மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
மணிவாசகம் இறைவனை வணங்கி விட்டு ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவனுக்கு அவனுடைய ஆசிரியரின் சொற்கள் நினைவுக்கு வந்தன.
”இயற்கையில் நிகழ்வுகள் மட்டுமே இருக்கின்றன. இயற்கையின் நிகழ்வுகளை கவனித்து தாங்களும் அது போல நிகழ்வுகளை உருவாக்க மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். ஒரு இயற்கை நிகழ்வில் நெருப்பை அறிந்து கொண்ட மனிதன் நெருப்பை தானும் உண்டாக்கக் கற்றுக் கொண்டான். மனிதனின் எல்லா உருவாக்கங்களும் இயற்கையிடம் இருந்து கற்றுக் கொண்டதே. இயற்கையே மனிதனின் ஆசிரியர்”
”இயற்கையின் எந்த ஒரு நிகழ்விற்கு பின்னாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லை. ஆனால் மனிதன் தான் உருவாக்கிய ஒவ்வொன்றுடனும் மனதை இணைத்து தன்னுடைய விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்திக் கொண்டான்”
அவரிடம் தான் கேள்வி கேட்டதும் அவன் நினைவிற்கு வந்தது.
”ஆனால் மனிதனுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றனவே?” என்று அவன் கேட்டான்.
”ஆம். இயற்கையின் உயிரற்ற பொருட்களுக்கு விருப்பு வெறுப்புகள் இல்லை. இயற்கையின் உயிர்களுக்கு மட்டுமே விருப்பு வெறுப்புகள் உள்ளன. ஆனால் மனிதன் அளவிற்கு வேறு எந்த உயிரும் அவற்றை மிகையாக ஆக்கிக் கொள்வதில்லை” என்றார் அவர்.
அதற்கு மறுமொழியாக மணிவாசகம் என்னவோ சொன்னான். இப்போது அவனால் அதை நினைவு கூற முடியவில்லை. அன்று ஆசிரியரிடம் நீண்ட நேரம் பேசினோம் என்பது மட்டும் நினைவில் வந்தது.
அவன் ஊருக்கு வெளியே அமைந்திருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான். வெயில் அதிகமாக இருந்தது. அவன் கனசேகரனையும் தினசேகரனையும் காண்பதற்காக சென்று கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அங்கு வந்து அவனை சந்திப்பதாக செய்தி அனுப்பி இருந்தார்கள்.
அவன் அந்த பனை மரத்தை தொலைவில் இருந்து பார்த்தபோது அதன் கீழே மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. இருவர் கனசேகரனும் தினசேகரனுமாகத்தான் இருக்க வேண்டும். மூன்றாவது நபர் யார் என்று தெரியவில்லை.
மணிவாசகம் வருவதை அறியாமல் கனசேகரனும் தினசேகரனும் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். மூன்றாம் நபர் அவன் வருவதை கவனித்திருந்தார்.
”யோவ் கனம் உனக்கு அறிவில்லை……வழிப்போக்கரான இவரை ஏன் தொந்திரவு செய்கிறாய்? இவர் செல்லட்டும்” என்றார் தினசேகரன்.
”மூடரே…இவர் வெறும் வழிப்போக்கர் அல்ல. மாபெரும் ரசிகர். இவரை வழிப்போக்கர் என்று சொல்லும் நீர் தான் போக்கற்ற வழியர்” என்றார் கனசேகரன்.
அந்த மூன்றாவது நபர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
”இவரைப் பொருட்படுத்த வேண்டாம் அய்யா. நாம் தொடர்வோம்” என்ற கனசேகரன். ”நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?” என்று கேட்டார்.
”ஆ…நினைவுக்கு வந்து விட்டது. அதாவது நண்பரே எல்லா கதைகளுக்கும், கவிதைகளுக்கும் அடிப்படையில் கற்பனை தான். அந்த கற்பனை எப்படி தோன்றியது என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் கற்பனை என்றால் என்ன என்று தெரியுமா?”
”தெரியாது”
”சொல்கிறேன் கேளுங்கள். இதோ நாம் இங்கே இந்த பனை மரத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறோம். பொதுவாக பனை மரம் மிகவும் உறுதியானது. கல் போன்ற உறுதி கொண்டது. கல் மற்றும் பனை என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவானதே கற்பனை. ஒரு சமயம் ஆதிமனிதன் கல் போன்ற ஒரு பனை மரத்தின் அடியில் உட்கார்திருந்தான். அப்போது அவனுக்கு எதிரே வானில் சற்று உயரத்தில் நாரை ஒன்று பறந்தது. அதன் விரிந்த சிறகுகள் அவனுக்கு பனை ஓலை போலத் தெரிந்தது. கல் போன்ற பனை மரம் தன் ஒலைகளை சிறகுகள் ஆக்கி வானில் பறந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான் அவன். அன்றிலிருந்து மனிதனின் கற்பனை துவங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் கல் போன்ற ஒன்றும் மென்மையாகி வானில் பறக்கும் படி செய்யக்கூடியது கற்பனைத் திறம்” என்றார் கனசேகரன்.
மூன்றாவது நபர் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
”அப்படியென்றால் விற்பனை என்பது வில் போன்ற பனை மரத்தின் அடியில் துவங்கியது என்பீரா? என்றார் தினசேகரன்.
”மூடரே….நீர் பேசாமல் இரும்” என்றார் கனசேகரன்.
அவர்கள் அப்போது தான் மணிவாசகம் வந்ததை கவனித்தார்கள்.
கனசேகரன் அந்த மூன்றாவது நபரிடம் ”நன்றி அய்யா. நாம் பிறிதொரு நாள் சந்திப்போம். அப்போது விரிவாக பேசுவோம்” என்றார்.
அந்த நபர் இருவருக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெற்றார். செல்லும் முன் இரண்டு பொற்காசுகளை எடுத்து கனசேகரனுக்கும் தினசேகரனுக்கும் தந்தார்.
”வள்ளலாக இருக்கிறீர் அய்யா. நீர் வாழ்க” என்று அவரை வாழ்த்தினார் கனசேகரன்.
அவர் சென்ற பிறகு ”பரவாயில்லையே நீங்கள் உண்மையிலேயே பாவலரும் அறிஞரும் ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறதே” என்று கனசேகரனைப் பார்த்து சொன்னான் மணிவாசகம்.
”ஆம் அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இவன் தான் இன்னும் அதை ஏற்க மறுக்கிறான்” என்றார் கனசேகரன்.
”வாருங்கள் தலைவரே” என்று மணிவாசகத்தை நோக்கி சொன்னார் தினசேகரன்.
”நல்லது. உங்கள் சிறந்த பணிக்கு என் பாராட்டுக்கள்” என்றான் மணிவாசகம். அத்துடன் ”இளவரசரிடம் சொல்லி உங்களுக்கு பரிசுகள் கிடைக்கும் படி செய்கிறேன்” என்றான்.
”நன்றி தலைவரே” என்று இருவரும் ஒரு சேர சொன்னார்கள்.
“சற்று கடினமான பணிதான். என்றாலும் என் வாழ்க்கை கனமான அனுபவங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என் பெற்றோர் எனக்கு கனசேகரன் என்று பெயரிட்டனர்” என்றார் கனசேகரன்.
”யோவ்…தலைவரிடமே அளந்து விடுகிறீரா? உம்முடைய உண்மைப் பெயர் கனசேகரனா? முழுவதும் பாத்திரமாகவே மாறிவிட்டீர் போலும்” என்றார் தினசேகரன்.
கனசேகரன் சட்டென்று நினைவு வந்தவராக ”ஆம். மன்னிக்க வேண்டும் தலைவரே. நான் இது என் வேடம் என்பதையே மறந்து பாத்திரத்துடன் ஒன்றி விட்டேன்”
”நல்லது. நம் போன்ற ஒற்றர்கள் அப்படி தாங்கள் ஏற்கும் பாத்திரத்தோடு ஒன்றி விடுவது நல்லது தான். ஆனால் நம் பணி என்ன என்பதை மறந்து விடக் கூடாது” என்றான் மணிவாசகம்.
”நாங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணி என்ன தலைவரே?” தினசேகரன் கேட்டார்.
”சொல்கிறேன். இப்போது நீங்கள் பாவலர்களாகவே என்னுடன் வாருங்கள். ஊர்த் தலைவரின் வீட்டில் உணவு அருந்தி விட்டு என்னுடைய வீட்டிற்கு செல்வோம். அங்கு பேசிக் கொள்வோம்” என்றான் மணிவாசகம்.
”ஆனால் மீண்டும் கைம்மாவை பின் தொடர்வது என்றால் …மன்னிக்க வேண்டும் தலைவரே…அது என்னால் இயலாது…அவனது குதிரை என்னைக் கொல்லப் பார்த்தது” என்றார் கனசேகரன்.
”மூடரே…இனி எப்படி அவனைப் பின்தொடர முடியும்? அவன் தான் இந்நேரம் விண்ணில் சென்றிருப்பானே? என்றார் தினசேகரன். பிறகு ”அதுசரி. ஏன் பொய் சொல்கிறீர்? அந்த குதிரை உங்களை எங்கே கொல்ல முயன்றது? நீர் தான் வீம்பாக அடம் பிடித்து அதன் மீது சவாரி செய்தீர். நீர் கீழே விழுந்தபோது அதுதான் உம்மைக் காப்பாற்றியது” என்றார் தினசேகரன்.
”நீர் நிறுத்தும். சவாரி செய்தவன் நான். எனக்குத் தெரியாதா? அதுதான் எ்ன்னைக் கீழே தள்ளியது. அத்துடன் சற்று தாமதித்திருந்தால் அதுவே எனக்கு குழியும் தோண்டி புதைத்திருக்கும்” என்றார் கனசேகரன்.
”இது அபாண்டம். ஒரு அப்பாவி குதிரையின் மீது பழிபோடும் பாவம் உம்மை சும்மா விடாது” என்றர் தினசேகரன்.
”நீரும் ஒரு பெரும் பாவலனின் சாபத்திற்கு ஆளகாதீர். இன்னொரு சொல் பேசினால் நான் உம்மை சபிப்பேன்” என்றார் கனசேகரன்.
மணிவாசகம் சிரித்தான். பிறகு ”நன்று பாவலர்களே இப்படியே தொடருங்கள். ஆனால் கைம்மாவைப் பற்றியோ அவன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றியோ இனி பேச்செடுக்க வேண்டாம்” என்றான்.
”உத்தரவு தலைவரே’ என்றனர் இருவரும்
——
கைம்மா அந்த கல்பெட்டியில் இருந்த பொருட்களைக் கொண்டு தன்னை உருமாற்றிக் கொண்டான். இப்போது அவன் ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட மனிதனைப் போல மாறி விட்டான். அதாவது அவனும் ஒரு இயந்திர மனிதனாக மாறி விட்டான். உண்மையில் அது ஒரு உலோகத்தால் ஆன உடை போன்றதே. அதை குறிப்பிட்ட முறையில் பொருத்திக் கொள்வதன் மூலம் மனிதன் விண்ணில் செல்ல முடியும். அதன் உட்கருவிகள் மனித உடலின் உள்ளுறுப்புகளுடன் நுண் கதிர்களால் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டன.
அவ்வாறு தன்னை மாற்றிக் கொண்டு ஒருவன் விண் பயணம் செய்யும் போது அதன் கருவிகள் சூரியனின் நேரடிக் கதிர் வீச்சு மனித உடலை பாதிக்காமல் பாதுகாத்தன. அத்துடன் அந்த கதிர் வீச்சை வாங்கி அதையே மனித உடலுக்கு வேண்டிய சக்தியாகவும் மாற்றி அளித்தன. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்ததுடன் விண்வெளியில் உள்ள மூலக்கூறுகளில் இருந்து நீரைப் பிரித்து உடலுக்குத் தேவையான நீரையும் அளித்தன. அவ்வாறு விண்ணில் திகழும் மூலக்கூறுகளில் இருந்து உருவாக்கிய நீரையை மேலும் பிரித்து உயிர் காற்றாக நுரையீரல்களுக்கு அனுப்பின. எனவே அவற்றைக் கொண்டு நீண்ட விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
கைம்மா இயந்திர மனிதன் தோற்றத்துடன் குதிரையில் பறந்து தன்னுடைய காட்டு கிராமத்திற்கு வந்தான். அவன் தன் தாய் தந்தையிடமும் உறவினர்களிடமும் விடை பெற்றுச் செல்ல வந்தான். அத்துடன் காட்டுத் தெய்வத்தின் பூசகரிடமும் காட்டு தெய்வத்திடமும் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். அவன் அங்கு வந்து சேர்ந்த போது மாலை நேரம். அவன் அன்று இரவு அங்கிருந்தே விண்ணில் புறப்பட்டாக வேண்டும்.
மாலை வேளையில் காட்டில் வேட்டையாடியும் காய் கனிகளை பறித்துக் கொண்டும் தங்கள் குடில்களுக்கு திருப்பிக் கொண்டிருந்தனர் அவனுடைய உறவினர். விண்ணில் தன் பெரும் சிறகுகள் விரித்து பறந்து வந்த குதிரையையும் அதில் அமர்ந்திருந்த விநோதமான தோற்றமுடைய இயந்திர மனிதனையும் கண்டு அவர்கள் அஞ்சி அலறினர்.
அவன் காட்டு தெய்வத்தின் கோயிலாக இருந்த மரத்தின் அருகே இருந்த திடலில் இறங்கினான். எல்லோரும் அஞ்சி ஓட சிலர் ”இது ஏதோ மாயம்” என்று தங்கள் காட்டு தெய்வத்தின் பூசகரை அழைத்து வர ஓடினர்.
கைம்மா குதிரையில் இருந்து இறங்கி கையை உயர்த்தி சத்தமாக சொன்னான் ”நில்லுங்கள். அஞ்சி ஓடாதீர்கள். நான் உங்கள் கைம்மா” என்றான்.
சிலர் நின்றார்கள். பின் திரும்பி நோக்கினார்கள். ”கைம்மாவா? ” என்று ஒருவர் அவனை உற்றுப் பார்த்தார். ”மாறுவேடம் இட்டிருக்கிறானா?” என்று இன்னொருவர் கேட்டார்.
”இது கைம்மாவின் குரல் போல இல்லையே” என்றார் மற்றொருவர்.
”வேண்டாம். யாரும் அவன் அருகில் செல்லாதீர்கள். பறக்கும் குதிரை என்பது இயற்கையில் இல்லாத ஒன்று. எச்சரிக்கையுடன் இருங்கள்” என்றார் வேறொருவர்.
அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது காட்டுத் தெய்வத்தின் பூசகர் வந்தார்.
”யாரும் அஞ்ச வேண்டியதில்லை. இது நம் கைம்மா தான்” என்றார் அவர்.
அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
கைம்மா தன் தாய், தந்தையரிடமும் பூசகரிடமும் ஆசி பெற்றுக் கொண்டான். காட்டு தெய்வத்தை வழிபட்டான். அவனுடைய உறவினர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டான். அவர்கள் அனைவரும் அவனை கண்ணீருடன் தழுவி விடை கொடுத்தனர்.
இரவு துவங்கி வானில் அந்தி வெள்ளி மேலெழுந்து நன்கு துலங்கியபோது அவன் விண் நோக்கி வானில் எழுந்தான்.
(மேலும்)