மாய சர்ப்பம்

Hand front view portrait darkness.

அந்த வீட்டுக்குச் செல்லும் செம்மண் பாதையே வளைந்தும் நெளிந்தும்தான் இருந்தது. அந்தப் பாதையில் நடக்கும்போது பெரிய பாம்பின் மீது நடப்பது போலவே  உணர்ந்தேன். நேற்றைய மழையில் செம்மண் பிசுபித்திருந்தது. பூட்ஸ் அணிந்த என் கால்கள் மெல்ல மெல்ல வழுக்கி வழுக்கி அப்பாதையில் முன்னேறின. பாம்பின் மீது யாரால்தான் வழுக்காமல் நடக்க முடியும்? 

‘இது செம்மண்பெரும்பாம்பு’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இதன் தலையும் வாலும் என் கண்களுக்குத் தெரியவில்லை. நான் அதன் உடற்பரப்பில் நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னேயும் பின்னேயும் யாருமில்லை. அந்த வீடு இந்தப் பாம்பின் தலைப்பக்கத்தில் உள்ளதா அல்லது வால் பக்கத்தில் உள்ளதா என்பதனை நான் அந்த வீட்டை நெருங்கும் போதுதான் அறிய முடியும். 

பாதை குறுகினால் அந்த வீடு வால்பக்கம். குறுகாவிட்டால் தலைப்பக்கம். ஆனால், அதற்குள் அந்த வீட்டை நான் நெருங்கிவிட்டேன். நேத்ரா என்ற அந்தப் பெண் அலைபேசிவழியாக எனக்கு இந்த வீட்டின் முகவரியைத்தான் கொடுத்திருந்தார். 

இந்த வீடு கண்ணாடியாலானது. பாம்பின் மினுக்கும் பத்தியைப் போல இருந்த அந்த வீடு, தரையிலிருந்து ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்திருந்தது. வீட்டின் வாசலில் அந்த வீட்டார் அனைவரும் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த வீட்டை வெளிப்புறமாகப் பூட்டியிருந்தனர். என்னைப் பார்த்ததும் அனைவரும் எழுந்தனர், அந்த முதியவரைத்தவிர. 

முதியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரின் இடக்கை அந்த வீட்டின் சாவியை இறுகப் பற்றியிருந்தது. அவரின் வலதுகையும் தலையும் மூப்பினால் மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மூப்பு மட்டுமே காரணம் என்றும் கூறிவிட இயலாது. பாம்பால் விளைந்த அச்சமாகவும் இருக்கலாம். அந்த வீட்டார் அனைவரும் என்னை ஒரு மீட்பர் போலத்தான் பயபக்தியுடனும் என்னிடம் அடைக்கலமடைந்துவிட்ட நிம்மதியுடனும் பார்த்தனர். நான் அவர்களைப் பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் புன்னகைத்தேன். 

உடனே, ஐந்து வயதுடைய மாயா அழுதுகொண்டே ஓடிவந்து, என் கால்களைப் பற்றியபடியே தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். நான் அவளுடைய உச்சந்தலையை வருடி அவளுக்கு ஆறுதலளித்தேன். அவள் சற்று அமைதியானவுடன் அவளைத் தூக்கி என் இடப்புற இடுப்பில் இருத்திக்கொண்டு, அவள் கண்ணீரை என் வலதுகைவிரல்களால் துடைத்துவிட்டேன்.

அவள் என்னை “அங்கிள்… அங்கிள்..“ என்று இருமுறை அழைத்துவிட்டு, திக்கி திக்கித் தான் பார்த்த பாம்பைப் பற்றிக் கூறத் தொடங்கினாள். 

“அங்கிள்… அங்கிள்… அந்தப் பாம்பு ரொம்ப பெரிசு. நான் பயந்துட்டேன். அதோட வாலு குச்சிமாதிரி ஒல்லியா போயிக்கிட்டே இருந்துச்சு. நான் அதுக்குப் பின்னாலேயே பயந்து பயந்து மெதுவா மெதுவா போனேனா…”

“ஐயா! அப்புறம் என்னாச்சு?”

“அங்கிள்! அது சட்டுனு திரும்பி என்னைப் பார்த்து மொறைச்சது. நான் ஒடனே திரும்பியே பாக்காம திடு திடுன்னு ஓடியே வந்துட்டேன். அப்புறமா நான் மெதுவா போயி அதப் பாக்கப்போனேனா… அதக் காணும். தேடி தேடிப் பார்த்தேன். அதக் காணவே காணும். எனக்கு அழுகை அழுகையா வந்துடுச்சு.”

“யே ஒனக்கு அழுக வருது? அதான் போயிடுச்சே. அப்ப உனக்கு சந்தோஷம்தானே வரணும்?” 

“போங்க அங்கிள். உங்களுக்கு ஒன்னுமே தெரியல. நான் அத என்னோட ஃபிரண்டா ஆக்கிக்கலாமுன்னு நெனைச்சேன்”.

“ஓ! பாம்பு ஒனக்கு ஃபிரண்டா?”

“யே? எனக்கு ‘பாம்பு ஃபிரண்டு’ இருக்கக் கூடாதா?”

“எதுக்கு இருக்கணும்?”

உடனே அவள் என்னிடுப்பிலிருந்து பாலியஸ்டர் துணியைப்போல வழிந்து இறங்கி, தரையில் காலூன்றி, தன்னிரு கைகளையும் உயர்த்தி, தன் இடுப்பை மட்டும் நெளித்து, வளைத்து பாம்புபோல ஆட்டிக்கொண்டே, “நானே பாம்புதானே? எனக்கு பாம்பு ஃபிரண்டா இருக்கக் கூடாதோ?” என்று கேட்டாள்.

நான் சிரித்தேன்.

அப்போது மாயாவின் அம்மா என்னருகில் வந்து, “சார்! அவ சும்மா சொல்றா. அவ பாம்பைப் பாக்கவேயில்ல” என்றார்.

“அப்படியா?”

“ஆமா. நான்தான் அவளுக்கு மதியம் அந்தப் பாம்பைப் பத்தி விளக்கமாச் சொன்னேன். அவ மதியம் தூங்காம இருந்தா. அவளைத் தூங்க வைக்குறதுக்காக ஒரு கதை சொன்னேன். அந்தக் கதையில் பாம்பு வந்தது. பாம்புன்னா இவ பயப்புடுவாளேன்னு நெனைச்சு, ‘அந்தப் பாம்பு உனக்கு ஃபிரண்டுமாதிரி’ன்னு சொன்னேன். அவ அதையே கற்பனை பண்ணி பண்ணி இப்படிப் பேசிக்கிட்டுத் திரியுறா.”

“ஓ! இவளுக்குத்தான் பாம்பு பயமா? சரி, இதுக்காகவா நீங்க எல்லோரும் வீட்டைப் பூட்டிட்டு வெளியேயே உட்கார்ந்திருக்கீங்க?”

“வீட்டுக்குள்ள பாம்பு இருக்கே!”.

“அது கதையில் வந்த பாம்புதானே?”

“கதையில வந்த பாம்புதான் நெஜத்துலையும் வந்துடுச்சு.”

“ஓ! அப்பச்சரிதான். யே அடிக்க வேண்டியதுதானே?”

“அடிச்சேன்னே! நான் அதை அடிச்சேன்னே! அது நாலடி இருக்கும். என் முன்கை அளவுக்குத் தடிச்ச பாம்பு. உடம்பு முழுக்க எண்ணெய்ப் பாத்திரம் போல மினுமினுப்பா, தண்ணீலே நனைஞ்சாப்புல இருந்துச்சு. நான் வௌக்குமாத்தைத் திருப்பிப் பிடிச்சுக்குட்டு அதோட நடுப்பகுதியில நாலு சாத்து சாத்தினேன். அது துள்ளிக்கிட்டு அடுப்படிப் பாத்திரங்களுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிச்சு”.

“ஓ!”

உடனே மாயா, “அங்கிள்! அங்கிள்! அம்மா என்னோட பாம்பு ஃபிரண்ட அடிச்சிட்டாங்களாம். ஐயோ! அது இப்ப எப்புடி இருக்கோ?” என்று கூறிச் சிணுங்கினாள்.

“சும்மா இரு” என்று அம்மா அவளை அதட்டும்போது,  அவரின் கணவர் சற்று உரத்த குரலில், “சார்! இவ நாலு சாத்து சாத்தியிருந்தா அந்தப் பாம்பு வலி தாங்காம சுருண்டுருக்கும்முள்ள?” என்று கேட்டார்.

“ஆமாம். ஆமாம். ஒன்னு செத்துருக்கும் அல்லது சுருண்டுருக்கும்.”

“அப்படிச் சொல்லுங்க!. அப்படியிருக்கும்போது அது எப்படி என்னோட லேப்டாப் பேக்குக்குள்ள இருந்திருக்கும்?”

“லேப்டாப் பேக்குக்குள்ளயா? பாம்பு அந்தப் பைக்குள்ள போயிடுச்சா?!”

“ஆமாங்க சார். அதனாலத்தான் நான் சொல்றேன் அவ பாம்ப அடிக்கவேயில்லீங்க. அவ பாம்ப பார்க்கவும் இல்லைங்க. ஏன் நாம் இப்படி கரெக்டாச் சொல்றேன்னா அது நாலடி பாம்பு இல்ல. அந்தப் பாம்பு ரெண்டடி நீளந்தான். தடிமனாவும் இல்ல. குட்டித் தண்ணிப் பாம்பு போல சன்னமாத்தான் இருந்தது. அவ அந்தப் பாம்ப அடிக்கவும் இல்ல, பார்க்கவும் இல்ல. இப்ப அது என்னோட லேப்டாப் பேக்குக்குள்ளத்தான் ஒளிஞ்சிக்கிட்டு இருக்குது.”

“ஓ!”

உடனே முதியவர் அழுத்தமான குரலில், “நிச்சயமா இல்லை” என்றார்.

அவர் பறக்கப் பழகும் பறவையைப் போலவும் தன் சக்கர நாற்காலியைவிட்டு எந்தக் கணமும் துள்ளி எழுந்துவிடுபவரைப் போலவும் பரபரப்பாக இருந்தார்.

“எப்படிச் சொல்றீங்க, ஐயா?”

“நான் விளக்கமா சொல்லட்டுமா?”

“தாராளமா சொல்லுங்க.”

“நான் காலையிலேர்ந்து ‘ரிப்பன் பக்கோடா’தான் சாப்புட்டுக்கிட்டு இருந்தேன். என் தம்பி மக நேத்ரா நேத்து வந்திருந்தா. அவதான் எனக்கு இதை வாங்கிட்டு வந்து தந்தாள். அவதானே இன்னைக்கு உங்களுக்கு ‘போன்’ போட்டு, பாம்பு பிடிக்க வரச் சொன்னது?” என்றுகேட்டார். 

நான் உடனே கள்ளச்சிரிப்புடன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை அசைத்தேன்.

அவர் தொடர்ந்து பேசினார். 

“எனக்கு வயித்துல ‘கேஸ்ட்ரபுள்’ இருக்கு.”

“எனக்கும்தான்” என்றேன். 

“அப்படியா? உங்களுக்குமா? அது பெரிய தொந்தரவுதானே?” என்று கேட்டார்.

நாம் மீண்டும் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை அசைத்தேன்.

“ ‘கேஸ்ட்ரபுள்’ இருந்தா எதையும் நிம்மதியாத் திங்க முடியாது.”

“ஆமா, ஆமா.”

“அதனால நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் தின்னுக்கிட்டு இருந்தேன். ஆனா, அதோட ‘டேஸ்ட்’ நல்லா இருந்ததால நான் தின்னுக்கிட்டே இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாத்தான், ஆனா ரொம்ப நேரம் தின்னேன். அப்புறம் கண்ணசந்தேன். ‘நல்லத் தூக்கமா இல்லையா’ன்னு தெரியலை. கனவுல பாம்பு வந்தமாதிரி இருந்தது. ஆனா, சரியா நெனவில்ல. என்னோட வயித்துல வாயு முட்டி கொடலு ஊப்பி, வலிக்க ஆரம்பிச்சது. நான் எந்திரிச்சு ‘டாய்லெட்’ போனேன். என்னோட கொடலு வளைஞ்சு நெளிஞ்சு வலிச்சு வலிச்சு ஒரே ‘கேஸா’ வெளியேறிச்சு. அப்புறந்தான் ‘அப்பாடீ’ன்னு நிம்மதியாச்சு. திரும்பவும் வந்து படுத்து கண்ணசந்தேன். ஆனாலும் வயிறு முழுக்கக் கொடலு பாம்பு மாதிரி நெளிய ஆரம்பிச்சது. முழிப்பு வந்துடுச்சு. எந்திரிச்சு ‘காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா’ன்னு மொணங்கிக்கிட்டே ஹாலுக்கு வந்தேன். என்னோட மகன் லேப்டாப்புல ஆஃபீஸ் வேலைகளச் செஞ்சிக்கிட்டு இருந்தான். நான் அவங்கிட்ட ‘கொடலு பாம்பு மாதிரி நெளியுது’ன்னு சொன்னேன். அவன் என்ன மூடுல இருந்தானோ எனக்குத் தெரியாது. ‘பேசாம போயித்தூங்குங்க’ணு எரிச்சலாச் சொன்னான். நான் போகல. அவன் கோவத்துல லேப்டாப்ப மூடி, பைக்குள்ள வைச்சுட்டு, எந்திரிச்சுப் போயிட்டான். நான் அந்தப் பைக்குப் பக்கத்துலேயே குத்த வைச்சு உக்காந்துக்கிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்”.

“நீங்க வெளியே மட்டுந்தான் வீல்சேர்ல இருப்பீங்களா? வீட்டுக்குள்ள நீங்க  நடப்பீங்களா?”

“நானாவது நடக்குறதாவது? நான் எப்படி தம்பீ நடக்க முடியும்? இந்த வீல்சேர்ல உக்காந்து அஞ்சு வர்சமாகுது. இன்னும் நான் எந்திரிக்கவேயில்லையே!.”

உடனே அவரது மகன் என்னிடம், “சார், நான் லேப்டாப்புல வேலைசெஞ்சிக்கிட்டு இருக்குறப்ப அவர் வீல்சேர்லதான் எங்கிட்ட வந்தார். கொடலு மாதிரி ஒரு பாம்பப் பாத்ததாச் சொன்னார்” என்றார். 

“ஓ!”

“நீங்க அதைப் பாத்தீங்களா?”

“ஆமா. அதுதான் என்னோட லேப்டாப் பைக்குள்ள இருந்துருக்கும்!”

எனக்குத் தலையைச் சுற்றியது. எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான மனக் குழப்பங்களையெல்லாம் நான் சீர்செய்துள்ளேன். ஆனால், இந்தப் ‘பாம்பு’ என் மனத்தையே குழப்பிவிட்டது.

“நீங்க பாம்ப பாத்தீங்களா?” என மீண்டும் கேட்டேன்.

“நான் பார்க்காட்டாலும் அது அந்தப் பைக்குள்ளத்தானே இருந்திருக்கும்.”

இதற்கு என்ன பதில் கூறுவதென்றோ, அடுத்து என்ன வினாவைக் கேட்க வேண்டும் என்றோ எனக்குப் புரியவில்லை. 

சட்டென அவரின் மனைவி, “ஆமாம் சார். அது அந்தப் பைக்குள்ள இருந்திருக்காது. அதுதான் அடுப்படிக்கு வந்துச்சே! நான்தான் அத அச்சேனே” என்றார்.

உடனே மாயா, “அங்கிள்! அங்கிள்! அம்மா என்னோட பாம்பு ஃபிரண்ட அடிச்சுட்டாங்களாம். பாருங்க திரும்பவும் சொல்றாங்க. அப்ப அம்மா என்னோட பாம்பு ஃபிரண்ட நிச்சயமா அடிச்சுருக்காங்க. அதனாலத்தான் அது கோவிச்சுக்கிட்டு எங்கையோ போயிடுச்சு போல” என்றாள் வருத்தத்துடன். 

நான் என்னுடைய பூட்ஸைக் கழற்றிவிட்டு, முதியவரின் இடது கையில் இருந்து சாவியை வாங்கி, வீட்டைத் திறந்தேன். ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டேன். டீப்பாயில் ரிப்பன் பக்கோடா இருந்தது. அதில் கொஞ்சம் அள்ளி வாயிலிட்டேன். நல்ல சுவை. மீண்டும் கொஞ்சம் அள்ளி உண்டேன். ஷோபாவில் லேப்டாப் திறந்த நிலையில் இருந்தது. அதன் அருகில் கீழே லேப்டாப் பையும் இருந்தது. அதற்குள் சில வயர்களைத் தவிர வேறு ஏதும் இல்லை. 

சிந்தித்தபடியே மீண்டும் ரிப்பன் பக்கோடாவை எடுத்து உண்டேன். ஒருகையில் அதை அள்ளிக்கொண்டு, வீட்டுக்கு வெளியே வந்தேன். எல்லோரும் என் முகத்தையே பார்த்தனர். யாரும் என்னுடைய கையைப் பார்க்கவில்லை. நான் தொண்டையைச் செருமிக்கொண்டு, உரத்த குரலில், “சின்னப் பாம்புதான்” என்றேன்.

உடனே முதியவர் அமர்ந்த நிலையிலேயே பறப்பதுபோலத் தன்னிரு கைகளையும் ஆட்டி ஆட்டி தம் குடும்பத்தினரைப் பார்த்து, “நான்தான் சொன்னேல்ல, அப்பவே நான்தான் சொன்னேன்ல, யாரும் ஒத்துக்கமாட்டேனுட்டீங்க. இப்ப பாருங்க, இவரே சொல்லிட்டார்” என்று பெருமிதமாகப் பேசினார்.

அவரின் மகன் என்னிடம் தயங்கியபடியே, “தண்ணீப்பாம்புதானே, சார்?” என்று கேட்டார். 

“இல்ல, மண்ணுள்ளிப்பாம்பு”.

சட்டென அவரின் மனைவி, “அது அடிபட்ட பாம்புதானே?” என்று பதற்றத்துடன் கேட்டார். 

“ஆமாம்” என்றேன்.

உடனே அவரின் கணவர், “அப்படின்னா அது செத்துருக்குமுல்ல?” என்று கேட்டார்.

“இல்ல.” 

“அங்கிள்! அது இப்ப எங்க இருக்கு?”

“நான் அவளின் தலையை வருடிக்கொடுத்துவிட்டு, “அது வீட்டைவிட்டுப் போய்டுச்சு” என்றேன். 

“ஐயோ! போயிடுச்சா? என்னோட பாம்பு ஃபிரண்டு போயிடுச்சா?”

“அது எப்பவும் உங்கூடத்தான் இருக்கும். உன்னோட நெழலாட்டம். உங்கூடவே இருக்கும்.”

உடனே அவள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து, தன்னுடலை ஒருமுறை சுழற்றி, வளைந்தும் நெளிந்தும் பாம்புபோல ஆடினாள். அவள் நிழல் தரையில் பெரும் பாம்பென நெளிந்து நகர்ந்தது. 

நான் ஒருகையாலேயே பூட்ஸை இழுத்து அணிந்துகொண்டேன். அவர்கள் அனைவரும் அச்சமின்றி வீட்டுக்குள் நுழைந்தனர். நான் செம்மண் சாலையில் இறங்கி, மறுகையில் மீதமிருந்த ரிப்பன் பக்கோடாவை வாயிலிட்டுச் சுவைத்துக்கொண்டே நடக்கத் தொடங்கினேன். 

நேத்ராவை அலைபேசியில் அழைத்தேன். உளநலமருத்துவராக என்னுடைய பணியினைச் சிறப்பாகச் செய்துமுடித்ததனைக் கூறினேன். அவள் ‘நன்றி’ என்று கூறிவிட்டு, ‘ஜீபே’யில் பணம் அனுப்புவதாகக் கூறினாள். 

நான் மதியம் உண்ட வாழைக்காய் பஜ்ஜிகளால் என் வயிற்றில் வாயு நிறைந்து, குடல்களை அழுத்தியது.  என் வங்கிக்கணக்கில் பணம் இடப்பட்ட செய்தியை என்னுடைய அலைபேசி சிணுங்கி ஒலித்து அறிவித்தது. என் வயிற்றுக்குள் உப்பி நெளிவது குடலா, பாம்பா என்று அறியமுடியாமல் குழப்பத்தோடும் ஒருவித அச்சத்தோடும் பெரும்பாம்பென வளைந்து நெளிந்து செல்லும் அந்தச் செம்மண் சாலையில் கால்கள் தளர நடந்து கொண்டிருந்தேன்.  

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *