இரு சக்கர வாகனங்கள் உள்ளே வந்து கொண்டும் வெளியே சென்று கொண்டும் இருந்தன ,சனிக்கிழமை என்பதால் கூட்டம் அப்பியிருந்தது , ஆட்களின் சத்தங்களும் வண்டிகளின் சத்தங்களும் விடாமல் இறைந்து கொண்டிருந்தன . இந்த பகுதியில் இந்த டாஸ்மாக்தான் நிறைய இடவசதி கொண்டது ,மற்ற டாஸ்மாக்களை ஒப்புநோக்க கொஞ்சம் சுத்தமும் , கிடைக்கும் சைடிஸ் பண்டங்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகத்திலும் இருக்கும் . சதீஷ் உள்ளே வரும் வண்டிகளை பார்த்தபடி திருப்பதி அண்ணாவிற்காக காத்திருந்தான் , ஒவ்வொரு வண்டியும் அவரா என்று பார்த்து பார்த்து ஏமார்ந்து நொந்து கொண்டிருந்தான் , இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பார்க்கலாம் , வர வில்லையேனில் கிளம்பி விடலாம் எனும் மனநிலைக்கு வந்து விட்டிருந்தான் , அப்போது ஒரு பழைய ஹீரோஹொண்டா வண்டி அவன் அருகில் வந்து நின்றது , பின்னால் திருப்பதி அண்ணா இருந்தார் ,அவ்னை பார்த்து புன்னகைத்து ‘கொஞ்சம் லேட்டாகிடுச்சு ” சொல்லியபடி வண்டியில் இருந்து இறங்கி நின்றார் . வண்டியை ஓட்டி வந்த பையனை இதற்கு முன்பு சதிஷ் பார்த்தது இல்லை . திருப்பதி அண்ணா பையனிடம்” நீ கிளம்பிக்க ” சதிஷிடம் வரும்படி சைகை காட்டி உள்ளே நடந்தார் , சதிஷ் ” பையன் யாரு ,புதுசா இருக்கான்” என்று கேட்டான், “தெரிஞ்ச பையன் ” என்று சொல்லியபடி திருப்பதி அண்ணா காலி டேபிள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தார்.
டேபிள் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் சுத்தமாக இருந்தது , இருவரும் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர் , டாஸ்மாக் எங்கும் பிளாஸ்டிக் டேபிள்கள்தான் ,அடர் பச்சை நிறங்களில் இருக்கும் ,முதல் பார்வையில் அழுக்கு தெரியாது ,உற்று பார்த்தால் எண்ணெய் பிசுபிசுப்புகள், அழுக்குகள் தெரியும் . ஆடர் கேட்க ஒரு பையன் வந்து நின்றான் , கைலி , பனியன் அணிந்திருந்தான் , ” அண்ணா ,கூட்டம். அதிகமா இருக்கு ,சீக்கிரம் சொல்லுங்க ” என்றான் , திருப்பதி அண்ணா ” vsop half , ஒரு லிட்டர் வாட்டர் , நிலக்கடலை ஒரு பிலேட் ” என்று சொல்லியபடி சதிஷை நோக்கி “உனக்குடா” என்றார் ,சதிஷ் “மரவள்ளி கிழங்கு , முட்டை போண்டா” என்று சொன்னான் , பிறகு திருப்பதி அண்ணா சட்டை மேல் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்து அந்த சர்வர் பையனிடம் நீட்டினார் , பிறகு சட்டை மேல் பட்டனை கழட்டி சட்டையை சற்று பின்னுக்கு தள்ளி காலை சற்று நீட்டி இருக்கையில் சாய்வாக அமர்ந்தார் , ” சதிஷு, வந்த பையன் யாரு தெரியுமா ” என்றார் .
ஆறுமாதம் முன்புதான் திருப்பதி அண்ணாவின் இன்னொரு பக்கத்தை சதிஷ் அறிந்திருந்தான் , அப்போது மழை பெய்து கொண்டிருந்தது , திருப்பதி அண்ணாவின் மனைவி செண்பகம் அக்கா ஃபோனில் அழைத்து உடனே வீட்டிற்க்கு வர சொன்னார் , பேச்சில் அழுகையும் கலந்திருந்தது , மழை நின்ன பிறகு வரேன்க்கா என்றான் , இப்பவே வாடா என்று கத்தினாள் செண்பகம் அக்கா, வரேன் என்று சொல்லி ,ஐந்து நிமிடத்திற்குள் மழையில் நனைந்த படி வந்து சேர்ந்தான் .
உள்ளே வீட்டில் திருப்பதி அண்ணா தலையை கவிழ்த்த படி அமர்ந்து இருந்தார் , கோபமும் ,பதட்டமும் அவர் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக இருப்பதை சதிஷ் உணர்ந்தான் . வீட்டில் செண்பகம் அக்காவின் தம்பி நிர்மலும் இருந்தான் , கோபம் வெறி போல அவன் முகத்தில் இருந்தது, இரு பெண்கள் கொஞ்சம் தள்ளி நின்று இருந்தனர் , இரு பெண்களும் அழுத படி இருந்தனர் ,செண்பகம் அக்கா வெறியும் அழுகையும் கொண்டவளாக வாசலில் நின்று இருந்தாள்.
சதீஷ் உள்ளே வந்ததும் ” ஏண்டா இதை எங்கட்ட சொல்லல , அக்கா அக்கானு திரிஞ்சு இப்படி நீயும் மறைச்சு ஏமாத்தி இருக்க ” என்றார் , சதிஷ்க்கு என்ன கேட்கிறார்கள் என்று ஒன்றும் புரிய வில்லை,” அக்கா நீங்க என்ன கேட்கறீங்கனே புரியல ” என்றான் , “அப்ப உனக்கும் தெரியாமதான் இந்த ஆள் எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்திருக்கான்” திருப்பதி அண்ணனை பார்த்து செண்பகம் அக்கா கத்தினாள் . வெறியில் அருகில் இருந்த டம்ளரை எடுத்து திருப்பதி அண்ணா மீது வீசினாள் , திருப்பதி அண்ணா அப்போதும் தலை நிமிராமல் சிலை போல இருந்தார் .
செண்பகம் அக்காவின் தம்பி நிர்மல் வந்து அக்காவை தடுத்தான், ” கொஞ்சம்.பேசாம இரு” அக்காவை பார்த்து கத்தினான் , பிறகு திருப்பதி அண்ணா பக்கம் சென்றான், ” மாமா , நடந்ததை விடுங்க ,இனி இப்படி போகாம இருங்க , உங்களுக்கு இருக்கறது இரண்டு பொண்ணுக ,அதை மறக்காதீங்க ” என்றான் , பிறகு வேகமாக வெளியேறினான் , பிறகு அறையில் யாரும் பேசாமல் இருந்தனர் , இதற்கு மேல் இருக்க வேண்டாம் என்று உணர்ந்து அக்காவிடம் “அப்பறம் வரேன்க்கா” என்று சொல்லிய படி கிளம்பினான். மறுநாள்தான் சதிஷ்க்கு என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தது, திருப்பதி அண்ணா சொல்லி !
திருப்பதி அண்ணா மாதம் ஒருமுறை வெளியே கிளம்புவார், பிறகு வந்து அவனிடம் சந்தித்த பெண் பற்றி இவனிடம் சொல்வார் , ஆனால் இதை மறைத்து விட்டார் , வீட்டிற்கே தெரிந்த பிறகுதான் இவனிடம் சொன்னார் ” டே, மூணு மாசம் முன்ன போன இடத்தில் பார்த்த பொம்பள வழக்கமான பொம்பள போல இல்லாம இருந்தா , குடிக்காம இருந்தா , பார்த்தா இதுக்கு வர பொம்பள மாதிரியே இல்ல, பேச்சு கொடுதப்ப ,வீட்டுல கடன் , புருசன் கூட இல்ல, சமாளிக்க முடியாம வந்தேனு சொன்னா , இப்பதான் இதுல விழுந்திருக்கா , எவ்வளவு கடன் இருக்கும்னு கேட்டேன், ஒன்னரை லட்சம் மேல இருக்கும்னு சொன்னா , வீட்டுல வேற யாரு இருக்காங்கனு கேட்டேன் , ஒரு பையன் மட்டும் ,இப்பதான் வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கான்னு சொன்னா , எனக்கு அவளை ரொம்ப பிடிச்சது , நீ சொல்றது உண்மைனா உன் கடனை அடைக்கிறேன், நீ இதுக்கெல்லாம் போகாம என் கூட மட்டும் இருக்கணும் , நான் வாரத்துக்கு ஒரு முறை வந்து போவேன் ,அவ்வளவுதான்னு சொன்னேன், அவ சரினு சொன்னா , மூணு மாசம் கூட ஆகல,அதுகுள்ள அவ என்னோட இன்னொரு சம்சாரம் போல ஆகிட்டா” திருப்பதி அண்ணா இதை சொல்ல சதிஷ் அதை கேட்டு மலைத்து போனான் , பிறகு ” வீட்டுல எப்படி மாட்டுனீங்க ” என்று கேட்டான் , “எல்லாம் அவ பையனால ” என்றார் திருப்பதி . மேலும் ” அவன் இல்லாத நேரம் தான் போவேன் , இந்த முறை போனப்ப , அவன் திடீர்னு வந்துட்டான் ‘ உள்ள ஆளு இருக்கறது தெரிஞ்சு கதவை வெளிய பூட்டிட்டான் , பதறிட்டேன், அவ கெஞ்சி அழுத பிறகுதான் திறந்தான் , வந்தவன் என்னை அரஞ்சுட்டான், ” வெறி பிடிச்சவன் போல இருந்தான் , நேரம் போக கொஞ்சம் நிதானம் ஆனான் , *உங்க வீட்டுல யாரையாவது வர சொல்லுங்கனு சொன்னான் ,எனக்கு திக்குனு இருந்தது , ஆனா அவன் யாரும் வராம என்னை விட மாட்டான்னு தெரிஞ்சது , கண்ணனை வர சொன்னேன் , அவ என்னஏது தெரியாம என் மச்சுனனையும் கூட்டிட்டு வந்துட்டான் ” திருப்பதி அண்ணா சொல்லி முடிக்கும் முன்பே சதிஷ் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான் !
செண்பகம் அக்கா ஒருவாரம் பேசாமல் இருந்து பிறகு பேச ஆரம்பித்து விட்டாள் , இனி அங்கு போக கூடாது இரு பெண்கள் மீது சத்தியம் வாங்கினாள், இருந்தாலும் திருப்பதி அண்ணா மீது சந்தேகம் கொண்டு அவர் இங்கு செல்கிறார் ,எங்கெங்கு இருக்கிறார் என்று தம்பியை விட்டு விசாரிக்க செய்தாள், திருப்பதி அண்ணா அரைமணிநேரம் தாமதம் ஆனாலும் வீட்டில் சண்டை வெடித்தது , சூழல் நிதானமாக இரண்டு மாதம் மேல் ஆனது . பிறகு திருப்பதி அண்ணா சந்தோசம் மிக்கவர் ஆனார் , ஒரு முறை சதிஷ் “பொண்ணுக என்ன சொல்றாங்க” என்று திருப்பதி அண்ணாவிடம் விசாரித்தான் ” “முன்ன விட பாசமா இருக்காங்க ” என்றார் திருப்பதி அண்ணா , சதிஷ்க்கு இதை கேட்க சற்று அதிர்ச்சியாக இருந்தது . “இரண்டாவது இப்பமும் உண்டா” என்று ஒருமுறை பேச்சிடையே கேட்டான் , திருப்பதி அண்ணா புன்னகைத்து “உண்டு “என்றார் !
சதீஷ் சர்வர் பையன் கொண்டுவந்து வைத்த இரு ஒன்யூஸ் டம்ளரில் கட்டிங் அளவிற்கு மது பாட்டிலை திறந்து ஊற்றி பிறகு டம்ளர் நிறையும் அளவு தண்ணீரை ஊற்றி வைத்தான் , பிறகு தட்டில் இருந்த மரவள்ளி கிழங்கு துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டான் , திருப்பதி அண்ணாவை நோக்கி ” யாருனா அந்த பையன் நான் பார்த்ததே இல்ல ” என்றான் , திருப்பதி அண்ணா டம்ளரை எடுத்து அவனிடம் ச்சேஸ் சொல்லிய படி ஒரே முடக்கில் குடித்து முடித்தார் , பிறகு இன்னொரு தட்டில் இருந்த சில வேர் கடலைகளை வாயில் போட்டு ” இரண்டாவதோட பையன் ” என்றார் !
//
ReplyForward
|