லலிதம்

1. ஆதியில் ஒரு கணம்.

சன்னாசி பிடறியில் அறை பட்டான். தேவ ஆசிர்வாதம் அவன் காதைப் பிடித்து திருகி எழுப்பினார். துாக்கமும், சோர்வும் நிறைந்திருந்தவர்கள் பத்து மணிக்குக் காத்திருந்தார்கள். படீரென விழுந்த பிடறி அறையில் அவர்களின் மோனத்தவம் கலைந்தது. தலை நிமிர்ந்து, கண்களில் அச்சம் தளும்ப அவனைப் பார்த்தனர்.

“ப்போல..வெளியே …நீ சீரழிஞ்சு போறதில்லாம..மத்த பசங்களையும் கெடுத்திராத”

தேவ ஆசிர்வாதம் புளிய விளாறை காற்றில் அறைந்தார். தேவ ஆசிர்வாதம் அத்தனை கோபம் கொள்ளக் கூடியவரே அல்ல. கடுமையாக கண்டிக்க வேண்டிய காரியங்களுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றக் கூடியவர். சன்னாசி வரண்டாவிற்கு சென்று இருளில் மண்டியிட்டான். குளிர்ந்த காற்று அவன் உடம்பில் புகுந்து புல்லரிப்பினை உண்டாக்கிற்று. புட்டப்பகுதியில் வலது கையினைத் துடைத்துக்கொண்டான். வெள்ளை ட்ரவுசரில் சிறிய தீவொன்றின் கோட்டுச் சித்திரம் எழுந்து வந்தது. கையில் பிசுபிசுப்பு போக மீண்டும் அழுத்தித் துடைத்தான்.

ஸ்டடி முடிந்தது. மாணவர்கள் எழுந்து அவரவர் இடத்திற்குச்  சென்றனர். நீண்ட செவ்வக வடிய அறை. ஐம்பது மாணவர்களுக்கு மேல் அங்கே தங்கியிருந்தனர். ட்ரெங்க் பெட்டிகளின் முன் அவர்களின் அறை. தடுப்புச்சுவர்கள் அற்றவை. ஆனாலும் அரூபச் சுவர்களினால் ஆனவை. விடுதிக் கட்டடத்தின் ஒருகோடியில் ஒளிரும் சிலுவை. இரவுகளில் ஒளிவிடும் சிலுவைக்கு வேறு விதமான பரிமாணங்கள் வந்துவிடுகின்றன. விடுதியின் நாற்புறமும் பொட்டல் காடு. செம்மண் தரிசு. காற்று முட்டி மோதி கட்டிடத்தை கொஞ்சமாவது கிழக்குப்பக்கம் நகர்த்திவிட முயன்று கொண்டே இருக்கும். சன்னல்கள் அறைகள் பட்டு பதறும். ஓலமிடும். கதவுகளுக்கு கொக்கிகள் இருப்பதில்லை. சில சன்னல்களுக்கு கதவுகளே கிடையாது. டம் டம் என்று காற்று அறைபடும் ஒலி இரவு முழுக்க காதிற்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

சன்னாசி அன்று நடந்ததற்காக வருத்தப்படவில்லை. அன்றுதான் அவனை தேவ ஆசிர்வாதம் கையும் களவுமாக பிடித்துவிட்டார்.  எது நடந்தாலும் அவன் வருத்தப்படக் கூடியவனும் அல்லன். வாழ்க்கை அவனை அவ்விதம் வடித்திருந்தது. சிவந்த வாயும், மட்ட ரகமான செண்ட் வாசனையும் வீச இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவனை வந்து பார்த்துச் செல்லும் அவன் அம்மா அவன் இனிமேலும் எதற்கும் வருத்தப்படும் வாய்ப்புக்களை இல்லாமல் ஆக்கியிருந்தாள்.

அம்மாவை அனுப்பி விட்டு அவன் விடுதிகளின் வராண்டாக்களில் காத்திருந்திருக்கிறான். அத்தருணங்களில் அவன் உடம்பில் குடம் குடமாக அமிலம் கொட்டப்படும். காதுகளுக்குள் தேனீக்களின் இடைவிடாத ரீங்காரம். தன்னுடலை ஒரு குப்பைக்காகிதத்தைப் போல கசக்கி துண்டு துண்டாக பிய்த்து எறிந்து விடத் தோன்றும். அம்மாவின் அம்மணம் அவன் கண்முன் உருப்பெறத் தொடங்கும். கண்ணீர் வடிய கதறி அழுவான். விடுதிக் கட்டடத்தை விட்டு ஓடியிருக்கிறான். அம்மாவை அழைக்க வரும் ஒவ்வொரு ஆணும் அவனுக்கு அப்பாவாக இருந்து செல்கிறார்கள். அம்மாவின் அறைக்குள் வருகிறவர்கள் உடனே அவனின் அப்பாக்களாக தகுதி பெற்று விடுகிறார்கள். அவர்களில் சிலர் அவன் தலையைத் தடவி கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அம்மாவின் வாசனையை அவன் முகத்தில் ஊதிவிட்டுச் செல்வார்கள். அவன் அறிந்திராத அம்மாவின் வாசனை.

அருகில் படுத்திருந்தான் சன்னாசி. போர்வைக்குள் புகுந்தான். அவன் கைகள் தேடத் தொடங்கின. அவனுக்கு எல்லாமே தெரிந்திருந்தது. வயதிற்கு மீறிய அறிவும் அனுபவமும் கொண்டிருந்தான். அம்மாவை உற்று நோக்கி அவன் கற்றுக்கொண்டதே அதிகம். ஆண்களின் முன் அம்மா கொள்ளும் தளுக்கு அவனையும் கிளர்ச்சியூட்டும். அவன் அம்மாவாக மாறிவிடுவான். அவன் அருகில் படுத்திருக்கும் யாரும் அவனின் அப்பாவாகி விடுவார்கள்.

அவன் கைகள் உடல்முழுக்க ஊர்ந்தன. அந்நிய ஆணின் விரல்களில் ஊசிமுனை இருக்கின்றது. விரல் நுனிகள் தீண்டும் இடங்களில் சதைகள் அதிர்கின்றன. ரோமங்கள் விரைத்து நிற்கின்றன. உடல் ஓடுபாதையாகிறது. இன்னும் வேகம் என முன்னே பாய்கிறது. இரவு கனத்த போர்வையை இழுத்துப் போர்த்துகிறது. வியர்க்கிறது. அவன் கையைப் பிடித்துக்கொண்டான். வியர்வை வழுக்கும் அவன் கைகள் அன்று வெக்கை மிகுந்திருந்தன. விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

மந்திரவாதியினுடையதைப் போல அவன் கரங்கள் மாறின. கண்முன்னே வர்ணங்கள் சுழன்றன. வெடித்துச் சிதறின. அறைக்குள் நட்சத்திரங்களின் பெருஞ்சலனம். இடைவிடாத பெருவெடிப்பு. திடீரென உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. உடல் துள்ளி அதிர்ந்தது. அதுவரை அறிந்திராத பரவசங்களின் பீறிடல். சன்னாசி விலகிப் படுத்துக்கொண்டான்.

என்னை ஆணாக அறிந்து கொண்ட ஓரிரவு.

2. குத்தாலிங்கம்

ஆவுடையின் கோபம் நியாயமானது. அவளின் இடத்தை அவளின்றி ஏதோ ஒன்று நிரப்பி விடக் கூடும் எனில் அவள் எப்படி அமைதியாக பொறுத்திருப்பாள். கொந்தளித்து விட்டாள். வழக்கம்போலத்தான். என்றாலும் அன்று புதிதாக இருந்தவை இரண்டே இரண்டு. ஒன்று இனிமேல் அதைப் பின்பற்றக் கூடாது என்று சத்தியம் செய்து தரக்கேட்டது. அவன் மறுத்து விட்டான். அவனின் பிறப்புரிமையை எப்படி விட்டுக்கொடுப்பது?.  இரண்டாவது அப்போது எவளை நீ நினைத்துக்கொண்டாய்? என்று கண்கள் விரிய அவள் வம்படியாக உக்கிரம் கொண்டு நின்றது. உண்மையில் ஆவுடையின் தங்கை சுந்தரியின் உருவம் தான் அன்று அவன் அணைத்துக் கொண்டிருந்தது. ஆவுடையின் உடைகளை சுந்தரி அணிந்து நின்ற ஒரு நாள் அவளின் மீதும் அவன் ஏக்கம் தொற்றிக்கொண்டது. ஆவுடை என நினைத்து அவளை நெருங்கியவன் கணநேரத்தில் சுதாரித்துக்கொண்டான்.

வாழ்க்கையில் இயல்பாக எவையெல்லாம் உள்ளனவோ அவையெல்லாம் இயல்பானது என்பதை எல்லா இடங்களிலும் ஒத்துக்கொள்ளச் செய்துவிட முடிவதில்லை. இயல்பானதையும் இங்கிதம் அறிந்து செய்ய வேண்டும். இருளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை என சில இருக்கின்றன. அவற்றின் மீது ஒரு பொட்டு வெளிச்சம் விழுந்தால் கூட ஆபாசம் என்றாகி விடுகிறது.

வீட்டை விட்டு வெளியே இறங்கினான். தெருச் சாக்கடையை தாண்டுவது பிறவிப் பெருங்கடலை தாவிக்குதிப்பதற்கு ஒப்பானது. தாண்டினான். ஒட்டுமொத்த உலகமும் அவனுக்கு முன்னால் விரிந்து கிடந்தது. “ஹ்ஹ“ என்று சிரித்துக் கொண்டான். இன்னும் மோசம் போய்விடவில்லை. கண் முன்னே விரிந்து அகண்டு காத்திருக்கிறது அவனுக்கு வழங்கப்பட்டுள்ளவை. அவன் நின்றிருக்கும் மங்கம்மா சாலைக்கும், அண்டார்டிகாவில் உறைந்திருக்கும் பனியின் குளிருக்கும் அவன் அனுமதிக்கப் பட்டிருக்கிறான். அவற்றின் குடிமகன் அவன். அவன் தந்தைக்கு தரப்பட்டவைதான் அவையும். நாளை அவன் மகனுக்கும் இருக்கப் போகிறவை. அவன் தந்தையைப் போலவே அவனும் அவற்றை அறியாமல் ஒரு சிறிய அறைக்குள் வாழ்ந்து வருகிறான். அவன் மகனும் கூட அவ்வாறே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடும். ஆனால் அவை என்றுமே இல்லாமல் ஆகிவிடுவதில்லை. அவற்றில் இருந்து அவனை மறுப்பவை கழுத்து நரம்பு புடைக்க பிறர் அவன் தலையின் மீது ஏற்றி வைத்தவைதான். அவன் நினைத்தால் அவற்றை இறக்கி  வைத்துவிட்டு எங்கும் செல்லலாம். அந்த கொடுப்பினை இன்னும் ரத்து செய்யப்படவில்லை. முடிவற்ற பெருவெளிக்குள் நிரந்தரமாக தொலைந்து போகலாம். வாழ்விலே ஒருமுறை என ஆனந்தித்து வாழ்ந்து களிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு கையளிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால் அவன் முடமாக்கப் பட்டிருக்கிறான். காடுகள் தோறும் ஊன் தேடி அலைந்த கால்களின் வலுவும், நிலமறிந்த நுட்பங்களும் எங்கே போயின? இரவானதும் வீடடைய வேண்டியுள்ளது. வீடு என்ற எண்ணமே ஒருவனை பலகீனமாக உணரச்செய்கிறது. வீடு விடுதலையை மறுதலிக்கும் ஒரு இருப்பு. இலக்கமிட்ட பத்துக்குப்பத்து அறை.. அவனைப் பிரபஞ்சத்தின் அணைப்பில் இருந்து பிரிக்கும் நான்கு சுவர்களையும் ஒரு மோட்டு உத்தரத்தையும் கொண்டிருக்கிறது.

அந்த அறைக்குள் அவள் இருக்கிறாள். ஆவுடை. சதா நீர்மை கொண்டிருப்பவள். நீராலானவள். நீர் காத்த அம்மன். அவள் கொண்ட நீர்மையில் அவன் இயக்கம். ஓரிடத்தில் ஒரு கணம் நிலைத்திருக்க முடியாத ஓட்டம். ஆடிச் சுழன்று ஆட்டம் மறைந்த பின்னரும் ஆடுதல் முடிவடைவதில்லை. கால்களின் ஓயாத தாள கதியின் அலையடிப்பு. ஆவுடையும் அவனும் ஒன்றாகி ஆடுதல் ஒரு மறை நிகழ்வாகி விடும் தருணங்களில் கருத்து திரண்டு ஒற்றைப் பனை மரம் போலாகிறான். அவளின் அணைப்பில் இருந்து அவன் இம்மி அசைய முடிவதில்லை. அவள்தான் அவனின் இருப்பை அறிவிப்பவள். அவள்தான் அவன் இயக்கத்தை வழி நடத்திச் செல்லுபவள். அவள் இப்பிரபஞ்சத்தின் நிரந்தர பிரதிநிதி. தப்பித்துவிட முடியாது. தப்பிச்சென்றாலும் தடமெல்லாம் அவளே. தடாகங்களாக, புலச்சுனைகளாக, அலைநுரைக்கும் ஆழிகளாக இருக்கிறாள். கருப்பைச் சுவருக்குள் அவள் கொண்டிருப்பது வேறொரு பத்துக்குப்  பத்து அறையை. நீருக்குள் மிதந்து உறுப்புகளாக உண்டாகி வரும் இன்மையின் ஊற்று.

அவனைச் சுமந்து கொண்டே சோம்பேறி மடத்தை நோக்கி நடந்தான். சஞ்சலம் உந்தித்தள்ளும் போதெல்லாம் அவன் செல்லும் ஒரே இடமாக அவ்விடம் ஒன்றே இருக்கிறது. அங்கே அவனைச் சாந்தப்படுத்தும் அன்னை உண்டு. விச்ராந்தியானவள். ஓய்ந்திருப்பவள். கட்டுக்களும் கட்டளைகளும் அற்றவள். அங்கே சென்றதும்  அவனுக்கு அமைவது ஒரு மன லய மாற்றம். தீக்குள் வைத்த விரலை உருவி வாய்க்குள் வைத்துக்கொள்வதைப் போல.

பற்கள் நெரிபட, கன்னத்தசைகள் இறுக, வேகமெடுத்தது அவன் நடை.. நடந்து செல்லும் போதே அவன் ஆவியாகிக் கொண்டிருந்தான். காற்றில் உறவாடும் கற்பூரம் போல அவன் லகுவானான்.. கபாலத்தின் ஒரு துளை வழியாக புகைக்கோடு நீள்கிறது. ஊது பத்தியின் புகையைப் போல அவனின் அகம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. வழிநெடுக அவனைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு நடந்தான். அவன் காலடி மண் என்பதே ஆண்டாண்டு காலமாக அவனைப் போன்றவர்கள் அப்படி பிய்த்துப்போட்டதனால், சேர்ந்து கிட்டித்து தடிமனாக கனத்திருக்கும் கப்பிச்சாலைதான். பாதசாரியின் பாதங்களில் உள்ளது புதிய தடங்களின் ஊற்றுமுகங்கள்.

அவனை அவள் அன்றும் பற்ற வைத்து விட்டாள். கைவிடப்பட்ட ஒருவனைக் கொளுத்த ஓராயிரம் தீப்பந்தங்கள். தீத்துளிகள் சுடர்ந்து  தனித்திருக்கின்றன.   ஒற்றைச் சுடரென அவை வான்நோக்கி எரியும் போது அதில் யோனிப்பிளவின் பாவனையும் நடனமிடுகிறது. தலைகீழாக்கப்பட்ட தீச்சுடர். அதன் ரச்மி அவனை விட்டில் பூச்சியாக்குகிறது. அன்றாடம் எரிந்து சாம்பலாகி அவனும் ஒருநாள் இல்லாமல் ஆகக் கூடும். அதற்காகத்தான் அவன் உடல்கொண்டு உருவாகி வந்தானா? அலகிலா லீலையில் அவனின் சூத்திரக்கயிறு ஆவுடையின் கையிலா? ஆவுடைகளும், ஆவுடைகளால் ஆட்டுவிக்கப்படும் ஆண்களும்தான் இந்த மனித வாழ்க்கை என்பதா?

என்னை நானே வேடிக்கை பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *