
வீட்டைச் சுத்தம் செய்த போது வாங்கி வைத்து வாசிக்காமல் இருந்த மாத இதழ்கள் நுாற்றுக்கும் மேல் இருந்ததை தனியாகப் பிரித்து வைத்தேன்.
காலச்சுவடு, உயிர்மை, தீரா நதி, விகடனின் தடம் என நிறைய இதழ்கள் இருந்தன. தமிழினி, செம்மலர், நம்ம நற்றிணை,கணையாழி போன்றவற்றில் சில.
மே 2017 காலச்சுவடு இதழில் அசோகமித்திரனின் படம் அட்டையில். ஆர்வம் உந்த அவ்விதழை மட்டும் தனியாக எடுத்து வைத்து வாசித்தேன்.
அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எட்டு கட்டுரைகள் அவ்விதழில் இருந்தன. அதை எழுதியவர்கள் முறையே அ.முத்துலிங்கம், சச்சிதானந்தன் சுகிர்தராஜா, லேகா ராமசுப்பிரமணியன், ஜனனி, பழ.அதியமான், விமலாதித்த மாமல்லன், சேரன், ஏ.எஸ்.பத்மாவதி.
அ.முத்துலிங்கத்தின் கட்டுரையில் உள்ள வரிகள்தான் இப்பத்தியின் தலைப்பாக நான் வைத்திருப்பது.
அ.முத்துலிங்கம் அசோகமித்திரனைப் பற்றி எழுதிய வரிகள் இவை
“புதுமைப்பித்தனுக்குப் பிறகு நான் ஆர்வமாகப் படித்தது அசோகமித்திரனைத்தான். ஆர்ப்பாட்டமில்லாமல், அலங்காரம் செய்யாமல் நெஞ்சைத் தொடுமாறு நேராக எழுதிவிடுவார். சம்பாசணைகள் பாய்ந்து பாய்ந்து செல்லும்.இடைவெளிகளையும் ஊன்றிப் படிக்க வேண்டும். ஒரு வார்த்தை அதிகம் இராது. குறைந்தும் இல்லை. நான் நண்பர்களுக்கு அடிக்கடி சொல்வேன். “அளவெடுத்து தைத்த சட்டை” என்று. அவருடைய ஒற்றன், தண்ணீர் நாவல்களை எந்த உலக இலக்கியத்தோடும் ஒப்பிடலாம். எத்தனை தரம் வேண்டுமானாலும் திருப்பிப் படிக்கலாம். அலுப்பு வராது”
பழ.அதியமான் எழுதிய கட்டுரையில் ரேடியோவுக்காக அசோகமித்திரனை மூன்று மணி நேரத்திற்கும் மேல் பேச வைத்திருப்பதாகவும், அதைப்புத்தகமாக கொண்டுவரவேண்டும் என அரவிந்தன் அனுமதி பெற டில்லி அகில இந்திய வானொலிக்கு எழுதியிருக்கிறார் என்றும் சொல்லியுள்ளார். அது நுாலகவில்லை என்றுதான் தோன்றுகிறது.
அவர் கட்டுரையில் நீண்ட நாள்கள் வாழ்வது குறித்து அ.மி.க்கு இருந்த மதிப்பீடென ஒன்றை நினைவு கூர்கிறார்.
“நுாறு வருஷம் வாழவேண்டும் என்று யாராவது சொன்னால் பளார் என கன்னத்தில் அறைய வேண்டும்” என்று தோன்றுகிறது. முதுமையின் வலியை உணர வைக்கும் வரிகளாக.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா தன்னுடைய கட்டுரையில் சினிமாவில் நடக்கும் பாலியல் விசயங்கள் குறித்து அசோகமித்திரன் மனித இயல்பின் தன்மைகொண்டு கதைகள் எழுதியுள்ளார் என்றும் போட்டியாளர்கள் என்கிற சிறுகதையைச் சிலாகித்து எழுதியுள்ளார். அதில் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி, வைஜயந்திமாலா போட்டி நடன ஒத்திகையின்போது, பத்மினி வீட்டில் அருகில் இருந்த சினிமா கம்பெனியின் காரோட்டி ஒருவர் பத்மினியைப் பார்த்து சுய இன்பம் செய்ததையும், அதை பத்மினி அறிந்து வருத்தம் கொண்டதையும் சிறுகதையாக எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். எனக்கு இந்த தகவல் ஆச்சரியம் அளித்தது.
அசோகமித்திரன் தனக்காக அவமானப்பட்டதை கட்டுரையாளர் எழுதியுள்ளார். அ.மாதவையாவின் தில்லை கோவிந்தன் தமிழ்ப்பதிப்பு நாவலைத் தேடி அலைந்திருக்கிறார். அசோகமித்திரனிடம் கேட்டபோது சென்னையில் அப்போது அ.மாதவையாவின் உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் கிடைக்கும் என்று அ.மி.அந்த உறவினரின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த உறவினருக்கு அ.மி.நன்கு தெரியும். கட்டுரையாளரும் அ.மி. யும் சென்று கதவைத் தட்டியிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொண்ட அ.மாதவையாவின் உறவினர் “உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? என்று சொல்ல முடியாத வார்த்தைகளைச் சொல்லி திட்டி அனுப்பியிருக்கிறார். தன்னால் அ.மி. அவமானப்பட்டாலும் அந்த முறை திரும்பும் போது அ.மி. தில்லை கோவிந்தன் தமிழ்ப்பதிப்பினை வாங்கித் தந்திருக்கிறார் என்று நன்றி தெரிவித்துள்ளார்.
விமலாதித்த மாமல்லனின் கட்டுரையில் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு அசோகமித்திரனை அழைத்துப்போக தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார் கடற்கரை. வண்டி, தரமணியைத் தாண்டும்போது நடைபாதையில் வடநாட்டவர்கள் பொம்மைகளைக் கடை பரப்பி இருந்திருக்கிறார்கள். அவர்களின் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி அசோகமித்திரன் ஒரு பொம்மையை வாங்கியிருக்கிறார். அப்போது அவர் இப்படிச் சொல்லியதாக வி.மாமல்லன் குறிப்பிட்டுள்ளார்.
“இத வெச்சுண்டு நாம என்ன பண்ணப்போறோம். ஆனா நம்பள மாதிரி நாலுபேர் இதை வாங்கறதுலேந்து வர காசு, எங்கேந்தோ ஊர்விட்டு ஊர்வந்து பிளாட்பார்ம்ல வாழந்துண்டு இருக்கிற இவாளோட ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஆகுமில்லையா?
யார் என்ன நினைப்பார்களோ என்கிற அரசியல் சரி பற்றிய கவலை துளியுமின்றி இலக்கியக் கூட்டங்களில் பிராமண பாஷை பேசிக்கொண்டும் இறுதிவரை பூணுால் அணிந்து கொண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தவர்தான், முன்பின் தெரியாத வேறு ஏதோ பாஷை பேசிக்கொண்டு தரமணியில் நடைபாதை பொம்மை விற்றுக்கொண்டிருந்த மனிதக் கூட்டத்தையும் அதன் விடிவற்ற வாழ்வையும் வாஞ்சையுடன் பார்த்தார் என்று விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரன் பொறுப்பில் கணையாழி வெளிவந்த காலத்தில் அவ்விதழில் முஸ்தபா என்கிற பெயரில் ஒரு பத்தி தொடர்வந்து கொண்டிருந்தது. அதனை யார் எழுதினார்கள் என்று தெரியாது. வெங்கட்சாமிநாதன் பற்றி அதில் சில விமரிசனக் குறிப்புகள் வெளிவந்துள்ளன. அது குறித்து வெங்கட் சாமிநாதன் “ முஸ்தபா ஒரு மதகு.அதன் கீழே ஒளிந்து கொண்டு அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் கல்லெறிகிறார்கள்” என்று எழுதியுள்ளார். எவரின் மனமும் புண்பட்டு விடக்கூடாது என்று தன் வாழ்நாள் முழுக்க கண்ணும் கருத்துமாகச் செயல்பட்ட அ.மி. மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு,
ஏ.எஸ்.பத்மாவதி என்பவர் அ.மி.உறவினர். அ.மி. இறப்பிற்கு 25 நாட்களுக்கு முன்னர் மருத்துவர் கு.சிவராமனுடன் அவரைப் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது அ.மி. சொன்னதாக அவர் எழுதியுள்ள வரிகள் என்னையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது.
அசோகமித்திரன் தனக்கு இரத்த அழுத்தம் இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார். யாருக்காவது வேலை போய்விட்டது என்று கேள்விப்படுவது தன் துாக்கத்தைக் கெடுப்பதாகவும், எழுதக்கூடிய நாட்களில் எழுதி முடித்தபின் தன்னால் நிம்மதியாகத் துாங்க முடிகிறது என்று பதிவு செய்துள்ளார்.
தண்ணீர் நாவலில் இருந்து சில பகுதிகளை கட்டுரையாளர் சிலாகித்துள்ளார்.
ஜமுனாவிற்கு டீச்சரம்மாவிற்குமான உரையாடலின் வரிகள் இவை
“உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளே தானிருக்கு. உன் கண்ணுக்குள்ளேயிருக்கு. உன் கண்ணு வெளியிலே ஒண்ணையும் பாக்கறதில்லை. யாரைப் பார்த்தாலும் அவங்களைப் பாத்துக்கிற மாதிரியில்லாமே கண்ணாடியிலே உன்னை நீயே பார்த்திக்கற. உன் கண்ணாடி பூதம் காட்டுற கண்ணாடி. ஏன் உனக்குள்ளே இவ்வளவு சுயநலமே நிறைஞ்சிருக்கு? உனக்கு என் மத்தவங்களப் பாக்கவே முடியலை? ஏன் உனக்கு மத்தவங்கள பத்தி நினைக்க முடியலை? மத்தவங்களைப் பத்தி கவலைப்பட முடியல?”
“உன்னைப் பத்தி யாராவது கவலைப்பட்டாத்தான் உனக்கு அவங்கள பத்திக் கவலைப்பட முடியுமா? ரொம்பச் சின்னத்தனமாயில்லே? ஏன் இப்படி ஏழையா இருக்கே? உன் துக்கம் கஷ்டம் எல்லாம் நீ இப்படி ஏழையா இருக்கறதினாலேதான். உனக்கு உன்னத் தவிர வேற யாருமே கிடையாது. நீயே சுத்த ஏழை. ஏழை ஏழைகிட்டெ என்ன பெற முடியும்?”
“.இந்தக் குழந்தைங்க இவ்வளவு பெரிய தவலையைத் துாக்க முடியாதபடி துாக்கிண்டு போறது. பாவம் ஏதோகுடிசைலேதான் வாழ்ந்து கொண்டிருக்கும்.இன்னும் எவ்வளவு துாரம் போகணுமோ? இந்த தவலைத் தண்ணி முழுக்க இந்த குழந்தைகளுக்குத்தானா? பாவம் ஒரு நாளைக்கெல்லாம் மூணு நாலு தம்பளர் தண்ணி குடிக்கப் போறது. இந்தக குழந்தைகள் வீட்டில வேறே பெரியவங்க அதட்டி மிரட்டித் தண்ணீர் எடுத்துவரச் சொல்லியிருக்காங்கனு சொல்லலாம். ஆனா மிரட்டலுக்கு மட்டும் குழந்தைகள் இவ்வளவு கஷ்டமான வேலையெல்லாம் செய்ய முடியுமா? பாதித் தண்ணியை வழியிலேயே கொட்டிவிடலாம். தண்ணியே எங்கேயும் கிடைக்கலன்னு சொல்லி வெறும் பாத்திரத்தைத் துாக்கிண்டு போகலாம். ஆனா அப்படி செய்யல. இந்த குழந்தைகள் அளவிலேகூட அதுகளோட சக்திக்கு மீறி வேறு யாரோ சவுகரியத்துக்குத்தான் பாடுபடுகிறது. இதைப் பாத்தா உனக்கு உன் கஷ்டம்தான் பெரிதுன்னு எப்படித் தோண முடியும்?“
”எல்லா விஷயத்திலும் ஒரு பாலன்ஸ் வேணும். ஒரு மனுஷன் பெண் வர்க்கத்துகிட்ட நியாயமில்லாம நடந்துகிட்டா அவன் – அவன் வர்க்கத்துகிட்டயும் நியாயமில்லாமதான் இருப்பான். இது எதிர்மறையாகவும் பொருந்தும்.”
