நேற்றைக்கு முன்தின இரவுக்குப்பின்பிருந்துதான் இப்படி நடக்க ஆரம்பித்திருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது. அன்றைக்கு என் அனைத்துப் பணிகளையும் முடிக்க இரவு வெகு நேரமாகிவிட்டது. என்னை மீறிய ஒரு அசதி. தூக்கம் கண்ணைக் கெட்டியது. என்னை அறியாமல் கண்களை மூடி இருளுக்குள் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் அப்படியொன்று நிகழ்ந்தது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு இசை.வெகு தூரத்திலிருந்து என் காதில் ஒலித்தது போலிருந்தது. என் கண்களை திறக்கவும் முடியவில்லை. மூடவும் முடியவில்லை. இசையின் மெல்லிய ராகம் என் கண்களுக்கும் காதுகளுக்கும் மிக அருகாகியது. முதலில் சாதாரணமாக ஏதோ ஒரு இசையின் ஒலி என்றுதான் நினைத்தேன். ஆனால், நேரம் ஆக ஆக அது அதிசய ராகமாய் உருவெடுத்திருந்தது. கண்களை மூடி இசையில் லகித்த போது, அந்த இசை ஓவியக் கோடுகளாய் உருமாறி, காலம் மாறிய நினைவுகளாய் மின்னல் போல் வந்து வந்து போனது. இரவு வந்து வெகு நேரமாகி விட்டது.. ஆனால், அந்த அழகிய இரவில், என்னை மீறி அந்த இசையில் மெய்மறந்து கரைந்து கொண்டிருந்தேன். நான் தூங்கியதாகத்தான் நினைத்திருந்தேன்.ஆனால், கண்கள் மட்டும்தான் மூடியிருந்தது. என் மனம் அந்த அபூர்வ இசையை ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. மழையற்ற இரவிலும் அந்த இசை மின்னல் ஒளியைப் போல் தொடர்ந்து எனக்குள் அலைஅலையாய் பிரவாகமெடுத்தது. நான் நம்பவேயில்லை. அது ஒரு புல்லாங்குழலின் இசை என்பதை. அதன்பின் நான் ஆழ் மயக்கத்தில் மெய் மறந்திருந்தேன். எப்போது கண் அயர்ந்தேன் என்று எனக்கே தெரியாது.
விடிந்தபோதுதான் தெரிந்தது அன்று விடியவிடியநான் தூங்கவேயில்லை என்று. அப்படிப்பட்ட இசை எங்கிருந்துதான் வந்தது என்றே தெரியவில்லை. என் வீட்டின் அருகில் யாரோ இசைக்கிறார்களோ என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிபடுத்தினேன். மறுநாளும் அதேபோல்தான் நடக்க உள்ளது என்பதை என் மனம் முன் கூட்டியே சொல்லியிருந்தது. மறு நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்தில், தூரத்தில் அந்த மெல்லிய புல்லாங்குழலிசை கேட்க ஆரம்பித்து விட்டது. நேரம் ஆக ஆக அந்த இசையின் ஒலி என் அருகில் கேட்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்தேன். அதே புல்லாங்குழலிசைதான். நான் இசையில் மெய் மறந்து நிஷ்டையில் இருப்பவன் போல், கண்களை மூடியிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை.
ஆனால், என் காதில் அந்த இசை அதிசயமாய் ரீங்கரித்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண்டுகளாய் ஒலித்தது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. என் காதிற்கும், மனதிற்கும் கேட்கும் அந்த அற்புத இசையின் ரகசியத்தை தெரிந்து கொள்ள, யாராலும் நிச்சயமாக எனக்கு உதவ முடியாது. இனி, அந்த இசை எங்கிருந்துதான் வருகிறது என்பதை நானே கண்டறிய வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த இசையின் நாதத்தை பின் தொடர்ந்தேன். அந்த ராகத்தை காலம்காலமாய் பின்தொடர்ந்து சென்றது போல் சென்று கொண்டிருந்தேன். எவ்வளவு தேடினாலும், வீட்டினுள் அந்த அறையையே சுற்றி வந்ததாகத் தெரிந்தது. பூமியை விட்டு மேலெழுந்துதான் இசைக்கிறது என்பதை முதலில் உறுதிபடுத்தினேன். மேல் மட்டப்பா வெட்டவெளிப் பகுதி என்பதால், அங்கிருந்து நிச்சயம் எந்த ஒலியும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த அறையின் உட்பகுதியின் வலது பக்கத்திலுள்ள பரணின் மேலிருந்து, ஒருவேளை அந்த இசை வந்திருக்கலாமோ……என நினைத்தேன். என் யூகம் சரியாகக்கூட இருக்கலாம். நான் கோக்காலியை அந்த அறையில் பரணின் அருகில் அமர்த்தினேன். அதன் மேலேறி பரணையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் மேல் புத்தகங்கள் நிறைந்த சாக்குப் பைகளும், என் மனைவி மகளுக்கு சேர்த்து வைத்த பித்தளை, சில்வர் பாத்திரங்களை பழைய சேலைகளுக்குள் முடித்து வைக்கப்பட்டிருந்ததுமாக இருந்தது. அங்குமிங்கும் தேடிப்பார்த்தேன். பரணின் கடைப்பகுதியில் ஒரு பழைய மரப்பெட்டி இருந்தது. ஒரு வேளை அதிலிருந்து அந்த இசை வெளிப்பட்டிருக்குமோ என்று நினைத்து அந்தப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.அந்தப்பெட்டி என் தாத்தாவின் அப்பா காலத்தில் உள்ள மரப்பெட்டி என்பதை ஏற்கனவே என் அம்மா சொல்லியிருக்கிறாள். என் அப்பாவும் அம்மாவுமே போய்ச் சேர்ந்து பல வருசங்களாகி விட்டது. நான் பரணின் மேல் தாவினேன். எவ்வளவு நேரமானலும் சரி அந்த இசையின் மூலத்தை கண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அங்கேயே அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. எந்த அனுமானத்திற்கும் வரமுடியாமல் நெஞ்சு படபடத்தது. எந்த சப்தமற்று அந்த அறை நீண்ட நேரம் அப்படியே இருந்தது.
அந்த நிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. என் மனம் சொன்னது போல் அந்த புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்து விட்டது. இந்தமுறை இசையின் ராகம் வேறு ஒன்றாயிருந்தது. கண்களை மூடினேன். என்னை நானே, இசையின் ஆழ்ந்த துக்கத்தில் மறந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ நினைவு வந்தது போல் சுதாரித்துக் கொண்டேன். அந்த இசை என்னை மீண்டும் அழைத்தது. அதற்குப் பின்னால் சென்று கொண்டிருந்தேன்.. அதோ….அதோ……..அதை…. கண்டுவிட்டேன்…..ஆம். அந்த இசை எங்கிருந்துதான் பிராவகமெடுக்கிறது என்பதை கண்டு விட்டேன். அந்த மரப்பெட்டியிலிருந்துதான், அந்தப் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது சிலோனிலிருந்து கொண்டு வரப்பட்ட மரப்பெட்டி. அதன் மேல், எவ்வளவோ காலத்திற்கு முன்பு பூசப்பட்டிருந்த பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருந்தது. அந்தப்பெட்டியின் மூடி, விம்மி விம்மி திறந்து என்னை அழைப்பது போலிருந்தது. பரணில் பையப்பைய ஊர்ந்து, அந்தப் பெட்டியின் அருகில் சென்றேன் . என் கை விரல்களால் அந்தப் பெட்டியை தொட எத்தனித்த போது, அந்தப் பெட்டி படாரென்று திறந்து கொண்டது. நான் பயந்து விட்டேன். உள்ளிருந்து மிகவும் ஒல்லியான, சிறிய வடிவில் கரு நிறத்தில் எட்டு துளைகள் கொண்ட அழகிய புல்லாங்குழல் ஒன்று வெளியில் வந்து நின்றிருந்தது. அந்த புல்லாங்குழல் பார்ப்பதற்கே மிகவும் அழகாயிருந்தது. ஆம்….ஆம்…. அது என் அப்பாவின் புல்லாங்குழல்தான். என்னால் எப்படி மறக்க முடியும். நான் சிறுவயதிலேயே அப்பாவின் புல்லாங்குழலை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் புல்லாங்குழல் இசைத்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. நான் மட்டுமே அவரின் அந்த அழகிய புல்லாங்குழலிசையை கேட்டிருப்பதில் எத்தனை சந்தோசம்..நானும், அவர் இசைத்து மூன்று தடவைதான் கேட்டிருக்கிறேன்.
நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றைக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடுமையான சண்டை நடந்திருந்தது.அதற்கு முந்தைய நாளிலிருந்தே சண்டை நடந்ததாகத்தான் தெரிகிறது. அந்த வீட்டின் நடுக்கட்டில் நான், அக்கா, அண்ணன் குறுக்காக படுத்திருந்தோம். நாங்கள் மூவரும் நன்றாக தூங்கிவிட்டதாக அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், யாரும் தூங்கவில்லை. அம்மாவும் அப்பாவும் பேச ஆரம்பிக்கும் போதே விழித்து விட்டோம். ஆனால், கண்களை மூடிக்கொண்டோம். அவர்கள் பேசிக்கொண்டது நான் சிறுவன் என்பதால், எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் என் சகோதரிக்கும், சகோதரனுக்கும் நிச்சயமாக புரிந்திருக்கும். அவர்கள் இரண்டு பேரும் அப்போதே என்னை விட பெரியவர்கள். அதே அறையில்தான் அம்மாவும் அப்பாவும் பேச ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சின் சத்தம் கூடியது. வார்த்தைகள் வெடித்து ஒரு நேரத்தில் சண்டையாக மாறியது. அம்மாவின் சத்தம்தான் உயர்ந்திருந்தது. எப்போதுமே அம்மாவின் சத்தம்தான் ஓங்கியிருக்கும். அம்மா ஒரு அழகி. அழகி என்றால் அப்படியொரு அழகி. அவள் உடுத்தும் உடைக்கும், நடைக்கும், தன்னை அழகு படுத்துவற்கும் அவள் பக்கத்தில் அப்பாவால் நிற்கவே முடியாது. அப்பாவோ ஒரு சுபாவான மனிதர். அவர் தன்னை அழகு படுத்த ஒரு போதும் விரும்பியதே இல்லை. அவர் எந்த நிலையிலும் கோபமாய் பேசி நான் பார்த்ததேயில்லை. அவர் எல்லாவற்றையும் சமாளித்து, அதன் பாரத்தை தன் மேல் போட்டுக்கொள்வார். அவர் ஒரு அரசாங்க கீழ் நிலை உதவியாளராக பணியாற்றினார். அவருண்டு அவர் வேலை உண்டு என்றிருப்பவர். ஆனாலும், அவரும் அம்மாவின் அழகில் மயங்கியது வாஸ்தவம்தான். அன்றுதான் அவர் வாழ்க்கையின் திசை திரும்பியது.
அவள் அவருக்கு நெருங்கிய உறவு என்பதாலும், அவள் குடும்பத்தில் எல்லா வகையிலும் அவர் ஏற்றுக்கொண்டவராக இருந்ததாலும், அவர்கள் திருமணம் வெகு விரைவில் எந்தப்பிரச்சனையுமின்றி இனிதே நடந்தேறியது. ஆனால், திருமணமான அன்றே அம்மா தனது வார்த்தைகளின் வழியே தன்னைப்பற்றிய அழகின் பெருமிதப்பில் மிதந்து சென்றாள். அவரும் அம்மாவின் அழகில், மிதமிஞ்சி சுழன்று கொண்டிருந்தார். அன்று முழுவதும் அவருக்கு பயம் கலந்த சந்தோசம் மட்டுமே பிராணனாய் துடித்தது. அன்றிலிருந்து அவரின் சப்த நாடிகள் எந்த நேரப்பொழுதிலும் ஏறி இறங்கியது. அவர் ஒரு சாதாரண அரசாங்க குமாஸ்தா என்பதை அவள் ஒரு போதும் புரிந்து கொண்டதே இல்லை. அவள் பேரழகின் பெருமிதப்பின் அழகுக்குள் அவர் மனம் புண்படும் திசைகளில் சென்று, வேறு வேறாய் மாறிக் கொண்டிருந்தாள். அவள் பல நேரம் தனது தவறுகளை மறைக்க சத்தமாகப் பேசினாள். அழகின் செருக்கான சத்தங்கள் உச்சத்திலிருந்ததால், அவள் ஒருபோதும் எதையும் புரிந்து கொள்ளவே மாட்டாள் என்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இப்படியே சென்ற இந்த நிலையிலும், அவர்களுக்கு மூன்று குழந்தையாகிவிட்டது.
காலம் எவ்வளவோ நிகழ்வுகளை வெகு சாதரணமாக கடந்த போதும், அவரால் சிலவற்றை ஜீரணிக்க முடியாமல் மனம் வெதும்பத்தான் செய்தது. வாழ்க்கை அற்புதமாக ஏதோ ஒரு நூலிழையில் பின்னப்பட்டது என்றாலும் சில நேரம் சிலந்தியின் பின்னலில் தப்பிக்க முடியாமல் பரிதவிப்பதை எதனின் விளையாட்டு எனச் சொல்ல முடியும். காலப் பிரவாக ஓட்டத்தில் என்றோ ஒருநாள் அவர் எதுவும் பேச முடியாமல் பேரமைதியானார். அதன்பின் முடிவெடுக்க முடியாத அன்றைய நாளிலிருந்து எல்லாவற்றுக்கும் மெளன சாட்சியானார். அந்த சாட்சியின் பேரமைதிதான் அன்றைக்கு இசையாய் பிரவாகமெடுத்திருந்ததோ என்னவோ… தெரியவில்லை..
நன்றாக ஞாபகமிருக்கிறது. அன்றைக்கு அம்மா எங்கோ வெளியில் சென்றிருந்தாள்.அக்காவும் அண்ணனும் பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். நான் மட்டும் காய்ச்சல் என்பதால் வீட்டிலிருந்தேன். எங்கிருந்துதான் அந்த புல்லாங்குழலை எடுத்தாரோ தெரியவில்லைஅவர் கையில் கருப்பும் பொன் நிறமும் கலந்த அந்த சிறிய அழகான புல்லாங்குழல் இருந்தது. அந்த அழகிய புல்லாங்குழலில் அவர் தன்உதடுகளை குவித்து, அதிலிருந்ததுளைகளின் மேல் அவரின் கை விரல்கள் பரதவித்தை போல் அங்குமிங்கும் ஆடச் செய்தார். நான் கதவிடுக்கின் வழியே அப்பாவையும் அவரின் செயல்களையும் கவனித்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு அப்பாவை இதுநாள் வரையிலும் பார்த்ததேயில்லை. அவர் கையிலிருந்த அந்தப்புல்லாங்குழலும் அவ்வளவு அழகாக இருந்தது. நான் அந்த வயதில் இதற்கு முன்பு மேட்டுத்தெரு பள்ளி நண்பன் ராமனின் அப்பா, நீல கண்ட சாஸ்திரி இசைக்கச்சேரியில் பாடுபவருக்கு ஏற்றாற் போல், புல்லாங்குழல் வாசிக்கும் போது ராமனோடு மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த இசையை விட புல்லாங்குழல் மீதுதான் அதிக நாட்டம். அப்படியொரு இசை வருவதற்கு அந்தத் துளைகளில் யார்தான் ஒளிந்து கொண்டு அந்த அழகிய ஒலியை தள்ளுகிறார்களோ… தெரிய வில்லையே. புல்லாங்குழலின் அழகைப் பொருத்துதான் இனிமையான இசை வரும் என நினைத்திருந்தேன். அதனால் தான் என்னவோ……ராமன் அப்பாவின் புல்லாங்குழலையே வைத்த கண் வாங்காமல் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருப்பேன். ஆனால், அன்றைக்கு அப்பாவின் புல்லாங்குழல் எனக்கு இது வரை பார்த்தேயிராத, அவ்வளவு அழகாகவும், அதிசயமாகவும் இருந்தது. ராமன் அப்பாவின் புல்லாங்குழலை விட, அப்பாவின் புல்லாங்குழல் எப்படியாப்பட்ட அழகு என்பதை அன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன்.
திடீரென்று அப்பாவின் புல்லாங்குழல் இசை என்னை சுண்டி இழுத்து ஒலிக்க ஆரம்பித்தது. நான் கண்களை துடைத்துப் பார்த்தேன். அப்படியொரு இசை…… ராகம்……. யாரும் அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். எனக்கு இசைஞானம் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், என்னால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. அவர் இசைத்த ராகம்….அப்படி…..அப்பாதானா…அது. வேறு யாராவதா ?என புரியாமல் பயந்திருந்தேன். அவர் கண்களை மூடி ஏதோ ஒரு ராகத்தில் மெய் மறந்து வாசித்துக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக…..ராகத்தின் உள்ளார்ந்து சென்று விட்டவர் போல் கண்களை திறக்கவேயில்லை. சிறிது நிமிடத்தில் அவரின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. என்னால் அப்பாவின் இசையையும் அழுகையையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்பாவைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தேன். அதற்கு மேலும், தாங்கவே முடியாமல் எனக்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் சுவர் பக்கம் பார்த்து தலையணையை ஒட்டி குப்புற படுத்து ஏங்கி ஏங்கி அழுது, ஏக்கத்தை நிறுத்த முடியாமல், கை கால்களை முடக்கி சுவரை ஒட்டி படுத்திருந்தேன். அப்பாவின் இசையும் சந்தமும் அவரின் கண்ணீரில் நினைந்து வேறுவேறாய் வீடு முழுக்க தாம்போதியாய் சுற்றிச்சுழன்றது.
அந்த புல்லாங்குழலிசையை கேட்டு, வெளியில் எங்கிருந்துதான் அம்மா வந்தாளோ?தெரியவில்லை. அவர் நிதானிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. வந்த வேகத்தில் அந்த புல்லாங்குழலை அவரிடமிருந்து சட்டென்று பிடுங்கி பரணில் தூக்கி எறிந்தாள். அவரால் ஜீரணிக்க முடியாமல் பயந்திருந்தார். அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. அப்படியொரு பகலிலும் அந்த நிமிடம் இருள் கலந்த மெளனமாயிருந்தது. ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அப்பா, மீண்டும் பரணிலிருந்து அந்தப் புல்லாங்குழலை எடுத்திருந்தார்.தன்னை மீறி மீண்டும் வாசிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் பொருத்துக் கொள்ள முடியாத கோபத்தில், அவள் வேகமாக மீண்டும் அவரிடமிருந்து புல்லாங்குழலை பிடுங்கினாள்.இப்படியான நிகழ்வை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாமல், அம்மாவைப் பார்த்து கூப்பாடு போட்டார். ஆனால், அந்த கூப்பாடெல்லாம் அவள் ஒரு பொருட்டாவே எடுத்துக் கொள்ளாமல் மறுபடியும் பரணில் தூக்கி எறிந்தாள். சுவரில் டங்…கென்று மோதி, ஏதோ ஒரு பாத்திரத்திற்கு பின்புறம் சுருண்டு விழுந்தது. அதன்பின், அவர் எதுவும் பேசவில்லை. கை, காலெல்லாம் வெடவெடத்து, நிற்பதற்கே நிலை தடுமாறி, அருகிலிருந்த ஈசி சேரில் பேயரைந்தாற் போல் விழுந்திருந்தார். ஒரு சில இமைத்தல்களுக்குப் பின், கண் இமைகளை மூடாமல், அப்படியே பரணையே பார்த்துக் கொண்டிருந்தார். வீடே பேரமைதியானது. நெடு நேரத்திற்குப் பின் அப்படியே அவர் தூங்கிப் போனார். ஆனால், அவர் கண்களின் ஓரத்தில் வடிந்த கண்ணீர் தடத்தை மட்டும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
காலத்தில், எவ்வளவோ, எப்படியான நிகழ்வுகளும் நம் கண் முன்னே மரத்தின் இலைகள் உதிர்வதைப்போல் உதிர்ந்து மறு உருவாவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பூமியின் அடியில் சப்தமற்று செல்லும் வேரைப் போல், அவரின் வாழ்க்கை ஆச்சரியமாய் நகன்றிருந்தது.
பூமியின் சுழற்சியில் கோள்களின் மாற்றத்தில், எத்தனையோ காலத்திற்குப்பின் இரண்டாவது முறையாக அந்த புல்லாங்குழலை தேடிப் பிடித்து கையில் எடுத்து வைத்திருந்தார். அப்பொழுது அக்கா, அண்ணன்,நான் அனைவருமே பெரியவர்கள் ஆகி விட்டோம். அக்காவுக்கு திருமணப் பேச்சுக்கள் பேசப்பட்ட காலம் அது. நான் கல்லூரியில் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். எனக்கு வீட்டில் நடக்கும் எதுவும் பெரியதாகத் தெரியாது. அண்ணன்தான் அப்பாவுக்கு அதிக நேரம் ஒத்தாசையாக இருந்தான். ஆனாலும், அவனுக்கு சரியான வேலை லபிக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, முடிந்ததை சம்பாதித்து சாதுர்யமாக குடும்பப் பொறுப்பை கையில் எடுக்க ஆரம்பித்திருந்தான். அப்பொழுதெல்லாம், அரசாங்கத்தில் சாதாரண கீழ் நிலை பணியாளர் என்றால் அள்ளி முடிகிற காலமுமில்லை. அப்படியே இருந்தாலும், அப்பா அவரின் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் வாயிலாக, அவர் ஒரு நேர்மையான குமாஸ்தா.ஆனால், மாங்குமாங்கென்று கோப்புகளாய் வீட்டிற்கு கொண்டு வந்து அலுவலகப் பணியை மட்டுமே சிறப்பாகச் செய்வார். அதில்தான் அவருக்கும் சந்தோசம். ஆனால், மாதம் பெறும் அந்த ஊதியம் குடும்பத்திற்கு,வாய்க்கும் வயித்துக்கும் பத்தியும் பத்தாமலும் போனதால், சேமிப்பு என்பது பத்து காசு கூட இல்லாமல் போனது என்பதே அக்காவின் திருமணப்பேச்சின் போதுதான் நிதர்சனமாக அனைவருக்குமே தெரிய வந்தது.
அம்மாவின் குடும்பத்திலோ, அப்பாவின் குடும்பத்திலோ பூர்வீகச் சொத்து என்பதோ, அவர்கள் காலத்தில் வாங்கப்பட்ட சொத்து என்பதெல்லாம்……..துளியளவும் கிடையாது. ஆனாலும், அப்படியொரு சூழலில்தான், அவரின் நீண்ட கால ஆசையின் வெளிப்பாடாக, அந்த நேரத்தில் அவர் சொந்தமாக ஒரு வீடு கட்டுவதற்கான அருமையான சந்தர்ப்பம் எப்படியோ வந்து சேர்ந்ததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவரும், தனது மகளின் திருமணம் பற்றிய யோசனையே இல்லாமல், என்.ஜி.ஓ.க்களுக்கு சலுகையில் கிடைத்த 2 செண்ட் இடத்தில் ஏதாவது செய்து விடலாம் என்ற நினைப்பில், அவரைவிட குறைந்த சம்பாத்தியத்தில் வாழும் அலுவலக உதவியாளர்கள் கூட வீடு கட்டுகிறார்களே……நாமும் வீடு கட்டுவது பெரிய காரியமாக நிச்சயம் இருக்க முடியாது என வீடு கட்டுவதில் முழுமையாக இறங்கி விட்டார். வங்கிக் கடன் வாங்குவதற்கு, வீட்டின் அஸ்திவாரத்தை கட்டிக் காண்பித்தால் கடன் கிடைக்கும் என வங்கி அதிகாரிகளின் ஆலோசனைப்படி வீட்டின் அஸ்திவாரத்தை கட்ட ஆரம்பித்தார். அந்நிகழ்வின் ஆரம்பத்தில் குடும்பமே சந்தோசத்தில் மிதந்தது. அம்மா, அம்மாவுடன் நெருங்கிப் பழகியவர்கள், அண்ணன் அண்ணனின் நண்பர்கள், அக்காவுக்கும், எனக்கும் மட்டுமல்ல, நாங்கள் குடியிருந்த வீட்டில் அருகில் உள்ளவர்களெல்லாம் கூட சந்தோசத்தில், ஆரம்பித்த வீட்டின் ஆரம்ப நிலையை பார்த்து உற்சாகமானார்கள். ஆனால், அஸ்திவாரமே ததிக்கிடதாம் போட்டது அப்பாவைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது.
ஆம்…, அதற்குப் பின்தான் அவர் அறியாத பூதங்கள் ஒவ்வொன்றாய் கட்டும் வீட்டின் அஸ்திவாரத்திலிருந்து கிளம்பியது. வீட்டைக் கட்ட ஆரம்பிப்பது என்பது பெரிய காரியமில்லை. அடுத்தடுத்து வரும் செலவுகளுக்கு கையில் பணத்தை எந்த வகையிலாவது புறட்ட தைரியமும் சாதுர்யமும்தான் முக்கியமானது, என்ற விபரத்தை வீடு கட்டிய அனுபவஸ்தர்கள் அப்பாவிடம் மறுபடி மறுபடி சொல்ல ஆரம்பித்தார்கள். அதுதான் அவருக்கு ரணமானது. வீடு கட்டுவதற்கான பணத்தை சேகரிக்க தைரியமும், சாதுர்யமும், அவருக்கு எங்கிருந்து வரும். அந்தமாதிரியான காரியங்களின் சூட்சுமம் பற்றியெல்லாம் அவருக்கு ஒருபோதும் பொருந்தியே வராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அங்குதான் அவர் பெருஞ்சுழலில் சிக்கிக்கொண்டார் என்பதே தெரியாமல், என்ன செய்வது, எப்படி நகர்வது என்று புரியாமல் பரிதவிக்க ஆரம்பித்து விட்டார். அவர், தனது நற்பெயரை மட்டுமே பணயமாய் வைத்து, வீடு கட்டுவதற்கான கடன் வேண்டுமென்று எப்படி எப்படியெல்லாமோ, யார்யாரிடமோ கேட்டுப்பார்த்து விட்டார்..இவர் செய்யும் அலுவலகப் பணியையும், நேர்மையையும் புகழ மட்டுமே செய்த பெரிய பெரிய ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் கூட இதையெல்லாம் வைத்துக் கொண்டு, பெரிய தொகையை இவருக்கு எப்படி தருவது என்று நேரிடையாக அப்படியே பேசிய போதுதான், யார் யாருடைய முகமெல்லாமோ சொல்லவே முடியாத விதத்தில் பளீரென்று தெரிந்ததை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அன்றுதான் அவருக்கு உலகமே தெரிய ஆரம்பித்தது போல், பேச எதுவுமின்றி மிரண்டிருந்தார்.
அன்றைய நாள் இரவில், மனம் வெதும்பி அவர் கட்டும் வீட்டின் முன் அடிக்கப்பட்ட ஆத்து மண்ணின் மேல்படுத்து வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து, கைகளை நீட்டி அசைத்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெட்டவெளி. இருள் படிந்த தொடுவானம் காற்றின் வழியே மண்ணின் இசை பற்றி சொல்லியது. அவர் மனதில் என்னவெல்லாமோ ஓடியது……வெண்மையும் கருமையும் சேர்ந்து நகன்ற வானத்திடம் தன்னைப் பற்றி திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டார். என்னை கணிக்க இவர்களெல்லாம் யார்? கணத்தில் இந்த மனிதர்கள் முகங்களையெல்லாம் மாற்றி கொணடார்களே… வாழ்க்கைக்கான அஸ்திவாரம் எது?காலத்தின் நிர்கதியில் மனிதர்களின் வாழ்வுருவின் எந்த அளவு கோளின் அனுமானங்கள் இவை. அவர் எதிலிருந்து திரும்பினாலும், திரும்பவும் வாழ்வின் அத்தியாங்கள் பின்னோக்கிதான் நகன்றது. இனி என்ன செய்வதற்கு இருக்கு? நம்பிக்கைகளுக்காக சுழன்று திரிந்து, உயிர் பிரிந்த வார்த்தைகள் மறு உரு பெற்று வருவதற்கான வாசல் ஒருபோதும் இல்லை என்பதை உணர்ந்த போது….. அவரால் எதையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தனது இயலாமையின் உச்சத்தில் வானத்தைப் பார்த்து அழுதார்..அவர் அழுகையின் சத்தமும், மொனங்கல்களும் நிச்சயம் யாருக்கும் கேட்டிருக்கவே முடியாது. அதன்பின், யாருமற்ற அநாதையாய் மணல் மேல் கிடந்தார்.
அது நிலவற்ற ஒரு இரவு. அப்போதைய வாழ்நிலையை சரிசெய்யும் வார்த்தைகள் கூட எதுவுமே தெரியாமல் பரிதவித்தார். அப்போதுதான் இரண்டாவது முறையாக அவருடைய புல்லாங்குழலின் துளைகளின் வழியே அவரின் வாழ்வின் கேள்விக்கான பதிலைத் தேடினார். ஈரம் தோய்ந்த மணல் குவிந்த துயரத்தை அந்த அழகிய புல்லாங்குழலின் வாசிப்பின் லகிப்பில் நேரத்தின் பிடியில் சுழன்றது தெரியாமல்,இசையின் மகுடியில் உரைந்திருந்தார். அவர் அறியாத இருளில், அவரின் புல்லாங்குழழிசை அன்றைய இருள் முழுவதையும் உள்வாங்கி, அந்தகார இசையாய் வெளியெங்கும் பரவி, தான் தோன்றியாய் பிரதேச பிரதேசங்களாய் அலைந்து திரிந்த அவரின் முதல் தாத்தாவின் ஆதி இசையை தேடியலைந்தது. அவருக்குள் எழுந்த ஆழ் மெளனத்தில், வாழ்வின் விடையறியா பின்னலின் இடைவெளியில், காற்றாய் கனவின் வாசலில் வடிந்துருகிய மணலற்ற நீரினுள் கரைந்திருந்தார்.
அந்த நிலவற்ற இரவில் விடியும் பொழுதுக்கு சற்றைக்கு தளர்ந்து தூங்கிப் போனார். அவரின் நெஞ்சில் பூத்திருந்த வெள்ளை சுருள் முடிக்குள், அந்த அழகிய புல்லாங்குழல் அமைதியற்று அங்குமிங்கும் அசைந்தாடியது.வீட்டில் அப்பாவைகாணாமல்அனைவருமே பதறிவிட்டார்கள். வீட்டில் யாருக்கும் உகந்த சூழல் இல்லாததால் ஒரு பதட்டம் நிலவியது.. எங்கெல்லாமோ தேடித்தேடி, முடிவில் அவர் வீடு கட்ட அடிக்கப்பட்டிருக்கும் ஆத்துமணலில் தூங்கிக் கொண்டிருந்த அவரைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் உயிரே வந்தது.
சாசுவதமான காலம் என்றோ ஒரு நாள் அவரை எட்டி விடும் என்ற நம்பிக்கை, அவர் மீது படர்ந்த நிழலாய் தப்பித்து தப்பித்து ஓடியது.முகத்தில் வடிந்துருகிய சாதுர்யமற்ற அவரின் நிழல் எதனோடோ இணைய எத்தனித்தது.எதுவும் முடிவற்ற நீள்வெளிக்குப்பின் ஏதோ ஒரு புள்ளியில் கரைந்து வேறொன்றாவதே இயற்கையின் விதி என்பதை யாரால்தான் மறுக்க முடியும்.
சிறிது காலங்கள் கடந்து போனது.மூன்றாம் முறையாக அன்றைக்குஎப்படி அவர் கைக்கு அந்த புல்லாங்குழல்வந்தது என்றுஅவருக்கே தெரியாது.கையை பின்புறம் நகற்றி தலையணைக்கடியில் வைத்தவருக்கு தட்டுப்பட்டது முதலில் அந்த புல்லாங்குழல்தான்.அது ஒரு தனியார் மருத்துவமனையிலுள்ள தனி அறையின் படுக்கை என்பதை நான்கு நாட்களுக்குப்பின்தான் தெரிந்து கொண்டார்.அவர் இதய பலகீனமானமானவர்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறவர்.அவருடைய திருமணம் முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே இப்படி நடந்தது அம்மாவையே பயப்பட வைத்தது. ஒரு நாள் வீட்டின் அங்கணாக்குழியில்அவர் குளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று நெஞ்சைப் பிடித்து வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விட்டார். அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை.பக்கத்து வீட்டு வாத்தியார் அப்பா உதவியுடன் உடனடியாக டாக்டரிடம் கொண்டு செல்லப்பட்டார்.அன்றிலிருந்துதான் அவர் இதய பலகீனமானவர் எனத் தெரியவந்தது. அதிலிருந்துமருந்து மாத்திரைகள் விடாமல் சாப்பிடுவதாலும், தொடர்ந்து காலகெடு முறையில் டாக்டரால், அவரின் உடல் சோதனை செய்யப்பட்டு வருவதாலும், அவரின் உடல் நிலை வெகுகாலமாக சரியான நிலையில்பேணப்பட்டு வந்திருந்தது.
எத்தனை காலம்தான் இப்படியே இந்த உடல் இயந்திம் செயல்படும்.நாட்கள் கடந்த போது, வீட்டில் யாருமே அப்பாவின் நோய் பற்றியும் பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. அவரின் இருப்பின் சந்தோசத்தோடே அனைவரும் காலத்தை கடத்தினார்கள்.அன்றைக்கு நாள் தற்செயலாக அமாவசை.அப்படியெல்லாம் யாரும் கணக்கிடவில்லை.ஆனாலும், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் அந்த நாள் ஒரு உருத்தலாகத்தான் இருந்தது.அன்றைக்குமாலை அப்பா, அம்மா, அண்ணன், அக்காவுடன், நானும் பல் வேறு விசயங்கள், நிகழ்வுகள் பற்றியெல்லாம், நன்றாக சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம்.அப்பா சிரிப்பது என்பது மிகவும் அரிதுதான்.அன்றைக்கு என்னவோ தெரியவில்லை.அப்பாவின் சிரிப்புஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து சிரித்தோம்.அப்பாவின் சிரிப்போடு கலந்து என்னவெல்லாமோ பேசிப்பேசி உற்சாகமாகத்தான் பொழுதுகள் சென்று கொண்டிருந்தது.யாருமே எதிர் பார்க்க வில்லை.சூழ்நிலை எப்படித்தான்,திடீரென்றுயாராலும் யோசிக்கக் கூட முடியாத நிலைக்கு மாறியது எனத் தெரியவில்லை.கணத்தில் எல்லாம் நடந்துமுடிந்தது.அப்பா நெஞ்சைப் பிடித்து சட்டென கீழே விழுந்தார்.அண்ணன்,நான், அம்மா கைத்தாங்கலாக தாங்கி பிடித்தோம்.அக்கா அழுது கூப்பாடு போட்டாள்.அவர் உடம்பு முழுவதும் வியர்த்து கொட்டியது.அம்மா சுதாரித்து ஒரு பொடி மாத்திரையை எடுத்து அவர் வாயின் ஓரத்தில் வைத்து, வெந்நீரை பைய வாயை திறக்கச் செய்து கொடுத்தார்.அப்பாவுக்கு மறு உயிர் வந்தது போல், எழ ஆரம்பித்தார்.ஆனாலும், கண்களை நன்றாக திறந்து பார்க்க முடியாத நிலையில்தான் இருந்தார். அம்மா, அவர் நெஞ்சை தடவிக் கொண்டே இருந்தார். கொஞ்ச காலமாகஇப்படித்தான், அம்மா அப்பாவை ஒரு குழந்தையைப் போல்தான் கவனித்து வந்தார்.அதிலும், இந்த மாதிரியான நிலையை எப்படி எதிர் கொள்வது என்பதை அம்மா தைரியமாக பழகியிருந்தாள்.ஆனாலும், அவர் உடல்நிலை மோசமான நிலையில்தான் இருக்கிறது என்பதை அம்மாதான் சரியாக கணித்தாள்.உடனடியாக ஒரு டாக்சியில் பெருநகரத்தின், தனியர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் கடந்தது.டாக்டர் ஏதோ ஒரு யோசனையோடு அம்மாவைப் பார்த்தார். அம்மா அந்த அளவுக்கு படிக்காதவளாக இருந்தாலும், அவள் அனுபத்தில் டாக்டரின் முக அசைவிலேயே அவரின் குழப்பத்தை புரிந்து கொள்வாள் என்பதை முதல்முதலில் டாக்டர் அறிந்தபோது ஆச்சரியப்பட்டாலும், பின்னாளில்அம்மாவின் மதிப்பு டாக்டரிடம் மேலுயர்ந்ததால், அப்பாவின் நோய் தொடர்பான சிக்கலானவைகளை கூட பேசினார். யோசனையோடு அமர்ந்திருந்த டாக்டருக்கு எதிரே அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்து இப்படித்தான் பேசினார்….“இதற்கு மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வைத்து மருத்துவம் பார்ப்பதில் எந்த பலனுமில்லை.உங்கள் திருப்திக்காகத்தான் இங்கு வைத்து பார்க்கிறோம்.அவர் உயிர் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தால் பெரிய விசயம். உங்கள் மனோதிடத்தையும், குடும்ப சூழ்நிலையையும், கருத்தில் கொண்டுதான் உங்களிடம் சொல்கிறேன்.“ இதுதான் நிலைமை புரிந்து கொள்ளுங்கள் என்றார். அம்மா எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொண்டுடாக்டரின் அறிவுரையை புரிந்த நிலையில்,எதுவுமே சொல்லாமல் வெளியேறினார்.அதன்பின், அண்ணனிடம் டாக்டர் சொன்னவற்றை சொல்லும் போது, தாங்க முடியாமல் அழுதாள்.
அண்ணன் பயம் கலந்த ஆச்சரியத்தில் அம்மாவைப் பார்த்தான். அம்மாதானே…….. இது.அவனால் நம்ப முடியவில்லை.இப்படியொரு அம்மாவை அவன் பார்த்ததுமில்லை. அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு… “தைரியத்தை மட்டும் இழந்து விடாதீர்கள்….அம்மா… இனி நடக்க வேண்டியதை எப்படியோ… எதோ ஒரு வழியில் நடத்துவோம். அம்மா….” .என்றான்.சிறிது நேரத்தில் வந்து விடுவதாக அண்ணனிடம் சொல்லி விட்டு,அம்மா தனியாக இருக்க நினைத்தாள்.அண்ணன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் கண்களிலிருந்த வடிந்த கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.அம்மா திடீரென்று சேலைத்தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு, கதறி அழ ஆரம்பித்தாள்.அவளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.அவள் என்ன என்னவெல்லாமோ நினைத்து அழுதாள்.,எவ்வளவோ காலத்திற்கு முந்தையதையெல்லாம் நினைத்து அழுதாள்.ஆனாலும் அழுகை நின்ற பாடில்லை.
தலைமை மருத்துவரின் அறிவுரையின்படி அந்த மருத்துவ மனையின் தனியறையில் அப்பா மாற்றப்பட்டார்.இப்பொழுதுதான் அப்பா அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதற்கு முன்பு அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதை விட அண்ணனின் கையை இறுகலாகப்பிடித்துக் கொண்டு, தான் சொல்ல வந்ததை சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் வராமல் முதலில் திக்கு முக்காடினார். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் விட்டு விலகி விழுந்தது.“இனிமேல் நீதானப்பா குடும்பத்தை காப்பாத்தனும்…”.அதற்கு மேல் அவருக்கு எந்த வார்தைகளும் வராமல் நாக்கே உள்ளிழுத்துக் கொண்டது.அவர் கண்கள் கலங்கி அழுகை கண்ணுக்குள் தேங்கி நின்றது. இந்த நிலையில் அப்பாவை பார்க்க முடியாமல் தலையை ஒரு நிமிடம் திருப்பிக் கொண்டு, மறுநிமிடம் நிதானத்திற்கு வந்தவனைப் போல்….. “அப்பா எல்லாம் பாத்துக்கிடலாம் அப்பா… நீங்க ஒன்னும் மனச போட்டு குழப்பிக்கிடாதிங்க….” அப்பாவின் கையைப் பிடித்து கலங்கிய கண்களோடு ஆறுதல் சொன்னான்.
அண்ணன் அப்பாவின் மருத்துவ செலவுக்குத் தேவையான நிதியை புரட்டுவதற்காக நகரத்தில் முக்கிய நண்பர்களையோ சொந்த பந்தங்களையோ, தொடர்புள்ள யாரோ ஒருவரையோ….. இப்படி ஏதோ ஒரு வகையில் பார்க்க கிளம்பி வெகு நேரமாகி விட்டது.அம்மா டாக்டரை கடைசியாக பார்த்த பின் மருத்துவமனைக்குள் ஏதோ ஒரு இடத்தில் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.அக்கா, வீட்டில் பக்கத்து வீட்டு அத்தை துணையுடன் பேசியும், பேசாமலும், அழுத நிலையிலேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.இரண்டு நாள் அப்பாவின்உயிருக்கு டாக்டர் கெடு கொடுத்த விபரமெல்லாம் எனக்கும் அக்காவுக்கும் தெரியாமலே மறைத்து விட்டார்கள்.
இரவு வெகு நேரமாகி விட்டது.டாக்டர்கள் மருத்துவமனையில் இருந்த உள் நோயாளிகளை பார்வையிட்டு, தக்க அறிவுரைகளை மருத்துவ செவிலியர்களிடம். தெரிவித்து விட்டு எப்போதோ சென்று விட்டார்.எல்லா அறைகளுக்கும் செவிலியர்கள் தேவையான உதவிகளைசெய்தபின் ஓய்வறையில் சென்று தங்களை சமப்படுத்திக்கொண்டு, தூங்கியும் தூங்காமலும் இருந்தார்கள்.அனைத்து அறைகளும் நோயாளிகள் இருப்பதற்கான எந்த சலனமும் இல்லாமல் பேரமைதியாய் இருந்தது.இரு பக்க அறைகளுக்குமான இடைவெளிப் பாதையில் அங்காங்கே எல்.இ.டி வெளிச்சம் இரவின் இருளை மறைத்திருந்தது.
நாங்கள் இருந்த அறை திறந்தேதான் இருந்திருந்தது.அம்மா அப்பாவின் படுக்கை அறைக்கு வலப்பக்கத்தில் கீழே தரையில் பச்சைக்கலர் போர்வையை விரித்து படுத்திருந்தாள்.நான் வாசலில் தலை வைத்து படுத்திருந்தேன்.அண்ணன் எங்கள் அறையை ஒட்டி வராண்டாவில் படுத்திருப்பான்.அவன் எந்த நேரத்திலும் வருவான்.அப்பா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்பா தூங்குகிறாரா என்பதை அப்போதைக்கப்போது பார்த்துக் கொண்டும், வெகுநேரமாக தாங்கமுடியாத யோசனையில் இருந்த அம்மாவும் கூட அவளை மீறி கண் அசந்திருந்தாள்.நான் வாசலில் தலை வைத்து படுத்தவன் என்னை மீறி எப்போதோ தூங்கி விட்டேன்.
திடீரென்று அந்த மருத்துவமனையே வேறு ஒன்றாய் மாறிக் கொண்டிருந்தது போல் தோன்றியது.என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.மகுடியில் மயங்கியது போல் மருத்துவமனையே இருந்தது.நான், அம்மா, மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், உடனிருந்தவர்கள்,செவிலியர்கள் உட்பட அனைவருமே அவரவர்களின் கனவுக்குள் இசையின் சந்தங்களை தேடித்தேடி தூரத்தில் சென்று பிடிபடாமல் மயங்கி உருகிக் கொண்டிருந்தோம். அவர்கள் அறியாத அதிசயக் கனவின் வழியே இப்படி ஒரு இசை வந்திருந்ததை எல்லோராலும் உணர முடிந்தது.ஆனால் எவராலும் விழிப்பு நிலைக்கு வரமுடியாமல், அந்த இசையின் மாயக்கயிற்றின் இறுக்கம், அவர்களை ஒரு அரூப பிம்பத்தினுள்சுழல வைத்திருந்தது.அது ஒரு விநோதமான இசை.இருள் படிந்த அந்த மருத்துவ மனையே அந்த அபூர்வ இசையால் பிரகாசமாகி ஸ்வரங்களாய்வானவெளியெங்கும் சிதறியது.வானம் முழுக்க கரும் புல்லாங்குழலின் இசை படிந்த மேகங்களாய் பூமியை நோக்கி விரிந்திருந்தது.இரவில் கூட்டுக்குள்உறங்கியிருந்த பறவைகளெல்லாம் இசையில் மயங்கி,ராகங்களின் அதிசயத்தை சந்தோச கூக்குரலிட்டு மரங்களுக்கும், இலைகளுக்கும், பூக்களுக்கும், மலைகளுக்கும், குகைகளுக்கும் சொல்லியது. இரவில் நடமாடும் இரவுப்பட்சிகள் காற்றின் திசைகளில் நீருக்குள் தூங்கி விழும் மீன்களிடம் நீரின் பாடலுக்கு இணையான காற்றில் மறைந்து வந்த அந்த இசையின் ஸ்வர ரகசியத்தை சொல்லியது. இப்படியான அதிசய ராகம் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் பரிதவிப்பில் எல்லாமும் பரவசமடைந்தது.
அப்பா எப்போது தூக்கத்திலிருந்து விழித்தார் என்று தெரியாது.அவர், படுக்கையின் நடுவில் அமர்ந்திருந்தார்.அந்த கறுப்பு நிற சிறிய புல்லாங்குழலின்எட்டு துளைகளில் அவரின் கை விரல்கள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. விநோத ஸ்வரங்களின் ஆராபனையில் மூழ்கிக் கொண்டிருந்தார்..இசையின் சித்த பிரமையில் வேறொன்றாய் மாறியிருந்தார்.ஸ்வர வரிசைக்குள் என்றோ ஒருநாள் காணாமல் போன அவரின் முதல் தாத்தா யாருமே இசைக்காத இசையின் பிரம்மத்திலிருந்து அப்பாவை அழைத்தார். அவர் அந்த கறுப்பு புல்லாங்குழலின் எட்டுதுளைகளின் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து ஸ்வர வரிசையின் நளினத்தினை இசையாய் சொல்லி எட்டாவது துளையின் மெல்லிய காற்றின் வெளியே அவர் தாத்தாவைபார்த்தார். தாத்தா இனி எல்லாமும் இந்த பிரபஞ்ச கானத்தைத்தான் வந்தடைய வேண்டும்…..இந்த லெளகீக வாழ்க்கையை விட்டு வெளியே வா…வா… என்று இரண்டு கையையும் நீட்டி அழைத்தார்.புல்லாங்குழல் இசையின் வேறு வேறு ராகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பா கரைந்து கொண்டிருந்தார்.கரைந்து கரைந்து இசையே அவரானார்.
விடிவதற்கு சற்று முந்திதான் கண்மூடினார்.யாருமறியாத அந்த விடியலில், அவர் நெஞ்சின் மேல்அந்த கரு நிற மெல்லிய புல்லாங்குழல் அங்குமிங்கும் அசைந்தாடிக் கொண்டிருந்தார்.