
முல்லைத்தீவின் மண் எப்போதும் அமைதியாகத் தோன்றும். காலை நேரத்தில் கடல் காற்று மரங்களுக்கிடையே ஊடுருவி வந்தால், அந்த ஊர் இன்னும் உலகத்தின் மூலையில் மறைந்து கிடக்கும் சொர்க்கம் மாதிரி தெரியும். ஆனால் 1996 ஜூலை மாதத்தில், அந்த மண் அமைதியில்லை. அது காத்திருந்தது – இரத்தத்துக்காக, மனிதர்களுக்காக, மரணத்துக்காக.
செல்வத்துக்கு அப்போது இருபது வயதுகூட ஆகவில்லை. முல்லைத்தீவின் கரையோர கிராமத்திலிருந்து வாழ்ந்த இளைஞன். அவனுடைய அம்மா மீன் உலர்த்துவாள். அப்பா 1991-இல் கடலில் காணாமல் போனவர். “கடல் எடுத்துக் கொண்டான்” என்று சொல்லி அம்மா அமைதியாகிவிட்டாள். செல்வம் மட்டும் அமைதியாகவில்லை.
இப்போது அவன் கையில் இருந்தது துப்பாக்கி. அதற்குமுன் அவன் கையில் இருந்தது வலை. இப்போ அந்த வலை போலவே மனிதர்களையும் சிக்க வைக்கப் போகிறான். “முல்லைத்தீவு முகாம்… இந்தமுறை விழுந்தே தீரும்” என்று தளபதி சொன்னபோது, செல்வத்தின் உள்ளே ஏதோ ஒன்று உறைந்தது. அவன் சாவைப் பயந்தான். ஆனால், வாழ முடியாத வாழ்க்கையை இன்னும் அதிகமாகப் பயந்தான்.
முல்லைத்தீவு இராணுவ முகாம் — உயரமான மண் மேடுகள், கம்பிகள், மணல் மூட்டைகள், பங்கர்கள். அந்த முகாம், அந்தப் பகுதியின் அரசியல் சின்னம். “இந்த நிலம் எங்களுடையது” என்று அரசு சொல்லும் குரல்.
முகாமுக்குள் இருந்த சிப்பாய் குணரத்ன. தென்னிலங்கையிலிருந்து வந்தவன். அவனுக்கு வடக்குத் தெரியாது. தமிழ்த் தெரியாது. ஆனால், துப்பாக்கிப் பிடிக்கத் தெரியும். ‘இங்கே எதுவும் நடக்காது’ என்று அவன் நினைத்தான். அந்த எண்ணமே அவனைக் கொஞ்சம் கொன்றது.
ஜூலை 18 — காற்று அசாதாரணமாக அமைதியாக இருந்தது. கடல்கூட சத்தமில்லாமல் இருந்தது. நள்ளிரவுக்குப் பின், முதல் குண்டு விழுந்தது. பூமி குலுங்கியது. மணல் வானில் பறந்தது. முகாம் ஒரு நொடியில் நரகமாக மாறியது.
“தாக்குதல்! தாக்குதல்!” என்று குரல்கள். செல்வம் ஓடினான். அவனுடைய கால்கள் மணலைக் கிழித்தன. காதுகளில் குண்டுச் சத்தம். கண்களில் தீ. முதல் முறையாக அவன் சுட்டான். முதல் முறையாக ஒரு மனிதன் அவன் முன் விழுந்தான். அவன் கண்கள் துடித்தன.
‘இவன் என் எதிரியா? இவன் கூட யாரோட அப்பனா?’ என்று அவன் மனம் கேட்டது. ஆனால்? துப்பாக்கி கேள்வியே கேட்கவில்லை.
முகாமுக்குள் நுழைந்ததும், எல்லாம் குழப்பம். சிப்பாய்கள் ஓடினார்கள். சிலர் சுட்டார்கள். சிலர் அழுதார்கள். குணரத்ன பங்கருக்குள் ஒளிந்தான். அவனுடைய கை நடுங்கியது.
‘நான் ஏன் இங்கே?’ என்று அவன் முதல் முறையாக நினைத்தான்.
ஒரு குண்டு பங்கரின் சுவரை உடைத்தது. மண் அவன் முகத்தில் விழுந்தது. அவன் வெளியே ஓடினான். அங்கே செல்வம். இருவரும் ஒரு நொடி ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்த நொடியில் யுத்தம் இல்லை. அரசியல் இல்லை. இனம் இல்லை.
பயம் மட்டும். செல்வம் சுட்டான். குணரத்ன விழுந்தான். செல்வத்தின் கைகள் நடுங்கின. அவன் வாந்தி எடுத்தான்.
‘நான் என்ன செய்தேன்?’ என்று அவன் மனம் அலறியது.
எட்டு நாட்கள். ஜூலை 18 முதல் 25 வரை. பகலும் இரவும் ஒன்றாக கலந்தது. உறக்கம் இல்லை. தண்ணீர் இல்லை. மனிதத் தன்மை இல்லை. முகாம் ஒவ்வொரு நாளும் சுருங்கியது. சிப்பாய்கள் ஒவ்வொருவராக விழுந்தார்கள். சிலர் சரணடைந்தார்கள். சிலர் கடலில் மூழ்கினார்கள்.
செல்வத்தின் நண்பன் கார்த்தி, ஒரு குண்டு வெடிப்பில் சிதறினான். அவன் தலையை செல்வம் கண்டதே இல்லை. உடல் மட்டும் இருந்தது.
“இதுக்குத்தானா போராட்டம்?” என்று செல்வம் கேட்டான்.
யாரும் பதில் சொல்லவில்லை.
ஜூலை 25. காலை. முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. மணல் முழுக்க இரத்தம்.
உடல்கள் அடுக்கடுக்காக. சிலர் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். செல்வம் கடற்கரையை நோக்கி நடந்தான். அங்கே கடல் இன்னும் அமைதியாக இருந்தது.
“இவ்வளவு சாவுக்குப் பிறகும் நீ அமைதியா?” என்று அவன் கடலைப் பார்த்துச் சொன்னான்.
கடல் பதில் சொல்லவில்லை.
அன்று மாலை, செல்வம் தனியாக உட்கார்ந்திருந்தான். வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. ஆனால், அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. 1,498 சிப்பாய்கள். 315 போராளிகள். எண்ணிக்கை. அரசியல் பேசும் எண்கள். ஆனால், அவனுக்குத் தெரிந்தது பெயர்கள். முகங்கள். அம்மாக்கள்.
“இந்த மண் எப்போ அமைதியாகும்?” என்று அவன் உரக்கக் கேட்டான்.
பதில் கிடைக்காத அந்தக் கேள்வி இன்னும் முல்லைத்தீவு மணலில் புதைந்திருக்கிறது.
பல வருடங்கள் கழித்து, முல்லைத்தீவுக்கு அமைதி வந்தது போலத் தோன்றியது. செல்வம் உயிரோடு இருந்தான். ஆனால், அவனுக்குள் யுத்தம் முடிவடையவில்லை.
அவன் அடிக்கடி கடற்கரைக்குப் போவான். மணலைக் கையில் எடுப்பான். அதில் இரத்தம் இல்லையென்றாலும் நினைவுகள் இன்னும் சிவப்பாகவே இருந்தன. முல்லைத்தீவு போர் ஒரு நாள் முடிந்தது. ஆனால், அந்தப் போர் மனிதர்களுக்குள்
இன்னும் முடியவில்லை. மணல் சாட்சியாக இருக்கிறது. மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது. போர் முடிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளுக்குப் பிறகும், முல்லைத்தீவு தூங்கவில்லை. மணல் இன்னும் சூடாக இருந்தது, வெயிலால் இல்லை; இரத்தத்தால்.
செல்வம், முகாமின் பின்புறம் இருந்த உடைந்த கட்டடத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தான். அவன் துப்பாக்கியைப் பக்கத்தில் வைத்திருந்தான். ஆனால், அது அவனுக்கு இப்போது ஆயுதமாகத் தெரியவில்லை. ஒரு சுமையாகத்தான் தெரிந்தது. அவன் கண்முன், கார்த்தியின் முகம் வந்தது. அவன் சிரித்தபடி சொன்ன வார்த்தை — “செல்வம், போர் முடிஞ்சா நம்ம ஊர்ல மீன் பிடிக்கலாம் மச்சான்…” அந்த வாக்கியம், கார்த்தியோட உடலோட சேர்ந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது.
முல்லைத்தீவின் மக்கள் மெதுவாக வெளியே வர ஆரம்பித்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். அவர்கள் கைகளில் எதுவும் இல்லை. கண்களில் மட்டும் பயம் நிறைந்திருந்தது.
“இது நம்ம முகாம்தானா?” என்று ஒரு வயதானவர் கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
முகாமுக்குள் சடலங்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கணக்குப் புத்தக மாதிரி இருந்தது.
ஒரு தளபதி, “சர்வதேச உலகம் கேள்வி கேட்கும். எண்ணிக்கை சரியா இருக்கணும்” என்றார்.
செல்வம், “பெயர்களை யாராவது கேட்பாங்களா?” என்று கேட்டான்.
தளபதி அவனைப் பார்த்தார். பார்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டார்.
அன்றிரவு, செல்வம் தூங்கவில்லை. ஒரு சிப்பாயின் உடலை அவன் தானே புதைத்திருந்தான். அவனுடைய சட்டைப் பையில் புகைப்படம் இருந்தது. ஒரு பெண்.
இரண்டு சிறு பிள்ளைகள்.
‘அவன்கூட யாரோட அப்பாதானே…’ என்று தன் மனத்துக்குள் மெதுவாகச் சொல்லிக்கொண்டான் செல்வம். அவன் முதன்முறையாக அழுதான். அந்த அழுகை சத்தம் இல்லாதது. அவனுக்குள் மட்டும்.
அடுத்த நாட்களில், அரசியல் முகங்கள் வந்தன. வெளிநாட்டு நிருபர்கள். கேமரா. கேள்விகள். “இதெப்படி நடந்தது?” “இவ்வளவு பேர் எப்படி இறந்தார்கள்?” “மனித உரிமைகள்?”
பதில் எல்லாம் தயாராகத்தான் இருந்தன. ஆனால், உண்மை மட்டும் இல்லை. செல்வம் ஒரு கேமராவைப் பார்த்தான். அது அவனை நோக்கி இருந்தது.
“நீ என்ன நினைக்கிற?” என்று ஒரு நிருபர் கேட்டான்.
செல்வம் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.
“நான் நினைக்குறது முக்கியமில்லை. நான் நினைக்க முடியாததுதான் முக்கியம்.”
என்றான்.
அந்தப் பதில் எங்கும் ஒளிபரப்பப் படவில்லை.
ஒரு வாரம் கழித்து, செல்வத்தை வேறு பகுதிக்கு மாற்றினார்கள். முல்லைத்தீவை விட்டு வெளியேறும்போது, அவன் கடைசியாகக் கடலைப் பார்த்தான்.
அதே கடல். அதே அலை. ஆனால், அவன் மாறியிருந்தான்.
‘நீ எல்லாத்தையும் பார்த்துட்டு எப்படி இவ்வளவு அமைதியா இருக்க?’ என்று அவன் தனக்குள் கேட்டான். கடல் எப்போதும் போல மௌனமாக இருந்தது.
புதிய முகாம். புதிய கட்டளைகள். ஆனால் பழைய நினைவுகள். செல்வம் இப்போது சுடும்போது தயங்கினான். அது அவனை ஆபத்தானவனாக மாற்றியது — அவன் எதிரிகளுக்காக அல்ல, அவன் சொந்த தரப்புக்குள்ளேயே.
“உன் கையில துப்பாக்கி இருக்குற வரைக்கும், மனம் இருக்கக் கூடாது” என்று ஒரு மூத்த போராளி சொன்னார்.
செல்வம் மெல்லச் சிரித்துவிட்டு, “மனம் இல்லாம உயிர் இருந்தா, அது சாவைவிட மோசம் அண்ணா!” என்றான்.
அந்த இரவு, அவன் தனியாக அழுதான்.
போர் இன்னும் தொடர்ந்தது. ஆனால் மக்களின் முகங்களில் நம்பிக்கை குறைந்தது. செல்வத்தின் அம்மா, ஒரு நாள் முகாமுக்கு வந்தாள். மெலிந்த உடல். சாம்பல் நிற சேலை. கண்களில் மகனைப் பார்த்த மகிழ்ச்சி. அதே நேரம் பயமும் இருந்தது.
“போதும் பிள்ளை…” என்று அவள் சொன்னாள்.
செல்வம் பதில் சொல்லவில்லை. அவன் அம்மாவின் கைகளைப் பார்த்தான். மீன் உலர்த்திய கைகள். இப்போது நடுங்கின.
‘இந்தக் கைகளுக்காகத்தானே நான் சண்டை போடுறேன்?’ என்று அவன் அவனிடமே மனம் கேட்டது.
அன்று இரவு, செல்வம் ஒரு முடிவுக்கு வந்தான். ‘நான் போராளி. ஆனால், நான் கொலைகாரனாக மாறக் கூடாது.’
அடுத்த நாள், அவன் தளபதியிடம் சொன்னான்.
“நான் முன்னணிப் போரில் வேண்டாம். மக்களோட வேலை செய்யணும்” என்று கேட்டுக்கொண்டான்.
தளபதி அவனை நீண்ட நேரம் பார்த்தார்.
“போர் முடிஞ்சா, மக்கள்தான் எஞ்சுவாங்க. நீ கேட்குறது தப்பில்லை” என்றார்.
அது சிறிய வெற்றி. ஆனால், செல்வத்திற்கு அது பெரிய ஆசுவாசம். செல்வம் அகதிமுகாம்களில் வேலை செய்யத் தொடங்கினான். காயமடைந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள்.
அங்கிருந்த சிறுமி அவனிடம், “அண்ணா, என் அப்பா எப்போ வருவார்?” என்று கேட்டாள்.
செல்வம் பதில் சொல்லவில்லை. அவன் அவள் தலையைத் தடவினான். அந்தத் தொடுதலில் ஒரு யுத்தம் நிறுத்தப்பட்டதுபோல இருந்தது.
முல்லைத்தீவு போர் வரலாற்றில் ஒரு தேதி. அரசியலில் ஒரு விவாதம். எண்ணிக்கைகளில் ஒரு பக்கம். ஆனால், செல்வம் போன்றவர்களுக்கு, அது முடிவில்லாத ஓர் இரவு. மண் இன்னும் பேசவில்லை. கடல் இன்னும் சாட்சிதான்.
ஒருநாள், இந்த மௌனம் உடையும். அப்போதுதான் முல்லைத்தீவு உண்மையிலேயே அமைதியாகும். அதன் மண் மீண்டும் மணக்கத் தொடங்கும்.
1997-இன் இறுதியில், முல்லைத்தீவு என்ற பெயர் உலக செய்திகளில் மீண்டும் மீண்டும் வந்தது. “பெரும் இராணுவ இழப்பு.” “ஆசியாவின் முக்கிய தாக்குதல்.” “கிளர்ச்சியாளர்களின் வலிமை.” இந்த வார்த்தைகள் எல்லாம் செல்வத்துக்கு அந்நியமாகத் தோன்றின.
அவன் பார்த்தவையெல்லாம் ஒரு பெண், தன் மகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு அகதிமுகாமில் அழுதது. ஒரு முதியவன், தன் வீட்டின் இடிபாடுகளைத் தொட்டு “இதுல தான் என் கல்யாணம் நடந்தது” என்று சொன்னது. அந்தக் காட்சிகள் எந்தச் செய்தியிலும் இல்லை.
செல்வம் இப்போது மக்களோடு இருந்தான். அகதிமுகாமில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான். காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர்க் கொண்டு போனான்.
ஒரு நாள், ஓர் இளைஞன் அவனிடம், “அண்ணா! நீங்க தான் முகாமைப் பிடிச்சவங்கன்ணு சொல்றாங்க. அப்போ எங்களுக்கு இப்போ எதுக்குச் சாப்பாடு இல்ல?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வி செல்வத்தைச் சுட்டது. ‘வெற்றி’ என்பது யாருக்காக? என்று தன்னையே கேட்டுக்கொண்டான் செல்வம்.
அந்த நேரத்தில், அமைப்புக்குள் அரசியல் மாற ஆரம்பித்தது. “நாம் கடுமையாக இருக்கணும். மக்கள் கேள்வியே கேட்கக் கூடாது. ஒழுங்குதான் முக்கியம்” என்று உத்தரவுகள் வந்தன. செல்வம் இதைக் கேட்டபோது, முல்லைத்தீவு முகாம் நினைவுக்கு வந்தது. ‘அங்கயும் ஒழுங்குதான் முக்கியம்ணு சொல்லிதானே அத்தனை பேர் செத்தாங்க?’ என்று அவன் மனம் கத்தியது.
இரவில் செல்வம் பழைய நினைவுகள் தாக்க, காய்ச்சலில் துடித்தான். அவன் கனவில் முல்லைத்தீவு முகாம். எரியும் பங்கர்கள். குணரத்னின் முகம்.
“ஏன்?” என்று அந்தச் சிப்பாய் கேட்டான்.
செல்வம் பதில் சொல்ல முடியவில்லை. அவன் வியர்வையில் நனைந்து விழித்தான். அவன் அருகில் இருந்த சிறுவன் பயந்தான்.
“அண்ணா, நீங்க சாகலையே?” என்று கேட்டான்.
செல்வம் அவனை அணைத்துக்கொண்டு, “இல்லடா… சாகலை. ஆனா, முழுசா வாழலை” என்றான்.
அரசியல் பேச்சுவார்த்தைகள் பற்றி வதந்திகள். சிலர் நம்பினர். சிலர் சிரித்தனர்.
“இந்த இரத்தம் எல்லாம் மேசை பேச்சுக்காகத்தானா?” என்று செல்வம் ஒருநாள் கேட்டான்.
மூத்தவர், “போர் மேடையில முடியும். அமைதி அரசியல்லதான் ஆரம்பிக்கும்” என்றார்.
செல்வம் மெதுவாகக் கேட்டான், “அப்போ மக்கள் எப்போ பேசுவாங்க?”.
அந்தக் கேள்விக்கு அங்க யாரிடமும் பதில் இல்லை.
ஒரு நாள், சிறுமி அகதிமுகாமில் காணாமல் போனாள். செல்வம் தேடினான். அவன் ஓடினான். அவன் கத்தினான். இறுதியில் அவளைக் கண்டுபிடித்தான் — ஒரு மரத்தின் கீழ், பயம் கண்ணீராக.
“ஏன் ஓடின?” என்று செல்வம் கேட்டான்.
“எல்லாரும் துப்பாக்கி வைச்சிருக்காங்க. எனக்குப் பயம்” என்றாள்.
அந்த வார்த்தைகள் செல்வத்தின் உள்ளுக்குள் முல்லைத்தீவு போர் மீண்டும் வெடித்தது.
அன்றிரவு, செல்வம் தனியாகக் கடற்கரைக்குப் போனான். அவன் கையில் துப்பாக்கி இல்லை. மணலை எடுத்தான். அது இன்னும் சூடாகத்தான் இருந்தது. அதை நுகர்ந்தான். எந்த மணமும் இல்லை.
‘இந்த மண் யாருக்குச் சொந்தம்?’ என்று அவன் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். மீனவர் படகுகள் தூரத்தில் அசைந்தன. அவர்கள் யாருக்கும் அரசியல் தெரியாது. போர்க் கணக்குகள் தெரியாது. ஆனால், எப்படியானாலும் வாழத் தெரியும்.
செல்வம் ஒரு முடிவுக்கு வந்தான். ‘போர் எனக்குள் முடிஞ்சிடுச்சு. இப்போ நான் மனிதனாக இருக்கணும்.’
அந்த முடிவு அவனை அமைப்புக்குள் அவனைப் அபாயகரமானவனாக்கியது.
“அவனுக்குச் சந்தேகம்.”
“அவன் மென்மையா மாறிட்டான்.”
“அவனைக் கவனிக்கணும்.”
என்ற குரல்கள் முகாமில் எழத்தொடங்கின.
ஒரு மாலையில், செல்வத்தை அழைத்தார்கள். மூடிய அறை. மூன்று முகங்கள்.
“நீ யாருக்கு விசுவாசம்?” என்று கேள்வி.
செல்வம் பதில் சொன்னான், “இந்த மண்ணுக்கு. இந்த மக்களுக்கு” என்று
அறையில் மௌனம்.
ஒருவர் மெதுவாகச் சொன்னார், “அது அரசியல் பதில் இல்லை” என்று.
செல்வம் நேராகப் பார்த்தான்.
“அப்போ, அரசியல் மக்களுக்காக இல்லையா?” என்று கேட்டார் அவர்.
அந்த இரவு, செல்வம் தூங்கவில்லை. ‘போர் வெளியில் மட்டுமில்லை. அது உள்ளேயும் இருக்கிறது’ என்பதை அவன் தெரிந்துகொண்டான்.
முல்லைத்தீவு முகாம் விழுந்த நாள் ஒரு வரலாறு. ஆனால், மனித மனம் விழுந்த நாள் பற்றி யாரும் எழுதவில்லை. அந்த வரலாறு இன்னும் எழுதப்படவேயில்லை.
செல்வம் அழைக்கப்பட்ட அந்த அறை, சிறியது. ஆனால், அதில் இருந்த மௌனம்
முல்லைத்தீவு முகாமைவிடக் கனமாக இருந்தது.
மூன்று பேர். மூன்று முகங்கள். ஒரே குரல்.
“நீ பேசுறது ஆபத்தான வார்த்தைகள்.”
செல்வம் மெதுவாகச் சொன்னான், “சில நேரம் மௌனம்தான் ஆபத்தானது” என்று.
அந்த வார்த்தைகள் அறைக்குள் விழுந்த குண்டுகள் மாதிரி இருந்தன.
அதற்குப் பிறகு, செல்வத்தின் வாழ்க்கை மாறியது. அவன் எங்கே போனாலும் ஒரு கண் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் பேசும் வார்த்தைகள் குறிப்பெடுக்கப்பட்டன. அவன் மௌனம்கூட சந்தேகமாகப் பார்க்கப்பட்டது.
அவன் உணர்ந்தான், ‘முல்லைத்தீவு போர் முடிந்தது. ஆனால், இன்னொரு போர் இப்போ ஆரம்பிக்குது’ என்று.
அகதிமுகாமில் இருந்த சிறுவர்கள் மட்டும் அவனை இன்னும் நம்பினார்கள்.
ஒரு சிறுவன் கேட்டான், “அண்ணா, நீங்க ஏன் துப்பாக்கி வைக்க மாட்டீங்க?” என்று.
செல்வம் சிரித்துக்கொண்டே, “அது கனமானது” என்றான்.
“கனமானதுன்னா?” என்று கேட்டான்.
“மனசுக்கு” என்றான் செல்வம்.
அந்தப் பதில் ஓர் அரசியல் பாடமாக இல்லை. ஆனால், ஒரு மனிதப் பாடமாக இருந்தது.
ஒருநாள் இரவு, செல்வம் அம்மாவைச் சந்திக்கப் போனான். அவள் குடிசை வீட்டில்
விளக்கு மங்கலாக எரிந்தது. அவள் மகனைப் பார்த்ததும் அழுதாள்.
“உன் கண்ணுல முன்ன மாதிரி ஒளி இல்லடா…” என்றார் அம்மா.
அந்த வார்த்தை செல்வத்தைக் கிழித்தது.
“அம்மா, நான் சரியாத்தான் இருக்கேன்” என்றான் செல்வம்.
அவள் ‘இல்லை’ என்பதுபோலத் தலையை அசைத்தாள். ‘போர் முடிச்ச பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் சொல்லும்’ என்று நினைத்துக்கொண்டார் அம்மா.
அந்த இரவு, செல்வம் நீண்ட நேரம் பேசவில்லை. அவன் அம்மா மட்டும் சொன்னார், “மண் யாருக்கும் சொந்தம் இல்ல. நம்ம தான் மண்ணுக்குச் சொந்தம்” என்று.
அந்த வாக்கியம் அவன் மனத்தில் முல்லைத்தீவு மணலைப் போலப் பரவத் தொடங்கியது.
அமைப்புக்குள் உட்பிளவு தீவிரமானது. ‘யார் நம்மோட?, யார் எதிரி?’ என்ற கேள்விகள் எல்லா இடத்திலும் இருக்கும். செல்வம் அந்தக் கேள்விக்குள் தன்னைத் தொலைத்தான். அவன் இனி முன்னணிப் போராளி இல்லை. முழு அரசியல்வாதியும் இல்லை. அவன் இடையில் நின்றவன். அந்த இடம் அதிக ஆபத்தானது.
ஒரு நாள், ஓர் இளம் போராளி செல்வத்தை ரகசியமாகச் சந்தித்தான்.
“அண்ணா, நீங்க மாதிரி யோசிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா எல்லாருக்கும் பயம்” என்றார்.
செல்வம், “பயம்னா?” என்று கேட்டான்.
“எதிரிக்காக இல்ல. நம்மோடவர்களுக்காக.”
அந்த உண்மை செல்வத்தின் உள்ளுக்குள் நுழைந்து, சிதறியது.
அன்றிரவு, செல்வம் முடிவு எடுத்தான். ‘நான் பேசுவேன், பயந்தாலும்.’
அடுத்த கூட்டத்தில், அவன் எழுந்தான்.
“மக்களைப் பயமுறுத்தினால் விடுதலை வராது.”
அரங்கம் மௌனமானது.
“முல்லைத்தீவுல நாம் வென்றோம். ஆனா மனிதத் தன்மையை இழந்திருந்தா அது வெற்றியா?”
அந்தக் கேள்வி பதிலில்லாமல் தங்கியது.
அந்த நாளுக்குப் பிறகு, செல்வம் தனிமைப்படுத்தப்பட்டான். அவன் மீது ‘நம்பிக்கை இல்லை’ என்ற முத்திரையைக் குத்தினர். அவன் நண்பர்கள் அவனைவிட்டு மெதுவாக விலகினார்கள். அவன் புரிந்துகொண்டான், ‘ஓர் அமைப்பைவிட ஒரு மனிதன் பலவீனமானவன்’ என்பதை.
ஒரு மாலை, செல்வம் கடற்கரையில் நின்றிருந்தான். அதே கடல். அதே அலை.
ஆனால், இப்போ அவன் மனம் தெளிவாக இருந்தது. ‘நான் உயிரோடு இருந்தா போதும். மனிதனா இருந்தா போதும்’ என்று நினைத்தான். அந்த நொடி, அவன் பின்னால் காலடிச் சத்தம். ‘யாரோ வருகிறார்கள்’ என்று எத்தனித்துத் திரும்பிப் பார்க்க நினைத்தான்.
“செல்வம்…”
அவன் திரும்பினான்.
இரண்டு பேர். முகங்களில் உணர்வு இல்லை.
“உன்னை மேலிடம் பார்க்க விரும்புது.”
செல்வம் சிரித்தான். அந்த சிரிப்பு பயம் இல்லாதது.
“சரி. போலாம்.”
அவன் தெரிந்துகொண்டான், ‘இது விசாரணை இல்லை. இது தீர்ப்பு’ என்று.
அந்த இரவு, முல்லைத்தீவு மணல் மீண்டும் சாட்சியாகக் காத்திருந்தது. இந்த முறை
போர் வெளியில் இல்லை. ஒரு மனிதனுக்குள். அந்த இரவில் செல்வத்தை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்கள். மரம். இருள். சிறிய குடிசை. அங்கே மேலிடம் இருந்தது.
“நீ பேசினது பல பேருக்குப் பிடிக்கல” என்றார் ஒருவர்.
“உன் வார்த்தைகள் பலவீனத்தை உருவாக்கும்” என்று இன்னொருவர்.
செல்வம் அமைதியாக இருந்தான்.
“என்ன சொல்ற?” என்று கேட்டார்கள்.
செல்வம் தலை நிமிர்த்திச் சொன்னான், “பலவீனம் துப்பாக்கி கீழே வைக்கிறதில்ல. மனத்தைக் கொன்னுட்டு வாழுறதுதான்” என்றான்.
அந்த வார்த்தை அவர்களைக் கோபப்படுத்தியது.
ஒரு நீண்ட மௌனம். அந்த மௌனத்தில் முல்லைத்தீவு முகாம் மீண்டும் உயிரோடு வந்தது. வெடிப்பு. அழுகை. மரணம்.
“நீ முல்லைத்தீவுல இருந்த. நீ சுட்ட. நீ வென்ற” என்று ஒருவர் சொன்னார்.
செல்வம் மெதுவாகச் சொன்னான், “ஆமா. ஆனா அன்றுதான் நான் தோற்றேன்” என்றான்.
அந்த பதில் அறையை உறைய வைத்தது.
தீர்ப்பு கூறப்பட்டது, “உனக்கு இரண்டு வழி. ஒன்று — மீண்டும் முன்னணி. எந்தக் கேள்வியும் இல்லாமல். இன்னொன்று — நீ இங்கிருந்து மறையணும்” என்று.
செல்வம் சிரித்தான்.
“மறைஞ்சு வாழுறதுக்கும் மௌனமா சாகுறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல” என்றான்.
அடுத்த நாள் விடியற்காலை. செல்வம் தனியாக நடந்தான். கையில் துப்பாக்கி இல்லை. மனத்தில் பயம் இல்லை. அவன் அம்மாவின் வார்த்தைகள் காற்றில் கேட்டது போல இருந்தது, ‘மண் யாருக்கும் சொந்தம் இல்ல…’ அவன் கடற்கரையை அடைந்தான். முல்லைத்தீவு கடல். அதே அலை. அதே மௌனம். அவன் மணலை எடுத்தான். மணல் சுத்தமாக இருந்தது. அவன் அதனிடம், “இப்போ நீ சுத்தமா இருக்க. ஆனா நம்ம மனசு?” என்று மெதுவாகச் சொன்னான்.
செல்வம் வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும் ‘அவன் எங்கே போகிறான்’ என்று. அகதிமுகாம்கள். உடைந்த கிராமங்கள். பெயர் இல்லாத மனிதர்கள். அங்கே அரசியல் இல்லை. கொடி இல்லை. வாழ்க்கை மட்டும்.
பல வருடங்கள் கழித்து… முல்லைத்தீவு பற்றி ‘மணக்கும் முல்லை மணல்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதப்பட்டது. அதில் எண்கள் இருந்தன. வருடங்கள் இருந்தன. வரலாறு இருந்தது. ஆனால், செல்வத்தின் பெயர் இல்லை. அவன் யாருக்கும் தெரியாதவன். ஆனால், பலருக்குத் தேவையானவன்.
அகதிமுகாமில் குழந்தைகள் அவனை “மாஸ்டர்” என்று அழைத்தார்கள்.
ஒரு நாள், ஒரு சிறுவன் கேட்டான், “மாஸ்டர், நீங்க போராளியா இருந்தீங்களா?” என்று.
செல்வம் சற்று நேரம் யோசித்தான். பிறகு “ஆமா” என்றான்.
“அப்போ நீங்க ஏன் இப்போ இப்படி?” என்று கேட்டான்.
செல்வம் சிரித்தான். பின்னர் தெளிவாகக் கூறினான், “போர் என்னை மாற்றிச்சு. அதைத் திருப்பி மாற்ற நான் முயற்சி பண்ணுறேன்” என்றான்.
முல்லைத்தீவு மணல் இன்னும் அங்கே இருக்கிறது. அது யாரையும் குற்றம் சொல்லவில்லை. விடுவிக்கவும் இல்லை. அது எல்லாத்தையும் உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறது. மணல். இரத்தம். மௌனம். முல்லைத்தீவு போர் ஒரு நாள் முடிந்தது. ஆனால், மனிதனுக்குள் நடந்த போர் இன்னும் முடியவில்லை. வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு? இந்தக் கேள்விக்கு எந்த மணலும் பதில் சொல்லாது. ஆனால், ஒரு மனிதன் துப்பாக்கியைக் கீழே வைத்தால் அங்கே அமைதி துளிர்க்கும்.
– – –
