ஜெயராஜ் அண்ணன் சொன்னவாறே கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி ரங்கராஜபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இங்கே சிறிய வீடொன்றில் தான் ஜெயராஜ் அண்ணன் தங்கி இருந்தார்.
ஊருக்கு வந்திருந்த அண்ணனிடம் வேலை கிடைத்த செய்தியைச் சொன்னபோது,“அசோக் பில்லர் தான? நான் இருக்குற ஏரியால இருந்து பக்கம்தான் சங்கரு. நம்ம ரூம்லயே தங்கிக்க நீ. ஒண்ணியும் பிரச்சனை இல்ல, எல்லாம் பாத்துக்கலாம்” என்று சொல்லியிருந்தார். வேலைக்கு போய் முதல் மாதச் சம்பளம் வாங்கினால் தான் எதுவும் நிஜம் என்றாலும், ‘நம்ம ஜெயராஜ் அண்ணன் இருக்காப்ல’ என்ற எண்ணமே பெரிய நம்பிக்கை அளித்தது.
பொதுமுடக்கம். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நாடே சூனியமாய் தெரிந்தது. ரயில், பேருந்து எதுவும் ஓடவில்லை. அநேக இடங்களில் வேலையிழப்பு, ஊர் திரும்புதல் என்று குடிசை முதல் கோட்டம் வரை கண்களுக்கு புலப்படாத நுண்உயிரி ஒன்று கோரத்தாண்டவம் ஆடிக் களைத்திருந்தது. இப்போதும் அது சற்று ஓய்வில் இருக்கிறதே தவிர முழுவதுமாக ஓயவில்லை; இறுக்கம் தளர்ந்து வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக சுழலத் தொடங்கியிருக்கிறது.
சென்னைக்கு கிளம்பும் முன் ஒருநாள் காலை ஜெயராஜ் அண்ணனே விஷயத்தைச் சொன்னார். அதற்கு முன்னரே அரசல் புரசலாக ஊரில் பேச்சு எழுந்திருந்தாலும் அவராகச் சொல்லும் வரை அதை நான் நம்பியிருக்கவில்லை.
“சங்கரு, எனக்கு வேலை போனது என்னமோ உண்மை தான்; அதுக்காக உன்னிய அப்டியே தெருவுல நிறுத்திவுட்ற மாட்டேன் தெரிஞ்சுக்கோ. அங்க நான் இருந்த வீட்லயே நீ தங்கிக்கலாம். ஓனரம்மா கிட்ட நான் பேசிட்டேன். நீ பயப்படாம கிளம்பு; அக்கம்பக்கம் நல்லா உதவி பண்ணக்கூடிய ஆட்கள் தான் இருக்காங்க. இவ்ளோ வந்தாச்சு இன்னும் என்ன? தைரியமா போ சங்கரு”.
ஜெயராஜ் அண்ணன் ஆறுதலாகவே பேசினாலும் எனக்கு தான் பயமும் பதற்றமும் இன்னும் அதிகமாகத் தொற்றிக்கொண்டது. இதுவரையில் வெளியூர் சென்று தனியாக தங்கியதில்லை. அப்பா அரசு உத்தியோகத்தில் இருந்ததால் வீட்டில் பணக்கஷ்டம் கிடையாது. இருந்தாலும் கல்லூரிப் படிப்பு முடித்து மூன்றாண்டுகள் கழித்துக் கிடைத்திருக்கும் வேலை இது. இந்தக் காலக்கட்டத்தில் எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பு நடந்துக்கொண்டிருக்க, எனக்கோ பணியில் சேர்வதற்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் படித்த பயோ-மெடிக்கல் துறைக்கு இப்போது ஏக வரவேற்பு. அநேக இடங்களில் அதன் தேவை அதிகரித்துக்கொண்டிருந்தது. மாஸ்க் தாயரிக்கும் தொழில் தொடங்கி மருத்துவம் சார்ந்த மிஷின் தயாரிப்பு, பழுதுப்பார்த்தல் என்று இந்தத் துறை செழித்து வளர்ந்துகொண்டிருக்கும் நேரம். ஸ்கேன், எக்ஸ்-ரே மிஷின்களில் பழுது என்று அழைப்பு வரும் இடங்களுக்குச் சென்று பழுது நீக்க வேண்டும். இந்தச் சமயத்தில் இது கொஞ்சம் ஆபத்தான வேலை தான். அனுபவஸ்தர்களுக்கே இதில் அதிக கிராக்கி என்றாலும் நான் சேரவிருப்பது ஒரு குறுதொழில் நிறுவனம் என்பதால் புதிய நபர்களையும் வேலைக்குத் தேர்ந்தெடுத்து பணியமர்த்திக்கொண்டிருந்தனர். இதில் உபலாபமும் ஒன்று உண்டு. சாதாரண நாட்களில் ஆறுமாத காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய வேலைகளை இப்போதைய நெருக்கடிக் காலத்தில் மூன்றே மாதங்களில் கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே பணியிலிருக்கும் மூத்தவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதிகம். இந்த வாய்ப்பைத் தவறவிடுவதற்கு நான் தயாராக இல்லை.
வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு அவ்வளவு ஒன்றும் சிரமமாக இல்லை. “கோடம்பாக்கம் ஸேடேசன்ல எறங்கி ரங்கராஜபுரம் மெயின் ரோட்லயே போ; நாலாவது லெஃப்ட்டுல திரும்பு சங்கரு. அதுலருந்து செகண்ட் கட்டிங்-ல ராகவேந்திரா கலியாண மண்டபத்த ஒட்டுனாப்ல போற தெருவுல கடேசி வீடு.” சொல்லும்போதே, வீடு நம் கண்முன் தோன்றி எழும்பும் அளவுக்கு துல்லியமாகச் சொல்லி அனுப்பியிருந்தார் ஜெயராஜ் அண்ணன்.
ஒரே காம்பவுண்ட்க்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து ஒட்டினாற்போல இருந்தன. ஒன்றில் வீட்டு ஓனரம்மா இருக்கிறார். பொதுமுடக்கத்துக்கு முன்பே மகனுடன் வெளிநாடுச் சென்றவள் இன்னும் திரும்பி இருக்கவில்லை. மற்றொன்றில் ஒடிசாவில் இருந்து இங்கு வந்து வேலைப் பார்க்கும் ஒரு கட்டிடத் தொழிலாளி தன் மனைவியுடன் வசிக்கிறான். அண்ணனின் வீட்டுச் சாவி அவனது வீட்டில் தான் இருந்தது. நான் வந்து சேர்ந்தபோதே நேரம் பத்து மணியைக் கடந்துவிட்டது. உள்ளொடுங்கி இருந்தத் தெரு. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. அந்த வீட்டு இரட்டை வாசற்கதவின் ஒரு கதவு முழுவதுமாக சாத்தியிருக்க, மறுக்கதவு மட்டும் திறந்துக் கிடந்தது. எப்படி அழைப்பது, யாரிடம் கேட்பது என்ற தயக்கத்துடன் வெளிவாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். திறந்துக் கிடந்த கதவை அடைப்பதற்காக தற்செயலாக வாசலுக்கு வந்த அந்த வீட்டுப்பெண் என்னைப் பார்த்தவுடன் முந்தானையைச் சரிசெய்து கொண்டு இடுப்பில் ஏற்றிச் சொருகியிருந்த சேலையை இறக்கிவிட்டாள். சாத்தியிருந்த கதவுக்கு பின்புறம் மறைவாக நின்றுக்கொண்டாள்.
“இல்ல, ஜெயராஜ் அண்ணன் வீட்டுச்சாவி..?”
முகத்தில் எவ்வித குழப்பப் பாவனைகளும் காட்டாமல் சாவியை எடுப்பதற்காக வீட்டிற்குள் திரும்பினாள். நிமிட நேர பரஸ்பர பார்வையில் அவளது செழுமையின் சுகந்தத்தை என்னுள் நிறைத்துக்கொண்டேன். அவள் சாவி எடுத்து வரும் இடைவேளையில் அக்கணங்களை மீண்டும் ஒருமுறை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தினேன். ஒருப்பாதிக்கதவில் சரி பாதி அழுந்தி நின்ற மாதுளம் தனங்கள்; புடவையை கீழிறக்கும் முன் பளீரிட்ட கால்கள் என்று துண்டு துண்டாக வந்து விழுந்தாலும் முழுச் சித்திரமாய் உருவகிக்க இயலவில்லை. அதற்குள் கைகளில் சாவிக் கிடைத்தது. பார்த்தவரையில் அந்த வீட்டினுள் பெரிய சாமான்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அறை நடுவே மண்ணெண்ணெய் அடுப்பொன்று அக்குவேறு ஆணிவேறாய் பிரிக்கப்பட்டு, பாதித் துடைத்தும் துடைக்காமலும் கிடந்தது. திரிகளை நிமிண்டிவிட்ட விரல்களில் அப்பியிருந்த கரித்தடம் வீட்டுச்சாவியிலும் ஒட்டி இருந்தது. மண்ணெண்ணெய் அடுப்பு இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதே எனக்கு பெரிய ஆச்சரியம். அவளைப் பார்த்துச் சிரிப்பதற்காக முகத்தசைகளை இளக்கினேன்; அதற்கு பயனில்லை. சாவியை வாங்கிக்கொண்டு நகரும் முன் கதவு சாத்தப்பட்டது. அடைக்கப்பட்ட கதவின் ஓசையில் அத்தனை வலுவில்லை என்பது ஒரே ஆறுதல். முகம் கொடுத்து பேசாதது சற்று நெருடலாக இருந்தாலும், முன்பின் அறியாத ஒருவனிடம் அவள் தயக்கமில்லாமல் பேசுவாள் என்று எதிர்ப்பார்ப்பதில் நியாயமில்லை என்பதால் மனத்தைச் சாந்தப்படுத்தினேன். கருப்பும் இல்லாது மாநிறமும் இல்லாது, தூசுகள் நீக்கி அரைத்த கோதுமை மாவு நிறமும் மூக்கில் மாட்டியிருந்த புல்லாக்கும் மட்டும்தான் அவள் ஒடிசாவைச் சேர்ந்தவள் என்பதற்கு சாட்சியாக இருந்தன. மற்றபடி சேலைக்கட்டு, திராவிட வனப்பேறிய உடற்கட்டு என்று எல்லாமும் அவளை உள்ளூர்க்காரியாகவே காட்டியது.
நான்கைந்து மாதங்கள் அடைத்துக் கிடந்த ஜெயராஜ் அண்ணனின் வீட்டைத் திறந்தபோது பயங்கர முடை நாற்றம். ஆங்காங்கே கிடந்த துணிமணிகளும் பாதிப் பிரித்த நிலையில் இருந்த உணவுப் பொட்டலங்களும் சேர்ந்து உண்டாக்கிய வாடைக் குமட்டியது. ஒரு பிரதான அறை, அதையொட்டி சிறிய சமையலறை. வீட்டை ஓரளவு சுத்தம் செய்து உடை மாற்றித் தூங்க விழைந்தேன். வழக்கமாய், தூங்கும் முன்பு அதுவரை நடந்த அன்றைய நிகழ்வுகளை அசைப்போடுவது உண்டு. கண்களை மூடி நிதானித்தேன். ஒற்றைக் கதவு – பருத்த மாதுளை – பளீர் – கோதுமை – புல்லாக்கு – என்று முற்றுப்பெறாத ஒரு சித்திரத்தைக் கண்களுள் நிறுத்தி உறங்கிப்போனேன்.
கண்விழித்தபோது வாசலை ஒட்டி நின்ற அந்தி மந்தாரை விரிந்திருந்தது. காலையும் மதியமும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதை வயிற்றுக்குள் ஓடிய ரயில் உணர்த்தியது. லுங்கியோடு ஒரு சட்டையை மட்டும் அணிந்துக்கொண்டு கிளம்பினேன். வாசல் கதவை பூட்டிடாமல் சும்மா கொண்டி வைத்து வெளியில் வரவும், பக்கத்து வீட்டு வாசல் கதவு திறக்கப்பட்டது. களைந்திருந்த தலையை ஒழுங்குப்படுத்த கைகள் தன்னிச்சையாய் விரைந்தன. சட்டை பட்டன்களைச் சரிப்பார்த்துக் கொண்டேன். வீட்டிற்குள் இருந்து ஒரு நெடிய உருவம், அரை வழுக்கைத் தலையுடனும் விகாரமான பல் அமைப்புடனும் சாத்தியிருந்த ஒற்றைக் கதவை மட்டும் திறந்துக்கொண்டு வெளியே வந்தது. பற்களில் காவிக்கறை. சிலும்பல் மீசை. கன்னங்களில் டொக்கு விழுந்து, கண்கள் இரண்டும் சிவந்து நிரந்தர சோர்வுடன் காணப்பட்டன.
“நீங்க தான் ஜெயராஜ் அண்ணன் சொல்லி அனுப்புச்ச ஆளா?” ஒடிசி கலக்காத தமிழில் கேட்டான்.
“ஆமா. அவருக்கும் எனக்கும் ஒரே ஊரு. நீங்க?”
“கங்காதர். இங்க பக்கத்து வீடு. காலையிலேயே வந்தீங்களாமே? பிந்து சொல்லுச்சு. நான் அப்பறமா வந்துப் பாத்தேன். ஆளக் காணும். தூங்கிட்டீங்க போல” என்று சொல்லிக்கொண்டே முக்கால்வாசி தேய்ந்துப் போய் பள்ள மேடுகள் நிறைந்திருந்த பேரகான் செருப்பை அணிந்துக்கொண்டான். இருவரும் வெளியே வந்தோம். சாத்தியிருந்த கதவருகில் எதுவும் அசைவு தெரிகிறதா என்று திரும்பிப் பார்த்தேன். ஒரு சலனமும் இல்லை.
“பிந்து” – வெளியில் கேட்காதவாறு ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை.
“என்ன?” புரியாதது போல் மறுபடியும் கேட்டேன்.
“எங்க கெளம்பிட்டீங்க-னு கேட்டேன்?”
“இல்ல, மதியம் சாப்பிடல; அதான் ஏதாது டீ குடிச்சுட்டு வரலாம்-னு”
“இந்தக் கடையில டீ சூப்பர் டேஷ்டா இருக்கும். வாங்களேன்”, அழைத்துச் சென்று அவனே இரண்டு டீ சொன்னான். கண்ணாடிக் குடுவையில் இருந்து இரண்டு பிஸ்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தான். அவனுக்கும் எடுத்துக்கொண்டான். இவன் கேட்ட கேள்விகளுக்கு அன்றைய தினசரியை வாசித்தபடி நின்ற வட இந்தியர் சுரத்தே இல்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். பணம் கொடுப்பதற்காக அவன் பாக்கெட்டிற்குள் கைவிட்டு துழாவ, அதற்குள் நான் என்னுடைய பர்ஸில் இருந்து ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். எப்படியும் அவன் கொடுக்கப்போவதில்லை என்று ஏற்கனவே அறிந்து வைத்திருந்த கடைக்காரர் என்னிடம் இருந்து காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டார். கடைசி வரை அவன் துழாவிக்கொண்டே இருந்தான். ஏதோ வேலை விஷயமாக அவன் கிளம்ப, நான் வீட்டிற்குத் திரும்புவதற்காக நடந்தேன்.
இரண்டடி எடுத்து வைத்ததும் பின்னாலிருந்து சத்தம்,
“சார்..சார்..”
அருகில் வந்துவிட்டான்.
“சார் கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க. செலவுக்கு ஒரு இருநூறு ரூபாய் தேவைப்படுது. கிடைக்குமா?” – முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் கேட்டான். வெறும் பத்து நிமிடமே பழக்கமான ஒருவனுக்கு எப்படி கடன் கொடுப்பது? உள்ளிருந்து ஏதோ ஒன்று உந்தித்தள்ள, பர்ஸிலிருந்து ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தேன்.“இன்னும் ரெண்டு நாள்ல சம்பளம் போட்ருவாங்க, கொடுத்துடுறேன் சார்”.
காம்பவுண்டிற்குள் நுழைகையில் பிந்து துணி காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளைவிட உயரமாக கட்டப்பட்டிருந்த கொடியில் எக்கி எக்கி துணிகளைப் போட்டு வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள். நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை. வேகத்தைக் குறைத்து நடந்தேன். அவளது சேலை மார்பின் நடுவில் முறுக்கிக் கிடக்க, வாளியில் இருந்துக் கடைசித் துணியை எடுத்துப் பிழிந்து உதறிக் கொடியில் தூக்கிக் காயப்போட்டாள். கால்களை எக்கி உடல் முழுவதையும் நீட்டித்து கைகளை உயர்த்தி துணியைக் கொடியில் போடும்போது, கடைசி கொக்கி மாட்டப்படாத ஜாக்கெட்டின் வெளியே அடிமார்பின் சதைக்கதுப்பு ஒரு நொடித் தோன்றி மறைந்தது. கால்களை எக்கி உடல் முழுவதையும் உயர்த்தி இருந்ததால் அவளில் இருந்து தனித்துத் தெரிந்த பின்புற மேடு வாளிப்பான கல் சிற்பத்தை நினைவூட்டியது. நான் வருவதை உணர்ந்ததும் வாளியை எடுத்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்குள் சென்றாள்.
பெரும்பாலும் புகைப்பது இல்லை. ஊரில் இருக்கும்போது வீட்டிற்கு தெரியாமல் அவ்வபோது புகைத்ததுண்டு. இங்கு வாய்த்த தனிமையும் யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவும் சிகரெட் இழுக்கத் தூண்டியது. இருந்தாலும் பக்கத்து வீட்டில் யாரும் இருக்கிறார்களா? கதவு அடைத்திருக்கிறதா என்று உறுதி செய்த பிறகே பற்ற வைத்தேன். வெளிவிடும் புகை எல்லாம் பருத்த மாதுளையாகவும் கல் சிற்ப வாளிப்புடனும் உருமாறி மூளையில் தீப்பிடித்தது. உடல் கொதித்தது. கண்களை மூடி சிறிது நேரம் அனுபவித்துக் கிடந்தேன். தூக்கம் பிடிக்கவில்லை. வீட்டிற்கு போன் செய்து இரண்டொரு வார்த்தைகள் பேசினேன். ஜெயராஜ் அண்ணனிடமும் பேசினேன். மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய வழியைச் சொல்லி விளக்கினார். அவர் சொல்லியபடி சென்றால் வேறு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டேன். அண்ணனிடம் பேசி முடிக்கவும் மின்சாரம் போய்விட்டது. உள்ளே வெக்கை தாங்க முடியாமல் சலித்து வாசலுக்கு வந்தேன். கங்காதர் வீட்டின் உள்ளே விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் கதவைத் திறந்து வெளிய வந்த கங்காதர்,
“அடடா, போச்சா. வழக்கமா போறதுதான்; அந்த வீட்டுக் கனெக்ஷன்ல ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருக்கு. இப்போ வந்துரும்” என்று சொல்லி ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.
வீட்டு வாசலில் இருந்த திண்டில் பாய் விரித்து தலையணைப் போட்டு படுக்க ஆயத்தமானேன்.
“ஒடிசா தான் சார் சொந்த ஊரு. வந்து பத்து பன்னெண்டு வருஷம் ஆச்சு. கிடைக்கிற வேலைக்கு போயிட்டு இருந்தேன். ஒரு காண்டிராக்டர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அந்தாளு மாநகராட்சி இடங்கள்ல பார்க் கட்டுற காண்டிராக்ட் எடுத்திருந்தான். போன வருசம் இந்த லாக்-டவுனுக்குலாம் முன்னாடி ரெண்டு மூணு பார்க்ல உள்ள ஊஞ்சல், சீசா எல்லாம் உடைஞ்சு அங்கிருந்த சின்ன குழந்தைங்க மேல விழுந்து கேஸ் ஆகிப்போச்சு. அவன்ட்ட இருந்து வந்து ஒரு ஹோட்டல்ல நின்னேன். சம்பளம் குறைவு தான். ரெண்டு வேளை சாப்பாடு முடியும். இந்த லாக்டவுன்ல அதுவும் போச்சு. ஹோட்டல் லாஸ் ஆகி டீக்கடை வச்சாரு ஓனரு. அதுலயும் இந்த ஸ்மார்ட் சிட்டி ஆக்குறோம்-னு சொல்லிட்டு பஸ்ஸடாண்ட்க்கு உள்ள இருந்த கடை எல்லாத்தையும் இடிச்சுப்போட்டு, வெளியே இடம் கொடுத்தானுக. கடை முதலாளி, ரெண்டு பேரு மட்டும் வேலைக்கு போதும்னு மத்தவங்க எல்லாரயும் போகச் சொல்லிட்டாரு. என்னைய தனியா கூப்ட்டு, உன்னைய வேலைக்கு வச்சுக்குறன்னாரு; அதுக்கு பதிலா, என் பொண்டாட்டிய கூட்டிக் குடுக்கச் சொன்னான் சார் அந்த பாடு. பெரிய அடிதடி ஆகி அவன் மண்டைய உடைச்சுட்டு வந்துட்டேன். இப்போ, கைவசம் வேலை ஒண்ணும் இல்ல. ஆனா எப்படியும் கிடச்சிடும். தேடிட்டிருக்கேன்” – அவன் பாதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்கு அவன் நிலைமைப் புரிந்துவிட்டது. இருந்தாலும் எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அப்படியே உறங்கிப்போனேன்.
சிறிது நேரம் கழித்து யாரோ செருப்பணிந்து நடக்கும் சத்தம். முழிப்பு தட்டியது. அவன் தான் எங்கோ கிளம்புகிறான். ஒருமுறை தலையை உயர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன். இடைவெளியில் தெரிந்த சிறு விளக்கின் வெளிச்சக்கீற்று, வீட்டுக்கதவு முழுதாய் மூடப்படாததை உணர்த்தியது. ஒற்றைக் கதவு – முந்தானை – பருத்த மாதுளை – பளீர் – கோதுமை – புல்லாக்கு, தூக்கத்தைத் தொடரும் வண்ணம் கண்களை இறுக மூடினேன். எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
காலையில், கங்காதர் வீட்டு வாசலில் அமர்ந்து பீடி இழுத்துக்கொண்டிருந்தான். மின்சாரம் வந்திருந்தது.
“என்ன சார், நைட்டு நல்ல தூக்கமா?”
“ஆமாங்க. எப்படியோ தூங்கிட்டேன். நல்ல அசதி. இன்னிக்கு ஆபீஸ் போகணும். கெளம்புறேன்; பார்ப்போம்”. அவசர அவசரமாக தயாரானேன். நான் கிளம்பும் வரை வாசலிலேயே அமர்ந்திருந்தான். அவன் அப்படி அமர்ந்திருந்தது எனக்கே லஜ்ஜையாகத்தான் இருந்தது. மூன்று வீட்டிற்கும் சேர்த்துக் குளியலறைகளுடன் சேர்ந்த இரண்டு கழிவறைகள், காம்பவுண்டிற்கு உள்ளாகவே வீட்டின் எதிர்ப்புறம் கட்டப்பட்டிருந்தன. வீட்டு வாசலில் இருந்து இறங்கி பத்தடி தூரம் நடந்துதான் குளியலறைக்கு செல்ல வேண்டும். கங்காதர் வீட்டிலிருந்து யாரேனும் குளியலறை கழிவறைச் செல்வதாக இருந்தாலும் நான் இருந்த வீட்டைக் கடந்துதான் போக வேண்டும், வர வேண்டும். அவசர அவசரமாக குளித்துக் கிளம்பினேன். இந்தக் களேபரத்திலும் இரண்டொருமுறை பிந்துவைப் பார்க்கத் தவறவில்லை.
வெளியே டிபன் முடித்துவிட்டு, ஜெயராஜ் அண்ணன் சொல்படி பஸ் பிடித்து ஆபீஸ் வந்து சேர்ந்தேன். ஆபீஸ் அந்நேரத்திலேயே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அழைப்புக்கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த நபரைச் சந்திப்பதற்காக காத்திருந்தேன். முகத்தில் இரட்டை மாஸ்க்குடன் அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியே வந்தவர், என்னிடம் இருந்துக் கடிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு,
“குட். இன்னைக்கு ஆபீஸ் லொகேஷன் மாத்துறோம். சோ, நாளையில இருந்து வந்து ஜாயின் பண்ணிக்கோங்க. ரிசப்ஷன்ல அட்ரஸ் வாங்கிக்கோங்க. நாளைக்கு நேரா அங்க புது ஆபீஸுக்கே வந்துருங்க. ஓகே?”
“ஓகே சார்”
“எங்க ஸ்டே பண்ணிருக்கீங்க?”
“இங்க பக்கத்துல தான் சார். ஃப்ரெண்ட் ரூம்ல.”
“ஓகே. தங்குறதுக்கு ப்ளேஸ் கம்பெனியில இருந்து கொடுத்துருவோம். சில டைம் வொர்க் எக்ஸ்டெண்ட் ஆகுற மாதிரி இருக்கும், அப்போ கஷ்டமா இருக்கும்னு இந்த ஏற்பாடு. சோ, அங்க இருந்து வெக்கேட் பண்ணிட்டு வந்துருங்க. இன்னைக்கே கூட வெக்கேட் பண்ணிட்டு வந்துடலாம் நீங்க. மற்ற விஷயங்கள நாளைக்கு பேசிக்கலாம். சீ யூ டும்மாரோ. டேக் கேர்.” வந்த வேகத்தில் கிளம்பிவிட்டார். அவரது பதற்றம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இக்கட்டான சூழலில் தான் வேலைக்கு சேர்கிறோம் என்பதும் புரிந்தது.
வரும் வழியிலேயே மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு வீடு சேர்ந்தேன். பக்கத்து வீட்டில் யாருமில்லை. பூட்டுத் தொங்கியது. பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தேன்.
வேகவேகமாக காம்பவுண்டுக்குள் நுழைந்தான் கங்காதர்.
“சார் ஒரு ஐநூறு ரூபாய் இருந்தா கொடு சார். ரொம்ப அர்ஜெண்ட்”
“ஐநூறு ரூபாயா? அவ்ளோலாம் என்கிட்ட இல்லைங்க” ஏற்கனவே கொடுத்த இருநூறு ரூபாயையே எப்படி வாங்குறதுனு தெரியல என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
“சார் சார் பிந்துவோட அம்மாவுக்கு உடம்பு முடில சார். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்” என்று கெஞ்சத் தொடங்கினான். பிந்து என்று சொன்னவுடன் மனம் அப்படியே இரங்கிவிட்டது. கொஞ்சம் கலவரமானேன். இருந்தாலும் ஐநூறு ரூபாய் கொடுக்க மனம் ஒப்பவில்லை. என்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என்று முந்நூறு ரூபாய் மட்டும் கொடுத்தனுப்பினேன்.
வீட்டிற்குள் சென்று உடைகளைக் களைந்துவிட்டு, ஃபேனை ஓடவிட்டேன். சுற்றலாமா வேண்டாமா என்று தயங்கியபடி சுழலத்தொடங்கிய சீலிங் ஃபேன், வெயிலின் வெப்பத்தால் எடையிழந்து மேலெழும்பியக் காற்றை வம்படியாக பிடித்திழுத்து அறையின் எல்லாப்பக்கமும் பரப்பிக்கொண்டிருந்தது. அவ்வளவு வெக்கையிலும் தூக்கம் ஆளை அசத்தியது. உறங்க முயற்சித்து கண்களை மூடினேன். காலை விழிப்பு – பிந்து – ஆபீஸ் – இடமாற்றம் – ஐநூறு ரூபாய் என்று அலைபாய்ந்த நினைவு, பருத்த மாதுளை – முந்தானை – மார்பு கதுப்பு – கல்சிற்பம் என்று நின்றபோது அரைமயக்கத்தில் இருந்தேன்.
சிறிது நேரத்தில் பிடறியில் தொடங்கி கழுத்து, முதுகு என்று பரவிய வியர்வைப் பிசுபிசுப்பு சுள்ளென்று குத்தியது. கடுப்புடன் கண் விழித்துப் பார்த்தபோது அறையில் ஃபேன் ஓடாமல் நின்றிருந்தது தெரிந்தது. மின்சாரம் இல்லை. புலம்பியபடியே வெளியில் வந்துப் பார்த்தேன். கங்காதர் வீட்டுக்கதவு திறந்திருந்தது. வெளியே அவனது செருப்பும் கிடந்தது. சாத்தியிருந்த கதவை மெதுவாக திறந்து விலக்கினேன். ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு காலை நீட்டியும் மறுகாலை மடக்கியும் வைத்து, வலது கையை முகத்தின் மீது இருத்திப் படுத்திருந்தாள் பிந்து. ஒற்றையில் கிடந்த அவளது முந்தானையை மீறி சுவாச லயத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவளது தனங்களைப் பார்த்தபோது வறண்ட உலர் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டேன். இன்னும் கொஞ்சம் திறப்பதற்காக கதவில் கை வைக்கவும், கழிவறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வாயில் பீடியுடன் கங்காதர் வெளியே வந்தான்.
“என்ன சார்?”
“வீட்ல கரெண்ட் போயிடுச்சு. அதான் உங்க வீட்ல கேட்டுப்பாக்கலாம்னு”
“பாத்தீங்களா?”
“ஹான்.. என்ன?” பதறினேன்.
“கரெண்ட் இருக்கானு பாத்தீங்களா சார்?”
“இல்ல கதவு மூடி இருந்துச்சு. அதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
அதற்குள் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “நம்ம வீட்ல கரெண்ட் இருக்கே சார். பிந்து கூட உள்ள தூங்கிட்டு தான் இருக்கா.” என்று கதவை இன்னும் கொஞ்சம் திறந்தான். கதவை அப்படியே விட்டுவிட்டு, “இப்போ வந்துரும் சார்.” என்று சொல்லி வெளியே கிளம்பினான். நான் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.
“என்ன சார் தூங்கலயா?”
“இல்ல.. தூக்கம் கலைஞ்சிடுச்சு.”
“அப்போ வாங்க ஒரு டீ சாப்ட்டு வர்லாம்”.
கொடுத்த பணத்தை மறைமுகமாக கேட்கும்பொருட்டு நாளை முதல் வேலைக்கு செல்லவிருக்கும் செய்தியையும் இன்று இரவே வீட்டைக் காலி செய்யப் போகும் விஷயத்தையும் அவனுக்குத் தெரியப்படுத்தினேன். அவன் அதில் பெரிதாய் அக்கறைக்காட்டி கொள்ளவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை. இங்கிருந்து போய்விட்டாலும் மீண்டும் வந்தாவது கொடுத்த பணத்தை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். டீ குடித்துவிட்டு அவன் அப்படியே சென்றுவிட, பல்வேறு யோசனைகளோடு நான் வீட்டிற்குத் திரும்பினேன். பிந்து வீட்டுக்கதவு லேசாக திறந்திருந்தது.
நேரே கழிவறைக்கு சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுக்கும்போதே வெளியே காலடி ஓசைக் கேட்டது. வருவது பிந்து தான் என்பதை உணர்ந்தவுடன் வேகவேகமாக சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினேன். பக்கத்துக் குளியலறை கதவைத் திறந்து அடைக்கும் சத்தம் கேட்டது. கழிவறைக்கும் குளியலறைக்கும் இடையில் இருந்த சுவற்றின் மேல் இடைவெளியில் புடவை, ஜாக்கெட், உள்பாவாடை என்ற வரிசையில் மாற்றுத்துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டாள். வாளியில் தண்ணீர் திறந்துவிடுகிறாள். இடையில் இருக்கும் சுவரை கண்ணாடியாக்கி அவளது ஒவ்வொரு செயலையும் மனதிற்குள் நிகழ்த்திப்பார்த்துக் கொண்டேன். தண்ணீரை நிறுத்திவிட்டு துணிகளை அதில் நனைத்து துவைக்கும் சத்தம். அலசிய துணிகளைச் சுவற்றின் மேலே மாற்றுத்துணிகளுக்கு சற்றுத் தள்ளி அடுக்கினாள். அதிலிருந்து நீர்நூல்கள் நான் இருந்த கழிவறைக்குள் ஒழுகின. சொட்டிய ஒவ்வொரு துளியிலும் மாதுளையின் நறுமணம் கலந்த ருசி. கண்களை மூடி மாதுளை மணத்தில் லயித்திருக்கையில் அருகில் சிறுநீர் கழிக்கும் சத்தம். குளியலறைகளில் இருந்து வெளியேறும் நீர் அனைத்தும் நான் இருந்த கழிவறையின் உள் ஓரத்தில், சுவரை ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருந்த மடை வழியாக ஓடி வெளியேறும் வண்ணம் கட்டப்பட்டிருந்தது. தண்ணீருடன் கலந்துச் செல்லும் அவளது சிறுநீர் மஞ்சளைப் பார்த்ததும் உடலின் உஷ்ணம் பன்மடங்காகியது. அவள் சோப்பு தேய்க்க தேய்க்க அந்தப் பகுதி முழுவதும் மாதுளையின் மணம் மூண்டெழுந்து என்னுள்ளே ரசாயன மாற்றத்திற்கு வித்திட, உடல் சூட்டைத் தணித்து வெளியே வந்தேன்.
பிந்து இன்னும் வந்திருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை புகைத்தால் நன்றாக இருக்கமென்று தோன்றியது. கைவசம் சிகரெட் இல்லை. வாசல் திண்டில் கிடந்த பீடிக்கட்டில் இருந்து ஒரு பீடியை உருவி உதட்டில் பொருத்தினேன். சிகரெட் பிடித்துப் பழக்கப்பட்ட உதடுகள் பீடியின் இளைத்த உருவத்திற்குத் தடுமாறினாலும், சீக்கிரத்தில் பழகிவிட்டன. நான்கைந்து இழுப்புகள் முடிந்திருக்கும் தருவாயில் பாத்ரூம் கதவைத் திறந்துக்கொண்டு பிந்து வெளியே வர, பீடியை வீசியெறிந்தேன். ஜாக்கெட் அணிந்து உள்பாவாடையை மேலே ஏற்றிக் கட்டிக்கொண்டு, மாற்றுச் சேலையை தோளில் போர்த்தியவாறு விறுவிறுவென்று என்னைக் கடந்துப் போனாள். முஜம்மிர் கைகளில் இருக்கும் தட்டிலிருந்து கிளம்பும் சாம்பிராணி வாசனைப் போல அவ்விடம் முழுதும் மாதுளை வாடை கவிந்து நின்றது. வீட்டினுள் வந்து ஒரு பாட்டில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. உடல் அனலேறிய இரும்பாய் தகித்தது. மின்சாரம் இன்னும் வந்திருக்கவில்லை.
வீட்டை விட்டு இறங்கினேன். கங்காதர் வீட்டின் ஒருப்பக்க வாசற்கதவு முழுவதுமாக அடைத்திருந்தது. மறுப்பக்க கதவை லேசாக விலக்கினேன். சீலிங் ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு முதுகைக் காட்டியவாறு சுவர் பக்கம் திரும்பி நின்று உடை மாற்றிக்கொண்டிருந்தாள் பிந்து. நான் வந்திருப்பதை அறிய வாய்ப்பில்லை. மார்பில் ஏற்றிக்கட்டியிருந்த உள்பாவாடையை இறக்கி இடுப்பில் கட்டியிருந்தாள். ஜாக்கெட்டிற்கும் பாவாடைக்கும் இடையில் நீர்த்திவலைகள் கோர்த்து நின்ற முதுகுப்பகுதி, மெஷினை வைத்து துண்டுப்போடப்பட்ட அடிமரத்தின் மேல்புறம் போல பளபளத்தது. புடவை இல்லாமல் வெறும் பாவாடையில், ஆற்றினுள் காலங்காலமாய் கிடந்து தன் கூர் முனைகளைத் துறந்து உருண்டு திரண்டு கைகளுக்கு வாகாக இருக்கும், அளவில் சற்று பெரிதான கூழாங்கல்லைப் போல் துருத்தி நின்ற பின்புறத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். சுயம் இழந்த நேரத்தில் என் கைகள் கவனக்குறைவாய் கதவைத் தொட்டுத் தள்ளிவிட, பிந்து விருட்டென்று திரும்பினாள். நான் பதறிப்போய் விலகினேன்.
“இல்ல.. ஒண்ணுமில்ல. அங்க இல்ல, இங்க கரெண்ட்.?”. நாக்குழறியது.
சேலையை மேலே போர்த்தியவாறு நின்றிருந்தாள். ஜாக்கெட்டின் கடைசி கொக்கி மாட்டப்படாமல் இருந்தது. சிறிய இடைவெளியில் தெரிந்த மார்புகதுப்பின் சதைத்திரட்சி என்னில் கொதிக்கலன்களை உசுப்பியது. ஏதோ கேட்பது போல் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தேன். திறந்திருந்த ஒற்றைக் கதவினை தாழிடுவதற்காக கைகள் கதவின் மேலே ஊர்ந்தன.
சிறு கங்கொன்று காற்றைக் குடித்து பற்றிக்கொண்டதில் அழலாய் எரிந்த உடல்களிலிருந்து மூண்டெழுந்த உஷ்ணக்காற்றின் வெம்மையைக் குறைத்துவிடாமல் மீண்டும் மீண்டும் மேலும் கீழும் சுழற்றிவிட்டுக் கொண்டிருந்தது அந்த சீலிங் ஃபேன்.
கதவைத் திறந்து வெளியே வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. மின்சாரம் இன்னும் வந்திருக்கவில்லை. போன் வெளிச்சத்தில் அவசர அவசரமாகத் துணிகளைப் பேக்கில் திணித்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்படத் தயாரானேன். கங்காதர் வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும் என்று மனம் கிடந்து அடித்துக்கொண்டது. அவனது முகத்தை நேருக்கு நேர் சந்தித்துப் பேசும் தைரியம் இல்லை. கொடுத்த கடனை வாங்குவதற்கு கூட மீண்டும் இந்தப்பக்கம் வந்துவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். அவனிடம் வசூலிப்பதற்கு கடன் பாக்கி எதுவும் நிலுவையில் இல்லை என்றே தோன்றியது.
காம்பவுண்டை விட்டு நான் வெளியே வரவும் கங்காதர் வீட்டுக்கு பக்கத்தில் வந்துவிட்டான். வெளியே சென்றால் நிச்சயமாக அவனைப் பார்க்க நேரிடும் என்பதால் அவன் தன் வீட்டிற்குள் செல்லும்வரை காம்பவுண்ட் கதவுக்கும் கங்காதர் வீட்டுக்கும் இடையில் இருந்த ஒரு குறுகிய சந்தில் மறைந்து நின்றேன்.
வீட்டினுள் நுழைந்த கங்காதர்,
“போயிட்டானா அவன்?”, கேட்டுக்கொண்டே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஃப்யூஸ் கேரியரை அதற்குரிய இடத்தில் மாட்டினான். மின்சாரம் வந்தது. நான் நின்ற இடத்தைச் சூழ்ந்திருந்த ‘கும்’மிருட்டு மட்டும் விலகவில்லை.