கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ‘நல்வாழ்வு நிதி’ திரட்டல்

 தமிழின்  நீண்ட நெடிய பாணர் மரபின் நீட்சியாக விளங்கும்  முன்னோடிக் கவி விக்ரமாதித்யனுக்கு கைமாறு செய்யவேண்டியது நமது கடமை. முதற்கட்டமாக நாம் விக்ரமாதித்யன் படைப்புகள் குறித்து எழுத்தாளுமைகளிடமிருந்து கட்டுரைகள் பெற்று நூலாக்கவிருக்கிறோம். அதற்கும் முன்னதாக எழுத்தாளர் ராயகிரி சங்கர் ஆசிரியராக இயங்கும் ‘மயிர் இணையவெளி இதழ்’ வழியாக அந்தக் கட்டுரைகள் வெளியாகும்.  

திருநெல்வேலி பாபநாசம் செல்லும் சாலையிலிருந்து ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய ஃபேவர் பிளாக் போட்ட ஒரு முடுக்குப் பாதையில் இரண்டு மூன்று திருப்பங்களில் இருக்கிறது அவர் வசிக்கும் வாடகை வீடு. அவரும் அவரது துணைவியார் கணபதி அம்மையாரும் மட்டுமே தங்கள் ஓய்வைக் கழித்து வருகிறார்கள். ஏதோ ஒரு மெஸ்ஸிலிருந்து உணவு மூன்று வேளைக்கும் வருகிறது. அக்கம் பக்கத்தில் முடிந்தளவு உதவுகிறார்கள். அவர் வீட்டுக்குச் செல்லும் அந்த முடுக்குப் பாதையைவிட அகலமானது அருகில் தடுப்புடன் கட்டப்பட்ட சாக்கடை. அதற்கு ‘ஒத்தாள் முடுக்கு’ என்று கவிஞர் அவல நகைச்சுவையாக பெயர் வைத்திருக்கிறார். அன்றாடம் தொகுப்பைக் கொண்டுவந்த கவிஞரின் இன்றைய வாழ்க்கைமுறை அடையாளமற்ற, பொருளாதாரத் தன்னிறைவற்ற, பெரும் தனிமையை வரித்துக்கொண்டதான நிலையில் இயக்கம் கொண்டிருக்கிறது.

விக்கிரமாதித்யனின் எல்லா கவிதைகளும் சொற்சிக்கனம் கொண்டவை. ஆனாலும் மீபொருண்மை மிக்க கவிதைகளை எழுதியவர். வாழ்நாள் முழுக்கவும் இடையறாத கவி எழுச்சியுடன் சொற்களுடன் உறவாடிக் கொண்டு வருபவர். கவிஞர் மட்டுமல்ல. எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் வெளிப்படையான நேரடியான விமர்சனங்களை முன்வைத்தவர். குடியிரவுகளில் கலகமும், வெள்ளாள சாதி அபிமான பெருமிதங்களும் கொண்டிருந்தவர் என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனாலும் அவரது விமர்சன பார்வைகளில் எங்கும் ஆள்பார்த்து விமர்சித்தவர் அல்ல. படைப்பின் தரத்தை முன்வைத்து, காலகதியில் அதன் இடம் என்னவென்பதையும் வெளிப்படுத்தியவர். 

அவர் கவிதைகளில் அதீதமாக கடவுள் நம்பிக்கையும், சோதிட நம்பிக்கையும் ஒலித்தாலும், அவநம்பிக்கையும், அழகியல் மேவிய புலம்பல்களும், எதிலும் நிலைகொள்ளாத மாறிக்கொண்டேயிருக்கும் உலகியல் பாடுகளுடனான உரையாடல்களுமாக எழுதபட்டவை. தன் அலைக்கழிவான ஒவ்வொரு தருணங்களையும் கவிதைகளுடனேயே அணுகியிருக்கிறார் என்பதற்கு அவரது கவிதைகளே சாட்சி.  ‘நான் கடவுள்’ மற்றும் சில படங்களில் நடித்திருந்தவர் என்றாலும் அதுவும் கவிதையில் இயங்குவதற்கான சிறு ஓய்வாகவே எடுத்துக்கொண்டவர். பின்நவீனத்துவ கோட்பாடுகளும் இன்னபிற மேலைத்தேய சிந்தனைகளும் தமிழில் புகுந்த காலத்தில் தமிழின் அறிவியக்கச் செயல்பாடுகளை சபைகளில் உரக்க வாதாடியவர். கண்ணதாசன் பாடல்களை தன் கவிதை இயக்கத்திற்கு முன்னுதாரணமாகச் சொல்லிக் கொள்பவர். சித்தர் பாடல்களில் மனம் தோய்ந்தவர். 

உலக அரங்கில் தமிழ் மெய்யியல்  மரபில் உருவான ஆகச்சிறந்த கவிஞர்களை பட்டியலிட்டால் தயங்காமல் சொல்லிவிடலாம் விக்கிரமாதித்யன் பெயரை. தமிழ்ச் சமூகத்தின் விளிம்புநிலை வாழ்க்கையை, மற்றமைகள் மீதான  நேசத்தையும் விமர்சனத்தையும் மெல்லிய பகடியுடன் முன்வைத்தவர். சொல்லிலும் செயலிலும் தன் சக்திக்கும் மீறிய நேர்மையைக் கடைப்பிடிக்க முயல்பவர். அவர் அதிகமாக உரையாடுவதும் உறவாடுவதும் இயற்கையின் மாறா / மாறும் விதிகளுடனும்தான். 

பிரமுகத்தன்மையிலும் வெளிச்சம் பாயும் இடங்களிலும் கவிஞனுக்கு என்ன வேலை என்பவர். தமிழில் உரைநடைக்கு இருக்கும் விமர்சகர்கள் அளவுக்கு கவிதைக்கு இல்லை. சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். அப்படியிருந்தாலும் வெறுமனே ரசனை அடிப்படையிலான மதிப்புரைகள் மிக அதிகம். அந்தக் குறையைத் தீர்த்தவர் விக்கிரமாதித்யன். அதுபோல எத்தனை சிறிய சிற்றிதழ் என்றாலும் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு தன் படைப்பை நல்குபவர். அவரளவுக்கு இப்போதும்கூட எழுதக்கூடிய கவிஞர்களை அடையாளம் கண்டுகொண்டவர்களும், கவிதையியலில் விருப்பு வெறுப்பற்ற விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ஒருசிலர் எனலாம். கோட்பாட்டை அளவுகோலாகக் கொண்டு அல்ல. தன் வாழ்க்கையிலிருந்து தனது ஆழங்கால் பட்ட வாசிப்பின் வழியே கண்ட உண்மைகளிலிருந்து எடுத்துரைக்கிறவர்.

“அவர் கொண்டு நடக்கும் காமம் என்பது உலகியலின் பாற்பட்டது என்று தோன்றினாலும் அது அதன் பாற்பட்டதல்ல. கவிதை கொண்டிருக்கும் உலகியலின் பாற்பட்டது” என்று பொருள் புதிது இணைய இதழில் ‘விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்’ என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் கவிஞர் லக்ஷிமி மணிவண்ணன் குறிப்பிடுகிறார்.

முன்வரிசையில் இடம்பிடிக்க
மனம் சம்மதிப்பதில்லை
முன்வரிசைக்குச் செல்லவே
முயன்றதில்லை ஒருபோதும்
முன்வரிசையில் இருக்க
பிரமுகராக வேண்டும்
பின் வரிசைதான்
பெரிதும் செளகரியம்
நினைத்தபோது
எழுந்து போய்விடலாம்
தேனீர் குடிக்க
சிகிரேட் பிடிக்க
சலித்துப்போனால்
ஒயின் ஷாப்கூடச் சென்றுவிடலாம்
முன்வரிசையென்றால்
இருக்கையைக் காபந்து
பண்ணவேண்டும்
மிக முக்கியமானவர்கள்
வருகைபுரிந்தால்
இடத்தை ஒழித்துக் கொடுக்கவேண்டும்
தோன்றினால்
எழுந்துபோக இயலாது
சம்பிரதாயம் மரபு நாகரிகம்
விடமுடியா(து)
பின்வரிசையில்
எந்தப் பிரச்சனையும் கிடையாது
யாரும் கவனிக்கமாட்டார்கள்
எழுந்து  நின்று
வணக்கம்போட வேண்டியதில்லை
அசதியாயிருந்தால்
சற்றே கண்ணுறங்கலாம்
பின்வரிசைதான் பிடிக்கிறது
முன்வரிசைக்கு ஒருநாளும்
முண்டி மோதியதில்லை
தொடக்கப்பள்ளியிலிருந்தே
பின்வரிசைதான்
கவிதையிலும் வாழ்விலும்
அதே கதைதான்
முன்வரிசை விட்டுவிடுவதும்
பின்வரிசை இடமளிப்பதும்தாம்
இதுநாள்வரையில் சதாசிவா

இது கவிஞர் வண்ணதாசனுக்குப் பிடித்த விக்ரமாதித்யன் கவிதை. இந்த கவிதையின் வரிகளே அவரது அகம்புற வாழ்வில் நேர்கொண்ட தன்னிலையைப் பகர்வதாக அமைந்திருக்கின்றன.

கவிஞர் விக்ரமாதித்யன்  நூலகளில் எனக்கு முதலில் அறிமுகமானது ‘கிரக யுத்தம்’ தொகுப்பின் வழியாக. முதலில் புதுக்கவிதைபோல தோன்றியது. பருவங்களைக் கடந்துவரும்போது அந்தக் கவிதைகளும் என்னை நிழல்போல தொடர்ந்தன. பிறகு வாசிக்குபோது அவருடைய எளிய மொழியில் இலங்கும் பாடுகள் எளிதில் கடக்க முடியாதவையாகத் தோன்றின. புதிய அவதானிப்புகளையும் புதிய திறப்புகளையும் வழங்குவதாக அமைந்திருந்தன.  ‘காற்றுக்கு காற்றென்று பெயர் வைத்தது யார்’ என்று பொதிகை மலைச் சாரலில் உறைவிடமாகக் கொண்ட கவிஞனாலேயே எழுதமுடியும்.  

கவிஞர் விக்ரமாதித்யன் மீண்டும் தென்காசிக்கு வந்தபிறகு அடிக்கடி சந்தித்து வருகிறேன். அண்மைக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘அன்றாடம்’ மற்றும் மறுபதிப்பாக வெளிவரவிருக்கும் ‘எல்லாச் சொல்லும்’ கட்டுரைத் தொகுப்புக்கு தேர்வும் தொகுப்பும், மெய்ப்பும் செய்துகொடுத்தேன். சென்ற தினவு கலை இலக்கிய மெய்யியல் சிறப்பிதழ் (2025), தற்போது நான்காவது தினவு அரையாண்டு இதழ் (ஆடி) இரண்டிலும் அவரது கவிதைகளை வெளியிட்டோம்.

கவிஞர் விக்கிரமாதித்யனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘ஆகாச நீலநிறம்’  1982ம் ஆண்டு வெளியானது. படைப்பு பதிப்பகம் ஜின்னா அவரது மொத்த நூல்களையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இதில் 17 நூல்கள் மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனால் தேர்வும் தொகுப்பும் செய்வித்த ‘சிறுகோட்டுப் பெரும்பழம்’ டிஸ்கவரி பப்ளிகேசன் வழியாக ஏற்கனவே வந்த அவரது மிகமுக்கியமான கவிதைத் தொகுப்பு. இதுதவிர நவீன கவிதை பற்றிய கட்டுரைத் தொகுப்பாக ‘பின்னைப் புதுமை’ நூலும் அதே பதிப்பகத்தில் வெளிவந்ததுதான். தவிர நக்கீரன் பதிப்பக வெளியீடுகளாக நான்கு கவிதைத் தொகுப்புகளும், சில கவிதை குறித்த கட்டுரைகளும் வெளியானவை. விக்ரமாதித்யனின் எல்லா நூல்களும் அமேசான் கிண்டிலும் கிடைக்கின்றன.

படைப்பு பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் பட்டியல்:

கவிதை

ஆகாசம் நீலநிறம் (1982)
ஊருங்காலம் (1984)
உள்வாங்கும் காலம்(1987)
எழுத்து சொல் பொருள் (1988)
திருஉத்தரகோசமங்கை (1991)
கிரகயுத்தம் (1993)
ஆதி (1997)
கல் தூங்கும் நேரம் (2001)
நூறு எண்ணுவதற்குள் (2001)
வீடு திரும்புதல் (2001)
சுடலைமாடன் வரை (2003)
ஊழ்
இடரினும் தளரினும்
சேகர் சைக்கிள் ஷாப்
பாதி இருட்டு பாதி வெளிச்சம்
வியாழக் கிழமையைத் தொலைத்தவன்
சாயல் எனப்படுவது யாதெனின்
அவன் எப்போது தாத்தாவானான்
சும்மா இருக்கவிடாத காற்று
அன்றாடம் (2025)

சிறுகதை 

அவன் அவள் (2003)

கட்டுரை

நம் காலத்துக் கவிதை
தற்கால சிறந்த கவிதைகள்
தன்மை முன்னிலை படர்க்கை
கவிதை ரசனை (2001)
கங்கோத்ரி
இரு வேறு உலகம் (பத்திரிகைக் கட்டுரைகள்) – 2001
தமிழ்க் கவிதை மரபு / நவீனம் (2004)
ஏடகம் ( நவீன கவிதை பற்றிய கட்டுரைகள்) –  2024
கவிதை இன்று – 2025
எல்லாச் சொல்லும் – 2025

மயிர் இணையவெளி இதழுக்கு விக்ரமாதித்யன் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 15 / 2025. வாசக நண்பர்கள் எல்லோரும் பங்கேற்கும்படி அழைக்கிறோம். அவருக்கான நல்வாழ்வு நிதிக்கும் நமது பங்களிப்பை மறவாது செலுத்துவோம்.

தினவு 4 வது இதழில் வந்த விக்ரமாதித்யன் கவிதையில் ஒன்று:

சாமி கண்ணைக் குத்தும் நாள்
கடந்தது
பூச்சாண்டியைக் கூப்பிடும் பொழுதுகள்
கழிந்தன
மனசாட்சிக்கு அஞ்சும் பருவம்
மலையேறிவிட்டது
நேற்றும் இன்றும் தட்டழியும்
ஓர்மை
நாளை நினைந்து நினைந்து
அச்சப்பட்டு மருகும்
நடுநடுவே ஆசையாசையாய்
உள்ளங்கை தேன் நக்கும் மணித்துளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *