1.
தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த கோடிக்கணக்கான மனிதர்களில் நீ மிகவும் போற்றுதலுக்குரியவன். உன்னைச் சுற்றி எத்தனையோ கேளிக்கைகள் புதைகுழிகள் போல விழுங்கக் காத்திருக்க, நீயோ ஒரு நுாலை எடுத்து தனியே அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கிறாய். கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் வாசிப்பைத் தொடர்கிறாய். வாசிக்கும் சொற்களைச் சிந்தனையில் ஊற வைத்து அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்கிறாய். ஆம். சிந்திக்கிறேன். ஆகவே இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்கிறாய். வாழ்த்துகள்.
ஒரு நுாலை வாசித்தல் என்பதில் உன் பங்கும் மிக முக்கியமானது. இருவர் ஆடும் விளையாட்டு என்றோ இணை பறவையின் பறத்தல் என்றோ வாசிப்பினைச் சொல்லலாம். அந்நுாலை எழுதியவனின் ஞானம் உன்னையும் தற்காலிகமாக ஞானவானாக ஆக்குகிறது. தரையில் புதைந்து கிடந்த உன்னை, ஒரு நுால் மலையுச்சியின் மேல் துாக்கி நிறுத்தி ஒரு விரிந்த கோணத்தை உன் கண்முன் காட்டுகிறது.
உன்னைச்சுற்றி பரந்துகிடக்கும் சூழலில் வணிக சக்திகளின் கூக்குரல்கள் சதா ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் இங்கே சமூக மதிப்பாகவும், வாழ்வின் வெற்றியாகவும் கருதப்படுகிறது. முற்றிலும் பொருள் வயமான, கட்டற்ற நுகர்வோனாக உன்னை மாற்றுவதற்கு வணிக சக்திகள் பல நுாறு ரூபங்களில் களமாடி வருகின்றன. தாய்மொழியை, நிலத்தை, பண்பாட்டை, உணர்ச்சிகள் உடனே வேகம் கொள்ளச் சாத்தியமான ஆதார உறவுநிலைகளை அவை பெரும் கதையாடல்கள் மூலம் பயன்படுத்திக் கொள்கின்றன. விளம்பரத்தின் மூலமாகவோ, பல்வேறுவிதமான சேவைகளின் மூலமாகவோ அவை தங்களின் மீது சதா வெளிச்சம் விழுந்துகொண்டே இருக்கும் வித்தில் பன்மடங்கு உத்வேகத்தோடு செயல்புரிந்து கொண்டிருக்கின்றன.
நேரத்தையும், பணத்தையும் நீ எதன்பொருட்டும் விரயம் செய்யாதே. இரண்டையும் வேட்டையாடத்தான் இங்கே கோடிக்கணக்கான திட்டமிடல்கள் காத்திருக்கின்றன. உன்னை லபக்கென்று விழத்தட்டி உன் நேரத்தையும் பணத்தையும் அவை வழிப்பறி செய்துவிடும். ஒரு வாசகனுக்கு இவை இரண்டும் பேரிழப்புகள். ஆகவே எச்சரிக்கையோடு இரு.
இங்கு கலைகள் என்ற பெயரில் பொழுதுபோக்கு கிளுகிளுப்பு சமாச்சாரங்கள்தான் தொண்ணுாறு விழுக்காடும் சந்தைப்படுத்தப்படுகிறது. அசல் கலைகளையும் கலைஞர்களையும் பார்வையில் விழுந்துவிடக் கூடாது என்பதில் இந்த பெரு வணிக மூளைகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கின்றன. இந்த கற்கோட்டைகளையெல்லாம் உடைத்து உன் தேடலை நீயே கட்டி எழுப்பும் காரியத்தின் முதல் படிதான் நீ வாசிக்க ஆரம்பித்தது.
இலக்கியம் முதல் தரமானது. பிற அனைத்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ளவைதான். மொழியில் மனித ஞானம் பொதிந்துள்ளது. மொழியே ஒட்டுமொத்த மனித வாழ்வின் தானியங்கிடங்கு. விதைநெல் களஞ்சியம். ஆகவேதான் மொழியை உன் பரு வடிவ மனம் என்றும் சொல்லலாம்.
இங்கே இந்த மனித இனம் வாழ ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பொன்னுலகம் என்று ஒன்று இருந்ததே இல்லை. இனியும் இருப்பதற்கான சாத்தியமும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தெரியவில்லை. நீ நம்பிச் செயலாற்ற இலக்கியச் செயல்பாடுகள் தவிர வேறு எதுவும் கிடையாது. அனைத்தும் காலாவதியாகி விட்டன. லட்சியவாதங்கள் தீதும் நன்றும் நல்குபவை. காந்தியின் லட்சியவாதம் குறைந்தபட்ச வன்முறைகள் கொண்டது. ஸ்டாலினின் லட்சியவாதம் பலநுாறு உயிர்களைக் கொன்றழித்தது. இலக்கியத்தில் செயல்படுவது முதலில் உன்னைச் சீர் படுத்தும் காரியந்தான். இந்த உலகத்தின் விடியல், வாசிப்பவர்களின் மூலமாக இனிச்சாத்தியம் என்பதைப் புரிந்துகொள். அரசியல் தரகு வேலை பார்க்கும் காரியம் இனி இலக்கியத்திற்கு இல்லை. இலக்கிய வாசகனுக்கும் இல்லை. இலக்கியத்தின் அக்கறைகளில் ஒன்றாக அரசியலும் அதுசார்ந்த வாதப்பிரதிவாதங்களும் என்றும் உண்டு. இங்கே தலைகீழாக நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதைக்குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு வாசகனுக்கு இந்த பிரபஞ்சம் முழுக்க பரவிக்கிடக்கும் ஒவ்வொன்றின் மீதும் போதிய அக்கறையும் அறிதலும் அவசியமானதே. எதையும் தள்ளிவைப்பதோ நிராகரிப்பதோ ஆகாது. ஆனால் உன் ரசனையே, உன் தேடலே மிகவும் முக்கி்யமானது. உலகம் முழுக்க இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனைப் படைப்புகளையும் வாசித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அது சாத்தியமும் இல்லை.
எழுத்தாளர்களின் மீது வழிபடும் மனநிலை தேவையில்லை. எழுதும் கணத்தில் ஒரு எழுத்தாளன் வேறு ஒருவன் ஆகின்றான். சன்னதம் வந்து சாமியாடும் சாமானியன் போல என்று நினைத்துக்கொள். சாமியாடி அருள்வாக்குச் சொல்வதைப் போன்றதுதான் எழுத்தாளனின் எழுத்தும். கைப்பிடி கடல் நீருக்குள்ளும் இருப்பது கடல்தான் என்பதைப்போல.
இசங்களைக் கண்டு மிரட்சி அடைய வேண்டாம். கோட்பாடுகள் வெறும் மூளை உழைப்பு. கோட்பாட்டாளர்களுக்கு இந்த மண்ணில் கட்டுயெழுப்ப எத்தனையோ இருக்கலாம். இலக்கிய உலகத்தைப் பொறுத்தளவில் அவர்களின் பங்கு எதிர்மறையானதுதான். ஒரு பார்வைக் கோணத்திற்காக நீ அவர்களை வாசித்துப் பார்க்கலாம். ஆனால் புதுமைப்பித்தன் படைப்புகள் மீது இங்கே என்ன நடந்துள்ளது என்பதை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொள். விளக்கின் கீழே இருள் என்பதைப் போல கோட்பாட்டாளர்களின் காலடி நிலம் இருள் உறைந்திருப்பது. மேலும் இலக்கியத்தில் மூளைக்கு ஒரு எல்லைவரைதான் அனுமதி உண்டு. இதயம் கொண்டு வரவேற்க வேண்டியவை கலைப்படைப்புகள்.
அப்புறம் இங்கே உள்ள இலக்கியக் குழுக்கள். அவை ஏகதேசம் இனக்குழுக்களைப் போலத்தான். நீ எவை ஒன்றிலும் அங்கத்தினன் ஆகிவிடாதே. அவர்களின் அருளாசியும் வழிகாட்டுதலும் நல்வழிப்படுத்துதலும் உனக்கு கிடைக்கலாம். ஆனால் ஒவ்வொன்றின் மீதும் ஒரு விலைச்சீட்டு உண்டு என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
விமர்சகர்கள் மீதும் துல்லியமான மதிப்பீடுகளை வளர்த்துக்கொள். இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் இங்கே நடப்பது மிகுதியும் தன்னாள் வேற்றாள் என்கிற பாரபட்சங்களும். ரசனை சார்ந்த குண்டாந்தடித் தாக்குதல்களும்தான். நீ வாசித்து அனுபவம் கொள்ளாமல் எதையும் ஒதுக்கி வைக்காதே. வாசிக்காத ஒன்றைக் குறித்து கருத்து எதுவும் கூறாதே. உன் அனுபவத்தின் அடிப்படையில் உனக்குத் தோன்றுவதை பொது வெளியில் வைக்கத் தயங்கவும் செய்யாதே.
புதுமைப்பித்தன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் சரி அவர் மறைந்த பின்னர் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் சரி பிழைகள் கொண்டவையே. அரசியல் கண்ணாடி சாதியக் கண்ணாடி கொண்டு புதுமைப்பித்தனை கீழு் இழுக்க இதுவரை முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இலக்கிய மதிப்பீடுகளுக்கு வேறு ஏதேதோ காரணங்களும் திரைமறைவில் இருக்கின்றன.
இத்தனைச் சள்ளைகள் சூழ் உலகுதான் நவீன தமிழ் இலக்கிய உலகு. நீ தயங்காமல் வா. வாசிப்பது ஒன்றே வாசகனாகும் ஒரே தகுதி.
2.
மிகச் சுருக்கமாக கூறியதால் நீ தவறான புரிதல்களுக்குச் சென்றிருக்கக்கூடும். ஒருவேளை அவை பிழையான அவதானிப்புகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அவை இன்றைய என் நம்பிக்கைகள். நாளையே அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்த நான் தயங்குவதில்லை. என் அனுபவங்களே என் உரைகல். ஓராயிரம் மாயத்திரைகள் இங்கே இருக்கின்றன என்ற பிரக்ஞையுடன் தான் இதை நான் கூறுகிறேன்.
இலக்கியம், இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய வாசகன் என்பவை ஒப்பிட முடியாத தனித்துவம் கொண்டிருப்பவை. நாம் ஆற்றும் புறக்காரியங்களில் தன்னிகரற்ற செயல்பாடுதான் இலக்கியச் செயல்பாடுகளும். ஒரு நல்ல வாசகன் “காணும் உலகமெல்லாம் நான்” என்கிற பெரும் விரிவினில் சதா தன்னைக் உணர்பவனாக இருப்பான். எங்கோ எவருக்கோ நடக்கும் அநீதிகள் அவனைப் பதற்றப்படுத்திக் கொண்டே இருக்கும். பிறரின் கண்ணீரைக் காண அஞ்சும் மெல்லுணர்வு வாசகன் ஒருவனின் இயல்பு. யார்மீதும் எந்தவித எதிர்பார்ப்பற்ற விரிவும், ஆழமான பரிவுந்தான் இலக்கியத்தின் வெகுமதி.
கொள்ளையாளர்கள், கோட்டாபாட்டாளர் மற்றும் லட்சியவாதிகள் இந்தளவிற்கு விரிவினை சென்றடையும் சாத்தியமே இல்லை. ஒரு லட்சிய வாசகன் எந்த ஒரு லட்சியவாதியைவிடவும் ஒரு படி உயர்ந்தவனே. வரலாற்றில் நிகழ்ந்த மனிதப்படுகொலைகள் அனைத்தும் லட்சியவாதிகளால் நிகழ்த்தப்பட்டவையே என்பதை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
காலம் பரிணாமம் கொள்கிறது. இயற்கையின் இயல்பாக தலைகீழ் மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதச் சிந்தனை யுகங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. அவை நிகழ்ந்தேறும் காலளவு வரையறை செய்யமுடியாத புதிராகவே இருக்கிறது. நாம் ஆற்றும் காரியங்கள் பெரும்பெருக்கின் ஒரு துளி.
ஒரு லட்சிய வாசகன் தன்னை விரித்துக்கொண்டே இருக்கிறான். ஒட்டுமொத்த உலகத்திற்கும் சேர்த்தே சிந்தனை செய்கிறான். அவனை கட்டுப்படுத்தும் புறக்காரணிகளாக மொழியும் தேசமும் பாலின வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதில்லை. அவற்றின் தளைகளைப் புரிந்து கொள்ளவே அவன் வாசகனாக இருக்கிறான். அத்தளைகளை இனம் காணவே அவன் வாசிப்பென்னும் நெடும் பயணத்தைத் தொடர்கிறான். அவன் கோட்பாடுகளில், கொள்கைகளில் சிக்குவான் எனில் முதலில் அவன் இழப்பது “உலகெல்லாம் நான்” என்கிற பெரும் விரிவைத்தான்.
இங்குள்ள அத்தனைக் கோட்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் நான் – அவன் என்கிற இரட்டை நிலை ஆதாரப் பார்வையாக இருக்கிறது. பிறரைச் சுட்டி விலக்கிக்கொண்டே இருப்பதுதான் அறிவின் பிரதான கண்டுபிடிப்பு. நான் வேறு, அவர்கள் வேறு என்ற பிரிவினையை தன்னியல்பாக கொள்ளாத ஒரு கோட்பாட்டினை உலகில் எங்கும் காண முடியாது. இரட்டை நிலையில் ஒருவன், ஒரு பக்கச் சார்பினை எடுக்க வேண்டியிருக்கிறது. நம்பிக்கை கொள்ளும் தரப்பின் பக்கமே ஒருவனால் சிந்திக்க முடியும். அதுவே அவன் காலடி நிலமாக இருக்கச் சாத்தியம். எதிர்த் தரப்பின் முழுப்பரிமாணத்தையும் சேர்த்து கணக்கில் கொள்பவனாக இருப்பதற்கான வலுவான தடுப்பரண் இந்த இரட்டைப் பிரிவு நிலைதான்.
மேலும் சொல்வதென்றால் தியானத்திற்கு இணையான ஒரு காரியந்தான் வாசகனாக இருப்பது. உடனே சங்கி என்று ஓங்கி குரல்கொடுக்கும் ஒரு “தரைதட்டிய கப்பலில் கடற்பயணம் செய்யும் கும்பல்” எக்களிப்போடு கூக்குரல் கொடுப்பதை நீயும் கேட்கலாம்.
தியானம் உண்மையை, மெய்மையை அடையும் ஒரு கருவி. மெய்மை உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது. ஆடிப்பிம்பம் போல் புறத்தை அகமும், அகத்தை புறமும் பாவித்துக் கொள்கின்றன. கோட்பாட்டாளர்களின் சிந்தனையின் ஊற்றுமுகம் மேலைத்தத்துவங்களில் இருப்பவை. அவை முழுக்கவே அகம் சார்ந்த அறிதல் அற்ற ஒற்றைத் தன்மை கொண்டிருப்பவை. புற உலகின் சாதனைகளை கோட்பாட்டாளர்கள், கொள்கையாளர்கள் மிகச்சரியாகவே கண்டறிந்து வருகிறார்கள். கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை ஒரு பக்க உண்மைதான். அவர்கள் அறிமுகம் செய்துகொள்ளாத மற்றொரு பக்கம் உண்மை நிலைக்கு இருக்கிறது.
தியானிப்பவன் நீண்ட பயணி. ஒரு வாசகனும் அது போலவே. அவன் மெய்மையை அடையும் வரை தேங்கி நின்றுவிடக்கூடாது. தேங்கி நிற்பான் எனில் நட்டம் அவனுக்கே.
தியான அனுபவம் உள்ளவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கண் மூடி அமர்வது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் அல்ல. ஒரு ரஷ்யப் புரட்சிக்கு இணையான காரியம்தான் ஒருவன் தியானத்தில் வெற்றி பெறுவதும். பல நுாறு சவால்கள். நோக்கைச் சிதைக்கும் வகையில் இடைவெட்டும் அற்புதங்களும் புறஉலக வெற்றிகளை அள்ளித்தரும் சித்திகளும். மண்ணைப் பொன்னாக்கும் மாயம் சாத்தியப்படும் ஒரு கட்டம் உண்டு. மெய்மையின் மீது தேட்டம் உள்ளவர்கள் மட்டுமே கடைசியில் சென்றடைய முடியும்.
புறக்காரியங்கள் அனைத்தும் கருவிகள் என்ற புரிதல் மிக அவசியம். போருக்கான முன் தயாரிப்புகள்தான் பிற அனைத்தையும்.
ஒரு வாசகனுக்கும் இந்தப் புரிதல் அவசியம். சமூக நீதி, சமத்துவம்,பாலின பேதமின்மை போன்றவை கருவிகள் மட்டுமே. அவை மட்டுமே முடிவான உண்மை நிலையாக இருந்துவிட முடியாது. மேலான கருவிகள் வெற்றியை எளிதாக்கும் அவ்வளவே. கருவிகள் இன்றியும் சாத்தியமாக்கியவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். மனம் ஒரு பரிணாம பிலம். ஆதி மனிதனில் தொடங்கி இன்றுவரை நீடித்து வரும் உருவற்ற கண்ணி. ஒரு வாசகன் இன்றில் நின்றுகொண்டு ஆதி மனிதனின் இதயத் துடிப்பை அனுபவம் கொள்பவனாக இருக்கிறான். வேடனும் வேட்டையாடுபவனும் அவனே. இரு பக்கத் தரப்புகளையும் புரிந்துகொள்பவனாக ஒரு லட்சிய வாசகனைச் சொல்லலாம். லட்சியவாதிகளால் கூடு விட்டு கூடு மாற முடியாது. முன் முடிவுகள் உறையச் செய்த மனங்களால் ஆனவர்கள் அவர்கள்.
3.
இரண்டாயிரத்திற்கு பிறகு பிறந்தவன். இளம் வாசகன். என்னிடம் கேட்டான்.
“சமகாலத்தில் தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரே ஒரு எழுத்தாளர் யார்? ஒன்று மட்டுமே போதும். உங்கள் பரிந்துரை?”
நீண்ட யோசனைக்குப் பின் சொன்னேன்.
“நாஞ்சில் நாடன்”
அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ஜெயமோகனாக இருக்கும் என்று நம்பினேன்” என்றான். ஏனெனில் அவனைச் சந்தித்த போதெல்லாம் நான் பரிந்துரைக்கும் பட்டியலில் ஜெயமோகன் முதலாவதாக இருந்தார்.
“ஏன்” என்றான்.
“சமகாலத் தமிழ் வாழ்வின் சீரழிவிற்கு இரண்டு பெரும் நாசக்காரக் கும்பல்கள்தான் முதன்மைக் காரணம். முதலாவது ஊழல் மலிந்த அரசியல்வாதிகள், அரசின் பெரும் நிதியை தங்கள் காலுக்கடியில் குழிப்பறித்து தோண்டி உள்ளே புதைத்து பூதம் அதன்மேல் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டாவது வணிக வெற்றிகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மூன்றாம் தரமான சினிமாக்களை எடுத்து பெரும் கொள்ளை லாபம் பார்க்கும் தமிழ்ச் சினிமாக்காரர்கள். சிந்தனையை பாழ்படுத்தி பல தலைமுறைக்கு செயற்கையாக மலட்டுத்தன்மையை உண்டாக்குபவர்கள்.
நாஞ்சில் நாடன் ஒருவரே சமகாலத்தை முழுதாக எதிர்கொண்டவர். குறைந்த பட்ச சமரசங்கள் புரிந்து கொண்டவர். பிழைப்பின் பொருட்டு எந்த ஒரு போலிக்கலைஞனையும் மேதை என்று பொய்யுரைக்காதவர். நாடி நரம்பு முழுக்க அரசியல்வாதிகளின் மீது கடும் விமர்சனம் கொண்டிருப்பவர். நெஞ்சுரத்தோடு தன் எழுத்தில் பதிவு செய்து வருகிறவரும் கூட. இது ஒருவித பேராண்மை. தன் எழுத்தின் மீதும் தன் செயல்களின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவரால் மட்டுமே இவ்விதம் வாழ்ந்துவிட முடியும். பணம் வரும் என்பதற்காக மூன்றாம் தரங்களோடு தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளாத அசல் கலைஞனுக்குரிய நிமிர்வு அவரின் எழுத்தில் உண்டு. மற்றொரு விதத்தில் தான் என்கிற அகங்காரம் குறைந்தவர். உண்மையில் தமிழ் இலக்கியம் ஒருவரை எவ்விதம் கனியச் செய்யும் என்பதற்கும் அவரே முன்னோடி.”
“அவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறதே?”
“விமர்சனங்கள் ஏதும் இல்லாத ஒருவரைத்தான் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கடும் வசைகள் சூழ சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரை நாம் சந்தேகமின்றி பெருங்கலைஞன் என்று உறுதி செய்துவிடலாம். பெருங்கும்பல் எப்போதும் உன்னதமான காரியங்களையே புறக்கணிக்கும், புழுதிவாரித்துாற்றும். ஏனெனில் இந்த பிறவி முழுக்க பாடுபட்டாலும் அடைய முடியாத உச்சி அது. தனித்த சிகரம். கும்பலின் சராசரித்தனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இருப்பு அல்லவா”
“ வாழ்ந்து கொண்டிருக்கும் முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகள் என்று ஒரு பட்டியல் தரலாமா?” என்றான் தொடர்ந்து.
இந்திரா பார்த்தசாரதி, நீல.பத்மநாபன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர்,எம்.கோபாலகிருஷ்ணன், வண்ண நிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, கீரனுார் ஜாகிர்ராஜா, சுகுமாரன், சோ.தர்மன், பூமணி, இமையம், மனுஷ்யபுத்திரன், எஸ்.செந்தில்குமார், வா.மு.கோமு, தேவதேவன், தேவதச்சன், விக்கிரமாதித்யன் நம்பி, விட்டல்ராவ், ஜோ.டி.குரூஸ், இரா.முருகன், சுரேஷ் குமார இந்திரஜித், விமாலித்த மாமல்லன்,அம்பை,ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி,பாவண்ணன்,சுப்ரபாரதிமணியன்,ரமேஷ் பிரேதன்,சு.வேணுகோபால், உமா மகேஷ்வரி, யூமா வாசுகி, வேல ராமமூர்த்தி, பெருமாள் முருகன்,கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன்,லட்சுமணப் பெருமாள்,பொன்னீலன்,தமிழவன்,பாமா, சிவகாமி,சி.ஆர்.ரவீந்திரன்,ஷோபா சக்தி, சமயவேல், சேரன்,ராஜ சுந்தரராசன், க.மோகனரங்கன், வி.அமலன் ஸ்டேன்லி,முகுந்த நாகராஜன், அகரமுதல்வன், சயந்தன், என்.ஸ்ரீராம், போகன் சங்கர், திருச்செந்தாழை, மானசீகன்,ம.நவீன்…..என்று நீண்ட பட்டியல் ஒன்றினை வழங்கினேன்.
திட்டமிட்டு வாசிக்க ஆரம்பிப்பதாகச் சொன்னான்.
நான் “வாழ்த்துகள்” என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தேன்.
“உன் வாழ்வில் மறக்க முடியாத பரவச கணங்கள் வாசிக்கும் தோறும் சாத்தியப்படும். அது நானும் வாழ்ந்தேன் என்ற நம்பிக்கையை உன்னிடம் உண்டாக்கும். பொருளற்று வாழ்ந்து, வெறுமை பீடித்து சாகும் விருதாத்தனத்தில் இருந்து காப்பாற்றும். உடனே ஆரம்பி” என்றேன்.