தங்கை சித்ரா அடுக்களையில் இருந்து வெளியே வந்து “டீ வைக்கவா” என்றாள். சென்னையில் இருந்து அப்பா உடல்நலம் காரணமாக அவசரமாக நேற்று கிளம்பி வந்திருக்கிறாள். என்னால் இப்போதுதான் வர முடிந்தது. “புள்ளைக வரலையா” என்றேன். ” ஸ்கூல் இருக்கு , அத்தை பாத்துக்குவாங்க அவங்களை ” என்றாள். ” அம்மா எங்க ” என்றேன். ” பக்கத்துல கோயிலுக்கு போயிருக்கு ” என்றாள்.
டீ எனக்கும் அப்பாவுக்கும் சித்ரா கொடுத்தாள். அப்பா வேண்டாம் என்று சொல்லி பிறகு வாங்கி கொண்டார். ஆனால் குடிக்காமல் இருந்தார். “குடிப்பா” என்றேன். அமைதியாக இருந்தவர், சட்டென்று கண் கலங்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்து விட்டார். பிறகு மெல்ல “பயமா இருக்குடா” என்றார். அவர் உடலில் மெல்லிய நடுக்கம் இருந்தது. “ஆஸ்பத்திரியில குணப்பபடுத்திட முடியும்னு சொல்லிட்டாங்கல்ல, அப்பறம் ஏன் பயப்படற” என்றேன் . ” அம்மாவ பாத்துக்கடா ” என்றார் . அதை கேட்டவுடன் எனக்கும் கண்கலங்கி ஒருமாதிரி ஆகி விட்டது . ” ஒன்னும் ஆகாது ,பயப்படாத ” என்றேன் .
பிறகு ஏதும் பேசாமல் இருந்தார். எனக்கு மின்விசிறி ஓடியும் புழுக்கமாக இருந்தது. அப்பாவின் படுக்கைக்கு பின்பு இருந்த ஜன்னலை திறந்து வைத்தேன். அதுவும் பத்தாமல் அருகில் இருந்த பிளாஸ்டிக் இருக்கையை எடுத்து வாசலுக்கு வெளியே போட்டு அதில் அமர்ந்து கொண்டேன் .
எங்கள் வீடு மாடியில் இருப்பதால் வாசலில் செல்பவர்களை அமர்ந்த படியே பார்க்க முடியும். நான் அம்மா வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பின்புறத்தில் யாரோ நிற்பது போல தோன்ற திரும்பி பார்த்த போது அப்பா நின்றிருந்தார். நான் எழுந்து அவருக்கு இடம் கொடுத்து மாடித் திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அம்மா மாடி முழுவதும் செடிகள் வளர்த்து தோட்டம் போல ஆக்கி இருந்தாள். பசுமையான அந்த இடத்தில் அப்பா மட்டுமே வறண்டு சருகாகியவர் போல இருந்தார் .
அவர் ஏதோ சொல்ல வாயெடுக்க நான் அதற்கு முன்பாகவே “ஒன்னும் ஆகாதுப்பா,பயப்படாத ” என்றேன் . அவர் ” உன்னை விட்டா வேற யார்ட்டடா நான் சொல்ல முடியும் ” என்றார் .
அவர் என் நினைவு தெரிந்து தன்னை வெளிப்படுத்தியதே இல்லை, மிக குறைவாகதான் என்னிடம் பேசி இருக்கிறார், அதுவும் பாசமாக எல்லாம் இல்லை. அந்த அன்பியல்பே அவரிடம் இல்லை. எனக்கும் அப்படியான அன்பியல்பு இல்லை. அது ஒருவித நடிப்பு என்றே தோன்றும். அப்பா இப்படி சொன்னதும் அதிர்ந்து விட்டேன். பிறகு என்னை இயல்பாக்கிக் கொண்டு ” சொல்லுப்பா ” என்றேன் .
” நீ சின்ன வயசில் நிறைய குறும்பு பண்ணுவ , சமாளிக்கவே முடியாது . எதுவும் உனக்கு நிறையதான் வேணும், அடம் பிடிப்ப , சித்ரா பொம்மை மாதிரி, எதுவும் கேட்க மாட்டா , எதுக்கும் அடம் பிடிக்க மாட்டா , உன்ன சமாளிக்க முடியாமதான் உங்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன் ” என்றார். நான் மனதிற்குள் புன்னகைத்து கொண்டேன், அது முகத்திலும் வெளிப்பட்டிருக்கும் போல , அப்பா ” சரி நான் உள்ள போறேன் ” என்று எழுந்து உள்ளே சென்றார் .
சிறு வயதில் இருந்தே அப்பாவுக்கும் எனக்கும் எழாம் பொருத்தம்தான். அவருக்கு வேலையில் பிரச்னை என்றால் , கோபம் என்றால் அடி எனக்கு கிடைக்கும் .உதட்டை கடித்து கொண்டு வெறியோடு என்னை அடிப்பார் . ஆனாலும் அவருக்கு என் மீது அன்பு இருந்தது என்று சிறு வயதிலேயே தெரியும். அவருடன் என்னை ஸ்கூல் நேரம் போக மற்ற நேரங்களில் அழைத்து செல்வார். புராட்டா வாங்கித் தருவார் , பால் ,பலகாரங்கள் வாங்கி தருவார். பஸ்ஸ்டாண்ட் தாண்டி வரும்பொழுது அங்கு இருக்கும் இளநீர் கடையில் இளநீர் வாங்கித் தருவார். நான் ஆங்கிலம் கற்றதில் கொஞ்சம் பங்கு அப்பாவுக்கும் உண்டு. நான் படித்தது தமிழ் வழி பள்ளி என்பதால் தமிழ் நன்றாக தெரியும். ஆங்கிலம் சிறுவயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரியாது. அப்போதெல்லாம் கடைகளின் பெயர்ப்பலகைகளை எழுத்துக் கூட்டி வாசித்து சரியா என்று அப்பாவிடம் கேட்பேன். அவர் சொல்வார், 7வது வரை அப்படி கூட்டி சென்றிருக்கிறார். நடக்கும் போது என் கையை விடவே மாட்டார். 7 வது படிக்கும் போது ஒரு சமயம் வர மாட்டேன் என்று சொல்லி ஓடிப் போவது போல அடுத்த வீதி சென்று ஒளிந்து கொண்டேன். அதன் பிறகு அவர் என்னை கூட்டிச் செல்வதை விட்டு விட்டார். இதை முன்பே செய்திருக்கலாமோ என்று அப்போது எண்ணி கொண்டேன் . மெல்ல நான் வளர வளர அப்பாவுக்கு என் மீது இருக்கும் விலகலை புரிந்து கொள்ள முடிந்தது. நான் அப்படியே அப்பாவை போலவே இருப்பேன் ! அம்மாவுக்கு என் மீது அவ்வளவு பிரியம் இருந்தது ! சித்ரா அப்பா செல்லமாக இருந்தாள்.
அம்மா தூரத்தில் வருவது தெரிந்தது. முகம் வைத்து கண்டுகொள்ள முடியா தூரத்தில் இருந்தாள். ஆனால் அவள் வரும் அசைவிலேயே அது அவள்தான் என்பதை உணர முடிந்தது . அம்மா உள்ளே வந்து ” எப்படா வந்த” என்றாள் , “இப்பதான் மா ” என்றேன் ,அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தேன் , சற்று இளைத்து இருந்தாள். ஆனால் முகத்தில் தெளிவு இருந்தது .
“ஆபரேசன் எல்லாம் வேண்டாம், மாத்திரை சாப்பிட்டே சரி பண்ணிட முடியும்னு சொல்லிட்டாங்க , ஆனாலும் ஏதாவது ஆகிடுமோனு பயப்படறாரு ” என்றாள்.
“சொல்லி புரிய வைக்க வேண்டியதுதானே ” என்றேன். ” நாம சொல்லி அவர் கேட்க மாட்டாரு , நல்லா பயந்துட்டாரு ” என்றாள். ” உன்ன பாத்துக்க சொல்றாரு , தினமும் அதைத்தான் சொல்றாரு ” என்றாள். சொல்லும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தன. நானும் சட்டென அழும் மனநிலை அடைந்தேன் . பிறகு ஏதோ யோசித்து ” பயத்தை போக்க வச்சா, அப்பறம் வேற ஒன்னும் பிரச்னை இல்லை, நாளைக்கு நம்ம ராமநாதபுரம் பணிக்கர் கிட்ட கூட்டிட்டு போலாம்னு இருக்கேன், ஏற்கனவே இப்படி அவர் புலம்பி அங்க போய் மந்திரிச்சுதான் சரியாச்சு , இப்பவும் அவருதான் ஒரே வழி , அங்க கூட்டிட்டு போனா சரியாகிடுவாரு ” என்றாள். நான் சரி என்பதை போல பார்த்து கொண்டிருந்தேன். சட்டென எல்லாம் சரியாகி விட்டது போல. பனி விலகியது போல உணர்ந்தேன். செடிகள் , பூக்கள் சூழ் அருகாமை மகிழ் மனநிலையை கொடுத்தது .
சித்ரா வெளியே வந்தாள். என்னருகில் திண்ணையில் அமர்ந்து கொண்டாள். ” உங்கப்பா என்ன சொல்றார் ” என்று கேட்டு புன்னகைத்தாள் . பிறகு அவளே ” பயத்துல ஏதேதோ பேசராரு ,மத்தபடி ஒன்னும் இல்லை ,பயப்படாத ” என்றாள். அவள் திருமணத்திற்கு பிறகு இப்படி நாங்கள் அமர்ந்து பேசியதே இல்லை. அவளும் கணவன் குழந்தைகள் என்று இருந்து விட்டாள். நானும் தொழில், அதன் சச்சரவுகள் என அதிலேயே மூழ்கி விட்டேன். அவள் அருகில் அமர்ந்து இருந்தது இனிமையை அளித்தது. அவள் பற்றிய சிறுவயது ஞாபகங்களாக மனதில் வந்து கொண்டிருந்தது, அவள் தலையை வருடி கொடுத்தேன் . ” நானும் இது போல அங்க நிறைய செடி வளத்தறேன் ,அம்மாவ போல” என்று சொல்லி புன்னகைத்தாள். “புள்ளைகள கூட்டிட்டு வந்திருக்கலாம் ” என்றேன் . ” ஸ்கூல் இருக்குல்ல ” என்றாள்.
காலையிலேயே பணிக்கர் வீட்டிற்கு போய் விட்டோம். ஆனால் அதற்குள்ளாகவே எங்களுக்கு முன்பு அங்கு பத்து பேருக்கு மேல் வந்து விட்டிருந்தனர். அதில் மூவர் இஸ்லாமியர்கள் , ஆச்சிர்யமாக இருந்தது . எங்கள் இடம் வர மிகுந்த நேரம் ஆகி விட்டது. அப்பா புலம்பிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் கேட்க முடியாமல் ஆகி வெளியே வந்து நின்று கொண்டேன். நீண்ட நேரம் கழித்து அப்பாவை கைத்தாங்கலாக பிடித்த படி அம்மா வெளியே வந்து கொண்டிருந்தாள். பின்னால் கூடையும், கை பையும் வைத்தபடி சித்ரா வந்தாள். அப்பா தூக்கம் வந்தவர் போல இருந்தார். நெற்றியில் திருநீறு அப்பி இருந்தது. அம்மா மகிழ்ச்சியுடன் “எல்லாம் சரியாகிடும்னு சொல்லிட்டாரு ” என்றாள். ” அம்மா நா இப்படியே கிளம்பிக்கிறேன் ” என்றேன். ” ஏன்டா ” என்றாள். ” வேலைகள அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் மா ,இரண்டு நாள் கழிச்சி மறுபடியும் வரேன் ” என்றேன். அம்மா சரி என்பது போல தலையாட்டினாள் . சித்ரா கண்களால் விடை கொடுத்தாள் .
நீண்ட நேரம் வண்டி ஓட்டிய களைப்பில் அறைக்குள் வந்தேன். அறையில் நான் மட்டும்தான் என்பதால் எப்போதும் அறை அலங்கோலமாகவே இருக்கும். என்னை தவிர இன்னொரு ஜீவன் உண்டு. அது பிளாக்கி, ஒரு நண்பர் வெளியூர் செல்கிறேன் என்று என்னிடம் கொடுத்து விட்டுப் போனது, இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. அருகில் இருந்தவரிடம் பார்க்கச் சொல்லி விட்டு போயிருந்தேன் , என்னை பார்த்ததும் பரவசமாகி குதித்து ஆடியது. ஆனால் எனக்கு இருந்த உடல் சோர்வு அளித்த களைப்பு காரணமாக எரிச்சல் மனநிலையில் இருந்தேன். இதன் செய்கைகள் அனைத்தும் எனக்கு மேலும் எரிச்சல்தான் கொடுத்தது. எம்பி தன் இரு கால்களை என் மீது வைத்தது , நான் தட்டி விட்டு ” சும்மா இரு ” என்று கத்தினேன். ஆனால் அது அதை புரிந்து கொள்ளாமல் மேலும் என் மீது தாவியது, எனக்கு கோபம் தலைக்கேறி அறையில் இருந்த நெடிய குச்சியை எடுத்து அதை தாக்கினேன். அப்போது என் கீழ் உதடுகளை கடித்து வெறி கொண்ட முகம் கொண்டிருந்தேன். அப்பாவின் முகத்தை போலவே !