
1
கிளிநொச்சியில் அதிகாலைவேளை எப்போதும் போல அமைதியாகவே எழுந்தது. பனித்துளிகள் இன்னும் மண்ணில் ஒட்டியிருந்தன. பாலை மரங்களின் இலைகள் காற்றில் மெதுவாக அசைந்துகொண்டிருந்தன. பேருந்துநிலையத்தின் அருகே தேநீர்க் கடையில் கொதிக்கும் சட்டியிலிருந்து எழும் புகை, தூரத்தில் தெரியும் இராணுவ முகாமின் கம்பி வேலியோடு கலந்துபோனது. இன்று செப்டம்பர் 27, 1998.
முருகேசன், கிளிநொச்சி சந்தைக்கு அருகே சிறிய சைக்கிள் கடை வைத்திருந்தான். அவன் வாழ்க்கை பெரிய கனவுகளால் நிரம்பியதல்ல. காலை கடையைத் திறப்பது, மதியம் சோறு சாப்பிடுவது, மாலை வீட்டுக்குத் திரும்புவது – அவ்வளவுதான். ஆனால், அந்த நாள் அவனுக்குள் ஏதோ மாறுபட்ட உணர்வு இருந்தது. பறவைகள்கூட வழக்கத்தைவிடக் குறைவாகவே சத்தமிட்டன.
“முருகா! இன்னைக்குக் கடையை மூடுறியா?” என எதிர்க்கடை பழனியம்மா கேட்டாள்.
“இல்லையம்மா, மூடுறதுக்கு என்ன காரணம்?” என்று அவன் சிரித்தபடி சொன்னாலும் உள்ளுக்குள் ஏதோ நெருடல்.
அதே நேரத்தில், கிளிநொச்சியின் மறுபுறம், ஓர் இராணுவ முகாமில் சிப்பாய் சுதர்ஷன் தன் துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுக்குக் கிளிநொச்சி ஒரு வரைபடத்தில் இருக்கும் பெயர் மட்டும். ஆனால் அந்தப் பெயர், அவன் வாழ்க்கையில் ஒரு தீராத காயமாக மாறப்போகிறது என்பதை அவன் அறியவில்லை.
“இன்று ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு” என அவனுடைய நண்பன் ரமேஷ் சொன்னான்.
“போர் என்றால் எப்போதும் ஏதாவது நடக்கத்தானே செய்யும்” எனச் சுதர்ஷன் பதிலளித்தான். ஆனால், அந்த வார்த்தைகளுக்குள் பயம் ஒளிந்திருந்தது.
மாலை நேரம். கிளிநொச்சியின் வானம் சிவப்பாக மாறியது. அது சூரிய அஸ்தமனத்தின் சிவப்பா, வரப்போகும் இரத்தத்தின் முன்னறிவிப்பா என்று யாருக்கும் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் அணிகள், நகரைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தன. கண்ணில் படாமல், சத்தம் செய்யாமல். அவர்களுள் ஒருவன் குமரன். வயது இருபத்து மூன்று. அவன் தாய், தந்தை இருவரையும் முன்பு நடந்த குண்டுவீச்சில் இழந்தவன். அவனுக்குப் போராட்டம் அரசியல் மட்டுமல்ல; அது அவன் உயிரின் குரல்.
“இன்று இரவு தான்” என அணித் தலைவர் மெதுவாகச் சொன்னார்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர். அவர் தொடர்ந்து அழுத்தமான குரலில், “நகரம் நம்ம கையில் வரணும்” என்றார்.
குமரன் துப்பாக்கியை இறுக்கமாகப் பிடித்தான். அவன் மனத்தில் பயமும் உறுதியும் கலந்திருந்தன.
இரவு ஒன்பது மணி. முதல் சத்தம் கேட்டது. ஒரு பெரும் வெடிப்பு. கிளிநொச்சி அதிர்ந்தது. முருகேசன் வீட்டின் கூரை தூசியாக விழுந்தது. அவன் மனைவி கண்ணீர் மல்கக் குழந்தைகளை அணைத்தாள்.
“அப்பா!” எனச் சிறுமி அழைத்தாள்.
“பயப்படாதடி!” என்று சொல்லிய அவனுக்கே குரல் நடுங்கியது.
நகரம் முழுவதும் குண்டுச் சத்தம். துப்பாக்கி வெடிப்புகள். இராணுவ முகாம்களில் அலாரம் ஒலித்தது. சுதர்ஷன் தன் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு வெளியே ஓடினான்.
“புலிகள் தாக்குதல்!” என ஒருவன் கத்தினான்.
செப்டம்பர் 28 இல் சூரியன் எழுந்தபோது, கிளிநொச்சி ஒரு காயப்பட்ட நகரமாக இருந்தது. வீடுகள் உடைந்திருந்தன. தெருக்களில் புகை மிதந்தது. சில இடங்களில் இரத்தக் கறைகள்.
முருகேசன் தன் கடைக்குச் சென்றான். கதவு சிதைந்திருந்தது. உள்ளே இருந்த சைக்கிள்கள் கவிழ்ந்து கிடந்தன. அவன் நின்று பார்த்தான். கண்களில் கண்ணீர் வரவில்லை. வெறுமை மட்டும்.
அதே நேரம், குமரனும் அவன் அணியும் ஒரு முக்கிய சாலையைக் கைப்பற்றியிருந்தனர்.
“நகரம் நம்ம பக்கம் திரும்புது” என்றார் ஒருவர்.
ஆனால், போரின் விலை அதிகம், மிக அதிகம். குமரனின் நண்பன் செல்வம், அவன் கண்முன்னே விழுந்தான். மார்பில் குண்டு. “செல்வம்!” என்று குமரன் கத்தினான். பதில் இல்லை. அவன் முதன்முறையாக உணர்ந்தான் போரில் வெற்றி என்றால் சந்தோஷம் மட்டும் அல்ல; அது இழப்பின் பெயருந்தானென்று.
இராணுவ முகாமில் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. சுதர்ஷன், காயமடைந்த ரமேஷை தூக்கிக்கொண்டு ஓடினான்.
“என்னை விட்டுட்டு போ” என ரமேஷ் சொன்னான்.
“அப்படி சொல்லாதே” என்று சுதர்ஷன் அழுதான்.
ஆனால், குண்டுகள் விழுவது நிற்கவில்லை. மூன்று நாள்களில், நூற்றுக்கணக்கான வீரர்கள் விழுந்தனர். 857 பேர் உயிரிழந்தனர். 936 பேர் காயமடைந்தனர். அந்த எண்கள் பின்னர் செய்திகளில் வரும். ஆனால், அந்த நிமிடங்களில், ஒவ்வொரு எண்ணும் ஓர் உயிர், ஒரு குடும்பம்.
மூன்றாம் நாளின் இறுதியில் கிளிநொச்சி நகரம் மெதுவாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இராணுவம் பின்வாங்கியது. நகரின் மையத்தில் புலிகளின் கொடி உயர்ந்தது.
குமரன் அந்தக் கொடியைப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர். “அம்மா, அப்பா… பார்த்தீங்களா?” என்று மனதுக்குள் பேசினான்.
முருகேசன், தூரத்தில் அந்தக் காட்சியைப் பார்த்தான். அவனுக்கு அரசியல் பற்றிப் பெரிய புரிதல் இல்லை. ஆனால், அவன் தெரிந்த ஒன்று, இந்த மண் மீண்டும் ஒரு புதிய அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டது என்பதுமட்டுமே!.
போர் முடிந்தது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், போரின் இன்னொரு அத்தியாயம்தான் ஆரம்பித்தது. வீடுகளை மீண்டும் கட்ட வேண்டும். உடம்புகளை மட்டுமல்ல, மனங்களையும் குணப்படுத்த வேண்டும்.
சுதர்ஷன், காயங்களுடன் தெற்குக்கு அனுப்பப்பட்டான். அவன் மனத்தில் கிளிநொச்சி ஒரு பயங்கர கனவாக மாறியது.
குமரன், நகர காவல் பணியில் சேர்ந்தான். அவன் முகத்தில் கடினம் இருந்தாலும் உள்ளுக்குள் இன்னும் மனிதம் உயிருடன் இருந்தது.
முருகேசன் தன் சைக்கிள் கடையை மீண்டும் தொடங்கினான். உடைந்த கதவுக்குப் பதில் ஒரு பழைய பலகை. “வாழ்க்கை நிக்காது” என்று அவன் தனக்கே சொன்னான்.
அந்த மூன்று நாள் போர் கிளிநொச்சியின் வரலாற்றில் மட்டும் அல்ல, மனித மனங்களின் ஆழத்திலும் பதிந்தது.
வன்முறை, அரசியல், அதிகாரம் என இவை எல்லாம் மேலே தெரியும். ஆனால், அவற்றுக்குக் கீழே மனிதர்கள். அவர்கள் பயம், நம்பிக்கை, கனவு என எல்லாம் புதைந்திருக்கும்.
கிளிநொச்சி போரின் கதையை எண்களால் சொல்லலாம். ஆனால் உண்மையான கதையோ முருகேசனின் உடைந்த கடையில், குமரனின் கண்ணீரில், சுதர்ஷனின் கனவுகளில் வாழ்கிறது.
2
இன்று 2008 நவம்பர் 23. கிளிநொச்சி இந்த முறை அமைதியாக இல்லை. அமைதி என்றே சொல்ல முடியாத ஒரு பதற்றம், காற்றோடு கலந்திருந்தது. சாலைகளில் நடக்கும் மனிதர்களின் கண்களில் எப்போதும் போல நம்பிக்கை இல்லை; ஆனால் பழகிப் போன அச்சம் இருந்தது. 1998இல் பார்த்த போரின் நினைவுகள் இன்னும் பலரின் மனத்தில் காயமாகவே இருந்தன.
வானம் கருமேகங்களால் மூடப்பட்டிருந்தது. மழை வருமா, இல்லை குண்டு வருமா – யாருக்கும் தெரியவில்லை.
பூபாலன், கிளிநொச்சி மத்தியிலிருந்த பழைய வீட்டில் தன் அம்மா, தங்கை, மனைவி, இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்தான். அவன் முன்னாள் ஆசிரியன். போர் காரணமாகப் பள்ளி மூடப்பட்டதும் வீட்டிலேயே பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“அண்ணா, இந்த முறை போர் நம்மளை விட்டுவிடுமா?” என்று தங்கை வசந்தி கேட்டாள்.
பூபாலன் சிரிக்க முயன்றான். “போர் யாரையும் விட்டுவைக்காது” என்று மெதுவாக சொன்னான்.
நகரத்தின் மறுபுறம், இராணுவ முன்னணி. லெப்டினன்ட் அரவிந்த், வரைபடத்துக்கு முன் நின்று கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். கிளிநொச்சி – அவனுக்கொரு பணிப்புரை. ஆனால், அந்தப் பெயர் அவன் மனத்தில் சுமையாகவே இருந்தது.
“நகரத்தை மீட்கணும்” என்று மேலதிகாரி சொன்னார். “இது அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியம்.” அரவிந்த் தலையை ஆட்டினான். அவன் மனத்தில் கேள்விகள் இருந்தன. ஆனால், கேட்க இடமில்லை.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி, இந்தக் காலகட்டத்தில் ஒரு பெரிய நிர்வாக நகரமாகவே இருந்தது. அலுவலகங்கள், சாலைகள், மருத்துவமனைகள் என எல்லாம் இருந்தன. ஆனால், எல்லாம் போரின் நிழலில்.
கஜேந்திரன் இளம் புலி போராளி. வயது இருபத்து ஐந்து. அவன் இந்த நகரத்திலேயே வளர்ந்தவன்.
“இந்த மண்ணை விடமாட்டோம்” என்று அவன் தன் நண்பர்களிடம் சொன்னான். ஆனால் அவனுடைய அம்மா, அந்த வார்த்தைகளைக் கேட்டால் அழுவாள். “மண் இருந்தால்தான் மனிதன்” என்று அவள் எப்போதும் சொல்வாள்.
முதல் நாள். துப்பாக்கிச் சத்தம் தொலைவில். பீரங்கி சத்தம் நெருக்கத்தில். கிளிநொச்சி மீண்டும் நடுங்க ஆரம்பித்தது. பூபாலன் தன் குடும்பத்தோடு குழியடியில் (பங்கரில் – பதுங்குகுழியில்) ஒளிந்தான். “அப்பா, பயமா இருக்கு” என்று மகன் சொன்னான். “நானும் பயந்துதான் இருக்கேன்” என்று பூபாலன் மனதுக்குள் சொன்னான். வெளியே சொல்ல முடியுமா, என்ன?.
நாட்கள் நகர்ந்தன. நவம்பர் முடிந்து, டிசம்பர் வந்தது. மழை பெய்தது. குண்டுகளோடு மழை கலந்தது. தண்ணீரும் இரத்தமும் சாலைகளில் கலந்தது.
கஜேந்திரன் முன்னணிப் பகுதியில் காவலில் இருந்தான். ஒரு குண்டு வெடிப்பில் அவன் நண்பன் அருண் காயமடைந்தான்.
“என்னை விட்டுடாதே” என்று அருண் குரல் நடுங்கச் சொன்னான்.
“விடமாட்டேன்” என்று கஜேந்திரன் சொன்னான்.
ஆனால், அவன் உள்ளுக்குள் தெரிந்தது, இந்தப் போரில் வாக்குறுதிகள் பல உடையுமென.
இராணுவம் மெதுவாக முன்னேறியது. ஒவ்வொரு கிலோமீட்டரும் பல உயிர்களின் விலையோடு.
அரவிந்த், தன் படையினரை முன்னே அழைத்துச் சென்றான். அவன் கண்களில் சோர்வு. அவன் கைகளில் நடுக்கம்.
ஒரு வீடு. அரைப்பங்கு இடிந்தது. அரவிந்த் உள்ளே பார்த்தான். ஒரு பழைய சுவர் எழுத்து: “வாழ்க்கை போரைவிடப் பெரியது” அந்த வார்த்தைகள் அவன் மனத்தில் தங்கின.
டிசம்பர் நடுப்பகுதி. கிளிநொச்சி மக்கள் பெரும்பாலும் வெளியேற ஆரம்பித்தனர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எல்லோரும் கிழக்கே, வடக்கே.
பூபாலன் குடும்பத்தோடும் வெளியேறத் தயாரானான்.
“இந்த வீடு?” என்று மனைவி கேட்டாள்.
“வீடு போனாலும் பரவாயில்லை” என்று பூபாலன் சொன்னான்.
‘உயிர் இருந்தால் போதும்’ என்ற இலக்கில்தான் எல்லோரும் ஓட்டம்பிடித்தனர்.
அவர்கள் சென்ற பாதையில், உடைந்த வாகனங்கள், எரிந்த மரங்கள், மௌனமாக கிடந்த உடல்கள்.
கஜேந்திரன் பின்னடைவுப் பணியில் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தது.
“நகரம் போகுதே” என்று அவன் சொன்னான்.
அணித் தலைவர் மெதுவாக, “நகரம் ஓர் இடம். போராட்டம் ஓர் எண்ணம்” என்றார்.அந்த வார்த்தைகள் கஜேந்திரனுக்கு முழுதாகப் புரியவில்லை. அவன் புரிந்ததுகொண்டது இழப்பு, இழப்பு, இழப்பு மட்டுமே!
2009 ஜனவரி 1. புதிய ஆண்டு. ஆனால், கிளிநொச்சிக்கு அது புதுமையில்லை. பழைய வலி தான். இராணுவம் நகரின் எல்லையை அடைந்தது. புலிகள் பெரும்பாலும் பின்வாங்கினர்.
குண்டுச் சத்தம் குறைந்தது. மௌனம் அதிகரித்தது.
அரவிந்த், தன் படையோடு நகருக்குள் நுழைந்தான். அவன் எதிர்பார்த்த எதிர்ப்பு இல்லை. ஆனால், எங்கும் காலியான வீடுகள். உடைந்த சுவர்கள்.
“நகரம் மீட்கப்பட்டது” என்று ரேடியோவில் செய்தி வந்தது.
ஜனவரி 2. கிளிநொச்சி இப்பொழுது ஒரு காலி நகரம். இராணுவ கொடி உயர்ந்தது. அதே நேரம், பல இடங்களில் தீப்பற்றிய வீடுகள் இன்னும் புகை விட்டுக் கொண்டிருந்தன.
அரவிந்த் அந்தக் கொடியைப் பார்த்தான். அவனுக்கு வெற்றி உணர்வு வரவில்லை.
“என்ன வெற்றி இது?” என்று அவன் மனம் கேட்டது.
கஜேந்திரன், தூரத்தில் இருந்து அந்தக் காட்சியை பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர். “நகரம் போனாலும் நினைவுகள் போகாது” என்று அவன் சொன்னான்.
அவன் துப்பாக்கியை இறக்கிவைத்தான். அந்த நொடியில், அவன் ஒரு போராளி மட்டுமல்ல; ஒரு மனிதனுங்கூட.
பூபாலன் குடும்பத்தோடு இடம்பெயர்ந்த முகாமில் இருந்தான். குழந்தைகள் மண்ணில் கோடுகள் வரைந்துகொண்டிருந்தனர்.
“அப்பா, நம்ம ஊர் திரும்புவோமா?” என்று மகள் கேட்டாள்.
பூபாலன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.
“ஒருநாள்… என்றாவது ஒருநாள்!” என்று சொன்னான்.
இந்தப் போரில், யாரும் முழு வெற்றி பெறவில்லை. இருவரும் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்தனர். எண்கள் பின்னர் வரலாற்றில் எழுதப்படும். ஆனால், அந்த எண்களுக்கு உள்ளே பூபாலன் குடும்பம், கஜேந்திரன் இழந்த நண்பர்கள், அரவிந்த் தூங்காத இரவுகள் ஆகியன அனைத்தும் அடங்குமா, என்ன?.
கிளிநொச்சியில் அழிந்த வீடுகளுக்கு இடையில், சிறு செடி முளைத்தது. யாரும் கவனிக்கவில்லை. ஆனால், அந்தச் செடி சொல்லிக்கொண்டது, “வன்முறைக்கும் மேலே வாழ்க்கை” என்று.
– – –
