13.நீல நிறச் சீருடை அணிந்தவர் 

 

யோவ், முருகேசா, காலையிலேயே தூக்கமா?” என்ற பெரிய டாக்டரின் குரலைக் கேட்டவுடன், அலறியடித்து எழுந்து, வணக்கம் வைத்தார்.

மன்னிக்கவும் சார், நைட்டு சரியான தூக்கம் இல்ல. அதுதான் கண்ணூ அசந்துட்டன். இனிமே இப்படி நடக்காத பாத்துக்கிறன் சார்”.

சரி சரி, மசமசன்னு இருக்காம, வர்ற வண்டிய எல்லாம் கரெக்டா செக் பண்ணு. பக்கத்து ஆஸ்பிட்டலுக்கு வர்றவனெல்லாம் இங்க வந்து நிறுத்திடரானுங்க”.

சரிங்க சார்”  என்றவர் விசிலடித்தபடியே உள்ளே நுழைந்த காரை நோக்கி ஓடினார்.

சார், யாரப் பாக்கனும்”.

அப்பாவுக்கு முழங்கால் வலி. ஆர்த்தோ டாக்டரப் பாக்கணும்”.

சரி, பார்க் பண்ணிட்டு ரிசப்ஷன்ல எண்ட்ரி போட்டுக்குங்க”.

முருகேசன் அவருடைய தாத்தாவைப் போலவே நல்ல உயரம்ஆறடிக்குப் பக்கம். நல்ல ஆஜானுபாகுவான உடல். கேசத்துக்குச் சாயம் அடிப்பதால் வயசு அந்தளவுக்குத் தெரியாது.

சேலத்திலேயே பெரிய ஆர்த்தோ ஆஸ்பிட்டல். ரெண்டே முக்கால் ஏக்கர் பரப்பளவில் கடல் மாதிரி. ரெண்டு ஆபரேஷன் தியேட்டர், ரெண்டு ஐ.சி.யு

பார்க்கிங் ஏரியாவுக்குப் பக்கத்தில் குறைந்தது ஒரு முப்பது சவுக்கு மரமாவது இருக்கும். இது எல்லாம் டாக்டரோடப் பொண்ணும், அப்ப டாக்டரோட வலது கரமா இருந்த அன்வரும் நட்டது. இப்ப ஒரு காடு மாதிரி வளர்ந்து நிக்குது.

டாக்டரோட மாப்பிள்ளை அமெரிக்காவுல பெரிய நியூரோ சர்ஜனாம். அன்வர் தான் சொல்லுவார். பக்கத்திலேயே இந்தியா வந்தா தங்கறத்துக்கு, நாலரை கோடியில் ஒரு வீடு வாங்கிப் போட்டிருக்குது பெரிய டாக்டர் பொண்ணு.

முருகேசன் இதுக்கு முன்னால, செயின்ட் பால் பள்ளியில தான், வாட்ச்மென் வேல பாத்தாரு. வேலை ஓரளவுக்குப் பரவாயில்லை. காலையில் பள்ளி ஆரம்பிக்கும் போதும், மாலையில் பள்ளி முடியும் போதும், வேலை மிக அதிகமாக இருந்தது. பெரிய பள்ளி என்பதால் ஏகப்பட்ட பேருந்துகள். ஆத்தூர் போகும் மெயின் ரோட்டிலேயே இருந்ததால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்தை சற்று நேரம் நிறுத்தி, பேருந்துகளை வெளியே விட வேண்டும்.

இதில் சைக்கிளில் வரும் மாணவர்கள் மற்றும் நடந்து வரும் மாணவர்கள் வேறு. சில இரண்டு வாகன ஓட்டிகளும், லாரி ஓட்டுனர்களும் எவ்வளவு விசில் ஊதினாலும் நிறுத்த மாட்டார்கள். அவர்களை நம்பி மாணவர்களையோபேருந்துகளையோ கிராஸ் செய்ய அனுமதிக்க முடியாது.

உள்ளே நுழையும் ஒவ்வொரு வாகனத்தைப் பற்றியும் எண்ட்ரி போட வேண்டும். பெற்றோர்கள் வந்தால் விசாரித்து, சரியான இடத்துக்கு வழி காட்ட வேண்டும்.

அந்தப் பள்ளியில் பாத்ரும் தான் வாசலில் இருந்து சற்று தூரம். சுகர் கம்ளெயிண்ட் இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போது பார்த்து, பிரின்சிபால் யாரேனும் வந்தால், அவ்வளவு தான். உடனே அவர் அறைக்கு வரச்சொல்லி பரேடு நடக்கும். வயசைப் பற்றியோ, முருகேசனின் படிப்பு குறித்தோ, பாதர் பிரான்ஸிஸ் கவலையே பட மாட்டார். ஆங்கிலம் கலந்த தமிழில் விளாசுவார்.

அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்றாலும், பொழப்பு ஓட வேண்டுமே. அப்போது தான், ஆஸ்பத்திரி வேலை கிடைத்தது. அவருக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.

பெரிய டாக்டருதான், நல்ல உயரமா மற்றும் படிச்ச ஆளா வேணும்னு கேட்டதால, செக்யூரிட்டி ஏஜென்சியோட ஆளு இங்க அனுப்பி வைச்சாரு.

முருகேசன் எம்காம் படிச்ச ஆளு. பத்து வருஷமா செவ்வாப்பேட்டையில ஒரு நூற்பாலைகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் எழுத்தராக வேலை. ஒன்பது மணிக்கு வந்தா, ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குக் கெளம்பி விடலாம்.

நிம்மதியான வேல. எழுபத்து நாலோ நாற்பத்தி நாலோ, ஏதோ ஒரு பஸ்ஸில ஏறி, பழைய பஸ் ஸ்டாண்டு வந்து, அங்கிருந்து ஒரு பத்து நிமிஷம் நடை, ஆபிஸுக்கு வந்துடலாம்.

முருகேசனுக்கு தம்பிங்க ரெண்டு பேரு. இவருதான் மூத்தவரு. தாத்தா வழியா, ஒரு ஐந்து ஏக்கர் காடு இருந்தது. பாதி மேட்டாங்காடு. வாழப்பாடி போற வழியில் மேட்டுப்பட்டியில் இருந்தது. ஏறக்குறைய மலை அடிவாரம்

படிச்சிட்டு தாத்தா சொன்ன மாதிரி, ஏர்போர்ஸுக்கு டிரெயினிங் எடுத்துக் கிட்டு இருந்தபோது, தேர்வுக்கு முந்தைய நாளில், நீளம் தாண்டுதல் பயிற்சி செய்தபோது , காலில் பலத்த அடி. சரியாக மூன்று மாதத்துக்கு மேலாகியது.

அதோடு ஏர்போர்ஸ் கனவு நழுவிப் போனது.

அடுத்து போலீஸ் வேலைக்கு முயற்சி. எத்தனையோ நாட்கள் படித்து விட்டுச் சென்ற போதும், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இவருடன் சேர்ந்து முயற்சி செய்த, பக்கத்துக் காட்டு ரவி, தேர்வு பெற்றுக் கான்ஸ்டபிள் ஆகி விட்டான்.

இப்படியாக போலீஸ் கனவும் தகர்ந்து போனது

காட்டு வேலையில் கவனம் சென்றது. கிணற்றில் இறங்கி பிளாஸ்டிக் பைப்பை இழுப்பதிலிருந்து,தண்ணீர எடுத்து விடுவது, வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என்று சகல வேலைகளும் அத்துப்படி.

அப்படியே, தமிழ்நாடு அரசின் தேர்வுகளையும், மத்திய அரசின் தேர்வுகளையும் எழுத ஆரம்பித்தார். ஆனால் எதிலும் தேர்வு பெறவில்லை.

கல்யாண வயசும் நெருங்க ஆரம்பித்தது. புரோக்கரே என்ன வேலை என கேட்க ஆரம்பிக்க, கட்டாயம் ஒரு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம்.

முருகேசனோடு மேட்டுப்பட்டி பள்ளியில் படித்த சந்திரசேகர் சேலத்தில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். அவருக்கு நிறைய பேரவைத் தெரிந்திருந்தது.

அவர் மூலமாகத்தான் இந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை கிடைத்தது. சம்பளமும் ஓரளவுக்குப் பரவாயில்லை

திருமணமும் நடந்தது. அவரின் மனைவிக்குக் காட்டில் இருப்பதற்குத் துளியும் இஷ்டமில்லை. “என்னய பாழுங்கெணத்துலக் கொண்டு வந்து தள்ளி வுட்டுட்டாங்கஎன்று திட்டாத நாளில்லை.

முருகேசனின் அப்பாவுக்கு பையன் எப்படியாவது ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற கனவு இருந்தது

என் பொழப்பு தான், இந்த காட்டக் கட்டிக்கிட்டு அழ வேண்டியதாப் போச்சு. ஒன்னோட பொழப்பாவது நல்லாயிருக்கனும்என்பார்.

வேலைக்குச் சென்று கொண்டே, ரயில்வே தேர்வு, பாங்க் தேர்வு என எழுதிக்கொண்டே இருந்தார் முருகேசன். ஆனாலும் அவரின் உழைப்பு கானல் நீராகத்தான் போனது.

இடையில் அப்பாவுக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் போனது. திடீரென ஒரு நாள், “முருகேசா, நெஞ்சு ரொம்ப வலிக்குதுடாஎன்றார். உடனடியாக பக்கத்துக் காட்டு முருகனின் வாடகைக் காரில் விரைந்து, அம்மாப்பேட்டையிலிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்.

பத்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் நிலை மிகவும் மோசமடைந்தது. பணம் ஆறாய் செலவானது. தெரிந்தவர் எல்லோரிடமும் கடன் வாங்கி செலவு செய்தார்

தொண்டையின் அருகில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி கெயெழுத்து வாங்கினார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து, “எல்லா முயற்சியும் செஞ்சும், எங்களால காப்பாத்த முடியலஎன்று சொன்னார் பெரிய டாக்டர்.

முருகேசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தரையெல்லாம் நழுவியது. யாருமில்லாமல் தான் மட்டும் தனியா இருப்பதாகத் தோன்றியது.

மனசைத் தேற்றிக் கொண்டு, அப்பாவின் உடலை வாங்கிக்கொண்டு, காட்டிலியே அடக்கம் செய்தார்.

அப்பா போன பிறகு, அவரால் காட்டில் தனியாகச் சமாளிக்க இயலவில்லை. காட்டில் மூலதனச் செலவு, அப்பாவின் மருத்துவச் செலவுகள் என கடன்கள் கழுத்து வரை இறக்கியது.

இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் விற்று விட்டு, எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு, உடையாப்பட்டிக்கு வாடகை வீடு பார்த்து வந்து விட்டார்.

கொஞ்ச நாட்கள் நிம்மதியாகச் சென்றன. வீடுண்டு, அலுவலகம் உண்டு என்று அமைதியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில தான், அலுவலகத்தில் அந்த குண்டைப் போட்டார்கள்.

நூல் ஏற்றுமதி வியாபாரம் நலியத் தொடங்கி விட்டதாகவும், விரைவில் ஆட்குறைப்பு இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அதுவுமில்லாமல் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று மற்றொரு கட்டளை. “இவ்வளவு நாளு இருந்திட்டோம். இப்ப போயி, இப்படிப் பண்றாணுங்களே செல்வம்என்றார். “ வேற வழியில்லை, குடும்பத்த நகர்த்தனும். நான் பழைய பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஒரு ஐயரு கிளாஸ் எடுக்கறாரு. திங்கக்கெளமையில இருந்து, சேரப் போறன். வர்றதாயிருந்தா சொல்லுங்க”.

அடுத்த வாரத்தில் இருந்து, தினமும் மாலையில் வேலை முடிந்து, ஹிந்தி கிளாசுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்று மாதங்கள் இப்படியே ஓடியது.

ஒரு நாள் அந்த செய்தியும் வந்தது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மானேஜர் உள்ளே வரச் சொன்னார். அவருடைய அறையில் நின்றபடியே,”சொல்லுங்க சார்என்றார். “முருகேசன், ஒங்களுக்கே தெரியும். நிலைமை சரியில்லை. நூல் வெலக் கொறஞ்சு போச்சு. எக்ஸ்போர்ட் டல்லு. நம்ம தொழிலே அத நம்பிதான் இருக்குது. கல்கத்தாவுல இருந்து ஒரே பிரஷர். இந்த மாசம் முப்பதாம் தேதியிலிருந்து நீங்க வரத் தேவையில்லை. வேற வேலை பார்த்துங்குங்கஎன்றார்.

இப்படி திடீர்னு சொன்னா என்ன சார் பண்ணுவேன். பையன் ரொம்ப சின்னவன். இப்ப தான், பொண்ணு பொறந்து ஆறு மாசமாச்சு. நீங்கதான் சொல்லனும் சார்”. கண்கள் கலங்கியிருந்தன முருகேசுக்கு.

எங்கையில எதுவுமே இல்லை. எல்லாம் மேலிடத்தில் இருந்து வருது. நான் ஒரு கருவி மாதிரி தான். வேற வேலை தேட ஆரம்பிச்சிடுங்க. நானும் ஏதாவது இருந்தா, சொல்றேன்என்றார்.

அன்னிக்கு ஆரம்பிச்சத் தலைவலி, இன்னமும் ஒரு நிலையான வேலையில்லை.

அதே ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கி விற்கும், கல்கத்தா கம்பெனிக்குப் போட்டியாக இருக்கும், முத்துவின் கம்பெனியில் சேர்ந்தார். முத்துவும் அவருடைய நண்பர் சேகரும் பார்ட்னர்கள். எப்படியோ பார்ட்டி பிடித்து விட்டிருந்தார்கள்.

எழுத்து வேலை அந்தளவுக்கு இல்லை. ஆனால் சும்மா இருக்க முடியுமா? அவர்களின் குடோனில் பெட்டிகளை அடுக்கி வைப்பது, லாரி வந்தால், லோடு ஏற்றி இறக்குவது என கடைசி நிமிடம் வரை வேலையிருந்தது. இரவில் உடம்பெல்லாம் வலித்தது. வேலையை முடித்து விட்டு, பஸ் பிடித்து உடையாபட்டிச் செல்வதற்கு இரவு  பத்து மணி ஆகியிருந்தது. ஆனால் அதற்கும் வெகு விரைவில், ஒரு முடிவு வந்தது. இவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் இரண்டு பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு, இவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

வீட்டில் மனைவியின் பேச்சு சுட்டெரித்தது. கையாலாகாதவன் என நேரடியாகவே சில சமயங்களில் சொல்ல ஆரம்பித்தாள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வேறு ஒரு நண்பரின் சிபாரிசில், துண்டு நெய்யும் இடத்தில் அம்மா பேட்டையிலேயே வேலை கிடைத்தது. வண்டியிலேயே சென்று வர ஆரம்பித்தார்

அதிக பயணங்களைக் கோரும் வேலை. முதலாளி ஈஸ்வரனுக்கு தமிழ்நாட்டில் இருந்த எல்லாப் பெருமாள் கோவில்களிலும் இருந்த அர்ச்சகர்கள் பழக்கமாக இருந்தனர். விக்கிரகங்களுக்குத் தேவையான வேட்டி மற்றும் துண்டுகளை இவரே தயாரித்து, கோவில்களுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். புதிதாக ஆர்டர் எடுப்பது, வரவேண்டிய பாக்கியை வசூல் செய்வது இவ்விரண்டும் தான் முருகேசனின் வேலை.

சில சமயங்களில் வாரத்துக்கு ஐந்து நாட்களிலும் பேருந்துப் பயணங்கள். ஓய்வென்பதே இல்லை. தூக்கம் குறைந்து போனது

சில சமயங்களில் ஈஸ்வரனுடன் காரில் சென்று பார்ட்டிகளுக்குச் சாம்பிள் காட்ட வேண்டும். அப்பொதெல்லாம் அவ்வளவு வேட்டி துண்டுகளுடன் கூடிய பைகளை இரண்டு கைகளிலும் தூக்கிச் சென்று, காண்பித்த பின்னர், மீண்டும் காருக்குத் தூக்கி வர வேண்டியிருந்தது. சில கட்டிடங்களில் மிகவும் குறுகலான படிகளில், லிஃப்ட் எதுவும் இல்லாமல், தூக்கிச் சென்று, மீண்டும் தூக்கிக் கொண்டு இறங்குவது சித்திரவதையாக இருந்தது. சிலசமயம் தான் என்ன படித்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவும் நேரமின்றிப் போனது.

ஒரு வருடம் எப்படியோ கழிந்தது. பிறகு கால்களில் சரியான வலி ஆரம்பித்தது. கடுகடுவென வலி. இரவில் தூங்க முடியாத வலி.

எக்ஸ்ரே எடுத்த பிறகு, டாக்டரிடம் காண்பித்ததில், “இனிமேல இந்த மாதிரி பாரம் தூக்குனா, ரெண்டு மூட்டையையுமே மாத்திர மாதிரி ஆயிடும். கால்களுக்கு ரெஸ்ட் குடுத்தா தான் வலி சரியாகும். ஊசி போட்டு, மாத்திரை எழுதித் தர்றேன். ஒரு மாசம் கழிச்சு மீண்டும் வந்து பாருங்க”.

இரண்டு வாரம் ஓய்விலிருந்ததில் அந்த வேலையும் கைவிட்டுப் போனது.

மற்றொரு நண்பர் வழியாக, திருப்பூரில் உள்ள அவரின் நண்பரிடம் வேலை கிடைத்தது. முதல் நாளிலிலேயே அந்த பனியன் கம்பெனி முதலாளி பைக்கில் வைத்து ஊர் சுற்றிக் காண்பித்து, இந்த கடைகளுக்கெல்லாம் வந்து, ஆர்டர் மற்றும் பாக்கியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டு, ஊழியர்கள் தங்கியிருந்த வீட்டில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

முருகேசனால் அவரைச் சமாளிக்க முடிந்த அளவு, அவருடைய மனைவியைச் சமாளிக்க இயலவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு கேட்டார். முதல் முறையாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வெளியே தங்கி இருந்ததால், மிகவும் கடினமாக இருந்தது. வீட்டில் தங்கியிருந்த மற்றவர்கள், அதிகம் படிக்காதவர்கள். “இவ்வளவு படிச்சிட்டு ஏன் சார் இங்க வந்து கஷ்டப்படறீங்க. இந்தாளு ஒரு கஞ்சப்பய சார். அவனோட மனைவி ஒரு ராட்சசி. டீ குடிக்கிறதுல இருந்து எல்லாத்தையும் சம்பளத்தில புடுச்சிக்குவா. இது ஒங்களுக்கு செட் ஆகாது சார். சீக்கிரமா ஊருலிலேயே வேற வேல பாத்துகிட்டுப் போய்டுங்க சார்என்றார்கள்.

இரண்டு வாரங்களிலியே அவருக்குப் புரிந்து விட்டது, இது அவருக்கான வேலையில்லை என்று. அவ்வளவு சாதாரணமாக யாரும் ஆர்டர் கொடுக்கவில்லை. பாக்கி வசூலிப்பது அவ்வளவு சுலபமில்லை. ரொம்பவும் நெருக்கினால் ரெகுலர் ஆர்டரும் வராது. ஆனால் இதை எதுவும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் முதலாளியும் அவரது மனைவியும் இல்லை. ஒன்றரை மாதத்தில் வேலையை விட்டு விட்டுக் கிளம்பினார். இரண்டாம் மாதத்தில் வேலை செய்த பதினைந்து நாட்கள் சம்பளம் கிடைக்கவேயில்லை.

வெறுத்துப் போன முருகேசன் இரண்டு மாதங்கள் சும்மாவே இருந்தார். வீட்டில் பாட்டு ஆரம்பித்தது. நண்பர்கள் மூலம் தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. “ஒங்க வயசுக்கு எதுவும் வேலையில்லை சார்என்று கூறி அனுப்பி விட்டனர்.

சொந்தக்காரப் பையன் ஒருவன் தேர்வு முட்டியில் இருந்த கரூர் வைஸ்யா பேங்க் ஏ.டி.எம்மில் வேலை செய்து வந்தான். அவன் மூலமாக இந்த செக்யூரிட்டி சர்வீசஸ் பற்றித் தெரிய வந்தது

சார், இந்த வேலை ஒங்களுக்கு செட் ஆவுமான்னுத் தெரியல. மாஸ்டர் டிகிரி வைச்சிருக்கீங்க. வேற ஏதாவது பாருங்க சார்என்றார் சர்வீசஸ் முதலாளி பஷீர். “பாய், எல்லா எடத்துலயும் தேடிட்டு தான் வந்திருக்கிறேன். எங்க போனாலும் வயசாயிடுச்சின்னு சொல்றானுங்க. ஐம்பதஞ்சு தான் ஆவுது. நல்லா ஆரோக்கியமா தான் இருக்கிறன். எனக்கு இது உட்டா வேற வழியில்லை. வேலக்கிப் போயி, ரெண்டு மாசமாயிடுச்சு. கடன்லதான் ஓடுது பொழப்பு. கொஞ்சம் உதவி பண்ணுங்க பாய்” .

சரிங்க சார். என்னால மாசம் பத்தாயிரம் தான் தர முடியும். லீவு கெடயாது. லீவு போட்டா, நானூறு ரூபாய் புடிச்சிக்குவம். அப்படியே வேணும்னா, பகலு ராத்திரி ரெண்டு டூட்டியும் சேத்துப் பாத்துட்டு, லீவு போட்டுக்குலாம். இந்த வேலயில நேரம் தவறாம இருக்கணும். சரின்னா நாளக்குக் காலயில எட்டு மணிக்கு, செயிண்ட் பால் ஸ்கூலுக்குப் போயிடுங்க. நான் பாதிரியார் கிட்டப் போன் பண்ணிச் சொல்லிடறேன்என்றார்.

இப்படித்தான் ஆரம்பித்த செக்யூரிட்டி வேலையே இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது

ஆஸ்பத்திரியில காலையில் பதினோரு மணிக்கு டீ, மதியம் கேண்டீனில் சாப்பாடு. வர்ற பேஷண்ட்டுங்கப் பாத்துக் குடுக்குற ஐம்பது நூறு

ஐந்து ஏக்கர் காட்டில் குச்சிக் கிழங்கு அதிகமாகப் பயிரிடுவார். குச்சிப் புடுங்கும்போது, ஆம்பள,பொம்பள ஆளுங்கன்னு நெறய பேருக்குக் கூலி கொடுத்த கைகள்.  

பேஷண்ட்டுகளோடு வரும் குடும்பத்தினர், டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும் போது, வேண்டாம் என்று சொன்னாலும், ‘சும்மா வைங்க சார்என்று ஐம்பதோ, நுாறோ கொடுக்கும்போது, வாங்கும் கண்கலங்கிய முருகேசனின் கைகள் நடுங்கும்.

அடுத்த முறை செல்லும் போது, நின்று நாலு வார்த்தை பேசிவிட்டு வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *