பார்த்தவை

வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் நடந்து செல்லும் தொலைவு. திங்கள் கிழமையில் ஆரம்பிக்கும் செக்குமாட்டுத்தனம் வெள்ளிக்கிழமையில் அலுப்புத்தட்ட சோர்ந்து திகைத்து நிற்கும். சனி, ஞாயிறுகளில் நிறைய வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என்கிற ஆசைகளோடு ஊர்ச்சுற்றிப் பார்க்கும் எண்ணமும் முந்திக்கொண்டு வந்துவிடும். நிலக்காட்சிகளை கலைத்து அடுக்குவதன் மூலம் மனக்காட்சிகள் புத்துணர்ச்சி அடைகின்றன.

கேரள நிலத்தின் மீது பெரும்பித்துக் கொண்டிருக்கிறேன். அதன் சாதக பாதகங்களோடு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முறையாக ஆரியங்காவிற்கு பஸ் ஏறிய தருணத்தில் அடைந்த திகில் உணர்வையும் உளப் பதற்றத்தையும் நினைவு கொள்கிறேன். இப்போது அவற்றிற்கான தேவைகள் இல்லை. மொழி சார்ந்த தடுமாற்றம், தமிழர்கள் மீது மலையாளிகள் கொள்ளும் ஒவ்வாமை குறித்த அதீத கற்பனைப் பயம் ஆகியவை ஆரம்பத்தில் இருந்தன.

எஸ் வளைவைத் தாண்டும்போதே உள்ளம் பூரிக்க ஆரம்பித்துவிடும். அரைக்கோள வடிவில் பூதலித்து பசுமைப் போர்த்திக்கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை நெஞ்சில் உற்சாகத்தை உண்டுபண்ணும். புளியரை தாண்டியதும் நீண்ட நெடிய தார்ச்சாலை. இருபுறமும் நெற்பயிர்களின் கண்கவர் பசுமைத்தளும்பல். மலையாளிகள் வாகனங்களை நிறுத்தி வைத்து போட்டாக்கள் எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனை அருகாமையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கேரள பயண அனுபவம் ஏதும் ஏற்படவே இல்லை. என்னைப் போன்றுதான் என் நண்பர்கள். பிழைப்பிற்காக கேரளம்  செல்பவர்களைத் தவிர்த்தால் கள்ளுண்ணவும், லாட்டரி வாங்கவும் சென்று திரும்புகிறார்கள் கணிசமானவர்கள்.  மற்றபடி மாலை அணிந்து விரதம் இருந்து எரிமேனி செல்லும் ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து மட்டுந்தான்.

கேரளத்தில் என்னை ஈர்ப்பவை எவை என்று எண்ணிக்கொள்கிறேன். பெருநகரங்களைத்  தவிர்த்த பிற பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் சுத்தமாக இருக்கின்றன. பசுமை செழித்த காடுகள் முதன்மையான ஈர்ப்பினம். பெரும்பாலும் கேரள நிலம் முழுவதும் நகரமயமாக்கப்பட்டுள்ளது. சிறிய கிராமங்களில் கூட கண்கவர் வண்ணங்கள் கொண்டு கம்பீரமாக ஒளிரும் கட்டிடங்களைக் காண முடிகிறது. வீடுகள் ஏகாந்தமாக சிதறிக்கிடக்கின்றன. போதிய இடவசதியுடன் பெரும்பாலான வீடுகளில் கிணறுகளைக் காண முடிகிறது. திருவனந்தபுரம், கொல்லம் போன்ற நகரங்களைவிட  கிராமப்புற பகுதிகள் தன்சுகாதாரத்தில் மேம்பட்டு உள்ளன.

பேருந்து நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களும் கண்டமேனிக்கு குப்பைகளை பொறுப்பற்று வீசி எறிவதில்லை. போதுமான அளவில் குப்பைச்  சேகரிப்பான்கள் நிறுவப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. எந்த ஒரு பேருந்து நிலையத்திலும் குறைந்த பட்ச சுகாதாரம் பேணப்படும் கழிவறைகள் இருக்கின்றன. மூத்திரமும் மலமும் நுரைத்து நாறும் கழிவறைகளை காணமுடிவதில்லை. நான் பெரும்பாலான அதிகாலைகளில் பேருந்து நிலையத்திலோ இரயில்வே நிலையத்திலோ உள்ள கழிவறைகளை குளியலறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு பயணியாக உள்ளே  சென்று உலாவிவிட்டு உடனே வெளியேறி விடுவதால் அந்நிலத்தின் எ திர்மறை அம்சங்கள் குறித்து உணர்ந்து கொள்ள முடிவதில்லை. மனிதர்களின் குற்ற மனப்பான்மை, சாதிப் பற்று, மதவெறி, அரசியல் சீக்கு, போன்றவற்றை அனுபவங்கள் கொள்ள வழியில்லை. அலைந்து திரியும் ஒரு பாதசாரிக்கு எவை சாத்தியமோ அவற்றைக்கொண்டுதான் இந்தப் பதிவுகளை எழுத முடிகிறது.

உணவகங்கள் சுத்தமான முறையில் உபசரிக்கின்றன. வயிற்றுக்கு கேடு விளைவித்த அனுபவங்கள் இதுநாள் வரை ஏற்பட்டதில்லை. ஒருமுறை பாலக்காடு செல்லும் வழியில் பொள்ளாச்சித் தாண்டியதும் எதிர்ப்பட்ட ஒரு கள்ளுக்கடையில் தொடுகறியாக கொடுத்த இட்லிகள் தமிழ்நாட்டில் எங்குமே சாத்தியப்படவில்லை. அத்தனை ருசியாக இருந்தன. மலையாள நிலத்தின் உணவு வகைகளில் பிரியாணி என் முதன்மையான விருப்பம். தமிழகத்தில் நான் பிரியாணியை ஒருபோதும் தேர்வு செய்வதில்லை. கேரளத்தின் பிரியாணிகள் வேறுரகத்திலானவை. அவை வெண்ணிறம் கொண்டவை. பழத்துண்டுகளும், மாதுளைச் சுளைகளும் பொதிந்திருப்பவை. தொட்டுக்கொள்ள அப்பளமும் ஊறுகாயும் தருகிறார்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் கொண்டுவந்து தட்டில் கொட்டும் ஒரு பிரியாணி போதுமான அளவில் உள்ளது. உள்ளே வெந்து கனிந்து இருக்கும் சிக்கன் துண்டுகள் கூட தனியே ருசித்து உண்ணும் தரத்தில் உள்ளன.

சைவச் சாப்பாட்டை ஊன் என்கிறார்கள். நான் கேரளத்தில் பெரிய அரிசிச்சோறை கேட்டு உறுதி செய்தபின்னர் சைவம் உண்பேன். இட்லி, தோசை, சைவச்சாப்பாடு பெரும்பாலும் ருசிப்பதில்லை. அவர்கள் வைக்கும் சாம்பாரைப் போன்ற கொடுமை பிறிதொன்றில்லை. கூட்டு, கறி, பொரியல் என அனைத்தும் சிக்கனம் வெளிப்படும் பாவனையில் இருக்கும். பொன்னைப்போல காய்கறிகளைப் புழுங்குவார்களோ என்கிற ஐயம்.

இயற்கைக்காட்சிகளுக்கு அடுத்தபடியாக என் உள்ளம் கவர் கள்வர்கள் மலையாள தேசத்தின் பெண்கள். குறிப்பாக  பெருநகர மகளிர். கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு ரயில் நிலையங்களில் பயணிகளாக வந்து  செல்லும் பெண்களைப் பார்ப்பதே தீராத விருந்தாக அமையும். நின்றுகொண்டு, நடந்தபடி, கால்மேல் கால்போட்டு அமர்ந்து, ஆண் நண்பர்களுடன் உடல் உரசிப்  பேசிச்சிரித்து, தந்தையின் பின்னால் நிமிர்ந்த நெஞ்சுடன் சென்று என பலநுாறு விதப் பாவனையிலான பெண்கள். தமிழ்ப் பெண்களிடம் காண முடியாத ஒரு நிமிர்வு என்று இதை என் உள்மனம் வகுத்து வைத்துள்ளது. அச்சம், மடம், நாணம் போன்ற சங்ககால பாவனைகளை மலையாள நிலத்தின்  பெருநகரப் பெண்கள் கைவிட்டு விட்டார்கள் என்பதை அனுபவம் கொள்ள முடிகிறது. பெரும்பாலும் மாடர்ன் உடைகள். அவை கூடுதல் நிமிர்வினை அளிக்கின்றன.

பல சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. ஒருமுறை புனலுாரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல புனலுார் பஸ் நிலையத்தில் காத்திருக்கிறேன். ஒரு அரசுப் பேருந்து வந்து நின்று கதவுகள் திறந்துகொள்கின்றன. பின்னால் ஏறிப் பார்த்தால் நடத்துனருக்கு அடுத்த கடைசி இருக்கை மட்டுமே காலி. அதிலும் சன்னலோரத்தில் ஒரு பெண். பேரழகி என்பதையும் இருபதுக்குள் வயதுள்ளவர் என்பதையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்.

ஏறி நின்றேன். கயிறு இழுத்து ங்ணிங் ஒலித்து பேருந்து நகர ஆரம்பித்துவிட்டது. கடைசி இருக்கைப் பயணியைத் தயக்கத்துடன் பார்த்தேன். அவர் சன்னல் அருகில் தள்ளி அமர்ந்தார். என்னை அருகே வந்து அமரச் சொன்னார்.

ஒரு கண தடுமாற்றத்திற்குப் பிறகு சென்று அமர்ந்தேன். அவருக்கு குண்டு உடல்வாகு. இருக்கை போதாமல் ஆகியது. ஒருவரை ஒருவர் உடலால் அறிந்து கொள்ளும் நெருக்கம். நுனி இருக்கையில் அமர்ந்து உத்தமனைப் போல பாவனை செய்ய ஆரம்பித்தேன்.

பெரும்பாலும் கோணல்மானலான வளைவுகள். கேரளப்  பேருந்துகளின் வேகம் கூடுதலானது. ஒரு கட்டத்தில் உடல்களைப் பற்றி மட்டுமே உணர்ந்து ஆழ்ந்த பரவசத்தில் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகிவிட்டது. அவர் ஈசியிருந்த செண்ட் வாசனை  வேறு. அஞ்சல் தாண்டியதும் பேரழகி தன்னுடைய கைப்பையைத் திறந்து தின்பண்டம் அடங்கிய பாலித்தீன் கவரை  வெளியே எடுத்தார். ஓரக்கண்ணால் அவை என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். உருண்டை வடிவிலான உண்ணி அப்பங்கள்.  பொதி வாயினைப் பிரித்து ஒன்றினை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் பதறி “நன்றி“ என்று சொல்லி மறுத்துவிட்டேன்.  முன்னால் அமர்ந்திருந்த நடத்துநர் உரிமையுடன் திரும்பி வாங்கிக்கொண்டார்.

மனம் பெண்ணுடல் அளிக்கச் சாத்தியமான அத்தனைப் பைத்தியக்கார எண்ணங்களையும் எழுந்து வரச்செய்தது. “இப்படியே இந்தப்பயணம் நீண்டுகொண்டே செல்லாதா?” என்று நாவூறச் செய்தது. பாளையம் நெருங்கியபோது வண்டியில் பாதி ஆட்கள் இறங்கியிருந்தார்கள். நான்தான் தாள முடியாமல் எழுந்து சென்று காலியாக இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். பேரழகி குறிப்பிட்ட இடைவெளியில் வழிநெடுக நொறுக்குத்தீனிகளை தின்றுகொண்டும் இயர்போனில் இசையைக் கேட்டுக்கொண்டும் இருந்தார். உடலின் ஒரு பகுதியில் அந்நிய ஆண் ஒருவனின் உடல் ஒட்டி உறவாடுவதைக் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணிப்பார்க்கவே இல்லை. வேறொருமுறை கோட்டயம் செல்லும் முன்பதிவில்லாத பெட்டியில் முன்னும் பின்னும் நெருக்கியடித்து வியர்வை வாசனையோடு உடல் வாசனையையும் அணைத்து வழங்கியப் பெண்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட நான்தான் வெட்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் அதைப் பெரிய சங்கடமாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அருகில் அமர்வதிலோ, உடலால் தீண்டப்படுவதிலோ மலையாளப்பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

திருநெல்வேலிக்குச்  செல்லும் பயணம் அது. அலுவலக அவசரம் மிகுந்த நேரம். நின்றபடி இருந்தவர்களால் மூச்சுவிட முடியவில்லை. ஆட்களை வெட்டிப்பிளந்து பெரிய தொந்தியை முன்நீட்டி டிக்கட் வாங்குவதற்கு நடத்துனர் பட்டபாடுகள் சங்கடம் அளிப்பவை. நான் இருக்கையின் கைப்பிடியில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன். நடத்துநர் கூட்டத்தை வெட்டி உள்ளே சென்ற தருணத்தில் விளிம்பில் அமர்ந்திருந்த பெண் மீது சாய்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. பின்பகுதியில் ஏதோ ஊசிக்குத்தும் வலி. திரும்பிப்பார்த்தால் ஒரு பெண். இருபத்தைந்து  வயதிற்குள். பால்பாய்ண்ட் பேனா நுனியை என் பின்பகுதியில் குத்தி அழைத்து “தள்ளி நில்லுங்க…” என்று எச்சரிக்கை செய்தார். ஒருமுறை கூட ஏறிட்டுப் பார்க்கத் தோன்றாத பெண்ணுடல்.  கற்பு கற்பு என்று கதைக்கிறீர்கயே ஐயா..இதுதான் ஐயா கற்பு என்று கத்தவேண்டும் போல் இருந்தது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *