ஒன்றாம் பரிமாணம்
பொந்தன் எழுந்திருக்கும்போது போது மணி காலை பதினொன்று இருக்கலாம் . மெதுவாக தவழ்ந்து போய் சோற்று சட்டியை திறந்தான். அந்த பெரிய மூடியிலேயே சோற்றைக் கொட்டி குழம்பை திறந்து அப்படியே அதில் ஊற்றி பிசைந்து வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். ஒரு பருக்கை விடாமல் தின்று முடித்ததும் தட்டை முழுவதுமாக ஒரு முறை வழித்து அப்படியே கையை வாய்க்குள் விட்டு உறிஞ்சினான். பின்பு கையை வேட்டியிலேயே துடைத்துவிட்டு தண்ணீர் குடத்தின் அருகே தவழ்ந்து போய் வயிறு முட்ட தண்ணீர் குடித்தான் . சாத்தியிருந்த கதவை ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பவும் படுத்துக்கொண்டான்.
அது ஒரு ஒற்றை அறை மட்டுமே கொண்ட ஓட்டு வீடு .முன்னும் பின்னும் இரு கதவுகள் எப்போதும் சாத்தியே கிடக்கும். இருக்கும் ஒரே சன்னலையும் திறப்பதில்லை. காரணம் எதிர் வரிசையில் ஒரு ஆக்கர் கடையில் இருந்து கிளம்பிவரும் ‘பட்டீர்’ ‘ பட்டீர்’ சத்தம். அதுபோக பையன்மார் அடிக்கடி சன்னல் வழியாக இவனைப் பார்த்து ஊளையிடுவார்கள். இரண்டுமே தூக்கத்தின் நிரந்தர எதிரிகள். அந்த தெருவில் அதைப்போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள். வீடுகளுக்கு முன்னால் குப்பைகள் நிறைந்திருக்க, வீடுகளுக்குப் பின்னால் ஒரு மிகநீளமான கருத்த சர்ப்பம் போல சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். வசிப்பிடத்தை சுற்றி கலவையான நாற்றங்களும், தூசுகளும் எப்போதும் சூழ்ந்திருக்கும். தெருவில் மனிதர்களுக்கு இணையாக நாய்களும் பின்புறத்தில் பன்றிக் கூட்டங்களும் அடக்கம்.
தெருவிற்கு வரும் பன்றிகளை நாய்களும் சாக்கடைக்கு வரும் நாய்களை பன்றிகளும் சூழ்ந்துகொண்டு விடாமல் விரட்டி அடிப்பது அன்றாட வாடிக்கை .
பொந்தனுக்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம். சிறு வயதில் மற்ற பையன்மார்களை போல பள்ளிக்கூடத்திற்கு போனவன் தான், ஏதோ ஒரு வெறுப்பில் பள்ளியை விட்டு நின்று ஊர் சுற்ற ஆரம்பித்தான். அப்புறம் ஏதோ ஒரு நாளில் வீட்டிற்குள் வந்து முடங்கியவன்தான். இருபது வருடங்களாக அடைந்தே கிடக்கிறான் கந்தன் தான் அவன் பெயர் . வீட்டிற்குள் அடைந்தே கிடப்பதால் பையன்மார் அவனை பொந்தன் என்று அழைக்கலாயினர். பருத்த வயிறும், வீங்கிய முகமும், மிகச் சிறிய கண்களும், சதா சளி வடியும் மூக்கும், விந்துக்கறைகள் படிந்த மிக அழுக்கான வேட்டியும் பொந்தனின் நிரந்தர அடையாளங்கள். பொந்தன் சட்டை அணிவதில்லை. மலம் சிறுநீர் கழிக்க மட்டும் மெதுவாக தவழ்ந்துபோய் பின்கதவைத் திறந்து சாக்கடை ஓரத்தில் கழித்துவிட்டு வருவான். அப்போது சிறு கற்களை பன்றிக்கூட்டத்தின் மேல் எறிந்து விளையாடுவது அன்றாட பொழுதுபோக்கு. வந்ததும் திரும்ப தூக்கம். தூக்கத்தில் அவனது உலகம் மாறும். தன்னை ஒரு சுந்தரனாக அமைத்துக்கொள்வான். அதி சுத்தமான பெரியவீடு. அறைகள் தோறும் சுகந்தம் வீசும். விதவிதமான தின்பண்டங்கள், உணவுகள், பழங்கள் நிறைந்திருக்கும். அங்கும் இங்கும் சிரித்தபடியே நடமாடுவான். பகட்டான உடை அணிந்திருப்பான். தனியறையில் சுந்தரி அமர்ந்திருப்பாள். ஓ! சுந்தரி. ஜொலிப்பான முகமும் சதைப்பாங்கான உடல்கட்டும் , கிளியின் மொழியும் , ரோஜா வாசமும் அவனை வேகமாக இழுத்து வந்து படுக்கையில் தள்ளும். சுந்தரியோடு பேசி சயனித்திருப்பான். மீண்டும் மீண்டும் சிரித்துக்கொள்வான்.
இரண்டாம் பரிமாணம்
நகருக்கு வெளியே ஒரு பரந்த மைதானம் போன்ற மரக்கடையில் விறகுகளை எடை போட்டுக் கொண்டிருந்தான் இசக்கி. ஒல்லியான உடல்வாகு. வயிறு ஒட்டிப்போய் கை கால்கள் சூம்பி தலையில் முன்முடி இல்லாமல் சிவப்பேறிய அகலக் கண்களுடன் ஒரு பரிதாபத் தோற்றம். பீடி புகைக்கும் போது ஏற்கெனவே ஒட்டியிருக்கும் கன்னங்கள் இன்னும் உள்ளே போய் ஒரு மண்டையோடு தன்னிச்சையாய் புகைப்பது போலிருக்கும். ஒரு மாதிரி மெலிதான பெண்குரல் இசக்கியினுடையது. காலையில் சாப்பாடு ஆக்கி வைத்துவிட்டு வேலைக்கு கிளம்புவான். மரக்கடை முதலாளி ஸ்ரீகண்டனிடம்தான் விபரமறிந்த நாள் முதல் ஊழியம். விறகு வெட்டுவது ,தரம் பிரிப்பது, சில்லுகளை அள்ளி சுத்தப்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு எடை போட்டுக்கொடுப்பது, போக ஸ்ரீகண்டன் சொல்லும் சில்லறை வேலைகளைப் பார்ப்பது. சாயந்திரமானால் கூலியை வாங்கிக்கொண்டு நேராக மதுக்கடைக்குப் போய் மது அருந்திவிட்டு வழியில் சமையலுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு சொக்குப்பிள்ளை பலகாரக் கடையில் கடி ஏதாவது வாங்கிக் கொள்வான். பழபஜ்ஜி உள்ளிவடை அதிரசம் சுக்காபிக்கு பேர்போன ஸ்தலம் சொக்குப்பிள்ளை பலகாரக்கடை.
மனைவி இருக்கும்போதே உடன் வேலை செய்யும் பொன்னியுடன் தொடர்பு. இசக்கியைப் போலவே பொன்னிக்கும் வறுமையான தேகம் , முட்டைக்கண்கள், பெரிய பற்கள். குடும்ப பாடுகளைச் சொல்லிச் சொல்லியே அவள் இரக்கத்தைச் சம்பாதித்து அவ்வப்போது அவளை சுகித்துக் கொண்டிருந்தான். முதலாளியோடு அவளைத் தனிமையில் பார்த்த பிறகு ஒதுங்கிக் கொண்டான். மனைவி இறந்த பிறகு பீடி, குடி, எப்போதாவது நண்பன் சுப்புவுடன் சினிமா.அவ்வளவுதான். இசக்கியின் மேல் எப்போதும் ஒரு பச்சை மரத்தூளின் வாசனை அடித்துக்கொண்டே இருக்கும். வேலையின் இடையே கிடைக்கும் சிறு சிறு ஓய்வு நேரங்களில் எங்கோ ஒரு கானகத்தில் நூற்றாண்டாய் வளர்ந்து மனிதபயன்பாட்டுக்காய் வெட்டி வீழ்த்தப்பட்டு அவன் முன்னே சவமாய் கிடக்கும் மரக்கட்டைகளையும் தன்னையும் ஒப்பீடு்செய்து கொள்வான்.
“ சவத்தெழவுல்லா இந்த வாழ்க்க”
மூன்றாம் பரிமாணம்
பொந்தனும் இசக்கியும் பேசிக்கொள்வதில்லை. காலையில் இசக்கி சமைத்து வைத்து விட்டு வேலைக்கு கிளம்புவதோடு சரி ,இரவு தான் வருவான். வந்தவுடன் பொந்தனின் பக்கவாட்டில் தின்பண்ட பொட்டலத்தை வைத்துவிட்டு சமைக்க ஆரம்பித்து விடுவான். இரவு சாப்பிட்டு முடித்ததும் தெருவிற்கு வந்து ஒரு பீடி பற்ற வைத்து முழுவதும் புகைத்த பின் சிறுநீர் கழித்துவிட்டு வீட்டிற்குள் வந்து படுத்துக் கொள்வான். பொந்தன் முதலில் திண்பண்டங்களை ஆர்வமாக தின்றுவிட்டு சிறிதுநேரம் படுத்திருப்பான் ,பின்பு இசக்கி சாப்பிட்டு வந்து படுத்ததும் சாப்பாட்டு சட்டியை திறந்து முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு அவனும் எதிர் மூலையில் படுத்துக்கொள்வான்.
ஒரு தகப்பனாக இசக்கி பொந்தனை நினைத்து வருந்தாத நாளில்லை.
ஏதேதோ கோயிலுக்கு நேர்ச்சைகள் இருந்து ஏதேதோ விரதங்களும் காணிக்கைகளும் செலுத்தியும் எதுவுமே பலிக்கவில்லை பாறசாலை ஜோசியரிடம் ஒருமுறை பிரசன்னம் கேட்க போயிருந்தான்.
“ அவனொரு ரோகமுள்ள பூச்சயாக்கும். வலிய மடியும் பின்னே மூர்க்கபாவமும் கிடந்து படுத்தும். மண்டைக்காடு கூட்டிப்போய்க்கோ. ப்ராயம் நாப்பதுக்கு சுக ஜீவிதம் வாய்க்கட்டு.”
பொந்தனை நினைத்து பயந்தான் இசக்கி. பள்ளிக்கூடம் போவதை நிறுத்தியபிறகு ஸ்ரீகண்டன் முதலாளியிடம் வேலைக்குச் சேர்துவிட்டிருந்தான். பத்து நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. திரும்பவும் வேலைக்குபோகச் சொல்வேனென்று வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டான். வீட்டை விட்டே வராதவனை எங்கே மண்டைக்காடு வரைக்கும்கூட்டிப்போக. கடைசியாக அவன் வீட்டை விட்டு வெளியே வந்தது அவன் அம்மாவை சுடுகாட்டில் தகனம் செய்ய பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்.
அதற்கே பெரும்பாடாகிவிட்டது.
“போங்கலே கூரிவில்லயலா”
தன்னை நெருங்கியவர்களை அடித்தும் கடித்தும் வைத்தான். வேறுவழியில்லாமல் அவனை ஒரு பன்றியைப்போல கட்டித்தான் மயானம் வரை கொண்டு போக முடிந்தது. அதேபோல வீட்டிற்கு கொண்டு வந்து போட்டதும் மீண்டும் மூர்க்கமாக கத்தினான். யாரோ சாப்பாடு கொண்டு வந்து வைத்ததும் ஆர்வமாக அள்ளிச்சாப்பிட்டு படுத்துக்கொண்டான்.
அன்றிலிருந்து அவன் மூர்க்கம் அதிகமானது. அவனது தனிமையை சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு செயலுக்கும் உடனடி எதிர்ப்பை அநாகரிகத்துடன் வெளிப்படுத்துவான்.
ஒரு கடும் மழைநாளில் இசக்கி வேலை முடிந்தவுடன் மதுகுடித்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்தான். தின்பண்டம் எதிர்பார்த்திருந்த பொந்தன் ஏமாந்தான்.
“கடி எங்கல தாயோலி”
இசக்கி பேச்சற்று நின்றான்.
“கடி வாங்கியால”
கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்து இசக்கி மேல் எறிந்தான். குறிப்பிட்ட கணத்தில் இசக்கியின் குடி போதையும் விழித்துக் கொண்டது. ஒரு விறகுக்கட்டையை எடுத்து பொந்தனை வெளுத்தெடுத்தான்.
“படுத்தே கெடக்கற குன்னக்கி கோவம் ஒரு கேடால”
பொந்தன் அங்கும் இங்கும் உருண்டு அலறிக்கொண்டே வேட்டியை அவிழ்த்து இசக்கி மேல் வீசி அம்மணமாக நின்றான்.
மகனின் நிர்வாணத்தைக் கண்டதும் ஒரு ஒளிவெட்டு இசக்கியின் மனதில் தோன்றி மறைந்தது. பொந்தன் இப்போது ஒரு பாலகிருஷ்ணனாக பொலிந்தான். பொந்தன் குழந்தையாக இருக்கும்போது மனைவியோடு குருவாயூர் போனது ஓர்மையானது.இசக்கி அவனை தொடப்போனான். ஏனோ மனதை மாற்றிக் கொண்டு கதவைத் திறந்து அந்த மழையிலும் குடிப்பதற்கு மதுக்கடைக்கு ஓடினான். வரும்போது மறக்காமல் சொக்குப்பிள்ளை கடையில் கடிகள் வாங்கிக் கொண்டான்.
நான்காம் பரிமாணம்
இசக்கியின் உடல் நிலை சிலபல மாற்றங்களை கண்டு வந்தது. சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்தான். சமயங்களில் இரத்தமும் கலந்து வந்தது. நாலைந்து நாட்களாக இருமலும் சேர்ந்து கொண்டது. புகைக்க முடியவில்லை. குடிக்க முடியவில்லை. மரக்கடையில் விடுப்பு சொல்லிவிட்டு நெய்யூர் ஆஸ்பத்திரியில் காட்டினான். ஈரல் கெட்டுவிட்டதாகச் சொன்னார்கள். முதலாளியிடம் விஷயத்தைச் சொன்னான். ஸ்ரீகண்டன் பதறி கையில் கொஞ்சம் பணம் கொடுத்தார். “ தெரிசனங்கோப்பு போய்க்கோ. சொஸ்தம் கண்டு அறுபது திவஸம் கழிஞ்ஞு வந்தா மதி”
அன்று மாலை வழக்கத்தைவிட அதிகம் குடித்தான். சொக்குப்பிள்ளை கடையில் கடிகளும் , க்ருஷ்ண விலாஸில் இட்லிகளும் வாங்கிக் கொண்டான். வீட்டுக்கு வந்ததும் கடியை பொந்தனுக்கு அருகில் வைத்துவிட்டு இட்லிப் பொட்டலத்தை சோற்றுச்சட்டியில் போட்டு மூடினான். பொந்தன் வேகமாக எழுந்து அதிரசத்தையும் பழபஜ்ஜியையும் சாப்பிட்டான். படுத்துக்கொண்டான். இசக்கி இருமிக் கொண்டே கதவைத் திறந்து வெளியில் வந்தான். காற்று குளிராக இருந்தது. ஒரு பீடியை பற்றவைத்து இரண்டு இழுப்புக்கு மேல் முடியாமல் எறிந்தான். சிறுநீர் கழிக்க முயன்றான் வரவில்லை. வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டான். கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டதும் பொந்தன் எழுந்து அவசரமாக சோற்றுச்சட்டியை திறந்தான். வழக்கத்துக்கு மாறான உணவுப்பொருளைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும் சடுதியில் அவைகளைப் பிய்த்து வாயில் போட்டான். தண்ணீர் குடித்துவிட்டு படுத்தான். இசக்கிக்கு தூக்கம் வரவில்லை. இருமல் தொடர்ந்து படுத்தியது. வாய்க்குள் துண்டைத்திணித்து சத்தம் வெளியில் வராமலிருக்க முயன்றான். கன்னங்களில் சூடாக ஏதோ உருள்வதை உணர்ந்தான். அழுகிறோமா? ஆம்.
“ கஷ்ட ஜீவனத்தில ஜனிச்சு இத்தன காலமும் ஒழச்சுதான கெடந்தேன்”
“எனக்குன்னு எதுவுமில்லயா”
“ கையுங்காலும் நலமாட்டு் இருந்தும் புத்தியும் சித்தியும் சுகமாட்டு இருந்தும் இவனெதுக்கு இப்பிடி மடியாட்டு படுத்தே கெடக்குகான்”?
“ ஒரு சாமிக்கும் எந்த நேர்ச்சக்கொறையும் வக்கலயே. பின்ன ஏன் இந்த வாதப்பாடு”
இருமல் இப்போது நின்றிருந்தது. உடல் குளிர்வதாக இசக்கி உணர்ந்தான். நடுக்கம் உண்டாகி அதிர்ந்தான். அவனை யாரோ பெரிய சல்லடையில் போட்டு மிக மெதுவாக சலிப்பது போலிருந்தது. அக்குளில் ஏதோ ஒரு கை நுழைந்து கிச்சு மூட்டுவதாக உணர்ந்து சிரித்தான்.ஒரு தூய வெள்ளைக் கம்பளம் அவனை மூடிக்கொண்டது.
ஐந்தாம் பரிமாணம்
காலையில் வழக்கம் போல பதினொரு மணிக்கு பொந்தன் எழுந்தான். மூலையில் இசக்கி படுத்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டான். தவழ்ந்து போய் சோற்றுச்சட்டியைத் திறந்தான்.
“ஏய்”
ஏமாற்றம் தாளாமல் அதை தலைக்கு மேல் தூக்கி இசக்கியின் மேல் வீசி எறிந்தான்.
“சோறு கொண்டால”
அங்கிருந்த பலகை,
டப்பாக்களை எடுத்து வீசிக்கொண்டே இருந்தான். இசக்கியிடம் அனக்கமேயில்லை. நேரம் செல்லச்செல்ல வெறி கூடியது. பசியால் அலறித்துடித்தான். ஒருமுறை தவழ்ந்து வந்து இசக்கியை எட்டி மிதித்தான்.
“சோறு கொண்டால”
நேரம் மதியம் இரண்டு மணியிருக்கும். வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் வெளிச்சம் வந்திருந்தது. இசக்கியின் மேல் எறும்புகள் ஊர்வதைப்பார்த்து கலவரமடைந்தான். அருகில் சென்று அவனைத்தள்ளி எழுப்பினான். அசையவேயில்லை.
“ மரிச்சு போய்ட்டயால தள்ளயவோலி”
“ சோறு கொண்டால”
பொந்தனுக்கு உச்சமான கனவுகள் வரும் நேரம் அது. இன்று வேறுவிதமான ஒவ்வாத ஓர்மைகள் பின்னின.
இசக்கி கந்தனை ஸ்ரீகண்டன் முதலாளியிடம் அன்றுதான் வேலைக்கு சேர்த்துவிட்டிருந்தான். சட்டையில்லாமல் வாளிப்பான உடலுடன் துறுதுறுவென இருந்த கந்தனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது.
“அச்சனப்போலெ வளர புத்தியுள்ள பணிக்காரன்”
விளையாட்டுத்தனமாக ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு திருவோணநாளன்று கந்தனை வீட்டுக்கு சாப்பிட அனுப்புமாறு இசக்கியை ஸ்ரீகண்டன் பணித்தார்.
கந்தன் காலையில் அவரது வீட்டை விசாரித்து அடைந்தான். பிரமிப்பில் வாயைப்பிளந்தான். நூற்றுக்கணக்கான தென்னைகளுக்கு மத்தியில் ஒரு கம்பீர அரமணையின் தோற்றப்பாடுகள். வீட்டின் பூமுகமெங்கும் நுண்ணிய மரவேலைப்பாடுகள். அதி உயரமான தூண்கள், கனத்த கதவுகள் , விசாலமான பெரிய சன்னல்கள் , கம்பீர நாற்காலிகள், மேஜைகள் . கூடத்தில் அத்தப்பூக்கோலம் சதுரமாய் காணக்கிடைத்தது. குறைந்தது அந்த வீட்டில் பதினைந்து அறைகளாவது இருக்கவேண்டும். வீடெங்கும் பூ மணம். அப்போது ஒரு பணிப்பெண்ணோடு கிளிக்குரலில் பேசிக்கொண்டு வீட்டுக்குள்ளிருந்து இன்னொரு முறிக்கு அவள் போனாள். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி. குண்டுக் கன்னங்கள், கற்றை முடி, குவி்மார்பு, வீங்கிய பிட்டங்கள். அதிதேவதை. நாராயணிகுட்டி. ஸ்ரீகண்டன் முதலாளியின் மகள்.
“ ஏடோ வரூ”. ஸ்ரீ கண்டன் முதலாளி விளித்தார். மார்பு முழுக்க சந்தனம் பூசி நெஞ்சு மயிர்கள் கம்பி வலையாய் தெரிந்தது. பட்டு வேஷ்டி நீள முண்டு அணிந்திருந்தார். அவருடைய அறைக்கு அழைத்துப்போய் பட்சணங்கள் கொடுத்தார். ஒரு எதிர்பாரா கணத்தில் அவனுக்கு பின்புறம் ஒட்டி நின்றுகொண்டு அவனது மார்பில் சந்தனம் பூசினார். அப்படியே அவரின் கை கீழிறங்கியது. இப்போது கம்பிவலை கந்தனின் முதுகை அழுத்தியது. பேடித்தான். அவரின் கை நிக்கருக்குள் நுழைய கந்தன் தட்டிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான்.
பொந்தன் விதிர்த்து நினைவுக்கு வந்தான். இசக்கி செத்துக்கிடந்தான். இனி சோறுக்கு என்ன செய்ய? மெதுவாக கதவைப்பிடித்து எழுந்தான். திறந்தான். பகல் ஒளி கண் கூசியது. பசி. ஆக்கர் கடையிலிந்து சத்தம் கேட்க ஆரம்பித்தது.
“பட்டீர்”
“பட்டீர்”
எரிச்சலடைந்தான். வேறு வழியில்லை. தடுமாறி கடையை நோக்கி நடந்தான்.
“ பட்டீர்”
பசி மறந்து போனது.
“ பட்டீர்”
இசக்கி மறந்து போனான்.
“ பட்டீர்”
ஸ்ரீகண்டன் இல்லாமல் ஆனார்.
“ பட்டீர்”
சுந்தரி, இல்லை இல்லை நாராயணிகுட்டி காணாமல் போனாள்.
“ பட்டீர் “
அவனிடமிருந்து கருப்பாக ஒரு திரவம் ஆவியாகி வெளியேறியது.
“ பட்டீர்”
ஆக்கர்கடை முன் நின்றான். ஒரு கிழவர் சம்மட்டியை பிடித்தபடி வியர்வை பூத்த உறுதியான உடற்கட்டுடன் இவனை நிமிர்ந்து பார்த்தார். அப்போது உழைப்பின் பெருந்தரிசனத்தைக் கண்ட பேரானந்தத்தில் ஓடிப்போய் அவர் கால்களைப் பிடித்தபடி கதறி அழுதான்.