இரவு மணிவாசகத்தின் வீட்டில் தங்கினான் கைம்மா. மறுநாள் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு காலையிலேயே புறப்பட்டான். உச்சி வெயில் பொழுது வரை நடுவே எங்கும் நிற்காமல் நடந்தான். மதியம் வழியில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து மணிவாசகம் தந்திருந்த உணவை உண்டு நீர் அருந்தினான். பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினான். ஒரு வழிப்போக்கரிடம் எல்லைநல்லைக்கு சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டான். விடாமல் நடந்தால் அன்று இரவே எல்லைநல்லையை எட்டி விட முடியும் என்றார் அவர்.
எல்லைநல்லை ஊரின் மேற்கே அந்த மலை இருந்தது. அதை பன்றி மலை என்று அழைத்தனர். அதன் வடக்கு சரிவில் ஒரு பெரிய பாறை வான் நோக்கி வளைந்து நீட்டிக் கொண்டிருந்தது. தொலைவில் இருந்து பார்ப்பதற்கு அது பன்றியின் முகம் போல தோற்றமளித்தது. அதனால் அந்த பெயர்.
மாலை நேரம் கைம்மா மிண்டாவூர் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். அது எல்லைநல்லைக்கு கிழக்கே நான்கு ஊர்களுக்கு அப்பால் அய்ந்தாவதாக இருக்கும் சிறிய ஊர். மிண்டாவூரில் இருந்து பார்த்தபோதே எல்லைநல்லையின் பன்றி மலை பெரிதாகத் தெரிந்தது. அந்த அந்திப்பொழுதில் மேற்கே மறைந்து கொண்டிருந்த சூரியன் பன்றி மலைக்கு மேலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. அது மேலும் சற்று கீழிறங்கிய போது பன்றின் முகம் போலத் தோன்றிய பாறைக்கு அருகே தெரிந்தது. பார்ப்பதற்கு பன்றி சூரியனை உண்பது போல தெரிந்தது.
தான் செல்ல வேண்டிய குகை அந்த மலையில் இருப்பதை கைம்மா நினைத்துக் கொண்டான். இரவுக்குள் எல்லைநல்லையை சென்று அடைந்து விடலாம். இரவில் குகைக்கு செல்ல முடியாது. எல்லைநல்லை ஊரில் எங்காவது தங்க வேண்டும். அவனுக்கு அங்கு யாரையும் தெரியாது. அவன் அந்த ஊருக்கு செல்வது பற்றி வில்லருக்கு தெரிந்திருந்தாலும் அவன் அங்கு வருவது பற்றி அவர் யாரிடமும் சொல்லி இருக்க மாட்டார். அவர் தாத்தா சொன்னதை நம்பாமல் காட்டிற்குள் திண்டுவையும் முத்துவை தேடச் சென்றிருப்பார் என்று தாத்தாவே சொன்னாரே. மணிவாசகத்திடமும் கைம்மா தான் எல்லைநல்லைக்கு செல்வதைப் பற்றி சொல்லி இருக்கவில்லை. அவனிடம் தான் வெறுமனே ஊர் சுற்றி பார்க்கவே வந்ததாகவும் மீண்டும் தன் ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் சொல்லி இருந்தான்.
ஒருவேளை மணிவாசகத்திடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமோ என்று கைம்மா நினைத்தான். அப்போது பட பட வென பறவை ஒன்றின் சிறகடிப்பு கைம்மாவின் தலைக்கு அருகில் கேட்டவே அவன் தலை தூக்கி மேல பார்த்தான்.
”அட …சிங்கா நீயா?” கைம்மா ஆச்சரியத்துடன் கேட்டான். சிங்கா கைம்மாவுடைய கழுகு. வெள்ளை நிற தலையும் கழுத்தும் கருப்பு நிற உடலும் கொண்டது. அது மிகவும் சிறியதாக இருந்த போது கைம்மா காட்டிலிருந்து அதை எடுத்து வந்தான். அதை அவன் வளர்த்தான். அவன் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது அது அவனுடன் செல்லும்.
சிங்கா கைம்மாவின் தலைக்கு மேலாக தன் பெரிய சிறகுகளை விரித்து வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. பிறகு மேலும் சற்று உயரத்திற்கு சென்று வட்டமடித்தது. அந்த மாலை நேர வெயிலில் அதன் விரிந்த சிறகுகள் கோர்க்கப்பட்ட தங்கத் தகடுகள் போல தோன்றின.
கைம்மா அதை அழைத்தான். ”சிங்கா…..வா”
அது கீழிறங்கி கைம்மா நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே இருந்த மஞ்சணத்தி மரத்தின் மீது அமர்ந்தது. அது கைம்மாவைப் பார்த்து விட்டு தலையை திருப்பிக் கொண்டது.
கைம்மா சிரித்தான். ”மன்னித்து விடு சிங்கா. உன்னை நான் மறந்தே போய் விட்டேன். கோபித்துக் கொள்ளாதே” என்றான்.
சிங்கா தலையைத் திருப்பி மீண்டும் கைம்மாவைப் பார்த்தது.
”நீ இவ்வளவு தூரம் என் பின்னாலேயே தேடிக் கொண்டு வந்திருக்கிறாய்…..வா” அவன் கையை நீட்டினான்.
சிங்கா மரத்திலேயே இருந்தது.
”பாரேன்…இவ்வளவு கோபம் கூடாது. நான் உன் நண்பன் இல்லையா?” கைம்மா கெஞ்சுவது போல பேசினான்.
”காட்டில் வேட்டைக்கு என்றால் உன்னை அழைத்திருப்பேன்..இது வேறு விஷயம் என்பதால் தான்…” கைம்மா கை நீட்டிக் கொண்டே மரத்தின் அருகே சென்றான்.
சிங்காவின் கோபம் நீங்கியது. அது வழக்கம் போல கைம்மாவின் முழங்கையில் அமராமல் பறந்து வந்து அவனுடைய இடது தோளில் அமர்ந்தது. கைம்மா தன் வலது கையால் அதன் தலையை வருடிக் கொடுத்தான்.
”சரி சிங்கா…இனி திரும்பிப் போ என்று சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை. என்னுடனேயே வா…ஆனால் நீ என்னுடன் வருவது யாருக்கும் தெரியாமல் வா” என்றான் கைம்மா.
சிங்கா தன் விசிறி போன்ற சிறகை விரித்து கைம்மாவின் முகத்தில் அடித்தது. பின் வானில் எழுந்து வட்டமிட்டது.
கைம்மா சிரித்தான். பின் நடக்கத் தொடங்கினான்.
——-
அவன் எல்லைநல்லைக்கு வந்த போது இரவாகி விட்டது. ஊரின் முதன்மைச் சாலையில் அதிக மனி்த நடமாட்டம் இல்லை. பாதி தேய்ந்துவிட்ட தேய்பிறை நிலவின் ஒளியும் நட்சத்திரங்களின் ஒளியும் மட்டுமே இருந்தது. அந்த ஒளியைக் கொண்டு ஓரிருவர் மட்டுமே அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்படி சென்று கொண்டிருந்த ஒருவரை நெருங்கி ”எல்லைநல்லையின் ஊர் சத்திரம் எங்குள்ளது?” என்று கேட்டான். அவர் ”இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது புறம் ஒரு தெரு பிரியும். அதில் சென்றால் மூன்று வீடுகளுக்கு அப்பால் நான்காவதாக உள்ள வீடு தான் எல்லைநல்லையின் சத்திரம். தெருவில் வலது பக்க வரிசையில் உள்ளது” என்றார். கைம்மா அவருக்கு நன்றி கூறி விட்டு அந்த தெருவிற்குள் நுழைந்தான்.
அந்த சத்திரம் ஒரு ஓட்டு வீடு. அதன் கதவிற்கு முன்னால் இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள் இருந்தன. அந்த இரண்டு திண்ணைகளிலும் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் அவர்களை எழுப்ப வேண்டாம் என்று கைம்மா நினைத்தான். சத்திரத்தின் கதவைத் தட்ட அவன் விரும்பவில்லை. அவனுக்கு பசியாக இல்லை. ஆனால் நீண்ட நடையால் மிகவும் களைத்திருந்தான். தன் தோல் பையில் இருந்து தண்ணீர் அருந்தினான். பிறகு திண்ணையில் காலியாக இருந்த இடத்தில் சென்று சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டான். அருகில் தன் பையை வைத்துக் கொண்டான்.
அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எதிரே சற்று தொலைவில் ஒரு வேப்ப மரம் இருந்தது.
”ஆமாம் சிங்கா எங்கே?” கைம்மாவிற்கு சிங்காவின் நினைவு வந்தது. அப்போது மென்மையான காற்றில் ஆடிக் கொண்டிருந்த வேப்ப மரத்தில் சலசலப்பு கேட்டது. சிங்கா மரத்திலிருந்து வானில் எழுந்து சுற்றி மீண்டும் மரத்திற்குள் சென்றது.
”ஓ நீ அங்கே இருக்கிறாயா?” என்றான் கைம்மா.
”சிங்கா உண்டிருக்குமா?“ என்று அவன் நினைத்த போது அது மீண்டும் மரத்தில் இருந்து எழுந்து மேலே வட்டமிட்டது. பிறகு வேகமாக சத்திரத்தின் திண்ணை நோக்கி பறந்து வந்தது. அது வேகமாக சிறகடித்து அங்கே வந்து அதனால் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் எழுந்துவிடப் போகிறார்கள் என்று கைம்மா நினைத்தான். எனவே அவன் திண்ணையில் இருந்து எழுந்து தெருவில் நின்றான்.
சிங்கா திண்ணைக்கு வரவில்லை. அது சத்திரத்தின் பக்கவாட்டில் இருந்த இடம் நோக்கி வேகமாக கீழே பறந்து பின் உடனே மேலே பறந்து எழும்பியது. அதன் கால்களில் ஒரு எலியைப் பற்றி இருந்தது. அது அந்த இடத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு எலி. அதைத்தான் சிங்கா பிடித்து விட்டது.
”பரவாயில்லை சிங்கா….இந்த ஊர் சத்திரத்தில் உன் உணவைக் கண்டுபிடித்து விட்டாய்” என்று கைம்மா சிரித்தான்.
சிங்கா எலியைத் தூக்கிக் கொண்டு வேப்ப மரத்திற்கு சென்று விட்டது.
கைம்மா மீண்டும் திண்ணைக்கு வந்து படுத்துக் கொண்டான். அவன் அருகே வலது பக்கம் தூங்கிக் கொண்டிருந்தவர் மிகப் பெரிய உடல் கொண்டவராக இருந்தார். கைம்மா படுத்த சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கத் தொடங்கி விட்டான்.
கைம்மாவின் அருகே படுத்திருந்த பேருடலர் தூக்கத்தில் கனவு கண்டு உளறிக் கொண்டிருந்தார். அவர் கனவில் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தூக்கத்தில் அவர் சத்தமாக பேசினார்.
”நான் ஒரு மாபெரும் கவிஞன் என்பதை என் உடலைப் பார்த்த போதே புரிந்து கொண்டிருப்பாய் நீ அறிவுடையவன் என்றால்” என்றார்.
பின்,
”யாரிடம் மோதுகிறாய்? தொலைத்து விடுவேன்” என்றார்.
பிறகு,
”என்ன சொன்னாய்?” என்று கத்தினார்.
கனவில் சண்டை போட்டுக் கொண்டிருந்த அவர் வேகமாக உருண்டு வந்து கைம்மாவின் மீது மோதினார். கைம்மா அதிர்ச்சி அடைந்து சற்று தூக்கம் கலைந்து கைகளால் அவரை உந்தித் தள்ளினான்.
அவர் எதிர்பக்கம் உருண்டு சென்றார். அங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒல்லியான ஒருவர் மீது வேகமாக மோதினார். அந்த ஒல்லியான நபர் கடிகார முள்ளைப் போல திரும்பி உருண்டு சென்று திண்ணையில் இருந்து கீழே விழுந்தார்.
கீழே விழுந்து தூக்கம் கலைந்து ஆத்திரத்துடன் எழுந்து நின்ற அவர் பேருடலைரைத் திட்டினார்.
”கொஞ்சம் கூட அறிவு இல்லை. பக்கத்தில் படுத்திருக்கும் சக கவிஞனை இடித்து உருட்டித் தள்ளுகிறோமே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லை. பெரிய கவிஞராம் லட்சணம். எருமை மாடு” என்றார்.
பேருடலர் தூக்கம் கலைந்து எழுந்து விட்டார். அவர் கோபத்துடன் கைகளைத் தட்டிக் கொண்டு எழுந்து நின்றார்.
”யாரை எருமை மாடு என்கிறாய்? எலும்புக் கூடே. ஒரு உண்மையான கவிஞன் கனவிலும் கூட கவிதை பற்றி சிந்தித்து கொண்டிருப்பான். அப்படி சிந்தனை வசப்படும் போது அவன் உருண்டு செல்வான் என்பதைக் கூட அறியாத மூடன் நீ“ என்றார் அவர்.
”ஆமாம் பெரிய கவிஞன் தான் நீ. உன் இவ்வளவு பெரிய உடலில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகம். இதில் இவர் கனவில் கூட கவிதை பற்றி சிந்திப்பாராம். கவிதை எழுதுவதற்கல்லாம் நுண்ணுர்வு வேண்டும் என்னைப் போல ” என்றார் அந்த சிற்றுடலர்.
”ஓ…நுண்ணுர்வு? அது உன் போன்ற ஊதினால் பறந்து விடும் நுண்ணுயிர்களுக்கு மட்டுமே உள்ள வியாதியடா மூடனே. கவிஞன் என்றால் அவனுக்கு இருக்க வேண்டியது பேருணர்வு. பேருணர்வு கொண்டவனே பெருங்கவிஞன். அவன் கவிதையே பெருங்கவிதை. பெருங்கவிதையே பெருந்தன்மை…..இதெல்லாம் உனக்கு எப்படி தெரியப்போகிறது பதரே” என்றார் பேருடலர்.
”நீ சொல்லுவாய் ஏன் சொல்ல மாட்டாய்….பெருந்தீனி தின்று விட்டு நீ உளறுவதெல்லாம் கவிதை”
”ஓ….எலும்பா நீ என்னை இழிவு செய்தாய். என் திறனை இழிவு செய்கிறாய்… உனக்கு சவால் விடுகிறேன். உனக்கு துணிவு இருந்தால் இப்போதே ஏற்றுக் கொள்.
என்ன சவால்?
”என்னால் எதைப் பற்றியும் உடனடியாக அதிவேகமாக பாக்கள் புனைய முடியும்…உன்னால் முடியுமானால் இங்கே இப்போதே என்னோடு மோதிப்பார்”
”உன் சவாலை ஏற்கிறேன்” என்றார் சிற்றுடலர்.
அதற்குள் திண்ணையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து விட்டார்கள். அவர்கள் இவர்களுடைய சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைம்மாவும் எழுந்து விட்டான். அவன் தூக்க கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
திண்ணையில் இருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
”இந்த நள்ளிரவில் …பாதி நிலவொளியில் பிசாசுகள் போல இவர்கள் சண்டை இட்டு கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் சத்திரத்தில் சோறு போட்டு சாப்பிட்டு முடித்தவுடனேயே விரட்டி இருக்க வேண்டும். நேரங் கெட்ட நேரத்தில் இம்சை”
பேருடலர் கோபத்துடன் கத்தினார். ”யாரடா அவன்? மிதி வாங்க வேண்டுமா?”
அந்த நபர் மேற்கொண்டு பேசாமல் மௌனமாக இருந்தார்.
”பாருங்கள் அவையோரே….இச்சத்திரத்து திண்ணையீரே…இங்கே நிகழ இருக்கும் பாவலர்களின் யுத்ததிற்கு நீங்கள் தான் சாட்சி …அதோ அந்த பாதி நிலா சாட்சி…..அதன் ஒளியை கொஞ்சம் பெற்று இருளில் நிற்கும் அந்த மரம் சாட்சி….” என்றார் பேருடலர்.
”ஆம்” என்றார் அந்த சிற்றுடலர்.
”சரி. இந்த போட்டிக்கு யார் நடுவராக இருப்பது? அதற்கு தகுதி படைத்தவர்கள் இந்த திண்ணையில் எவரேனும் இருக்கிறார்களா?” பேருடலர் கேட்டார்.
”இதை சவால் விடும் முன் நீ யோசித்திருக்க வேண்டும்” என்றார் சிற்றுடலர்.
”சவாலை ஏற்கும் முன் நீயும் யோசித்திருக்க வேண்டும்” என்றார் பேருடலர்.
”சரி அப்படியென்றால் நல்லது. தூங்குங்கள். தொல்லை செய்யாதீர்கள்” என்றார் திண்ணையில் இருந்த ஒருவர்.
”அது முடியாது. இப்போது நானா அவனா என்று விடை தெரிந்தே ஆகவேண்டும்” என்றார் பேருடலர்.
”ஆம்” என்றார் சிற்றுடலர்.
”சரி சொல்லுங்கள். இங்கே யாரேனும் இருக்கிறீர்களா? நடுவராக இருக்கத் தகுதியுடன்? கவிஞர் யாராவது உண்டா? அல்லது வேறு கலைஞர்கள்?” பேருடலர் கேட்டார்.
யாரும் வாய் திறக்கவில்லை. பேருடலர் கைம்மாவைப் பார்த்து விட்டு
”தம்பி நீ யார்?” என்று கேட்டார்.
கைம்மாவிற்கு சட்டென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் ”என்னுடைய பெயர் கைம்மா” என்றான்
”சரி கைம்மா….நீ யார்? அதாவது நீ என்ன தொழில் செய்கிறாய்? உன்னைப் பற்றி கூறு? இந்த இருளிலும் உன் முகத்தில் அறிவு பிரகாசிக்கிறது” என்றார் பேருடலர்.
சிற்றுடலர் சிரித்தார்.
”ஏனடா சிரிக்கிறாய்? இன்னும் சற்று நேரத்தில் என்னிடம் தோற்று மண்ணைக் கவ்வப் போகிறாய்” என்றார் அவர்.
” பார்க்கலாம்” என்றார் சிற்றுடலர்.
”சொல் கைம்மா” என்றார் பேருடலர்.
கைம்மா யோசித்து விட்டு சொன்னான். ”நான் ஒரு வரலாற்று ஆய்வாளன். இந்த ஊரில் இருக்கும் மலையில் உள்ள குகையில் மிகப் பழைமையான சில ஓவியங்கள் உள்ளன. அவற்றைக் காண வந்தேன்”
”மிகவும் நன்று…வரலாற்று ஆய்வாளரான அறிஞரே நீரே இந்த கவிதை யுத்ததிற்கு நடுவராக இருக்க தகுதி படைத்தவர்” என்றார் அவர்.
”நானா?”
”ஆம். மறுக்காதீர்” என்றார் அவர்.
திண்ணையின் இருளில் கைம்மாவிற்கு அருகே இருந்த ஒருவர் மெதுவான குரலில் சொன்னார். ”மறுக்காதீர்…..முடிவில் இந்த தடியன் தோற்று விட்டாதாக சொல்லி விடுங்கள். அனைவருமாக சேர்ந்து இவனை விரட்டி விடுவோம். இவன் தொல்லை தாங்க முடியவில்லை”
கைம்மாவிற்கு சிரிப்பு வந்தது. அவன் ஒப்புக் கொண்டான்.
”எதைப் பற்றி பாக்கள் புனைய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள் கைம்மா” என்றார் பேருடலர்.
கைம்மா என்ன சொல்வதென்று தயங்கினான்.
”அப்படியென்றால் நான் அதோ அந்த மரத்தைப் பற்றிப் பா ஒன்றைப் புனைகிறேன்” என்றார் பேருடலர்.
”சரி” என்றான் கைம்மா.
”இதோ…” என்று சொல்லி பேருடலர் தவங்கினார்.
”அதோ அந்த மரம்
அதற்குப் போடு உன் உரம்
அதை உடைக்கும் இந்த வலிமையான கரம்”
அவர் தன் வலது கையை உயர்த்தினார்.
தூண்டாதே என் ஆத்திரம்
தாழாது யார் முன்னும் என் சிரம்
நான் சொற்களின் அட்சய பாத்திரம்
அதுவே உலகிற்கு வரம்
உணர்வாய் என் அன்பின் திறம்
கைம்மாவிற்கு சிரிப்பாக இருந்தது.
அவர் நிறுத்தி விட்டு ”இப்போது நீ” என்று மெலிந்தவரிடம் சொன்னார். ”நீ எதைப்பற்றி புனைய வேண்டும் என்று நானே சொல்கிறேன்” என்று சொல்லி, ”கழுகு” என்றார்.
மெலிந்தவர் உடனே துவக்கினார்.
”உயரே பறக்கும் கழுகு
நீ எப்போதும் பணிவுடன் பழகு
நெருப்பில் உருகும் மெழுகு
அன்பில் உயர்பவனே கொழுக்கு”
என்று தொடர்ந்து சொல்லிச் சென்றார்.
”நிறுத்துடா நிறுத்து….” என்றார் பேருடலர். ”என்ன ஏமாற்றப் பார்க்கிறாய்? கொழுக்கு என்ற ஒரு சொல்லே இல்லை” என்றார் பேருடலர்.
”மூடனே… அப்படி ஒரு சொல்லை நீ கேள்விப்பட்டதில்லை என்று சொல். அப்படி ஒரு சொல்லே இல்லை என்று சொல்லாதே” என்று சத்தம் போட்டார் மெலிந்தவர்.
”ஓ அதென்னடா நான் அறியாத சொல்…..அதன் பொருள் என்ன என்று சொல்” என்று கேட்டார் பேருடலர்.
”கொழுக்கு என்பது ஒரு மலையின் பெயர். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளது” என்றார் மெலிந்தவர்.
”அப்படி என்றால் சரி. இப்போது அடுத்து வேறு பொருளைப் பற்றி பாக்கள் புனைகிறேன்” என்றார் பேருடலர்.
”யாரது? என்ன சத்தம்?” சத்திரத்தின் கதவைத் திறந்து கொண்டு வந்த ஒருவர் சொன்னார். அவர் தான் அந்த சத்திரத்தின் அதிகாரி.
”என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நள்ளிரவில் என்ன இங்கே கூப்பாடு?” என்று அவர் கேட்டார்.
”இங்கே பாவலர்களாகிய எங்களிடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது” என்றார் மெல்லுடலர்.
”போட்டியா? ஒழுங்காக அனைவரும் உறங்குங்கள். அல்லது இங்கிருந்து உடனே கிளம்புங்கள். இன்னொரு முறை சத்தம் வந்தால் சும்மா விட மாட்டேன்” என்று அதட்டினார் அதிகாரி. பிறகு அவர் உள்ளே சென்று விட்டார்.
”எனவே இந்த போட்டி வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றார் பேருடலர்.
அனைவரும் சிரித்தனர். எல்லோரும் மீண்டும் படுத்துக் கொண்டனர்.
கைம்மாவும் படுத்துக் கொண்டான்.
(மேலும்)