலையும் இணைக்கும் புள்ளியில்  குட்டிப்பாம்பு அளவுக்கு இருக்கும் தங்கச் சங்கலி தொங்கிக் கொண்டிருக்கும். குட்டைக்கைகள், உப்பிய கன்னங்கள் எல்லாம் மைதா மாவில் பிசைந்து உருவாக்கியவை போல இருக்கும். அந்த இரு கைகளிலும் ஒவ்வொரு குண்டு வலையல்கள் காப்பு போல. மணிக்கட்டை வெட்டினால்தான் வளையலை உருவ முடியும் என்று தோன்றும். நடப்பதை விட இவள் நேர்கோட்டில் உருண்டு சென்றால் எங்கும் சீக்கிரமாக சென்று விட முடியும் என்று தோன்றும். இவளுக்கு நேரெதிர் சங்கரன் அண்ணன். குண்டு மட்டும் இருந்த ஒரே ஒற்றுமை. மற்றபடி பார்வதியம்மாவை விட இரு மடங்கு உயரம், சிரிக்காத முகம், பார்வதியம்மா பேசி சாவடிப்பாள் என்றாலும் இவர் பேசினால் மழை வந்துவிடும் அளவுக்கு அளவான பேச்சு கொண்டவர். காலையில் ச்செட்டக் ஸ்கூட்டர் எடுத்து வாசலில் நிறுத்தி அதற்கு ஒரு குளியல் போட்டு, துவட்டி எடுத்து முடித்து பிறகு வெளி திண்ணையில் அமர்ந்து காப்பி குடித்தபடி பேப்பர் பார்த்து, வீட்டின் உள்ளே போய் ஒரு மணிநேரம் கழித்து வெள்ளை சட்டை, வெள்ளை வெட்டி, வாரிய தலை என வெளியே வந்து சப்பல் போட்டு ஸ்கூட்டரை எடுத்தார் என்றால், இரவு எட்டு மணிக்குதான் வீடு திரும்புவார்.

சங்கரன் அண்ணா ஸ்கூட்டர் எடுக்கும் போது எப்போதும் வாசலில் பார்வதியம்மாவைக் காண முடியும். சங்கரன் அண்ணா ஸ்கூட்டர் கிக்கரை மிதித்து ஜீவன் கொடுத்து ஏறி அமர்ந்த பிறகு ஒரு முறை திரும்பி வாசலில் இருக்கும் பார்வதியம்மாவை பார்ப்பார். பதிலுக்கு பார்வதியம்மாவும். இந்த விடைகொடல் முடிந்த பிறகு பார்வதியம்மா உள்ளே போகாமல் திண்ணையில் அமர்ந்து வருவோர் போவோரிடம் பேசிக்கொண்டு இருப்பார். தெருவில் விளையாடும் என்னிடம் எல்லாம் பேசி, ஏதாவது கேட்டு சிரிக்க வைப்பாள். உண்மையில் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது நேரம் போக்க அல்ல, அதுவொரு காத்திருப்பு. அந்தக் காத்திருப்பு ஒரு 10-20நிமிடம் ஓடும். பிறகு சங்கரன் அண்ணா போன திசைக்கு எதிரான திசையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடக்கூடிய தரத்தைக் கொண்ட கிட்டத்தட்ட எலும்புடல் போல தோற்றமளிக்கும் மொபைட்டில் ஒரு ஒல்லியான உயரமற்ற மனிதர் வருவார். அவர் பெயர் பாஸ்கர் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அவர் பார்வதியம்மாவுக்கு தூரத்து உறவு சொந்தம்,   தம்பி முறை, ஆனால் முறை மட்டுமே!  இதெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் என் போதாத காலம் இவர்களை அறிந்த மூன்று வருடம் கழித்து சங்கரன் அண்ணாவிடம் பணியாற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதனால்தான்!

பத்தாவது வரை போதும் என்று வீட்டில் வேலைக்கு போக சொல்லி விட்டார்கள். எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட நிற்க முடியவில்லை. பிறகு அம்மா சொல்லி ரகு அண்ணாதான் சங்கரன் அண்ணா கடையில் சேர்த்து விட்டார். அது ஒரு சின்ன துணி கடை. கிட்டதட்ட பண்டிகை காலம் தவிர மற்ற நாட்களில் துணி வாங்க யாருமே வர மாட்டார்கள், சங்கரன் அண்ணா கல்லாவில் எப்போதும் ஒரே வகையான முறைக்கிறாரா பார்க்கிறாரா என்று பிரித்தறிய முடியாத  முகபாவனையுடன் இருப்பார். அவருக்கு என்று நண்பர்கள் உண்டு. சரியாக அந்தந்த நேரத்தில் வந்து விடுவார்கள். அது பெரும்பாலும் டீ அருந்தும் நேரமாக இருக்கும். எல்லோரும் ஏதாவது பேசி கொண்டே இருப்பார்கள் . அரசியல், ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என ஆரம்பித்து வாஜிபாய், நரசிம்மராவ் என இந்திய அளவுக்கு போய் பிறகு சினிமாவிற்குள் குதித்து எங்கெல்லாமோ ஓடும்! ஆரம்பித்தில் சுவாரசியமாக கவனித்தேன். பிறகு புரிந்தது இவர்கள் தினமும் பேசுவது கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று. அதன்பிறகு அவர்கள் பேசுவதை கவனிப்பதை விட்டு விட்டு என் சொந்த பகல் கனவுகளில் மிதப்பேன். எனக்கு இருந்தே ஒரே பிரச்னை தூக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்றுதான். மதியம் வரை கடத்தி விடலாம், சாப்பிட்ட பிறகு தூக்கம் சொக்கும் ஆனால் தூங்க முடியாது. இப்படி அசுவாரஸ்யமாக போய் கொண்டிருந்த எனக்கு குறுகுறுப்பும், சுவாரஸ்யமும், பதப்பதைப்பும் நிகழ்ந்தது, ஒருமுறை சங்கரன் அண்ணா உணவு எடுக்க மறந்து என்னை போய் எடுத்து வர சொன்ன பிறகுதான்.

சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டை பார்த்த போது முன் கதவு திறந்து இருந்தது. அந்த திறப்பு வழியாக வாசலில் இருந்த படியே உள்ளே இடதுபுறம் இருந்த அறை பாதி தெரிந்தது, அதில் பார்வதி அம்மா வெறும் பிரா மற்றும் பாவாடை அணிந்து கட்டிலில் அமர்ந்து இருந்தது தெரிந்தது. கொஞ்சம் தள்ளி பாஸ்கர் அண்ணா வெறும் மார்பும் லுங்கியும் கட்டி அமர்ந்திருந்தார். வெறும் ஒரு கணம்தான் பார்த்து இருப்பேன். எப்படி இப்படி துல்லியமாக கவனித்தேன் என்று ஆச்சிரியம் அந்த பரபரப்பிலும் தோன்றியது. பிறகு பார்வதியம்மா என்று வாசலில் இருந்து கூப்பிட்டேன், வரேன் என்று சத்தம் மட்டும் உள்ளே இருந்து வந்தது . பார்வதியம்மா வந்தாள். பார்க்க அவசரத்தில் சேலை கட்டியது தெரிந்தது. எப்போதும் இருக்கும் குளித்த முகமும், சந்தன குறியும் இல்லை. தூங்கி எழுந்தவள் போலத் தோன்றினாள். கதவைப் பார்த்து சற்று குழப்பம் கொண்டவளாக “நீதான் திறந்தாயா, சாத்திதானே இருந்தது ” என்றாள்.

“இல்லை திறந்து இருந்தது” என்றேன்.

 ” உள்ள வந்தியா ” என்றாள்.

” இல்லை, ஏன் கேக்கறீங்க? ” என்றேன்

” சும்மாதான் கேட்டேன், உள்ள வா ” என்றாள். உள்ளே சென்ற போது பாஸ்கர் அண்ணா பேண்ட் சர்ட் அணிந்தவராக இருக்கையில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததை உணர்ந்து நிமிர்ந்து பார்ப்பவர் போல முகம் பார்த்தார், “மாமாட்ட வேலைக்கு இருக்கையா, உன்ன முன்னாடி பார்த்து இருக்கனே ” என்றார்.

“எங்க வீடும் இந்த தெருலதான், நான் உங்களை நிறைய முறை பார்த்து இருக்கேன் ” என்றேன்.

அவர் புன்னகைத்து மெல்ல தலையாட்டினார்.  பார்வதியம்மா கொடுத்த உணவுக் கூடையை வாங்கி கிளம்பினேன்.

இதை யாரிடம் சொல்வது என்று ஒரே ஆர்வம். இரவு கடை அடைத்த பிறகு நேராக சரவணனைப் பார்க்கச் சென்றேன்.அவனும் எங்கள் தெருதான். +1 படிக்கிறான், நானும் +1 படிக்க வேண்டியது, ஆனால் வேலை செய்கிறேன். அவனைப் பார்த்ததும் பார்க்காததுமாக முதலில் இந்த விசயத்தைதான் காட்சி பூர்வமாக விலாவாரியாக சொன்னேன். பார்வதியம்மாவின் உருண்டு திரண்டிருந்த தொப்பையையும் சேர்த்து! ஒன்றுமே சொல்லாமல் வெறுமனே கேட்டு கொண்டிருந்த சரவணன் நான் முடித்த பிறகு ” சரி, புதுசா ஏதாவது சொல்லு ” என்றான். எனக்கு தூக்கிவாரி போட்டது ” என்னடா சொல்ற ” என்றேன். ” டே, இதெல்லாம் ஊருக்கே தெரியும்டா ” என்றான். எனக்கு என் பரபரப்பு இப்படி சட்டெனெ வடிந்ததில் வருத்தம் ஏற்பட்டது, திடீர் என ஆர்வம் வந்து ” இது சங்கரன் அண்ணாக்கு தெரியுமா ” என்றேன்.அவன் ” ஊருக்கே தெரியும் போது அவருக்கு தெரியாம இருக்குமா ” என்றான். ஆனால் பிறகான நாட்களில் நான் அறிந்தது அவருக்கு இந்த உறவு எதுவும் தெரியவில்லை என்பது.

உண்மையில் எப்படி இதைக் கூட தெரியாமல் இருக்கிறார் என்று வியப்புதான் வந்தது.ஏனெனில் இந்த உறவை வைத்துதான் அவரை தெருக்காரர்கள் எல்லோரும் கிண்டல் அடிக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த நாட்களில் அறிந்தேன். சங்கரன் அண்ணா மீது பரிதாபம் வந்தது.எப்படியாவது அவரிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சொல்ல விரும்பி நான் கோர்த்தெடுத்த வார்த்தைகளும் நான் சொல்லும் கணத்திற்காக வாய் நுனியில் காத்து இருந்தது, ஆனால் சமயம் அமையாமல் தள்ளித்தள்ளி போய்க்கொண்டிருந்தது. இந்த நாட்களில் சங்கரன் அண்ணாவை நெருங்கி கவனித்து கொண்டிருந்தேன்.

முதல் ஆச்சிரியம் தெருவில் அவருக்கு யாருமே நண்பர்கள் இல்லை. கடைக்கு வரும் நண்பர்கள் எல்லோரும் வெளி நண்பர்கள். இதுதான் அவருக்கு தகவல் போய் சேராததன் முதற்காரணம் என்று தோன்றியது. ஆண்டவன் இந்த செயலுக்காகத்தான் என்னை இங்கு வந்து சேர்த்தினானோ என்று எண்ணிக்கொண்டேன். பிறகு ஒருமுறை அவர் கல்லாவில் அமர்ந்த படி தன் நண்பர்களுடன்  பேசும் போது பேச்சில் காமம் பேசுபொருளாக இருக்கும் போது அவரது கண்கள் மின்னுதை கவனித்தேன்!  மேலும் வேறு பேச்சில் ஒருமுறை கூட பார்வதியம்மா வந்தது இல்லை, மனைவி இருப்பதையே முற்றிலும் மறந்தவராக எனக்கு அவர் தோன்றுவார். ஒருமுறை விடுமுறை நாளில் என்னை வீட்டிற்கு உணவருந்த அழைத்தார், கண்டிப்பான முதலாளி என்றாலும் என் மீது அவருக்கு பாசம் உண்டு என்பதை அறிவேன். அவருக்கு திருமணம் ஆகி இந்த இருபது வருடங்களில் வாரிசு ஏதும் இல்லை என்பதும் என் மீது அவர் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒரு காரணம்! வீட்டில் சென்றது எனக்கு தலைகீழான குழப்பத்தை அளித்தது.

வீட்டில் பாஸ்கர் அண்ணாவும் இருந்தார், உணவு டேபிளில் நாங்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம், பார்வதியம்மா உற்சாகமாக பரிமாறினார்கள். இந்த 15-20 நிமிடங்களில் சங்கரன் அண்ணாவிற்கும் பார்வதியம்மாவிற்கும் அன்பை நன்றாக உணர முடிந்தது. பார்வதியம்மா சங்கரன் அண்ணா மீது கொண்டிருந்த அன்பு தூய்மையானது, மாசுமறுவற்றது என்று தோன்றியது. பாஸ்கர் அண்ணாவும் பேச்சில் சிரிப்பில் இயல்பாகக் கலந்து கொள்கிறார். நான் குழப்பம் மிகுந்தவனாக ஆனேன்!

பிறகு மெல்ல மெல்ல சில விஷயங்களை உணர்ந்தேன். அவருக்கு தன் மனைவி மீது சின்ன சந்தேகம் கூட இல்லை. கூடவே அவர் காலையில் கிளம்பினால் கடை பூட்டி திரும்பும் இடையில் 8 மணி முன்பு வீடு பக்கம் வருவதே இல்லை. இடையில் ஒரு கலவர சூழல் வந்து கடைகள் சாத்தப்பட்ட போதும் கூட வேறு எங்கெங்கோ சென்று இரவு எட்டு மணிக்குதான் வீடு திரும்பினார். மேலும் என்னவென்று உணரமுடியாத ஒரு வெறுப்பு அவருக்கு தெருக்காரர்கள் மீது இருந்தது.ஆனால் கடையில் இந்த இயல்புக்கு நேர்மாறாக கடையில் வெறுப்பு அற்றவறாக கடைக்கு வரும் ஒவ்வொருவரையும் மதிப்பவராக இருந்தார். முக்கியமாக சாதியோ, வசதியையோ கொண்டு ஒருவரை பார்க்கும் மனநிலையே இல்லாதவராக இருந்தார். இன்னொன்று பாஸ்கரிடம் அவர் பேசி பார்த்தது இல்லை. ஆனால் அவருக்கு ஒருமுறை உடல்நலம் இல்லாது ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்த போது என்னை அவர் கூடவே இருந்து பார்த்து கொள்ளும் படி செய்தார். ஆஸ்பத்திரி செலவை இவர்தான் கொடுத்தார். ஒவ்வொன்றும் இப்படி ஏதும் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல எனக்கு இந்த வேலை பிடிக்காமல் இருந்தது. அம்மாவும் ” ஏதாவது கத்துக்கற மாதிரி வேலைக்கு போக பாருடா ” என்று சொல்லி கொண்டிருந்தாள்.எனக்கு போவதற்குள் சங்கரன் அண்ணாவிடம் எப்படியாவது விசயத்தை சொல்லிவிட வேண்டும் என்ற உறுதி இருந்தது.

சில நாட்கள் போய் இருக்கும், கடையில் கல்லாவில் இருந்த சங்கரன் அண்ணா சட்டென நெஞ்சை பிடித்து படபடப்பா இருக்கு என்றார். எனக்கு பயம்வர பக்கத்து கடைக்காரரை கூப்பிட்டு வந்தேன். அதற்குள் மயங்கி இருக்கையிலேயே சாய்ந்து விட்டார், பக்கத்து கடைக்காரர் தன் காரை எடுத்து அவரை எடுத்து ஆஸ்பத்திரி கொண்டு போனார், கூட நானும் இருந்தேன், முதல் மாரடைப்பு, பிழைத்து கொண்டார். அந்த ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன், கூட பார்வதியம்மாவும், அவருக்கு துணையாக பாஸ்கர் அண்ணாவும். அவ்வளவு கவனித்து கொண்டார்கள் சங்கரன் அண்ணாவை. கடை ஒரு மாதம் திறக்க வில்லை, எனக்கும் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால், என் ஊதியம்தான் வீட்டின் முக்கிய வருமானம் என்பதால் வேறு வேலைக்கு போய்விட்டேன், டூவீலர் ஒர்க்ஷாப் வேலைக்கு, எனக்கு பைக் பைத்தியம் இருந்ததால் அந்த வேலையில் உற்சாகமாக இறங்கி விட்டேன்.

இருபது ஆண்டுகள் கழித்து இதையெல்லாம் யோசிக்கும் போது, சங்கரன் அண்ணாவிடம் சொல்லாமல் விட்டத்தை நினைவு கூறும்போது கடவுள் என்னை ஒரு பாவம் செய்வதில் இருந்து காப்பாற்றினார் என்பதை உணர முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *