இந்திரநீலம் வாசிப்பனுபவம் -1 

இந்திரநீலம் நாவலின் தொடக்கத்தில் முனிவர் குணிகர்க்கர் கதை வருகிறது, எப்போதும் வெண்முரசு நாவல் வரிசையின் தொடக்க பகுதி அந்த நாவல் பேசும் பொருளை குறிப்புணர்த்தும் பகுதியாக இருக்கும். இந்த முனிவரின் கதை மற்றும் அவள் மகளின் கதை இணையத்தில் தேடி வாசித்த போது நேரெதிராக இருந்தது. முனிவர் பிரம்மச்சரிய விரதம் கொண்டவர் , அதன் வழி சக்தி நிரம்பியவராக ஆனார், தனது சக்தியை கொண்டு தனது மகளை படைத்தார் . அவளும் பிரம்மச்சரிய விரதம் கொண்டவள் , பிறகு முதிர்ந்து கடைசி காலத்தில் இருக்கும் போது நாரதர் வந்து அவளிடம் பேசினார் , பெண் தனது காமத்தை அடைந்த பின்புதான் நிறைவடைவாள் என்கிறார் , அவள் பிறகு சென்று தனது தவ வலிமையில் பாதி தருகிறேன் என்று கூட சிருங்கவான் என்ற முனிவர் அவளிடம் ஒருநாள் கூடுவார், பிறகு அவள் நிறைவு அடைவாள் என்று கதை செல்லும் . இந்த நாவல் இந்த கதையை வேறொரு கோணத்தில் காட்டுகிறது , முனிவர் தவம் இருந்து பொன்னிறம் அடைகிறார் , பிறகு அதை நீரில் கண்டு தன் உடல் மீது விருப்பம் கொள்கிறார் , அப்படி தவசிகள் பார்க்க கூடாது , ஆனால் தன் ஆவல் மிகுதியால் அதை செய்கிறார் . இந்த கதையின் துவக்கத்தில் இவர் தவம் செய்ய ஏகத்வீபம் என்ற யாருமற்ற தீவை தேர்ந்தெடுக்கும் இடம் அப்போது நாரதர் உடன் இருப்பார் , யாருமற்ற முற்றிலும் தனிமையில் தவம் இருக்க போகிறேன் என்பார் முணிகர்க்கர் , நாரதர் காலங்கள் பருவமாற்றங்கள் கொண்டது என்று அந்த கால மாற்றங்களின் பெயர்களை சொல்லி சொல்வார் , முனிவர் காலங்கள் என் கட்டுபாட்டில் இருப்பவை என்பார் . என் வாசிப்பு புரிதலில் முனிவர் துறவு என்பதை தன்னை இறுக்கி கொள்வதாக கொண்டார் என தோன்றியது . இப்படியான இறுக்கம் ஒரு எல்லையில் வெடிக்கும் , அது இந்த கதையில் தன்னை தன் உடல் பொன்னிறம் கண்டதை மோகிப்பதாக ஆக்கியது , அந்த மோகம் சுற்றி இருந்த இயற்கையை மோகிப்பதாக ஆகி, பிறகு அது பெண்ணிடம் அடைந்து அவர் தன் மகளை பெறுவதாக இந்த கதை அமைந்தது . வெண்முரசு நாவல் வரிசையின் ஒரு அம்சம் ஒரு கதையை யதார்த்தத்திலும் அதேசமயம் மாய எதார்த்தத்திலும் வைத்து காட்டும் , ஒரு கால நிலத்திலும் ஒரு கால் அந்தரத்திலும் இருப்பதை போல ! இந்த கதையில் முனிவர் நதியில் தனது ஆடியில் இருந்து உருவகித்து பெண்ணை நீரில் இருந்து எடுத்தார் என்று வரும் , கூடவே ஒரு மலைமகள் நீரில் சிக்கி அங்கு வந்து சேர்ந்தாள் என்றும் வரும் . இணையத்தில் குணிகர்க்கர் கதை படித்த போது பிரச்சர்யம் அவரது சக்தி என இருந்தது . இந்த நாவல் பிரம்மச்சரியத்தின் போக்கின் முடிவில் , தனது இறுக்கி கொண்டு செல்லும் தவபோக்கால் அவர் வீழ்ந்த காண முடிந்தது .
குணிகர்க்கர் மகள் கதையும் சற்று மாறி நாவலில் இருந்தது , இணையத்தில் வாசித்த போது அவளுக்கு நாரதர் சொன்னதால் ஆணை அடைய சென்றாள் என்று வரும் , ஆனால் நாவல் இதை வேறு விதத்தில் சுவாரஸ்யமாக சொல்கிறது . குணிகர்க்கர் தவம் செய்த யாருமற்ற தீவிலேயே அவளும் இருக்கிறாள் , அங்கு முனிவரை திரும்ப காண எண்ணி வரும் நாரதர் இவளை பார்க்கிறார் , யார் என்று விசாரிக்கும் போது அவள் தந்தையின் கதையை சொல்கிறாள் ( பொன்னிறம் அடைவது , தன்னை ரசிப்பது , அது இயற்கை , பிறகு பெண் என ) அதன் வழியாக தான் பிறந்ததை சொல்கிறாள் , தனக்கு ம் பிரம்மச்சரியம் காக்க ,அதன் வழி செல்ல தந்தை வழி கூறினார் என்கிறாள் ,அப்போது அவள் முதிர்கன்னியாக இருந்தாள், நாரதர் அவளுள் ஏக்கமாக இருந்த காம விருப்பத்தை அவளுக்கே காட்டுகிறார் , கதை இதை மிக அழகாக காட்டும் .அவளுக்கு நாரதர் பிரம்மச்சரியத்தை தவிர்த்து வேறு வழி பிரம்மத்தை அடைய காட்டுகிறார் , சக்தி வழிபாடு பற்றி சொல்கிறார் , இந்த இடத்தில் நாவலாசிரியர் பிரபஞ்சத்தை பெண்ணாக உருவகித்து முன்வைக்கும் பிரபஞ்ச உருவாக்க கோட்பாட்டை , உருவாகி வந்த நிலையை காட்டுகிறார் , வெண்முரசு நாவல் வரிசையில் இப்படி நாவலாசிரியர் இந்திய தரிசனங்கள் முன்வைக்கும் தரிசனங்களை , அதன் கோட்பாடுகளை , அவற்றின் பிரபஞ்சம் உருவாகி வந்த விதமாக சொல்லும் காட்சிகளை வாசிக்கும் நமக்கு கதையின் போக்கில் அழகாக சொல்லி செல்வார் , அந்த தரிசனம் அந்த கதை பகுதியில் அழகாக பொருந்தியும் , அந்த கதை பகுதியில் அந்த தரிசனம் பற்றி மேலதிகமான புரிதலையும் தரும் விதமாக இருக்கும் .
இணையத்தில் இருந்த கதையில் இவள் முனிவர்கள் இருக்கும் பகுதியில் சென்று தனது தவத்தின் பயனில் பாதியை அளிக்கிறேன் என்னுடன் கூட வருபவர்களுக்கு என்று கூறுவாள் , அங்கு இருந்த சிருங்கவான் எனும் முனிவர் அதற்கு முன்வருவார் என்று வரும் , ஆனால் இந்நாவலில் நாரதர் சொல்வதை கேட்டு தவம் செய்ய மீண்டும் இளமை திரும்புவாள், தன்னில் பாதியை அளித்து நீரில் தனது ஆடி வழியாக சிருங்கவானை பெறுவாள் , இதில் இரண்டு விசயங்கள் ஒன்று தந்தை முன்பு அவளிடம் நீரில் உன்னை பார்க்க கூடாது என்று சொல்லி இருந்திருப்பார் , தன்னை ரசிப்பது என்பதே காமம் தன்னில் இருப்பதற்கான அடையாளமோ என தோன்றுகிறது , ஏனெனில் நாரதர் வந்த போது நீ முதிர்கன்னி ஆனது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்பார் , நீ உன்னை பனிதுளியில் பார்த்து இருக்கிறாய் என்பார் , இரண்டு இந்த நாவலில் வரும் சிருங்கவான் முனிவர் அல்ல , மலைமகன் ,அவளின் தந்தைக்கு அமைந்ததை போல நீரில் இருந்து வந்தவன் !
இந்த வெண்முரசு நாவல் வரிசையின் மகத்தான காட்சி அனுபவங்களில் ஒன்று இவள் தன் உடல் விட்டு வெளியேறி செல்லும் காட்சி , அதில் உவமை மற்றும் காட்சி அனுபவம் அவ்வளவு ஈர்ப்பாக இருக்கும் .
இணையத்தில் தேடிய போது குணிகர்க்கரின் கதை பிரம்மச்சரியத்திற்கும் , அவர் மகளின் கதை திருமணம் , கூடலின் முக்கியத்துவத்தை பேசும் முன்னுதாரண கதைகளாக இருந்தது , இந்த நாவலின் பேசு பொருளை முன்வைக்கும் துவக்க பகுதியாக இந்த கதை இருந்தது , நாவல் கிருஷ்ணனின் திருமண நிகழ்வுகள் , அவர் மனைவி அவரிடம் கொண்ட அன்புகள், அவை வெளிப்படும் வெவ்வேறு வடிவிலான வெளிப்பாடுகள் , மேலும் திருஷ்டத்யும்னனின் காதல் பற்றி எல்லாம் பேசுகிறது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *