ஆடிக்கழிவு விற்பனை. கூட்டநெரிசலில் வெக்கை அலையடிக்க மூச்சுத் திணறியது. பவர்மணி மட்டுமே அந்தக் கூட்டத்திலும் பேரார்வமாய் வேலை செய்து கொண்டிருந்தார். ”ஏத்தாயி..உங்கலருக்கு இந்தரோஸ்புடவை நல்லாருக்குமே..இங்க வா உனக்கு எப்படி இருக்கும்னு போட்டுக்காமிக்கறேன்” என்று நடுத்தர வயதினைத் தாண்டிய அந்தப் பெண்மணியை ஆளுயர கண்ணாடி முன் பாந்தமாக அழைத்து வந்தார்.
கனத்த அம்மாள் ஒருவர் ”யோவ் அண்ணாச்சி அந்த மஞ்சக்கலரு கட்டம்போட்ட சேலையை எடுத்துக்காமியும்” என்று பவர்மணியை மறித்தாள். அவர் அதையும் தாண்டி சிவந்த பெண்மணியின் தோளில் புடவைத்தலைப்பை விரித்து பரவவிட்டார். அவரின் விரல்களில் நடுக்கம் மிகுந்து துள்ளலாக மாறியது. பெரும்பசியோடு இருப்பவன் ஆவிபறக்கும் உணவைக் காண நேர்ந்த போது எழும் ஏக்கம் அவர் முகத்தில். வரும் தையில் அறுபது பிறக்கப்போகிறது பவர்மணிக்கு.
முன்பு ஒரு காலத்தில் பவர்மணி முதலாளியின் நம்பிக்கைக்குரிய மாப்பிள்ளையாக இருந்தார். மூன்று தெருக்களில் பவர்மணிக்கு பாசமான சகோதரிகள் வெவ்வேறு சாதிகளில் இருந்தனர். பவர்மணியின் விரல்களறிந்த சுதந்திரத்தை முதலாளி பயன்படுத்தத் தவறியதில்லை. முதலாளி உள்ளே இருக்கும் நேரங்களில் பவர்மணி திண்ணைகளில் காலாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார்.
”ஓய் மாப்ள.. வியாபாரத்தை பாரும் ஓய்..“ என்று கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி எவ்விக் கத்தினார். எச்சில் தொட்டு ரூபாய்த்தாட்களை எண்ணி சில்லறைகளை இரண்டுமுறை சரிபார்த்த பின் மீதியை வழங்கினார். அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் துணிகளை பொட்டலமிட்டு வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பத் திணறினேன். ராணிமெஸ் சாப்பாடு போதையேற்றித் தள்ளாடச் செய்தது.
ஓராண்டிற்கு மூன்று அறுவடைக்காலங்கள் ஜவுளிக்கடைகளுக்கு உண்டு. தீபாவளி பொங்கல் மற்றும் ஆடிக்கழிவு. அந்த நகரத்தில் அப்போது இரண்டு கடைகளே மொத்த வியாபாரத்தையும் போட்டிபோட்டு பங்குவைத்துக் கொண்டிருந்தன. நம்பர் ஒன் என்ற பெயரை கடந்த ஐந்தாண்டுகளாக தக்கவைத்து, நியாயமான விலையுள்ள கடை என்ற பெயரை அப்போது நான் விற்பனையாளனாக இருந்த கடை பெற்றிருந்தது. அந்தக்கடையில் பில்போடும் பையனாக வேலைப்பார்ப்பதை பெருமையாகச் சொல்லிக்கொள்வேன். முப்பது ரூபாய் தினக்கூலியும் மூன்று ரூபாய் பேட்டாவும் உண்டு.
ஆடி மாதம் முழுதும் இரவும்பகலும் வேலை இருக்கும். இரவெல்லாம் புதுப்புது ரகங்களைப் பண்டல் பிரித்து விலைச்சீட்டு ஒட்டி அட்டிகளில் அடுக்குவோம். நல்ல ரகம் என்று ஏதாவது சிக்கினால் தெரிந்தவர்களுக்கு விற்க என்று ஒளித்து வைத்துக்கொள்வோம். ஆடிக்கழிவிற்கென்றே சில அதிரடிகள் உண்டு. ஒரு மீட்டர் சட்டைத்துணி கிடைக்கும் விலையில் ஒரு புதுச்சட்டையே விற்பனைக்கு வரும். இலவசமாக கிடைக்கும் பிளாஸ்டிக் வாளி, சில்வர் குடம், அண்டா போன்ற பொருள்கள் பெண்களை சேலைகளை அள்ளிச்செல்லத் துாண்டும். கூம்பு ரேடியோ கட்டிய ஐந்து ஆட்டோக்கள், நகரத்தைச் சுற்றி இருக்கும் இருபது கிராமங்களிலும் ஆடிக்கழிவின் அற்புதங்களை இடைவிடாமல் பரப்பி மக்களை கடையினை நோக்கி உந்தித்தள்ளும்.
முதலாளி சிறுவனாக இருக்கும்போது பெற்றோரை இழந்தவர். தாய்மாமன் வீட்டில் மாடுகள் மேய்த்தபடி வளரத்தொடங்கினார். அடுத்தவன் வயலில் மாடுமேய்ந்து நடந்த ஒரு அடிதடியோடு ஊரைவிட்டு ஓடியவர் பத்தாண்டுகளுக்குப் பின் துணிவிற்ற அனுபவத்தோடு சொந்த ஊர் திரும்பினார். மூல நட்சத்திரத்தால் முதிர்கன்னியாகக் காத்திருந்த தாய்மாமன் மகளைத் திருமணம் செய்ய சம்மதித்தார். தாய்மாமன் முதலில் ஒரு சிறிய அறைகொண்ட வாடகைக் கட்டிடத்தில் ஜவுளி விற்பனையை உண்டாக்கித்தந்தார்.
கடைவைத்த நாள்முதல் எந்த வெயிலானாலும் அடை மழையானாலும் வழக்கமாக கடைத்தெருவில் கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே அதிகாலையில் கடை திறந்து வைத்து ஊதுபத்தி மணக்கக் காத்திருப்பார் முதலாளி. எந்தநேரத்திலும் அவரின் கடை திறந்திருக்கும் என்ற தகவல் மக்களுக்கு ஆரம்பத்தில் கோடித்துணி எடுக்க வாய்ப்பாக அமைந்தது. அந்தப்பழக்கமே நாளடைவில் அவருக்கென்று நிலையான வாடிக்கையாளர்களை படிய வைத்தது. ஊருக்குள் இன்றைய பெருந்தனக்காரர்களில் அவரும் ஒருவர். எட்டு மகன்களும் அப்பாவின் வாய்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கடையை பஜாருக்குள் மூன்றடுக்கு மாளிகையாக நிலைக்கச் செய்திருந்தனர்.
இருபது முப்பதுபேர் சண்டையிட்டுக்கொள்வதைப்போல உரக்கப் பேசிக்கொண்டு கடைக்குள் நுழைந்தனர். கடலுக்குள் சீறிப்பாய்ந்த நதியைப்போல கூட்டம் தத்தளித்து விலகியது. முதலாளி விளக்கொளியில் சந்தனம் மினுங்கிய மொட்டைத்தலை ஆசாமியை இரண்டு கைகளாலும் வணங்கினார். ”ஐயா அவுகளுக்கு.. என்ன பாக்கணும்” என்று நாற்காலியில் இருந்து முன்னால் சாய்ந்தார். ர்ர்ர்ரென்று பின்னால் மெலிதாக ஒலி வாங்கிற்று.
”விசேசத்திற்கு ஜவுளி…. அண்ணாச்சி” வந்தவர்கள் படையெடுப்பைப் போன்று கடைக்குள் திமுதிமுவென்று கூட்டத்தோடு மோதினர்.
”பேஷாப்போச்சு. ஓய்..மாப்ள சட்டைத்துணிப்பிரிவிக்கு இவிங்கள கூட்டிட்டுப் போரும்” என்று பவர்மணியை அழைத்தார். பவர்மணி காதில் அதில் விழுந்ததா இல்லை விழுந்தும் கண்டு கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. அவர் அப்போதும் அந்தப்பெண்மணியிடம் அதே ரோஸ்கலரில் சிந்தடிக் சேலை ரகமொன்றை பிரித்து நழுவவிட்டுக் கொண்டிருந்தார். அவரின் உதடுகள் ஈரமிகுந்து பளபளத்தன.
”சவத்தெழவுக்கு காதுகேக்கானு பாரேன்.”என்று பதறியவர். என்னிடம் திரும்பி” ”நீ கூட்டிட்டு போல..இவுகள கடைமுழுக்க சுத்திக்காட்டி வேணுங்கறத எடுத்து சந்தோசமா வீட்டுக்கு அனுப்பற பொறுப்பு உன்னோடது” என்றார் முதலாளி. எனக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது.
சர்டிங் பிரிவில் சங்கரன் மட்டுமே இருந்தான். ஆடிக்கழிவிற்கென்று அழைத்து வரப்பட்ட புதுப்பையன். தற்காலிக ஊழியன். மற்ற நான்குபேரும் அண்டர்கிரவுண்டில் உணவருந்தச் சென்றிருந்தனர். பெருங்கூட்டத்தைப் பார்த்ததும் ஓருவிதப் பயத்தோடு எழுந்து நின்றான்.
”மச்சானுகளுக்கு நல்ல பிளைன் துணியா காமிங்க” கவுண்டரை அடைத்து வந்தவர்கள் நின்றனர். சங்கரன் இருபது பீஷ்களை ரேக்கில் இருந்து இறக்கி பாஞ்சாலியைத் துகில் உரிவதைப்போல உருவி காற்றில் கொடியாக மாற்றி, பிரித்துக்காட்டினான். ஒருமணிநேர தேடலுக்குப்பின் அந்தக் கூட்டத்து ஆட்களுக்கு வெள்ளைக்கலரில் மழைத்துாறலைப்போன்று டிசைன் போட்டிருந்த சட்டைத்துணி பிடித்திருந்தது.
”இது மீட்டரு எவ்வளவு?” என்றார் மொட்டைத்தலைக்காரர்.
”இருபது தான்” நிம்மதியோடு பாதிப்பீஸை விறுவிறுவென்று கரந்து அரைமீட்டர் சில்வர் அளவுகோலை தாங்கியில் இருந்து எடுத்தான் சங்கரன்.
”இருபது ரூபாயா” என்று மொட்டைத்தலைக்காரர் தீவிரமாக யோசித்தார். “மச்சானுகளுக்கு நுாறு ரூபாய்க்கு குறைஞ்சு எடுத்துத்தர முடியாதுல்லா“
”இதே டிசைனுள விலைகூடினதா இருந்தா காட்டுப்பா”
”ஆடிக்கழிவு நேரம் அண்ணாச்சி…..எல்லாம் இந்த விலையிலதான் இருக்கு…..கூடின விலைக்கு வேணுமானா குடோனுக்குத்தான் போவனும்.”
”யோவ்..இதுவே நல்லாருக்குயா..நாற்பத்து இரண்டு பேருக்கும் ஒரே டிசைனா எடும்”
”இந்த விலையில எடுத்துக்கொடுத்தா எந்தங்கச்சி என்ன மதிப்பாளா ….. தம்பி….இதே டிசைன்ல வேற விலைகூடினது இருந்தா எடுத்துட்டு வாப்பா”
சங்கரன் யோசித்தான். இரண்டு மூன்று பீஸ்களை இறக்கி ஏற்றினான். வேறுடிசைன்களைக் காட்டி விற்றுவிட முயன்றான். மொட்டைத்தலைக்காரர் ”என்னப்பா….இதே டிசைன்தான் விலை கூடினதா வேணும்…வேற இருக்கா இல்லையா….இல்லன சொல்லிரு…நாங்க அடுத்த கடைக்கு போய்க்கறோம்”என்று கும்பலை திசை திருப்பினார். கல்லாவில் இருந்து நடப்பதை ஒற்றர்கள் மூலம் கவனத்திருந்த முதலாளி மூச்சிரைக்க பிரிவிற்குள் வந்தார். சங்கரன் மட்டுமே தனித்திருக்கும் தகவல் அதற்குள் அவரைச் சென்று சேர்ந்திருந்தது. சங்கரன் செல்லக்கிறுக்கன். எதையும் உறுப்படியாய் செய்யத்தெரியாதவன் என்ற எண்ணமிருந்தது அவருக்கு.
”என்ன சார்வாள்..எங்க கிளம்பீட்டீக..சட்டைத்துணி எடுக்கலயா” என்று கூட்டத்தை மடக்கினார்.
”முதலாளி..இந்தக்கலர்லதான் விலைகூடுனதா வேற துணி வேணுமாம்” என்று சங்கரன் விவரித்தான்.
”குடுத்தாப்போச்சு.. நேத்துதான் சூரத்தில இருந்து ஒரு பண்டலு குடோனுக்கு வந்திருக்கு..கொஞ்சம் சந்தனக்கலர்ல இருக்கும் ..இதே டிசைன்தான்..ரேட்டுதான் சாஸ்தி.. பாக்கீகளா? முதலாளி மொட்டைத்தலைக்காரரிடம் கேட்டார். நான் சங்கரன் விரித்துக் குவித்திருந்த சட்டைத்துணிகளை உருட்டத் தொடங்கினேன்.
”கொண்டு வாங்க அண்ணாச்சி..எம்மச்சானுகளுக்கு எந்த விலையிலயும் வாங்கிக்கொடுக்க நான் தயார்”
முதலாளி மேல் மாடிக் குடோனை நோக்கி பாய்ந்து ஓடினார். சங்கரனும் நானும் அவர் பின்னால் சேர்ந்து ஓடினோம். ”முட்டாக்கழுத..நல்ல யாவாரத்தை கெடுக்க இருந்தியே” என்று அந்த அவசரத்திலும் சங்கரன் முதுகில் ஒரு குத்து விட்டார். குடோனின் வாசலில் குவிந்து கிடந்த சாக்குப்பண்டல்களில் ஒன்றை கத்தி கொண்டு கிழித்தார். கண்ணாடித்தாள் உரச சந்தனக்கலர் சட்டைத்துணி உருளைகளை உருவியெடுத்தார். நானும் சங்கரனும் ஒருகணம் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ”மீதிப் பீஸயும் துாக்கிட்டு கவுண்டருக்கு வாங்கல” முதலாளி ஒரு பீஸை எடுத்துக்கொண்டு கீழிறங்கினார்.
”ஐயோ..இது மீட்டரு இருபது ரூவாத்தாம்ல ..முதலாளிக்கு தெரியுமா தெரியாதா” என்று பதறினான் சங்கரன்.
“பத்து நாளு சீசனுக்கு வேலைக்கு வந்த உனக்கே தெரியிறப்ப..அவருக்குத் தெரியாமலா இருக்கும்..கீழ எடுத்துட்டுபோவோம்” தோள்களில் துாக்கிகொண்டோம்.
முதலாளி அதற்குள் அவர்களைச் சம்மதிக்க வைத்திருந்தார். “இரண்டு இரண்டு மீட்டரா நாற்பது துண்டு வெட்டுங்கல..ம் சீக்கிரம்” என்றார். அவரும் ஒரு அளவுகோலை எடுத்து பாம்புச் சீறல் போன்ற ஒலியொடு துணியை வெட்ட ஆரம்பித்தார்.
நாற்பது கவர்களுக்குள் சட்டைத்துணிகளைப்போட்டுக் கட்டி ஐந்து கட்டைப்பைகளில் நிறைத்து நானும் சங்கரனும் வாசலுக்கு துாக்கிச் சென்றோம். முதலாளி பில் புத்தகத்தில் அவரே பில் எழுதி ”பன்னிரெண்டாயிரத்து எண்ணுாறு தாங்கோ சார்வாள்” என்று மொட்டைத்தலைக்காரரிடம் நீட்டினார். ஒருகணம் அதிர்ந்து பின் இயல்பாகி “மீட்டரு என்ன ரேட்டு போட்டிருக்கீக அண்ணாச்சி” என்று முதலாளியிடம் கேட்டார் மொட்டைத்தலைக்காரர்.
“நம்ம கடையில நியாயமான ரேட்டுத்தான் பாத்துக்கிடுங்க..ஓல்சேல்ல கிடைக்கறதுல பத்து பர்சண்டு லாபம்..அவ்வளவுதான்..நீங்க நயம் துணியா வெல கூடினதா கேட்டீக..மீட்டரு நுாத்து அறுபது ரூபாதான்..அசல் காட்டனாக்கும்.”
“சரி அண்ணாச்சி..ஒரு எண்ணுாறை குறைச்சி..பன்னிரெண்டாயிரத்தை வாங்கிக்கோங்க..இன்னும் நிறைய விசேசங்களுக்கு உங்கக்கிட்டதான் துணியெடுக்க வரணும்”
“கோவிச்சிக்கக் கூடாது……இது காய்கறி வியாபாரம்.இல்ல..கேட்டீகளா..நயாபைசா குறைக்கறதில்ல..வேணும்னா..எடுத்துட்டுப்போங்க..இல்லன..வெட்டுன துணியா இருந்தாலும் சரி வச்சிட்டுப்போங்க..இதுதான் என்தொழில் பழக்கம்”
மொட்டைத்தலைக்காரர் மறுபேச்சின்றி பட்டாபட்டி டிராயருக்குள் இருந்து புதுநோட்டுகளை எடுத்து எண்ணத் தொடங்கினார்.
முதலாளி ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து சிரித்தார்.