வேடம் தாண்டித் தோற்றம்

கன்னட நடிகர்கள் விநோதிற்கும் ருத்ராவிற்கும் இடையே நிழல் போர் நிலவுவது ஊரறிஞ்ச ரகசியம். படங்களின் வர்தகம், ரசிகர் மன்றங்கலின் எண்ணிக்கை, படங்களின் ஓட்டம், சொகுசு கார்களின் விலையென எல்லா முனைகளிலும் மோதிப்பார்த்துவிட்டு இப்போது அரசியல் நுழைவாயிலில் நிற்கிறது இந்தப் போராட்டம். திரையுலகின் கற்பனை முதல்வன் நாற்காலியை அடைந்த பிறகு மாநில முதல்வர் நாற்காலி இயல்புதானே? திரைக்குட்டிகளாய் தயாரிப்பாளர் அப்பாக்களின் தோள்களில் நின்று உச்சத்தை அடைந்தவர்களுக்கு அரசியல் பழங்கொட்டைகள் கொடுத்த எச்சரிக்கை, ‘முகஸ்துதி பாடும் கூட்டம் குழி தோண்டி புதைக்கத் தயங்க மாட்டார்கள் ஆனால் கைதட்டி ரசிக்கும் கூட்டம் தங்களையே தலைவர்களுக்காகப் புதைத்துக்கொள்வார்கள். இருக்கும் இடத்தில் இருப்பது நல்லது’. முதல் வகை அரசியல் தொண்டர்கள் இரண்டாம் வகை சினிமா தொண்டர்கள். இந்த விவரம் அவர்களுக்குப் புரிய இன்னும் நேரமாகும். தமிழ் திரையுலகில் வாத்தியார்- நடிகர் திலகம், ரஜினி – கமல் இரட்டையர்கள்போல வேறுபட்ட பாத்திரங்களில்  நடிக்காமல் இருவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களாக நடிக்க விரும்பியதின் விளைவு இந்த நிழற்ச்சண்டை. 

தமிழ் வாசகர்களுக்கு ‘மாஸ்’ என்ற ஆங்கில வார்த்தையின் சினிமா ரீதியான அர்த்தம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இருப்பினும் சிறிய அறிமுகம் கொடுப்பது என் கடமையாகிறது. ‘மாஸ்’ ற்க்கு இரண்டு வகையில் அர்த்தம்  கொள்ளலாம். முதலாவது, பெயரில்லா மனித கும்பலை ஒட்டுமொத்தமாக ‘மாஸ்சஸ்’ என அழைப்பதிலேருந்து இந்த வார்த்தை சினிமாவிற்கு வந்ததென்பது சினிமா அறிஞர்களின் கூற்று. இவ்வகை ‘மாஸ்’ சை ‘மந்தை’ எனத் தமிழாக்கம் செய்யலாம். இரண்டாவது விளக்கம் கதாநாயகனின் வயிற்றில் இரண்டு வரிசையில் ஆறு கொப்பளங்களும் கைகளிலிலும் மார்பிலும்  சதை மேட்டிற்கு நடுவில் வாய்க்கால் ஓடுவதைப் போல உடல்வாகு இருப்பதிலேருந்து  ‘மாஸ்’ ற்க்கு இன்னொரு விளக்கம் உருவாகிறது. இந்த அடிப்படை புரிதலிலிருந்து  இந்திய சினிமா ‘மாஸ்’ பாரம்பரியத்தை இரண்டு கிளைகளாகப் பிரிக்கலாம். முதலாவது விளக்கத்திற்கு உரிய தெற்கத்திய  ‘மாஸ்’ (மந்தை மாஸ்),  இரண்டாம் பிரிவைச் சேர்ந்த  வடக்கத்திய  ‘மாஸ்’ (உடல் மாஸ்). மேற்கிலும் கிழக்கிலும் படம் எடுக்கிறார்களா என்றே கூட விவரங்கள் இல்லாததால் அந்தப் பிராந்திய ‘மாஸ்’களை ஆராய இயலவில்லை. 

வடக்கத்திய ‘மாஸ்’ற்கும் தெற்கத்திய ‘மாஸ்’ற்கும் பல வேற்றுமைகளும் சில ஒற்றுமைகளும் உள்ளன. வேற்றுமைகளுள் முதலாவது, வடக்கத்திய ‘மாஸ்’ பாரம்பரியத்தில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் அமேரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் வாழும் குழப்பங்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்படுபவை. இதனால் படப்பிடிப்பு பெரும்பாலும் அயலிலேயே நடக்கிறது. மாறாகத் தெற்கத்திய  ‘மாஸ்’கள் முக்கால்வாசி ‘இ மண்னின்ட மகா’க்களுக்காக  எடுக்கப்படுபவை. ஒரு கனவு டூயட்டிற்கு நொடி பொழுதில்  ஸ்விட்சர்லாந்து பயணித்தாலும் கதை நம் மண்ணில்தான் நடக்கிறது, மண்ணுடன்தான் ஒட்டிக்கொள்கிறது. இரண்டாவது வேற்றுமை,  வடக்கத்திய ரசிகர்கூட்டத்திற்கும் அவர்கள் அபிமான நட்சத்திரங்களுக்கும்மான உறவை ‘டைம் பாஸ் ‘என்ற தக்க சொல்லினால் வடக்கத்தியர்கள் விளக்குகிறார்கள். வடக்கத்தியர்கள் சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை இந்த ஒரு சொல் விளக்குகிறது. அதற்க்கு நேர் மாறாகத் தெற்கத்திய ரசிகர்கூட்டம் அவர்களது அபிமான நட்சத்திரங்களின் தொண்டர் படையாகவே மாறிவிடுகின்றனர். நிஜ போர்வீரர்களைப் போலத் தங்கள் எஜமானர்களின் அணைக்காகக் காத்திருக்கின்றனர். மூன்றாவது வேற்றுமை, வடக்கத்திய ‘மாஸ்’களை காட்டிலும் தோற்றவியலில் தெற்கத்திய ‘மாஸ்’கள் தங்கள் தீவிரத்தை சில விஷேஷ முறைகளில் வெளிப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளிவந்த ருத்திராவின் படப் போஸ்டரில் பெருமாள்  கையில் இருக்கும் சுதர்சன சக்கிரத்திற்கு ஈடாக மோட்டார் சைக்கிள்பின் சக்கிற ஸ்பிராக்கெட்டை கையில் ஏந்தியபடி ஆக்ரோஷ பார்வையுடன் வெளிவந்த போஸ். இதைப் போன்ற விசித்திர ஆயுதங்கள் வட இந்திய ‘மாஸ்’களில் காண்பதரிது. 

‘மாஸ்’ படங்களின் வடக்கு – தெற்கு வேற்றுமைகளைப் பார்த்தக்கையுடன்  ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டுவது என் கடமை. முதலாவது ஒற்றுமை, ‘மாஸ்’ திரைப்படங்கள் ஆண்களால், ஆண்களுக்குகாகவே  தயாரிக்கப்படுபவை. இதில் வடக்கும் தெற்கும் ஒற்றுமையான கருத்தில்  உள்ளனர்.  ஹீரோயின்கள் ‘மாஸ்’ ஹீரோக்களின் முத்தப்  பலகைகளாகவும், கவர்ச்சி பொம்மைகளாகவும் இருப்பதை தவிர வேறு வேலைகள் இருப்பதாகத் தெரியவில்லை. கன்னடத்தை (அல்லது தமிழை) கடித்து துப்பும் இறக்குமதிகளாக இருப்பினும் வளைவு அல்குலிற்கும்   வெண்ணிற தோற்றத்திற்கும் அதிக மகத்துவம் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது ஒற்றுமை, செலவீட்டில் தொன்னூற்றிஒன்பது சதவீதம் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், இயக்குனர் செலவிற்கு ஒதுக்கிவிட்டு, அரை அல்லது அதைவிட குறைவான நுண்விகிதத்தில் கதாசிரியருக்கும் திரைக்கதை எழுதுபவருக்கும் கொடுக்கப்படுகிறது. இது ஒரு சிறுகதை என்பதாலும் இதுவரை கொடுத்த விவரங்களின் மூலம்  நீங்களே ‘மாஸ்’ சைப்பற்றிப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கைளியில் மேலும் இவ்விஷயத்தை ஆராய விரும்பவில்லை, மன்னிக்கவும்.  

நம் கதை ஹீரோ வினோத் (என்கிற) குமார், ரசிகருள் அதிர்ஷ்டசாலி. விநோத்தின் தீவிர ரசிகன் மட்டுமின்றி வினோத்தின் முகஜாடையும் உடையவன். மாமாவின் சைக்கிள் கடையில் வேலைபார்ப்பதே ஒரு உபரி   வேலைதான். தன் குருநாதரின் வேடம் புகுண்டு மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும்,  முகநூலிலும் நடிப்பதுதான் முழு நேர வேலை. அசலுக்கு கிடைத்த வாழ்வு இவனுக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற அபத்த கேள்விக்கு இங்கு இடமில்லை. அதைக் குமாரே கேட்கவில்லை. நிழல் என்றும் அசல் ஆக முடியாது.  வாசகர்கள் குமாரை வினோதின் டூப் எனத் தப்பாகப் புரிந்துகொள்ளக் கூடாது. டூப் என்பது சினிமா துறையில் வேறொருவரை குறிக்கும். சண்டை மற்றும் அபாய காட்சிகளில் ஹீரோவிற்கு பதில் நடிப்பவர் டூப். அவருக்கு முக ஒற்றுமையைவிட உடல் ஒற்றுமை அவசியம், தைரியமும் அதிகம் வேண்டும். குமார் வினோத்தைவிட உயரத்தில் கம்மி. பிறர் அவனைக் கோமாளி என்றாலும்  குமார் தன்னை ஒரு தோற்ற கலைஞன் என விமர்சித்துக்கொண்டான். தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தெய்வீக தொண்டர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் அதிக வித்யாசங்கள் இருப்பதில்லை. வைணவர்கள் திருநாமம் இட்டுக்கொண்டு அரங்கநாதனின் பரவசத்தில் அரையர் ஆட்டம் ஆடுகிறார்கள், ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களின் சிகை அலகாரத்தை செய்துகொண்டு ஹீரோக்களின் நடன முத்திரைகளைத் திரும்பச் செய்கிறார்கள். இருவருக்கும் தீவிரம் ஒன்றே. 

வானசாஸ்திரத்தின் விதிகள் சினிமா நட்சத்திரங்களின் வாழ்வில் அதிக தாக்கங்களை  ஏற்படுத்துவதாகத் தகவல் இல்லை. படங்கள் படு தோல்வி  அடைந்தாலும் நட்சத்திரங்களின் மின்னுதல் குறைவதில்லை. ஏழரை நாட்டான் சனி ரசிகர்களின் வாழ்வில்தான் விளையாடுகிறது. வினோத் ரசிகர் மன்றங்கள் ருத்ரா புதுப்பட வெளியீட்டின்போது தலைமறைவாவது வழக்கம். இதன் எதிர்மறையும் பொருந்தும். புதுப்பட வெளியீடு நாட்களில் பலமுறை இருதரப்பினரும் கைகலப்பில் இறங்குவதால்   போலீசாரின் பரிந்துரையில் ருத்ராவும் வினோத்தும் தங்கள் சீடர்களை அமைதி காக்கும்படி கூட்டு அறிக்கை விட்டிருக்கிறார்கள். குமார் பொதுவாக ருத்திரா புதுப்படம் வெளிவரும் நாட்களில் இலாக்கா மாறுவதில்லை.

சும்மா இருந்த சங்கில் விதி ஊத்தி கெடுத்தது, குமாருக்கு திரௌபதி மேல் காதல் உண்டானது. திரௌபதி ருத்திராவின் தீவிர ரசிகை என்பதில்தான் விதி சங்கூதியது. ஆடவர்களுக்கு பால் பாரபட்சமின்றி தங்கள் அபிமான நட்சத்திரங்களின் புகைப்படத்தைச் சுவற்றில் ஓட்ட அனுமதிக்கும் சமூகம் பெண் ரசிகர்களுக்கு அதே சுதந்திரத்தை கொடுப்பதில்லை. திரௌபதி இதுவரையில் ருத்திரா படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்ததே இல்லை. முதல் நாள் டிக்கட்டுகள் ஐந்தாயிரம் வரை விற்கும்போது எப்படி பார்ப்பது? திருட்டு சி. டி வெளிவரும் வரை காத்திருந்துதான் பார்த்திருக்கிறாள்.

‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ எனப் பலமுறை குமார் தனிமையில் ஏங்குவது திரௌபதிக்கு தெரியாமல் இல்லை. “ஓகி சாயக் ஹேலோ” (“போய்ச் சாவச்  சொல்லு”) எனச் சொல்லித் தூதுவனின் வாலை சுட்டு அனுப்பிவிட்டாள் ஒரு முறை. சாமானியனின் வாழ்வில் நடந்த பேரிடர்களில் காதல் தோல்வி முதல் மூன்று இடங்களில் இடம்பெறுவது இயல்பு. குமாரின் தலையில் கூர்மையான கம்பு நாட்டி அதன் மேல் ஒரு தராசு தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் திரௌபதி மேல் இருந்த காதல் இன்னொரு தட்டில் வினோத் மேல் இருந்த அபிமானம். காலம் செல்லச்  செல்லத் திரௌபதியின் தட்டு கீழே இறங்கியது. வினோத் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை மெதுவாகக் குறைத்துக் கொண்டான் குமார். சைக்கிள் கடையில் வேலை அதிகம் எனக் காரணம் சொன்னான். 

ஒரு வாரத்தில் ருத்திராவின் புதுப் படம் வெளிவரவிருந்தது. வழக்கமாகத் தலைமறைவாகமல் துணிச்சலான ஒரு முடிவிற்கு வந்தான். தன் சேமிப்பு   முழுவதும் காலி செய்து கருப்பில் தலை ஐந்தாயிரத்திற்கு இரண்டு டிக்கட்டுகளை வாங்கினான். கையில் டிக்கட் வந்ததும் தேவி கோவிலுக்குச் சென்று திரௌபதி வரவைக் காத்து நின்றான். இது அவனுக்கு வாடிக்கை. திரௌபதி வந்தவுடன்,

“ஏய் இங்க பாரு.” என இரண்டு டிக்கட்டுகளை அவளிடம் காணபித்தான். தேவியே ப்ரத்யக்ஷமாகியிருந்தாலும் திரௌபதிக்கு அத்தனை பரவசம் இருத்திருக்காது. இருந்தும் ஒரு தயக்கம், ‘இவன் கையில் எப்படி இந்த டிக்கெட்?’. 

“யாரது டிக்கெட்? சும்மா பேஜார் பண்றியா?” என்றாள்

“பேஜார் ஒன்னும் பண்ணல…என்து.” என்றான்

“ஆமாவா.” என்று அழகு காண்பித்துவிட்டு ஏதோ கன்னடம் கலந்த தமிழில் மூணு முனுத்தாள்.

“லே என்ன நம்பமாட்டியா?” என்றான். 

“ஒன்து செய்.இந்த இக்ராப்பு வெட்டிகினு நாளைக்கு வா அப்பறம் நம்பறேன்” என்று சொல்லி நகர்ந்துவிட்டாள். வினோத்தின் சமீபத்திய சிகை அலகாரத்தை வெட்டினால் அத்துடன் தாலி அறுத்து உறவை முறிப்பது போன்றது. ஆனால் துணிந்தவருக்கு பயமேது? காலை எழுந்தவுடன் முதல் வேலையாக நாவிதன் கடைக்குப் போய்த் தன் சிகை அலங்காரத்தை மாற்றி எல்லோரைப் போல வகுடெடுத்து வாரிக்கொண்டான். மீண்டும் ஒரு முறை தேவி கோவிலில் திரௌபதிக்கு காத்திருந்தான். அவளின் முதல் பார்வையே திகைப்பை வெளிப்படுத்தியது. மெதுவாக வந்தாள், குமார் பாக்கெட்டில் இரண்டு டிக்கட்டுகள் இருப்பதை கவனித்தாள். குமாரின் பார்வையில் இருந்த கேள்விக்குறி புரிந்தது. அப்போதே எதுவும் சொல்லவில்லை. 

காவேரி தியேட்டருக்கு இருவரும் தனியாகத்தான் வந்தார்கள். படம் ஆரம்பமாகி பத்து நிமிடத்திற்கு பிறகுதான் திரௌபதி வந்தாள் ஆனால் குமார் பக்கத்தில் உட்கார சம்மதித்தாள். இது முன்னமே குமாருடன்  ஒப்புக்கொண்ட ஒன்று. ஆசைதான் சாதனைகளை நிகழ்த்தவைக்கும் ஊக்கம். இருவராலும் படத்தைச் சரிவரப் பார்க்க முடியவில்லை. யாரவது அடையாளம் கண்டுகொள்வார்களோ என்ற பயம் குமாரிற்கு, தன்னை குமாருடன் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் திரௌபதிக்கு. ஆனால் சில தருணங்கள் இருவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது. ஆரவாரங்களுக்கிடையே திரௌபதியின் முகத்தை மங்கிய திரை ஒளியில் பார்த்த அந்த வினாடி குமாருக்கு, முதல் முறையாக ருத்தரா அறிமுகமான தருணம் திரௌபதிக்கு. படம் முடிய ஐந்து நிமிடங்கள் முன்னமே திரௌபதி எழுந்து ஓடிவிட்டாள். ஓர் நன்றியோ அல்லது ஏதாவதோ கொடுக்காமல் ஓடிவிட்டாள். இதைக் குமார் எதிர்பார்க்கவில்லை என்றாலும் புரிந்துகொண்டான். படம் முடிந்து கூட்டம் கலையும் வரை காத்திருந்தான். எல்லோரும் வெளியேறியபின் மெதுவாக எழுந்து கதவுகளைத் தாண்டி எப்படியோ தியேட்டரை விட்டு வெளிய வந்து பேருந்து நிலையம் அடைந்தான். அப்போது  வெற்றித்திலகமிட்டு கோட்டைக்குள் வரவேற்கப்படும் இளவரசனைபோல உணர்ந்தான். பரவச நிலையில் பூரித்து நின்றிருக்கையில் கூட்டம் ஒன்று அந்தப் படத்தின் பாடலைப் பாடிக்கொண்டே வருவதை கவனிக்க தவறி வானத்தில் மிதந்துகொண்டிருந்தான். கூட்டம் நெருங்கியதும் அதில் ஒருவன் குமாரை சிறிய நோட்டம் விட்டு,    

“லேய் நீனு குமார் தானே?” என்றதும்தான் திடுக்கிட்டுத் தரைக்கு திரும்பினான். குமார் ஒன்றும் பேசவில்லை. “மகா இங்கே பாரு இவன் யாரு தெரியுதா?” என்றான் அவன் கூட்டாளிகளுக்கு. அவர்கள் பக்கத்தில் வந்து குமாரை சூழ்ந்து கொண்டார்கள். 

“லேய் ஏனு இங்கே என்ன பண்ணிக்கிணுகீற? படம் பாக்க வந்தியா? நீனு அந்த நாய் பிரேமியாச்சே?” என்றான். அவர்களில் சிலர் போதையில் இருப்பது தெரிந்தது.

“ப்ரோ அதெல்லாம் அப்போ. இப்போ.”, முடிப்பதற்குள் “ருத்ரா ஃபேன்  அயிட்டீயா?” என்று சொல்லிச் சிரித்தார்கள். 

“லேய் உன்கூட ஒரு  ஃபிகர் வந்ததில்லை அது பேர்  என்னா?” என்றான் இன்னொருவன். குமார் ஒன்றும் பேசாமல் நிற்கையில் “சொல்லுடா நாயே…” என்று ஒரு கை ஓங்கியது இன்னொரு கை அடித்தது. பின் சரமாரியாக உதைகள் விழுந்தன. போலீசார் வரவில்லையெனில்  நிலைமை விபரீதமாகியிருக்கும். மருத்துவமனையிலிருந்து  விழுப்புண்களுடன் வீட்டிற்கு வருவதற்குள் விஷயம் பரவி வினோத் ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டான். அன்று மாலை சைக்கிள் கடைக்குப் போகும்போது  வீதியில் திரௌபதி எதிரே வந்தாள். முதல் முறையாக வேடத்தைத் தாண்டி  அவன் அசல் தோற்றத்தைப் பார்த்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *