அது ஒரு கனவு. கிழக்கே கரிய மழை முகில்கள் அடர்ந்து எல்லா திசைகளிலும் பரவின. மின்னல் ஒன்று வெட்டியது. திண்டு ஒரு மலையின் அடிவாரத்தில் இருந்தான். அவன் நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகே ஒரு குகை இருந்தது. அந்த குகையை நோக்கித்தான் அவன் சென்று கொண்டிருந்தான். ”திண்டு விரைவாக வா…” என்று ஒரு குரல் கேட்டது. அந்த குரல் மீண்டும் கேட்டது. அவன் தன் நடையின் வேகத்தைக் கூட்டினான். பிறகு மீண்டும் அந்த குரல் கேட்க வேகமாக குகையை நோக்கி ஓடினான்.
கனத்த மழை பெய்யத் துவங்கியது. அவன் ஓடிக் கொண்டிருந்த மண் பாதை பெருக்கெடுத்து ஓடத் துவங்கிய மழை நீரால் சேற்றுப் பாதை ஆகி விட்டது. ஓடிக் கொண்டிருந்த அவன் வழுக்கி விழுந்தான். விழுந்த வேகத்தில் சேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டான். மழை மேலும் வேகம் அடைந்தது. அவன் வழுக்கிச் சென்ற பாதை அந்த குகையை நோக்கியே சென்றது. மிக வேகமாக வழுக்கிச் சென்று அவன் அந்த குகைக்குள் நுழைந்தான். இருள் சூழ்ந்தது.
அவன் குகையின் உள்ளே இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் விழுவதாக உணர்ந்தான்.
”அய்யோ அம்மா…” என்று அவன் அலறினான்.
அவன் விழுவது நின்றது. யாரோ அவன் வலது கையைப் பிடித்து மேலே தூக்கினார்கள்.
”திண்டு…திண்டு…என்ன ஆனது?” முத்து அவனைப் பிடித்து உலுக்கினான்.
திண்டு கண் விழித்து முத்துவைப் பார்த்தான்.
”முத்து…?”
”பயங்கரமான கனவு கண்டாய் போல இருக்கிறது’” என்றான் முத்து.
”முத்து நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டான் திண்டு.
”மறந்து விட்டாயா திண்டு?…எங்கே செல்வது என்று தெரியாமலே பல நாட்களாக நாம் சென்று கொண்டே இருக்கிறோம். நேற்று இரவு இந்த மலை அடிவாரத்தில் …இந்த பாறை வெளியில் களைப்பு தாங்க முடியாமல் உறங்கி விட்டோம்.” என்றான் முத்து.
திண்டு முத்துவை புதிதாகப் பார்ப்பவன் போலப் பார்த்தான்.
”என்ன திண்டு அப்படிப் பார்க்கிறாய்? என்று கேட்டான் முத்து.
’முத்து நீ பெரியவனாக விட்டது போல தோன்றுகிறாய்” என்றான் திண்டு.
”ஆமாம் திண்டு நீயும் அப்படித்தான் தோன்றுகிறாய். நாம் இங்கு வந்து எவ்வளவு காலம் ஆனது என்பது கூட தெரியவில்லை. மீண்டும் இங்கிருந்து நம் ஊருக்குப் போவோமா என்பது கூட தெரியவில்லை. எனக்கு நம்பிக்கையே போய் விட்டது” என்றான் முத்து. அவனுக்கு அழுகை வரும் போல் இருந்தது. ஆனால் அவன் அழவில்லை.
”முத்து ..இப்போது நான் கண்ட கனவில்…வந்த குரல் குகைத் தாத்தாவின் குரல். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அவர் ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவ முயல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் உன் அப்பாவுடன் ஊர் திருப்புவோம்” என்றான் திண்டு.
முத்துவிற்கு அப்பாவின் நினைவு ஏற்பட்டது. அவரைத் தேடித் தானே புறப்பட்டோம். அவருக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இவ்வளவு நாள் அவரை மறந்தே போய் விட்டோம் என்று எண்ணி அவன் வருத்தப் பட்டான்.
திடீரென்று திண்டு ”முத்து அதோ பார்” என்றான்.
”என்ன?”
”அதோ…கிழக்கே கரிய மழைமுகில்கள் திரள்கின்றன” எ்ன்றான் திண்டு.
”அதனால் என்ன?”
”இதோ…ஆம்…இதேதான் நான் கனவில் கண்ட மலைப் பாதை….இந்த பாறைகளுக்கு அப்பால்…இது ஒரு குகையை நோக்கிச் செல்கிறது”
”இந்த இடத்திலேயே உறங்கியதால்…இந்த சுற்றுப்புறம் உன் கனவில் வந்திருக்கும்” என்றான் முத்து.
”இல்லை முத்து. நாம் நேற்று இரவின் இருளில் தெளிவாக எதையும் கண்டிருக்கவில்லை. இது ஒரு பாறைவெளி என்று மட்டுமே அறிந்தோம்”
அவர்கள் அந்த பாறை வெளியை விட்டு இறங்கி நடந்தார்கள். கருமுகில்கள் வானை நிறைத்து மழை பெய்யத் துவங்கியது.
”இதோ இதே பாதையில்…..நான் கனவில் இதே பாதையில் தான் நடந்தேன்…இதே போலத் தான் மழை பெய்யத் துவங்கியது” என்றான் திண்டு.
அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே மழை வலுத்தது. உடனே அவனுக்கு பயமாகவும் இருந்தது. கனவில் வந்தது போல் அவன் குகையை நோக்கி வழுக்கி செல்ல நேர்ந்தால்? அங்கே குகைக்குள் அவன் கனவில் கண்டது போலவே ஒரு பள்ளத்தில் விழ நேர்ந்தால் ?
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மழை மட்டும் பெரும் சத்தத்துடன் பெய்தது. அவர்கள் இருவரும் பாதையில் மெதுவாக நடந்தார்கள். மண் சேறாகி நீர் பெருக்கெடுத்தது. இருவரும் பாதையின் ஓரத்தில் எச்சரிக்கையுடன் நடந்தார்கள். அவர்கள் நிற்பதற்கு ஒரு இடம் கிடைக்குமா என்று பார்த்தார்கள்.
ஒரு மின்னல் வெட்டியது. அந்த மின்னல் வெட்டிய கணத்தில் அவர்கள் அந்த குகையில் வாசலருகே வந்துவிட்டதை உணர்ந்தார்கள். இருண்ட குகைக்குள்ளே ஒரு வெண் நிற அசைவு தெரிந்தது. ஏதோ விநோதமான பிராணி அங்கு இருப்பதைப் போலத் தோன்றியது. திண்டுவும் முத்துவும் அஞ்சி திகைத்து நின்றார்கள்.
குகையின் உள்ளே இருந்து ஒரு இரும்பு மனிதன் அவர்களை நோக்கி வந்தான். திண்டு அவனைப் பார்த்து விட்டான். உடனே அவன் ”முத்து நாம் திரும்பி ஓட வேண்டும். இந்த இயந்திர மனிதன்…யுரேனக நகரிலிருந்து நம்மைப் பிடிப்பதற்காக வந்தவனாக இருப்பான்” என்றான்.
திண்டுவும் முத்துவும் திரும்பி ஓடினார்கள். மழையில் அவர்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை.
”திண்டு நில்…ஓடாதே”
திண்டு உடனே நின்றான். அது குகைத் தாத்தாவின் குரல்!
”ஏன் நின்று விட்டாய் திண்டு?” முத்து கேட்டான்.
”உனக்கு குகைத் தாத்தாவின் குரல் கேட்கவில்லையா?” என்று திண்டு கேட்டான்.
”இல்லையே. மழை சத்தம் தான் கேட்கிறது” என்றான் முத்து.
திண்டுவும் முத்துவும் நின்றார்கள். இயந்திர மனிதன் அவர்களை நோக்கி வந்தான்.
”திண்டு அவன் வருகிறான். நாம் செல்வோம்” என்றான் முத்து.
திண்டு அமைதியாக நின்றான்.
அவர்கள் அருகே வந்த இயந்திர மனிதன் ”நீங்கள் தான் திண்டுவும் முத்துவுமா?” என்று கேட்டான்.
”ஆமாம்” என்றான் திண்டு.
”நீ எங்களை பிடித்துச் செல்லத் தானே வந்திருக்கிறாய்” என்று முத்து கேட்டான்.
”இல்லை…உங்களுக்கு உதவ வந்திருக்கிறேன். உங்களை மீட்டுச் செல்ல வந்திருக்கிறேன்.”
”நீங்கள் யார்? என்று திண்டு கேட்டான்.
”வாருங்கள்….நாம் குகைக்குள் சென்று பேசுவோம்” என்றான் இயந்திர மனிதன்.
”நீங்கள் யார்? உங்களை நாங்கள் எப்படி நம்புவது?” என்று திண்டு கேட்டான்.
”திண்டு?…நீங்கள் தானே திண்டு?…உங்கள் குகைத் தாத்தாவை எனக்கும் தெரியும்” என்றான் இயந்திர மனிதன்.
திண்டுவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
”குகைத் தாத்தா தான் உங்களை அனுப்பினாரா?” என்று கேட்டான் அவன்.
”அவரது உதவியால் தான் இங்கு வந்தேன்” என்றான் இயந்திர மனிதன்.
அவர்கள் குகைக்குள் சென்றார்கள்.
”என் பெயர் கைம்மா” என்றான் இயந்திர மனிதன். திண்டுவும் முத்துவும் குகைக்குள் வெண் நிற அசைவைக் கண்டு விநோத பிராணி என சற்று முன் நினைத்து ஒரு குதிரை. பெரும் சிறகுகள் கொண்ட பறக்கும் குதிரை.
கைம்மா அதன் அருகே சென்று ”இந்த குதிரையை அவர் தான் எனக்குத் தந்தார்” என்றான்.
திண்டு பெரும் வியப்பில் ஆழந்தான். குகைத் தாத்தாவின் குகை ஓவியத்தில் மட்டுமே அது போன்ற குதிரையை அவன் பார்த்திருந்தான். முன்பு ஒருமுறை தாத்தா அவனுக்கும் அது போன்ற ஒரு குதிரையைத் தருவதாக கூறியது அவன் நினைவுக்கு வந்தது.
இப்போது நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா என்று அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவன் எண்ணத்தை புரிந்து கொண்டதைப் போல கைம்மா ”நம்புங்கள் திண்டு….இது நிஜம்…நான் உங்களை மீட்கவே வந்தேன்” என்றான்.
——–
”உடனே நாம் எல்லைநல்லைக்குச் செல்கிறோம்” என்றார் கனசேகரன்.
”ஏன்?” என்று கேட்டார் தினசேகரன்.
அவர்கள் இருவரும் திங்கள்நல்லூர் என்ற ஊரின் எல்லையில் ஒரு அரச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்கள்.
”இதோ பார்” தன்னிடம் இருந்த ஓலையை தினசேகரனிடம் நீட்டினார் கனசேகரன். அந்த ஓலையை சிறிது நேரம் முன்பு தான் மணிவாசகத்தின் பணியாள் ஒருவர் கனசேகரனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது தினசேகரன் உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தார். அந்த ஓலை கனசேகரனிடம் தரப்பட்டதை அவர் கவனிக்கவில்லை.
ஓலையை வாங்கிப் படித்த தினசேகரன் ஆச்சரியம் அடைந்தார்.
”ஆச்சரியமாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை” என்றார் அவர்.
”இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? நடக்கக் கூடியது தானே” என்றார் கனசேகரன். பிறகு ”சரி நாம் தாமதிக்கக் கூடாது. உடனே புறப்படுவோம்.” என்றார்.
மணிவாசகம் தன் ஓலையில் தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு அது உண்மைதானா என்று தெரிந்து வருமாறு கூறி இருந்தான். எல்லைநல்லைக்கு சென்றுவிட்டு விவரம் அறிந்து கொண்டு பின்னர் தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டிருந்தான்.
கனசேகரனும் தினசேகரனும் தங்கள் குதிரைகளில் விரைந்து பயணி்த்து மதிய நேரம் எல்லைநல்லை வந்தடைந்தனர். முத்துவின் வீடு எங்கே இருக்கிறது ஊரில் விசாரித்துக் கொண்டு முத்துவின் வீட்டிற்கு சென்றனர். எல்லைநல்லை ஊரின் மக்களில் பலரும் முத்துவின் வீட்டில் தான் குழுமி இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியும் துயரும் கலந்த மனநிலையில் இருந்தனர்.
இருவரும் தங்களை வெளியூர் வணிகர்களாக அறிமுகம் செய்து கொண்டனர்.
முத்துவின் உறவினர்கள் அவர்களை சற்று நேரம் திண்ணையில் காத்திருக்கும் படி சொல்லிவிட்டு சென்றார்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்த பெரிய வீட்டின் பெரிய அறையின் வாசலில் இருந்த இருக்கைகளில் அவர்களை அமரச் செய்தார்கள்.
சற்று நேரத்தில் முத்துவின் அம்மா அவர்களுக்கு மோர் கொண்டுவந்து கொடுத்தார்.
”சற்று பொறுங்கள். அய்யாவை எழுப்புகிறேன்” என்றார்.
”வேண்டாம் அம்மா. அவர் உறங்கட்டும். அவர் நல்லபடியாக திரும்பி வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் அவசரமாகச் செல்ல வேண்டும்” என்றார் தினசேகரன்.
”இதென்ன இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவரை சந்திக்காமல் செல்வீர்களா? அவருடன் உணவு அருந்திவிட்டு….ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு செல்லலாம்” என்றார் முத்துவின் அம்மா. பின் ”நீங்கள் இருவரும் சில நாட்கள் இங்கு தங்கிச் சென்றாலும் பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து அப்படிச் செய்யுங்களேன். அய்யா மிகவும் துயருடன் இருக்கிறார். இவர் மீண்டு வந்து விட்டார் இவரைத் தேடிச் சென்ற குழந்தைகள் எங்கோ தொலைந்து விட்டார்கள்” என்றார் முத்துவின் அம்மா.
அன்று தினசேகனும் கனசேகரனும் முத்துவின் அப்பாவுடன் உணவு அருந்தி விட்டு தனிமையில் பேசினார்கள்.
”நீங்கள் வியாபாரிகளா?..உங்களை எங்கும் பார்த்ததாக நினைவு இல்லையே” என்று அவர் சொன்னார்.
அவர்கள் இருவரும் வேறு யாரும் அவர் அருகே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தாங்கள் வியாபரிகள் அல்ல என்று அவரிடம் கூறினார்கள். தாங்கள் அரசு வீரர்கள் என்று கூறினர். திண்டுவையும் முத்துவையும் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைப் பற்றி கூறினர். ஆனால் அவர்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றியோ கைம்மா அவர்களை மீட்க சென்றுள்ளதைப் பற்றியோ கூறவில்லை.
பிறகு முத்துவின் அப்பா தான் மீண்டு வந்த கதையைக் கூறத் தொடங்கினார்.
(மேலும்)
