
ஒரு லட்சிய வாசகனுக்கு எந்தவித மனச்சாய்வுகளும் அவனுடைய வளர்ச்சிக்கு பெருந்தடையே. வளர்ச்சி என்பது வாசிப்பின் வழியாக வாசகன் பெறக்கூடியதும், வாசிப்பு என்கிற ரசவாதத்தின் ஊடாக அவனுடைய அக உலகம் வளர்சிதை மாற்றம் கொள்வதையுந்தான் இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.
வாசிப்பின் விகாசம் வெளிப்படும் மனங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை. வாசிப்பின் நல்விளைவுகள் என்பவை வாசக மனத்தில் கிளர்ந்தெழும் கருணையும் கனிவும். இங்கிருப்பவை அனைத்தும் நானே. உலகெல்லாம் நான் என உணரும் பெரும் பேறு.
வாசிப்பின் வழியாக அடைந்த தகவல்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அதிகார அடுக்குகளில் தங்களை மேலே கொண்டு செல்வதற்காக வாசிப்பினை பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர்களுக்கு வாசிப்பும் ஒரு காரண காரிய விளைவுதான். வாசித்தால் என்ன லாபம் என்பதை அறிந்து அந்த லாபத்தை மட்டும் இலக்காகக் கொண்டு வாசித்துத் தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள். இவர்களின் இதயத்தை வாசிப்பு ஒன்றும் செய்திருக்காது. மூளையோ அகங்காரம் வீங்கி பெரு மலையென புடைத்துநிற்கும்.
வாசிப்பின் பின்விளைவு குழந்தையின் களங்கமின்மைக்கு ஈடான வெகுமதி. குழைந்தைமையை உள்ளே கொன்று புதைத்து வேட்டை விலங்கின் மூர்க்கத்தோடு அலைந்து திரிவேன் என்கிற மனக்கோணல் உள்ளவர்களை வாசிப்பு ஒன்றும் செய்துவிட முடியாது. எத்தனை வாசித்தும் அகத்தை தீண்டும் சந்தர்ப்பத்தைக் கொடுக்காத கருங்கல் மூளைகளுக்கும் வாசிப்பு அதன் நல்லியல்புகளை கைமாற்றுவதில்லை. பிறப்பிலேயே ஒருவன் வாசகனாக பிறக்கிறான் என்பதில் நுாறுவிழுக்காடு உண்மை இருக்கிறது.
ஏன் வாசிக்க வேண்டும்? எவற்றை வாசிக்க வேண்டும்? என்பது மிகவும் அந்தரங்கமானது. வாசிப்பே தேவையில்லை என்பதும் வரவேற்புக்குரியதே. மிகச் சாதாரணமாக ஒரு தீவிர வாசிப்பாளனின் உள்ளத்திற்கும் வாசிப்பின் வாசனையே படியாத உள்ளத்திற்குமான கரடுமுரடான பழக்க வழக்கங்களை ஒருவரால் எளிதில் அனுபவம் கொள்ள முடியும். உலகெங்கும் உள்ள லட்சியவாதிகளில் கணிசமானோர் வாசிப்பின் வழியாக உருவாகி வந்தோர்தான். பிறர் மீதான அன்பும் கனிவும் உண்டாக்கித் தரும் ஒரு வழிமுறையாகத்தான் வாசிப்பு உள்ளது.
நிற்க. இங்கே நானும் பள்ளிப்பாடப்புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்லுாரியில் டன் கணக்கில் படித்து தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறேன். நான் ஒரு துறையில் பேராசிரியர் எனக்கு என்ன புதிதாகப் படிக்க இருக்கிறது என்கிற ஒன்றாம் வகுப்பு கேள்விகளைத் துாக்கிக்கொண்டு அலைகிறவர்களுக்கு சொல்ல ஒன்றும் இல்லை. இது உங்களுக்கான இடம் இல்லை. தயை கூர்ந்து கனவான்களே கொஞ்சம் தள்ளி நிற்கிறீர்களா? என்று சொல்ல விரும்புகிறேன்.
ஃபிலிஸ்டைன் சமூகம் என்று சாரு நிவேதிதா வரையறை செய்துள்ள மக்கள் திரளாக நாம் இருக்கிறோம். இம்மதிப்பீட்டை ஆணவமற்று ஒருவர் ஒத்துக்கொள்கிறார் எனில் அவரிடம் ஏதோ பேச இருக்கிறது. அல்லாமல் எனக்குத்தான் எல்லாம் தெரியுமே என்று மீசை நுனி துடிக்க இறுமாந்திருப்பவர்களிடம் ஒன்றும் சொல்ல முடியாது. அவருக்கு வாசிப்பின் வாயும் இல்லை, வயிறும் இல்லை. வாசித்தவற்றைச் செரிக்கும் செரிமான மண்டலமும் இல்லை.
வாசிப்பிற்கு ஒட்டுமொத்த சூழலும் எதிர்ப்பினைக் கொடுத்து வருகிறது. சமூச ஊடகங்கள் இன்றின் பெருந்தடைகள். தனி நபர்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், அண்டை வீட்டார், அயலார், அதிகார அமைப்பில் உள்ளோர், வணிகர்கள், பெரும் ஊடகங்கள், பெரும் முதலாளிகள், பொழுதுபோக்கு காலக்கொல்லிகளை உண்டாக்கி கோடிகளில் கொழுக்கும் நேரக்கொள்ளையர்கள் என வாசிப்பிற்கு எதிரான சதிகாரர்கள் மிக அதிகம். மனித குல விரோதிகள் என்று இவர்களை சந்தேகம் இன்றி கட்டம் கட்டிவிடலாம்.
வாசிப்பினை வரவேற்காத, உற்சாகப்படுத்தாத, உவந்து புன்னகை செய்யாத மக்கள் திரளில் இருந்துதான் பெரும் யத்தனங்கள் மேற்கொண்டு ஒருவன் வாசகனாக வந்தடைய வேண்டியிருக்கிறது. இயல்பாக ஒருவித தேடல் அல்லது சம கால வாழ்வின் மீதான போதாமை அல்லது தனக்கென்று ஒரு தனித்த பார்வையினை உருவாக்கிக்கொள்ளும் தன்விழைவு. இப்படி எதோ ஒன்று ஒருவனை வாசிப்பின் அருகே கொண்டு வந்து சேர்க்கிறது. வந்தவர்களில் முக்கால் வாசிப்பேர் ஒரு நெருக்கடிக்கு பிறகு வாசகன் என்கிற தகுதியை இழந்து ஒரு காலத்தில் வாசகனாக இருந்தேன் என்கிற நிலையை சென்றடைந்து விடுவதையும் பார்க்கிறோம். வாசிப்பினையும் வாசகனையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை திட்டமிட்டு உருவாக்கியதைப் போல உருவாக்கி விட முடியாது. அது முன் பிறவிகளின் ஆடிப்பிம்பமாக இப்பிறவியில் கண்டுணர முடிந்தால்தான் உண்டு.

ஒரு லட்சிய வாசகன் எந்நிலையிலும் பொருட்படுத்த வேண்டியவனே. இங்கே கோட்பாட்டாளர்கள், அரசியல் நிலைப்பாட்டாளர்கள், மதவாதிகள், சுத்த ஆன்மீக அழைப்பாளர்கள், பொழுதுபோக்கு பொக்குகளுக்கும் கலைமதிப்பான உன்னதங்களும் வேறுபாடு கண்டுகொள்ள இயலாத பித்துக்குளிகள், நிலைகொள்ளாத மனநிலை வாய்த்தவர்கள், கற்றல் குறைபாடுடையோர், நுண்ணர்வற்ற மொண்ணையர்கள் இவர்களை விட ஒருபடி மேலானவனாக வாசகனைச் சொல்வதில் தகுதிக்குறைவொன்றும் இல்லை.
ஒரு படைப்பினை, படைப்பாளியை மதிப்பிடுவதில் ஒரு லட்சிய வாசகன் தன்னுடைய சுய அனுபவத்தை முன் நிபந்தனையாகக் கொண்டால் போதுமானது. தொடர்ந்து முன் முடிவுகள் அற்று அவன் வாசிப்பினைத் தொடர்வான் எனில் காலப்போக்கில் அவனுக்குள் கலையின் அசல் கூறுகளை இனம் கண்டு கொள்ளும் நுண்ணுணர் திறன்கள் வந்தடைந்துவிடும். பிறரின் வழிகாட்டுதல் இன்றியே அவனால் சிறந்த வாசகனாக பரிணாமம் கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலான வாசர்களுக்கு அந்த உச்ச நிலை சாத்தியமில்லாமல் போகிறது.
காரணங்கள் மிக எளிது. இங்கே கும்பல் மனநிலை என்று ஒன்று இருக்கிறது. பலர் சொல்கிறார்கள் ஆகவே அதுதான் மிகச் சரி என்ற முன்முடிவும். ஒன்றை அனுபவம் கொள்வதில் இருந்து தப்பித்துக்கொள்ள விரும்பும் சோம்பல் மனநிலையும்.
அரசியல் அதிகார வேட்டையாளர்கள், கட்சிகளுக்கு ஆள்பிடிக்க கோட்பாடுகளை சுமந்தலையும் பிள்ளைப்பிடிப்பாளர்கள், தன்னை முன்னிலைப்படுத்தி மட்டுமே கலை உலகத்தை முன்வைக்கும் சுயநோக்கு மையங்கள், இவைதான் உன்னதம் மற்றவை அனைத்து கழிசடை என ஒரு அழகியல் நோக்கில் அனைத்தையும் மதிப்பிடும் தன் மைய ரசிகக் குஞ்சுகள், கற்கத் திறனற்ற சோற்று மூளைகள், கலைகளின் மீது மூலக்கடுப்பு கொண்டிருக்கும் மொட்டைப்பாறைத் தலைகள் என வாசகனை எதிர்கொண்ட அக்கணமே தேங்கிப்போகச் செய்யும் மகாத்மாக்களிடம் மட்டுந்தான் ஒரு வாசகன் முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
துறை சார் நிபுணர்கள், சக கலைஞர்கள் மீது புலமைக்காய்ச்சல் உள்ளவர்கள் என்று தன்படை ஆட்கள் வேறொரு ரகத்தினர். மிக அருகாமையில் இருக்கும் ஆபத்துகள். ஆசான்கள், குருமார்கள், சந்நிதானங்கள், ஸ்ரீ ல ஸ்ரீக்கள், வச்சகுறி தப்பாத கலை விமர்சகர்கள் என்பவர்களிடமும் ஒருவன் வழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சுய அனுபவம் கொள்ளாமல் எதன் மீதும் ஈர்ப்போ வெறுப்போ கொள்ளாத ஒரு நடுநிலைதான் இலட்சிய வாசகனின் ஒரே முன் நிபந்தனை.
