அறைக்கதவை தள்ளிப் பார்த்தான் நகுலன். திறக்க வில்லை. உள்ளே தாளிட ப்பட்டிருந்தது . “சித்தப்பா ” என்று அழைத்தான், உள்ளிருந்து மறுகுரல் ஏதும் வராததால் ” சித்தப்பா” என்று சத்தமாக கத்தினான். ஏன் திறக்க மறுக்கிறார் என குழம்பினான் . பிறகு சற்று தள்ளியிருந்த மர ஜன்னலை தள்ளிப் பார்த்தான், அது திறந்து கொண்டது . உள்ளே சித்தப்பா துணியினால் கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி தொங்கிக் கொண்டிருந்தார் . கைகள் தொங்கிக் கொண்டும், தலை முன் பக்கமாகச் சற்று சாய்ந்தும் இருந்தன. கண்கள் வெறித்த படி இருந்தன. நகுலன் “சித்தப்பா ” என்று கூப்பிட்டுப் பார்த்தான் . அவருக்கு அவன் வந்ததே தெரியவில்லை என்பதை நகுலன் உணர்ந்தான் . ஒன்றும் புரியாதவனாக குழம்பி முன் வாசல் நோக்கி ஓடினான் .
அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். சித்தி ஆட்டுகல்லில் மாவு அறைத்துக் கொண்டிருந்தாள், சத்யன் மாட்டுச் சாலைக்கு பக்கத்தில் சட்டை இல்லாமல் டவுசருடன் முதுகு காண்பித்து ஒன்னுக்கு போய்க் கொண்டிருந்தான். வேகமாக ஓடி வந்த நகுலன் அம்மா பக்கத்தில் வந்து நின்று ” ம்மா சித்தப்பா தொங்கிட்டு இருக்காருமா ” என்றான். அம்மா ” விடு தூங்கட்டும் ” என்றாள். நகுலன் ” ம்மா விட்டத்துல துணி மாட்டி தொங்கிட்டு இருக்காருமா, கூப்பிட்டா பேச மாட்டேங்கிராரு” அவன் சொல்லி முடிக்கும் முன்னதாகவே அம்மா எழுந்து அறைநோக்கி ஓடினாள் . சித்தியும் உள்ளே ஓடுவதை நகுலன் விநோதமாகப் பார்த்தான். பிறகு அவனும் அவர்கள் பின்னால் உள்ளே ஓடினான் . சத்யன் எதற்காக உள்ளே ஓடுகிறார்கள் என்று புரியாமல் அவனும் உள்ளே ஓடி வந்தான் .
சித்தி ஊருக்குப் போயிருந்தாள், அம்மாதான் அன்று எல்லா வேலையும் பார்த்துக் கொண்டிருந்தாள் . சித்தப்பா விறகுகளை உடைத்துக் கொண்டிருந்தார் . அருகில் நகுலனும் சத்யனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் . என்றும் இல்லாத விதமாக அம்மா சித்தப்பா அருகில் வந்து ” கொஞ்சம் பேசணும் ” என்றாள். ” உள்ள வாங்க ” என்று சொல்லி உள்ளே சென்றாள். சித்தப்பா ” என்ன அண்ணி ,என்ன விசயம் ” என்று கேட்டபடி உள்ளே வந்தார் .ஆனால் அவரில் மெல்லிய பதற்றம் இருப்பதை நகுலன் உணர்ந்தான் .
உள்ளே அம்மா கண்கள் கலங்கி அழுதவளாக நின்று கொண்டிருந்தாள் . சித்தப்பா ” என்னாச்சு அண்ணி ” என்றார் . அம்மா ” ராணியை கண்டிச்சு வைங்க , உங்க அண்ணா என்ன அடிச்சு கொல்றான் ” என்றாள் . சித்தப்பா திகிலடைந்தவர் போல ஆனார் . அவருக்கு சில மாதங்களாக அந்த சந்தேகம் வந்திருந்தாலும் அதை நினைக்கப் பயந்து மனதிற்கு உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தார் . அப்படி இருக்கக் கூடாது என்று எப்போதும் குலசாமியை வேண்டிக் கொண்டிருந்தார் . தேவையற்ற சந்தேகம் என்று தன்னில் இருந்து ஒவ்வொரு நாளும் நீக்கிக் கொண்டிருந்தாலும் அண்ணா இப்போதெல்லாம் முகம் பார்த்து பேசுவதை தவிர்ப்பதை உணர்ந்தபடிதான் இருந்தார் . ஆனால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அவராகவே எண்ணிக் கொண்டிருந்தார். அண்ணி அவரிடம் நேரடியாகவே சொல்லிய பிறகு முற்றிலும் உடைந்து அழுதார் .
சித்தப்பா அழுதபடி நின்று கொண்டிருப்பதையும் , அம்மா ஏதோ சமாதானம் சொல்வதையும் நகுலன் வெளியே நின்று கொண்டிருந்த படி பார்த்துக் கொண்டிருந்தான் . சத்யன் உடைந்த விறகுகளை எடுத்து நிற்க வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அதை திரும்பிப் பார்த்த நகுலன் அந்த விளையாட்டில் அவனும் இணைந்து கொண்டான் .
“விடு வாசு அழாத , அவகிட்ட நேரா இத கேட்காத , சொல்லாம சொல்லி புரிய வை ” என்று சித்தப்பாவிடம் அம்மாக் சொன்னாள் . ஆனாலும் சித்தப்பா அழுவதை நிறுத்த வில்லை . அம்மா சித்தப்பா அருகில் போய் ” அழாதிங்க” என்றாள். அம்மா ” அழாத வாசு” என்றாள்,அப்போது அம்மா சித்தப்பாவின் தோளில் ஆதரவாக கை வைத்தாள். திரும்ப எடுக்க சில நொடிகள் ஆனது . சட்டென அம்மா சித்தப்பாவை கட்டிக் கொண்டாள், உதட்டில் முத்தமிட்டாள் . சித்தப்பா சில நொடிகள் தடுமாறினாலும் அதற்குள் சுதாகரித்து அம்மாவை கட்டிக் கொண்டார் . அம்மாவை விட மூர்க்கமாக மறு முத்தங்கள் தந்து கொண்டிருந்தார் . அம்மா சட்டென சித்தப்பாவை தள்ளி விட்டு ” இது தப்புடா , அவங்க செஞ்சது நாமும் செய்ய கூடாது ” என்றார் . சித்தப்பா ” இல்ல அண்ணி” என்று சொல்லி அம்மாவின் அருகில் வந்தார் , அம்மா அவரைத் தள்ளி விட்டு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள் . சில கணங்கள் நின்று கொண்டிருந்தவர் பிறகு வேகமாக வெளியே வந்தார் . சத்யனைப் பார்த்தார். வெறி கொண்டவராக ” தேவிடியா நாயே ” என்று சொல்லியபடி கீழே இருந்த சுள்ளியை எடுத்து அடிக்கப் பாய்ந்தார் . சத்யன் அடிக்க வருவதை பார்த்து வெளியே ஓடி விட்டான் . சித்தப்பா சுள்ளியை எறிந்து வீசிவிட்டு, திண்ணையில் அமர்ந்து கொண்டார் . வெறியும் அழுகையும் அவரில் ஒரே சமயத்தில் வந்திருப்பதை நகுலன் பார்த்து ஒன்றும் புரியாமல் “அம்மா” என்று கத்திய படி உள்ளே ஓடினான் . இவன் குரல் கேட்டதும் அம்மா கதவைத் திறந்த படி அறைக்கு வெளியே வந்தபடி “என்னடா” என்றாள். “சித்தப்பா சத்யன அடிக்க போனாரு ,அவன் ஓடிட்டான் ” என்றான் .
அன்று மாலை சித்தி வீட்டுக்கு வந்தது தொடங்கி சித்திக்கும் சித்தப்பாக்கும் ஒரே சண்டைதான் . இடையில் மாட்டிக் கொண்டு அதிகம் அடி வாங்கியது சத்யன்தான் . சத்யன் நகுலனிடம் வீட்டை விட்டு ஓடிப் போக இருக்கும் திட்டத்தை சொன்னவுடன் நகுலன் உடனே அதை அம்மாவிடம் சென்று சொன்னான் . அதன் பிறகு அம்மா அவனை எப்போதும் கூடவே வைத்துக் கொண்டாள் . அவனுக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்தாள், பிரியமாக பார்த்துக் கொண்டாள். நகுலனுக்கு அம்மாவிடம் இவன் ஓடிப் போவது பற்றி சொன்னதை சொல்லி இருக்கக் கூடாது என்று தோன்றியது.
அம்மாவும் சித்தியும் பேசாமலானார்கள் , சித்தியும் சித்தப்பாவும் பேசாமலானார்கள் . அப்பா இந்த பிரச்னை எரியத் தொடங்கிய இருவாரம் வீட்டிற்கு வரவே இல்லை . பிறகு அப்பா வந்த நாளில் இருந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதும் சண்டை நடந்து கொண்டிருந்தது . இந்த முறை நகுலன் அடி வாங்கிக் கொண்டிருந்தான் . ஆனால் அவனுக்கு சத்யன் அளவுக்கு எல்லாம் வீட்டை விட்டுச் செல்லும் தைரியம் இல்லை. அந்த வீதியைத் தாண்டி அவர்கள் பள்ளி செல்லும் வழி தாண்டி வேறு உலகங்களே அவர்களுக்கு தெரியாது .
சித்தப்பா செத்துப்போன நாள் அன்று அதிகாலையில் சித்தப்பாவிற்கும் சித்திக்கும் பெரிய சண்டை நடந்து கொண்டிருந்தது . அறைக்கு வெளியே கெட்டவார்தைகள் வந்து கொட்டிக் கொண்டிருந்தன . எப்போதும் சித்தப்பா குரல் மட்டும்தான் கேட்கும் ,இந்த முறை சித்தியின் குரலும் கெட்டவார்தைகளை கக்கிக் கொண்டிருந்தது . நகுலன் புதிய புதிய கெட்ட வார்த்தைகள் கேட்டு திகைத்தும் அதை உள்வாங்கி கொள்ளும் ஆர்வத்துடனும் இருந்தான் . சத்யன் பயத்துடன் நின்று கொண்டிருந்தான் . ஒரு கட்டத்தில் அறைக்குள் இருவரும் அடித்துத் கொள்ளும் சத்தம் கேட்டது. சட்டென இன்னொரு அறையில் இருந்த அப்பா வெளியே வந்து சித்தப்பா இருக்கும் அறைக் கதவை தள்ளி உள்ளே புகுந்த சித்தப்பா கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . சித்தப்பா தெறித்துப் போய் கீழே விழுந்தார் . அப்பா ” இனி கைய வச்ச கொன்னுடுவேன்” என்றார் . நெடு நேரம் சென்ற பிறகும் சித்தப்பா விழுந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க வில்லை . பிறகு அப்பா வெளியே கிளம்பிச் சென்றார் . அம்மா காபி வைத்து சித்தப்பாவிடம் கொடுத்து பொதுவாக பேசுவது போல ” விடுங்க எல்லாம் சரியாகிடும்” என்றாள் , சித்தியை நோக்கி வந்து அவளுக்கும் காப்பி கொடுத்து ” சண்ட போடாதீங்க ” என்றாள், பிறகு ” அரிசி ஊறப் போட்டிருக்கேன் , கொஞ்சம் மாவாட்டி கொடு ” என்றாள். அம்மாவும் வெளியே வந்து வாசல் கூட்டித் தெளித்து, விரிந்த பூ வடிவிலான சின்ன கோலம் போட்டாள்.
சித்தப்பா மறைந்த பிறகு அப்பா இன்னும் சுதந்திரம் கொண்டவரானார். அம்மாவிடம் ” எனக்கு அவ வேணும், நீ இஷ்டம் இருந்தா இரு ” என்று சொல்லி விட்டார் . அதன் பிறகு அம்மா எதிர்க்கவில்லை . முற்றிலும் ஒழிந்தவள் போல ஆனாள். சித்தி அதிகாரம் கொண்டவள் ஆனாலும் அதை அம்மா மேல் காட்டியது இல்லை . இருவரும் பேசுவது முற்றிலும் இல்லாமல் ஆனது .
அப்பாவுக்கு சத்யன் செல்லப் பையன் ஆனான் . நகுலன் பார்த்தாலே வெறுப்பு கொண்டவர் போல ஆனார் . நகுலனை அவர் அடிப்பதோ திட்டுவதோ இல்லை என்றாலும் நகுலனுக்கு அப்பா தன் மீது அன்பு இல்லாதவர் என்பது புரிந்தது . அவனுக்கு அம்மா மட்டுமே உலகம் என்று ஆனது .
விதி ஆசாரியின் கையாள் ரூபத்தில் அந்த வீட்டில் புகுந்தது . மழைக் காலத்திற்கு முன்பாகவே ஓடுகளைப் பிரித்து கரையான் அரித்த கட்டைகளை மாற்றவும் உடைந்த ஓடுகளை மாற்றவும் வேண்டிய நிலை இருந்தது . அப்பா ஆசாரி ராமனை கூட்டி வந்தார் . அவரோடு சற்குணம் என்ற வெள்ளை நிறம் கொண்ட உயரமான பையனும் கையாளாக கூட வந்தான் . வேலை முடிய மூன்று நாள்கள் ஆனது . காலையில் வந்தார்கள் என்றால் மாலை வெளிச்சம் மறையும் வரை வேலை செய்வார்கள் . அவர்கள் வந்து சென்ற பிறகு ஒரு வாரத்திற்குள் சித்தி காணாமல் ஆனாள். சற்குணமும் காணாமல் ஆனான் . அப்பாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊர் சொல்லும் அளவுக்கு வெறி கொண்டவர் போல ஆனார். மூன்று மாதம் வரை தேடிக் கொண்டிருந்தார் . அப்பா ” அவ நல்லவ , அவன்தான் மந்திருச்சு வசியம் பண்ணிட்டான் ” என்று ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார் . அம்மாவிடம் பழைய உற்சாகம் திரும்ப வந்ததை நகுலன் ஆச்சிரிமாக உணர்ந்தான் . அவனுக்கு பிரியமானதை எல்லாம் அம்மா செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள். சத்யன் அவன் அம்மா இல்லாததை உணராத அளவுக்கு அம்மா அவனையும் பார்த்துக் கொண்டாள் . நாளாக நாளாக அப்பா சோர்ந்து போனார், ஒருநாள் ஆசாரி ராமன் வீட்டிற்கு வந்து அவர்கள் மெட்ராஸ் ஓடிப் போயிருக்கிறார்கள் என்று தான் அறிந்து கொண்ட செய்தியை சொல்லி விட்டுப் போனார், அப்பா மெட்ராஸ் போனதே இல்லை . அவர்கள் மரித்து விட்டார்கள் ,இனி திரும்ப மாட்டார்கள் என்று எண்ணலானார் . பிறகு மெல்ல அப்பாவுக்கு அம்மா மீது பார்வை திரும்பியது . சின்ன சின்ன பேச்சுக்கள் கொடுத்தார் . அம்மா புது மணப்பெண் போல ஓடோடி அப்பா கேட்டதை எல்லாம் செய்து கொண்டிருந்தார் .
நகுலன் அம்மாவுடன் உறங்கிப் போனான் , அருகில் சத்யனும் , நடு இரவில் எப்போதும் போல மூத்திரம் முட்டியதும் அம்மா என்று முனகினான் ,அம்மா மறுகுரல் தராததால் அவள் இருந்த இடத்தில் தடவிப் பார்த்தான் , இல்லாதது உணர்ந்து எழுந்து அமர்ந்தான் . அப்போது வெளியே மற்ற அறையில் இருந்து அம்மாவின் குரலும் அப்பாவின் குரலும் மெலிதாக நகுலனுக்கு கேட்டது .
அப்பா ” சுந்தரியல்லடி நீ ” என்று சொல்வது அவனுக்கு கேட்டது , அம்மா ” இவ்வளவு நாள் அது உங்க கண்ணுக்கு தெரியலையே” என்று சொல்வதும் அவனுக்கு கேட்டது . அந்த அறையில்தான் சித்தப்பா தூக்கிட்டு கொண்டார் என்பது அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது .
