வாசகனாகப்  பெற்றவை

 

 என் வாழ்க்கையை தீர்மானித்ததில் எழுத்தாளர்ளின் சொற்களும் படைப்புகள் கொடுத்த நிகர்வாழ்வு அனுபவங்களும் மிகவும் முக்கியமானவை..

பத்தாம் வகுப்பில் வாசிக்கும் பழக்கம் ஆரம்பம். 96-ல் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த உடன் ஜவுளிக்கடையில் வேலைக்குப் போனேன். இரவு பத்துமணிக்கு கடை அடைத்து வீடு திரும்பினால் உறக்கம் வரும் வரை வாசிப்பேன். என் வாழ்வில் மிகுந்த உற்சாகம் நிரம்பிய நாட்கள். எந்தவித திட்டமிடல்களும் அற்ற வாசிப்பு. புளியங்குடி, முள்ளிக்குளம், வாசுதேவநல்லுார் என்று மூன்று நுாலகங்களில் உறுப்பினர் அட்டைகள் வைத்திருந்தேன். வாரந்தோறும் வாடகை சைக்கிளில் ஐந்து முதல் எட்டு கிலோமீட்டா்கள் மிதித்துச் சென்று புத்தகங்கள் மாற்றிவருவதை கைவிட்டதே இல்லை. அப்போதே என் தேர்வு புனைவுகள்தான்.

இரண்டாயிரத்தை ஒட்டி பிழைப்பின் பொருட்டு கரூர் சென்றேன். அங்கேயும் பிழைப்பினைக் கருத்தில் கொள்ளாமல் மாவட்ட மைய நுாலகத்தில் கிடையாய்க் கிடந்தேன். கரூரில்தான் எனக்கு தீவிர இலக்கியம் அறிமுகம் ஆகிறது. அப்போது பெருந்தொகை நுால்களை புதுமைப்பித்தன் நுாலகம் வ.உ.சி. நுாலகம் வெளியிட்டுக்கொண்டிருந்தது. வண்ணதாசன், வண்ணநிலவன் நுாற்களை, நுாலக இருக்கைகளில் அமர்ந்தே வாசித்தேன். அங்கேயும் இரண்டு நுாலகங்களில் உறுப்பினர். கரூர் மாவட்ட மைய நுாலகம் மற்றும் வெங்கமேடு நுாலகம்.

குறிப்பு உதவி  நுால்கள் பிரிவில் நான் ஒருவனே கதைப் புத்தகங்கள் வாசிக்கும் ஆள். பிற அத்தனைப்பேரும் ஐ.ஏ.எஸ். ஆகும் கனவோடு தலையணை அளவு புத்தகங்களை விரித்து வைத்து பழியாகக் கிடப்பார்கள். புனைவுதரும் பரவசங்களால் பூரித்தோ, கண்ணீர் மல்கியோ நான் அவர்களைப் பார்த்து விம்முவேன். அவர்கள் சோர்வும் அலுப்பும் படிந்த கண்களோடு என்னைப் பார்த்து பரிதாபம் கொள்வார்கள்.

ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு விடுதி வாசம். அப்போது இருந்தே தனிமைத் தோழமை பழக்கம் ஆயிற்று. அவ்வளவு எளிதாக யாரிடமும் பழகிவிட மாட்டேன். அதனால்தான் என்னவோ இன்றுவரை என்னால் யாரோடும் நல்லுறவைப் பேண முடியாமல் போய்விடுகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.

கரூர் வேலையை நம்பி திருமணம். 2008-ல் அங்கே  வாழ முடியாமல் சொந்த ஊர் திரும்பினேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள். என் வாழ்வில் நான் மிக அதிகமாக வாசித்துக்கடந்த ஆண்டுகள்.

“தாகம் போல் தோன்றுவதல்ல தாகம். ஒரு துளி பருகாவிட்டால் உயிர்போய்விடும் நிலை தான் உண்மையான தாகம்” என்றும், “எழுதி உயிர் வாழ முடியாது ஒரு நிரந்தர வேலையைத் தேடிக்கொள்ளுங்கள்” என்றும் சுந்தர ராமசாமி வழிகாட்டினார். அவரின் மூலமாக ஜெயமோகன் அறிமுகம் ஆனார்.

வெங்கமேடு நுாலகம் அப்போது குளத்துப்பாளையத்திற்கு மாறியிருந்தது. நுாலகர் என்மீது பரிவு கொண்டிருந்தார். தகழியின் கயிறு நாவலும் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலும் குறிப்புதவிப் பிரிவில் இருந்து கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து வாசித்தேன். அறைவாசிகள் பீதி உறைந்த கண்களால்  அவற்றைப் பார்த்தனர்.

எத்தனையோ நெருக்கடிகளை எழுத்தாளர்களின் சொற்களின் வழியாகவே கடந்து வந்திருக்கிறேன். அவற்றில்  மிகுதியும் அந்தரங்கமானவை. வெளியே சொல்லும் துணிவு இன்னும் வந்திடவில்லை.

மிக உச்சமான ஒரு தருணத்தை மட்டும் ஒரு சாம்பிளுக்காக இங்கே கூறுகிறேன்.

திருமணம் ஆகி மனைவி ஊரில் அவளுடைய உறவினர்களுக்கு மத்தியில் அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். போனால் அரசுப் பணி ஒன்றுதான் என்ற வைராக்கியம். அம்மாவின் வீட்டை விற்று தங்கையின் திருமணக் கடனை அடைத்தது போக மீதி இருந்த பணத்தை வைத்து படிக்க ஆரம்பித்தேன். அதுவரை போட்டித்தேர்வுகள் குறித்து எந்தவித அறிமுகமும் எனக்கு இருக்கவில்லை. படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். நம்பி படித்தேன்.

பணி அமைய எதிர்பார்த்ததை விட இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்விட்டது. இருந்த கைப்பணம் முழுக்க செலவாகி, இரந்து வாழும்நிலை. வீட்டில் அம்மாவைப் பராமரிப்பது கடுமையான நெருக்கடியாக இருந்தது. ஒருபுறம் வறுமையும் வேலையின்மையும் ஏற்படுத்திய சங்கடங்கள். மறுபுறம் அம்மாவின் அட்டூழியங்கள். அம்மாவை எங்காவது கொண்டு தொலைத்து விட்டு வந்தால்  பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடலாம் என்று தோன்றிற்று. கையில் இருந்த சொற்பக்காசை எடுத்துக்கொண்டு அம்மாவையும் அழைத்துக்கொண்டு திருப்பதிக்குச் சென்றேன். தமிழ்நாட்டில் என்றால் அவளை யாராவது மீண்டும் அனுப்பிவைத்துவிடுவார்கள் என்பதால் திருப்பதி. அம்மாவை கோவில் வாசலில் விட்டுவிட்டு, கீழே இறங்க பஸ்சும் ஏறிவிட்டேன். என்னையும் மீறி அழுகையும் நடுக்கமும் ஏற்பட்டது. நாஞ்சில் நாடனின் சாலப்பரிந்தும், காளியம்மை சிறுகதையுந்தான் என் நினைவிற்கு வந்தன. அக்கதைகளை வாசித்து அறச்சீற்றம் அடைந்த நானா இப்படிச் செய்கிறேன். பாதிவழியில் பஸ்சை நிறுத்தி இறங்கினேன். ஓடிப்போய் அம்மாவை மீண்டும் ஊருக்கே அழைத்து வந்தேன். அம்மா அதற்குப் பிறகு என்னோடு  ஆறு வருடங்கள் இருந்தார். ஒரு டிசம்பர் மாதக் குளிரில் பட்டினி கிடந்து இறந்தார். இறப்பு கூட அவர் வீம்பு பிடித்து வரவைத்துக்கொண்டதுதான்.

திருமலையில் அந்த ஒரு கணத்தை கல்மனதுடன் கடந்து வந்திருந்தால் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்ச்சியில் வீழ்ந்து வீணே அழிந்திருப்பேன். அம்மாவின் பைத்தியக் கண்கள் ஒவ்வொரு இரவும் என்னைப் படுத்தி எடுத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *