1
தமிழில் நவீன நாவல்கள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே ஒருவித மீறல் எழுத்தாளர்களிடம் தொற்றிக் கொண்டது. மரபிலிருந்து விலகி செல்லும் அந்த மீறலை தங்கள் லட்சிய அம்சத்தோடு பொருத்திக் கொண்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக மரபு வரையறுத்து வைத்திருக்கும் பெண்ணென்ற ஆழ்படிமத்தை அந்த மீறல் வழி மீளுருவாக்கம் செய்தனர். அதன் வழியே எழுத்தாளர் தான் கனவு கண்ட லட்சிய பெண்ணை உருவாக்கினார். அதற்கு பறந்து செல்லும், எரித்தழிக்கும் அக்னியின் அம்சத்தைக் கொடுத்தனர். அக்னி மண்ணில் பிறந்தாலும் விண்ணுக்கு உரியது என்ற சொல் உண்டு. விண்ணில் பறந்து செல்லும் பெண்ணே நவீன எழுத்தாளர்களின் முதன்மை கதாபாத்திரம்.
தமிழின் முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, அதில் ஞானாம்பாள் பிரதாப முதலியாரை திருமணம் செய்துக் கொள்ள பலவித சாகசங்கள் செய்கிறாள். நாவலின் பிற்பாதியில் அவளே ஆண் வேடமணிந்து சிறைபட்டிருக்கும் தன் கணவனை காப்பாற்ற ஒரு தீவின் அரசனாகி அவரை மீட்டும் வருகிறார். இத்தகைய சாகச தன்மைகள் தமிழின் முதல் நாவலிலேயே உருவாகியது ஒரு விதத்தில் மேற்கத்திய நாவல்களின் தாக்கத்தால் இருக்கலாம்.
அதன்பின் தீவிர இலக்கியத்திலும், தமிழ் மறுமலர்ச்சி/திராவிட இலக்கியத்திலும் இந்த லட்சியத் தன்மை மரபிலிருந்து மீறி இருவேறாக பிரிந்து செல்வதைப் பார்க்கலாம்.
தமிழ் திராவிட இலக்கியத்தில் கண்ணகியை மீட்டுருவாக்கம் செய்து எடுத்துக் கொண்டனர். மாதவி கதாபாத்திரம் கண்ணகிக்கு இணையாகவே வைத்து பேசப்பட்டது. கொல்வேள் கொற்றவையாக கையில் சிலம்புடன் தீக்கண்களால் மதுரையை எரித்து அதன்முன் சன்னதம் கொண்டிருக்கும் கண்ணகியை முன்வைத்தனர். நீதி கேட்கும் கண்ணகி மெரினா கடற்கரையில் சிலையாக கோபாவேசம் கொண்டு நிற்கலானாள்.
தீவிர இலக்கியத்திலும் இதற்கு இணையான ஒரு பார்வை தமிழில் உருவாகியது. கு.ப.ரா வின் ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதையில் சந்தேகக் குணம் கொண்ட கணவனின் தொல்லையிலிருந்து அவனை உதறிச் செல்லுமிடத்திலேயே கதை முடிகிறது. அவளது வாழ்வில் அந்த மீறலே சிறிது வெளிச்சம் என ஆசிரியர் சித்தரிக்கிறார். தி. ஜானகிராமன், கு.ப.ரா.வின் மரபிலிருந்து எழுந்தவர் எனச் சொல்லலாம். தி. ஜா. தன் பெண்களை மரபின் ஆசாரத்திற்குள் ஆண்களால் சிக்குண்டவர்களாகவும், அதிலிருந்து வெளியேறும் தன் வேட்கை கொண்டவர்களாவும் முன்வைத்தார்.
தமிழிலக்கியத்தில் பெண் என்னும் லட்சிய கனவின் உச்சம் தொட்டவர் ஜெயகாந்தன். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிஸுக்குப் போ, உன்னைப் போல் ஒருவன் ஆகிய ஜெயகாந்தனின் முக்கியமான நாவல்களில் வரும் பெண்கள் எல்லோரும் துடுக்குத்தனமானவர்கள். ஆணுக்கு நிகராக, தன்னை நிறுவிக் கொண்டவர்கள். ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் பைத்தியகாரப் பெண்ணைக் கூட அந்த கிராமம் என்னும் கட்டுக்குள் அடங்காதவளாகவே ஜெயகாந்தன் சித்தரித்திருப்பார்.
ஜெயகாந்தன் நாவல்களிலேயே மிகவும் விமர்சிக்கப்பட்ட ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் அவரது ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையில் மரபார்ந்த ஒன்றை உதறிச் செல்லும் கங்காவை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராகவே எழுதிக் காட்டினார். அதன் வழி கங்கா தன்னை அழித்துக் கொண்டவள்.
ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தமிழில் நவீன பெண் கதாபாத்திரங்கள் எல்லோரும் கண்ணகியின், திரௌபதியின், அக்னியின் அம்சம் கொண்டவர்கள். அந்த அக்னி தன்னை அழிக்கும் அல்லது சூழ்ந்துள்ள அனைத்தையும் எரித்தழிக்கும்.
90 களுக்கு பின் எழுதிய ஜெயமோகன் கூட மேற்சொன்ன அம்சத்தையே தன் வட்டார மரபிலிருந்து (கன்னியாகுமரி) உருவாக்கிக் கொண்டார். கன்னியாகுமரி நிலம் கேரளப் பண்பாடு சார்ந்தது (தாய்வழி சமூகம்). நீலி என்ற படிமத்தை அவரது பெண் மேல் ஏற்றி உருவாக்கிய ‘கொற்றவை’ போன்ற நாவல்கள் இதன் சிறந்த உதாரணம். மேற்சொன்ன அக்னி என்ற அம்சமே அதிலும் வெளியாவதைக் காணலாம்.
2
எரித்தழிக்கும் அக்னி என்ற அம்சம் எத்தனை முக்கியமானதோ அதற்கு இணையானது நிலைத்து நிற்கும், விடாப்பிடித்தன்மை கொண்டிருக்கும் மண் என்ற அம்சம். கம்பனின் காவியத்தில் எழுந்த சீதை அதற்கு சிறந்த உதாரணம். மண்மகள் அவள். பூமிக்கே உண்டான பொறுமை, கனிவு, நிலைத்திருக்கும் தன்மை, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் தன்மை அவள் கொண்டது.
கம்பனின் காவியம் பூமகள் என்னும் ஆழ்படிமத்தையே சீதையில் ஏற்றி உருவாக்கியிருப்பதைக் காணலாம். இத்தனை அம்சம் சேர்ந்த பின்பும் சீதை ஒரு துன்பியல் கதாபாத்திரம். இராமனும் அவளுக்கு இணையான துன்பத்தை அனுபவித்தவன் தான். ஆனால் இராமனை யாரும் துன்பத்தின் உருவாக கருதவில்லை. மாறாக சீதையின் துக்கமே மண்மகள் தாங்கி நிற்கும் அனைத்து துயருக்கும் இணையாகச் சொல்லப்பட்டது. நதியெல்லாம் கங்கையில் சென்று சேரும் என்ற சொல் போல் மண்ணில் பிறந்த பெண்கள் அனைவரின் துக்கமும் சீதையில் சென்று சேர்கிறது என்றே நம்பிக்கை.
இவை அனைத்திற்கும் மேலாக அவள் கம்பனின் லட்சிய கதாபாத்திரம். காவியங்களிலுள்ள திரௌபதி, கண்ணகி, தமயந்தி எல்லோருக்கும் இணையானவள். அவளையே ஐந்து கன்னியரில் முதன்மையானவளாக வைத்து வழிபடும் வழக்கம் இன்றும் வட இந்தியாவில் உள்ளது. ராமன் ஜனகரின் நாட்டிற்குள் செல்லும் போது அகலிகை கல்லாக இருக்கும் படிமம் குறிப்பது அவளும் மண்மகளின் அம்சம் என்பதே. அவளின் மாற்று வடிவான சீதையை கை சேர ராமனை வாழ்த்தி அவள் வழியனுப்புகிறாள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் சீதை என்ற மண் அம்சம் கொண்ட படிமத்தை தங்கள் கதாபாத்திரமாக எண்ணவில்லை. அப்படி ஏதாவது நவீன கதாபாத்திரம் உருவாகியிருந்தாலும் அவர்கள் பலவீனமானவர்களாக, செயலற்றவர்களாகவே ஆசிரியர் சித்தரித்திருப்பதைக் காணலாம்.
சீதை என்ற கதாபாத்திரம் நேரடியாக நவீன புனைவில் வரும் ஜெயமோகனின் காவியம் நாவலில் கூட அவளிடமிருந்த மண் என்ற அம்சத்தை நீக்கி அக்னியாகவே அவளை சித்தரித்துள்ளார். அறத்தின் வடிவான சீதை அதிகாரத்தின் பொருட்டு, தன் குழந்தைகளின் பொருட்டு அறத்தை மீறிச் செல்பவளாகவே ஜெயமோகனின் பார்வையில் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.
3
சீதையை அவள் கொண்டிருக்கும் அம்சத்துடன், நம் மண்ணில் உறைந்து நிற்கும் அந்த ஆழ்படிமத்துடன் நவீன எழுத்தாளர் முட்டிப் பார்ப்பது ஒருவித சவால். சீதைக்கு நிகராக தன் கதாபாத்திரத்தை எழுப்பி அவளது பலம் குறையாமல் சீதைக்கு இணையாக வைப்பது அத்தனை எளிதான காரியமல்ல. திரௌபதி, கண்ணகியை மீண்டும் எழுதியவர்கள் சீதையை எழுதாமல் விலக்கியதற்கு இதுவும் ஒரு காரணமென சொல்லலாம். கண்ணகியில் வெளிப்படும் நாடகத்தன்மை சீதையிலில்லை. தன்னை கடத்தி வந்த இராவணனின் நாட்டை அவளே எழுந்து எரித்தழிக்கவில்லை. மாறாக கல்லாக சமைந்து அங்கே அமர்ந்திருக்கிறாள். ஆனால் அவள் அவ்வண்ணம் அமர்ந்திருப்பதே அவளது நிலைப்பாட்டை, உறுதியைக் காட்டுகிறது. அது முக்கியமான பெண் அம்சம் என, நம் மரபிலிருந்து எழுந்த ஒரே குரல் என கன்னட எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பாவைச் சொல்லலாம்.
எஸ்.எல். பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ (கிருகபங்கா – மூலம்) அத்தகைய சவாலை எதிர்கொண்ட நாவல்.
நாவல் தொடங்குமிடமே கணக்குப் பிள்ளையான ராமண்ணாவின் இறப்புக்குப் பின் அவரது இரண்டாவது மனைவி கங்கம்மா, அவளது இரண்டு மகன்கள் சென்னிகராயன், அப்பண்ணய்யா மூவருமாக அவர்களது வீட்டின் ஓட்டை உடைப்பதிலிருந்து தொடங்குகிறது. தங்கள் மொத்தச் சொத்தையும் அவர்கள் அறியாமையால் செய்த ஒரு விபத்திற்காக அடகு வைக்கின்றனர். மொத்த குடும்பமும் சிதையும் தருணத்திலேயே நாவல் தொடங்குகிறது.
கங்கம்மாவின் இரு மகன்களும் அவளது சாயல் கொண்டவர்கள். மூத்தவனான சென்னிகராயன் சுயநலமி, சோம்பேறி, மரமண்டை, எதுவும் அறியாதவன், அனைவருக்கும் பயப்படுபவன். இளையவனான அப்பண்ணய்யா முரடன், துடுக்கன், முன்கோபி. ஆனால் அவனும் மடையன். இருவரும் படிபறிவில்லாதவர்கள்.
சிதைந்து கொண்டிருக்கும் இக்குடும்பத்தில் நஞ்சம்மா மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டு வருகிறாள். ஒரு வாசிப்பில் மைசூர் ராஜியத்திலுள்ள தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரெ பிர்காவிலுள்ள ராமச்சந்திர கிராமத்தில் சிதையும் இக்குடும்பத்தின் மேல் சுரண்டும், பரிவு கொள்ளும் மொத்த கிராமத்தின் கதை இந்நாவல் எனக் கொண்டால், மற்றொரு வாசிப்பில் இது நஞ்சம்மாவின் கதை.
நஞ்சம்மாவின் தந்தை கண்டி ஜோசியர் மூர்க்கமானவர், தானொன்று நினைத்தால் அதனை எப்படியேனும் முடிக்க வேண்டுமென நினைப்பவர். அவர் நஞ்சம்மாவிற்காக வரன் பார்க்க தன் குதிரையில் வரும் சித்திரமே அவரை யாரென காட்டிவிடுகிறது. இந்த குடும்பத்தைப் பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் திருமணத்தை நிகழ்த்துகிறார்.
நஞ்சம்மா அவ்வீட்டிற்கு வந்த போது மூவரின் நிலையையும் புரிந்து கொள்கிறாள். அந்த குடும்பம் மொத்தமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது என அவளுக்குப் புரிகிறது. தன் தந்தையை வரவைத்து தன் கணவனுக்கான கணக்குப் பிள்ளை வேலையை மீட்டுத் தருகிறாள். சென்னிகராயன் இயல்பில் அவனுக்கு வேலை செய்ய முடியாது என அறிந்தவுடன் அதனை தானே ஏற்று செய்கிறாள். பெண்கள் கிராமத்தின் கணக்கு எழுதும் வழக்கம் இல்லை என்பதால் அவள் கணவனை முன்னிறுத்தி மறைவாக அதனைச் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் அதில் வரும் வருமானத்தையும் அவன் எடுத்துக் கொள்கிறான். தன்னையும், தன் குழந்தைகளையும் காக்க அந்த வருமானத்தை சாதூரியமாக அவனிடமிருந்து மீட்கிறாள். இனி தொடர்ந்து வருமானம் தன்னிடமே வரும்படி செய்கிறாள். இதனால் கோபம் கொண்ட கங்கம்மா அவள் மேல் வசைமாறி பொழிகிறாள். அவளைப் பழித்துரைக்கிறாள். ஊரில் அவளைப் பற்றி பொல்லாது சொல்கிறாள்.
இந்நாவலில் வரும் கங்கம்மா குடும்பத்தினர் மூவரின் குணாதிசயமும் விசித்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மூன்று மூர்க்கமானவர்கள். அறியாமையும், கர்வமும் ஒருங்கே கொண்டவர்கள் அரிதானவர்கள் என நினைப்போம். ஆனால் நாவல் வாசிக்கும் போதே அதற்கு இணையான நாம் நன்கு அறிந்த நம் சுற்றத்திலுள்ள பல கதாபாத்திரங்கள் நம் மனத்தில் எழுகிறது. கங்கம்மாவின் கதாபாத்திரம் அதற்கு சிறந்த உதாரணம். அவள் தன் பிள்ளைகள் மேல் வெறுப்பு கொண்டவள் அல்ல. அவள் அவர்கள் மேல் அளவு கடந்த பாசமே கொள்கிறாள். அந்த பாசமே அறியாமையாக அவர்கள் மேல் மூடி மொத்த குடும்பத்தையும் அழிக்கிறது.
நஞ்சம்மா தன் தந்தையால், அண்ணனால், புக்ககத்தாரால் கைவிடப்பட்டவள், தன் கொழுந்தனின் மனைவியான சாந்தம்மா தனக்கு துணையாக இருப்பாள் என நினைக்கிறாள். சாந்தம்மாவுக்கு வரும் இக்கட்டுகளில் உதவுகிறாள். ஆனால் சாந்தம்மாவும் நஞ்சம்மா மேல் துவேசம் கொள்கிறாள். அவள் தன் கணவனுக்கு சேரவேண்டிய கணக்குப்பிள்ளை வேலையின் பாகத்தை நஞ்சம்மா பறித்துக் கொண்டதாக நினைக்கிறாள்.
ராமசந்திரா கிராமத்தின் மணியக்காரர் சிவே கவுடா, ரேவண்ண செட்டி, அய்யா சாஸ்திரி, அண்ணா ஜோசியர் என எல்லோரும் வீழும் குடும்பத்திலிருந்து பணத்தை எப்படி பறிப்பது என்ற எண்ணத்துடனே இருக்கின்றனர். முடிந்த வகையில் அதில் சாமர்த்தியமாக வெற்றியும் காண்கின்றனர்.
இப்படி அனைத்து வாசல்களும் மூடப்பட்ட வீட்டில் நஞ்சம்மா தன் மூன்று குழந்தைகளுடன் எப்படி வாழ்கிறாள் என்பதே நாவல்.
தனக்கான ஒரு நிலையான வருமானத்தை ஈட்டிக் கொள்வதன் மூலம் நஞ்சம்மா தன் இருப்பை அங்கே உறுதி செய்கிறாள். ஆனால் யாரிடமும் கோபமோ, பழிச்சொல்லோ அவளிடமில்லை. மாறாக அனைத்தையும் பொறுமையுடனே எதிர் கொள்கிறாள். தன் சாதூரியத்தால் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள். தன் கணவனின் குணமறிந்த பின் அவனை ஒரு நிலையிலும் பழித்துப் பேசவில்லை. வறுமை சூழலில் தன் குழந்தைகளுக்கு செய்து வைத்திருந்த ராகி ரொட்டியை சென்னிகராயன் எடுத்து சாப்பிட்டு உறங்கி விடுகிறான். அவனை ஊரில் பிரம்மச்சாரியாக இருக்கும் மாதேவய்யா கடிந்துக் கொள்கிறார். அவன் இயல்பறிந்த நஞ்சம்மா அவனைக் கடந்து செல்கிறாள்.
இன்று இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பெண்களின் பார்வையில் நஞ்சம்மா எவ்வண்ணம் பொருள் கொள்கிறாள் என என்னால் சொல்லத் தெரியவில்லை. அவள் அனைத்தையும் அனுசரித்துச் செல்வதே ஒரு பெண்ணின் பலவீனமாக அவர்கள் கருதலாம். இத்தனை தொல்லைகள் கொண்ட வீட்டில் அவள் ஏன் வாழ வேண்டுமென கேள்வி எழும்பலாம். ஆனால் என் பார்வையில் அவள் அனைத்திற்கும் மேலாக வாழ்ந்தாள் என்பதே அவளை முதன்மை கதாபாத்திரமாக உணரச் செய்கிறது. அவள் எந்நிலையிலும் தோற்று பின்வாங்கவில்லை. யாரிடமும் அவதூறு கொள்ளவில்லை.
தன் பெண் பார்வதிக்கு நல்ல இடத்தில் திருமணத்தை நிகழ்த்துகிறாள். தன் மூத்த மகன் ராமண்ணனை கம்பனகெரெ சென்று மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் படிக்க வைக்கிறாள். இரண்டாவது மகன் விசுவனுக்கு அவனுக்கான கல்வியை வழங்குகிறாள். யாரிடமும் பணிந்து தோற்றேன் என நிற்கவில்லை. மாறாக உடலுழைப்போ புத்தி கூர்மையோ இல்லாத சாந்தம்மாவால் அந்த வீட்டில் வாழ முடியவில்லை. அங்கிருந்து சென்று தனக்கான மாற்று வாழ்வை தேடிக் கொள்கிறாள்.
நஞ்சம்மாவுக்கு இணையான பெண் கதாபாத்திரங்களின் இருப்பிடம் நாவலில் முக்கியமானது. கங்கம்மா தன் வீட்டை சிவே கவுடரிடம் இழந்த பின் ஊருக்கு வெளியே ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்கிறாள். சாந்தம்மா தன் இருப்பு அறியாத வண்ணம் மறைவாக உள்ளாள். நரசி என்னும் கதாபாத்திரம் கணவனுக்கு அடங்காதவள், கட்டற்ற காமம் கொண்டவள் அவளை பஞ்சாயத்து பேசி ஊர் எல்லையில் தனியாக ஒரு வீட்டில் அமர்த்துகின்றனர். அவளுக்கு ஊருக்குள் ஓர் இடம் அமையவில்லை. மாறாக ரேவண்ண ரெட்டியின் மனைவி, சிவே கவுடரின் மனைவி என யாருக்கும் ஒரு குரலில்லை அவர்களால் வீட்டினுள்ளே அடங்கி வாழ முடிகிறது.
இங்கே பைரப்பா ஒரு மரபுவாதியாக தோன்றலாம். ஆனால் பைரப்பா முன்வைக்க வருவது நம் சமூகத்தில் மீறல் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதே. நம் ஆள் மனம் மரபு மீறிய ஒன்றை செய்யத் துணியாது என்று சொல்லலாம் அல்லது அந்த மரபென்னும் கட்டுக்குள் பெண்களை நிறுத்தி ஆள அறிந்தவர்கள் ஆண்கள் என்றும் வரையறுக்கலாம்.
அய்யா சாஸ்திரி மேற்சொன்ன அனைத்து பெண் கதாபாத்திரங்களிடமும் சாஸ்திரம் படி என்ன செய்ய வேண்டுமென்றே சொல்கிறார். அவர் வழியே அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்கின்றனர். அவரை மீற முடியாத தோல்வியே சாந்தம்மா, நரசி, கங்கம்மாவிடம் வெளிப்படுகிறது. ஆனால் நஞ்சம்மா கணவனை பிரிந்த சாந்தம்மாவை தன் வீட்டில் சேர்த்துக் கொண்டதால் அவளை சாதியிலிருந்து விலக்கி வைக்கும் படி சிருங்கேரி மடத்திலிருந்து ஆணை கொண்டு வருகிறார். நஞ்சம்மா அதனை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. பின் அய்யா சாஸ்திரியை தன் மகளின் முதன்மை சாஸ்திரியாக பணம் கொடுத்து அமர்த்தியதன் மூலம் அதனை வெல்கிறாள்.
4
பிற மானுடர் நம் மேல் ஏற்றும் ஒன்றையே துக்கமென நாம் சொல்கிறோம். மேலே சொல்லும் போது கூட நஞ்சம்மா மேல் பிறர் என்ன செல்வாக்கு செலுத்தினர் என்பதே பார்வையாக உள்ளது.
ஆனால் தத்துவம் துக்கத்தை மூன்றாக வரையறுக்கிறது. ஆத்யாத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம் என மூன்று. அத்யாத்மீகம் என்பது பிற மனிதர்களால் நமக்கு ஏற்படும் துன்பம். அது தன் பரப்பளவில் அதிகம் என்றாலும் அதனை வெல்வது எளிது. பிறரை நாம் பொருட்படுத்தவில்லை என்றால் அவர்களால் ஏற்படும் துன்பமும் பொருளில்லாமல் ஆகிவிடுமே. நஞ்சம்மா சென்னிகராயன் மேல் அமைதி கொண்டது அதன் காரணத்தாலே. பிறரை வென்றது அந்த அறிவினாலே.
இரண்டாவது துக்கம் ஆதி பௌதீகம் பிற பொருட்களால் நமக்கு ஏற்படும் துக்கம். நஞ்சம்மா தன் கணவனின் வீட்டை இழக்கிறாள். குண்டே கவுடரின் நிலத்தில் தான் செய்த பயிரையும், காய்கறிகளையும் பஞ்சத்தால் இழக்கிறாள். ஆனால் ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீண்டு வருகிறாள். வேறு வேறு காரணங்களால் அவளிழக்கும் பொருள் பற்றிய சித்திரம் வருகிறது. ஆனால் அவையனைத்தையும் அவள் மீட்டும் விடுகிறாள்.
மூன்றாவது துக்கமே தலையாயது. அதுவே விதியென நாம் சொல்கிறோம். அதற்கு தீர்வு/விடை ஒன்றே. அதனை ஏற்று முன்னகர்வது. சீதை முதல் நஞ்சம்மா வரை விதிப்பயனால் வரும் ஒன்றை வெல்ல முடியாது என அறிந்தவர்கள், ஆனால் அந்த துக்கத்தையும் தன் மேல் ஏற்றி வாழ்ந்தவர்கள்.
தென் கர்நாடக கிராமத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிளேக் நோய் திரும்பத் திரும்ப வந்து மக்களை அழித்தது. இது பற்றிய சித்திரம் யு.ஆர். அனந்தமூர்த்தியின் சமஸ்காரா நாவலிலும் வரும். ஆனால் சமஸ்காரா பிளேக்கை ஆசாரமான ஒருவர் தன் ஆசாரம் மீறும் பொருளாக எடுத்துக்கொள்ளும்.
பைரப்பாவின் கிருகபங்கா வெல்ல முடியாத ஒன்று என அதே பிளேக்கை சித்தரிக்கும். நஞ்சம்மா தன் மகள் பார்வதிக்கு நல்ல இடத்தில் திருமணம் நிகழ்த்தி வைக்கிறாள். ஆனால் அது முடிந்த ஒரு மாதத்திற்குள் பார்வதிக்கு பிளேக் நோய் வந்துவிடுகிறது. அவளால் ராம்மண்ணாவும் பாதிக்கப்படுகிறான். ஒரே வாரத்தில் நஞ்சம்மா தன் இரு குழந்தைகளை இழக்கிறாள். விசுவன் பிளேக் வந்து பிழைத்துக் கொள்கிறான். ஆனால் அவனையும் தான் பிரிந்து விடுவோமோ என்ற பதட்டம் அவளைத் தொற்றிக் கொள்கிறது.
புத்திர சோகத்திலிருக்கும் நஞ்சம்மா தனக்கான ஒரு சொந்த வீட்டைக் கட்டும் எண்ணம் கொள்கிறாள். அதனை செய்தும் முடிக்கிறாள். ஆனால் அதற்குள் செல்லும் முன் அவளும் பிளேக் நோய் வந்து இறந்துவிடுகிறாள்.
தன் குழந்தைகளை இழந்தவள், விசுவனை பாதுகாக்க வேண்டியவள் ஏன் அந்த வீட்டை கட்டினாள் என்பது புதிரான கேள்வி. அவள் வீட்டைக் கட்டி முடித்த பிற்பாடே அவள் ராமசந்திரா கிராமத்தில் தன்னை முழுதாக நிலைநிறுத்துகிறாள். நாவலின் தொடக்கத்தில் கங்கம்மா வீட்டை இழக்கிறாள். அதன் பின் அவள் வீட்டில் மூவரும் தங்கியதேயில்லை. பைரப்பாவின் நரசி, சாந்தம்மா, கங்கம்மா கிராமத்திலுள்ள பிற பெண்கள் செய்யவே முடியாத ஒன்றை நஞ்சம்மா செய்துக் காட்டுகிறாள். அதன்பின் அதனை விதிவசத்தால் அனுபவிக்காது அங்கிருந்து மறைகிறாள். இதுவே காவிய சோகம் என்பது.
சீதையின் துக்கமென்பது ராமனோ, ராவணனோ உருவாக்கியதல்ல. சொல்லவே முடியாத விதியின் துக்கமது. அதற்கு அர்த்தமென ஒன்றில்லை.
நஞ்சம்மாவின் வாழ்க்கைச் சித்திரம் காட்டுவது புரியாத அந்த பெரும் புதிரைத் தான். நஞ்சம்மா பிற மானுட, பௌதீக துக்கத்தை கடந்தவள் அதனை தன் நிமிர்வால் வென்றவள். அதனாலே வெல்லமுடியாத பெரும் துக்கத்தையும் அறிந்தவள்.
எது நஞ்சம்மாவை பெருங்கருணையின் வடிவாக, பொறுமையின் உருவாக, கனிவின் முகமாக நிறுத்தியதோ அதுவே அவளிடம் வந்து முட்டிப்பார்த்து அவளை அசைத்து சென்றதன் துக்கம் அது.
நஞ்சம்மா நிலைத்து நிற்கும் இந்த மண்ணின் அம்சம். மண்மகள் அனைத்தையும் அறிந்தவள், அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவள். அனைத்தையும் அவளை கொண்டு விளக்கிய பின்னும், பொருள்படாத துக்கம் அவளுள் உறைந்தே இருக்கும். அதுவே சீதை முதல் நஞ்சம்மா வரை காவியங்கள் சென்று சென்று மீளுருவாக்கம் செய்ய நினைக்கும் நம் மனதிளுள்ள ஆழ்படிமம்.
இதன் காரணமாகவே எஸ்.எல். பைரப்பா எழுப்பிய நஞ்சம்மாவுக்கு இணையான ஒரு பெண் கதாபாத்திரம் இந்திய நவீன நாவல்களில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
அவள் துக்கம் சொல்லித் தீர்வதல்ல. அதனாலே எழுத்தாளர்கள் அவளைச் சொல்லில் நிறுத்துகின்றனர்.
***
அஞ்சலி: எஸ்.எல். பைரப்பா