பார்த்தவை

வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் நடந்து செல்லும் தொலைவு. திங்கள் கிழமையில் ஆரம்பிக்கும் செக்குமாட்டுத்தனம் வெள்ளிக்கிழமையில் அலுப்புத்தட்ட சோர்ந்து திகைத்து நிற்கும். சனி, ஞாயிறுகளில் நிறைய வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என்கிற ஆசைகளோடு ஊர்ச்சுற்றிப் பார்க்கும் எண்ணமும் முந்திக்கொண்டு வந்துவிடும். நிலக்காட்சிகளை கலைத்து அடுக்குவதன் மூலம் மனக்காட்சிகள் புத்துணர்ச்சி அடைகின்றன.

கேரள நிலத்தின் மீது பெரும்பித்துக் கொண்டிருக்கிறேன். அதன் சாதக பாதகங்களோடு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முறையாக ஆரியங்காவிற்கு பஸ் ஏறிய தருணத்தில் அடைந்த திகில் உணர்வையும் உளப் பதற்றத்தையும் நினைவு கொள்கிறேன். இப்போது அவற்றிற்கான தேவைகள் இல்லை. மொழி சார்ந்த தடுமாற்றம், தமிழர்கள் மீது மலையாளிகள் கொள்ளும் ஒவ்வாமை குறித்த அதீத கற்பனைப் பயம் ஆகியவை ஆரம்பத்தில் இருந்தன.

எஸ் வளைவைத் தாண்டும்போதே உள்ளம் பூரிக்க ஆரம்பித்துவிடும். அரைக்கோள வடிவில் பூதலித்து பசுமைப் போர்த்திக்கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை நெஞ்சில் உற்சாகத்தை உண்டுபண்ணும். புளியரை தாண்டியதும் நீண்ட நெடிய தார்ச்சாலை. இருபுறமும் நெற்பயிர்களின் கண்கவர் பசுமைத்தளும்பல். மலையாளிகள் வாகனங்களை நிறுத்தி வைத்து போட்டாக்கள் எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனை அருகாமையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கேரள பயண அனுபவம் ஏதும் ஏற்படவே இல்லை. என்னைப் போன்றுதான் என் நண்பர்கள். பிழைப்பிற்காக கேரளம்  செல்பவர்களைத் தவிர்த்தால் கள்ளுண்ணவும், லாட்டரி வாங்கவும் சென்று திரும்புகிறார்கள் கணிசமானவர்கள்.  மற்றபடி மாலை அணிந்து விரதம் இருந்து எரிமேனி செல்லும் ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து மட்டுந்தான்.

கேரளத்தில் என்னை ஈர்ப்பவை எவை என்று எண்ணிக்கொள்கிறேன். பெருநகரங்களைத்  தவிர்த்த பிற பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் சுத்தமாக இருக்கின்றன. பசுமை செழித்த காடுகள் முதன்மையான ஈர்ப்பினம். பெரும்பாலும் கேரள நிலம் முழுவதும் நகரமயமாக்கப்பட்டுள்ளது. சிறிய கிராமங்களில் கூட கண்கவர் வண்ணங்கள் கொண்டு கம்பீரமாக ஒளிரும் கட்டிடங்களைக் காண முடிகிறது. வீடுகள் ஏகாந்தமாக சிதறிக்கிடக்கின்றன. போதிய இடவசதியுடன் பெரும்பாலான வீடுகளில் கிணறுகளைக் காண முடிகிறது. திருவனந்தபுரம், கொல்லம் போன்ற நகரங்களைவிட  கிராமப்புற பகுதிகள் தன்சுகாதாரத்தில் மேம்பட்டு உள்ளன.

பேருந்து நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களும் கண்டமேனிக்கு குப்பைகளை பொறுப்பற்று வீசி எறிவதில்லை. போதுமான அளவில் குப்பைச்  சேகரிப்பான்கள் நிறுவப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. எந்த ஒரு பேருந்து நிலையத்திலும் குறைந்த பட்ச சுகாதாரம் பேணப்படும் கழிவறைகள் இருக்கின்றன. மூத்திரமும் மலமும் நுரைத்து நாறும் கழிவறைகளை காணமுடிவதில்லை. நான் பெரும்பாலான அதிகாலைகளில் பேருந்து நிலையத்திலோ இரயில்வே நிலையத்திலோ உள்ள கழிவறைகளை குளியலறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு பயணியாக உள்ளே  சென்று உலாவிவிட்டு உடனே வெளியேறி விடுவதால் அந்நிலத்தின் எ திர்மறை அம்சங்கள் குறித்து உணர்ந்து கொள்ள முடிவதில்லை. மனிதர்களின் குற்ற மனப்பான்மை, சாதிப் பற்று, மதவெறி, அரசியல் சீக்கு, போன்றவற்றை அனுபவங்கள் கொள்ள வழியில்லை. அலைந்து திரியும் ஒரு பாதசாரிக்கு எவை சாத்தியமோ அவற்றைக்கொண்டுதான் இந்தப் பதிவுகளை எழுத முடிகிறது.

உணவகங்கள் சுத்தமான முறையில் உபசரிக்கின்றன. வயிற்றுக்கு கேடு விளைவித்த அனுபவங்கள் இதுநாள் வரை ஏற்பட்டதில்லை. ஒருமுறை பாலக்காடு செல்லும் வழியில் பொள்ளாச்சித் தாண்டியதும் எதிர்ப்பட்ட ஒரு கள்ளுக்கடையில் தொடுகறியாக கொடுத்த இட்லிகள் தமிழ்நாட்டில் எங்குமே சாத்தியப்படவில்லை. அத்தனை ருசியாக இருந்தன. மலையாள நிலத்தின் உணவு வகைகளில் பிரியாணி என் முதன்மையான விருப்பம். தமிழகத்தில் நான் பிரியாணியை ஒருபோதும் தேர்வு செய்வதில்லை. கேரளத்தின் பிரியாணிகள் வேறுரகத்திலானவை. அவை வெண்ணிறம் கொண்டவை. பழத்துண்டுகளும், மாதுளைச் சுளைகளும் பொதிந்திருப்பவை. தொட்டுக்கொள்ள அப்பளமும் ஊறுகாயும் தருகிறார்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் கொண்டுவந்து தட்டில் கொட்டும் ஒரு பிரியாணி போதுமான அளவில் உள்ளது. உள்ளே வெந்து கனிந்து இருக்கும் சிக்கன் துண்டுகள் கூட தனியே ருசித்து உண்ணும் தரத்தில் உள்ளன.

சைவச் சாப்பாட்டை ஊன் என்கிறார்கள். நான் கேரளத்தில் பெரிய அரிசிச்சோறை கேட்டு உறுதி செய்தபின்னர் சைவம் உண்பேன். இட்லி, தோசை, சைவச்சாப்பாடு பெரும்பாலும் ருசிப்பதில்லை. அவர்கள் வைக்கும் சாம்பாரைப் போன்ற கொடுமை பிறிதொன்றில்லை. கூட்டு, கறி, பொரியல் என அனைத்தும் சிக்கனம் வெளிப்படும் பாவனையில் இருக்கும். பொன்னைப்போல காய்கறிகளைப் புழுங்குவார்களோ என்கிற ஐயம்.

இயற்கைக்காட்சிகளுக்கு அடுத்தபடியாக என் உள்ளம் கவர் கள்வர்கள் மலையாள தேசத்தின் பெண்கள். குறிப்பாக  பெருநகர மகளிர். கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு ரயில் நிலையங்களில் பயணிகளாக வந்து  செல்லும் பெண்களைப் பார்ப்பதே தீராத விருந்தாக அமையும். நின்றுகொண்டு, நடந்தபடி, கால்மேல் கால்போட்டு அமர்ந்து, ஆண் நண்பர்களுடன் உடல் உரசிப்  பேசிச்சிரித்து, தந்தையின் பின்னால் நிமிர்ந்த நெஞ்சுடன் சென்று என பலநுாறு விதப் பாவனையிலான பெண்கள். தமிழ்ப் பெண்களிடம் காண முடியாத ஒரு நிமிர்வு என்று இதை என் உள்மனம் வகுத்து வைத்துள்ளது. அச்சம், மடம், நாணம் போன்ற சங்ககால பாவனைகளை மலையாள நிலத்தின்  பெருநகரப் பெண்கள் கைவிட்டு விட்டார்கள் என்பதை அனுபவம் கொள்ள முடிகிறது. பெரும்பாலும் மாடர்ன் உடைகள். அவை கூடுதல் நிமிர்வினை அளிக்கின்றன.

பல சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. ஒருமுறை புனலுாரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல புனலுார் பஸ் நிலையத்தில் காத்திருக்கிறேன். ஒரு அரசுப் பேருந்து வந்து நின்று கதவுகள் திறந்துகொள்கின்றன. பின்னால் ஏறிப் பார்த்தால் நடத்துனருக்கு அடுத்த கடைசி இருக்கை மட்டுமே காலி. அதிலும் சன்னலோரத்தில் ஒரு பெண். பேரழகி என்பதையும் இருபதுக்குள் வயதுள்ளவர் என்பதையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்.

ஏறி நின்றேன். கயிறு இழுத்து ங்ணிங் ஒலித்து பேருந்து நகர ஆரம்பித்துவிட்டது. கடைசி இருக்கைப் பயணியைத் தயக்கத்துடன் பார்த்தேன். அவர் சன்னல் அருகில் தள்ளி அமர்ந்தார். என்னை அருகே வந்து அமரச் சொன்னார்.

ஒரு கண தடுமாற்றத்திற்குப் பிறகு சென்று அமர்ந்தேன். அவருக்கு குண்டு உடல்வாகு. இருக்கை போதாமல் ஆகியது. ஒருவரை ஒருவர் உடலால் அறிந்து கொள்ளும் நெருக்கம். நுனி இருக்கையில் அமர்ந்து உத்தமனைப் போல பாவனை செய்ய ஆரம்பித்தேன்.

பெரும்பாலும் கோணல்மானலான வளைவுகள். கேரளப்  பேருந்துகளின் வேகம் கூடுதலானது. ஒரு கட்டத்தில் உடல்களைப் பற்றி மட்டுமே உணர்ந்து ஆழ்ந்த பரவசத்தில் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகிவிட்டது. அவர் ஈசியிருந்த செண்ட் வாசனை  வேறு. அஞ்சல் தாண்டியதும் பேரழகி தன்னுடைய கைப்பையைத் திறந்து தின்பண்டம் அடங்கிய பாலித்தீன் கவரை  வெளியே எடுத்தார். ஓரக்கண்ணால் அவை என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். உருண்டை வடிவிலான உண்ணி அப்பங்கள்.  பொதி வாயினைப் பிரித்து ஒன்றினை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் பதறி “நன்றி“ என்று சொல்லி மறுத்துவிட்டேன்.  முன்னால் அமர்ந்திருந்த நடத்துநர் உரிமையுடன் திரும்பி வாங்கிக்கொண்டார்.

மனம் பெண்ணுடல் அளிக்கச் சாத்தியமான அத்தனைப் பைத்தியக்கார எண்ணங்களையும் எழுந்து வரச்செய்தது. “இப்படியே இந்தப்பயணம் நீண்டுகொண்டே செல்லாதா?” என்று நாவூறச் செய்தது. பாளையம் நெருங்கியபோது வண்டியில் பாதி ஆட்கள் இறங்கியிருந்தார்கள். நான்தான் தாள முடியாமல் எழுந்து சென்று காலியாக இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். பேரழகி குறிப்பிட்ட இடைவெளியில் வழிநெடுக நொறுக்குத்தீனிகளை தின்றுகொண்டும் இயர்போனில் இசையைக் கேட்டுக்கொண்டும் இருந்தார். உடலின் ஒரு பகுதியில் அந்நிய ஆண் ஒருவனின் உடல் ஒட்டி உறவாடுவதைக் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணிப்பார்க்கவே இல்லை. வேறொருமுறை கோட்டயம் செல்லும் முன்பதிவில்லாத பெட்டியில் முன்னும் பின்னும் நெருக்கியடித்து வியர்வை வாசனையோடு உடல் வாசனையையும் அணைத்து வழங்கியப் பெண்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட நான்தான் வெட்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் அதைப் பெரிய சங்கடமாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அருகில் அமர்வதிலோ, உடலால் தீண்டப்படுவதிலோ மலையாளப்பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

திருநெல்வேலிக்குச்  செல்லும் பயணம் அது. அலுவலக அவசரம் மிகுந்த நேரம். நின்றபடி இருந்தவர்களால் மூச்சுவிட முடியவில்லை. ஆட்களை வெட்டிப்பிளந்து பெரிய தொந்தியை முன்நீட்டி டிக்கட் வாங்குவதற்கு நடத்துனர் பட்டபாடுகள் சங்கடம் அளிப்பவை. நான் இருக்கையின் கைப்பிடியில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன். நடத்துநர் கூட்டத்தை வெட்டி உள்ளே சென்ற தருணத்தில் விளிம்பில் அமர்ந்திருந்த பெண் மீது சாய்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. பின்பகுதியில் ஏதோ ஊசிக்குத்தும் வலி. திரும்பிப்பார்த்தால் ஒரு பெண். இருபத்தைந்து  வயதிற்குள். பால்பாய்ண்ட் பேனா நுனியை என் பின்பகுதியில் குத்தி அழைத்து “தள்ளி நில்லுங்க…” என்று எச்சரிக்கை செய்தார். ஒருமுறை கூட ஏறிட்டுப் பார்க்கத் தோன்றாத பெண்ணுடல்.  கற்பு கற்பு என்று கதைக்கிறீர்கயே ஐயா..இதுதான் ஐயா கற்பு என்று கத்தவேண்டும் போல் இருந்தது.

படித்தவை

சுந்தர ராமசாமியின் நினைவோடைப் பத்திகள் மிகுந்த சுவாரசியமானவை. பிரமிள், ஜி.நாகராஜன், க.நா.சுப்பிரமணியம்,சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா,தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், நா.பார்த்தசாரதி, ந.பிச்சமூர்த்தி ஆகியோர் குறித்து சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார்.

மௌனி குறித்த அவரின் நினைவோடையை இன்று வாசித்தேன். இளம்வயது சுந்தர ராமசாமிக்கு ஐம்பதைத்தாண்டிய மௌனி அதிர்ச்சிகள் அளிப்பவராக இருந்துள்ளார்.

மெளினியின் சிறுகதைத் தொகுதி ஒன்றினை க.நா.சுப்பிரமணியத்தின் வாயிலாக சுந்தர ராமசாமி பெறுகிறார். ஸ்டார் பிரசுரம் வெளியிடுகிறது. க.நா.சு.வின்பரிந்துரையின் பேரில் சுந்தர ராமசாமிக்கும் அவரின் நண்பர் கிருஷ்ணன் நம்பிக்கு இலவச பிரதிகளாக மௌனியின்கதைகள் கிடைக்கின்றன.

சுந்தர ராமசாமியின் எழுத்தில் துலங்கி வரும் மௌனி வேறு விதமானவர். சிந்திப்பதையோ புதிதாக வாசிப்பதையோ கைவிட்டு விட்டவர். தன்னை மட்டுமே பொருட்படுத்தி முன்னிலைப் படுத்தும் சுயமோகி.

சுந்தர ராமசாமிக்கு மௌனியின் கதைகள் மீது ஈடுபாடு இல்லை. ஆனால் கிருஷ்ணன் நம்பிக்கு அவை மிகவும் பிடித்துப்போகின்றன. நேரில் சந்தித்தபோது கிருஷ்ணன் நம்பி மௌனி கதைகளை ஐந்தாறு தடவைகள் வாசித்துவிட்டதாகச் சிலாகித்துப்  பேசுகிறார். சுந்தர ராமசாமிக்கு அது அதிர்ச்சியான மதிப்பீடாக இருக்கிறது. நம்பியின் உற்சாகத்தால் துாண்டுதல் அடைந்து சுந்தர ராமசாமி மீண்டும் மீண்டும் மௌனியை வாசிக்க ஆரம்பிக்கிறார். வாசிக்க வாசிக்க அவரின் மீது ஈடுபாடு கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமான எழுத்தாளர்தான்,போலியான ஆளிலில்லை. சொல்லும் விதத்தினால் நாம் உள்ளே போவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. படிக்குந்தோறும் புதுப்புது விசயங்கள்  வெளிப்படுகின்றன என்கிற முடிவிற்கு வருகிறார் சு.ரா.

மௌனியை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது. நம்பிக்கு முதலில் அந்த வாய்ப்பு அமைகிறது. சிதம்பரத்தில் உள்ள மௌனியை அவர் தனியாகச் சென்று சந்தித்து திரும்புகிறார். நம்பியின் மூலம் தெரிய வருகிற மௌனி அதிர்ச்சி அளிப்பவராக உள்ளார். மௌனி கெட்டவார்த்தைகளைப்  பேசுகிறார். மௌனி என்கிற பெயருக்கு எதிர்ப்பதமாக ஓயாத பேச்சாளியாக இருக்கிறார் போன்ற மனப்பதிவுகள் நம்பியினால் சுந்தர ராமசாமிக்கு அளிக்கப்படுகின்றன.

மௌனியைப் பார்க்க நம்பியும் சு.ரா.வும் ஒரு முறை சிதம்பரம் செல்கிறார்கள். ஓட்டலில் அறை எடுத்து குளித்து விட்டு மௌனியைச் சென்று சந்திக்கும் திட்டத்தோடு அறையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் பின்னால் அப்போது மௌனி வந்துநிற்கிறார். மௌனியை முதல் முதலில் சந்திக்கிறார் சு.ரா. மௌனியின் விரைவான நடையை நினைவு கொள்கிறார். க.நா.சு.வைப்  போல மௌனிக்கும் தலைமுறை குலுங்கிக் குலுங்கி தளும்புகிறது. மிக விரைவாக அவர்களை வந்தடைகிறார்.

சு.ரா. மௌனியைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்கிறார். சு.ரா.வை அறிமுகம் செய்யும் விதமாக நம்பி பேச ஆரம்பிக்கும் முன்னர் “அறிமுக மயிர் ஒன்றும் வேண்டாம். நீ நம்பி, அவன் ராமசாமி” என்கிறார்.

ஓட்டலைத் தேடிச்  செல்கிறார்கள். மௌனி வீட்டிற்கு வந்து தங்க அழைக்கிறார். குளித்து டிபன் சாப்பிட்டு ஓய்வெடுக்கும் விருப்பத்தை மௌனியிடம் தெரிவிக்கிறார்கள். அங்கு தங்கியிருந்த நாட்களில் மௌனி ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். நம்பி முன்னோடிப் படைப்பாளிகள் குறித்து மௌனிக்கு இருக்கும் மதிப்பீடுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி கேள்விகள் கேட்கிறார். பாரதியார் பற்றிக் கேட்டபோது மௌனி “ பாரதி பற்றி வேணாம். உங்க மனசு சங்கடப்படும். ஏற்கனவே நொந்துபோய் இறந்திருக்கான். அவன் தங்கமானவன், நேர்மையானவன்.ஆனா அவனுக்குக் கவிதை எழுத வரலை. தேன் வந்து பாயுது காதினிலே என்கிறானே. இப்படி யாராவது  சொல்வாளா? தேனை காதுல விட்டா அருவருப்பா இருக்காதா?” என்கிறார்.

அடுத்ததாக ந.பிச்சமூர்த்தியைப் பற்றிக்கேட்கிறார் நம்பி. அதற்கு மௌனியின் பதில் “ அவருடைய கவிதை,கதைகள் பற்றிய அபிப்பிராயம் ஒருபுறம் இருக்கட்டும். சிவாஜியோ ஏதோ பத்திரிகையிலே நான் தாடி வளர்ப்பது ஏன் என்று கட்டுரை எழுதி இருந்தான்.  எனக்கு ரொம்ப கோவம் வந்திச்சு. அவன் தாடி வளர்த்தினா எனக்கென்ன? அவனுடைய பொண்டாட்டிகிட்ட போய் சொல்லட்டும். இனினே ஷவரம் பண்ணிக்க மாட்டேன்.தாடி வளர்க்கப் போறேன்னு..அத பப்ளிக்கா எதுக்குச் சொல்லணும்? அவனுக்குக் கொஞ்சமாவது அறிவு இருந்தா, தாடி வளர்வது ஏன் என்று கட்டுரை எழுதட்டும். கொஞ்சம் பேருக்கு சந்தேகம் இருக்கு. தெளிவு கிடைக்கும். தாடியை யாரு வேணா வளர்த்தலாமே”

“புதுமைப்பித்தனா? அவன் கெட்டிக்காரன். அவனுக்கு பாஷையில் கண்ட்ரோல் இருக்கு.ரொம்ப நன்னா எழுதுவான். மகா கெட்டிக்காரன்” என்று மெச்சிக்கொள்கிறார் மௌனி. க.நா.சு. குறித்து பேசும்போது“ அவன் நல்ல ரீடர். ரொம்ப நன்னா வாசிப்பான். அவன மாதிரி யாராலும் வாசிக்க முடியாது.பெரிய பெரிய புக்கிலுள்ள சாராம்சத்தையெல்லாம் உறிஞ்சிண்டிடுவன். சக்கையைத் துப்பிடுவன். நிறையப்  பேர் இருக்கா..சக்கையை எடுத்துண்டு சாராம்சத்தைத் துப்பறவா..பெரிய லிஸ்டே இருக்கு” என்கிறார். அவரின் கதைகள் நாவல்கள் குறித்த அபிப்ராயம். “ எழுதியிருக்கான்.பரவாயில்லை. வாசகர்களைத் தயார் பண்ணிண்டு இருக்கான். கோச்சிங் கிளாஸ்..அது தேவைதானே. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அவன் செய்துண்டு இருக்கான்.” என்றார்.

சிதம்பரம் கோயிலுக்குச் செல்கிறார்கள். மௌனி மிராசுதாரர். மில் மணி ஐயம் என்றுதான் சிதம்பரத்தில் அவருக்கு அடையாளம். கோவிலில் பணியாற்றியவர்கள் மௌனியைப்பார்த்ததும் மேல்துண்டை இடுப்பில் கட்டி பணிந்து வரவேற்கிறார்கள். மௌனியின் உடன்பிறந்வர்கள் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று  அரசுப் பணிகளில் வெளியூர்களில் இருக்கிறார்கள். மௌனியும் ஐ.சி.எஸ். எழுதித் தோற்றுப் போகிறார். தந்தையின் அறிவுரைக்கு ஏற்ப கிராமத்தில் தங்கி நிலபுலன்களைப் பார்த்துக்கொள்கிறார்.

கடலுாரில் இருந்து ஜெயகாந்தன் மௌனியைப் பார்க்க அடிக்கடி வந்துபோகிறார். ஜெயகாந்தன் மெளினியைப் பாராட்டி குமுதத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“மணிக்கொடி எழுத்தாளர்களில்  வித்தியாசமானவர் மட்டுமல்ல, முக்கியமானவர். நான் கதை எழுதுவதற்கு முன்னால் இன்ஸ்பிரேசனுக்காக மௌனி எழுதிய மாறுதல் கதையைப்படித்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிப்பேன்”

மௌனி யதேச்சையாக பி.எஸ்.ராமையாவைச் சந்திக்கிறார். நல்ல வாசகரான அவர் எழுதவும் விரும்புகிறார். மணிக்கொடியில் முதல் கதை வெளியாகிறது. அவரின் கதைகளை பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் போன்றோர் எடிட் செய்துசெப்பனிடுகிறார்கள். மௌனியை சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் பாராட்டியதால் மிகுந்த உற்சாகம் அடைந்து மௌனி தொடர்ந்து எழுதுகிறார்.

ஜெயகாந்தன் மௌனியைப் பார்க்க வரும் நேரமெல்லாம் அக்ரஹாரத்தில் உள்ள மாமிகள் அனைவரும் வாசலில் ஜெயகாந்தனைப் பார்க்க காத்திருப்பார்களாம். ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் பிராமணமாமிகள் மத்தியில் கதாநாயகன்.

சுந்தர ராமசாமியின் பதிவுகளில் தென்படும் மௌனி வருத்தங்களை அளிப்பவராகவே இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *