மேகத்திரை இல்லாத இரவு வானத்தின் தொலைதூரத்து விண்மீன்கள் தங்கத்துகள்களைப் போல மின்னுகின்றன. அவற்றுள் சில மிக மங்கலானவை. அந்த இரவில் நிலவையும் சூழ்ந்துள்ள விண்மீன்களையும் கண்டு நாம் அடையும் இன்பம், வானியலாளர்களின் இன்பமல்ல. அவர்களைவிட ஆபரணங்களைப்போல மின்னும் விண்மீன்களைப் பார்த்து ஒரு கவிஞன் கொள்ளும் உள்ளத்தின் எழுச்சி மேலும் இயல்பானது. உண்மையில் நிலவையும் விண்மீன்களையும் வைத்து நாம் செய்யக்கூடுவதாக எதுவும் இல்லை – இருப்பினும் அவை நம் உள்ளங்களில் உற்சாகத்தை நிரப்புகின்றன.
காலையில் பள்ளியறை விட்டு பாதம் எடுத்துவைத்து தோட்டத்தில் நிற்கையில் புத்தம் மலர்களைப் பார்த்து உள்ளம் பொங்குகிறது. ஒவ்வொரு மலரையும் அருகில்போய் உற்றுப்பார்க்க ஆசை எழுகிறது. மென்மையும் அழகும் நிரம்பிய சிறிய மலரின் இதழொன்றை அப்பொழுது நாம் தொட்டுப்பார்க்கவும் கூடும். நம் வீட்டின் குழந்தைகள் பொக்கைச் சிரிப்புடன் நம்மை நோக்கித் தவழ்கையில் நம் நெஞ்சத்தில் மகிழ்ச்சி நிரம்புகிறது. உடனே தன்னிச்சையாக அவர்களை அள்ளி எடுத்து முத்துகிறோம். கோயில் மணிகள் சிலம்பும் ஒலியோ அருகிலிருக்கும் தேவாலயத்து மணியின் ரீங்காரமோ அந்த நேரத்தை தெய்வீகமாக்குகின்றன. அதிகாலையிலோ அந்தியிலோ அமைதிக்கு நடுவே நாம் கேட்கநேரும் அந்த மணிகளின் இதமான ஒலியில் புனிதம் நிறைந்துள்ளதாக நாம் கருதுகிறோம். நம்மை மகிழ்வுறுத்தும் இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் உணர்த்தும் குறியீடாகவே விண்மீன்களும் நிலவும் உள்ள இரவு வானம் உள்ளது. ஒரு வானியலாளர் நம் பார்வையில்படாத அளவுக்குச் சிறிய விண்மீன் ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் ஒளி அவ்வளவு தொலைவிலிருந்து நம்மிடம் வருவதற்கு இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்கள் ஆகும் என்று சொன்னதற்காக நாம் அடையும் குதூகலத்தைவிட அந்த விண்மீன் மின்னுகிறது என்பதனால் மட்டும் நாம் அடையும் குதூகலம் இன்னும் அதிகம்.
[பிருகதாரண்யக உபநிடதத்தின் 3.7.11ம் பாடலின் தாக்கத்திலிருந்து இச்சிந்தனை துவங்குகிறது. அப்பாடல்:
அது –
நிலவிலும் விண்மீன்களிலும் வசிக்கிறது;
நிலவுக்குள்ளும் விண்மீன்களுக்குள்ளும் உறைகிறது;
நிலவாலும் விண்மீன்களாலும் அறியப்படாதது;
நிலவும் விண்மீன்களும் அதன் உடல்;
அதுவே நிலவையும் விண்மீன்களையும் உள்ளிருந்து ஆள்கிறது.
அதுவே உனது ஆத்மன்!
அழிவற்ற உன் ஆத்மனே
உன்னையும் உள்ளிருந்து இயக்குகிறான்.]
இந்த மந்திரத்தில், நமது உலகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ள மகிழ்ச்சியும் ஆர்வமும் ஊட்டக்கூடிய எண்ணற்ற துளிகளின் மீது நமது கவனம் செல்கிறது. காலைநடைக்கு நாம் செல்கையில் ஒவ்வொரு புல்லிதழின் மீதும் துளித்து நிற்கும் பனித்துளிகளைக் காண்போம். அத்துளிகளின் மீதுபடும் கதிரவனின் முதல் ஒளியில் அவை விலைமதிப்பற்ற முத்துக்களாக மாறுகின்றன. மகாகவி ரவீந்திரநாத தாகூர் ஒருமுறை சொன்னதைப்போல, கடவுள் கதிரவனையும் நிலவையும் விண்மீன்களையும் படைத்ததற்காக நம்மிடம் நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், நமது தோட்டத்தில் அவரால் கவனத்துடன் இடப்பட்ட புன்னகைக்கும் சிறிய ஊதா நிற மலர்களை நிச்சயம் நாம் ரசிக்க வேண்டும் என நினைக்கிறார். உபநிடதக் காலத்திய ரிஷிகள் நம்முடைய வாழ்வை பொருளுள்ளதாக்கும், கடந்து செல்லும் காலத்தை உண்மையிலேயே வாழ்ந்த காலமாக நம் நினைவில் நிலை நிறுத்தும் இத்தகைய சிறு சிறு நிகழ்வுகளை நாம் தவறவிடக்கூடாது என்று சொன்னது நெஞ்சுக்கு இனியதாகிறது. ஆமாம். இந்த உலகை சுவையால், மணத்தால், காட்சியால், தொடுகையால், கேள்வியால் அலங்கரித்துள்ள எண்ணற்ற உற்சாகமூட்டும் அழகிய பொருட்களைக் காண நம்மில் நிறைய பேருக்கு நேரமில்லை தான்.
“அன்றைய நாளுக்கான உணவினைத் தருக” என பிரார்த்தனையின்போது இறைவனிடம் வேண்டுமாறு இயேசு கற்பித்தார். அப்பொழுதும்கூட, அன்றாட உணவையும் நீரையும் தரும் அதே கடவுள்தான் நம் தோட்டதிற்குள் அஞ்சாது வரும் பறவைகள் பாடும் – நம் மனத்திற்கினிய – பாடல்களையும் நமக்காகத் தருகிறார் என்பதை இயேசு மறப்பதில்லை. வயல்களில் வளரும் அழகிய அல்லிகளைக் கவனிக்கும் இயேசு, சிலநாட்களில் வாடியுதிரும் அவைகூட சாலமனின் அங்கியைவிட எவ்வளவு ராஜகம்பீரமாக அமைந்துள்ளது என்று வியக்கிறார். நமக்கு அன்றைய நாளுக்கான உணவை கடவுளே தருகிறார் என்பதை நினைவுறுத்துகிறார் இயேசு. அதேநேரத்தில் விதைக்காத, கொய்யாத, களஞ்சியங்களை நிரப்பாத வானத்துப் பறவைகளுக்கும் அன்றைய நாளுக்கு போதுமான உணவைத் தருவது கடவுளே என்பதை இயேசு மறப்பதில்லை.
இந்த உலகத்தில் போட்டியுணர்வை உருவாக்கி நிறைத்துள்ள நம்மால், அச்சமூட்டும் அவசரங்களுக்கு நடுவில் மரத்தைச் சுற்றியுள்ள கொடியின் ஒவ்வொரு இலையையும் கொடியில் மலர்ந்துள்ள அழகிய மலர்களையும் கவனிக்க முடிவதில்லை. ஆனால், சலிப்பும் போட்டியுணர்வும் நிறைந்த ஒளிகுன்றிய அன்றாடத்தின் அழகின்மையானது, உலகத்தின் அழகாலும் மென்மையினாலும் நெகிழ்வாலும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையாலுமே நிகர் செய்யப்படுகிறது. மிகவயதான மரங்களின் கிளைநுனிகளில்கூட புதிய முளைகள் எழுவது, வசந்தத்தில் வளம் கொள்ளாது இருக்குமளவிற்கு மரத்திற்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நமக்கு உணர்த்தவே.
இந்த மந்திரத்தின் சாரத்திற்குள் நுழைய நாம் முதலில் கடுமை நிறைந்த பணிகளை ஒதுக்கிவிட்டு, ஓய்வின் அமைதியில் அமர வேண்டும். பின்னரே நம்மால் எவற்றையெல்லாம் நம் முயற்சியின்மூலம் அடைய முடியும் என்பதும் எவையெல்லாம் நாம் கேட்காமலேயே தெய்வ கிருபையினால் நமக்கு அருளப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகும். நாம் தேடாமலேயே தினமும் கதிரொளி நமக்குக் கிடைக்கிறது. நாம் எதுவும் கொடுக்கமலேயே கோடைமழை நம் முற்றத்தில் பொழிகிறது. நம்மை மகிழ்விக்க தினந்தோறும் நம் தோட்டத்துச் செடியில் மலர் மொக்குகள் அரும்புகின்றன. பெருஞ்செல்வங்களான இவை தரும் மகிழ்வூட்டும் வாழ்வனுபவங்களை வைத்துத்தான் இம்மந்திரத்தில் குறியீட்டுப் பொருளில் அமைந்துள்ள நிலவும் விண்மீன்களும் எதைக் குறிக்கின்றன என்பதை அறிய முடியும். கடவுள் நமக்காகச் செய்வதை, நம் வாழ்க்கையை வைத்தே நம்மால் செய்ய முடியும். மனம் முழுவதும் துன்பத்தை நிரப்புவதற்குப் பதிலாக, இரவு வானத்தைப் போல நம்மால் நம் மனதை விரியவும் ஒளிரவும் செய்ய முடியும்.
வெகு காலத்திற்கு முன்பு, நம்மிடமிருந்து வெகு தொலைவில், ஓர் அழகிய இரவில், வின்சென்ட் வான்கா வானத்தில் நிலவை மட்டும் பார்க்கவில்லை. ஒளிவட்டத்துடன் விண்ணில் நடனமிடும் ஒவ்வொரு விண்மீனையும் பார்த்தான். அந்தக் காட்சியை சைப்ரஸ் மரம் ஒன்றுக்கு பின்புலமாக வைத்து அந்த ஓவியத்தை வரைந்தான். கூம்பு வடிவான சைப்ரஸ் மரம் தேவாலயமொன்றின் கோபுரம்போல விண்ணைநோக்கி சுழன்று ஏறுகிறது. இங்கிருந்து சுதந்திரமாகவும் விண்மீன்களுடன் தோழமையுடன் இருக்கவும் வாய்ப்புள்ள அங்கு செல்வதற்கான மனிதவேட்கையின் குறியீடே அந்த சைப்ரஸ் மரம். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு கலைரசிகனுக்கும் வியப்பும் உற்சாகமும் ஊட்டுவதாக அந்த ஓவியம் உள்ளது. வான்கா இறந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு அந்த ஓவியத்தால் கவரப்பட்ட கவிஞன் ஒருவன் வின்சென்ட் வான்காவிற்காக கவிதை ஒன்றை எழுதினான். இன்றும்கூட கற்பனாவாத பாடகர்கள் “விண்மீன்களின் விண்மீன்களின் இரவே” என்று பாடுவதை நாம் கேட்கலாம்.
இதை அனுபவிப்பதற்கு ஒருவர் வணிக அமைப்புகளிலிருந்தும் வணிகர் – தொழிலதிபர்களின் லாபநஷ்ட புலம்பல்களிலிருந்தும் வெளியேற வேண்டும். அணுகுண்டுகளையும் கொலைக்கருவிகள் நிறைந்த ஆயுதக்கிடங்குகளையும் உருவாக்குவதைவிட ஒளியின் திருவிழாவைக் கொண்டாடுவதையே நமக்குள் உறையும் கடவுள் விரும்புவார். ஒரு குழந்தைக்குக் கொடுக்கப்படும் சில வண்ணப்பலூன்களானது எல்லைப்புறத்திற்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள் கொண்ட கொலையாளிகளின் படையைவிட பயனுள்ளது. உபநிடதம் என்பதன் பொருளே அருகே அமர்தல். அன்புக்கும் அழகுக்கும் நட்புக்கும் இசைக்கும் அருகே சென்று நம்மை அமரச் சொல்வதே உபநிடதங்களின் செய்திகளுள் ஒன்றாகும். எனவே நம் எண்ணத்திலிருக்கும் அந்த மந்திரமே தன்னளவில் ஒரு தியானமாகும். வில்லியம் பிளேக், லெவிஸ் கரோல், வால்ட் டிஸ்னி போன்று மானுடம்மீது பெருங்காதல் கொண்டவர்களைப்போல வாழ்வின் ஒளிமிக்கத் தருணங்களைக் காண்பதன்மூலம் தொழிற்புரட்சியும் போர்வேட்கையும் மானுடத்திற்கு ஏற்படுத்தக்கூடிய கொடூரமான அழிவுகளிருந்து மானுடத்தைக் காப்பாற்றலாம். இந்த மகிழ்சியின் அல்லது அமைதியின் சிறுபங்கை, தேவனின் சன்னிதி முன் நிற்கையிலோ இசைக் கச்சேரியில் அமர்கையிலோ மேஜையைச் சுற்றி அமர்ந்து பணிகளின் இடையூறு இல்லாமல் தேநீரைப் பகிர்கையிலோ உணர முடியும். நமது ஆன்மீக வாழ்வில் இவற்றுக்கும் பங்குண்டு. கேனோபநிடதத்தில் கடவுளுக்கு அளிக்கப்பட்ட சிறந்த வரையரைகளுள் ஒன்று – வியப்பின் ஒலியான ‘ஹா!’.
இந்த மந்திரம் எவ்வளவு எளிமையாக ஒலித்தாலும், முழுமையின் அறிவியலான பிரம்ம வித்யைக்குப் புகழ் சேர்க்கிறது. ஏனெனில் இதயங்களின் நடுவே வசிக்கும் அழிவில்லாத கடவுளால் அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.