நிழல் முகாம்

1985 பிப்ரவரி 12 – முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய். பொழிந்த மழையின் வாசனையில் ஈரமாக இருந்த தரையில், மர இலைகளிலிருந்து நழுவிய மழைத் துளிகள் ஆச்சரியக்குறிகள் போலக் கீழே விழுந்தன. நெடுந்தூரம் நிம்மதியாக இருந்த வானம், அகலமான மௌனத்தோடு மூடியது. ஆனால், அந்த அமைதி, ஒருபோதும் இயல்பானதல்ல. பக்கத்தில் இருந்த புதர்ச்செடிகள்கூடச் சுழற்காற்றால் ஏதோவோர் எதிர்பார்ப்பில் பதற்றமடைந்தது போலக் கசக்கிக் கொண்டிருந்தது. 

மாறன், பச்சைத் துணியால் முகத்தை மூடியவாறு, தரையிலிருந்து பனிக்காற்று உளுந்தி வரும் வேளையில் படுத்திருந்தான். அவனது கண்களில் தூக்கம் இல்லாத இருள். அந்த இருளில் அவன் நினைத்தது யாழினியைத்தான்.

“மாறா…”

அந்தச் சத்தம் நினைவின் மிச்சம்.

அவளது குரல், மழையில் நனைந்த வாசகமாய் எழுந்தது. இரவு நேரங்களில், புலிகள் முகாமில்கூட மாறன் யாழினியின் எழுத்துப்பலகையின் ஓசையைதான் கேட்பான்.

யாழினி ஆசிரியை. அவளது வகுப்பறை படுகளக்கோவில் போன்றது. பிள்ளைகள் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் நெருப்புக் கோலம் போல அவளது உள்ளத்தை ஒளிரச் செய்தது.

“நீ ஒரு நாள் போராளியாக மாறிவிடுவாய் என்று நினைத்தேன். ஆனா… நான் வேண்டுமா அதற்கு?” என்று ஒருமுறை யாழினி கேட்டிருந்தாள்.

மாறன் மௌனம். ஆனால் அந்த மௌனமோ ‘உனக்காகத்தான்’ என்பதற்கே சமமாக இருந்தது.

பிப்ரவரி 13, அதிகாலை 4:15. கொக்கிளாய் முகாமின் அருகில் ஓர் இயந்திரம் ஒரு புதுவகையான தாக்குதலுக்கான தளமாக நின்றது.

“இது வெறும் தாக்குதல் அல்ல மாறா!. இது நம் வரலாற்றைத் துரத்திய ஒரு நாட்குறிப்பு. நம்முடைய சாவும் அவர்களுடைய சாவும்… வருங்காலத்தில் எழுதப் போகும் வரிகள்” என்றார் அரவிந்தன்.

மாறன் அவரது முகத்தைப் பார்த்தான். அரவிந்தனின் கண்களில் சுடரொளி இருந்தது. ஆனால், அவன் உள்ளத்தில் பதட்டம்.

மாறனுக்கு யாரும் சொல்லவில்லை. ஆனால், யாரோ ஓர் உளவு இராணுவத்துக்குள் சென்றிருப்பது உறுதி. அதற்கான அடையாளங்கள் நாள்கள் முழுவதும் கொட்டிக் கொண்டிருந்தன.

தீவிரமாக ஆயுதங்களைச் சுமந்த புலிகள், பல திசைகளில் பிரிந்து சென்றனர். பின்புறத்தில், கடலோரமான பாதையில் இருந்தவர்கள் முக்கியமான தாக்குதலுக்கு.

மாறன் கையில் ஒரு கவிதைப்புத்தகத்துடன் இருந்தான். அது யாழினி தன் மாணவர்களுக்காக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. யுத்தமும் கவிதையும் ஒரே இடத்தில் சந்திக்க முடியுமா, என்ன?

காலை 6:10. முதல் வெடிப்பு. அந்தச் சப்தம் கொக்கிளாய் முகாமை உலுக்கியது. இராணுவ வீரர்கள் எல்லாத் திக்கிலும் ஓடினர். சிலர் எதிர்த்தனர், சிலர் விழுந்தனர். ஆனால், புலிகள் பயங்கரமாக முன்னேறினர். முகாமின் முன்பக்கம் உருக்குண்டு விழுந்தது.

மாறனின் பக்கத்தில் இருந்த கிருஷ்ணா பீரங்கிக் குண்டுவெடிப்பில் சிதைந்தான். அந்தச் சிதைவு மாறனின் உள்ளத்தையும் துளைத்தது. அரவிந்தன் கடைசிச் சுற்றாகச் சுட்டுவிட்டு விழுந்தார். அவர் கையில் இருந்த வரைபடம் இரத்தத்தில் நனைந்தது.

மாறன் ஓடியபடியே கடல்பக்கமாகச் சென்றான். ஒரு வெடிப்பின் தாக்கம் அவன் கையைச் சிதைத்தது. விழுந்தான். மயக்கத்தில் கண்களை மூடியபோது யாழினியின் சிரிப்பு அவன் நினைவில் எழுந்தது.

பிப்ரவரி 14, காலை 05:45. கடலோரக் காற்று சற்றுக் கடுமையானது. செங்கதிர் உதயமாகிக் கொண்டிருந்தது. புலிகள் உடல்களைத் தேடிக் கொண்டிருந்தனர். 16 பேர். ஒருவரும் திரும்பவில்லை. மாறனும் அந்தப் பட்டியலில் இருந்தான். ஆனால், அவன் உயிரோடு இருந்தான் என்பதுதான் வியப்பு.

முதிய மீனவர் அவனைக் கடற்கரையின் பக்கத்தில் கண்டார். கை சிதைந்து, உடம்பில் பல இடங்களில் காயங்களுடனும் உடல் முழுக்க வெடிமருந்தின் நெடியுடனும் கிடந்த மாறனை அவர் சில நாள்கள் மறைவில் வைத்து நாட்டுச் சிகிழ்ச்சை அளித்தார். 

அவன் விழித்த போது, முதலில் கேட்டது ஒரு சிறுமியின் சிரிப்பைத்தான்.

“யார் நீங்கள்?” என்று கேட்டாள் அந்தச் சிறுமி.

மாறன் பதில் சொல்லவில்லை. ஆனால், மனத்தில், ‘இப்பொழுது என் பெயர் இல்லாமல் இருக்கட்டும். ஆனால், என் வாழ்க்கையில் வெடிச்சத்தம் மட்டுமாவது எஞ்சட்டும்’ என்ற எண்ணம் எழுந்தது.

கொக்கிளாய் தாக்குதலுக்குப் பிறகு, யாழினிக்கு எதுவும் புரியவில்லை. நகரத்தில் ஒவ்வொரு இடத்திலும் இராணுவம். சோதனைகள். எரிந்த மரங்கள். விழுந்து சிதறிய சதுரங்கக் காய்களைப் போல மாணவக் குழுக்கள்.

அவள் கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால், அவள் வார்த்தைகள் சலனமடைந்தன. பாடம் சொல்லும் போது, சில குழந்தைகள் பெயர்வழியாக அழுதார்கள்.

“அம்மா! கிருஷ்ணா வந்தால் சொல்லுங்க, நானும் ‘வீட்டில் பயம்’ என்று சொல்லணும்…”

யாழினி அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனத்தில் சொல்லிக்கொண்டாள். ஆனால், மாறன்? அவன் வார்த்தையே இல்லாமல் போய்விட்டான்.

ஒருநாள் யாழினியிடம் கடிதத்தைக் கையளித்தார் தோட்டப்பணியாளர். அதை ஐயத்துடன் வாங்கிய யாழினி, மறைவிடத்துக்குச் சென்று பிரித்துப் படித்தாள். இந்தக் கடிதத்தை யார், யாருக்கு எழுதியது என்ற குறிப்பு அந்தக் கடிதத்தில் இல்லை.

“நான் உயிரோட இருக்கிறேன். என் கைகள் இன்னும் போருக்குள்தான். ஆனால், என் மனம் மட்டும் உன்னுடன்.”

யாழினி அழவில்லை. அவளிடம் மாறனின் மனத்தைத் தவிர வேறு யாருடைய மனம் இருக்கும்? அவளுக்கு அந்த வரிகளே போதுமானவை. 

மாறன் சில நாளில் உடல் ரணங்கள் குணமாகி நடக்கத் தொடங்கியிருந்தான். பழைய வேட்டைப் பாதையைப் போலத் தோன்றும் அந்தச் சிறிய பாதையில், தோலைச் சொறியும் காயங்களுடன் நடைப்பயிற்சி செய்தான். பக்கத்தில் இருந்த சிவந்த மரத்தினுள் கட்டடம் இருந்தது. அது மறைமுகமாகப் புலிகள் அமைத்திருந்த ரணசிகிழ்ச்சை முகாம்.

அங்கே காயங்களுடன் வந்தவர்களுள் சிலர் மட்டுமே உயிருடன் இருந்தனர். முகாமின் ஒவ்வொரு மூலையிலும் கண்ணீர்க்கதையின் எச்சங்கள் இருந்தன. அங்குப் பலர் சுவரில் சாய்ந்து மனம் உறைந்திருந்தனர். மாறனை உயிருடன் பார்த்தத்தில் பலருக்கும் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.   

அங்கு முன்னாள் அரசு ரணவைத்தியர் திலகவதி இருந்தார். இப்போது அவர் புலிகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்கிறார். அவரின் அறிவும் மனதும் இனி எப்போதும் போராளிகளுக்கே சொந்தமானது.

அவர் மாறனிடம், “நீ போருக்குத் திரும்பணுமா? இல்லை, புதிதாய்ப் பிறக்கணுமா?” என்று கேட்டார்.

மாறன் பதில் சொல்லவில்லை. ஆனால், அவன் சுடரிழந்த கண்ணில் யாழினியின் நிழல்தான் இருந்தது.

யாழினி, பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த ஒவ்வொரு முறையும் எரியூட்டப்பட்ட விறகு போன்ற நினைவுகளைத் தாங்கினாள். மாணவர்கள் குறைவாக வந்தனர். சிலரின் பெயர்கள் பட்டியலிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டன.

ஒரு நாள் பள்ளி முடிந்த பிறகு, யாழினியிடம் சிறுமி உமாயா கைப்பதிப்புப் புத்தகத்தைக் கொடுத்தாள்.

“இதிலே சார் எழுதின கவிதை இருக்குன்ணு அம்மா சொன்னாங்க. நீங்க பார்த்துச் சொல்லுங்களேன்?” என்று கேட்டாள்.

அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் பழுப்புத்தான். அதில் காத்திரமான கவிதையிருந்தது. அது மாறனின் கையெழுத்தில் இருந்ததால் அவள் மெய்ச்சிலிர்த்தாள்.

“பூ மொட்டுகள் வெடிக்காதிருக்கலாம்.

ஆனால், நம் வரிகள் மட்டும் வீணாகாது.

வெடித்த பக்கத்தில் ஒரு காதல் இருந்தால்,

யுத்தங்கூட அன்புக்குரியதாய்த் தோன்றும்.”

யாழினி அந்தப் பத்தியில் கண்ணீரால் ஒரு புள்ளி வைத்தாள். அது உப்பாய் இல்லாமல் உவப்பாய் இருந்தது.

மாறன் முகாமிலிருந்து வெளியில் செல்லத் தயாரானபோது அங்கு உள்ளே வந்தார் புதிய போராளி சதுரன். இளைஞன், ஆனால் அவரது கண்களில் ஒரு பழைய காலத்தின் பயங்கரப் பாரம் இருந்தது.

“நீ மாறன்தானே?” என்றான்.

மாறன் சிரிக்கவில்லை. ஆனால், அவன் தலை சிலிர்த்தது.

“நீ என் அண்ணன் கிருஷ்ணாவுடன்…?”

மாறன் நெஞ்சு கனத்தது. துடிப்பான குரலில் அவனுடன் கதைக்கத் தொடங்கினான் மாறன்.

“கிருஷ்ணா உயிரோடு சாகத் துணிந்தவன். அவனோட இறப்பு என் வாழ்வின் மறுதுவக்கம்” என்றான் மாறன்.

சதுரன் மௌனமானான். 

ரகசியப் புலிகள் முகாம். மன்னார் மாவட்டம். இந்த இடம்தான் இராணுவ உளவாளிகளுக்கான அடுத்த இலக்கு. அரவிந்தன் போல் பலர் இங்குத் திட்டமிடப் பட்டனர். ஆனால், ஒருவன்தான் இதில் ஏமாற்றத்தோடு வந்தான். அவன் லெனின்.

லெனின் ஒரு புலி. ஆனால், இருபுறமும் விளக்குகளைப் பற்றியவன். ஒருபக்கம் போராட்ட வீரர், மறுபக்கம் இராணுவத்தின் பக்க நிழல்.

அவன் செயலை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால், அவன் சொல்லாத விடயத்தை அவனின் செயல்களிலிருந்தே எல்லோரும் வாசித்து அறிந்துகொண்டனர். 

மாறன் முகாமுக்குள் நுழைந்தபோது, அவனை முதலில் சந்தித்தது லெனின்தான். “உன் போக்கு வேற மாதிரி இருக்கு மாறா. கவிதை எழுதியவனாம் நீ?”

மாறன் சிரித்தான். “கவிதை எழுதுறவன் மழையில் நனையிறான். ஆனால், நம்ம கண்ணாடிக்குள்ள இருந்து பார்க்க முடியாத மழையும் உண்டு.”

அந்த வார்த்தைகளைத் தடுப்புச் சுவர்களைச் சிதைக்கும் கடப்பாறைகளாக உணர்ந்தான் லெனின்.

மாறன் முகாமுக்குள் நிலைபெற்று விட்டான். ஆனால், அவன் கவனம் தனக்குள் மட்டும் அல்ல. முகாமின் மூலைக்கு மூலை லெனின் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பதுபோல இருந்தது. அன்றைய இரவில் முகாமின் பின்புறத்தில் இருந்து எலுமிச்சை மணந்தது. அது ஒரு குறியீடு. சதுரன்தான் அதனை முதலில் கண்டுபிடித்தான்.

“இந்த வாசனை… எப்பவுமே நாம எதாவது சிக்கலானது அனுப்புனா மட்டுந்தான் இந்த வாசனை வருது, மாறா!” என்றான்.

மாறன் திடுக்கிட்டான். இது புறந்தல்லத்தக்க வாசனை அல்ல. இது ஓர் அடையாளம். அவர்கள் இருவரும் இரவு நேரத்தில் அவதானித்து பார்த்தனர். ஒரு பழைய சரிந்த மரத்தின் பின்னால், இரவு இருளில் மிளிரும் பனிக்காற்று போல ஆள் நிழல் நகர்ந்தது. அது லெனின்!

யாழினியின் வீட்டு வாசலில் ஒரு மடல். அந்த மடல் அவளது அத்தை வீட்டிலிருந்து வந்தது என்று நினைத்தாள். ஆனால் உள்ளே ஒரு வார்த்தை மட்டுமே:

“அவன் முகாமில்தான் இருக்கிறான்.”

மடலின் மூலையில் ஒரு சிறிய எழுத்தில் 13 என எண்ணிடப்பட்டிருந்தது. அது கொக்கிளாய் தாக்குதலின் நாள்.  யாழினியின் இதயம் சுழன்றது.

அவளது உள்ளத்தில் இருந்த பிணமான நம்பிக்கை உயிர்த்தெழுந்தது. அவள் வேறு யாரிடம் இது பற்றிக் கதைக்கவில்லை. ஆனால், தன்னுடைய தந்தையின் பழைய தோழர் பழனிவேலுக்கு ஒரு சந்திப்புக் கோரிக்கை அனுப்பினாள். அவர் பழைய போராளி. இப்போது சட்டத்திற்குள் வாழ்பவர். ஆனால், அந்தச் சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை.

“உனக்கு அவன் முகாமில்தான் இருப்பான்ணு எப்படிச் தெரிஞ்சது? யாராவது உன்னைக் குழப்ப இப்படித் தகவல் அனுப்பியிருந்தா?” என்று கேட்டார் பழனிவேல்.

“அவனையும் முகாமையும் பிரிக்க முடியாதுங்க சார். என் கண்களில் அவன் இன்னுமும் முகாமிலிருந்தபடியேதான் விழிக்கிறான் சார்” என்றாள் யாழினி.

அவர் புன்னகைத்தார். 

“சரி. எந்த முகாம் என்று விசாரிக்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

மாறனும் சதுரனும் லெனினை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 

மாறன் ஒரு கவிதையை எழுதி அதை முகாமின் பொதுப்பிரசுர சுவரில் ஒட்டினான்:

“நிழலாக நடக்கிறான்,

நிச்சயம் அது கதிரவன் அல்ல.

ஒளியல்ல தவிர,

நம் இருட்டின் பக்கம் போனவன்.”

அதைக் கண்டதும் லெனினின் முகம் வாடியது. ஆனால், அவன் மாறனை நேரில் எதிர்க்கவில்லை.

அந்த இரவில் மாறனுக்கு ஒரு பொதி வந்து சேர்ந்தது. அதைத் திறந்த போதுதான் தெரிந்தது அது சிறிய காகிதச்சுருள் என்று. அதில் யாரோ பின்வருமாறு எழுதியிருந்தார்கள்.

“உனக்குத் தெரிந்தது போதாது. விடுபட ஆசைப்பட்டால், உண்மையை எதிர்கொள்.”

மாறன் சிரித்தான். ‘சதி விளையாடறவன், கவிதையால் காயப்படுவான்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

யாழினி, பழனிவேலுடன் ஒரு ரகசிய முகாமை நோக்கிப் பயணமானாள். அந்த முகாமில் இருந்தது புதிதாக மீட்டெடுக்கப்பட்ட போர்க் கைதிகளின் பட்டியலைப் பெற்றாள்.

அந்தப் பட்டியலில் இருந்தது – “மாறன். மறுசேர்க்கை – எண் 191.”

அவள் கை நடுங்கியது. ஆனால், சிரித்தாள்.

‘நம்மிடையே இருந்த காதல்… அது இறந்ததே இல்லை. அது மீண்டும் நம்மிடையே வந்து சேர்ந்தது’ என்று நினைத்துக்கொண்டாள்.

அந்த ராத்திரியில் லெனின், இராணுவத்துக்குப் புது தகவலுடன் ஒரு குறுநாட்குறிப் புத்தகத்தை வெளியே அனுப்ப முயன்றபோது, சதுரனும் மாறனும் அவனைத் துரத்திப் பிடித்தனர்.

“நீ யாருக்கு வேலை செய்ற?” என்று அதட்டிக் கேட்டான் சதுரன். 

“எனக்கு நம்பிக்கையில்லை. புலிகள் மீதும். இராணுவத்தின் மீதும். என் தம்பி கொல்லப்பட்ட போது நானும் இறந்துட்டேன்” என்றான் லெனின்.

மாறன் அமைதியுடன் சொன்னான், “நீ உண்மையக் கதைச்சதுக்காக இப்போ வாழ விடுறேன். இனிமே, நீ எங்குப் போனாலும் நிழலாத்தான் போகணும். “

யாழினி முகாமை நெருங்குகையில், சத்தமில்லாத அடையாளங்களைப் பயன்படுத்திச் சின்ன சின்ன இடைவெளிகளைக் கடந்து சென்றாள். அவளது உள்ளத்தில், மாறனின் முகம் மீண்டும் சுடர்விட்டது.

முகாமின் கதவின் அருகே வயதான காவலர் இருந்தார். அவரிடம் அவள் மெல்ல கேட்டாள். 

“மாறன்… இங்கே இருக்கிறாரா, ஐயா?”

அந்தக் காவலர் மெல்லச் சிரித்தார்.

மாறனின் முகத்தில் ஒரு நிமிடம் மின்சாரம் ஒளிர்ந்தது போலே நடந்தது. முகாமின் கதவுக்கு வெளியில் யாழினியின் குரல் வந்ததும் அவன் எழுந்து நின்றான். அவனுக்கு முன்பாக நின்றிருந்த சதுரன் மாறனின் பார்வையைப் பார்த்துச் சிரித்தான்.

“இவ்ளோ நாள்கள் கழிச்சு, ஒரு குரல் மட்டும் போதும்ணு சொல்ல முடியுமா?” என்றான் சதுரன்.

“நாம் வாழ்ந்து முடிக்க வைக்கிறதே அந்தக் குரல்தான், சதுரா!” என்றான் மாறன்.

யாழினி முகாமுக்குள் வந்ததும், இருவரும் சில வினாடிகள் வார்த்தையில்லாமல் நின்றனர். அந்தப் பரஸ்பர மௌனம்தான் அவர்கள் கடந்த காலத்தின் அடையாளம்.

“நீ என்னை விட்டுப் போனதும் எல்லாமே போச்சு மாறா! ஆனா, நீ உயிரோட இருந்ததால உன்னை மறுபடியும் காண்ற ஆசை மட்டும் போகவேயில. அதான் தேடி வந்தேன்” என்றாள் யாழினி.

“நீயும் என்னைத் தேடியதாலத்தான் நான் உயிரோட இருக்குறேன். எதுவும் முடியவில்லை, யாழி! இதுதான் தொடக்கம்.”

முகாமில் அமைதியான இரவுகளின் நடுவே, வலது திசையிலிருந்து பெரும் வெடிப்பு ஒலிக்கிறதெனத் தோன்றியது. இலங்கை இராணுவம் முகாமைச் சுற்றி வளைத்தது. 

மாறனும் சதுரனும் யுத்தத் தயாரிப்பில் இறங்கிய போது, யாழினி அவர்களின் அருகே வந்து, “நானும் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.

“இது உன் இடமல்ல யாழினி” என்றான் சதுரன்.

“அவர் இருக்கிற இடம்தான் என் இடம்” என்றாள்.

மாறன் ஏதும் கூறாமல் ஆயுதங்களை ஒழுங்குபடுத்தி, ஏந்தத் தொடங்கினான்.  

முகாமைச் சுற்றிய இராணுவ வாகனங்கள் மெதுவாக வேறு திசையில் நகரும் ஒலி கேட்டது. இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஏதும் நிகழவில்லை. முகாமின் பின்பக்கத்தில் வனப்பகுதியை நோக்கிய திசையில் இராணுவம் இறங்கிக் கொண்டிருந்தது. முகாமின் வடமேற்குப் பக்கம், பழனிவேல் தலைமையிலான சிறிய குழுவினர் எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்பியிருந்தனர். 

மாறன் ரேடியோ குறியீட்டு ஒலியை அனுப்பினான். பதில் ஒலிக்காகக் காத்திருந்தான். இந்த இடைவெளியில் லெனின் கைது செய்யப்பட்டிருந்தான். ஆனால், அவனைச் சுற்றிய சதி முழுமையாக வெளிப்படவில்லை. அவனிடம் இருந்த புத்தகத்தில் ஒரேயொரு பெயர் மட்டும் இன்னும் மறைக்கப்பட்டிருந்தது. அது ஓர் உளவாளியின் உண்மையான அடையாளம்.

அந்தப் பெயரைச் சொல்லும்படி கேட்டு லெனினை அடித்துக்கொண்டிருந்தனர். அவன் முகத்தைச் சிதைக்கத் தொடங்கினர். அப்போது லெனின், “அந்தப் பெயரை வெளியிட்டா… இன்னொரு முகாமும் சிதையும்” என்றான்.

மாறன் அருகே வந்தான். “உனக்கு எது பிடிக்கும்? உன் முகம் சிதைவதா அல்லது பிறர் முகம் சிதைவதா? நாங்கள் ஒரு முகத்தைத்தான் சிதைக்க விரும்புகிறோம்.” என்றான். 

லெனின் மெதுவாக அந்தப் பக்கம் திரும்பி, அந்தப் புத்தகத்திற்குள் ஒரு பக்கத்தைத் திறந்து காட்டினான். அதில் குறியீட்டு எழுத்தில் ‘பழனிவேல்’ என்று எழுதப்பட்டிருந்தது.

மாறனும் சதுரனும் நிமிர்ந்து யாழியினைப் பார்த்தனர். யாழினியின் கண்களில் வியப்பும் கோபமும் துளிர்த்தன.

“அவர் என் தந்தையுடன் இருந்தவர்தான்… ஆனால்…” என்ற கூறிவிட்டு மௌனமானாள்.

‘பழனிவேல் ஏன் இரட்டை வேடத்தில் இருக்கிறார்?’ என்று அவளுக்குப் புரியவேயில்லை. 

அவரைப் பிடித்து, இழுத்துவந்தனர். யாரும் கேட்காமலேயே அவராகவே கதைக்கத் தொடங்கினார்.

“இருப்பதற்கு இடமில்லை. இடமும் இருப்பும் என இரண்டுமே தவறு. நான் நீதிக்கான இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால், அந்த இடம் எப்பவுமே இடையறாத இருட்டில்தான் இருந்தது.”

மாறன் அவரை நோக்கி, “நீங்க யாருக்காக வேலை செய்தீங்க. ரெண்டு தரப்புக்குமா?” என்று கேட்டான்.

அவர் ஏதும் கூறவில்லை.

யாழினி அமைதியாய் அருகில் நின்றாள். பின்னர் மெல்லிய குரலில் அவரிடம் கதைத்தாள். 

“நீங்க உண்மையாக இருந்தால் நானும் மாறனும் இந்தப் பயணத்தைத் தொடர முடியும். இல்லையென்றால்…..”

“இனி உண்மையா இருப்பேன்” என்றார்.

பழனிவேலைப் பற்றி வெளிவந்த அந்த உண்மை முகாமில் புயலைக் கிளப்பியது. யாழினியின் மனத்தில் குழப்பம். மாறனின் கண்களில் நம்பிக்கையின்மையின் நுணுக்கமான சாயல் படிந்தது.

“நீங்க உண்மையா இருந்தாலும், உங்க ஊசலாட்டம் எங்களை எங்கே கொண்டு செல்லும்ணு தெரியல பழனி அங்கிள் ” என்றாள் யாழினி.

அவர் மெதுவாகக் கைகளை உயர்த்தி, “நான் சத்தியமாக ஒரே ஒரு கனவுக்காகவே இருக்கேன். எங்களுக்கான தேசம், எங்களுக்கான அடையாளம். அதை அடைய நான் இடம் மாறினேன், ஆனால் நோக்கம் ஒன்ணுதான்.”

மாறன் பார்வையைச் சதுரனிடம் திருப்பினான். 

உடனே, சதுரன், “நாம எப்படி இவரை நம்பறது?” என்று கேட்டான்.

மாறன், “அவரை நம்ப வேண்டாம். அவரைத் தனித்துவிடுங்க” என்றான். 

அந்த இரவு, முகாமில் பலரும் தூங்கவில்லை. யாழினி மட்டும் மட்டும் தனியாகப் புறவாயிலில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களில் விழுந்த கண்ணீர், நிலவின் ஒளியில் ஒளிர்ந்தது. மாறன் அவளருகே வந்து அமர்ந்தான்.

“இப்போ நீ என்ன செய்யப் போகிற?” என்று கேட்டான்.

“உன்னுடன் இருக்கணும். உன்னுடன் மட்டும் இல்ல; நீ செல்லும் வழியிலும்” என்றாள்.

“அந்த வழி எதுவுன்னு எனக்கே தெரியல…” என்றான்.

“பரவாயில்லை. தெரிஞ்ச வரைக்கும், நான் நின்னுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

விடியலில் லெனின் தலைமறைவானான். அவனைப் பாதுகாத்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர். 

“பழனிவேல் எங்கே?” என்று கேட்டாள் யாழினி. 

“அவரையும் காணவில்லை” என்றனர் சகபுலிகள். 

மாறன் நிதானமாக, “நம்ம எல்லாரையும் ஒரு விளக்கில் வைத்து சுழல வைக்கிற ஆள் வேற யாராவதுதான் இருக்கணும்” என்றான்.

இவுங்கள என்ன பண்றது? என்று கேட்டான் சதுரன்.

“இனி, இவுங்களத் தேடுறது நம்ம வேலை இல்லை. இனி, இவுங்களால பிறர் நம்மைத் தேடத் தொடங்குவாங்க. நாம வேற இடத்துக்குப் போகணும்” என்றான்.

இவர்கள் அனைவரும் பிறிதொரு இடத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது வழியிடையில் சிறுவன் ஓடிவந்தான். அவன் கையில் காகிதச் சுருள் இருந்தது. “‘கொக்கிளாய் வெடிக்கப்போகுது… கடந்தது இன்னொரு தொடக்கமா? அடக்கம் இல்லாமல் வந்தால், ஒளிக்கவும் இடமில்லை.’”

உடனே சதுரன் துடிப்புடன், “இது அவங்களோட அடுத்த தாக்குதல்!” என்றான். 

இவர்களின் பழைய முகாமின் எல்லையில் இராணுவத்தின் நடமாட்டம் இருந்தது. வனப்பகுதிக்குள் இராணுவம் நுழைந்து இவர்களை வேட்டையாடத் தொடங்கியது. இவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் பயணித்தனர். துப்பாக்கிகள் முழுங்கின. அதன் ஓசை வனமெங்கும் எதிரொலித்தது. எங்கும் பறவைகளின் சப்தம். எதிர்காலப் போரின் மைதியான முன்னுரையைப் போலவே அது தொடங்கியது.

ஒரு கட்டத்தில் மாறனும் யாழினியும் எதிரெதிர்த் திசையில் சிதறிப் பயணிக்க நேர்ந்துவிட்டது. ஒரு பதுங்குகுழியில் மாறன் இளைப்பாறியபோது. அவனுடைய சட்டைப்பைக்குள் காகிதம் இருப்பதை உணர்ந்தான். எடுத்துப் படித்தான்.  

“எனதன்பு மாறா!

நம்ம வாழ்க்கை ஒரு போரா இருந்தாலும் நம்ம காதல் ஒரு மெளன இரவா இருந்தாலும் நம்ம பயணமோ நிலாப் பாதைதான். எங்கே முடியும் என்பதில்லை; எங்கே தொடங்கும் என்பதே முக்கியம்.

நீயும் நானும் எங்கேயும் நம்ம காதலுடனேயே சேர்ந்து இருந்தாலே போதும்.

இப்படிக்கு, மாறா நேசிப்பில் உன் யாழி”

இதனை எப்போது யாழினி எழுதினாள், எப்போது சட்டைப்பையில் வைத்தாள் என்று தெரியாமல் குழம்பினான் மாறன். 

மாறன் அந்த கடிதத்தை மீண்டும் மெல்ல படித்தான். மீண்டும் படித்தான். மீண்டும் படித்துப் பார்த்தான். எதையோ தேடும் விழிகளுடன் வானத்தை நோக்கியபோது, தூர வானில் ஓர் ஒளிக்கதிர் வெடித்தது.

அவன் பதுங்கு குழியைவிட்டு வெளியேறி ஓடத் தொடங்கினான். சற்று நேரத்தில் சதுரனைச் சந்தித்தான். அவனுடன் பழனிவேலும் இருந்தார். மாறனின் முகம் சுருங்கியது. வனமே முகாமாகியது போல உணர்ந்தான். அவன் நெஞ்சு பதறியது.

கொக்கிளாய் வானில் வெடித்த ஒளிக்கதிர், ஒரு விமானத் தாக்குதலின் முன்னோட்டம் என மாறன் உணர்ந்தான். இரவு எரிந்தது. 

“அவங்க ஆரம்பிச்சிட்டாங்க” என்றான் சதுரன்.

“நம்ம பிள்ளைகளுக்கு வழிகாட்டணும். இப்போ என்னைச் சந்தேகிக்க வேணாம், செயல் தானே பதிலா இருக்கும்” என்றார் பழனிவேல்.

மாறன் இமைகள் தாழ்ந்து பின்னர் எழுந்தன. “சரி! அப்படியே ஆகட்டும். உங்களை நம்புறேன். என் யாழியின் தந்தைக்காக மீண்டும் ஒருமுறை உங்களை நம்புகிறேன்” என்றான் மாறன். 

தாக்குதல் தொடங்கியது. கிழக்குமுனை வழியாக இராணுவத்தின் மூன்று படையணிகள் முன்னேறின. எல்லையில் புலிகள் அணி அவர்களைத் தடுக்கப் போராடினர். இந்நேரத்தில் யாழினி மருத்துவ பாகத்தில் ரணவைத்தியர் திலகவதியோடு இணைந்து ஆணைகளை அனுப்பவும் பெறவும் தொடங்கினாள்.

“மூன்றாம் குழுவுக்கு இப்போது ஒக்ஸிஜன் தேவையா?”

“இப்போதைக்கு இல்லை. ஆனா அடுத்த வெடிச்சத்துக்குத் தயாராகணும்!” என்றான் ஓர் இளைஞர்.

போரின் மத்தியில், யாழினி சோர்ந்த குழந்தையொன்றைப் பத்திரமாகக் கட்டிலில் கிடத்தினாள். “இது நம்ம நாட்டின் பிள்ளை. இவனைக் காப்பாத்தினா நம்ம போருக்கான அர்த்தம் உண்டு” என்று தன்னுடனிருந்தவர்களிடம் கூறினாள்.

மாறன், சதுரன், பழனிவேல் மூவரும் முன்னணியில் இருந்தனர். எதிரிகளின் முன்னெச்சரிக்கையைவிட வேகமாகச் செயல்பட்டதால், சில நேரங்களில் வெற்றியும் அடைந்தனர். ஆனால், ராணுவத்தினரின் புதிய ரோபோவான் டெக்னாலஜி இவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

“ஏன் நம்மது வேலை செய்யல?” என்று கத்தினான் சதுரன்.

“இராணுவம் புதிய வகை ஸ்கேனர்களைப் பயன்படுத்துறாங்க. நம்ம பழைய திட்டங்கள் இவர்களுக்குத் தெரிஞ்சிருக்கு!” என்றார் பழனிவேல்.

மாறன் சற்று யோசித்தான். 

“அப்படின்னா நம்ம பக்கம் உள்ள ஊற்று வழியைக் கைவிடலாமா? அது சுரங்கம் இருக்கும் இடம்தானே?” என்று கேட்டான் சதுரன்.

“இப்போதைக்கு அதுதான் நம்மலோட போக்கிடம். எதிரி எதிர்பார்க்காத பாதைதான் நம்மலோட வெற்றி” என்றான் மாறன். 

அப்போது இவர்களுக்குப் புதிய செய்தி வந்தது. லெனின் இராணுவத்திடம் சேர்ந்துகொண்டு, சுரங்கப் பாதையில் தாக்குதலுக்குத் தூண்டிவிட்டு, தப்பிச் சென்றிருப்பதை அந்தச் செய்தி உறுதிப்படுத்தியது. அந்தச் செய்தியைக் கேட்ட யாழினி மனம் மயங்கியவளாய், “அவனை நம்பினோம். நம்ம விஷயங்கள் எல்லாம் அவன் கையில்… அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும்” என்று கூறித் தன் உதடுகளைக் கடித்தாள். 

மாறன் நிதானமாக இருந்தான். பழனிவேல் பழைய காதித வரைபடத்தை எடுத்தார். அதில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடந்தான் யாருக்கும் தெரியாதது. நல்ல ஒளிவிடம். எல்லாரும் அங்கப் போயி காத்திருக்கலாம். எதிரி சூழ்ச்சி செஞ்சி ஏமாந்ததும் நாம் அடுத்துக் களமிறங்கலாம்” என்றார்.

தீவகம் பகுதியில் அமைந்த அந்த ஒளிவிடம் பாதுகாப்பானதுதான். இவர்கள் அங்குச் சென்று சேர்ந்தபோது, ராணுவம் அவர்களை நெருங்கியது.

மாறன் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் தன் கூட்டத்தினரைப் பார்த்து, “நான் வெளியே போயி ராணுவத்தோட கவனத்தத் திருப்பிடுறேன். நீங்க எல்லோரும் வேறு திசையில போயிடுங்க” என்றான்.

“இல்ல மாறனே! நீதான் இப்போ எங்களுக்கு நம்பிக்கையின் முதுகெலும்பு. நீ இல்லாம…” என்று பழனிவேல் தயங்கினார். 

“நான் உயிரோட இருந்தாலும் இல்லாம இருந்தாலும் நீங்க எல்லோரும் நிமிர்ந்திருந்தாலே போதும். அதுதான் நம்மலோட வெற்றி. கூட்டு வெற்றி” என்றான். 

யாழினி அவன் அருகே வந்து அவனைத் தொட்டபடி, “உன்னை மறுபடியும் பார்க்க முடியாமலானால்…” என்று விக்கித்து நின்றாள்.

“பார்க்காவிட்டால் என்ன, என்னை நினைத்தாலே போதும்” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து அவளது நிழல்போல வெளியேறினான் மாறன்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *