கொத்துப் புரோட்டா வாங்கி வீடு திரும்பும் வழியில்

“புரோட்டா திங்கியாட்டி” என்று கேட்டாள் அம்மா.

“கொத்துப் புரோட்டா வேணும்” என்றாள் பாப்பா.

சங்கரன் சட்டையை உதறி போட்டுக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பினான்.

அவன் வீடு புறநகர்ப்பகுதியின் முட்டுச் சந்துகளில் ஒன்றில் இருக்கிறது. முறையான அனுமதிகள் தேவையில்லாத போது துரித கதியில்  மனைகளாக்கப்பட்டு விற்கப்பட்ட வீட்டுமனைகள் ஒன்றில் அமைந்த வீடு. சங்கரன் அப்போது வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தான். புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடொன்று வாடகைக்கு வருகிறது என்ற தகவல் கேட்டவுடன் உடனே வீட்டைக் காண கிளம்பினான்.

புரோக்கர் கூட்டி வந்த  போது ஒரு லாரியே உள்ளே சென்று திரும்பும் அளவிலான காலியிடம் இருந்தது. தெருவினை இணைக்கும் காலியிடத்தின் வழியாக உள்ளே சென்று புதிய வீட்டைப் பார்த்தான். பச்சை வர்ணத்தில் பளபளவென்று மின்னியது. தனி வீடு. சுற்றிலும் இரண்டொரு வீடுகளே அருகில் இருந்தன. இரண்டு படுக்கையறைகளிலும் வெஷ்டர்ன் கழிவறை. சமையலறைக்கு அடுத்து சாதாரணக் கக்கூஸ். வீட்டு உரிமையாளர் சென்னையில் ஐ.டி. வேலையில். பார்த்தவுடன் பிடித்துப்போனது. அந்த வீட்டைப் போல புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஐம்பது லட்சங்கள் வேண்டும். அரசுக் கடன் பெற வாய்ப்பு உள்ளது. சங்கரன் கடன் இன்றி வாழ முயன்று கொண்டிருப்பவன்.

ஆறுமாதங்களில் வீட்டிற்கான பாதை முள்கம்பி வேலியிட்டு மறிக்கப்பட்டது. கேட்டால் பட்டா இடம் என்றார்கள். விரைவில் வானந்தோண்டி வீடு கட்ட இருப்பதாக மனைக்குச் சொந்தக்காரர்  முறைத்துக்கொண்டே சொன்னார். சங்கரன் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையின் வழியாகத்தான் ரோட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. முன்பு வீடு வரை வந்த பள்ளி வேன் ரோட்டிலேயே இறக்கிவிட்டுச் சென்றது. பால்காரி முதல் துணி தேய்ப்பவர் வரை வீட்டு வாசலுக்கு வருவதை மறுத்துவிட்டனர். பகல் பொழுதுகளில்  சிரமம் ஏதும் இருக்கவில்லை.

இருட்டிய பிறகுதான் தீராத் திகில். சாரைப்பாம்பொன்று மிக நிதானமாக பாதையின் குறுக்கே ஊர்ந்து சென்றது. சங்கரன் நடுங்கும் கால்களோடு ஒருநாள் பார்த்து நின்றான். கீரிப்பிள்ளைகள் சண்டையிட்டு செடித்தளும்பல்களை ஏற்படுத்துவதுண்டு. மாலை நேரங்களில் நீண்ட தோகைகள் கொண்ட மயில்கள் அவனைக்கண்டு பதறி ஓடும். பிள்ளைகள் பள்ளி சென்று திரும்புவதையும், விளையாடி முடித்து முன்னிரவில் வீடு செல்வதையும் எண்ணிப்பார்க்கும் போது அவனுக்கு நடுக்கம்  ஏற்பட்டது. பெரும்பாலும் இருட்டிய பிறகு  அவன் வீட்டிற்கு யாரும் வருவதில்லை. அவனும் வெளியே செல்வதை தவிர்த்து விடுவான். வீடு மாற்றிவிடலாம் என்றால்  குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் தேவைப்படும். அது அவன் சேமிப்பில் இல்லை. இன்று வேறு வழி கிடையாது. பாப்பாவிற்கு கொத்துப் புரோட்டா வாங்க வெளியே சென்று திரும்பியாக வேண்டும்.

வாசல் கேட்டைச் சாற்றினான்.   அவன் முன்னே தோளுயுரச் செடிகள் மண்டியிருந்தன. மழைக்காலம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்ட படியால் காலியிடங்கள் அனைத்திலும் பசுந்தளிர்களின் அடர்த்தி. ஒரே  செடியினந்தானா அல்லது பல்வேறு செடியினங்களா என்ற குழப்பம் அவனுக்கு. உற்றுப் பார்த்து கண்டறிய முயன்றான். ஆலீஷ் ஒன்டர்லேண்டில் வருவதைப் போல சிறிய உருவம் எடுத்து செடிகளுக்கு அடியில் ஓடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சங்கரன் தாவரவியலில் அதிக ஆர்வம் உள்ளவன். பன்னிரெண்டாம் வகுப்பில் நுாற்றி எண்பத்தெட்டு மதிப்பெண்கள். ஆனால் கண்முன்னே வளர்ந்திருக்கும் செடிகளை அவனுக்கு அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை. வருத்தமாக இருந்தது. பள்ளிப்பாடங்கள் வாழ்நாட்களில் இவ்வளவு விரைவாகப் பயனழிந்து போய்விடும் என்று அவன் நம்பியிருக்கவில்லை. கண்முன்னே இருக்கும் உலகத்தைக் குறித்து அவனுக்கு அதிக அறிவு உண்டு என்று நம்பினான். அது அளித்த தன்னம்பிக்கை நாட்கள் செல்லச் செல்ல குறைய ஆரம்பித்தது. அவன் அறிய வேண்டியதே தொண்ணுாறு விழுக்காடு  இன்னும் இருக்கிறது என்ற முடிவிற்கு வரவேண்டியதாகி விட்டது.  அப்போது அவனுக்கு அதிகப் பயமாக இருந்தது.

அவன் கிளம்புவதை அறிந்து அவசரம் அவசரமாக வானம் இருண்டு கொண்டு வந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் ஏதும் தென்படவில்லை. குளிர்ந்த காற்று சட்டைக்குள் புகுந்து சிலிர்ப்பினை ஏற்படுத்திற்று. தெருவிளக்குகள் ஏதும் அப்பகுதியில் இல்லை. அவன் செல்போனின் ஒளிக்கீற்றினை முன்னே பாய்ச்சி மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து சென்றான். செல்போனின் ஒளிக்கீற்றுதான் அவனின் வழிகாட்டிக் கம்பு. பின்னால் என்ன நடக்குமோ என்றும் பயந்தான். முன்னால் இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொள்வதைப் போல பின்னால் வருவதை எவ்விதம் தவிர்ப்பது என்ற பயம். முன்னும் பின்னும் செல்போன் வெளிச்சத்தை மாற்றி மாற்றி அடித்தபடி நடந்தான்.

ஒரு பாம்பு வந்து தீண்டினால் என்ன செய்வது? அல்லது வழியில் சென்று கொண்டிருக்கும் பாம்பினை தெரியாமல் அவன் மிதித்து, அது ஆவேசம் கொண்டு கொத்திவிட்டால் என்ன ஆகும்? என்று எண்ணிப் பார்த்தான்.  அவ்வழியாகச் செல்லும்போதெல்லாம் அவன் வழக்கமாக எண்ணிப் பார்த்துக் கொள்வதுதான். பயம் உண்டாக்கும் கற்பனைகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஒவ்வொருமுறையும் சபதம் எடுத்துக்கொள்வான். ஆனால் அப்பாதையில் கால்வைத்ததும் எங்கிருந்தோ அந்த நினைவுகள் அவன் மீது தொற்றிக்கொண்டு விடும். பாம்பு கடிக்க நேரிட்டால் உடனே மருத்துவ மனைக்குச் துாக்கிச் செல்ல வேண்டும். என்றால் கூட அரைமணி நேரம் ஆகும். அதற்கு முன்னேற்பாடாக ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். நுாற்றியெட்டிற்கு போன் பண்ணி முகவரியை அவர்களிடம் விளக்கிச் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அவன் வீடிருக்கும் பகுதியை ஒருவரிடம் சொல்லி எளிதில் புரிய வைத்திட முடியாது. அவன் குடியிருப்பு பகுதியினைப் போன்று அந்த நகரத்தின் விளிம்பில் பத்திருபது புறநகர்ப் பகுதிகள் உள்ளன. அத்தனையும் ஐந்தாறு ஆண்டுகளுக்குள் தோன்றியவை. நகர் என்பதை ஒன்றுபோல பின்னொட்டாக கொண்டிருப்பவை.  எந்த நகரையும் உடனே அடையாளம் சொல்லி அழைத்து வந்துவிட முடியாது. நிலத்தரகர்கள் வேண்டுமானால் தயக்கம் இல்லாமல் கூட்டி வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

உயிருக்கு ஆபத்தான நிலை என்று வரும்போது தனியார் மருத்துவமனைகளில் பொண்டாட்டி தாலியைக் கூட விட்டு வைப்பதில்லை. அரசு மருத்துவமனைக்குத்தான் கடைசியில் விரட்டி அடிப்பார்கள். அரசு மருத்துவமனைகளில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்நாள் வடுக்கள். இரண்டாவது மகள் பிறந்த போது அவன் ஒரு இக்கட்டான நிலையில் அரசு மருத்துவமனைக்குத்தான் துாக்கிச்செல்ல வேண்டிய நிலை. அந்த ஒரு மாதமும் அவன் அடைந்த வேதனை இந்தப் பிறவி முழுக்க மறக்க முடியாத துர் நினைவுகள்.

விரைந்து நடந்தான். ஓட்டம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தான். ரோட்டை அடைந்த போது நன்கு இருட்டியிருந்தது. ரோட்டில் இருந்து பஜாருக்குச் செல்ல இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அவன் சென்ற ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் பெரிய ரோட்டில் சென்று மறைந்தது. மின்விளக்குள் எரிய வாகனங்கள் விரைந்து சென்றன. கண்கள் கூச அவன் தலையைக் குனிந்த படி நடந்து சென்றான். கடந்து செல்லும் வாகனங்களில் இருப்பவர்களைக் கண்டபோது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பார்க்கப்படும் போது கூட பயணம் தனக்கு சந்தோசத்தை அளிக்க மறுப்பதில்லை.

அவன் வழக்கமாக அலுவலகம் செல்லும் வழிதான். காலையில் செல்லும்போது இருக்கும் மன அவஸ்தைகள் மாலையில் வீடு திரும்பும் போது இருப்பதில்லை. காலையில் எட்டு மணிக்கு  மேல்தான் எழுந்து கொள்வது. காலைக்கடன்கள் முடித்து பிள்ளைகளை பள்ளிப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி விடுவதற்குத்தான் காலை நேரம் சரியாக இருக்கும். கக்கூசில் அமர்ந்திருக்கும் போது கவிதை நுாற்களை வாசிப்பதைக் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். நவீன கவிதைகளில் உள்ள சிக்கல்களுக்கு முன்பாக பெரிய சிக்கல் எதுவும் நிலைத்திருப்பதில்லை.

காலைச்சாப்பாட்டில் இருந்தே அன்றைய நாட்களுக்கான பிரச்சினைகள் ஆரம்பமாகிவிடும். அவன் மனைவிக்கு அவனின் ருசிகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றங்கள் இருந்தன. அவளுக்கு அசைவச்சாப்பாடுகளை மிகுந்த ருசியோடு சமைக்கத் தெரியும். சைவ உணவுகள் மீது கடும் ஒவ்வாமை. அது சமைக்கும் போது ருசியின்மையாக வெளிப்பட்டு விடும். அவன் பிறப்பால் சைவம். ஒவ்வொருநாள் அதிகாலையிலும் அவன் சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்து வேண்டா வெறுப்பாக வேகவேகமாக தின்று முடிப்பான். அந்த நாளின் கசப்பு உடனே அடித்தொண்டை முழுக்க அடைத்துக்கொள்ளும். அவன் மனைவியை அவனுக்குப் பிடிக்காமல் போக வேறு காரணங்கள் ஏதும் வேண்டியிருக்கவில்லை.

அதன்பின் பத்துமணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஊர்ப்பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் தீர்வு இருந்தாக வேண்டிய அலுவலகம் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அலுவலகம் அவனுடையது. அந்த அலுவலகத்தில் பணியில் இருப்பவர்களுக்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தன.  அவனுக்கோ அவன் அலுவலகம் தன் உடலெல்லாம் விஷ முற்கள் கொண்டிருக்கும் ஒரு விநோத விலங்கு என்ற எண்ணம். அதோடு பத்தாண்டுகளுக்கும் மேல் மல்லுக்கட்டி வருகிறான். ஆயினும் அவனுக்கு அதன் மூர்க்கமும் தாக்கும் வழிமுறைகளும் புரிந்து விடவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது ரூபங்களில் சங்கடங்கள்.  அலுவலகம் குறித்த நினைவே அவனை கண்ணீர் மல்கச் செய்துவிடும். படி படி என்று சிறுவயது முதல் தவமிருந்தது இதற்குத்தானா? வேறு வேலைகளைத் தேடிக்கொள்ள வாய்ப்புகள் இருந்த நாட்களில் அவன் பொறுத்திருந்து பார்த்துக்கொள்வோம் என்று இருந்துவிட்டான். குடும்பம், பிள்ளைகள் என்று வந்த பின்னர் அவனால் வேறு வேலையைத் தேடிக்கொள்ள முடியவில்லை. வீடு திரும்பும் போது அவன் மிகவும் சோர்ந்து போய் வருவான். பிள்ளைகள் இரவு முழுக்க அவனைப் பந்தாடும். பத்துமணிக்கு கண்களைச் சுற்றி உறக்கம் அப்பும். அவன் நாட்கள் அவனை தளைத்திருந்தன.  குடும்பம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று செரித்துக்கொண்டிருந்தது.

அலுவலகத்தின் கண்கள் வழியாக அவன் உலகத்தைக் காண நேரிட்டபோது அத்தனைப் பேரும் அயோக்கியர்கள் என்று தோன்ற ஆரம்பித்தது. வெளியே உள்ளவர்கள் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ளவர்கள்தான் உலக மகா அயோக்கியர்கள் என்று நம்புகிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் பல பேர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். அதைக்கேட்க நேரிடும் போதெல்லாம் அவன் தன்பக்க நியாயத்தை மனதிற்குள்ளாக பட்டியலிடுவான். “எங்களை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? ” என்று கேட்டு அப்பாவி மக்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளக் கூடியவர்கள் மிகச் சாதாரணமாக செய்துகொண்டிருக்கும் ஊழல்களின் பட்டியலை அடுக்குவான். அதன்  பிறகே அவனுக்குச் சமாதானம் ஏற்படும். முதல் கல்லை உங்களில் யார் எறிவது? என்று இயேசுநாதர் காலத்திலேயே மனிதர்களில் யோக்கியர்களைத் தேட வேண்டி இருந்ததே. பின்னே ஏன் இவர்களிடம் இத்தனை அறச்சீற்றம்.

விரைவாக வாழ்க்கையில் செட்டில் ஆவது குறித்து அவனுக்கு அதிருப்தி. இருபது வயதில் இருந்த எதிர்பார்ப்புகள் இப்போது இல்லை. காதல், திருமணம், தாம்பத்யம், குழந்தைகள், அதற்கு முன்பாக நிலையான ஒரு அரசு வேலை, சமுதாய மதிப்பு, உறவினர்களிடம் நற்பெயர்,  மேலதிகாரிகளிடம் சிறந்த சேவகன் என்ற மதிப்பீடு. அவனுக்கு அத்தனையும் இருந்தது. அவற்றை வென்றடைவதற்காக அவன் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். இப்போது செய்வதற்கு என்ன மீதமிருக்கிறது என்று ஆராய்ந்த போது சொந்த வீடு, சொந்த கார், கணிசமான அளவில் வங்கியில் சேமிப்பு என சில காரியங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன. அவனுக்கு இன்னும் இருபதாண்டுகள் பணிக்காலமும் நாற்பது ஆண்டுகள் ஆயுட்காலமும் மீதம் இருக்கிறது. சட்டென்று அனைத்தையும் செய்து முடித்து விட்டால், அதன்பிறகு செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும். வாழ்க்கைக்கு பொருள் இல்லாமல்  மாறி வெறுமை பீடித்து விடச் சாத்தியம் இருக்கிறது. எனவேதான் அவன் சொந்த வீடு வாங்குவதை தவிர்த்துக் கொண்டிருக்கிறான். சேமிப்பின் மீது கவனம் செலுத்துவதே இல்லை.

வழியில் மிகப் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர். திருமண வாழ்த்துச் செய்தியைக் கொண்டிருந்தது. மணப்பெண் பார்ப்பதற்குச் சுமாராகத் தெரிந்தாள். அவனுக்கும் திருமணம் குறித்து முன்பு என்னென்ன எதிர்பார்ப்புகளோ இருந்தன. காதலித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் லட்சியம் கொண்டிருந்தான். காதலிக்கும்போது மிகுந்த பரவசமாகத்தான் இருந்தது. அவன் காதலியைத் தெய்வத்திற்கும் மேலாக எண்ணியிருந்தான். திருமணம் ஆகி ஒரு வருடக் காலத்திற்குள் அந்த நம்பிக்கை உடைந்து போனது. மற்றொருவரே நரகம் என்பதை அவனும் ஒத்துக்கொண்டான். அதற்குள் மகள் உறுதியாகிவிட்டாள்.

ஓட்டலில் கூட்டம் நெரிபட்டது. புரோட்டாக்கடைகள் எத்தனை வந்தாலும் அவற்றின் தேவைகள் மட்டும் குறைந்த பாடில்லை. வார விடுமுறை நாட்களில் புரோட்டாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. அவனுக்கு புரோட்டாக்களோடு இருபத்தைந்து ஆண்டுகள் பழக்கம். அவனுடைய சிறுவயதில் புரோட்டாக்களுக்கு வழங்கப்பட்ட சால்னாக்கள் பொன்னிறத்தில் ஊன் திரட்சிகள் மிதக்க எண்ணெய் மினுமினுப்போடு இருந்தன. அவற்றின் ருசி அலாதியானது. வெறும் சால்னா குழம்பினை ஊற்றி அம்மா பழைய சோற்றை விரும்பி சாப்பிடுவாள். ஆண்டுகள் செல்லச் செல்ல சால்னாக்கள் மாற ஆரம்பித்தன. இப்போது வழங்கும் சால்னா சால்னாவிற்கான குறைந்தபட்ச தகுதிகளைக் கூட கொண்டிருப்பதில்லை. ஆயினும் மக்கள் விரும்பிச் சாப்பிடத்தான் செய்கிறார்கள். அவனுக்குத்தான் இந்நாட்களின் புரோட்டாக்களை பிடிக்காமல் போயிற்று.

கொத்துப் புரோட்டாவிற்காக எத்தனை முட்டைகளை உடைக்கிறார்கள் என்பதில் கவனத்தைச் செலுத்தினான். தோசைக்கல்லில் டம்ளர் கொத்தும் தாள லயம் ரசிக்கும் படியாக இருந்தது. சுடச்சுட கொத்துப்புரோட்டா பார்சலை வாங்கி வீட்டிற்குத் திரும்பும்போது இயல்பாகச் சிரிக்கத் தோன்றியது. உணவு மகிழ்ச்சியானது. ருசி மிகுந்த உணவு கொண்டாட்டமானது.

மீண்டும் புதர் மண்டிய பாதையை அடைந்த போது உலகமே விரோதியாக மாறியது. அவன் செல்போனை எரியவிட முயன்றான். சார்ஜ் தீர்ந்து செல்போன் அணைந்து போயிருந்தது. சட்டென்று மின்சாரம் தடைப்பட்டு இருள் வந்து அவனைச்சுற்றி அப்பிக்கொண்டது. அவன் வானத்தை ஏறிட்டான். பூதாகரமான உருவங்கள் அவனை நோக்கி கைகளை நீட்டின. கொத்துப் புரோட்டா பார்சலை உறுதியாகப் பற்றிக்கொண்டான்.

 

 

 

 

 

 

One comment

  1. நல்ல தொடக்கம் நல்ல முடிவு எதார்த்தத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *