நின்று செய்த மெய்

  ‘பொறுமையாளர்களுடன் நான் இருக்கிறேன்’ என்கிறான் இறைவன். தனக்கு அநீதி இழைக்கப்படும் போதும் பொறுமையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வியை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் எளியவர்கள்  அவர்களின் இயலாமையின் வாழ்வியல் நிர்ப்பந்தத்தில் பொறுமையாக இருந்து விடுவதும் உண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுமையாளர்களுக்கு கிடைக்கும் வெகுமதியை பார்த்து நான் பல முறை வியந்து இருக்கிறேன்.

நான் அந்த வழியாக செல்லும் போது தினமும் பார்க்கும் காட்சி. ஒரு வேலை நீங்களும் அந்த வழியாக செல்லும் வாய்ப்புகள் நல்கினால் காணக் கிடைப்பதுதான் அதேக் காட்சிதான். புதிதாக பேருந்திலோ வாகனத்திலோ செல்கிறவர்கள் ஏன் இப்படி கூட்டமாக நிற்கிறார்கள் என்ற கேள்வி எழாமல் அந்த இடத்தைக் கடக்க முடியாது.

அங்கு எல்லோரும் காத்திருந்தார்கள். அதுவொரு வரிசைப் படுத்தப்பட்ட காத்திருப்பல்ல. ஒழுங்கற்று ஓரமாக அங்குமிங்கும் ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசத்தில் நின்றும் அமர்ந்தும் இருந்தார்கள். சாலையின் தூரத்தில் அவ்வப்போது பார்த்துக்கொண்டும் பேசிக் கொண்டும் நேரத்தைக் கடத்த அவர்களுக்கு செய்திகள் இருந்தது. அதற்கு அவர்கள் தங்களைப் பழகிக் கொண்டார்கள். மக்கள் எப்போதும் வினோதமானவர்கள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

எங்களுக்கு அது வேப்ப மரத்துக்கடை. மற்றவர்கள் எப்படி அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.இப்போது அங்கு வேப்பமரம் இல்லை. அது இருந்ததற்கான  எவ்விதத் தடங்களையும் அங்கு காண முடியாது. பல பெயர்கள் அதன் பெயரோடுதான் இங்கு ஏதோவொரு வரலாற்றைத் தன்னுடன் சுமந்து இருக்கிறது.

அன்றைய நாட்களில் அந்த இடம் காலி மனையாக இருந்தது. அந்த இடத்தில் வடக்கிலிருந்து வந்த கலைத் தொழிலாளி விநாயகர் சிலைகள் செய்வார். கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பமே இரவு பகலாக உழைப்பார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு இரண்டு குழந்தைகளுடன் வந்தவர் இப்போது அவருக்கு ஆறு குழந்தைகள். முதல் குழந்தைக்கு கடந்த வருடத்திற்கு முதல் வருடம் திருமணம் செய்து விட்டார். அந்தப் பிள்ளை என் மகள் வயதை ஒத்தவர். மகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது இருவரும் சிரித்துக் கொள்வார்கள். என் மகள் கல்லூரி இப்போது முடித்திருக்கிறார். அந்தப் பிள்ளை குழந்தை பெற்று சிலைக்கு வண்ணம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்.

அந்தக் கலைத் தொழிலாளியின் மீது எனக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. அதற்கு காரணம் அவரின் உழைப்பு.இங்கு அவர் வந்ததிலிருந்து எனக்கு அவரைத் தெரியும். ஒரு தட்டு ரிக்சாவில் சில சிறிய விநாயகர் சிலைகள்,வீட்டுச் சமையல் பொருட்களுடன் அவர் மனைவியோடு வந்தார் .சாலையின் ஓரமாக நின்ற வேப்ப மரத்தடியில் சிலைகளை வைத்து வியாபாரம் செய்வார். அதன் பிறகான வருடங்களில் வேப்ப மரத்திற்கு பின்புறம் இருந்தக் காலி மனையில் கூடாராம் அமைத்து சிலைகள் செய்தார். அவரின் உழைப்பு அதன்பிறகு வந்த வருடங்களில் குழந்தைகளையும் செல்வங்களையும் அவரால் ஈட்ட முடிந்தது. அவரை ஒரு டாக்குமெண்டரி படம் எடுக்க எனக்கு விருப்பம் இருந்தது. நான் இப்படி அவரைக்  கவனித்து வருகிறேன் என்பது அவருக்குத் தெரியாது. அவர் மனைவி அற்புதமான கள நிர்வாகி. வறுமையைக் கடந்து கணவனும் மனைவியும் வாளிப்பில் தேஷசாக மாறியதை கவனித்து வந்தவன் நான்.

எளிய மனிதர்கள் அதுவும் வீதியோர வியாபாரிகள் எனக்கு அதிகமாக பழக்கம் உண்டு. நான் இவர்களுடன்  பழகாமல் போனதற்கு மொழி ஒரு காரணம்.

எனக்கு இந்தி தெரியாது. அநேகமாக அவர்கள் தமிழ் கற்றிருப்பார்கள். இவர்களிடம் பழகிவிட்டு இவர்களைப் பற்றியும் எழுத வேண்டும்.

அவர்கள் சிலைகள் செய்வதற்கு உள்ளே சென்று பிறகு அங்கு வந்தவர்தான் சின்னையன். சைக்கிளில் மீன் வியாபாரம் செய்தாராம். பிறகு இங்கு கடை போடலாம் என வந்திருக்கிறார். அதி காலை டிவிஎஸ் 50-யில் மல்லிப்பட்டிணம் சென்று ஏலம் எடுத்து வந்து இங்கு விற்பார். சில முறை அதிராம்பட்டினத்தில் எடுப்பார். பயந்த சுபாவம் உடையவர். அவர் கடைப்போட்ட இரண்டொரு நாளில் நான் அவரிடம் மீன் வாங்கினேன். வெள்ளைப் பொடி அல்லது வெள்ளாம் பொடி என்றும் இதை சொல்வார்கள்.

“சார் எவ்வளவுக்குப் போட.”

“நூறு ரூயாய்க்கு போதும்.”

“அதிகமாக தர்றீங்க. கட்டுப்படியாகுமா.”

“இன்னைக்கு ஏலம் கொஞ்சம் சல்லீசு சார்.”

நான் அவரிடம் ‘சுத்தம் செய்து தர முடியுமா’ என்றுக் கேட்டேன். சந்தோசமாக ‘செய்து தருகிறேன்’ என்று கத்தியை எடுத்து சுத்தம் செய்து கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார். சுத்தம் செய்து கொடுத்ததும் இருபது ரூபாய் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்துவிட்டார். நான் ‘வேறு இடத்தில் வாங்கினால் சுத்தம் செய்ய முப்பது ரூபாய் பணம் கொடுத்து தானே இருப்பேன்’ என்று வற்புறுத்திக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதை மீன் வாங்க வந்தவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து நான் மீன் வாங்க சென்றபோது மீன் வாங்கிய எல்லோருக்கும் சுத்தம் செய்து கொடுத்தார். எவரும் சுத்தம் செய்வதற்கு பணம் கொடுக்கவில்லை. நான் அவர் தனியாக இருந்த ஒரு நாளில் அவரிடம் கேட்டேன்.

“ஏங்க இந்த பயலுவ ஒருத்தனும் கிளீன் பண்ணப் பணம் குடுக்காம போறாங்களே. கொஞ்சமாச்சும் மன சாட்சி இருக்கா அவுங்களுக்கு. மீனும் நீங்க நெறையா குடுக்குறீங்க. கிளீன் பண்ணக் காசு குடுக்கணும்ன்னு புத்தி வேணாம்.”

“விடுங்க சார் போயிட்டுப் போறாங்க.”

“இவர்களுக்கு ஏமாளியாக தெரிஞ்சா. ஏறி தலையில் உட்கார்ந்து மிளகாய் அறைப்பாங்க.”

அப்போது அவரிடம் எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து ஏதாவது உதவி என்றால் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள். என்னைய இங்க யாருக்கும் தெரியாது. என் தம்பியின் பெயர்களைச் சொன்னேன். அந்தப் பெயர்களைக் கேட்டதும் அவருக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. 

நான் அவரிடம் சொல்லிவிட்டு வந்த இரண்டாவது நாள் சாலையின் எதிர்ப்புறம் மரக்கடைக்குப் பக்கம் ஒருவர் மீன் கடைப் போட்டு இருந்தார். நான் ‘ஏதாவது பிரச்சனையா’ என்று கேட்டேன். ‘இல்லை சார் அவுங்க யாவாராம் அவுங்களுக்கு. நம்ம யாவாரம் நமக்கு சார்.’ என்று சொன்னார்.

நான் வெளியூர் சென்றுவிட்டு ஒரு மாதம் கழித்து வந்துப் பார்த்தபொழுது அதே சாலையில் ஆற்றங்கரை ஓரம் சலூனிற்கு பக்கத்தில் இருந்த பெரிய மீன் கடை வைத்து இருந்தவர் தனது அம்மாவை சின்னையன் கடைக்குப் பக்கத்தில் பத்தடி தூரத்தில் கீழே படுதாவை விரித்து கடை போட்டிருந்தார். எதிரேக் கடை போட்டு இருந்தவர் இவருக்குப் பக்கத்தில் கடை போட்டு இருந்தார்.

நான் அலுவலம் செல்லும் போது இவைகளைப் பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன். 

எனக்குக் கொடுவா மீன் கிழங்கன் மீன் வேண்டும் என்றால் காலையிலையே போன் செய்தால் வரும்போதே அதிராம்பட்டினத்தில் வாங்கி கொண்டு வந்துவிடுவார். சில சமயங்களில் ‘கொடுவா மூணு கிலோ. நாலு கிலோவுக்கு மேல இருக்கே என்ன சார் செய்ய’ என்பார். நான் அவ்வளவு பெரிதும் வேண்டாம் கூறு போட்டதும் வேண்டாம் என்பேன்.

இரண்டு மாதத்தில் பக்கத்தில் இருந்தவரைக் காணவில்லை. அதன் பிறகு இவருக்குப் பக்கத்தில் இதே சாலையில் பெரிய கடை வைத்து இருப்பவர் அவரின் அம்மாவை இவருக்கு பக்கத்தில் கடையைப் போட்டு இருந்தார். பல நாட்கள் நான் செல்லும்போது அவர் கடையை விட்டு பெரிய கடைக்காரர் இங்கு வந்து நின்று கொண்டு இருந்தார். எப்பொழுதும் இவருக்கான வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. பல சமயம் இவரின் மீன்கள் விற்கப்பட்டு சைக்கிளில் வியாபாரம் செய்யும் இவரின் நண்பர்களைப் போனில் அழைத்து அவர்களின் மீன்களையும் விற்றுக் கொடுப்பார்.

இந்தக் கால கட்டத்தில் நான் அவரிடம் அந்த ஆளைக் கூப்பிட்டு சொல்லவா என்று கேட்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு அவரிடம்தான் நான் மீன் வாங்குவேன். மீன் மார்க்கெட்டில் பிரான் எனக்குத் தெரிந்தவர். போன் செய்தால் மீன் வெட்டி தயாராக வைத்து இருப்பார். வீட்டிற்கு கொடுத்து விடுகிறேன் என்று எவ்வளவோ வற்புறுத்துவார். அப்போது ஆன் லைன் எல்லாம் வராத காலம் என்பதால் எனக்கு தயக்கமாக இருக்கும். இப்போது இரவு பத்து மணி, பதினோரு மணி என்று தெருவில் புட் டெலிவரி செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது நான் மறுத்துவிடுவேன்.

சில சமயங்களில் இந்த ஆளிடம் மீன் வாங்குவேன். எனக்குத் தெரிந்தவர் தான். கொஞ்சமல்ல நிறையவே திமிர் பிடித்த ஆள். 

‘நான் அவரிடம் பேசவா. இல்லை மிரட்டி விடவா’ என்றேன்.’வேணாம் விடுங்கள் சார்.’ என்றார்.

‘இந்தப் பய மக்க இலவசமாவே’ மீனை வாங்கி சுத்தம் செய்து கொண்டு போனார்கள். 

சிலை செய்கிறவர்கள் வேப்ப மரத்தடியில் போடக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு நாள் அந்த மனையின் வலது ஓரம் மனைக்குள்ளிருந்த சிறிய புளியமரச் செடிக்குப் பக்கத்தில் மேஜயைப் போட்டு அதில் தட்டை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். நான் அது பற்றி அவரிடம் கேட்கவில்லை.

சில மாதங்களில் இதே சாலையில் உள்ளவர் இவருக்கு பக்கத்தில் கடை போடாமல் இருந்தார். பிறகு நிரந்தரமாக காணவில்லை. அவர் கடைப் பூட்டிக் கிடந்தது. அந்த இடத்தை விட்டு ஆண்கள் பள்ளி மைதானத்திற்குப் பக்கத்தில் போட்டார். கொஞ்ச நாள் கழித்து அவர் கடையை கருவாட்டுக் கடையாக மாற்றினார். பிறகு நிரந்தரமாக அந்தக் கடைப் பூட்டிக் கிடக்கிறது. வேறொரு இடத்தில் சாலையில் கடை போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இதற்கிடையில் சாலையின் விரிவாக்கத்தில் ட்ரைனேஜ்க்கு வாய்க்கால் தோண்டி வேப்பமரத்தையும் வெட்டி விட்டார்கள். எப்பொழுதாவது அந்த இடத்தில் தனது வண்டியில் வைத்து சிலருக்கு மீன் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

“இரண்டு பேர் மீன் கேட்டார்கள் சார். சரின்னு கொஞ்சம் வாங்கிட்டு வந்தேன் சார். உங்களுக்கு வேணும்னாலும் போன் பண்ணுங்க சார்.” என்றார்.

சிலை செய்கிறவர்கள் இந்த இடத்தை விட்டு இதே சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் சிலையை செய்து வியாபாரம் செய்கிறார்கள். அவரின் மூத்த மகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் அந்த மூத்த மகளையும் அவர் கணவரையும் காணவில்லை. ஒரு வேலை அவர்கள் வேறு எங்காவது தனியாக கடை போட்டு இருக்கலாம். சிலை செய்யும் பெண் தன் பிள்ளைகள் மூன்று பேரை பள்ளி சீருடையில் நகராட்சிப் பள்ளிக்கு என் வீடு வழியாகத்தான் அழைத்துக் கொண்டு செல்வார்.

டிரைனேஜ்ஜில் சிலாப் போட்டு அதன் மேல் கிரீப் டைல்ஸ் ஒட்டி இருந்தார்கள். சாலையில் டிவைடர் கம்பிகள் எடுக்கப்பட்டு கான்கிரீட் சுவராக செய்து வெள்ளை அடித்து இருந்ததார்கள். சாலையின் இரண்டு ஓரமும் வெள்ளையடித்து போவதற்கு வருவதற்கு என தனியாக இருந்த சாலையின் நடுவிலும் வெள்ளைக் கோடுகள் விட்டு விட்டு இருந்தது.இப்போது அந்த பகுதியின் பழைய நிலை முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. புளிய மரம் கொஞ்சம் பெரிதாக வளர்ந்து சின்னையன் நிற்கும் இடத்தில் நிழல் தந்தது.அது காய்க்க ஆரம்பித்துவிட்டது .அவர் நிற்கும் இடத்தில் டிரைனேஜ் காங்கிரீட் வாய்க்கால் உயரமாக மாறிவிட்டதால் மேலே ஏறி அவர் பக்கத்தில் செல்ல கொஞ்சம் சிரமமாக இருந்தது. சில சமயங்களில் அவர் இறங்கி என் வண்டிக்குப் பக்கத்தில் வந்துப் பேசுவார்.

ஒரு நாள் நான் அலுவலகம் செல்லும் போது வேப்பமரத்துக் கடைக்காரரிடம் (இப்போது அவரைப் புளிய மரத்துக்கடைக்காரர் என்று எவராவது சொன்னாலும் சொல்லலாம்) ‘வெள்ளைப்பொடி கிளீன் செய்து வையுங்கள்.ஆபீஸ்ல சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வரும்போது எடுத்துட்டுப் போறேன்.’என்று பணம் பர்ஸில் இல்லாதததால் ‘ஜிபே பண்றேன்.மெஷின எடுங்கள்’ என்றேன். அவர் டைலர் கடையைக் காட்டி ‘அங்கே இருக்கு சார்.எடுத்துக்கிட்டு வரல. வரும்போது கொடுங்க சார்’ என்றார். என்னிடம் பணம் வாங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டார். இவர் மட்டுமல்ல என்னிடம் பழகும் பலரும் ‘பணம் இருக்கட்டும் சார். உங்ககிட்ட இருக்கிறது பேங்க்ல இருக்கிற மாதிரி ‘ என்பார்கள்.

நான் அலுவலகத்தில் வேலையை முடித்து திரும்பி வந்து கேட்டால் ‘சார் மறந்துட்டேன்’ ன்னு தலையில் அடித்துக் கொள்கிறார்.

எனக்கு ஏனோ அன்று கடுப்பாகிவிட்டேன்.

“தீர்ந்துருச்சுன்னா போன் பண்ணி இருக்கலாமேங்க. நான் வேற வேலையாக போகனும். இப்ப நான் மறுபடியும் மீன் வாங்க அங்கேப் போகனும்.”

“மன்னிச்சுருங்க சார். மீன் சரியா இல்லை சார். அதான் எடுத்து வைக்கல.”

“அதையாவது எனக்கு போன்ல சொல்லி இருக்கலாம் இல்லையா. நான் அவசரமா வெளியேக் கிளம்பிக்கிட்டிருக்கேன்.”

“நான் வேணா வீட்ல வாங்கிக் கொண்டக் குடுக்கவா சார்.”

“வேணாம். நான் பார்த்துக்கிறேன்.”

சோழன் சூப்பர் மார்க்கெட் எதிரில் உள்ள ஆனந்த் ‘அம்மா மீன்’ கடைக்கு சென்று பஷீர் பாயிடம் மீனை வாங்கி வெட்டக் கொடுத்துவிட்டு திரும்பினால் என் பின்னால் சின்னையன் நிற்கிறார்.

“என்னங்க”

“சார்… மன்னிச்சிருங்க சார். சார் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை. உண்மையிலையே மீன் நல்லா இல்ல சார். சார் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்க. மன்னிச்சுருங்க சார்.”

“எல்லோரும் பார்க்கிறாங்க. நான் ஒன்னும் நினைக்கல கிளம்புங்க. அதுக்காக இவ்வளவு தூரம் வரனுமா.”

“உங்க பின்னாடியே மெதுவா வந்தேன் சார். நீங்க திட்டுவீங்களோன்னு பயமாக இருந்துச்சு. சார் மன்னிச்சேன்னாதன் மனசு நிம்மதிப்படும்.”

“லூசாங்க நீங்கள். முதல்லக் கிளம்புங்க. பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு. அதை அங்கே இருந்து கிளம்பும் போதே. மறந்துட்டேன் நான். தயவு செய்து கிளம்புங்க. எல்லாரும் பார்க்கிறாங்க.”

பஷீர் பாய் நான் விவரம் சொல்வேன் என்று என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அதற்குள் அவரிடம் யாரோ மீன் கேட்க, நான் மீன் வெட்டுகின்ற பசங்களிடம் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி பஷீர் பாயைத் தவிர்த்துவிட்டேன். சின்னையனுக்கு நான் எந்த உதவியும் செய்ததாக நினைவில் இல்லை.

நான் திரும்பி வரும்போது சின்னையன் கடையைக் கழுவி மேஜையை சாத்தி வைத்துவிட்டு, கழிவுத் தண்ணீரை நான் வீட்டிற்கு திரும்பும் சாலையில் உள்ள காலியான இடத்தில் ஊற்றிக் கொண்டு இருந்தார். அவரிடம் கிண்டலடித்து பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.

இப்பொழுது அவர் மீனை சுத்தம் செய்து கொடுக்கும் வேலைகளைச் செய்வதில்லை. அவர் செய்யக் கூடாது என்று செய்யாமல் விடவில்லை. அவருக்கு பக்கத்து கிராமங்களில் இன்னும் இதே நகரத்திலிருந்த தூரமான தெருக்களில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருவதால் வியாபாரம் செய்வதற்கே இவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இந்த வாடிக்கையாளர்கள்தான் அவருக்காக இப்போது காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் 10:45 க்கு வருவார். அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு யாரிடமாவது பேசிக் கொண்டு தகரத் தட்டைக் கழுவிக் கொண்டு இருப்பார். பெரும்பாலும் கண்ணாடி போட்டு காவி வேஷ்டி கட்டிய ஒருவர் தான் அவரிடம் எப்போதும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்.

இந்த நகரத்தில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. ஆங்காங்கே அம்மா மீன் கடை போல கடைகளும் உள்ளது. தெரு ஓரங்களில் பல இடங்களில் கொரோனாவிற்குப் பிறகு பல கடைகள் வந்துவிட்டன.

வெள்ளப் பொடி,சிறிய மூக்கன் மீன், சிறிய இறால்,கொய் மீன், என ஒவ்வொரு நாளும் ஒரு சிறு  பொடி மீன்கள் விற்கும் ஒருவருக்காக மக்கள் காத்துக் கிடந்து வாங்கிச் செல்வது ஆச்சரியமாகத்தான் பலருக்கும் இருக்கும். ஏன் நீங்கள் அந்த வழியாக சென்றால் உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் தெரியும். முயற்சியால் மெய் வருத்தி கூலி காண்பவர் என்று சொன்னாலும் அந்த எளியவரின் பொறுமைக்கு இறைவன் கொடுக்கும் வெகுமதி அது என்று நான் நினைத்துக் கொள்வேன்.

எப்பொழுதாவது நீங்கள் அந்த வழியாக சென்றால் உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால் அவருக்காக பிரார்த்தனை செய்யலாம். பகுத்தறிவாளர் என்றால் ‘நல்லா இருய்யா’ என்று மனதிற்குள் நினைத்தபடி கடந்து செல்லலாம்.

***

[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *