ஊரெல்லாம் ஒரே கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள். அந்த ஊரில் தேரோட்டம். அம்மன் தவமிருந்து சிவபெருமானை மணம்புரியும் நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடக்கும். இப்போதும் அப்படித்தான். சிவகாமியும் ராஜசேகரனும் தவசுக் காட்சிகளைக்காண வருடாவருடம் வந்துவிடுவார்கள். அவன் வேலைகாக சென்னைக்குப் போய் பலவருடங்கள் ஆகிவிட்டாலும் இந்தச் சமயத்தில் எப்படியும் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். ராஜசேகருக்கு அது ஒரு பழக்கமாகி விட்டிருந்தது. அவனுடைய அலுவலகத்திலும் பலருக்குத் தெரியும். அவன் ஒரு பெரிய ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியின் ரீஜனல் மேனேஜர் ஆக இருந்தான். சிவகாமி ஒரு அரசு வங்கியில் வேலை பார்த்துவந்தாள். காலையில் வீட்டில் வந்திரங்கிய போது, வெய்யில் அடிக்கத் தொடங்கிவிட்டது. வெக்கை அதிகமாக இருந்தது.  இது இந்த சீசனில் இருப்பதுதான். சிவகாமிக்கு மாமியார் வீட்டில் இருப்பது பிடிக்காது. இருந்தாலும் ஒரு நாள் இருந்துவிட்டு, அடுத்தநாள் தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போய்விடுவாள். எப்போது திரும்பி வருவாள் என்பது அவளுடைய மனநிலையைப் பொறுத்தது. 

ராஜசேகரன் குளித்துவிட்டு வந்தான். அம்மா சமையலறையில் இட்லி அவித்துக் கொண்டிருந்தாள். எழுபத்தி இரண்டு வயதிலும் தனியாக இருந்துவந்தாள்.  அவளைத் தன்னுடன் தங்க வைக்க வில்லையே என்ற நினைப்பு அவனைத் தொந்தரவு படுத்தியது. அதுவும் வழக்கம் போல ஊருக்கு வரும்போதெல்லாம் தோன்றும். சென்னைக்குப் போனது மறந்துவிடும். எப்போவாவது ஞாபகம் வரும். அம்மாவைச் சென்னையில் வந்து கொஞ்ச நாள் இருக்கும்படி அவ்வப்போது சொல்வான். ஆனால் அவனுக்குள் ஒரு பயமும் இருக்கும். ஒரெயடியாகத் தங்கிவிட்டாள் என்றால், பெரிய பிரச்சனைதான். சிவகாமிக்கும் அம்மாவுக்கும் ஒத்துவராது. பெரும்பாலும் ஏதாவதொரு சின்ன விஷயத்தில் பேச்சு முத்திப்போய் சண்டை வந்துவிடும். அவனுக்கு என்ன செய்வதென்று புரியாது. பிள்ளைகளும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். ’பாட்டி வந்தாலே அம்மாவுடன் சண்டை போடுகிறாள்’ என்று அவர்கள் கணிப்பு. அம்மா வந்தால் பேரப் பிள்ளைகளையும் ஏதாவது நோண்டிக் கொண்டே இருப்பாள். அவர்களும் ஏதாவது ஏறுக்குமாறாகப் பதில் சொல்லிவிட்டால், ‘பிள்ளைகளை எப்படி வளத்து வச்சிருக்கே’ என்று அவனை வசவு உரிப்பாள். ஆனால் வயசான காலத்தில் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் வராமல் இருக்காது. 

சிவகாமி குளித்துவிட்டு வந்தாள். அடுக்களையிலிருந்து தனக்கும் கணவனுக்கும் தட்டில் இட்லிகளை எடுத்துவந்தாள். நடுவில் மாமியாரிடம் ‘வேலைகாரி வந்துக்கிட்டுருக்காளாம்மா?’ என்று நடுக்கூடத்தில் இருந்தபடியே கேட்டாள். ‘பாத்திரம் நான் கழுவ வேண்டுமா?’ என்று அந்தக் கேள்விக்குப் பொருள்’ என்று அவனுக்குப் புரிந்தது. 

அம்மாவும் தட்டில் இட்லியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சாப்பிட மேஜையில் ஒரு புறம் உட்கார்ந்தாள். ‘பிள்ளைகளை ஏண்டா கூப்பிட்டுக்கிட்டு வரலை?’ என்று எப்போது கேட்கும் கேள்வியைக் கேட்டாள். பதில் அவளுக்கும் தெரியும். அவர்களை மதுரையில் சிவகாமியின் அண்ணன் வீட்டில் விட்டு வந்திருந்தனர். பிள்ளைகள் ’மதுரையில் இருப்போம். அங்க தான் பொழுது போகும். சின்ன ஊர்ல போரடிக்கும்ப்பா. நீங்க பாட்டுக்குக் கோயிலுக்குப் போயிருவீங்க. நாங்க இங்க இருந்தாலாவது ஏதாவது பாலு, தேவிகா கூட விளையாடிட்டு இருப்போம்’ என்று சொல்லிவிட்டார்கள். ‘ஒரு நாளாவது பாட்டியப் பாக்க வாங்கடா’ என்று அவன் சொன்னான். அதற்குள் சிவகாமியின் அண்ணன் ‘ஊருக்குக் கிளம்பிறதுக்கு முந்தினநாள், நான் எல்லோரையும் கூப்பிட்டுட்டு வர்றேன். நானும் பாத்த மாதிரியிருக்கும்ல.’ என்று சொல்லிவிட்டான். கொஞ்ச நேரத்தில் சிவகாமியும் ராஜசேகரனும் கோயிலுக்குக் கிளம்பிவிட்டனர். அம்மா தனியாக உட்கார்ந்திருந்தாள்.

மாலையில் சிவகாமி அவளுடைய தோழியைப் பார்க்கச் சென்றுவிட்டாள். ராஜசேகரன், அவனுடைய நண்பனைப் பார்க்கப் போய்விட்டாள்.  பொன்னம்மா தனியே அமர்ந்திருந்தாள். 

’இப்படியே பழகிவிட்டது. பையனுடன் போய் இருக்கலாம். ஆனால் அடிக்கடி சண்டை வந்துவிடும். பிள்ளைகளும் சொன்னபடி கேட்காது. சென்னைக்குப் போனாலும் பேச்சுத் தொணைக்கு ஆளு கிடையாது. இவங்க பாட்டுக்கு, ஆபீசுக்குப் போயிருவாங்க. நாம தனியா வங்கு வச்ச குரங்கு மாதிரி உட்கார்ந்திருக்கணும். இங்க இருந்தாலாவது நாலு ஆட்கள் வருவார்கள். பேசிக்கிட்டிருக்கலாம். பொழுது போறதே தெரியாது. நமக்கு ஏத்த பேச்சுப் பேசுறவங்க இங்க அதிகம். இங்க எனக்கென்ன குறைச்சல்’ என்று தனக்குள் பொன்னம்மாள் நினைத்துக் கொண்டாள். ஆனாலும் மகனுடன் இருந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். ‘கொஞ்சமாவது வேலை செஞ்சிக்கிட்டு இருந்தால் தான் உடம்பு நல்லா இருக்கும்’ என்றும் தோன்றியது. 

கொஞ்ச நேரத்தில் அம்மாவும் வெளியே கிளம்பினாள். ‘சக்தி பிரார்த்தனைக் குழு’வில் அவள் இருந்தாள். வாரத்தில் இரண்டு நாட்கள் அந்தக் குழு கூடி பக்திப் பாடல்கள், கந்தர் சஷ்டி கவசம், சிவ புராணம் என்று சேர்ந்து பாடிக் கொண்டிருப்பார்கள்.  அப்படியே அவர்களுக்கும் பொழுது போய்க்கொண்டிருந்தது. 

ராஜசேகரன் மாலையில் வந்த போது அம்மாவும் இல்லை, சிவகாமியும் இல்லை. அவரவர் தோழிகளுடன் பேசப் போயிருந்தார்கள். மீண்டும் தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் இடத்துக்குப் போய்விடலாமா? என்று யோசித்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்துவிடும். பிறகு திரும்பி வரவேண்டும். ஆனாலும் நேரம் ஆக ஆகப் பொறுமையற்றுக் கொண்டிருந்தது. 

ஒருவழியாக, பொன்னம்மாவும், சிவகாமியும் வரும்போது இரவு மணி ஒன்பதாகிவிட்டது.  இருவரும் நண்பர்கள், தோழிகள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். ராஜசேகரனும் சாப்பிட வெளியே போக வேண்டியதாகிவிட்டது.

மீண்டும் ராஜசேகரன் வந்த போது, வீடு பூட்டியே இருந்தது. பக்கத்துவீட்டில் அவன் கொடுத்த சாவியை வாங்கித் திறந்தான். வீடு காலியாக இருந்தது. இவ்வளவு பெரிய வீடு காலியாக இருப்பதை அவன் இப்போதுதான் பார்த்தான்.  முன்னாலிருந்த அப்பாவின் அலுவலக அறை, வரவேற்பறை, உள்ளே இரண்டு புறமும் இருந்த இரண்டு படுக்கையறைகள். பெரிய சமையலறை. எல்லாம் அமைதியாகிவிட்டிருந்தன. எங்கும் எந்தச் சத்தமும் இல்லை.  அப்பாவும், அம்மாவும் மூன்று பிள்ளைகளூம், அவர்களுடைய குழந்தைகளும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளும் இருந்து உணவுண்டு, விளையாடி, சண்டையிட்டு, ஒரே கூப்பாடாக இருந்தது. எல்லோரும் வெவ்வேறு இடங்களுக்குப் போய்விட்டார்கள். திரும்பி வர முடியாத வகையில் போய்விட்டார்கள் என்று தோன்றியது. 

பெங்களூரிலிருந்த அக்கா, கனடாவில் குடியேறிவிட்ட அண்ணன், இவர்களெல்லாம் என்றைக்கு ஒன்றாகப் பார்ப்பது? அப்படிப் பார்த்தாலும் ஒருநாள் இரண்டு நாள். அதுவும் சந்தேகம் தான். 

அவனுடன் வந்த சிவகாமி கூட இன்னும் வந்து சேரவில்லை. அம்மாவிடம் கூட மனசாரப் பேச முடியவில்லை. அவளும் தினமும் சந்திக்கும் தோழிகளிடம் போய்விட்டாள். அவனிடம்  பேச எதுவும் இல்லையோ?

சிவகாமியும் அம்மாவும் வரட்டும் என்று காத்திருந்தான். முன்னறையில் இருந்த விளக்குகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற விளக்குகளை ஆஃப் செய்தான். அந்த அறைகளிலிருந்த இருள் அவனைத் துரத்தி வந்தது. 

நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். வீடென்பது எது என்று புரிவது போலிருந்தது. 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *