அறப்பாதையின் தினப்பொழுதுகள்.

இந்தியாவின் பெரும்பாலான இடங்கள் கண்ட மாற்றத்தினைப்போல நான் வந்திருக்கும் இந்த ஊரும் தன் பழைய முகத்தை மாற்றி இருந்தது. ஒரு சிறு நகரத்தின் அனைத்து வசதிகளும் கிடைத்தன. எனக்குச் சொல்லப்பட்டத் தங்கும் விடுதியில் இருந்தவர் பின்புறமிருந்த பலகையைக் காண்பித்து அறை இல்லை என்றார். 

அடுத்து இதேபோல் ஒரு தங்கும் விடுதியைத் தேடும் சவால் என் முன் இருந்தது. பயணக் களைப்பில் தேடுவது அலுப்பைக் கொடுத்தது.

 நல்லவேளை பக்கத்தில் இருந்த விடுதியில் அறை இரண்டாவது தளத்தில் தருவதாகச் சொன்னவர்கள். யாராவது தெரிந்தவர்கள் சொல்லவேண்டும் என்றார்கள்.  

நான் யாரென்பதையும் எனது விசிட்டிங் கார்டையும் கொடுத்தபோது அவர்கள் என்னுடன் பழகவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்கள். 

அறையைத் திறந்துவிட வந்தவர் என் ஊரில் உள்ள சிலப்பெயரைக் கேட்டு ‘தெரியுமா’ என்றார். நான் தெரியாது என்று சொல்லிவிட்டுக் குளியலறைக் கதவைத் திறந்தேன்.

“இண்டியன் டாய்லெட்டா” என்றேன்.

“இப்போ நிறைய பேர் இந்தியன் டாய்லெட் வேணும்ன்னுக் கேட்கிறாங்க சார்.” என்றுப் பொய் சொன்னார். இரண்டாவது மாடியில் கம்பிகளால் தகர சீட்டில் போட்டிருந்த கொட்டகையை அரையடி அகலச் சுவரால் தடுத்து ஃபால் சீலிங்க் செய்திருக்கிறார்கள். செலவைக் கருதி கழிப்பறையில் ஃபால் சீலிங் போடாமல் இருந்தது.

மூன்று பேர் படுப்பதற்கான படுக்கை வசதியுடன் அறை விசாலமாக இருந்தது. 

எனது பயணப் பேக்கை கீழே வைத்துவிட்டு கையிலி மாற்றி குளித்துவிட்டு நான் வந்த வேலையை முடிக்க வெளியே வரும்போது எதிர் வரிசையில் இருந்த அறையின் வெளியே வசீகர அழகுடைய சிறுமி ஹிஜாப் அணிந்து நின்று கொண்டு இருந்தது. காரணமே இல்லாமல் அந்தச் சிறுமியை எனக்கு மிகவும் பிடித்தது. தங்கும் விடுதியின் நடுவில் செவ்வக வடிவில் இடம் விடப்பட்டிருந்ததால் நான் இருக்கும் தளத்தின் மேலேயும் தகர ஷீட் தெரிந்தது. எங்களுக்குள்ளான இடைவெளி குறைவாக இருந்ததால் நான் சலாம் சொன்னேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி பராக்கத்துஹூ.”

அதன் குரலும் மிகவும் இனிமையாக இருந்தது. அந்த சிரிப்பின் மகிழ்வோடு எனது வேலையாக நான் வெளியே சென்றுவிட்டேன்.

வெளியே வெயில் அனலாகத் தகித்தது. குறிப்பிட்டு வந்த வேலைகளை முடிப்பதற்கும் மதியம் உணவெடுக்கும் நேரம் வரவும் சரியாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து அறைக்கு மேலே செல்லும்போது நினைவுக்கு வந்தது.’எப்பொழுதும் இதுபோன்ற விடுதிகளில் தங்கும் பொழுது சாவியை மட்டும் கழட்டி ஸ்விச் ஆன் செய்யும் கார்டை அப்படியே வைத்து ஏசியைப் போட்டுவிட்டு வருவது எனது வழக்கம். இன்று செய்ய மறந்தது வருத்தத்தை தந்தது. வெயிலில் சட்டை முழுவதுமாக நனைந்திருந்தது. கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் காற்று அனலாக வீசிக்கொண்டு இருந்தது.

எதிர் அறையில் பூட்டுத் தொங்கிக் கொண்டு இருந்தது.அந்த சிறுமி ஊருக்குப் போயிருக்கலாமென நினைத்து நான் கதவைத் திறந்து உள்ளே வந்தேன்.

ஏசியும்,பேனையும் போட்டுவிட்டு உடையை மாற்றி கைக்கால் முகம் கழுவி வரும்போது தான் கவனித்தேன் கதவின் நிலைக்கட்டையின் வலது ஓரம் கீழேயிருந்து சிவப்பு எறும்புச் சுள்ளான் என்று ஊரில் சொல்வார்கள். நெளிந்த கோடாக படுக்கைக்கு கீழே சென்றது. குளியலறைக்கு நேர் எதிரே உள்ள சுவரிலிருந்து வாஷ்பேசினின் அடிப்பகுதியை நோக்கி ஒரு வரிசையில் சுள்ளான் சென்று கொண்டு இருந்தது. நான் இரண்டு இடத்திலும் பார்த்தேன் அங்கே அப்படி அவை செல்வதற்கான எந்த உணவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

நான் எனது பேக்கைப் பார்த்தேன். அதன் சைடுப் பகுதியில் வாட்டர் பாட்டில் வைக்கும் இடத்தில் வரும்போது சாப்பிட்டு முடித்த கொஞ்சம் மிக்சரும்,பிரித்தக் கடலை மிட்டாயும் இருந்தது. 

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அந்தப்பேக்கைச்சுற்றி வாசல் கதவின் நிலை இருக்கும் வாசலை நோக்கி சில சுள்ளான்கள் செல்கிறது. வாசலின் நிலைப் பகுதியிலிருந்து குளியலறை நோக்கிச் செல்லும் சுள்ளான்களை நோக்கிச் சில சுள்ளான்கள் செல்கின்றது. ஆனால் எதுவுமே பேக்கின் சைடில் உள்ள உணவை எதுவும் செய்யவில்லை.

எனக்குச் சுள்ளான் என்றாலே அதன் மேல் கோவம் வரும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் வீட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சியைத் தின்ட்ற கடுப்பு வேற நினைவுக்கு வந்தாலும் ஏனோ அவைகளின் மேல் பிரியம் வந்தது.

எனக்குப் படுக்க கொஞ்சம் இடம்.நடந்து சென்று குளிக்க கொஞ்சம் பாதை. அவைகள் ஏதாவது செய்துவிட்டு போகட்டுமென நான் தூங்கச் சென்றுவிட்டேன். 

ஐந்து மணிக்கு நான் வைத்த அலாரம் அடித்ததும் எழுந்தபோது லைட் வெளிச்சத்தில் சுள்ளான்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ரிஷப்சனுக்குச் சொல்லி கூட்டச் சொல்லலாம இல்லை விளக்கமாற்றை எடுத்து நாமே கூட்டி வெளியே தள்ளி விடுவோமா என்று யோசித்தபோது எனது பேக்கின் சைடில் இரண்டு சுள்ளான் கீழே இறங்கிக் கொண்டு இருந்தது. நான் மிக்சரையும்,பிரித்தக் கடலை மிட்டாயையும் எடுத்துப் பார்த்தேன். அவைகளில் சுள்ளான்கள் இல்லை. அப்படியே இருந்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பும்போது தான் கவனித்தேன் ஒரு அரை இஞ்ச் கம்பளிப்புழுவா வேறு ஏதாவது புழுவா என்று சொல்ல முடியாத அளவிற்கு வழுவழுன்னு நகர்ந்து கொண்டு இருந்தது.

அது நகர்ந்தது பார்க்க அழகாக இருந்ததால் அதை வீடியோ எடுக்கலாமென கைப்பேசியை எடுத்து வந்தபோது அதன் பின்புறம் ஒரு சுள்ளான் ஏறிவிட்டது.இரண்டு முறை முழு வட்டமாக சுருண்டது. நான் வீடியோ எடுத்தபோது சுள்ளானை அது தின்கிறதா இல்லை சுள்ளான் அதனைக் கடிக்கிறதா என எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. புழுவை நோக்கி ஒரு சுள்ளான் போகாமல் அதன் கொஞ்ச தூரத்தில் சுற்றிக் கொண்டு இருந்தது.

நான் எனது ஆராய்ச்சியைத் தொடராமல் நான் குளித்துவிட்டு எதனையும் மிதித்துவிடாமல் ஏசியைப் போட்டுவிட்டு குளியலறை முன்பிருக்கும் லைட்டை போட்டு வைத்தால் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாது என்பதை உறுதி செய்துவிட்டு அதை மட்டும் போட்டு வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன்.

அந்த ஹிஜாப் சிறுமி சாலையோரம் உள்ள அறைகளின் முன்பிருந்த இடத்தில் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது. இப்போது அது சொன்னச் சலாத்திற்கு நான் பதில் சொல்லிவிட்டு கீழே இறங்கும்போது எதிரே ஒருப் பையனும் ஒருப் பெண்ணும் வலது பக்கமாக ஒதுங்கிச் சென்றார்கள்.

***

2.

      எனது வேலைகள் முடிவதற்கு எட்டு மணி ஆனதால்  சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்லலாமென சாப்பிடக் கடையை நோக்கிச் செல்லும் போது ஒரு யோசனை வர. பெட்டிக்கடைக்குச் சென்று ‘லட்டு,அல்வா இருக்கா’என்று கேட்கும்போதே மைசூர் பாக்கு கண்ணில்பட அதைக் கொடுங்கள் என்றேன். கடைக்காரர் அரைக்கிலோ லட்டு டப்பாவைக் காட்டி அதை எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எனக்கு இரண்டு போதும் என்றேன். அவர் இரண்டு மட்டும் மீதமுள்ள டப்பாவை தேடி எடுத்துக் கொடுத்தார். 

‘எனக்கு டப்பா வேண்டாம். பேப்பரில் மடித்துக் கொடுங்கள்’என்று வாங்கிக்கொண்டு சாப்பிடும் கடைக்கு சென்று மேஜையைத் தேர்ந்தெடுத்து பரோட்டா வேண்டும் என்றேன். அந்தப்பையன் கடையின் ஸ்பெஷல் அயிட்டம் எல்லாவற்றையும் ஒப்பிக்க நான் ஆம்லேட் போதும் என்றேன். 

“சிங்கிளா..டபுள் சைடு ஆம்லேட்டா சார்”

“டபிள்.” என்று நான் சொன்னபோது கடைக்குள் இருபதுபேருக்கு மேல் இருக்கலாம் சாப்பிட வந்து  அமர்ந்தார்கள். கடையில் இருந்த எல்லோரும் இலைபோடுகிற பரபரப்பில் இருந்தார்கள். 

நான் இரண்டு பரோட்டா சாப்பிட்டுவிட்டு ஆம்லேட் கேட்டுக் கேட்டு அழுத்து விட்டேன். ஏனென்றால் மூன்றாவது பரோட்டாவை வைத்துக்கொண்டு நான் டபுள் ஆம்லேட் சாப்பிட வேண்டும். டபுள் சைடு ஆம்லேட் நான் சொன்னதே சப்ளே செய்யும் பையனுக்காகத்தான். அவர்கள் எல்லோரும் என்னை விட்டு விட்டு கும்பலாக வந்தவர்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார்கள்.

ஒரு பரோட்டாவையும் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தேன். வந்தவர்கள் எல்லோரும் கிளம்பி செல்ல ஆரம்பித்தார்கள். இரண்டு பேருக்கு மட்டும் தான் இங்கு பிரியாணி இருக்கிறதாம். அவர்கள் எல்லோருக்கும் பிரியாணி இல்லை என்பதால் அவர்கள் அடுத்த ஹோட்டலைத் தேடி செல்வதாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

எனக்கு ஆர்டர் எடுத்தப்பையன் ஆம்லேட் எடுத்து வந்தார். எனக்கு நான்காவது பரோட்டாவை ஒருவர் வைத்தார். நான் எனக்கு வைத்த ஆம்லேட்டை கொஞ்சம் தூக்கிப் பார்த்தேன். அதற்கு காரணமிருக்கிறது. அங்கே கல்லிலிருந்து ஆம்லேட் எடுக்கும்போது அவர்கள் முகம் மாறியது. ஆம்லேட் போட்ட ஓனர் யாரோ ஒருப் பையன் அவரிடம் ஆதார்க் கார்டு, பான் கார்டு , ரேசன் கார்டு இவைகளோடு ஏதோ ஃபார்மைக்காட்டி சொல்லிக் கொண்டு இருந்தான். ஓனர் ஆம்லேட் போட்டதை மறந்துவிட்டார். ஓரளவு நான் அனுமானித்தவனாக அந்தப்பையனிடம் மீண்டும் தூக்கிக் காட்டினேன். 

கருகிப்போன ஆம்லேட்டை திருப்பிப் போட்டு என் தலையில் கட்ட நினைத்த அவர்களின் தந்திரத்தை நான் அறிந்ததை அறிந்த அந்தப்பையன் ‘இந்தா உடனே ஆம்லேட் தருகிறேன்’ என்று வைத்த ஆம்லேட்டை எடுத்துக்கொண்டார் 

“எனக்குப் போதும் தம்பி. வேண்டாம். நான் வேண்டுமானால் இந்த ஆம்லேட்டுக்கும் பணம் தருகிறேன்.”

“சாப்பிடாமல் நாங்கள் பணம் வாங்க மாட்டோம் சார். அடுத்து சாப்பிட நம்ம கடைக்கு வாங்க சார். மதியமும் இங்க சாப்பாடு நல்லா இருக்கும்.வாங்க சார்.”

“கண்டிப்பாக வருகிறேன். தம்பீ.”

“சார்…மடிச்சி வச்சிருக்கிறது.

வடையா சார்.”

“இல்லைத் தம்பீ… ஜன்னல்ல எறும்புகள் இருந்துச்சு. அதான் அதுக்குப் போடலாம்ன்னு லட்டு வாங்கிட்டுப் போறேன்.”

அந்தப் பையன் எதுவுமே சொல்லாமல் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் எதுவும் நினைத்திருக்கலாம்.

படியில் ஏறி எனது அறைக்குத் திரும்பும் போது ஹிஜாப் சிறுமியைப் பார்த்தேன் முகம் வாடியபடி பொம்மைகளை அடுக்கி ஏதோ செய்து கொண்டு இருந்தார். நான் அறையைத் திறக்காமல் மேலே செல்லும் படிக்கட்டில் அமர்ந்து ‘என்னாச்சு’என்றுக் கேட்டேன்.

“வாப்பா உம்மாவுக்கு வார்த்தை சொல்லப் போறாக.”

“வார்த்தை சொல்றதுன்னா.”

“அஸ்தஹ்பிர்ருல்லாஹ். தலாக் சொல்லப்போறாங்க.”  சண்டைகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால் போர் நடைபெறும் நாடுகளில் உள்ளக் குழந்தைகளைப் போல தனித்த மெச்சூரிட்டி அந்தக் குழந்தையிடம் காண முடிந்தது.

கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம். அவர்கள் அறையில் விவாதங்கள் நடப்பது தெரிந்தது.

“உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் என்னதான் பிரச்சினை.”

“உம்மா… வாப்பாவோட உம்மா, வாப்பாவைக் திட்டுவாக. வாப்பா உம்மாவோட வாப்பா, உம்மாவைத் திட்டுவாக.”

“இவர்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை இருக்காம்மா.”

“அவர்களால்தான் இவர்களுக்குள் பிரச்சினைகள் வரும்.”

நான் சொன்னவைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிறுமி என்னிடமிருந்த கைபேசியைக் வாங்கி அவள் விளையாடிய இடத்தில் அமர்ந்து பேசியதை ஆடியோவாக அவளின் வாப்பாவுக்கு அனுப்பிவிட்டு என்னிடம் கொடுத்தது. 

அதன் அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. பிள்ளையின் கண்ணீரை காவு வாங்கிக்கொண்ட பெற்றவர்வர்களின் மேல் கோபம் வந்து. அந்தப் பிள்ளையை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட ஆசை வந்தது. ஏதாவது தவறாகிவிடுமோ என்ற தயக்கத்தில் இதற்மேல் இங்கு இருந்தால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது என்று எழுந்து விட்டேன். அந்தப் பிள்ளை என்னை பார்த்தப் பார்வை இப்பொழுது சித்திரமாக நினைக்கும் பொழுதெல்லாம் காட்சியாக தெரிகிறது.

அறைக் கதவிடம் வந்ததும்தான் லட்டுப் பொட்டலத்தை படியில் வைத்தது நினைவுக்கு வந்தது. அதை எடுக்கும்போது பிள்ளை பேசியதைக் கேட்கலாமென நெக் பேண்டை ஆன் செய்துக்கேட்டேன். 

‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பராக்கத்துஹூ வாப்பா. நடக்கிறதை எல்லாம் பார்க்கிறபோது நீங்கள் வார்த்தை சொல்வது உறுதியாகத் தெரிகிறது வாப்பா. நீங்கள் என் மேல் கொண்ட பாசம் உம்மா என்னைப் பார்த்துக்கொள்ளும் விதத்தையும் நினைக்குப்போது அழுகையாக வருகிறது வாப்பா. இங்க ஒரு அங்கிளைப் பார்த்தேன். அவர்தான் என்னை உங்களுக்குப் பேசச்சொன்னார். நீங்கள் இருவரும் சேர்ந்துவிட்டால் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு விருந்திற்கு வாருங்கள் என்றார். உங்களுக்கு கொடுவா மீன் ஆனம் பிடிக்கும் என்பதையும் உம்மாவும் இறைச்சிப் பிரியாணி பிடிங்கும்கிறதையும் கேட்டுக் கொண்டார் வாப்பா. எனக்கு என்ன பிடிக்கும்ன்னு அவர் கேட்கவே இல்லை. இதுபோல ஒருத்தரை இதுவரை நான் பார்க்கல வாப்பா. இன்ஷா அல்லாஹ் இதன் பிறகு நீங்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

இந்த அங்கிள் உங்க வாப்பா உம்மா சேர்ந்து வாழ்ந்தால் மட்டும்தான் எனக்கு போன் பண்ணனும் இல்லை எனக்கு போன் செய்யக்கூடாது என்றார். எனக்கு ஒரு முறை போன் நம்பரைச் சொன்னால்  அது மனப்பாடமாகிவிடும் என்பது உங்களுக்குத்தான் தெரியுமே. அவர் உங்களை இந்த நம்பருக்கு போன் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். எனக்காக இதை மட்டுமாவது செய்யுங்கள் வாப்பா. அந்த அங்கிள் எங்கே அழுதுவிடுவோமோ என்று அவசரமாக என்னிடமிருந்து நகர்ந்துவிட்டார். படியில் ஏதோ பேப்பரில் மடித்து வைத்திருந்ததை எடுக்க வரும்போது அவரைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல இருந்தது வாப்பா. அவர் என்ன சொன்னார் தெரியுமா வாப்பா. அஸ்தஹ்பிர்ருல்லாஹ்… உம்மா வாப்பா பிரிஞ்சிட்டா எனக்கு போன் செய். உன்னைய நான் அழைச்சிக்கிட்டுப் போயிறேன். அங்கே உனக்கு ஒரு ஆன்டி இருக்காங்க. அவங்க தன் மகனையும் மகளையும் நன்றாகப் படிக்க வச்சி வேலைக்கு அனுப்பி இருக்காங்க. உன்னைய நல்லா பார்த்துப்பாங்க. அவுங்களுக்கு குரான் ஓதத் தெரியாது. உன்னைய பள்ளிக்கு காலையில் குரான் ஓத அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்றேன். நாம் ஜாலி ஊர் சுத்தலாம். உனக்கு எங்களால சொர்க்கத்தை இங்கேயே அறிமுகப்படுத்த முடியும். கவலைப்படாதே’ என்றார். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்ன்னு அல்லாஹ் தன்னை அழைப்பதில் எந்தத் தவறும் இல்லைதானே வாப்பா. அடிக்கடி நீங்கள் மாத்திரை போடுவதை மறந்து போய் விடுவீர்கள். நான் செட் செய்து கொடுத்த அலாரம் நேரம் தவறாமல் மாத்திரைகள் போடுவதற்கு ஞாபகமூட்டுகிறதா வாப்பா.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பராக்கத்துஹூ.

தாழ்ந்த குரலில் சன்னமாக அந்தக் குழந்தை சோகம் ததும்ப பேசி இருந்தது.

எனக்கு அந்தக் குழந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பெயரைக் கூட கேட்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. இதற்காக என் மனைவி என்னிடம் சண்டைகள் போட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பிறருக்கு உணவுகள் அளிப்பதிலும் பிள்ளைகளின் மேல் பாசம் கொள்வதிலும் அவர் தனித்த சந்தோசம் கொள்ளக்கூடிய ஆள். எதிர் அறையில் பேசிக் கொள்ளும் சத்தம் இப்போது என் கதவிடம் நிற்கும்போதேக் கேட்டது.

நான் இப்போது என் அறையைக் கவனித்தேன். நூற்றுக்கணக்கான எறும்புகள் இரண்டு வரிசையில் தொடராகப் பயணித்துக் கொண்டு இருந்தது. அந்தப் புழுவைக் கொன்று சில எறும்புகள் அவைகள் சண்டை இட்ட இடத்திலிருந்து கதவின் நிலைக்கட்டை நெறுங்கிச் சென்றுவிடும் தூரத்தில் இழுத்துச் சென்றது. அப்போது சுள்ளான் தான் அந்தப்புழுவை கடித்துக் கதற விட்டு இருக்கிறது. குறிப்பிட்ட தூரத்தில் சுற்றிய சுள்ளான் அடுத்த தாக்குதலுக்கு நேரம் பார்த்து சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறது.

நான் வாங்கி வந்த லட்டைக் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு. நிலைக் கட்டையின் அடியில் கொஞ்சமும் வாஷ்பேசனின் கீழேக் கொஞ்சமும் அதற்கு எதிரே இருந்த சுவர் ஓரமாக கொஞ்சமும் போட்டு விட்டு உடைகளை மாற்றி படுக்கையில் படுத்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இவைகளை மகளிடம் சொல்லும்போது காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீடியோவும் போட்டோவும் எடுத்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தேன்.

அலாரம் அடித்ததும் எங்கே இருக்கிறோமென்ற உணர்வே இல்லாமல் எழுந்தததும் தான்  அறையில் இருந்த விளக்குகளை அணைக்காமல் தூங்கி இருக்கிறோம் என்பது தெரிந்தது. கீழேச் சுள்ளான்கள் கூட்டம் தனக்கான வரிசைகளை அமைத்து தரையின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. இப்பொழுது அவைகள் புழுவை நிலைக்கட்டையிலிருந்து வாஷ்பேசனுக்கு எதிரே இருந்த சுவர் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருந்தது. புழு பழைய நிலையிலிருந்து சிதைந்திருந்தது. லட்டுத் துகள்களின் அளவுகளும் குறைந்து இருந்தது. நிர்வாகத்தில் உள்ளவர்கள் திட்டுவார்களோ என்ற அச்சம் எனக்கு வந்தது. நான் புதிதாக வாங்கிய சட்டையைப் பிரித்து அறையின்  ஒரு மூலையில் அதன் அட்டை, காகிதங்கள், பிளாஸ்டிக் பேப்பர், வாழைப்பழத் தோள், கொஞ்சம் லட்டுத் தூள், மிக்சர் தூளைத் தூவி அதனால்தான் சுள்ளான் வந்தது என்று நினைக்கட்டுமென்று வைத்துவிட்டு வெளியே கிளம்பும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

****

 3.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும்,

‘சார்.. என்னோட பர்த் யூ14 நான் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறேன்.இங்கேய நிற்கட்டுமா.”

“நீங்கள் பாரதி நகர் வந்துருங்க சார். அப்பல்லோ மெடிக்கல்க்கு எதிர்ல இருக்கிற பஸ் ஸ்டாப்ல நின்னுங்க சார்.” என்றார்.

அங்கே இருந்து ஆட்டோவுக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு வந்து இறங்கி அந்தப் பஸ் ஸ்டாப்பில் வந்து உட்கார்ந்து இருந்தேன். 

பஸ் ஸ்டாப்பின் பின்புறம் உயர்தர அசைவ ஹோட்டல் அலங்கார விளக்குகளில் நேர்த்தியாக இருந்தது. நான் வாட்ச் மேன் பெரியவரிடம்,

“அய்யா… பெங்களூர் பஸ் இங்கதானே நிற்கும். “

“ஆமாம் சார்”

“யூரின் போகனும் இங்க எங்க போகலாம்.”

“சார்.. நீங்க ஒண்ணு செய்யுங்க. இந்த ஹோட்டல் உள்ள நேராக போங்க வலது கை பக்கமாக திரும்புங்க. அங்க டாய்லெட் இருக்கு. அங்க போயிட்டு வாங்க. நீங்கள் யாரிடமும் எதுவும் கேட்காமல் நேராக உள்ளாறப் போயிருக்க.”

அவர் சொன்னதுபோல உள்ளே சென்று யாவையும் முடித்து வந்தது பயணத்திற்கு ஏதுவாக இருந்தது. அவருக்கு இருவது ரூபாய் பணம் கொடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது வாகனம் ஒன்று வர அதை பார்க்கிங்கில் சரியாக போட அவர் சென்றுவிட்டார். பேருந்து இன்னும் வரவில்லை.

எல்லா ஊர்களிலும் பஸ் ஸ்டாப்பில் சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதுபோல் இங்கும் ஒட்டி இருந்தார்கள். இங்கு மேல் கூரையின் உள்பகுதியில் மூன்று பக்கமும் ஒட்டி இருந்தார்கள்.

தங்க நகைகளை மீட்டு விற்பது, காணவில்லை விளம்பரம், பல் பொடி விளம்பரம், எம்.எஸ் ஆபீஸ் , சி,சி ஃப்ளாஷ், டேலி, பைத்தான் சொல்லித்தரும் கணிணி விளம்பரம், மூலம் ,பௌத்திரம் சிகிச்சை போஸ்டர் வழக்கமான அதே மட்டிக்கலரில் ஒட்டப்பட்டிருந்தது.

காதர் டாக்டர் இங்கு வருவார் போல.ஊரில் ஒரு முறை ஆபீஸ் விளம்பரத்தை இந்த டாக்டர் போஸ்டர் ஒட்டி இருக்க அவரைத் தேடி சென்று இதுபோல் மறைத்து உங்கள் ஆட்களை ஒட்ட வேண்டாம் என்று சொல்லலாமென சென்றால் அங்கு வடக்கிலிருந்து வந்த ஒருவர் அந்த அறையில் துணி மறைப்புக்கு உள்ளிருந்து

“என்ன வேண்டும் ” என்றார்.

“டாக்டர் காதர்”

“நான் தான் சார் “

நான் வந்த செய்தியை சொன்னபோது எந்த இடமென விவரமாக கேட்டவர். ‘நான் தான் நேற்று இரவு ஒட்டினேன்’  என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நகரம், கிராமம் ஒரு இடம் விடாமல் இவர்தான் ஒட்டுகிறார் என்ற நினைப்பு வந்ததும் அவர் மேல் இரக்கம் வந்துவிட்டது. தூரம் தொலைவிலிருந்து குடும்பத்தை விட்டு வந்து இங்கு ஒரே ஆளாக உழைப்பதை நினைக்கும்போது அவர் மேல் மரியாதை வந்தது.

“சார் உங்க ஆளுங்க என் போஸ்டரை மறைக்கிறாங்க சார்.”

நான் சிரித்தேன். மல்டி கலரில் விளம்பர போஸ்டர் பார்க்கவே எங்களுடையது அழகாக இருக்கும். ‘ஒன்ரையனா போஸ்டரை’ வச்சிகிட்டு என திட்டுவதற்குத்தான் நான் அங்கு சென்றேன். நான் நினைத்தால் அவரை இந்த ஊரில் வைத்தியம் பார்க்க விடாமல் சிக்கல் செய்யலாம். என் உறவினர்கள் இந்த மாவட்டத்தில் டான்னாகத் திரிகிறார்கள். அரசியலிலும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த நகரத்தில் ஆரம்ப முதல் நான் வெளியூர் ஆள் என்று தான் எல்லோரிடம் பதிய வைத்திருக்கிறேன். ஒரு பத்து சதம் பேருக்கு தான் நான் யாரெனத் தெரியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குல மூர்க்கம் எட்டிப்பார்க்கும். அந்த அருவருக்கத்தக்கச் சிந்தனைகளை ஏதாவதொரு எளிய உண்மை ஒன்று எனக்குள் கோபத்தைக் காணமலாக்கிவிடும். இப்போது அவரின் உழைப்பு அந்த வேலையைச் செய்தது. நான் திட்டாமல் வந்ததன் கேள்விகள் அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது.

பெங்களுர் செல்லும் பேருந்து வந்துவிட எனது பேக்கை எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இடத்தை திரும்பிப் பார்த்துவிட்டு பொருட்கள் எதும் அங்கே தவறவிடவில்லை என்ற உறுதிப்படுத்தலில் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன். இந்த முறை வருகைக்கான மகிழ்ச்சி பயணத்தை உற்சாகமாக வைத்திருந்தது.

டிரைவர் கத்திய சத்தத்தில் விழித்து வெளியேப் பார்த்தால் சீனியப்பாக் கடையில் டீ குடிக்க நிறுத்தி இருந்தார்கள். அந்தக் கடை தென்னந்தோப்பில் இருந்தது. அந்தத் தோப்பின் உள்ளே பாதையமைத்து கழிவறைகள் அமைத்திருந்தார்கள். அங்கு போக மின் விளக்கு எரிவதில் பிரச்சினை என்றால் அதுபற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அவர்கள் இருந்தது வருத்தமறளித்தது. கைபேசி வெளிச்சத்தில் சிறுநீர் கழித்து கை,கால்,முகம் கழுவி டீக்கு டோக்கன் வாங்கப் பணம் கொடுத்தால் அதை வாங்காமல்,

‘அதை ஏன்டி அவுங்ககிட்ட சொன்ன.நான்தான் வர்றேன்னு சொன்னேனே. அதுக்குள்ள என்னடி அவசரம். அவன்கிட்ட கையைக் கட்டி நான் நிக்கனும். அதைத்தான்டி எப்பவும் பண்ட்றே….”

“சார்….லெமன் டீ.”

“உன்னையத் தொரத்தி விடாம. வச்சிருக்கேன் பாரூ..”

“சார். லெமன் டீ. இத்தனைக் கோபம் வேண்டியதில்லை சார். இதை நீங்கள் வீட்டில் போய் டீல் செய்திருக்கலாம். இப்போ பாருங்க. இங்கே நீங்கள் அப்செட். அங்கே அவர்கள் அப்செட். கொஞ்சம் யோசிங்க அதுவொரு சப்பை மேட்டராக இருக்கும்.”

அவர் முகம் பிரகாசமாக மாறிவிட்டது.

“சார். உங்களை நான் எங்கேப் பார்திருக்கேன் சார். எந்த ஊர் நீங்கள்.”

நான் சிரித்தபடி டோக்கனை பெற்று லெமன் டீ வாங்கி சாப்பிடும்போது டிரைவர் வண்டியை எடுக்க தயாரானார். நான் டீயோடு வண்டிக்குள் ஏற நடக்க டிரைவர், ” மெதுவாக சாப்பிட்டு ஏறுங்க சார்.”

“லெமன் டீ நல்லா இருக்கு சார். நாட்டுச்சக்கரைப் போடச் சொல்லிச் சாப்பிடுங்க.” என்றேன். அவர் வேண்டாமென தலையாட்டி பேருந்துக்குள் ஏறினார். 

*****

4.

        பெங்களுர் பொம்மச்சந்திரா பயோக்கான் மெட்ரோ ஸ்டாப்பில் இறங்கி நடந்தபோது ஆபீஸ் சிந்தனை வந்தது. சப் வே வழியாக வெளியேறி லெட்சுமி கஃபேயில் டிபன் வாங்கிக்கொண்டு பார்ச்சூன் சிட்டிக்கு ஹோட்டலுக்கு பக்கத்து ரோட்டில் இறங்கிபோது அங்கு புதிதாக பிஜி வருவதாக சொன்னது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  வித்யா நகர் இரண்டாவது தெருவிலிருந்த டீக்கடையில் சமோசா வாங்கியபோது பசு மாடு ஒன்று அங்கு நின்று கொண்டு இருந்தது. அதற்கு ஒருவர் மோரீஸ் வாழைப்பழம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். ரிலையன்ஸ், ஸ்பிக் நிறுவனங்கள் இந்த வாழைக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி விளைச்சளை வாங்கி வியாபாரம் செய்கிறது.அதன் வரலாறு மற்றும் புவியியலை நினைக்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

வீட்டிற்கு வந்து பையைக் கழட்டி வைத்துவிட்டு கழிவறைக்கு சென்று உடலை சுத்தம் செய்து கீழே உட்கார்ந்து மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பையிலிருந்து இரண்டு சுள்ளான்கள் வெளிக்கதவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

மனைவி டீ போட சென்றது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

அதைப் பின்தொடர்வது எனக்குச் சுவாரசியமாக இருந்தாலும் யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்லும் தயக்கம் அதிகமாக இருந்தது. இவைகள் இங்கு எங்கே செல்லும். இவைகளுக்கும் அன்டை மாநிலப் பிரச்சினைகள் இருக்குமா.வாசல் நிலைக்கட்டையைக் கடந்து அந்தக் காலனியின் பின் பக்கம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. 

முன்பக்கம் சென்றால் மருந்துக்கடைக்காரர் வீடு அவர் மனைவி லாவண்யா என்னிடம் ஏதாவது கேட்க வாய்ப்பு இருக்கிறது. பின் பக்கம் இருப்பது கன்னடக் குடும்பம் என்பதால் அவர்கள் என்னைப் பார்த்தால் வீட்டிற்குள் சென்று விடுவார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு கன்னடம் தெரியாது.

அவர்கள் வீட்டைக் கடந்து அவைகள் எங்கோ சென்று கொண்டு இருந்தது. ஒரு வேலை அவர்கள் காதலர்களாக இருக்குமோ. இவைகள் முன்பே திட்டமிட்டு இங்கு வந்திருக்குமோ. ஒரு வேலை அவைகளின் உறவினர்கள் இங்கு இருப்பார்களோ. அவைகள் முதல் மாடியின் படிகள் இறங்கும் பகுதிக்கு வரும்போது இங்குமங்கும் சுற்றியது. அதன் இயல்பான பயணத்தில் கொஞ்சம் பரபரப்பு கூடி இருந்தது. அந்த நேரத்தில் மனைவி அழைத்தார்கள்.

“டீ ரெடியாயிருச்சு வாங்க. அங்க என்னப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.”

“போன் லைன் தெளிவாக இல்லை. இதோ வருகிறேன்.”

“ஓய் பை ஆன் பண்ணீங்களா.”

“இதோ வருகிறேன்.”

இப்பொழுது அவைகள் கீழிருந்து கைப்பிடி சுவரில் ஏறியது. அவை மறுபடியும் இயல்பாக மேலே ஏறியது. எனக்கு வேலைகள் இருப்பதால் இதற்கு மேல் பின் தொடராமல் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

வந்த வேலையை முடிப்பதற்கு ஜிக்கினி செல்வதற்கு முன் போன் செய்து விசாரித்தால் சரியாக இருக்குமென்று நினைத்தேன். பெங்களூர் வாகன நெரிசலின் நோவினைகளுக்கு ஜிகினி சாலைகள் பிரதானமானது. காலையும் மாலையும் அந்தப் பக்கம் எந்த ஆட்டோவும் வரமாட்டார்கள். இரவு எட்டு மணிக்கு பிறகும் ஆட்டோ வரமாட்டார்கள். ‘ரவுடிகள் அடிதடித்துக் கொள்வார்கள். ஆட்டோவை மறித்து மிரட்டுவார்கள்.நேற்று இரவு எனது நண்பனைக் கொன்னுட்டாங்க சார்’ என்று முன்பு ஒரு முறை ஆட்டோ ஓட்டுநர் வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்களைக் காட்டினார். பார்க்கவே பயமாக இருந்தது.

அவர்கள் அடுத்த மாதம் வரச்சொன்னதால் மெஸஜ்டிக்கு சென்று நண்பரைச் சந்தித்துவிட்டு ஊருக்கு கிளம்புகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். மனைவியும் மகளும் மெஜஸ்டிக் வருகிறேன் என்று சொன்னதால் ஊருக்கு கிளம்புவதை அடுத்த நாள் தள்ளி வைத்தேன்.

தோழர் லசபாவுக்கு(அவர் பெயர் பார்த்திபன் என்பதே மறந்து போகும் போல என்று கபிலன் சாரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது) போன் செய்தால் வழக்கம் போலவே அவர் அழைப்பை எடுக்கவில்லை.

மதியம் சமைப்பதற்கு காய்கறிகள் வாங்கி வரலாமென வெளியே வந்தபொழுது எதிரிலிருந்த கைப்பிடிச்சுவரில் இரண்டு சுள்ளான்களும் தெற்கு நோக்கி சென்று கொண்டு இருந்தது. தெற்கு நோக்கி போவதற்கு கொஞ்ச நேரம் முன்பு அவைகள் ஏன் வடக்கு நோக்கி அந்தக் காலனியின் கடைசிவரை சென்றது என்ற கேள்வி விடை தெரியாமல் எனக்குள் இருந்தது.

பார்ச்சூன் சிட்டி லாட்சிஜ்ஜில் இருக்கும் வாட்ச் மேன் தம்பி வணக்கம் வைத்தார். அங்கு தங்கியபொழுது அவருக்கு செய்த உதவிக்கான பதில் மரியாதை என நினைத்துக்கொண்டு சிரித்து செய்கையிலையே நலம் விசாரித்து விட்டு நகர்ந்தேன்.

பயோக்கான் ஹெப்பக்குடி மெட்ரோவிற்கு முன்பு இருந்த சப்வேயில் இறங்கி தான் எதிர்ப்புறம் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வேண்டும். அந்த சப்வேயில் மின் விளக்கு ஒன்று எரிந்து வெளிச்சம் தருவதாக நம்பச் சொன்னது. மாநிலத்தின் மிகப்பெரிய பொருளாதாரம் புலங்குமிடத்தில் இத்தனை அசௌகரியமாக இவர்கள் இதை வைத்திருக்கூடாது. 

முன் கூட்டியே கிளம்புவதால் வந்த ஊருக்கே சென்று ஒருநாள் அங்கிருந்து விட்டுப் பிறகு ஊருக்கு செல்லலாமென முடிவெடுத்து நான் தங்கி இருந்த லாட்ஜ்ஜிற்குப் போன் செய்தேன்.சுள்ளானுக்கு இனிப்பு வைத்தது பற்றிக் கேட்பார்களோ என்றத் தயக்கம் இருந்தது.

“நூருல் ஹக்கா சார்.”

“ஆமாம். சொல்லுங்கள். நீங்கள் யாரு.”

“306 நம்பர் ரூம்ல தங்கி இருந்தேனே ஞாபகம் இருக்கா சார். நாளைக்கு அங்கே வர்றேன் ரூம் வேணும்.”

” வாங்க சார் பார்த்துக்கலாம்.”

மனைவியிடம் ஷிஃபா லாட்ஜ் விசிட்டிங் கார்டை கொடுத்து வைக்கச் சொல்லிவிட்டு கொஞ்ச படுத்துக் கிடந்தேன். மனைவி சமைக்கச் சென்றார்.

ஊரிலிருந்த ஆபீஸிலிருந்து கீர்த்தனா போன் செய்து அன்றை விவரங்களைச் சொன்னார்.

மகளுக்கு பனிரெண்டு மணி நேரம் நின்றே வேலை பார்ப்பதால் கால்கள் இரண்டும் அடிபாகத்தில் கையால் தொட்டால் நோவுமளவிற்கு வீங்கி இருந்தது. கவலையாக இருந்தது. வெரிக்கோஸ்ப் பெயினாக மாறினால் என்ன செய்யவதென்ற அச்சம் எனக்கு கவலையை மேலும் அதிகமாக்கியது. இதை இவர்களிடம் சொன்னால் பயப்படுவார்கள் என்று நான் இதுபற்றி அவர்களிடம் பேசாமல் இருந்தேன். 

உலகம் முழுவதும் நின்று கொண்டு வேலைகள் பார்ப்பவர்கள் பற்றிய சிந்தனைகள் வந்து வந்து போனது. லண்டனில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த நண்பரின் தம்பிக்கு சிறுவயதிலேயே வெரிக்கோஸ் பெயின் வந்த அவன் கால்களைப் பார்க்க பயமாக இருக்கும். ஒவ்வொரு நரம்புகளும் நெளிந்து நெளிந்து வெளியே தெரிவதும் அவன் படும் வேதனையும் சொல்லி மாளாது. இதுபற்றிய கட்டுரை ஒன்று எழுதுவது இப்பொழுது வரை நிறைவேறாமலையே இருக்கிறது.

இரவு பேருந்தில் செல்லும்போது அந்த சுள்ளான்களை விடத்தான் பெங்களூர் வந்தோமோ என்று நினைத்தேன். அவைகள் இருக்க இடம் கிடைத்திருக்குமா. அவைகளுக்கு உணவு கிடைத்திருக்குமா போன்ற சிந்தனைகளோடு தூங்கிப் போனேன்.

******

5.

      ஷிஃபா லாட்ஜில் எனக்கு அந்த சிறுமி தங்கி இருந்த அறையை ஒதுக்கினார்கள். தற்செயலான நிகழ்வு என்றாலும் எனக்கு முகம் வாட வைக்கும் சிறுமியைப் பற்றிய  சிந்தனைகள் எட்டிப்பார்த்தது. அறையில் பேக்கில் இருந்த அன்றாடத் தேவைகளுக்கான யாவையும் எடுத்து வைத்து வாசனைத்திரவியத்தை தடவி அந்த அறையை எனக்கானதாக மாற்றிவிட்டு குளித்து முடித்து வெளியேறினேன்.  

நான் முன்பிருந்த எதிர் அறையில் இருப்பவர்கள் கதைவை மூடிக்கொள்வது தெரிந்தது.

போகும் வழியில் ஆம்லேட் கருக வைத்துப் போட்ட ஹோட்டல் தம்பி அந்த வழியாக போகிறவர்களை சாப்பிட அழைத்துக் கொண்டு இருந்தார். அவர் கையில் வைத்திருந்த காகிதத்தில் அவர் பெயர் மற்றும் கைபேசி எண்ணை எழுதி தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தர உதவி கேட்டார்.நான் அதை கைபேசி கவரில் வைத்து விட்டு 

“எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன் அப்பாஸ்.”

“சாப்பிட வாங்க சார்.”

நான் சிரித்துவிட்டு நகர்ந்து விட்டேன்.

நாளை ஊருக்கு செல்ல மதியம் நான்கு மணிக்கு இரயில் என்பதால் நான் வந்த வேலைகளை திட்டமிட்டபடி முடித்துவிட்டு அறையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க படுத்திருந்த போது அறைக் கதவு தட்டப்பட்டது. குழப்பமான சிந்தனையோடு  கதவைத் திறந்தால் அழகான இளைஞர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

“ஸாரி சார். உங்களைத் தொந்தரவு பண்ணதற்கு மன்னிக்கவும். பர்சனலாக பேசனும். கொஞ்சம் டையம் தரலாமா சார்.”

நான் கதவை மூடுவதற்கு தயங்கிபோது அதைப் புரிந்து கொண்டு அவர் எனது அறையின் குளியலறை ஓரமாக போடப்பட்டிருந்த பெட்டில் ஓரமாக அமர்ந்தார். அவர் அமர்ந்தது அவர் பேசுவது வெளியேக் கேட்கக் கூடாது என்ற எச்சரிக்கையான செயலாக எனக்கு தோன்றியது.

“எனக்கு நீங்கள் யாருன்னே தெரியவில்லை. அதுவும் என்னிடம் என்ன உதவி உங்களுக்கு தேவையாக இருக்கப்போகிறது.அதுவும் இந்த ஊரில்.”

“நாங்கள் உங்களுக்கு எதிரில் உள்ள அறையில் தங்கி இருக்கிறோம். நானும் அவளும் ஒரேக் கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறோம் சார். இரண்டு பேரும் வேறு வேறு சாதி.”

அவர் சொல்லச் சொல்ல இதில் நான் எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சொல்லி முடிக்கும்போது எனக்கு மாரி செல்வராஜ் அவர்களின் படம் பார்ப்பதுபோல் இருந்தது.

“எல்லாமே சரிதான் சார். நான் என்ன செய்ய வேண்டும்.”

“சார் இன்றையத் தேதியில் அமெரிக்கா போறதே சிரமம் சார். எங்க இரண்டு பேருக்கும் அங்கே வேலை கிடைச்சிருக்கு. இந்த சமயத்தில் தான் நாங்க காதலிக்கிறது அவுங்க வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு சார். அதனால்தான் நாங்க எங்க ஆபீஸ்லப் பேப்பர் போட்டு அமெரிக்கா போக முடிவு எடுத்தோம்.”

“போக வேண்டியதுதானே.”

“அதுக்குள்ள அவ வீட்டில் பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டு ஊர் ஊராக அலையுறோம். அவுங்க கண்ணில் மாட்டினால் நிச்சயமாக கொன்றுவாங்க சார். நாங்க வாழனும் சார்.”

அவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதில் நான் எந்த வகையில் உதவ முடியும் என்று தெரியவில்லை. என் தம்பி ஆனந்தன் என்று இவர்களுக்கு தெரிந்திருக்குமோ இல்லை மதன் எனது சகலை என்று தெரிந்திருக்குமோ இவர்கள் தான் எங்கள் மாவட்டத்தில் அரசியல்வாதிகளேப் பயம்படும் நபர்கள். நானே எவரோடும் நெருங்கி வாழாததால் இதற்கு வாய்ப்புகள் இல்லை என்று நானே நினைத்துக் கொண்டேன்.

“சார். அமெரிக்க கம்பெனி இந்தியாவில் இருக்கிற யாராவது எங்களுக்கு உத்திரவாதம் கொடுக்கனும். அவரோட ஐடி ரிட்டர்ன்ஸ் வைக்கச் சொல்றாங்க.” என்று  அந்த ரிட்டர்ன்ஸ் செய்த தொகையின் குறைந்த அளவு எல்லாவற்றையும் சொன்னார்.

“எனக்கு இந்த தகவல் புதுசா இருக்கு.”

“ஆமாம் சார். நாங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் எங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் சென்று உதவி கேட்க முடியவில்லை சார். உயிர் பயத்தோட ஊர் ஊராக அலைகிறோம் சார். இந்த வாரத்திற்குள் அமெரிக்கா வரவில்லை என்றால் வேலை கேன்சல் ஆகிவிடும் என்று ஸ்ரிக்ட்டாக வார்னிங்க் பண்ணிட்டாங்க சார்.”

“நான் எப்படி உங்களை நம்புறது. அதுவுமில்லாம என்னைய எப்படி நீங்கள் தேர்ந்தெடுத்தீங்க.”

“போன முறை நீங்கள் வந்தபோது சேவிங்க் கிரீம் வாங்கும்போது உங்களிடம் ஒரு பெண் உதவி கேட்டபோது ஒரு கிலோ அரிசி கொடுக்கச் சொன்னீங்க. அதன் பிறகு இரண்டு மூன்று என்று ஐந்து கிலோ கொடுங்கள் என்று பணம் கொடுத்து விட்டு சென்றபோது நான் பக்கத்தில் இருந்தேன் சார். நீங்கள் யாருக்குமே தெரியாம இங்க செய்கின்ற உதவிகளை நான் உங்களுக்கு தெரியாம பாலோப் பண்ணிப் பார்த்தேன் சார். அப்பதான் நாங்கள் பேசி முடிவெடுத்து. உங்க கிட்ட கேட்கலாம்ன்னு நினைக்கிறப்போ. நீங்க ஊருக்கு கிளம்பிட்டீங்க சார்.”

எனக்கு ஏனோ அவர்களின் மேல் இரக்கம் வந்தது. ஆனாலும் எவரையும் இன்றைய காலகட்டத்தில் நம்பக்கூடாது என்ற எச்சரிக்கையும் இருந்தது. அதை தெளிவாக புரிந்த அந்தப் பையன்.

“சார். கம்பெனியோட வெப் சைட்டை. எங்கள் கால்பரிங்க் லெட்டரைக் காண்பிக்கவா சார்.”

அவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் அமெரிக்காவில் அந்தக் கம்பெனி இப்படியான ஒன்றைக் கேட்கிறதா என்பதை உறுதிபடுத்திவிட நினைத்தேன்.

“நாங்க எப்படியாவது சேர்ந்து வாழனும் சார்.எங்களைப் போன்றவர்கள் வாழுவதைப் பார்த்து. அடுத்த தலைமுறை இதற்கு ஆசைப்படனும் சார். இங்க சாதியை ஒழிக்க எங்களால் முடிந்தது சார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழனுங்கிறதுல நாங்க உறுதியாக இருக்கோம் சார். நீங்கள் இங்க வந்ததாக நினைக்காதீங்க சார். நாங்கள் நீங்கள் இங்கே வரவேண்டும் என்று ஒவ்வொரு வினாடியும் அழுதோம் சார்.”

அவர் இப்போதும் அழுதார்.எனக்கும் கண்கள் கலங்கியது. உறுதிகள் செய்யாமல் உதவி என்று எதிலும் மாட்டி விடக்கூடாது என்று கடந்து வந்த வாழ்க்கை நிறைய அனுபவங்களைக் கொடுத்திருந்தது. அவர்களின் கம்பெனி விவரங்களை வாங்கி எனது நண்பர் மகிழங்கோட்டை மணிவண்ணனுக்கு போன் செய்தேன்.

“சொல்லுங்க சார்” என்று உற்சாகமாக பதில் சொன்னார்.நான் விபரங்களைச் சொன்னதும்

“நான் மாதவனை ஏர்ப்போர்ட்ல விட்டுட்டு வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்கேன். நீங்கள் சொல்ற சிட்டியில எனக்கு ப்ரண்ட்ஸ் இல்லை.நாளைக்கு விசாரித்து சொல்லவா. நீங்கள் டீடைலை அனுப்பி வைங்க.”

“கவிஞர் அடுத்த புத்தகம் எப்பப் போடப் போறார்.”

“அவன் காலேஜ்ல பிஸியாக இருக்கான். இப்ப கூட அவனைத்தான் ஏர்ப்போர்ட்ல விட்டுட்டு வர்றேன். டாக்டர் ஒருத்தரோட சின்னப் ப்ராக்ட்டீஸ் இன்டன்ஷிப் மாதிரி போறான். நீங்க சொன்னதை அவன் கிட்ட சொல்றேன்.”

“எப்போ ஊருக்கு வர்றீங்க.”

“தம்பிக்கும் எனக்கும் பாகப்பத்திரம் பண்ணது பட்டா மாத்தாம இருக்கு. பொங்கலுக்கு வரதோட எல்லாத்தையும் முடிக்கனும்.” என்றார்.

நான் அவரை வைத்துக் கொண்டேப் பேசியதால் அவர் முகம் பிரகாசமாக மாறியது. 

நான் அடுத்து தேனி பாபுவுக்கு போன் செய்தேன்.

“சொல்லுங்க பாஸ்.”

நான் நேரடியாக விவரத்தை சொன்னதும் கம்பெனி பெயரை மீண்டும் கேட்டான்.

“ஹலோ… இது உங்க காலேஜ் சீனியரோட கம்பெனி. அவுங்க பேரை அனுப்புங்க நான் செக்ப் பண்ணிச் சொல்றேன்.”

“நான் கேட்டேன் சொல்லாம. பொதுவாக செக்ப் பண்ணிட்டு உடனே கூப்பிடு.”

“இப்ப முடியாதே. அதன் டைம்மா இருக்கே. அவுங்க ஆபீஸ் இரண்டு ஷிப்ட் நடக்கும். வெயிட் பண்ணுங்க செக் பண்ணிச் சொல்றேன்.”

இப்போது அவரின் குழி விழுந்த கரு வலையக் கண்கள் சாதாரண நிலைக்கு வந்து அழகான தோற்றத்திற்கு வந்திருந்தார்.

“சார் அவளையும் இங்கக் கூப்பிடவா சார். ரொம்ப டென்ஷன்ல உட்கார்ந்து இருப்பா.”

“வேண்டாம். நல்ல செய்தியோடு அவர்களைச் சந்திக்கலாம்.”

நான் இப்படிச் சொன்னதும் அவர் மகிழ்ச்சியில்  அவரின் அறையை எட்டிப் பார்த்தார். இங்கிருந்து ஒரு தம்ஸ் அஃப்பாவது காட்டிவிட வேண்டும் என்பதனாலும் இருக்கலாம்.

“அவர்கள் வேலைக்கு எடுத்திருப்பது உண்மை தான் . இந்த வாரம் வரவில்லை என்றால் அவர்கள் ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்க்கு அடுத்த லிஸ்ட் கொடுத்து இன்டர்வியூ செய்யச் சொல்லி விட்டார்களாம்.”

“நன்றி ப்ரோ “

அவன் வழக்கமான கிண்டல்களை செய்ய ஆரம்பித்தப்போது நான் ஸ்பீக்கரை சைலண்டாக்கி அவனிடம் நாளை பேசுகிறேன் என்றேன்.

இவரின் முகம் வாடிப் போய்விட்டது.

அவர்கள் கேட்ட அத்தனை டாக்குமெண்ட்களையும் மெயிலில் டவுண்லோட் செய்து கொடுத்ததும் எல்லாவற்றையும் அப்லோட் செய்யும்போது எனது போனுக்கு ஓடிபி வரும் என்றார். எனது மனைவியின் போனில் ஆதார் லிங்க் ஆகி இருப்பதால் அவரிடம் ஓடிபி வாங்கி சொல்லிவிட்டு அவரை அனுப்பி வைத்தேன். 

கொஞ்ச நேரத்தில் எனக்கு கொடுத்த ஆவணங்களை உறுதிபடுத்தச் சொல்லி மெயிலும் போனுக்கு லிங்கும் வந்தது. இன்று இரவே கிளம்புவதாக சொன்ன அவர்களிடம் நான் இப்படிச் சொன்னேன்.

“இனிமேல் என்னை எதற்கும் தொடர்பு கொள்ளாதீர். உங்களுக்கு உதவி செய்தேன் என்பதற்காக உங்களிடம் என் மனம் ஏதாவது எதிர்பார்க்கும். வாழ்வின் சூழல் அதுபோலக் கொண்டு செல்லும். உங்கள் இளமையை வீணாக்காமல் வெறி கொண்டு பணத்தை ஈட்டுங்கள். அதைக்கொண்டு இந்தியாவில் ஏதாவது அக்காடமி ஆரம்பித்து ஏழைக்களுக்கு படிக்க உதவி செய்யுங்கள். விட்டுக்கொடுத்து வாழுங்கள். அதில் உங்களை விஞ்ச முடியாது என்று ஒருவருக்கொருவர் இருங்கள். விலகவேண்டும் என்று முடிவெடுத்தால் மட்டும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் இதுவரை கொலை செய்ததில்லை அதை நான் செய்து பார்க்கவேண்டும்.”

“சார் இப்போதைக்கு நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே. உங்களை எங்க காட் பாதராக வச்சுக்கணும்ன்னு நினைச்சோம்.” என்றது அந்தப் பெண்.

“சார்.. பேசும்போது சாதியை ஒழிக்கனும்ன்னு சொன்னார். அது ஒன்னுக்காகத்தான் நான் உதவி செய்தேன். இறைவன் நாடினால் அவனே நம் சந்திப்பை மீண்டும் நிகழ்த்தட்டும். அதுவரைக்கும் என்னைய விட்ருங்க ப்ளீஸ்.”

நான் எழுந்ததும் அவர்கள் என் காலில் விழுந்தார்கள். நான் பதறி அவர்களைத் தூக்கிவிட்டு அவர்களின் காலை நான் குனிந்து தொட்டேன். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. 

“எனக்கு இது பிடிக்காது. அதான் அப்படிச் செய்தேன்.”

அவர்களிடம் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டு நான் கிளம்பிவிட்டேன்.

****

6.

       நான்கு மணி இரயிலைப் பிடிக்க முடியாமல் வழியில் பேருந்து டயர் பங்க்சராகிவிட்டது. வேறுவழியில்லாமல் பேருந்தில் ஊருக்கு பயணப்பட வேண்டியதாகிவிட்டது.

சிதம்பரம் செல்லும் பேருந்து என்பதால் குறைவான நிறுத்தங்களில் நிற்கும் என நினைத்தது தவறாகிவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பது கொஞ்சம் சுகமாக இருந்தாலும் ஜன்னலோர இருக்கை கிடைக்காதது வருத்தமாக இருந்தது. எனது டிராவல் பேக்கை மேலே வைத்துவிட்டு ஜவுளிக் கடைகளில் தரும் கட்டைப் பேக்கை முன் இருக்கையின் நடக்கும் பகுதியில் சாய்த்து வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

டிரைவர் டி.ராஜேந்தர் பாடல்களைப் போட்டுவிட்டார். ஒவ்வொரு பாடலும் பள்ளி நாட்களின் ஒவ்வொரு நினைவை அழைத்து வந்தது.கண்களை மூடி பாடல் வரிகளை ரசித்தபடி இருந்தேன்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் பேருந்து நிற்காமல் பயணத்தில் இருந்தது. தீடீரென்று ‘என் பர்சைக் காணோம். என் பர்சைக் காணோம்.’ என்று சத்தம் கேட்டது.

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரும் விழித்து விட்டார்கள். அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. நடத்துநர் சாதுரியமாகப் பேசினார். பர்சைத் தொலையக் கொடுத்தப் பெண் குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

டிரைவர் என்ன நினைத்தாரோ வழியில் இருந்தக் காவல் நிலையம் உள்ளே பேருந்தை கொண்டு போய் நிறுத்திவிட்டார். பலருக்கு அசௌகரியம் என்றாலும் எவராலும் வெளியில் சொல்ல முடியவில்லை. 

கணிப்பில் துல்லியமான காவலர்கள் பேருந்தின் பக்கவாட்டில் இரண்டிரண்டு பேர் வந்து நின்று விட்டார்கள்.நடத்துநர் கீழே இறங்கி விபரங்களைச் சொன்னார். ஒரு காவலர் காவல் நிலையத்திற்குள் சென்றார்.

நாங்கள் அத்தனை பேரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டோம். பெண்கள் தனி வரிசையில் நின்றார்கள் அதில் நான்கு பேர் புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களும் இருந்தார்கள். உள்ளே  இருந்த எஸ்.ஐ வெளியே வந்துவிட்டார்.

“யாரோட பர்ஸூம்மா. உள்ளே எவ்வளவு பணம் வச்சிருந்த.”

“ஐயாயிரம் பணமும் கால் பவுனு மோதிரம் சார். சீர் செய்ய வேண்டியது சார்.”

“பார்த்து பத்திரமா வைக்கமாட்டியா. யாராவது எடுத்திருந்தாக் குடுத்திருங்க. மன்னிச்சு அனுப்பி விடுகிறேன். நானே கண்டுபுடுச்சேன் கேஸப் போட்டு உள்ளாரத் தள்ளிருவேன்.”

எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

“யோவ்… அந்தம்மாவைக் கூட்டிக்கிட்டு மேலப் போயிப்பாரு. அதுக்குப் பிறகு இவங்க ஒவ்வொருத்தரா செக் பண்ணலாம்.” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போது என் காலுக்கு கீழே இருந்து ஒரு சுள்ளான் எஸ்.ஐ நோக்கி நகர ஆரம்பித்தது. என்னைக் கடிக்காமல் அது எப்படி என்னுடன் பயணித்தது என்று தெரியவில்லை. அது இளைந்ததற்கான உணர்வே இல்லையே என அதையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் எஸ்.ஐ சூ மீது ஏறிவிடும். அவர் காலை நகர்த்தினால் நசுங்கிவிடப் போகிறதே என்றப் பதட்டம் எனக்குள் இருந்தது.

அது வலது புறம் நகர்ந்ததும் மனம் நிம்மதியானது. இந்த இடத்தில் இறங்கி அது எங்கேப் போகப்போகிறது.அது நகர நகர எனக்கு தெளிவாகத் தெரியாமல் இருந்தது. நான் வரிசையிலிருந்து லேசாக விலகிப் லேசாக உற்றுப் பார்த்தபோது பக்கத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் சைடு ஸ்டாண்டில் ஏறி உள்ளேப் போய்விட்டது. காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த இருவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். நான் வியப்பாக அந்த வண்டி வெளி செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பேருந்துக்குள்ளிருந்து காவலர் தலையை நீட்டி வெளியேக் கத்தினார்.

“ஸார்… பர்ஸ் கிடைச்சிருச்சு சார்.”

எல்லோரும் பேருந்தைப் பார்க்க அவர் எனது கட்டைப் பையை எடுத்து வந்தார். எனக்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை. நடக்கப் போகும் விபரிதம் தெளிவாகத்  தெரிந்தது.

“யாரோடதுங்க இந்தப் பை.”

நான் என்னுடையது என்று சொல்லும்போது பேருந்திலிருந்த அத்தனை பேரும் கேவலமாகப் பார்த்தார்கள். அவரவர்களுக்கு வாய்க்கு வந்த படி திட்டினார்கள்.

“அந்தாள இறக்கிவிட்டு வண்டியை எடுங்க.” என்றார் ஒருவர்.

நான் முகம் வாடி செய்வதறியாது திகைத்தேன். டிரைவர் கடுமையாகத் திட்டினார். அவர் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் தாமதமானால் அவரைத் திட்டுவார்கள் என்றார். பர்ஸூக்காரப் பெண் சாபமிட்டுக் கத்தியது.

“அவன் மேலக் கேசப் போடுவீங்களோ விடுவீங்களோ. எனக்குத் தெரியாது சார். அவனை இறக்கிவிட்டு போறேன். நீங்கள் என்னமாச்சும் பண்ணிக்கங்க சார். இதுமாதிரி டீஸன்டா கிளம்பிட்டாங்க சார்.” நடத்துநர்.

“அந்தம்மா பின்னாடி பாலேப் பண்ணியே வந்திருப்பான் போல.” யாரோ ஒருவர்.

பையை எடுத்து வந்த காவலர் என் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டார்.

“யோவ்… விசாரிக்கிறதுக்குள்ள. ஏன்யா அடிக்கிறே.” எஸ்.ஐ அவரைக் கத்தினார்.

“என் பையில் எப்படி வந்ததுன்னு எனக்குத் தெரியாது சார். நான் திருடலைன்னு சொன்னா இங்க யாரும் நம்பத் தயாராக இல்லை.”

நான் எனது பர்ஸை எடுத்து எனது விசிட்டிங் கார்டு ஏடிஎம் கார்டை இரண்டையும் எஸ்.ஐ யிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிப் பார்த்தவர் என்னிடம் சாந்தமாக ஏதோ கேட்க ஆரம்பித்தார். அதற்கு முன் நான் பேசிவிட்டேன்.

“சார்… நான் பாஸ் வேர்ட் சொல்றேன் அதோ தெரியிற ஏடிஎம்ல ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து அந்த அம்மா கிட்டேக் கொடுங்க. இதைத் தவிர நான் திருடவில்லை என்பதை உங்களுக்கு நிரூபிக்க முடியாது.”

என்னைச் சுற்றி கொஞ்சம் பெரிய வளையமாக நின்றவர்கள் அனைவருமே திகைத்து விட்டார்கள். 

“யாரையாவது இப்போது உங்களுக்கு போன் பண்ணச் சொல்லலாம் சார். என் மீது நரகல் விழுந்திருக்கிறது. நான் தான் தொடைக்கனும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார். அந்தப் பணத்தை எடுத்து அந்த அம்மா கிட்டக் கொடுங்க. திருடுன யாரோ இங்க தைரியமா நிற்கும்போது நான் ஏன் சார் தலையைக் குனியனும்.”

அப்போது கூட்டத்திற்கு பின்னால் இருந்த ஒரு சிறுமி என்னை நோக்கி வந்தது. பேருந்து டீ சாப்பிட நிறுத்தியபோது நான் ஒரு பெரியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்த சமயம் அவருக்கு டாடா காட்டிக் கொண்டு இருந்தது.

அந்த சிறுமி எஸ்.ஐ நோக்கி

“அங்கிள் பையில் ஒரு பார்ஸை யாரோ ஒரு ஆண்டி போட்டதை நான் பார்த்தேன். அவுங்க கை மட்டும் தான் தெரிஞ்சது. அப்புறம் நான் வீடியோ கேம் விளையாடப் போயிட்டேன்.”

அதற்குள் அந்த சிறுமியின் அம்மா அந்தப் பிள்ளை அழைக்க முற்பட எஸ் ஐ விடச் சொன்னார்.

“எந்த சீட்லேர்ந்துப் போட்டாங்க. அந்தக் கையப் பார்த்தா தெரியுமா.இதுல யாருன்னு உனக்குத் தெரியுதா.”

பெண்கள் எல்லோரும் முகம் மாறினார்கள். அந்தச் சிறுமியை அச்சத்தோடுப் பார்த்தார்கள். அந்தப் பிள்ளை தனக்குத் தெரியாது என்றது. அதற்குள் சிறுமியின் தாய் பக்கத்தில் வர அவர்களின் பின்னால் பிள்ளை ஒளிந்து கொண்டது.

எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அந்தச் சிறுமி என்னைப் பாசமாக பார்த்தது அதை அங்கிருந்தவர்கள் கவனிக்க தவறினார்கள். என்னை அறைந்த காவலர் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி அவரை அடித்து என்னை சமாதானம் செய்ய சிறுமியை பலவாறு கேள்விகள் கேட்டார். சிறுமி அழ ஆரம்பித்துவிட்டது.

பர்ஸூப் பெண் என் பக்கம் திரும்பி காலில் விழுந்தது.

“ஐயா நீங்க யாருன்னு தெரியல. உங்களைப் போய் திட்டி சாபத்துக்கு மேல சாபம் கொடுத்துட்டேன் ஐயா.”

“அதனால வருத்தமில்லைம்மா. நீங்கள் காலில் விழுந்தது உண்மை என்றால் இனிமேல் சாபமிட்டு பேசாதீர்கள். அது உங்களையும் பாதிக்கும்.” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் நூறு ரூபாய்க் கொடுத்தேன். அவர் மறுத்தார். நான் காலில் விழுந்தால் பணம் கொடுக்கும் பழக்க முடையவன் என்று சமாதானம் செய்து அவர் கையில் வற்புறுத்திக் கொடுத்தேன்.

“ஐயா எனக்குப் பணம் கிடச்சிருச்சு. எங்கள எல்லோரையும் போக விடுங்க சார். எல்லோரும் ரொம்ப தூரம் போறவங்க.” என்று எஸ்.ஐயிடம் சென்று  சொன்னதும்.

“யோவ் இங்க வாய்யா. சின்னக் குழந்தையைப் போட்டு கொடஞ்சுக்கிட்டு.” என அறைந்தக் காவலரை அழைத்தார்.

எல்லோரும் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்க நான் என்னை அடித்த காவலருக்கு கையைக் கொடுத்து நன்றி என்றேன். அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக எஸ்.ஐயிடம் டிரைவரும் நடத்துநரும் ஏதோ பேசிவிட்டு ஏறினார்கள்.நான் பேருந்தில் உள்ளவர்களைப் பார்க்க முயன்றேன் அவர்கள் என்னைத் தவிர்க்க முயன்றார்கள். நான் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டேன்.

திருடியவரும், திருடாமல் அதற்காக அடி வாங்கியவரும், முழு உண்மையும் தெரிந்தவருமான இந்தப் பயண அமைதி எல்லோரையும் ஏதோ செய்தது. எண்ண நினைத்தாரோ டிரைவர் அண்ணன் பாடல் போடவில்லை.

பக்கத்தில் இருந்தவர் ஏதாவது என்னைப் பற்றி சொல்லி இருக்கலாம்.அந்த வருத்தம் என்னிடம் இருந்தது. இந்தப் பயணத்தில் எனது அணுக்கத்தில் இருந்தவருக்கு என் ஏதாவது ஒன்று அவருக்கு புரிதலை ஏற்படுத்தி இருக்கலாம்.எனக்கு வந்த சில போனில் பேசிய ஏதாவது ஒரு வார்த்தை அவருக்கு என்னை யாரென அவதானிக்க தூண்டி இருக்கலாம். 

அண்டை வீட்டாரை நேசிக்காத உலகில் வாழுவது துயரம் தான். என்னால் இவரையும் நேசிக்காமல் இருக்க முடியாது.’வேம்பு கசக்கிறது என்பதற்காக கரும்பு இனிப்பதை மாற்ற முடியாது’ என்று நான் அடிக்கடிச் சொல்வதை நினைத்துக் கொண்டேன்.

****

7.

       முகத்தைத் தொடும் போதெல்லாம் அடித்த இடம் வலித்தது.எத்தனை நாள் இந்த வலி இருக்கும் என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்றதும் ஏதாவது செய்து அதை சரி செய்யவேண்டும்.

டீ குடிக்க நிறுத்திய இடத்தில் நான் இறங்கவில்லை. சிறுமியின் தாயார் இறங்கினார். சிறுமி இறங்கவில்லை. மற்றவர்கள் எல்லோரும் இறங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அசாதாரணமாக நடந்த அந்த நிகழ்வு எனக்கு கொஞ்சம் அசதியைக்கொடுத்தது. அதனால் எப்பொழுது தூங்கினேன் என்றுத் தெரியவில்லை. பேருந்தில் கணிசமான பேர்கள் இறங்கி இருந்தார்கள். இன்னும் கால் மணி நேரத்தில் ஊர் வந்துவிடும். இன்று இரவு வீட்டில் தூங்கிவிட்டு நாளைக்கு திருச்சிக்கு கிளம்ப வேண்டும். நாளைய வேலைகளை ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

பேருந்தை விட்டு இறங்கியதும் பசிக்க ஆரம்பித்தது.டிரைவர் பேருந்தை சரியாக நிறுத்தும் கவனத்தில் இருந்ததால் அவர் நான் இறங்கியதைக் கவனிக்கவில்லை. பின்புறம் குரல் கேட்டுத் திரும்பினால் அவர்,

“சாரி சார். அப்போது உள்ள நிலமையில நான் ஸ்டேசனுக்கு விடறதைத் தவிர வேறு வழி தெரியவில்லை சார்.”

“அது ஒன்னும் பிரச்சினை இல்லை. நீங்கள் செய்ததுதான் சரி சார். இந்த ஊர்ல எந்தப் பிரச்சினை என்றாலும் எனக்கு கால் செய்யுங்கள்”என்று விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு நண்பரின் உணவகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.நீண்ட நாள் சந்திக்காததால் அவரிடம் அதிக நேரம் பேச வேண்டியதிருக்கும். நல்ல வேளை அவர் இல்லை. உணவகத்தின் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தார்கள். கடைசியில் இருந்த மேஜை மட்டும் காலியாக இருக்க அங்கு பேக்கையும் பையையும் வைத்துவிட்டு கையைக் கழுவி முகத்தையும் கழுவும்போது கன்னத்தில் வலி இருந்தது. முகத்தின் ஈரத்தைக் கர்ச்சீப்பால் துடைத்தபடி மேஜையை நோக்கி செல்லும் போது அங்கு புர்க்கா போட்டப் பெண் யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

“நான் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். காரை டிஎஸ்பி ஆபீஸூக்கு பக்கத்தில் நிறுத்தி வச்சுக்கிட்டு எனக்கு கால் பண்ணு.”

நான் அமர்ந்ததைக் கவனிக்காமல் அவர் பேக்கை வைத்துவிட்டு போன் பேசியபடியேக் கை கழுவப் போனார். நான் சொல்லிய இட்லி வந்ததும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது தான் அந்தப் பெண்ணின் கையைக் கவனித்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் நிமிர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவர் சங்கடமாக கீழேக் குனிந்து சாப்பிட ஆரம்பித்தார்.

“ஏம்மா… இப்படி செஞ்சீங்க.”

அவருக்குப் பயம் சூழ்ந்து முகம் மாறியது. கைகள் நடுங்க ஆரம்பித்தது.

“அந்தச் சிறுமி எடுத்த வீடியோவை எனக்கு அனுப்பினாள். அதில் உங்கள் கை தெளிவாக உள்ளது. ஐந்து லட்சத்திற்கு மேல் உங்கள் கையில் பவுன் வளையல் இருக்கிறது. பிறகு ஏன் சிஸ்டர் இப்படி செய்தீர்கள்.”

அவர் குனிந்த தலை நிமிராமல் தோசையைப் பிசைந்து கொண்டிருந்தார்.

“அந்தச் சிறுமி எனக்கு அனுப்பிவிட்டு சொன்னாள். கெட்டவங்க படம் எனக்கு எதுக்கு அங்கிள் என்று. அப்போது நான் பணம் கொடுத்தேன் மறுத்துவிட்டாள். என்னால் அவளுக்காக பிராத்தனை தான் செய்ய முடிந்தது.”

அந்தப் பெண் அழுத கண்ணீர் சாப்பிடும் இலையில் விழுந்தது. உணவகத்தின் கடைசி இருக்கை என்பதாலும் அவர் அனைவருக்கும் முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்ததாலும் அவர் அழுவதை எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

“உங்களைப் பார்த்தால் ஒருக் கண்ணியமானக் குடும்பத்திலிருந்து வந்த கண்ணியமானவராகத்தான் தெரிகிறீர்கள்.என் நிலையில் யார் இருந்தாலும் திருடனைக் கண்டுபிடிக்காமல் பஸ்ஸை எடுக்க முடியாது என்றிருப்பார்கள்.”

“மன்னிசிருங்க நானா.” வார்த்தைகள் அதன் பிறகு வரவில்லை. என்னை எதை வைத்து முஸ்லீம் என முடிவெடுத்தார் என்றுத் தெரியவில்லை.

“போலீஸ் ஸ்டேஷனில் உயிருப் போயி உயிர் வந்துச்சு. அல்லாஹ் அவரை எப்படியாவது காப்பாத்துன்னு நேர்ச்சை நேந்துகிட்டேன். அல்லாஹ் அங்க காவந்து பண்ணி இங்க உங்ககிட்டே புடுச்சிக் குடுத்துட்டான். சின்ன வயசுல ஜாலிக்காக பண்ணது. அப்படியே வந்துருச்சு. எடுத்துட்டு மறுபடியும் அங்கேயே யாருக்கும் தெரியாம வச்சிட்டு வந்துடுவேன். சில சமயம் வைக்க முடியாமல் போகும் போது யாராவது ஏழைகளுக்கு கொடுத்துருவேன். பஸ்லயும் நான் எடுக்கல நானா. அது என் காலுக்கு கீழே வந்து கிடந்தது. அந்தம்மா எனக்கு ஒரு சீட்டு முன்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. நான் எப்படி எடுக்க முடியும்.”

“நீங்க சொல்றத என்னாலப் புரிஞ்சுக்க முடியுது.எனக்கு உங்க மேலக் கோவம் வரனும். ஆனா ஏனோ இரக்கம் வருது.”

“மன்னிசுருங்க நானா. இனிமேல் என் வாழ்க்கையில் இதுபோல செய்யமாட்டேன்.”

சர்வர் வேறு ஏதாவது வேண்டுமா என்றார். எனக்கு மீண்டும் இட்லியும் அவர் எதுவும் வேண்டாம் என்று சொன்னதால் அவரிடம் கேட்காமலையே அவருக்கு டீ சொன்னேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் இன்னும் சில விசயங்களைச் சொல்லிவிட நினைத்தேன்.

“நீங்கள் மாறுவீங்களா.மாறமாட்டீங்களான்னு எனக்குத் தெரியாது. உங்களால் உங்கள் குடும்பத்திற்கு அவமானம் வந்துவிடக்கூடாது. புர்கா போட்டவங்க எல்லாம் திருடத்தான் போடுறாங்கன்னு மத்தவங்க நினைக்கக்கூடாது. உங்களால நன்மைகள் செய்ய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மார்க்கத்துக்கு கெட்டப் பேரை வாங்கிக் கொடுக்காம இருந்தாலேப் போதும். நாடு இருக்கிற நிலமையில நீங்க எல்லாம் இஷ்டத்துக்கு இருக்கீங்க. அதவிடுங்க உங்க கொமர எப்படிக் கரையேத்துவீங்க. உங்க வீட்டுல யாரு சம்பந்தம் பண்ணுவாங்க.”

அவர் அழுது கொண்டே இருந்தார்.

“டீ ஆறப்போகுது சாப்பிடுங்கம்மா”

சர்வர் இரண்டும் ஒரேப் பில்தானே என்றார். அவர் மறுத்தாலும் நான் ஒன்றாகவே கொண்டு வரச்சொன்னேன்.

“கார் ரிப்பேராயிருச்சு. நாளைக்கு தான் ரெடியாகும்ன்னாங்க. பாதி வழியில் வண்டி கிடக்கிறதால என் மவனும் ட்ரைவரும் அங்க இருந்துக்கிட்டு என்னைய இந்த பஸ்ல ஏத்திவிட்டாங்க. எனக்குள்ள சைத்தான் புகுந்து ஏடாகூடாம் பண்ணிட்டான்.”

“தொழுவுற வழக்கமிருக்கா.”

“ஆமாம் நானா.”

“தஹஜ்ஜத் தொழுவீங்களா.”

“எப்பவாவது தொழுவேன்.”

“உங்களின் கண்ணியத்தை காப்பாத்தி இருக்கிறேன். ஹலாலான முறையில் ஈட்டியப் பணத்தில் உங்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். அந்த வகையில் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான் இந்த சைத்தானியத்தான செயலை விட்டுவிடுங்கள். இன்று இரவிலிருந்து தஹஜ்ஜத் தொழுகையை ஹயாத்து வரைத் தொழுங்கள். அதுதான் எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால் செய்வது.”

“அல்லாஹ் மேலச் சத்தியமா செய்றேன் நானா. நான் இனிமேல் இதுபோலச் செய்யமாட்டேன்.எனக்கு நல்லதுதானே சொல்றீங்க.”

“நல்லது ராத்தா.எனக்கு கன்னம் வலிக்கிறது குறையவில்லை.அதன் வலியை நான் உணரும்போதெல்லாம் அந்த சிறுமியின் நலனுக்காக துவாக் கேட்பேன். நீங்கள் தஹஜ்ஜத் தொழவேண்டும் என்றும் கேட்பேன்.”

அவரை அழைக்க வரும் கார் இன்னும் கால் மணி நேரத்தில் வந்துவிடும் என்று யாரோ போனில் சொன்னார்கள்.அவர் பேசிவிட்டு தனது மகன் பேசியதாகச் சொன்னார்.

“உங்களைப் போல அந்நிய ஆளிடம் தனியாக இப்பதான் பேசிறேன் நானா. மச்சான் நல்லவுக. அவுககிட்ட உங்கள எப்படி சொல்றதுன்னு தெரியல.”

ஒரு இஸ்லாமியப் பெண்ணின் அத்தனைத் தயக்கமும் அவரிடம் இருந்தது.

“இவ்வளவுப் பக்குவமா எப்படி நானா உங்களால நடந்துக்க முடியுது.”

“என் வாழ்க்கையில் என்னைவிட அதிக நல்லவர்களை நான் சந்திச்சிருக்கேன். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.”

கையைக் கழுவிட்டு வரும்போது சர்வர் கொடுத்தப் பில்லை ‘நான் ஜிபே செய்கிறேன்’ என்று வாங்கிக் கொண்டு அவரிடம் டிப்ஸ் கொடுத்துவிட்டு ‘கொஞ்சம் சுடு தண்ணீர் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

“இது என்னுடைய விசிட்டிங் கார்டு அதற்கு பின்புறம் எனது மனைவியின் நம்பர் உள்ளது.’நானா எனக்கு பெரிய உதவி செய்தார்.உங்களைத்தான் தொடர்பு கொள்ளச் சொன்னார்.’ என்று அவருக்கு மெஸேஜ் போடுங்கள். அவர் நன்றாக பழகக் கூடியவர். தற்போது பெங்களூரில் இருக்கிறார்.”

இப்பொழுது தான் அவர் முகத்தை நான் கொஞ்ச நேரம் நேராகப் பார்த்தேன்.நான் அவர் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்தி பேசியதுதான் என்னை ஒரு பாதுகாப்பான ஆளாக அவருக்கு காட்டி இருக்க வேண்டும். நான் நேரடியாக பார்த்ததும் தான் அவர் தான் நிகாப்பை சாப்பிட அகற்றியது நினைவுக்கு வந்து அதை எடுத்துவிட்டு சரி செய்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வலைக்கும் சலாம்” எனக்கு பதில் சொன்னவர் உணவகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தார். எனக்குத் தெரிந்துவிட்டது அந்நிய ஆணோடு இருப்பதை யாராவது பார்த்து விட்டார்களா என்கின்ற அச்சம்தான் அது.

நான் அங்கிருந்து கிளம்பி பணம் செலுத்திவிட்டு அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து கைபேசியைப் பார்ப்பதான பாவனையில் இருந்தார்.

எனது விசிட்டிங் கார்டைப் பார்த்ததும். நான் முஸ்லிம் இல்லை என்பதை அறிந்ததும். அவருக்கு ஏற்படும் அதிர்ச்சிதான் அவருக்கு நான் கொடுத்திருக்கும் அழகிய பரிசு.

திருச்சி ஏர்போர்ட்டில் செக்கியூரிட்டி செக்கில் கைப் பைகளைப் போட்டுக் கொண்டு இருக்கும்போது தெற்குத் தெரு செங்குட்டுவன் அத்தானிடமிருந்து போன் வந்தது. ‘ஏர்போர்டில் இருக்கிறேன் கொஞ்ச நேரத்தில் பேசுகிறேன்’ என்றேன். ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு அத்தானுக்கு போன் செய்தபோது ‘அம்முவுக்கு பத்திரிகை அடிக்கனும் வாங்க’ என்றார்.நான் ‘முப்பதாம் தேதி தான் வருவேன்.என்னுடைய விசிட்டிங் கார்டை வாட் ஆஃப் செய்கிறேன்.அதுபடி பத்திரிகையில் போட்டுக்கொள்ளுங்கள் ‘ என்று சொன்னேன். அதன் பிறகு தம்பி ஆனந்த் போன் செய்தான். அவனிடமும் விமான நிலையத்தில் இருப்பதைச் சொன்னேன். 

காத்திருந்து விமானத்தில் ஏறி அமர்ந்தோம். விமானப் பணிப்பெண் கைபேசியை அணைக்கச் சொன்னார்.நான் கைபேசியை எடுத்தபோது வாட்ஸ் ஆஃப் மெஸேஜ்கள் வழக்கமான குழுக்களினால் நிறைந்திருந்தது. 

அதில் இஸ்லாமிய சிறுமி தனது உம்மாவுடன் துபாயில் இருப்பதாக செய்தி அனுப்பி இருந்தார். அதனுடன் ஒரு ஆடியோ இருந்தது.

இளம் ஜோடிகள் ‘அமெரிக்கா நல்லபடியாக வந்துவிட்டோம் அப்பா’ என்று இன்னும் அதிகமாக ஏதோ எழுதி இருந்தார்கள். 

ராத்தா ‘தான் நிம்மதியாக தூங்கியதாகவும், தஹஜ்ஜத் தொழுததாகவும் மகிழ்ச்சியும் மன நிறைவாகவும் உள்ளதாக’ தனது வியப்பை விரிவாக எழுதி இருந்தார்.

எனக்கு பெங்களூரில் விட்ட இரண்டு சுள்ளான்களும் காவல் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற சுள்ளானிடமிருந்து ஏன் எந்தச் செய்தியையும் வரவில்லை என நினைத்துக்கொண்டேன்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பரும் நானும் முப்பது வருடங்கள் நெருங்கிப் பழகியவர்கள். கடைசி ஐந்தாண்டுகள் மன வருத்தத்தில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இப்போதுதான் சந்திக்கிறோம். விமான டிக்கெட் எடுத்துவிட்டு போகலாமா எனக் கேட்டார். நானும் சரி என்றேன். எங்களோடு வரும் இரண்டு நண்பர்கள் நாங்கள் சந்தித்ததிலிருந்து பழைய படி பேசி சிரித்து கிண்டலடித்து வருவதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 

இன்டிகோ விமானம் மேலே ஏறத் துவங்கியது. வானம் வெளிச்சமாக இருந்தது. நாளைய நாட்களில் என்னவெல்லாம் இருக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது. 

நான் அன்றாடங்களில் என்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தேன் அல்லது பயிற்சியின் பொருட்டான எனது தருணங்களில் நான் வெகுவாக மகிழத் தயாராக இருந்தேன்.

****

[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *